CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, June 30, 2013

அஞ்சு சுந்தரிகள்


                                                                           

'டெஸ்ட்' மேட்ச் போல பொறுமையுடன் பாகவதர் டைப் 'தீன கருணாகரனே நடராஜா' பாடல்களை உள்ளடக்கிய காம்போ பேக் படங்களை பார்த்ததொரு காலம். கடந்த ஓரிரு ஆண்டுகளாக 2 மணி நேரத்திற்கு மேல் தியேட்டரில் படம் பார்க்க பொறுமையில்லை. 20/20 போல ஒரு முழுப்படத்தின் நேரத்தில் 4 வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கிய பேக்கேஜ் சினிமாக்கள் வரத்துவங்கி இருப்பது பாராட்டத்தக்கது. ஹிந்தியில் பாம்பே டாக்கீஸ் போல தற்போது கேரள நன்னாட்டிளம் இளைய படைப்பாளிகளிடம் இருந்து அஞ்சு சுந்தரிகள். ஒவ்வொன்றும் அரைமணிநேர குட்டிப்படங்கள் என்பதால் கதை அல்லது காட்சிகள் குறித்து பெரிதாக விளக்காமல் தொடர்கிறேன்... 

சேதுலக்ஷ்மி: 
சிறுமி சேதுலக்ஷ்மி பள்ளித்தோழனின் பேச்சைக்கேட்டு புகைப்படம் எடுக்க ஸ்டுடியோ ஒன்றிற்கு செல்கிறாள். அங்கு ஏற்படும் ஒரு நிகழ்வால்  மன அழுத்தத்திற்கு ஆளாகிறாள். அதனால் ஏற்படும் விளைவுகளை விவரிக்கிறது இப்படம். பேபி அனிகாவின் அணிற்பல் சிரிப்பும், பிரமாதமான நடிப்புத்திறனும் மெச்சத்தக்கது. எதிர்பாராத நிகழ்வு மீண்டும் மீண்டும் அவள் மனதை வாட்டியெடுக்க இரவில் பெற்றோரின் கால்களில் படுத்துறங்கும் காட்சி நம் மனதை நெகிழ வைக்கும் விசுவல் கவிதை.

இஷா:
பெரும் செல்வந்தர் வீட்டில் டிசம்பர் 31 நள்ளிரவு நேரத்தில் நுழைகிறான் திருடன் ஜினு(நேரம் ஹீரோ நிவின்). 'பெற்றோர்கள்' புத்தாண்டை கொண்டாட வெளியே சென்றுவிட தனிமையில் இருக்கிறாள் இஷா. அங்கே நடக்கும் முதல் திருப்பத்தை கண்டு புருவத்தை உயர்த்தும் நவீனின் நிலை என்ன என்பதே இந்த சோ ச்வீட் கதை. இரண்டாம் சுந்தரி இஷா சர்வானி நடிப்பிலோ/ அழகிலோ பெரிதாக கவரவில்லை. என்னைப்பொறுத்தவரை ஐந்தில் மிகச்சுமாராக இருந்தது 'இஷா'தான்.

கவுரி:
குழந்தைகள் இல்லாத தம்பதிகளான பிஜு மேனன் மற்றும் காவ்யா மாதவன் ஆகியோரின் திருமண நாளில் நடக்கும் துயர சம்பவத்தை விவரிக்கிறது இக்கதை. ஒரு சில நொடிகள் முன்னணி ஹீரோ ஜெயசூர்யா தலையை காட்டிவிட்டு போய்விடுகிறார். மனதில் அழுத்தமாக பதிய மறுப்பதால் இதற்கு நான்காவது ரேங்க் மட்டுமே.     
                                                            
   
குள்ளன்டே பாரியா:
'The tall woman and her short husband' எனும் சீனக்கதையின் தாக்கத்தில் இதனை உருவாக்கி இருக்கிறார்கள். விபத்தில் காலடி பட்டு வீல்சேரில் நாட்களை கடத்தும் துல்கரின் (மாடிப்)பார்வையில் விரிகிறது இப்படைப்பு. துல்கர் வசித்து வரும் காலனியில் புதுமணத்தம்பதிகள் குடியேறுகிறார்கள். மனைவியை விட கணவன் குள்ளமாக இருப்பதால் சுற்றி இருப்பவர்கள் கூடிப்பேசி கிண்டலடிக்கிறார்கள். மாடியில் இருந்தவாறு ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படம் எடுப்பதோடு பின்னணிக்குரலில் கதையும் சொல்கிறார் துல்கர். இவரைப்போலவே வசனமே இன்றி தம்பதி கேரக்டரில் வாழ்ந்திருக்கும் ஜினு மற்றும் ரீனுவிற்கு போடலாம் சபாஷ். க்ளைமாக்ஸ் மழைக்காட்சி....இதயத்தை கனமாக்கும். 

ஆமி:
மலையாள படவுலகின் அருமை நாயகன் பஹத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் சப்ஜக்ட். சொல்லவே வேண்டாம். தலைவர் வழக்கம்போல் டாப் க்ளாஸ் பெர்பாமன்ஸ். கொச்சியில் இடமொன்றை வாங்குவதற்காக இரவில் காரோட்டி செல்கிறார் செல்வந்தர் அஜ்மல்(பஹத்). சோர்வில் அவர் தூங்கிவிடாமல் இருக்க அலைபேசி வாயிலாக அவ்வப்போது விடுகதை போடுகிறார் மனைவி. பயணத்தின் இடையே ஏற்படும் சில சம்பவங்கள் அஜ்மலின் மனப்போக்கை மாற்றியமைக்கின்றன. 

ஒரு ரோட் மூவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆமி சிறந்த எடுத்துக்காட்டு. உதயம் NH4 படத்தையெல்லாம் நல்லதொரு ரோட் மூவி என தூக்கிவைத்து  முக்காபுலா ஆடிய நண்பர்கள் ஆமியை பார்க்காவிட்டால் துரதிர்ஷ்டம்தான்.   

ஐந்திலும் எனக்கு பிடித்த நடிப்பு பேபி அனிகாவினுடையது. பிடித்த படம் குள்ளன்டே பாரியா. 

இயக்குனர்கள் சிஜூ, சமீர்(டயமன்ட் நெக்லஸ்), ஆஷிக்(22 ஃபீமேல் கோட்டயம்), அமல் மற்றும் அன்வர்(உஸ்தாத் ஹோட்டல்) ஆகிய ஐவரும் 20 வருட நண்பர்கள் என்பது சிறப்பு தகவல். மகளிரின் பல்வேறு உணர்வுகளை இயல்பாக திரையாக்கம் செய்திருக்கும் ஐந்து  இயக்குனர்களின் இப்படங்கள் அரைமணி நேர பேக்கேஜ் சினிமாக்களின் புதிய கிரீடத்தில் மேலுமொரு கோஹினூர்.

அனைத்துமே பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படைப்புகள் என்றாலும் நடிகைகள் எவருக்கும் உணர்ச்சி பொங்கும் முகபாவங்கள்/வசனங்கள் இல்லை. மலையாள திரைப்பட உலகில் புதிய அலைகளை உருவாக்கி வரும் நிவின், துல்கர் மற்றும் பஹத் மூவரும் கதையின் தன்மைக்கேற்ப தம்மை  முன்னிலைப்படுத்தாமல் நடித்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். இமானுவேல் மற்றும் ஆமென் படங்களுக்கு பிறகு இங்கும் பஹத்தின் வெற்றிக்கொடி பட்டொளி வீசி பறந்திருக்கிறது. 

வித்யாசமான திரைப்படத்தை விரும்பும் ரசிகர்களை கண்டிப்பாக ஏமாற்றாது இந்த அஞ்சு சுந்தரிகள். மனசிலாயோ? 
.................................................................. 

  

Friday, June 28, 2013

தலை இருக்கறவன் எல்லாமே தலைவன்தான்டோவ்!!


                                                                   

ஊர் மிராசு கவுண்டர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மகளிடம் காதல் தூது விடுகிறார் செந்தில். சட்டென உள்ளே நுழையும் கவுண்டரை கண்டதும் பதறி வெளியேற முயற்சிக்கிறார் செந்தில்.

கவுண்டர்(தல): எவன்டா அது பம்முறது?

செந்தில்: வாங்கண்ணா வணக்கங்கண்ணா.மை சாங்க நீங்க கேளுங்கண்ணா. நான் ஒளரல ஒளரலண்ணா.  ஹீ..ஹீ...நாந்தாண்ணே வெளுத்தபாண்டி.

தல: ஓ...சின்ன சலவையா? வழக்கமாக உங்கப்பன் மொண்ண மூக்கந்தான துணி கொண்டு வருவான்...

செந்தில்: ஊர் ஆத்துல துணி தொவச்சி அவருக்கு அலுத்து போச்சாம். அதான் கொஞ்ச நாளைக்கி ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார்.

தல: ஆமா..இல்லனா மட்டும் அரபிக்கடல்ல துணி தொவச்சிடுவாறு. அது சரி ஆள் இல்லாத வீட்ல பூந்து என் பொண்ணு கிட்ட எதுக்கு கிளுகிளுப்பு காட்டற?

செந்தில்: எங்க அப்பாரு காலம் ஆத்தோடயே  போச்சி. ஆனா இந்த வெளுத்தபாண்டி  அரபிக்கடல்ல தான் இனிமே துணி தொவைக்க போறான். பை தி பை தலைவா..உங்க பொண்ணுக்கு என் மொபைல்ல 'தலைவா' ட்ரெயிலர் காமிச்சேன் தலைவா. 

தல:தலை இருக்கறவன் எல்லாமே தலைவந்தான்டா ராஸ்கோல். குண்டுவெடிப்பு, தாக்கரே பேமிலி ரவுசு எல்லாம் இல்லாம கொஞ்ச நாள் பாம்பே நிம்மதியா இருக்கறது ஒனக்கு புடிக்கல? உங்கப்பன் ஆத்த நாறடிச்சான். நீ கடல நாறடிக்க போறியா? 

செந்தில்: பாம்பே ஜனங்கள காப்பாத்தி நானும் ஹீரோவா மாறப்போறேன் தலைவா.

தல: ஹீரோவா மாறு. ஹீரோவா நாறிடாத. எங்க அந்த ட்ரெயிலரை ஓட்டு பாப்போம்.

2 நிமிட காட்சிகளை பார்த்ததற்கே கிறுகிறுத்து போகிறார்.

தல: ஏன்டா உலர்சலவ.... கமலு, ரசினில இருந்து எல்லா ஈரோங்களும் பாம்பேவை காப்பாத்தவே ஓடறாங்களே. நம்ம பாப்பநாயக்கன்பட்டி, கல்கத்தாவை எல்லாம் எப்படா காப்பாத்தறது? என்னதான் சொல்லு கேப்டன் லெவலுக்கு காஷ்மீர எல்லாம் காப்பாத்த இந்த பானி பூரி தலையன்களுக்கு  தம் பத்தாது. ஆமா இந்த உலக சினிமாவோட டைரக்டர் யாருடா?        
                                                               
 
செந்தில்:  விஜய்ண்ணே...

தல: தம்பி இப்ப டைரடக்சன் எல்லாம் பண்ணுதா? 'இந்த படத்தை இயக்கியது உங்கள் விஜய்'ன்னு வேற அடிக்கடி போட்டு காட்டுவாங்களே  யப்பா...

செந்தில்: யூ ஆர் மிஸ்டோக்கன் தலைவா. இவரு வெறும் டைரக்டர் விஜய். 

தல: டேய் டண்டணக்கா. மனசுல டி.ஆர். பாலுன்னு நெனப்பா?  அதுக்கு பேரு மிஸ்டேக்கன்ரா. டைரக்டர் விஜய்....ஓஹோ....அவுரா. டைட்டானிக், ஐ ஆம் சாம் படங்களுக்கே ரீமேக் ரைட்ஸ் தந்த வள்ளலாச்சே. இப்ப நாயகன், பாட்ஷா மாவை புதுசா பெனஞ்சி தோசை சுடுராப்லயா. சுத்தமடா. ஆடுனவன் காலும், பாடுனவன் வாயும் சும்மா இருக்காதாம். என்னதான் காவலன், துப்பாக்கின்னு நடிச்சாலும் சனங்கள சேவ் பண்றாப்ல சேவ பண்ணாத்தான அடுத்த மொத மந்திரி ஆக முடியும். 

செந்தில்: ப்ளட் ப்ரதர். உங்களுக்கும் சேத்து பாம்பே ப்ளைட்ல டிக்கட் போடவா?

தல: வேணான்டா சாமி. ஒன்ன மாதிரி ஓட்ட காலணா எல்லாம் இங்க இருந்து போனாலே ஊருக்கே பொங்க வச்சி கொண்டாடுவேன். ராசா...ஒனக்கும், தளபதிக்கும் சும்மிங் தெரியுமா? இல்லனா டோன்ட் வொர்ரி. அங்க நம்ம சன் தாத்தா மாதிரி கட்டுமரமா மெதக்குற தலைவன் எவனா இருப்பான். அதுல  புட்போர்ட் அடிச்சாவது அப்படியே கராச்சி பக்கம் போயிடுங்க.    

செந்தில்: டேங்க் யூ தலைவா. ஐ கோ பாம்பே. கமிங் வில்லேஜ் நெக்ஸ்ட் தீபாவளி.

தல: கம் னா கம். கம்முனாட்டி கோ.     
......................................................................     
              

சமீபத்தில் எழுதியது:


       

Thursday, June 27, 2013

சிவாஜி கணேசன் எழுதிய கதாநாயகனின் கதை

                                                                 

2008 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசனின் சுயசரிதை நூல் தவிர அவரது முழு பங்களிப்புடன் வேறெந்த நூலும் வந்ததில்லை என்றெண்ணி இருந்தேன். ஆனால் கதாநாயகனின் கதை எனும் தலைப்பில் விஜயா பப்ளிகேஷன்ஸ் மூலமாக நடிகர் திலகத்தின் மற்றொரு படைப்பை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. பொம்மை இதழில் சிவாஜி எழுதிய சிறப்பு கட்டுரைகள் மற்றும் அவரது பேட்டிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது இப்புத்தகம்.

சிவாஜி குறித்து அவரது தாயார் ராஜாமணி, அறிஞர் அண்ணா, கருணாநிதி, நடிகர் சிவகுமார் ஆகியோரின் கருத்துகள் ஆரம்ப பக்கங்களை அலங்கரிக்கின்றன. அவற்றை தொடர்வது சிவாஜியின் சிறுவயது மற்றும் நாடக கால அனுபவங்கள். சங்கிலியாண்டபுரத்தில் சுட்டிப்பயலாக திரிந்த கணேசனுக்கு நாடகத்தின் மீது ஈர்ப்பு வருவதற்கான காரணம் அவரது தெருவில் நடந்த கட்டபொம்மன் கூத்துதான். பொன்னுசாமி பிள்ளையின் ஸ்ரீ பாலகான சபாதான் இம்மகா கலைஞனுக்கான கலைக்கதவை திறந்து விட்டது.

விடிய விடிய நாடகம், ஊர் ஊராக பயணம், சூழ்நிலை காரணமாக வெவ்வேறு நாடகக்குழுக்களில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயம்..இப்படி இளம் பிராயத்தில் நடிகர் திலகம் பட்ட பாடு சொல்லில் அடங்காது. நாடக உலகில் இணைந்த பிறகு சுமார் ஆறாண்டுகளுக்கு பிறகே தாயை சந்திக்க சந்தர்ப்பம் கிட்டியது அவருக்கு. தந்தையின் இறப்பிற்கு கூட ஊர் செல்ல அனுமதி கிட்டவில்லை. அந்நாளில் நாடக கலைஞர்கள் எப்படி வேலை வாங்கப்படுவார்கள்,சபாக்களின் கட்டுப்பாடுகள் என்ன, சக கலைஞரின் நட்பு என பல்வேறு தகவல்களை பரிமாறி இருக்கிறார் சிவாஜி. 

எம்.ஆர். ராதாவின் குழுவில் இணைந்து இவர் நடித்த நாடகங்களில் ஒன்று  'இழந்த காதல்'. இதில்தான் முதன்முறையாக நாடக காட்சிகள் புகைப்படமாக எடுக்கப்பட்டது என் அனுமானிக்கிறார் நடிகர் திலகம். 'டப்பாச்சாரி' எனும் நாடகத்தில்  அய்யர் என்பவர் ஒன்பது வேடங்கள் தாங்கி நடித்திருந்தாராம். 'இப்படி நடிப்பது தனக்கு சாத்தியமா' எனும் கேள்வி பல நாட்கள் கணேசனின் மனதில் தங்கியிருப்பினும் நவராத்திரி மூலம் விடையளித்துவிட்டார்  என்பது நாமறிந்தது. 

சிவாஜி நடித்த பல்வேறு நாடகங்களின் பட்டியல் மற்றும் அபூர்வ புகைப்படங்களை கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.100. மொத்த பக்கங்கள் 120. அக்காலத்தில் தமிழ் மேடை நாடகங்கள் எப்படி இயங்கின என்பதை அறிய விரும்பும் கலா ரசிகர்கள் தவறாமல் படிக்க வேண்டிய நூலிது.  
                                                                   

கதாநாயகனின் கதையின் இரண்டாம் பாகம் முழுக்க தன்னுடைய திரைப்பட அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். முதல் பாகத்தில் இருந்த  வாசிப்பானுபவம் இந்நூலில் ஏனோ எனக்கு இல்லாமல் போனது. குறிப்பிட்ட படங்களில் நிகழ்ந்தேறிய சுவாரஸ்ய சம்பவங்களைப்பற்றி எழுதி இருப்பின் ஒருவேளை எனக்கு பிடித்திருக்கக்கூடும். ஆனால் சினிமா நடிப்பிலக்கணம் குறித்த சிவாஜியின் பார்வையே பெரும்பாலும் வியாபித்து இருப்பதால் வாசிப்பதில் அயற்சி ஏற்படுவதை தடுக்க இயலவில்லை.  

எம்.ஜி.ஆர். பேட்டிகள் எனும் நூலில் சிவாஜியின் நடிப்பு/அரசியல் குறித்து எம்.ஜி.ஆர். மறைமுகமாக பகடி செய்திருப்பார். அதுபோலத்தான் சிவாஜியும். என்னதான் பொது இடங்களில் ஆரத்தழுவி நட்பு பாராட்டினாலும் உள்ளூர சிறு போட்டி/பொறாமைகள் இருவரிடையே இல்லாமலில்லை என்பதற்கு அவர்தம் நூல்களே சாட்சி. 
...........................................................................    


Sunday, June 23, 2013

American Born Confused Desi

                                                                       

'உஸ்தாத் ஹோட்டல்' படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற மம்முட்டி மகன் துல்கர் தேர்ந்தெடுத்து இருக்கும் மற்றுமொரு வித்யாசமான 'மலையாள' சினிமா ABCD.  நிவின்(நேரம்), பகத் மற்றும் துல்கர் நடிக்கும் படங்கள் என்றால் சட்டென டிக்கட் புக் செய்து பட்டென தியேட்டருக்குள் நுழையும் ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதால் ABCD யை பார்ப்பதில் இந்த Indian Born Desi க்கு Confusion ஏதுமில்லை.

நம்மூர் 'தம்பிக்கு எந்த ஊரு' தோசையை லாவகமாக திருப்பிப்போட்டு ('கையளவு கதைக்குள்ள கடலளவு டைம் பாஸ் மச்சான். சொய்..சொய்') இருக்கிறார்கள். சிட்டியில் காசை கரியாக்கும் ரஜினியை கிராமத்திற்கு அனுப்பி செந்தாமரை வாழ்க்கைப்பாடத்தை கற்க சொல்வார் அங்கே. அமெரிக்காவில் இருந்து கேரளத்திற்கு ஹீரோ அனுப்பப்படுவது இங்கே. 

சொகுசாக வாழும் 'யோ யோ கய்ஸ்' ஜோன்ஸ் மற்றும் சிநேகிதன் கோரா இருவருக்கும் சேர்த்து மாதம் 5 ஆயிரம் மட்டும் வங்கிக்கணக்கில் ட்ரான்ஸ்பர் செய்கிறார் ஜோன்சின் தந்தை. இந்த அற்ப பணத்தை வைத்துக்கொண்டு இருவரும் நாட்களை நகர்த்த கடும் சிரமப்படுகிறார்கள். எதிர்பாராமல் வந்து சேரும் மீடியா வெளிச்சம் அவர்களின் வாழ்வை எப்படி திருப்பிப்போடுகிறது என்பதை காமடி பொங்க படமாக்கி இருக்கிறார் மார்டின்.

நிஜத்தில் அமெரிக்காவில் பட்டம் படித்தவர் என்பதால் அமெரிக்கன் ரிட்டர்ன் ஹீரோ கேரக்டரில் படு கேசுவலாக தூள் பறத்துகிறார் துல்கர். இந்திய சினிமாவில் இது போன்ற பாத்திரங்களில் பாரின் இங்கிலீஷ் பேசுகிறேன் பேர்வழி என்று ஹீரோ/செகன்ட் ஹீரோக்கள் உசுரை வாங்குவது பாரதமறிந்தது. ஆனால் இதுவரை நான் பார்த்ததில் பெர்பெக்ட் பாரின் ரிட்டர்ன் கேரக்டர் என்றால் துல்கர் என்று அடித்து சொல்லலாம். தம்பி அவ்வப்போது சொல்லும் fuck off சென்சாரில் இருந்து எஸ்கேப். 

நண்பனாக வரும் ஜேகப்பின் நடிப்பும் அப் டு தி மார்க். ஹீரோ கூட வரும் நண்பன்..அதுவும் அமெரிக்க நண்பன் என்றால் கோமாளி போல சித்தரிப்பது இந்தியப்படங்களில் தொன்று தொட்டு வரும் மரபு. ஆனால் ஜேகப் விதிவிலக்கு. அளவான ஜோக்குகளை மட்டும் உதிர்த்து காட்சியோட்டங்களை நீர்த்துப்போகவிடாமல் செய்திருக்கிறார்.     
                                                                  

கல்லூரி தோழியாக அபர்ணா. லாங் ஷாட்டில் பண்டைய நடிகை 'உன்னாலே 'உன்னாலே சதா போல இருந்த இந்த க்யூட்டியை பார்த்து 'யாருடா இந்தப்பொண்ணு. இதுக்கு முன்னால பாத்ததே இல்லையே' என்று நண்பனிடம் கேட்டதற்கு 'எடோ..இது ஈ குட்டியோட முதல் படம்' என்றான். ஹல்லா பேரி ஹேர் கட், மாடர்ன் பெண் நிருபர் காஸ்ட்யூம், காதுகளில் சிதறிக்கிடக்கும் கம்மல் தோட்டம்...எங்கிருந்து வந்தாயடி? என் உள்ளத்தை கொள்ளை கொண்டு சென்றாயடி...!!

கூத்துப்பட்டறையில் சிறப்பான பயிற்சி பெற்ற அபர்ணா நடிப்பில் டயமண்ட் மெடலை தட்டிச்செல்கிறார். எல்லா ஆங்கிள்களிலும், வசன உச்சரிப்பிலும்.. She is stunningly hot man!!. பாலிவுட்டின் வித்யா பாலன், ரிச்சா சட்டா, கேரளாவின் ரீமா கல்லிங்கல் மற்றும்  'லக்கி ஸ்டார்' படப்புகழ் ரச்சனாவிற்கு இணையாக திரையுலகில் பட்டையை கிளப்ப போகும் அடுத்த அசகாய மங்கை அபர்ணா என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிஞ்சித்தும் இல்லை. டைரில குறிச்சி வச்சிக்கங்க. 

இளம் அரசியல்வாதியாக டோவினோ மற்றும் கோல்மால் யூத் நவாஸ் கலாபாவன் ஆகியோரின் நடிப்பும் ஃபைன்.பெரும்பாலும் வளைகுடா தவிர வேறெங்கும் ஷூட் செய்யாத சேட்டன்கள் இம்முறை அமெரிக்காவில் கால் பதித்து இருப்பது ஆச்சர்யம்தான். கேரளாவில் நாளொன்றுக்கு 83 ரூபாய் மட்டுமே செலவு செய்வதாக சொல்லும் துல்கர் வித விதமாக காஸ்ட்லி காஸ்ட்யூமில் வலம் வருவது எப்படி என்று தெரியவில்லை. 

அமெரிக்கன் ஸ்டைலில் துல்கர் பாடி இருக்கும் 'ஜானி மோனே ஜானி' செம ஹாட் பீட்சா. கையில் காசின்றி துல்கரும், ஜேக்கப்பும் அலையும்போது சரியான டைமிங்கில் ஒலிக்கும் 'நயா பைசா இல்லா' பாடல் ரணகளம். 1960 இல் வெளியான நீலிசலி படப்பாடலாம் இது. ABCD யின் காஸ்ட்யூம் டிசைனரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். நவயுக ஆடைத்தேர்வில் 100% பெர்பெக்ட் உழைப்பு. 

இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைக்கும் வாய்ப்பிருந்தும் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக படத்தை இழுப்பதால் க்ளைமாக்ஸ் தருணங்களில் பொறுமை இழக்க நேரிடுகிறது. எனி ஹவ்... வொர்த்புல் அட்டம்ப்ட். கங்க்ராட்ஸ் கய்ஸ்!!

                                                     

...................................................................

சமீபத்தில் எழுதியது:

.............................................................   


Saturday, June 22, 2013

Raanjhnaa


                                                                       

தென்னிந்தியாவில் இருந்து வரும் தொழில்நுட்ப கலைஞர்கள், நாயகிகள் மற்றும் இயக்குனர்களை அங்கீகரிக்கும் பாலிவுட் உலகம் நாயகர்களை மட்டும் வளரவிடாமல் ஸ்விட்ச் ஆப் செய்துவிடும். கூடவே மீடியாவும் துணை போகும். அதையும் மீறி ஹிந்தியில் ஒரு நல்ல டீமுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தாலும் தெற்கத்தி ஹீரோக்களின் படங்கள் ஊத்தி மூடிக்கொள்வது தொடர்கதை. சூர்யா, மாதவன், சித்தார்த் போன்றவர்கள் மும்பையில் சோலோவாக போலோ சாப்பிடப்போய் பளிப்பு வாங்கியாகிவிட்டது. இப்போது தனுஷுன் இன்னிங்ஸ்!

கதையாகப்பட்டது யாதெனில் தமிழகத்தை சேர்ந்த பண்டித குடும்பம் பெனாரஸ் கோவிலில் வாழ்ந்து வருகிறது. அவர்களின் மகனாக தனுஷ். பெரும் செல்வம் படைத்த முஸ்லிம் குடும்பத்தின் மகளாக சோனம் கபூர். பொடிப்பய பருவத்தில் இருந்தே சோனம் மீது நம்மாளுக்கு லவ்ஸ் பூக்கிறது. டீன் ஏஜ் பருவத்தில் படிப்பிற்காக வெளியூர் செல்கிறார் நாயகி. ரிட்டர்ன் வருபவளிடம் 'இன்னும் எத்தனை வருஷம் காத்திருப்பது' என்று தலைவர் கேட்க அதற்கும் சோனம் தரும் பதில் 'பாப்ரே. அது வெறும் இனக்கவர்ச்சி. சீரியஸா எடுத்துக்காத. நான் ஒருத்தன லவ் பண்றேன். நீதான் சேத்து வக்கணும்'. போதுமா?  

30/40/50 வருடங்களுக்கு முந்தைய கதையை 300 அடி ஆழ பாழுங்கிணற்றில் இருந்து தூர்வாரி எடுத்து இருக்கிறார் இயக்குனர். 

 
சென்னை மைந்தனான தனுஷால் ஆடுகளத்தில் மதுரை வட்டார தமிழை  கையாள வாயாள முடியுமா  என்று புருவத்தை உயர்த்தியாவரே சென்றபோது ஆளு அதகளம் செய்திருந்தார்(இந்த நேரத்துலயா ஒஸ்தி சிம்பு பேசுன திருநெல்வேலி தமிழ் காதுக்குள்ள ரிங்குனு சுத்தணும்). சில பிசிறு தட்டல்கள் இருந்தாலும் அபவ் ஆவரேஜ்  ஹிந்தி வசன உச்சரிப்பில் ஹமாரே ஹீரோ ராக்ஸ். பள்ளி மாணவனாக இன்னும் எத்தனை ஆண்டுகள் நடித்தாலும் தம்பி கலக்குவாப்ல. யஹா பீ அச்சி தரா ஆக்ட் கர்லியா சாலே. செல்வராகவன் படத்தில் வருவது போல இங்கும் தனுஷின் காதலுக்கு எதிரியாக ஒரு மைதா மாவு செகண்ட் ஹீரோ(அப்பே தியோல்).  சிலிண்டரை எடுத்து வைக்க அப்பே உதவிய பின்பு வெறுப்பில் அதை இறக்கி மறுபடி ஏற்றும்போதும், 'you forget me' என கடுகடுக்கும் சோனாவிடம் அதை ரிப்பீட் செய்து கொஞ்சலுடன் சொல்லும்போதும் அப்ளாசை அள்ளுகிறார் தனுஷ். 

அமேசிங் ப்யூட்டியாக முதல் பாதியில் சோனம் நெஞ்சை அள்ளினாலும், பாப்கார்ன் கவ்விய பிறகு வரும் சீன்களில் கல்லூரி மாணவர் தலைவியாக அரசியல் அவதாரம் எடுத்து பொங்கும்போது....போர் அடிக்குது போங்கள். பாஸ்கின் ராப்பின்ஸ் ஐஸ் க்ரீமகாவே இருந்தாலும் மதியச்சோறு அளவிற்கு அள்ளியா தின்ன முடியும்? 

பை பெர்த்திலேயே அழகாய் இருக்கும் பெனாரசை இன்னும் கலர்புல்லாக காட்டி இருக்கிறார் நம்ம கேமராமேன் நட்டு. ரஹ்மானின் இசையில் அனைத்தும் மான்டேஜ் கானாக்கள். தும் தக், ராஞ்சனா பாடல்கள் காதல் ரங்கோலி. 

இரண்டாம் பாதியில் மாணவர் அரசியல் எனும் பெயரில் படம் பார்க்கும் அனைவரின் கைகளையும் இழுத்து வைத்து ப்ளேடு 'போட்டு தள்ளுகிறார்கள்'. மனதில் இயக்குனர் ஆனந்தின் பெயரை உரக்க ஜெபித்தவாறு 'ஹமே யஹா சே சோட் தே பையா. கண்பதி பப்பா துஜே 100 சால் ஆசிர்வாத் கரேங்கே. மேரி மா கீ கசம்' என்று கதறி அழ வேண்டியதாகிவிட்டது. அம்பிகாபதி  பார்க்கப்போகிறவர்கள் அலெர்ட் ஆகிக்கொள்க. ஜெய் போலேநாத்.
...........................................   

Tuesday, June 11, 2013

ஸ்பெஷல் மீல்ஸ்(10/06/13)'தாய்'ப்பாசம்: 
                                                                           
   ரெமோ பாலகணேஷ், கேபிள் சங்கர், நான், ஆரூர் முனா  

ஆழ்வார்பேட்டையில் சாவதிகா எனும் தாய்லாந்து உணவகத்தில் சாப்பிட ஞாயிறு மதியம் ஆரூர் முனா செந்திலிடம் இருந்து ஒரு அழைப்பு. சாப்பாட்டுக்கடை ஓனர் கேபிள் சங்கர் மற்றும் 'ரெமோ' பாலகணேஷ்  ஆகியோரும் சம்மதிக்க ஸ்பாட்டை அடைந்தோம். வகை  வகையாக உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுவதில் இன்னும் அப்ரண்டிஸ் ஆகவே இருப்பவன் என்பதால் தாய் உணவுகள் எப்படியோ என்று லேசான கிலியுடனே நான் இருக்க என்னை விட அதிகம் பதறியது கேபிளார்தான். 

'இந்த ரெஸ்டாரன்ட் பத்தி சரியா விசாரிச்சீங்களா?' என்று அவ்வப்போது கேட்டுக்கொண்டே வந்தார். 'பேஸ்புக் சாப்பாட்டுக்கடையில் நண்பர் ஒருவர் சாவதிகா பற்றி எழுதி இருந்ததை பார்த்துதான் இதை தேர்வு செய்தேன். வாங்கண்ணே ' என்று கேபிளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றார் ஆரூர். வெற்றிலைப்பாக்கு சகிதம் மினி பசியூட்டிகள், காளான் சூப், பெப்சி, பலாச்சுளைகள்  மிதக்கும் டெஸர்ட், ஜென்மத்தில் இதுவரை சாப்பிடாத ஆசம் நூடுல்ஸ் என தரத்தில் அசத்தி இருந்தனர். என்ன அளவுதான் கம்மியா போச்சி.
அசைவ உணவு தலைக்கு ரூ.249.

பிரபல தாய் உணவகமான 'பெஞ்சாரோங்'கில் வேலை பார்த்து வந்த இரு தமிழக இளைஞர்கள்  அங்கிருந்து விலகி சாவதிகாவை துவக்கி உள்ளனர். சாவதிகா உணவுகள் குறித்த விரிவான அலசல் விரைவில் கேபிள் பதிவில் வெளியாகும். லெட்ஸ் வைட்.       
..........................................................................

என் சுவாசக்காற்றே: 
'இனி தமிழ்ப்படங்களில் அவ்வப்போது இசைய மைப்பேன்' என்று ரஹ்மான் கூறி இருப்பது என் போன்ற ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். மரியான், காவியத்தலைவன், கோச்சடையான், ராஞ்சனா, ஐ, துருவ நட்சத்திரம் என  நீள்கிறது அவர் இசையமைக்கும் படங்களின் பட்டியல். ராக் ஆன் ரஹ்மான்!!

ஹிந்தியில் தனுஷ் நாயகனாக நடிக்கும் 'ராஞ்சனா' வில் ரஹ்மானின் பட்டையை கிளப்பும் பாடலைக்கேட்க க்ளிக் செய்க: ராஞ்சனா   
........................................................................  


சேட்டை:
                                                           

நகர்ப்புறங்களில் பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடம் பார்த்து சொட்டு நீர்ப்பாசனம் செய்வது பெரும்பாலும் மத்திய வயது ஆண்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகு சேட்டையை கட்டுப்படுத்த சுவர்களில் கடவுள் படங்களை வரைந்து வைத்தாலும் அங்கிள்கள் அசருவதாக இல்லை. தி.நகர் உஸ்மான் சாலை அருகே உள்ள சந்தினுள் ஜிம்பலக்கடி அங்கிள் ஒருவர் பகல் பொழுதில் பரபரப்பாக இருக்கும் ஏரியா என்று கூட பாராமல் பம்ப் செட்டை திறக்கும் காட்சி. 
.................................................................... 

பிடிச்சிருக்கு:
பதிவுலகில் சிறந்த நகைச்சுவை படைப்புகளை தருபவர் ஒரு சிலரே. அதில் சேட்டைக்காரன் எப்போதுமே சூப்பர் ஸ்டார் என்பது பலருக்கு தெரியும். அவர் எழுதியதில் என்னை கவர்ந்த ஹ்யூமர் தெறிக்கும் பதிவுகளில் ஒன்று:

.....................................................................

அன்னை இல்லம்: 
                                                                
                                                    
சில நாட்களுக்கு முன்பு ஜெயா ப்ளஸ் சேனலில் நகரமயமாக்கல் குறித்த தலைப்பில் பேச சுரேகா அவர்களிடமிருந்து ஒரு அழைப்பு. வழக்கம்போல எதிர்க்கருத்து பேச ஒருவரும், தொகுப்பாளரும் உடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று ஸ்டுடியோ உள்ளே நுழைந்தால் தனியாக ஒரு இருக்கையில் அமரச்சொல்லி 'இப்ப பேசு மாப்ள' என்று கேமராவை ஆன் செய்து விட்டனர். சிற்றறிவுக்கு எட்டிய சில செய்திகளை வாசித்துவிட்டு கிளம்பினேன். மத்திய அரசின் 'கற்கும் பாரதம்' திட்டத்தை தமிழகம் எப்படி சிறப்பாக செயல்படுத்துகிறது உள்ளிட்ட சில செய்திகளை விரிவாக பகிர்ந்து கொண்டனர் அங்கிருந்த நிர்வாகிகள். அனுபவம் புதுமை. 
...............................................................

பொங்கலோ பொங்கல்: 
அம்மா மெஸ் ஆரம்பித்தபோது விசிட் அடித்து எழுதிய பதிவிற்கு பிறகு மீண்டும் ஒரு முறை அங்கே சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது. மதியம் லெமன் , கறிவேப்பிலை சாதங்கள் அறிமுகம் ஆகி இருப்பதால் வடபழனி அம்மா மெஸ்ஸில் அண்ணன் கே.ஆர்.பி.செந்திலுடன் என்ட்ரி. ஒரு சாம்பார் மற்றும் ஒரு லெமன் சாதம் ஆர்டர்.  அம்மா மெஸ் துவங்கியபோது இருந்ததை விட தற்போது சாப்பாட்டின் அளவு கம்மியாக இருந்தது.

வட சென்னை எம்.கே.பி.நகர் கிளையில் அரிசி குண்டாக இருப்பதால் அதிகம் உட்கொள்ள சிரமமாக இருப்பதாக  கூறினான். இங்கும் அவ்வாறே. லெமன் சாதத்தை சிரமப்பட்டே உட்கடத்த வேண்டி இருந்தது. சரியான விகிதத்தில் எலுமிச்சை சாற்றை சோற்றில் கலக்காததால் ருசி சுமார்தான்.  லெமன், கறிவேப்பிலை சாதங்கள் ஒரே நாளில் பரிமாறப்படுவதில்லை. 
                                                                   
                                                                    அம்மா மெஸ் லெமன் சாதம்

அதற்கு நேர்மறையாக சென்ற ஞாயிறு காலை நந்தனம் (சி.ஐ.டி .நகர்) அம்மா மெஸ்ஸில்  சாப்பிட்ட பொங்கல் ஆசம். சுடச்சுட திவ்யமான பொங்கலுடன் தொட்டுக்கொள்ள தரமான சாம்பார். இட்லி(ஒரு ரூபாய்) ஒவ்வொன்றிற்கும் தனி டோக்கன். பொங்கலுக்கு முன்பாகவே இட்லி போட்டு அடுக்கி விடுவதால் அதிகபட்சம் நான்கு இட்லிக்கு மேல் தொண்டைக்குள் ட்ராவல் செய்வது கடினம். சுற்றியும் சுகாதாரமான சூழல், கையுறை அணிந்து பரிமாறும் மகளிர், உணவு எப்படி இருந்தது என்பதை நாம் எழுத டோக்கன் தருமிடத்தில் ஒரு நோட்டு புத்தகம் என குறிப்பிடத்தக்க விஷயங்கள் இருப்பது சிறப்பு. சாப்பாடு ஓட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
......................................................................

சில்லுனு ஒரு சந்திப்பு:
சென்ற ஆண்டைப்போலவே இம்முறையும் சென்னை பதிவர் சந்திப்பை சிறப்பாக நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான ஆலோசனைகள் வரும் வாரங்களில் துவங்க இருக்கின்றது. இடம், தேதி மற்றும் விழா நிகழ்வுகள் குறித்த செய்திகள் விரைவில் பகிரப்படும். பல்வேறு ஊர்களை சேர்ந்த பதிவர்கள் அனைவரையும் வரவேற்க காத்திருக்கிறது தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்.
................................................................

விஸ்வரூபம்:
சென்னையில் ஆட்டோக்காரர்கள் வரையறையின்றி கட்டணம் வசூலிக்கும் போக்கை எதிர்த்து தீவிரமான செயல்பாடுகள் நடந்தேறி வருகின்றன. விரைவில் நியாயமான மீட்டர் தொகையை நிர்ணயிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தமிழக அரசிற்கு உத்தரவிட்டு உள்ளது. மறுபக்கம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இப்பகல் கொள்ளையை கண்டித்து கிட்டத்தட்ட ஒரு இயக்கமே நடத்தி வருகிறது. லெப்டுல இன்டிகேட்டர் போட்டு, ரைட்ல கை காமிச்சி, நேரா ஆட்டோ ஓட்டுற அண்ணாத்தைங்க என்ன ப்ளான் வச்சிருக்காங்களோ?
.....................................................

நினைவெல்லாம் நித்யா:
சர்வலோக நிவாரணி நித்தியை பிரமாதமாக ஓட்டிய இக்காணொளியை இப்போதுதான் பார்க்க முடிந்தது. செம காட்டு காட்டி இருக்காங்கப் போய்:  


..............................................................................

Images copyright: madrasbhavan.com

...................................................
சமீபத்தில் எழுதியது:

எம்.ஜி.ஆர். பேட்டிகள்  
...................................................


Sunday, June 9, 2013

எம்.ஜி.ஆர். பேட்டிகள்ஒவ்வொரு முறையும் புத்தக கண்காட்சி/புத்தக நிலையங்களுக்கு செல்லும்போது எம்.ஜி.ஆர் பற்றிய நூல்களை வாங்குவதிலும், அவர் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை படிப்பதிலும் தனியார்வம் எப்போதும் எனக்குண்டு. 2011 புத்தக கண்காட்சியின்போது ஒரு ஸ்டாலில் தலைவர் புத்தகங்கள் இரண்டினை வாங்கி பில் போட சென்றபோது அங்கிருந்தவர் சொன்ன செய்தி: 'வருடா வருடம் எம்.ஜி.ஆர். பற்றி எழுதப்படும் புத்தகங்கள் சிறப்பாக விற்பனை ஆவதுண்டு. பெரும்பாலும் அவற்றை வாங்கிச்செல்வது இளைஞர்கள்தான். எவர்க்ரீன் ஹீரோங்க அவர்'.   
                                                                   

இம்முறை எனக்கு படிக்க கிடைத்த நூல்:கிருபாகரன் தொகுத்த எம்.ஜி.ஆர்.பேட்டிகள். பொம்மை, பேசும் படம், குமுதம், விகடன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களுக்கு 1950 களின் இறுதி முதல் 1980 களின் துவக்கம் வரை புரட்சித்தலைவர் அளித்த பேட்டிகள் ஒரே புத்தக வடிவில்.

நூலில் முதலாவதாக இருப்பது 1968 ஆம் ஆண்டு ஜெயலலிதா வாய்ல அடி. வாய்ல அடி. மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி முதல்வர் அம்மா அவர்கள் பொம்மை ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரிடம் எடுத்த பேட்டி. நடிப்புத்துறையில் ஈடுபட காரணம் என்ன எனும் கேள்விக்கு கிடைத்த பதில் -வறுமை. சுவாரஸ்யமான கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர்.அளித்த பதில்கள் சில உங்கள் வாசிப்பிற்கு:

வாழ்க்கையில் பெரிய சோதனையாக அமைந்த நிகழ்ச்சி எது?
ஒரு பெண் என்னை காதலித்ததுதான். தயவு செய்து இதற்கு மேல் அது பற்றி எதுவும் கேட்க வேண்டாம்.

அதிர்ஷ்டம், ஆருடம், ராசிகளில் நம்பிக்கை இருந்ததுண்டா?
உறுதியாக. மிகப்பலமான நம்பிக்கை இருந்தது உண்டு.

கருணாநிதியுடன் முதல் சந்திப்பு எப்போது நிகழ்ந்தது?
ஜூபிடரின்  'அபிமன்யு'  பட உரையாடல் எழுத அவர் கோவை வந்தபோது.

சினிமா நடிகர்கள்தான் தி.மு.க.வின் பலமா?
இல்லை. அது தவறான கருத்து. நடிகர்கள் இல்லாமலே தி.மு.க. இயங்கும்(நோட் திஸ் பாய்ன்ட் மிஸஸ் குஷ்பூ). சாகும் வரை தி.மு.க.வில் தான் இருப்பேன்(நாஞ்சில் சம்பத் உங்களுக்கும்தான்).

சினிமாவில் அழும் காட்சிகள் குறித்து...
நாடகங்களில் இயற்கையாக அழுதே ஆக வேண்டும். சினிமாவிலும் அவ்வாறே நடிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் க்ளிசரின் போட மறுத்தேன். ஆனால் அப்படி நடித்த காட்சிகளை திரையில் பார்த்தபோது நான் அழுவது போலவே இல்லை. ஏனெனில் இயற்கையாக அழும்போது ஷூட்டிங் லைட் சூட்டில் கண்ணீர் கன்னத்திற்கு வரும் முன்பே உலர்ந்து விடும்(எப்படி சமாளிக்கிற பாரு வாத்யாரே). பிறகுதான் க்ளிசரின் போட ஆரம்பித்தேன்.
                                                         
                                                               'அம்மா'விற்காக அழும் தலைவர்

செல்வி ஜெயலலிதாவிற்கும் தங்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சில மஞ்சள் பத்திரிக்கைகள் எழுதுகின்றன. அதற்கு தங்கள் பதில் என்ன?
மஞ்சள் பத்திரிக்கைகள் எழுதுவதை காசு குடுத்து படித்து உங்கள் நேரத்தை வீண் செய்ததோடு என் நேரத்தையும் வீண் செய்து விட்டீர்களே.(டேய் நாதஸ்  அது ஏன்டா என்னப்பாத்து அந்த கேள்விய கேட்ட..)
        
20 வயதுடைய அழகிய பெண் தங்களை காதலிப்பதாக கூறினால் திருமணம் செய்து கொள்வீர்களா?
ஏன் செய்து கொண்டால் என்ன? இப்போதுதான் மறுமணம், விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இருக்கிறதே.

சினிமா உலகில் உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?
நான் சுடப்பட்டது கூட என் மேல் அன்பு வைத்த நண்பரால் என்று கூறுகிறீர்களா?

7 முதல் 17 வயது வரை நாடகங்களில் நடித்த தலைவர் 1935 ஆம் ஆண்டு ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் சதிலீலாவதி மூலம் திரைத்துறைக்கு நுழைந்தார். நீங்கள் நடித்ததில் பிடித்த படமெது என்பதற்கு பதில்:  பெற்றால்தான் பிள்ளையா.

அரசியலில் இருந்து விலகி படங்கள் மூலம் அண்ணா கொள்கைகளை பரப்பினால் என்ன?
அப்படியானால் பல தமிழர் குடும்பங்களை அவல நிலைக்கு ஆளாக்கி இருக்கும் கருணாநிதி அல்லவா அரசியலை விட்டு விலக வேண்டும்.

சமீபகாலமாக தொப்பி போடுவதன் காரணமென்ன?
'அடிமைப்பெண்' வெளிப்புற காட்சிக்காக ஜெய்ப்பூர் பாலைவனத்திற்கு சென்றிருதோம்.  வெயிலின் சூட்டை தணிக்க அன்பர் ஒருவர் தொப்பி  ஒன்றை தந்தார். தேர்தல் நேரத்தில் வெயில், மழை போன்றவற்றை சமாளிக்க தொப்பி சௌகர்யமாக இருக்கவே தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தேன்.

அறிஞர் அண்ணாவிற்கு பிறகு கலைஞர் ஆட்சி(1972) எப்படி உள்ளது?
அறிஞர் அண்ணா இப்போது இருந்தால் என்ன செய்வாரோ அதை எல்லாம் கலைஞர் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்(அட கர்த்தரே கர்த்தரே).

உங்களுக்கு சேரும் கூட்டமெல்லாம் நீங்கள் சினிமா பிரபலம் என்பதால் மட்டும் இருக்கலாம் அல்லவா?
என்னைப்போல் எத்தனையோ நடிகர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் என் போலவே இயக்கம் ஆரம்பித்தால் அவர்களுக்கு இப்படி கூட்டம் சேரும் என்று சொல்ல முடியுமா?

(இந்த யூ ட்யூப் லிங்கை நீங்க பாத்து இருந்தா இப்படி பேசி இருக்க மாட்டீங்க வாத்யாரே...

டி.ஆர். அதிரடி)

ஓவர் ஆக்டிங் என்றால் என்ன? (சபாஷ் மாப்ள. இது கேள்வி....)
                                                                 
 
ஒரு மனிதனின் தாயார் இறப்பது போல் காட்சி என்று வைத்து கொள்வோம். தான் அழுவது மூலம் பிறரின் துன்பத்தை அதிகரித்து விடுவோமோ என்று அவன் உணர்கிறான். எனவே அழுகையை அடக்கிக்கொண்டு தழுதழுத்த குரலில் பிறருக்கு ஆறுதல் சொல்கிறான். பெற்ற தாய் இறந்தாலும் வெடித்தெழும் உணர்வினை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறான் என்பதை நாமும்(ரசிகர்கள்) புரிந்து கொள்கிறோம்.

ஆனால் 'ஒரு நடிகன்' பாத்திரத்தின் தன்மையை மறந்துவிட்டு தான் நன்றாக நடிப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற 'குறிக்கோளில்' ஆறுதல் சொல்ல வந்தவர்களை பார்த்து கதறி, உரத்த குரலில் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு, முகத்தை பல்வேறு கோணங்களில் அசைவுபடுத்தி கொண்டு மற்றவர்களிடம்(பிற நடிகர்கள்) இருந்து மக்களை தன் பக்கம் ஈர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு நடிக்கின்ற நடிப்புதான் ஓவர் ஆக்டிங்(சுமதி..கேட்டியாம்மா..கேட்டியா.. - கேட்டேன் கோப்பால் கேட்டேன்.)

இப்படி ஆங்காங்கே நடிகர் திலகத்தை ரவுசு கட்டி இருக்கிறார் மக்கள் திலகம். 'அண்ணா நான் உங்கள் ரசிகன். எனக்கு உங்கள் அறிவுரை என்ன?' டைப்பில் ஏகப்பட்ட ஸ்டீரியோ டைப் கேள்விகள். அதற்கு 'நாட்டுக்கு நல்ல பிள்ளையாய் இரு. தாயே தெய்வம்' என அறிவுரை வழங்குகிறார் எம்.ஜி.ஆர்.

சிறப்பான அச்சில் மொத்தம் 208 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ 130. கண்களை உறுத்தாத அளவில் வார்த்தை வடிவமைப்பு, மிகச்சில படங்களுடன் ஏராளமான பேட்டி தொகுப்புகள் இப்புத்தகத்தின் ப்ளஸ். பொன்மனச்செம்மலின் ரசிகர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.
.......................................................


சமீபத்தில் எழுதியது:

கிராமத்து இளைஞன் என்ன கிள்ளுக்கீரையா?


Saturday, June 8, 2013

கிராமத்து இளைஞன் என்ன கிள்ளுக்கீரையா?'பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்தா மாதிரி', 'வந்துட்டான் பார் மஞ்ச பைய தூக்கிட்டு' என கிராமத்தில் இருந்து வருவோரை எள்ளல் செய்த காலம் சில ஆண்டுகளுக்கு முன்பே மலையேறி விட்டது. உடல் ஊனமுற்றோரை குருடன், நொண்டி என்று கிண்டல் அடித்து வந்த பொது பேச்சுவழக்கு ஓரளவு படித்தவர்கள் மத்தியில் மாற்றுத்திறனாளி என்று மாறிவருகிறது. சர்தார்ஜி, சவரம் செய்பவர் என ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தோரை ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் நையாண்டி செய்வது முகச்சுளிப்பை ஏற்படுத்தியதால் ஒரு சிலரைத்தவிர வேறு எவரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. 

பொதுவாழ்வில் ஈடுபடும் நபரை அவரது செய்கைகளின் அடிப்படையில் கொச்சையாக அர்ச்சனை செய்யாமல் கிண்டலடிப்பது வேறு. ஆனால் பொத்தம் பொதுவாக இவர்கள் இப்படித்தான் என்று ஏளனம் செய்வது எத்தனை பேருக்கு ஏற்புடையதாக இருக்கும்? கண்ட இடங்களில் ப்ளெக்ஸ் வைப்பவர்கள், 'சில்லறை இல்லாவிட்டால் இறங்கு என்று' பேசும் நடத்துனர்கள் ஆகியோரை ரவுசு கட்டுவது என்பது சரி. அதற்கு  நமது அன்றாட அனுபவங்களே சாட்சி. ஆனால் போகிற போக்கில் இஷ்டத்திற்கு எள்ளலுடன் எழுதினால்?  அப்படி ஒரு கட்டுரையை (சென்னை உன்ன வரவேற்கிறது) இவ்வார ஆனந்த விகடனில் படிக்க நேர்ந்தபோது நெருடலாய்த்தான் இருந்தது. 

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் தமிழக இளைஞன் இப்படித்தான் இருப்பான் என்று சரண் எழுதி இருப்பது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. அதுவும் நான்கைந்து தரமல்ல. பல்வேறு முறை தொடர்ச்சியாக நீள்கிறது இதுபோல...

சென்னைக்கு முதன்முறை வரும் இளைஞன்...... 

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானம் நிற்கிறதா என்று எட்டிப்பார்ப்ப்பான்.

- (எனது அனுபவத்தில்) சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்  ஆனாலும் பேருந்துகளில் விமான நிலையத்தை எட்டிப்பார்ப்பது இயல்புதான். 

இறுக்க, கிறக்க டீன் ஏஜ் டிக்கட்டுகளை வாய் பிளந்து பார்ப்பான்.

-அட கொடுமையே. பருவப்பெண்களை சைட் அடிக்க மட்டுமே வாரந்தோறும் மால்களில் திரிவது சிட்டி இளைஞர் க்ரூப்பின் பொழுது போக்கு. எமது கிராமத்து இளைஞனை மட்டும் குறிவைத்து தாக்குவது எதனால்?

வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவரை பார்க்க போய் பல்ப் வாங்குவான்.

- அட!!  விட்டால் 'சென்னை காய்கறி கடையில் 'பெங்களூரு தக்காளி இங்க விக்கறீங்க? அப்ப இது சென்னை இல்லையா?' என்று கூட கிராமத்து இளைஞன் கேட்பான் என்று எழுதாமல் போனீர்களே. 

வேப்பேரிக்கும் வேளச்சேரிக்கும் வித்யாசம் தெரியாது, சாலிக்கிராமத்தில் கிராமம் எங்கே என தேடுவான் என பட்டியல் நீள்கிறது.

பிரதான சென்னை நகரில் பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையில் இக்கட்டுரை பெரும்பாலும் அபத்தங்களை சுமந்து வருகிறது என்று அடித்து சொல்லுவேன். 

பொதுவாக என் போன்ற மாநகர இளைஞர்களுக்கு வேலை தேடுதலில் லேசான சோம்பேறித்தனம் இருப்பதுண்டு. உதாரணம்:  'விடு. ஊர்ல கம்பனிங்களுக்கா பஞ்சம். அடுத்த இன்டர்வியூல பாத்துக்கலாம்'. அதுபோல இலட்சியங்களின் உயரம் கிராமத்து இளைஞர்களை விட சிட்டி யூத்களிடம் சற்று குறைவாகவே இருக்கும்.

'ஊரைவிட்டு மேன்சனில் குடியேறிவிட்டோம். இம்மாநகரில் கிடைக்கும்  வேலை வாய்ப்புதான் முதல் தலைமுறை பட்டதாரியாகி இருக்கும் எனது குடும்பத்தின் வறுமைப்பேயை அடித்து விரட்டும்' எனும் அதீத பொறுப்புணர்ச்சி மற்றும் குறிக்கோள் கொழுந்து விட்டெரியும். 'முதல் சில நாட்கள் குடும்பத்தாரை எண்ணி கண்ணீர் விட்டு அழுதேன். ஆனால் அதன் பின் யதார்த்தம் உணர்ந்து வாழ பழகிக்கொண்டேன்' என திருவல்லிக்கேணி மேன்சனில் குடியேறிய எனது நண்பனின் குமுறல் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. 

இரண்டு மூன்று ஆண்டுகள் மந்தமாக வேலை கற்கும் நகரத்து இளைஞனை விட வெகுவேகமாக முன்னேறுவதில் கிராமத்து இளைஞன் கில்லி. என்ன பாழாய்ப்போன ஆங்கிலம் மட்டும் அவனை உயர்பொறுப்பை நோக்கிச்செல்ல விடாமல் பின்னிழுக்கும். மீண்டும் உத்வேகத்துடன் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தை சரளமாக கற்றுக்கொண்டு விடுவான். இப்படி எனது அலுவலக அனுபவத்தில் பார்த்து வியந்த தோழர்கள் உண்டு.

பொதுவாக நகரத்து இளைஞன்(நான் உட்பட) விடுமுறை தினங்களில் சினிமா, அரட்டை என கேளிக்கைகளில் ஈடுபடும் நாட்களில் 'அடுத்த கோர்ஸ் என்ன பண்ணலாம்? இம்முறை சம்பள உயர்வு கிடைக்காவிட்டால் அடுத்த திட்டமென்ன? 'வெளிநாட்ல நம்ம சொந்தக்காரர் இருக்காராமே..அவர்கிட்ட பேசி வேலைக்கு ஏற்பாடு செய்யனுண்டா'....இதுதான் படித்த கிராமத்து இளைஞன் மனத்திரையில் அவ்வப்போது ஓடிக்கொண்டிருக்கும்.

அதற்கு ஓர் உதாரணம் எனது அலுவலக நண்பன் வினோத். திருச்சி அருகே உள்ள கிராமத்தில் இருந்து சென்னைக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு வந்த இளைஞன். நகர வாழ்வு, பன்னாட்டு நிறுவன கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தும் அப்போது அவனுக்கு புதிது. ஆனால் வேலைக்கு சேர்ந்த ஒரு சில மாதங்களிலேயே தனது அபார திறமையால் முன்னுக்கு வந்தவன். 
                                                               

இம்மூன்று ஆண்டுகளில் அயல்நாட்டு க்ளயன்ட் மற்றும் வேலை செய்யும் நிறுவனத்தின் vice president போன்ற மிகப்பெரிய பொறுப்பில் இருப்போரின் பாராட்டுகளை தொடர்ந்து அள்ளி வருகிறான். 'ச்சே..பத்தாது. இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்கு' என என் போன்ற (நகர) அலுவலக நண்பர்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது இவ்விளைஞனின் மெச்சத்தக்க வளர்ச்சி. 

25 வயது கூட பூர்த்தி ஆகாவிடினும் பங்குச்சந்தையின் அன்றாட நிலவரங்கள் இவனுக்கு அத்துப்படி. ஆங்கிலம் மட்டும் சரளமாக வந்துவிட்டால் மிகப்பெரிய உயரத்தை ஒரு சில வருடங்களில் எட்டிவிடுவான். அதற்கான முயற்சியிலும் தற்போது இறங்கியாகி விட்டது. வழிகாட்ட படித்த உறவினர்கள், நகரத்து இளைஞர்கள் பெருமளவில் இல்லை எனினும் எதிர்நீச்சல் போட்டு வெற்றிக்கோட்டை நோக்கி வேகமான பயணம் அனுதினமும் தொடர்கிறது. quality rating/பணியை நேர்த்தியாக செய்வதில் மூன்றாண்டுகள்  100% துல்லியமாக செயல்பட்டு பட்டையை கிளப்பி வருகிறான். 

இதுபோக இந்தியாவின் இதர நகரங்கள் மற்றும் அயல்நாட்டு நிறுவனங்கள் 'எம்மிடம் வேலைக்கு சேர வாருங்கள்' என நண்பனுக்கு மின்னஞ்சல்களை அனுப்பிய வண்ணம் உள்ளன. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தான். நண்பன் போல மாநகரின் ஒவ்வொரு அலுவலம், கடைகள், ஊடகங்கள் என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வரும் எமது கிராமத்து சகோதரர்களை அவ்வளவு லேசில் கிள்ளுக்கீரையாக கேலி செய்வது உறுத்தலாக இருக்கவே செய்கிறது.

பல்லாண்டு கால விகடன் வாசகனாக மனதில் பட்டதை கூறினேன். முன்னணி இதழான விகடன் இதை கருத்தில் கொண்டால் நன்று.
.......................................................................... 
Sunday, June 2, 2013

ஐயய்யோ நான் எழுத்தாளனுங்கோநாட்டாமை வீட்டு நாயின் முதல் பிறந்த நாளுக்காக எட்டுப்பட்டி முழுக்க காலை முதல் ப்ளெக்ஸ் பேனர் ஒட்டிய களைப்பில்  கவுண்டரும், செந்திலும் மதிய நேரம் தெருவோரம் நடந்து செல்கிறார்கள்.  
                                                                       
       
கவுண்டர்(தல): "ஏண்டா டாப் ரேமன் நூடுல்ஸ் தலையா.. நமக்கு இந்த பொழப்பு தேவையா? 'சிங்கத்தின் வீட்டை காவல் காக்கும் தங்கமே', 'ன்னு வித விதமா அந்த நாய்க்கு பேனர் எழுத சொல்றானுங்க பிக்காலி பசங்க. தாங்கல. ஆமா அங்க என்னடா அவ்ளோ பெரிய க்யூ நிக்குது? 

செந்தில்: நம்மூர்ல சிறந்த எழுத்தாளரை தேர்ந்து எடுத்து பத்து TVS கீபோர்ட் பரிசா தர்றாங்கண்ணே..

தல: அடங்கோ. இந்த ஊர்ல நாந்தான பெரிய டமுக்கு டப்பா ரைட்டரு. அப்ப அவார்ட் எனக்குதான். இருடா போயிட்டு வர்றேன்.

செந்தில்: ஆமா வாங்க. போயிட்டு வந்துருவோம்.

தல: என்ன பொந்துருவோம்? கம்முன்னாட்டி... நீ எதுக்கு வர்ற?

செந்தில்: ஜெயில்ல இருந்தப்ப 'கம்பிகளுக்கு பின்னால் ஒரு கானக்குயில்' புத்தகம் எழுதி இருக்கனே....

தல: அடேய் புளிச்ச கீரை. அந்த புக்குக்கு நான் ஒரு நல்ல தலைப்பு சொல்றேன். கேட்டுக்க.. 'கம்பிகளுக்கு நடுவில் ஒரு கருங்குரங்கு'. 

சோகத்தில் செந்தில் விசும்ப... 

தல: ரொம்ப நடிக்காத படுவா. வந்து தொல.

செந்தில்: இந்த விருதுக்கு ஏண்ணே இத்தன பேர் க்யூவுல நிக்கறாங்க?

தல: நம்ம நாட்ல க்யூவுக்கு என்ன பஞ்சமாடா? இலவசத்துக்கு நிப்பாங்க,நடு ராத்திரி கெளம்பி IPL பாக்க ஸ்டேடியம் வாசல்ல நிப்பாங்க, நாளைக்கே ஒரு நல்ல ரைட்டர் டிக்கட் வாங்குனா அந்த சந்தோசத்துல அவன பொதைக்கறதுக்கு கூட க்யூவுல நிப்பாங்க.

இருவரும் க்யூவின் குறுக்கே நுழைய அல்லக்கை இணைய எழுத்தாளர் கொந்தளிக்கிறார்...

"ரெண்டு வருஷமா பிரபல இலக்கியவாதிகளுக்கு எவர்(கிரீன்)  சில்வர் சொம்பு அடிச்சி நெட்ல திரியிற நாங்களே க்யூவுல நிக்கறோம். பின்னால போங்கய்யா"

செந்தில் : ச்சே... நமக்கு இப்படி ஒரு disco appointment வரும்னு எதிர்பாக்கவே இல்லண்ணே.

தல: அட அமுல் டப்பா. அதுக்கு பேரு disappointment டா. டேய்..காலைல இருந்து ஒண்ணுமே சாப்டல. வாடா அம்மா மெஸ்ல தயிர் சாதமாவது சாப்டுட்டு வரலாம்.

செந்தில்:  இப்படி பசிய பாத்தா பட்டம் வாங்க முடியாது. பேசாம வாங்க.

தல: அது சரி..ஆமா இந்த ஊர்ல நம்மள மிஞ்சி ரைட்டர் யாருனா இருக்காங்களாடா?

செந்தில்: என்னண்ணே இப்படி பேசிப்புட்டீங்க. கன்னத்துல போடுங்க.

அருகில் இருக்கும் அதிரடி ரைட்டர் கன்னத்தில் சப்பு சப்பென வைக்கிறார் தல.

செந்தில்: ஐயய்யோ. அவர ஏண்ணே அறஞ்சீங்க...

தல: நீதான்டா கன்னத்துல போட சொன்ன? அது கெடக்குது டோன்ட் ஒர்ரி. ஆமா ஐயா பேரு என்ன?

செந்தில்: இதுக்குத்தான் அடிக்கடி டி.வி.பாக்கணும். ஐயா பேரு அமானுஷ்ய புத்திரன். மைசூர் போண்டால ஏன் மைசூர் இல்லைங்கிற பிரச்னைல இருந்து ப்ரித்வி ஏவுகணையை பிசிறு இல்லாம பத்த வக்கிறது எப்டிங்கறது வரை இவருக்கு அத்துப்படி.

தல: பார்ரா!!! நான் கூட ஒரே ஒரு நாள் இவர டி.வி.ல பாத்து இருக்கண்டா...போன வாரம் 16 மணிநேரம் பவர் கட் வந்தப்ப கூட டி.வி.ல வந்து 'BCCI தலைவர் ஜக்மோகன் டால்மியா ரிசைன் பண்ணியே ஆகணும்'னு சண்ட போட்டுட்டு இருந்தாருப்பா. அதுல என்ன கொடுமன்னா இவரு பேச ஆரம்பிச்சதுமே எதிர்ல இருந்தவங்க எல்லாம் ஸ்டுடியோவை விட்டு ஓடிட்டாங்க. 

ஆனாலும் நம்மாளு அசரலையே. கேமராமேன், லைட்மேன், பக்கத்துல டால்மியா சிமிண்ட் பூசி வீடு கட்டிட்டு இருந்த கொத்தனார் மேன் , சித்தாள் மேன் எல்லார் கிட்டயும் விவாதம் பண்ணிட்டுதான் இன்னொரு டி.வி. ஷோவுக்கு கெளம்பனாருன்னா பாத்துக்க. 

செந்தில்: பவர் ஸ்டார் உள்ள போனதும் அடுத்த பவர் ஸ்டாரை ஸ்டாக் வச்சி நமக்கு அனுப்பற ஆண்டவன் மகிமையே மகிமை. இல்லண்ணே?   
                                                               
                                  
தல: இல்ல. ராஸ்கோல். அது யாருடா அவரு பக்கத்துல??

செந்தில்: அவர்தாண்ணே எஸ்.ராமகிச்சுனன். மாவட்டத்துலேயே பேமஸ் சிந்தனை சிற்பி. 

தல: அட போடா. மாவட்டத்துல பெரியாளு. மாவாட்றதுல பெரியாளுன்னா  பம்மிருவனா? ஆளு பேர கேள்விப்பட்டதே இல்லையேடா?

செந்தில்: அட...ரஜினிய வச்சி கொஞ்ச நாளைக்கு முன்னாடி புக் ரிலீஸ் பண்ணாரே அவர்தான்.

தல: ஓ..அவரா... பாக்கறதுக்கு காங்கிரஸ் தலைவர்   பூனதேசிகனோட ட்வின் ப்ரதர் மாதிரியே இருப்பாரே. ரைட். 

செந்தில்: சரிண்ணே...

அவசரமாக ஒரு பேப்பரில் செந்தில் எதையோ எழுத..

தல: பன்னாட நான் சொன்னது right. write இல்ல. அப்பிடுவேன். இந்த ராமகிச்சு மேடைல பேச ஆரம்பிக்கிற நேரத்துல வெளில ஓடி வர்ற கூட்டத்துக்கு பட்டர் பிஸ்கட், (கார்ப்பரேஷன் தண்ணி) டீ வித்தே கேன்டீன் ஓனருங்க எல்லாம் ஆளுக்கு 5 வீடு வாங்கி இருக்காங்களாமே. அப்ப பெரிய ஜிம்பலக்கடி தான்.  அது யாருடா பக்கத்துல..lowest பட்ஜெட் மெகா சீரியல் கேரக்டர் ஆர்டிஸ்ட் மாதிரி...

செந்தில்: என்னண்ணே நீங்க வெவரம் தெரியாமலே வளந்துட்டீங்க. தலைவர் பேரு ஜெமோ.

தல:  ஜெர்மன் நாட்டு எழுத்தாளரா?

செந்தில்: ஐயோ..இப்படி ஒரு ஞானசூன்யத்து கிட்ட வந்து மாட்டிக்கிட்டனே.. இவரு நம்மூர்ல உங்கள விட டாப் ரைட்டர். ஜெயமோகனன்.

தல: ஓ...!! சுண்டிமோதிரத்த சுமோன்னு கூப்புடற மாதிரி ஜெமோவா? கண்ணா ....அவார்டுக்கு எதுக்குடா அவார்டு??

செந்தில்: 'நானெல்லாம் எவரெஸ்ட் சிகரத்துல தங்க சேர் போட்டு எழுத வேண்டியவன். இந்த தற்குறிங்க ஊர்ல பொறந்து இப்படி ஆயிட்டேன்'ன்னு பொலம்பராறு. ரோட்ல போறவன் எல்லாம் சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிச்சா தெற்காசியா எப்படி உருப்படும்னு உக்கிரமா உறுமிக்கிட்டு இருக்காரு. 

தல: எவர் ரெஸ்ட் எடுக்க வேண்டிய ரைட்டருங்க எல்லாம் எவரெஸ்ட் ரேஞ்சுக்கு பீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா..சோ சாட். Customer is King னு க்ரான்ட்பா காந்தியே சொல்லி இருக்காரு. காசு கொடுத்து படம் பாத்தவன் எழுதிட்டு போறான். ஏண்டா எழுதறன்னு கூகிள் ஓனருங்க, நம்ம பேஸ்புக் மொதலாளி மார்க் ஜக்கர்பெர்க் கேட்டா அது நியாயம். இவருக்கு ஏன் பேன்ட் பின்னால ஸ்மோக் வருது???
                                                         


ஆமா அது யாருடா தயிர் சட்டிக்குள்ள தலைய விட்ட மாதிரி. அட்லீஸ்ட் வாய்க்கு கீழயும், மேலயும் இருக்குற தயிற தொடச்சிட்டு வந்தா என்ன??

செந்தில்: (வேகமாக தல வாயை பொத்துகிறார்). சும்மா இருக்க மாட்டீங்களா?? தலைவர் பேருதான் சாறு....    

தல: எலுமிச்ச சாறா?   

செந்தில்: சூ...சைலன்ட். இந்த அங்கிள் எப்பவுமே ப்ரெஞ்ச் தாடிதான் வச்சிருப்பாரு. குடிக்கறதும் ப்ரெஞ்ச் ப்ராண்டுதான். அடிக்கடி 'என்னோட உண்டியல்ல சில்ற தீந்துருச்சி. காசு போட்டுட்டு போங்க'ன்னு வாலி விவேக் மாதிரி வசூல் பண்றவரு. சாட்டர்டே ஆனா டை அடிச்சிடுவாரு. சில்லி ஓல்ட் மேன்.  

தல: இது என்னடா தமாசு. சைனா டீ குடிக்க சைனாவுக்கே போகனுமா? ப்ரான்ஸ் பத்தி எழுத பாண்டிச்சேரில குத்த வச்சா பத்தாது? நமக்கே 7D சினிமாவா? யே யப்பா..எல்லாம் பெரிய டக்கால்டியா இருக்காங்களே..

வம்பளந்தவாறே இறுதியில் பரிசு வாங்குமிடத்திற்கு இருவரும் வந்து சேர்கிறார்கள்.

தல: ஐயா வணக்கமுங்க. ஐயய்யா வணக்கமுங்க.  கீபோர்ட் ல டைப் அடிக்கற எல்லாருக்குமே நம்ம அரசாங்கம் பட்டம் குடுக்கறது சந்தோசமுங்க. 

செந்தில்: ஐயா ஒரு சின்ன விண்ணப்பமுங்க. பரிசா தர்ற 10 TVS கீபோர்டை ஆளுக்கு அஞ்சா பிரிச்சி எங்களுக்கே தந்துடுங்க.

தல: ஆமா இந்த கீபோர்ட் எல்லாம் குடுக்கறீங்களே...அது ரஹ்மான் வாசிச்சதா...ஹாரிஸ் வாசிச்சதா...? கீபோர்ட் தொடைக்க கொழா பேன்ட் போட்ட சியர்ஸ் கேர்ல்ஸ் வேணுமே? அவங்களுக்கு கொழா தச்சி குடுப்பீங்களா? கொழா புட்டு வச்சி குடுப்பீங்களா?

கோபத்தில் நடுவர் கவுண்டரின் கன்னத்தில் பொளேரென போடுகிறார்...

நடுவர்: பேரென்ன?

தல: 'டெமோ'ங்க .

நடுவர்: 'டெமோ'வா? ஒழுங்கா பேர சொல்றியா இல்ல இன்னொரு தடவ கன்னத்துல டெமோ காட்டவா?

தல: ஐயா சாமி. சத்தியமா என்  முழுப்பேரு பேரு 'டெ'ன்சன் 'மோ'டிங்க. அடிக்கடி டென்சன் ஆகி கைக்கு வாக்கா இருக்குற ஆள இப்படி அப்பிடுவேனுங்க. 

அருகில் இருக்கும் மூத்த நடுவர் செவுலில் அப்புகிறார்.  

செந்தில்: எம் பேரு மானஸ்த புத்திரனுங்க. 

நடுவர்: இதுவர எத்தன புக்கு போட்டு இருக்கீங்க??

செந்தில்: என்னங்கய்யா இப்படி கேட்டுப்புட்டீங்க? LKG புக்ல இருந்து காலேஜ் புக் வரைக்கும் மொத்தம் 150 கிலோ புக்குங்கல பேப்பர் கடைல போட்டு இருக்கோங்க.

மூத்த நடுவர்: தம்பி..நம்ம அரசாங்கம் தமிழ்நாடே கண்டுக்காம விட்ட விளிம்பு நிலை ரைட்டருங்களுக்கும், 'நானும் ரைட்டர்'னு அவங்க கூட ஒத்து ஊதுற நாதஸ் பசங்களுக்கு மட்டும்தான் விருது தருது. உங்கள மாதிரி Facebook, Blog, Twitter ல மொளச்ச மஷ்ரூம் மடையனுங்களுக்கு இல்லப்பா.

செம காண்டாகி செந்திலை பெடலெடுக்கிறார் கவுண்டர்.

தல: நான் அப்பவே சொன்னேன் நம்மள மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் கீபோர்ட் கெடைக்காதுன்னு. கேட்டியா. உச்சி வெயில்ல 4 மணிநேரம் லைன்ல நிக்க வச்சிட்டியேடா. அட்லீஸ்ட் ஒரு செகண்ட் ஒன்னுக்கு போக விட்டியாடா? அது மட்டுமா?? தேங்கா தலையன், மாங்கா தலையன் ஹிஸ்டரி எல்லாம் சொல்லி வெறுப்பேத்தி வேற இருக்க...

த பாரு..இந்த பக்கடா தலையன் எல்லாம் என்ன அறையறான்......

நடுவர் மீண்டும் கவுண்டரை அறைந்து..

"யோவ்...நெட்ல எழுதி பேரு வாங்க நெனைக்குற சில்லு வண்டுங்கள அடிக்கடி இந்த டாப் ரைட்டருங்க திட்டிக்கிட்டேதான் இருப்பாங்க. நாங்க அவங்களுக்கு அவார்ட் தந்துக்கிட்டேதான் இருப்போம். ரொம்ப பேசுன கடா சட்டத்துல புடிச்சி உள்ள போட்டுருவோம்"

அலற அடித்தவாறு ஓட்டம் பிடிக்கிறார்கள் டெமோவும், மானஸ்தபுத்திரனும்.
................................................


சமீபத்தில் எழுதியது:

டாலர் நகரம் - நூல் விமர்சனம்
Saturday, June 1, 2013

ஜோதிஜியின் டாலர் நகரம்


                                                                 
     
திருப்பூரின் முன்னணி பதிவர்களில் ஒருவரான ஜோதிஜி(தேவியர் இல்லம்) அவர்கள் எழுதிய நூல்தான் இந்த டாலர் நகரம். நூலெனும் சொல்லுக்கு புத்தகமென்றும் பொருளென்பது நாமறிந்ததே. ஆனால் நூல் பற்றிய செய்திகளை பிரத்யேகமாக தாங்கி வெளிவந்திருக்கும் அசல் நூல் என்பது இதன் தனிச்சிறப்பு. பின்னலாடைக்கு பெயர் போன திருப்பூர் நகரில் ஒரு சாதாரண கிராமத்து இளைஞனாக அடியெடுத்து வைத்து படிப்படியாக உயர்ந்து தற்போது நிர்வாகப்பதவியில் இருக்கும் ஜோதிஜி அவர்கள் தான் கண்ட திருப்பூர் பின்னலாடை வரலாற்றை தொகுத்து டாலர் நகரமாக சமர்ப்பித்து இருக்கிறார். தமிழ்ச்செடி எனும் தளத்தில் தமிழ்மொழி சார்ந்த பதிவுகளை இணைய நண்பர்களுடன் வலையேற்றி வரும் தமிழ் ஆர்வலர் என்பதும் இவரது இன்னொரு சிறப்பு.

பல ஆண்டுகள் பின்னலாடை தொழில் அனுபவம் மிக்க நபர் எழுதிய புத்தகம் எனும் காரணத்திற்காக மட்டுமே இந்நூலை வாசிக்க முனைந்தேன். டாலர் நகரத்தின் முதல் சில பகுதிகளில் திருப்பூரில் வேலை தேடி அலைந்தது, சக நண்பர்கள் மற்றும் நிறுவனங்கள் வாழ்ந்து வீழ்ந்த கதைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் பகிரப்பட்டு உள்ளன. 

உள்ளாடை நிறுவனங்கள், அதன் செயல்பாடுகள் போன்ற முக்கியமான தகவல்கள் எப்போது வரும் என்று வாசகனாக சற்றே பொறுமை இழந்து காத்திருக்கும் நேரத்தில் அத்யாயம் 11 முதல் 18 வரை அதற்கான விடை கிடைக்கிறது. எத்தனை வகையான நூல்கள், இயந்திரங்கள், துணிகள் ஆலைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன, ஏற்றுமதி இறக்குமதியில் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் நடக்கும் விளையாட்டுகள் என்ன, மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளால் இத்தொழில் எப்படி பின்னடைவை சந்தித்தது, தொழிலாளிகள் படும் சிரமங்கள், இடைத்தரகர்கள் செயல்பாடுகள், புதிய யுக்திகளை கையாள தடுமாறும் முதலாளிகள் நிலை  என பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித்தந்து இருக்கும் ஜோதிஜி..உங்களுக்கு ஹாட்ஸ் ஆப்!!
                                                               

19 முதல் 21-வது அத்யாயம் வரை சற்று அயர்வைத்தந்தாலும் சாயப்பட்டறைகள் குறித்து தனிக்கவனத்துடன் 22 முதல் 26 வது அத்யாயம் வரை எழுதப்பட்டு இருக்கும் பக்கங்கள் பிரமாதம். குடிப்பதற்கு ஏதுவான ஆறுகள் சாயக்கலப்பால் எப்படி சீரழிந்து போயின என்பதை நுட்பமாக அலசி இருக்கிறார் ஆசிரியர். இந்த அலசலால் அரசு, தனியார் நிறுவனங்கள் மீதான கறை  ஓரளவேனும் துடைக்கப்பட்டால் மகிழ்ச்சி. 

டாலர் நகரத்தின் குறை நிறைகள்:

தமிழ் ஆர்வலரான ஜோதிஜியின் இப்படைப்பில் எழுத்துப்பிழை ஆங்காங்கே இருப்பது வருத்தம். குறிப்பாக சில இடங்களில் பொருட்பிழைகள் இருப்பது உறுத்துகிறது. உதாரணம்: பக்கம் 84 நான்காவது பேராவில் உள்ள 'கோடடித்த',  பக்கம் 112 வரி மூன்றில் உள்ள 'பின்னாலாடை'. பிழை சரிபார்த்ததில் அதிக கவனம் செலுத்தாதது புருவத்தை உயர்த்த வைக்கிறது. திருப்பூர் சார்ந்த புகைப்படங்கள் புத்தகத்தில் சரியான அளவுடன்(எண்ணிக்கையையும் சேர்த்து) இருப்பது நன்று. எனினும் உள்ளாடை தொழில் சார்ந்த சிறந்த புகைப்படங்களை தேர்ந்த புகைப்பட கலைஞர் உதவியுடன் எடுத்து இருக்கலாம்.  

முதல் சில அத்யாயங்களில் தமது தனிப்பட்ட போராட்டங்களை, ஆங்காங்கே தூவப்பட்ட தத்துவங்களை சுருக்கி பொதுப்பிரச்னைகளை மையப்படுத்தி  இருப்பின் நூலின் கோர்வை மேலும்  சிறப்பாக இருந்திருக்கும். முதல் 26 பக்கங்களுக்கு அணிந்துரை, ஏற்புரைகளே ஆக்கிரமித்து இருப்பது குறை.  'இன்டக்ஸ்' என்று அழைக்கப்படும் உள்ளடக்கம் 247 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் துவக்கத்தில் இல்லாதது ஆச்சர்யம்தான்.  

பெண் மற்றும் குழந்தை தொழிலாளிகள் உள்ளாடை உலகில் எப்படி கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை சிற்சில பக்கங்களில் மட்டும் கடந்து 95% ஆண் தொழிலாளிகள் பற்றிய பகிர்வுகளே மையம் கொண்டிருப்பதும் குறைதான். அக்குறை நீங்கும் வண்ணம் அடுத்த நூலில் ஜோதிஜி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். காத்திருக்கிறேன்.

அதுபோல திருப்பூரின் பிரதான தொழில் மின்வெட்டால் எப்படி சீரழிந்து கிடக்கிறது என்பதையும் ஊறுகாய் போல ஆசிரியர் தொட்டுவிட்டு சென்றிருப்பது ஆச்சர்யமே. தற்காலத்தில் பூதாகர பிரச்னையாக இருக்கும் மின்வெட்டு குறித்து இறுதிப்பகுதிகளில் விலாவாரியாக எழுதி இருக்கலாம். 
                                                                    

நிறைகள் என்று சொல்வதற்கு கணிசமான விஷயங்கள் டாலர் நகரத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இயந்திர செயல்பாடுகள், பல்வேறு வகையான நிறுவனங்களின் வியாபார தந்திரங்கள், பன்னாட்டு ஒப்பந்தங்கள் என அள்ள அள்ள குறையாத தகவல்கள்/அனுபவங்களை ஜோதிஜி தனது வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி  இருப்பது அவரது அபார உழைப்பிற்கு எடுத்துக்காட்டு.

தளமான தாள்கள், சரியான அளவில் தகுந்த இடைவெளிகளுடன் இருக்கும் எழுத்துகள் சிறப்பு. விலை ரூ.190 என்பதால் வசதி குறைந்த வாசகர்களின் கைகளுக்கு இந்நூல் பெருமளவில் சென்று சேருமா எனும் கேள்வி  இருக்கத்தான் செய்கிறது.    

இறுதியாக...

இணையத்தில் மட்டுமே அடங்கி இருக்கவிருந்த இப்படைப்பை நூல் வடிவில் நமக்கு கொண்டு சேர்த்திருக்கும்  4 தமிழ் மீடியா இணையதளம் மற்றும் ஜோதிஜிக்கு தோள் கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களையும் மனமார பாராட்ட வேண்டும். 

நம்மில் பலர் நித்தம்(நெசமாத்தானா !?) அணியும் உள்ளாடைகளுக்கு பின்னே இருக்கும் நூற்றுக்கணக்கான பிரச்னைகள், தொழில்நுட்பங்கள், பண பரிவர்த்தனைகள் எத்தனை..எத்தனை. அதுகுறித்த போதுமான அடிப்படை அறிவை என் போன்ற சராசரி நபர்களுக்கு கற்பித்த காரணம் ஒன்றிற்காகவே   ஆசிரியருக்கு ஆளுயர பூங்கொத்தை அளிக்கலாம். நன்றிகள் பல ஜோதிஜி.

புளித்த ஏப்பம் விடும் மேட்டுக்குடிகள் பொழுது போக படிக்க ஒளிவட்ட எழுத்தாளன் எழுதித்தள்ளும் ஆகச்சிறந்த காவியமல்ல இது. சாமான்ய வாசிப்புத்திறன் கொண்ட உழைக்கும் வர்க்கத்திற்கு இன்னொரு பாமரன் தனது வியர்வைத்துளிகளால் நெய்திருக்கும் நூலோவியம். 
.........................................................................

                            
Related Posts Plugin for WordPress, Blogger...