CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, May 9, 2013

Shootout at Wadala

                                                               
         
70 & 80 களில் பாம்பேவை கலக்கிய தாதாக்களின் வரலாற்றை மையமாக கொண்டு ஹுசைன் ஜைதியால் எழுதப்பட்ட நூல்தான் டோங்ரி டு துபாய். ஹாஜி மஸ்தான் போன்ற பெரிய வஸ்தாதுக்களின் பிஸ்தாத்தனங்களை ஓரிரு நிமிடங்களில் கடந்துவிட்டு பாம்பேவின் முதல் அதிகாரபூர்வ என்கவுன்டரை பிரதானமாக வைத்து ஷூட் செய்யப்பட்டுள்ளது இந்த ஷூட் அவுட் அட் வடாலா. Shootout at Lokhandwala வின் ப்ரீக்வலான இப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல் மட்டும் 27 கோடி! 

'தேசி அர்னால்ட்' ஜான் ஆப்ரஹாமின் மிரட்டும் உடற்கட்டை ட்ரெயிலரில் கண்ட பிரமிப்பில் சென்ற வார இறுதியில் எஸ்கேப்பிற்கு எஸ்கேப் ஆனேன். கல்லூரியில் நன்றாக படிக்கும் மாணவன் மனோஜ். அவனுக்கொரு அழகிய காதலி வித்யா. தவறான வழியில் செல்லும் அண்ணனின் எதிரிகள் ஒருநாள் வீடேறி வந்து கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். அங்கு நடக்கும் களேபரத்தில் அண்ணன் எதிரி ஒருவனை கொன்றுவிட தவறேதும் செய்யாத மனோஜும் கைது செய்யப்படுகிறான். சிறையில் முனீர் எனும் சக கைதியின் உதவியால் அங்கிருந்து தப்பி பாம்பேயில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைக்கிறான் மன்யா சுர்வே(மனோஜ்). போலீஸ், மன்யா, ஹஸ்கர் பிரதர்ஸ் இடையே நடக்கும் ரத்த சரித்திரம்தான் கதை.  

'நடிப்பை தூக்கி பரண்ல போடு' என்று வழக்கம்போல இறுக்கமான முகத்துடன் படம் நெடுக ரெட்ரோ லுக்கில் நடமாடுகிறார் ஆஜானுபாகு ஜான். நாயகி கங்கனா ரனவத்துடனான அதி நெருக்கமான சீன்களில் கூட ஒரு துளி ரொமான்ஸ் இல்லை. ஜானின் தோழனாக துஸ்ஸார் கபூர். சிறையில் நடக்கும் அனைத்து தகிடு தத்தங்களையும் அறிந்து வைத்திருக்கும் கேரக்டர். ஆனால் முகத்தில் மட்டும் காம்ப்ளான் சொட்டுவது சிரிப்பு. பாம்பேவை கண்ட்ரோலில் வைத்திருக்கும் சகோக்களாக மனோஜ் பாஜ்பாய் - சோனு சூத் பார்ன் ஃபார் ஈச் அதர். போலீஸ் அதிகாரியாக அனில் கபூர் பாந்தமாய் பொருந்துகிறார்.  
                                                                   

'டால்பி அட்மாஸ்' ஒலியில் பலத்த எதிர்பார்ப்புடன் சீட்டில் அமர்ந்தால் பல இடங்களில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. மொத்தம் ஐந்து இசையமைப்பாளர்கள் என்பதால் ஆளுக்கொரு டம்ளர் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றினர். அவதார் போன்ற அட்ரா சக்க படங்களுக்குத்தான் இம்மாதிரி சவுண்ட் எபெக்டுகள் செட் ஆகும் என்பது 100% உண்மை. 'லைலா' பார்ட்டி பாடலில் கவர்ச்சி மழை கொட்டி சம்மர் ஹீட்டை விரட்டி அடித்திருக்கும் ஜிவ்வ் தேவதை சன்னி லியோன்...பாலிவுட்ல உன்ன யாரும் அசச்சிக்க முடியாது. அசச்சிக்க முடியாது.

வசனங்கள் ஆங்காங்கே நெத்தியடி. வளரும் தாதாவான ஜான் தனது சகாக்களுடன் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்திருக்கு அங்கு வரும் டாப் தாதா சோனு 'இது நாங்க ரிசர்வ் பண்ண எடம். சிங்கம் இருக்குற எடத்துல நாய்க்கு என்ன வேலை?. ஜானின் பதிலடி: 'நாய்ங்கதான் தன்னோட எடத்த ரிசர்வ் செய்யும். சிங்கம் தன்னோட ஏரியாவுல எங்க வேண்ணா உக்காரும்'.

இவர்களின் சண்டையை கண்டு பக்கத்தில் சீட்டில் இருக்கும் ஜென்டில்மேன் எகிறியவாறு: 'Waiter.What the fuck is this?' என்று அலம்ப இவர்களை சத்தம் போட வேண்டாம் என்கிறார் ஊழியர். அதற்கு ஜான்: 'நாங்க ஹிந்தில பேசுன அதே கெட்ட வார்த்தைய அவன் இங்க்லீஷ்ல பேசுனான். அதால அவன் உங்களுக்கு பெரிய ஆளா?'

துரோகம் செய்த குட்டி தாதா ஒருவனை ஜான் சுட்டுத்தள்ள அருகில் படபடப்புடன் நிற்பவனை பார்த்து 'நீ இவனுக்கு என்ன வேணும்?' என்று கேட்பதற்கு வரும் பதில்: 'பாடிகார்ட்'.         

நிறுத்தி கதை சொல்வதை ஒரு பொருட்டாக கொள்ளாமல் 1980 களின் டிபிக்கல் ஹீரோ vs  தாதா மோதல், காதல், கொஞ்சம் ஹெவி செக்ஸ், டெம்ப்ளேட் பாடல்கள் போன்றவற்றை பாலீஷான ஒளிப்பதிவின் துணை கொண்டு ஜகஜ்ஜாலம் செய்ய முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சஞ்சய் குப்தா. 

ஆகமொத்தத்தில் இது ஒரு ஆவரேஜ் பாப்கார்ன் என்(கவுன்)டர்டெய்னர்!!
...............................................................................

.........................................
சமீபத்தில் எழுதியது:
........................................2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

27 கோடி... யம்மாடி...

அசச்'சிக்க' முடியாது. அசச்'சிக்க' முடியாது.

கலியபெருமாள் புதுச்சேரி said...

பாலிவுட் படங்களைப் பார்க்க வேண்டுமென்பது என் நீண்டநாள் ஆசை...ஆனால் விதி(மனைவி) வலியது..எங்க பாக்க முடியுது..

Related Posts Plugin for WordPress, Blogger...