CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, May 17, 2013

காசு, துட்டு, பணம், மணி, Money!!

                                                           
                                                               
                                       
ஆயிரம் போலிச்சாமியார்கள் கைது செய்யப்பட்டாலும் 'குனிஞ்சி நிமுருற நேரத்துக்குள்ள கூரைய பிச்சிக்கிட்டு தங்கம் கொட்ட வக்கிறேன். வாங்கோ' என்று இன்னொரு உடான்ஸ் சாமியார் அழைத்தால் அடித்து பிடித்துக்கொண்டு ஓடுவது நம்மாட்களின் இயல்பு. அதுபோலத்தான் இந்திய திருநாட்டின் க்ரிக்கட் ரசிகசிகாமணிகளும். தான் கெடுவதோடு/ஏமாறுவதோடு மட்டுமின்றி பிள்ளைகள், பக்கத்து வீட்டாரையும் சேர்த்துக்கொண்டு நேரத்தையும், பணத்தையும் விரயமாக்குவதில் அப்படி என்ன ஆத்ம திருப்தியோ? ஏற்கனவே ஃபிக்ஸ் செய்யப்பட ஆட்டத்தை பல்லை இளித்துக்கொண்டு சீட்டின் நுனியில் அமர்ந்து 'ஹேய்..ஹோய்' என்று ஆரவாரம் வேறு! 

90'களில் ஷார்ஜா கோப்பை க்ரிக்கட் போட்டிகள் நடந்து கொண்டிருந்தபோதுதான் இந்த மேட்ச் ஃபிக்சிங் தனது கோரமுகத்தை பரவலாக காட்டத்தொடங்கியது. எந்த அணி பங்கேற்க வேண்டும், யார் வெல்ல வேண்டும் என்பதை பலமுறை தீர்மானித்தது தாவூத் & கோ எனும் பரபரப்பான தகவல் க்ரிக்கட் உலகை சுற்றிவந்தது. சொல்லி வைத்தாற்போல ஷார்ஜாவில் பெரும்பாலும் பங்கேற்பது பாகிஸ்தானாகவே இருக்கும்.ஜென்டில்மேன்ஸ் கேம் என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட இவ்விளையாட்டு தற்போது அவமானத்தில் தத்தளிப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டதே ஷார்ஜாவில்தான்.

கோலெடுத்தால் ஆடும் குரங்கு போல தாவூத் அண்ணாத்தை இடும் கட்டளைகளை செவ்வனே செய்தது பாகிஸ்தான் அணி. இந்த சூதாட்டத்தின் உச்சகட்டமாக இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று உலக க்ரிக்கட் ரசிகர்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட முன்னாள் தென்னாப்ரிக்க அணி கேப்டன் ஹான்ஸி குரோன்யே மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக அளித்த ஒப்புதல் வாக்குமூலம். அதன்பின் விமான 'விபத்தில்(?)' அவர் இறந்தது. இன்னொன்று  பாகிஸ்தான் கோச் பாப் உல்மரின் படுகொலை. 
                                                       

சூதாட்டம் குறித்த பல தகவல்களை அறிந்திருந்த பாப் அது குறித்த ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கும் தருவாயில் இருந்த சமயமது(2007). புத்தகம் வெளியானால் மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து நிழல் உலகம் ஜமைக்கா ஓட்டலில் தங்கியிருந்த பாப்பை கொன்று போட்டது. அப்படியே அவர் எழுதிய ஆதாரங்களையும் அள்ளிக்கொண்டு மாயமானது. இதன் பின்னணியில் தாவூத் இருப்பது தெரிந்திருந்தும் இன்றுவரை அந்த வழக்கு ஒரு அடி கூட முன்னே நகரவில்லை. 

இந்நிகழ்வுகளை பார்த்த பிறகு க்ரிக்கெட் மீதிருந்த 10% மோகம் கூட என்னிடம் இருந்து அறவே ஒழிந்து போனது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல். ரூபத்தில் ஆசியாவில் தனது களியாட்டத்தை துவக்கின  அதிகார, பண மற்றும் சூதாட்ட மையங்கள். நம் நாட்டு இளிச்சவாய் ரசிகர்கள் மீண்டும் வாயை அகலமாக்கி ஸ்டேடியம்/டி.வி. முன்பு திரளாக குத்த வைக்க ஆரம்பித்தனர். 'யார் ஜெயிப்பார்கள்? இந்த பந்தில் அவுட்டா? சிக்ஸா' என்று நகத்தை விரலை கடித்து துப்பியவாறு பொழுதை வீணாக்கி கொண்டிருந்த வேளையில் 'அட கிறுக்குகளா' என்று கண்களை திறந்திருக்கிறார் ஸ்ரீசாந்த்.    
                                                                    

'என்ன எனது அணியில் ஊழலா? ஐயகோ. சட்டம் தன் கடமையை செய்யும்' என்று ராஜஸ்தான் அணியின் ஓனர் ஷில்பா சிலுப்ப, 'என்ன கொடும சரவணன். வெரி பேட். அதுக்காக ஐ.பி.எல். நடக்காம இருக்காது. ஸ்டார்ட் டுடேஸ் கேம். கெட்டி மேளம். கெட்டி மேளம்' என்று பி.சி.சி.ஐ ஜனாதிபதி ஸ்ரீனிவாசன் பட்டையை கிளப்ப...அப்படி போடு அருவாள.      

உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச்செய்ய ஏகப்பட்ட விளையாட்டுகள் இருக்க வெறும் 10 அல்லது 12 நாடுகள் ஆடும் சோட்டா விளையாட்டான க்ரிக்கெட் மீது கோடிக்கணக்கில் பணத்தை கொட்டும் அம்பானி, மல்லையா ப்ரீத்தி, ஷாருக் ஆகியோரின் நோக்கமென்ன? ஒரு ஓவரில் குறைந்தது 12 ரன்கள் தந்தால் 60 லட்சத்தை சோதா கிரிக்கெட் வீரருக்கு அள்ளித்தர  நிழலுலக தாதாக்கள் பேரம் பேசுவதன் பின்னணி என்ன? காசு, துட்டு, பணம், மணி, money.

இனி ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தருபவர் நேர்மையான பவுலராக இருந்தாலும் அவரை இவ்வுலகம் சந்தேகக்கண்களோடு பார்க்கத்தான் போகிறது. ஐ.பி.எல்லில் சாதாரணமாகவே ஓவருக்கு 10 ரன் அடிப்பது ஜகஜம். அதுவும் க்ரிஸ் கெயிலுக்கு பந்து வீசப்போகும் அப்பாவிகளை நினைத்தால் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.

இத்தனை தகிடுதத்தங்கள் நடந்தேறிய பின்பும் 'நாளைக்கி யார் யாருக்கு மேட்ச்?' 'இந்த மேட்ச்ல அவன் இல்லையாமே?' என்று விவாதிக்க போகும் இந்தியர்களுக்கா பஞ்சம். நீ பட்டைய கெளப்பு (தாவூத்) பாண்டியா!!
................................................................................   


                      

7 comments:

Unknown said...

இத சொன்ன நம்மள பைத்தியக்காரன்குறங்க ஐயோ ஐயோ

உலக சினிமா ரசிகன் said...

நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஆமினா said...

வாசித்தேன் :-)

தனிமரம் said...

சிந்திக்கமாட்டார்கள் கிரிக்கட் விளையாட்டில் இப்படி ஒரு வெறி நம்மவர்களுக்கு !

”தளிர் சுரேஷ்” said...

அழகாய் சொன்னீர்கள்! நானும் ஒரு காலத்தில் கிரிக்கெட் ரசிகனாய் இருந்து இவர்கள் ஆட்டத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகியவன் தான்! திருந்த வேண்டும் இளைஞர்கள்!

Prem S said...

ஜென்டில் மேன் விளையாட்டல்ல சூதாட்ட விளையாட்டு கிரிக்கெட்

MANO நாஞ்சில் மனோ said...

என்ன மாயமோ தெரியல இந்த நாசமாப்போன விளையாட்டு மீது ஆரம்பத்தில் இருந்தே எனக்கு எந்த ஆர்வமுமே இல்லாமல் போய்விட்டது.

Related Posts Plugin for WordPress, Blogger...