CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, May 4, 2013

கோடை நாடக விழா - சத்திய வாக்கு

                                                             

வருடா வருடம் ஏப்ரல் இறுதியில்  கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் நடத்தும் கோடை நாடக விழா மிகப்பிரசித்தி பெற்றது. நித்தம் ஒரு புதிய நாடகம் அரங்கேறுவது இதன் சிறப்பு. கடந்த ஞாயிறு அன்று கேங் லீடர் பாலகணேஷ்(மின்னல் வரிகள்),   சின்ன பகவதி சீனு(திடங்கொண்டு போராடு), லேட்டஸ்ட் ஆடு ரூபக் ராம்(கனவு மெய்ப்பட)  ஆகிய பதிவர்களுடன் ஸ்ரீ ராஜ மாதங்கி கிரியேஷன்ஸின்  சத்திய வாக்கு எனும் நாடக அரங்கேற்றம் காண நாரத கான சபாவை முற்றுகை இட்டேன். 

நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து மொத்த அரங்கையும் நிரப்பி இருந்தனர். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சத்திய வாக்கு? பார்க்கலாம். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதராக பணிபுரியும் விஸ்வநாதர்தான் (ரவிகுமார்) நாடகத்தின் நாயகன். இவரது தந்தை உமாசங்கர் தீட்சிதர்(வாசுதேவன்),  மனைவி கலக்டர் கற்பகம்(லட்சுமி), அத்தை காமாட்சி(காவேரி), அரசியல்வாதி தர்மராஜனாக ராஜாமணி. புனைப்பெயர் மதுரை ஜடாவல்லபன். வசனம், இயக்கம் இரண்டும் இவரே.         
                                                                      

தீட்சிதர்களுக்கு இடையே நடக்கும் அரசல் புரசல்களுடன் முதல் காட்சி துவங்க 'அட. சிதம்பரம் தீட்சிதர்கள் பிரச்னை குறித்த அரசியல் நாடகம் போல' என்று ஆவலுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடுத்த காட்சியில் மூலவர் அர்ச்சனை நடக்கும் இடத்தை அற்புதமாக செட் போட்டு பலத்த கைத்தட்டலை அள்ளினார் பத்மா ஸ்டேஜ் கண்ணன். என் நாடக அனுபவத்தில் பார்த்த செட்களில்  இதுவரை இதுதான் டாப். நாம் கோவிலில் இருப்பது போன்ற உணர்வைத்தரும் வண்ணம் ஒளி அமைப்பும் கச்சிதம். கண்ணனின் கலைக்கு எழுந்து நின்றே கைதட்டலாம். 

விச்சுவின் (விஸ்வநாதர்) பால்ய நண்பரான தர்மராஜன் ஒரு யதார்த்தமான(!) அரசியல்வாதி. தனது நண்பரை வீட்டிற்கு அழைத்து கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள கோவில் சிலையை அபகரித்து வருமாறு வற்புறுத்த 'இது உனக்கே அடுக்குமா' என்று மறுக்கிறார் விச்சு. ஆனாலும் விடாமல் நச்சரிப்பு தொடர்கிறது. அவ்வப்போது தர்மாவை விச்சு சந்திப்பதால் அவரது வீட்டில் மனைவி(கலக்டர்) மூலம் ஏகப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே ஆருத்ரா தரிசனத்தன்று கலக்டரை தீர்த்துக்கட்ட தர்மா திட்டம் போட இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் கதை. 
                                                               
                                                                           ராஜாமணி, ரவிகுமார்

முன்பொரு காலத்தில் பொதிகை சேனலில் கலக்கிய செவ்வாய்கிழமை இரவு 7.30 மணி ட்ராமாக்கள் நினைவிருக்கிறதா? அப்போது வெற்றிகரமாக வலம் வந்த நடிகைகளில் காவேரியும் ஒருவர். தோற்றத்தில் சற்று மாற்றம் இருந்தாலும் குரல்வளம் அப்படியே. வழக்கபோல புலம்பித்தள்ளும் ஆத்துக்காரி வேடம்தான். ஆனால் சிறந்த நடிப்பு. இன்னொரு புகழ்பெற்ற நடிகையான லட்சுமிக்கு இம்முறை யானைப்பசிக்கு சோளப்பொறி. தர்மராஜனாக ராஜாமணி கனகச்சிதம். பத்திரிகை நிருபராக காவி வேட்டியில் வரும் ஜெயராமன் 'சென்னை தண்ணில தொவச்சி தொவச்சி வெள்ளை வேட்டி தானாவே காவி கலராயிடுச்சி. நான் சாமியார் இல்லை' வசனம் புன்முறுவல் பூக்க வைக்கிறது.

நாடக நாயகன் ரவிகுமார் பற்றி சொல்ல வார்த்தைகள் ஏது? அடங்கப்பா. வியட்நாம் வீடு, மிருதங்க சக்ரவர்த்தி, திருமால் பெருமை சிவாஜிகளை சேர்த்து செய்த கலவை இவர். ஒவ்வொரு சீனிலும் 'அய்யய்யோ இது கடவுளுக்கே அடுக்காது. நான் நல்லவனுங்கோ' என்று குதிகாலில் நின்று எதிரில் நிற்கும் நடிகர்களிடம் கைகூப்பி பேசும் சோக வசனத்தால் நம்மை உக்கிரத்தின் உச்சிக்கே அழைத்து செல்கிறார் மனிதர்.     
                                                           

'இவரோட இம்ச தாங்கல. இன்டர்வல் போடுங்கப்பா' எனும் முனகல்கள் சிலரிடம் இருந்து. நானும் அவ்வாறே அலற நேர்ந்தது. ஒரு சில நாடகங்கள் இடைவேளை இன்றி கூட 2 மணிநேரம் தொடர்ந்து நடப்பதுண்டு. அந்த பயம் வேறு நெஞ்சைக்கவ்வ நடராஜர் புண்ணியத்தில் இடைவேளை போட்டதும் உயிர் வந்தது. ஆசவாசப்படுத்த வெளியே சென்ற பொழுது 'குறுக்கு வழியில் ட்ராஃபிக் ஜாம்' நாடக நடிகர் கார்த்திக் பட் ஹாய் போட சிறிது நேரம் உரையாடிவிட்டு....பேக் டு தி பெவிலியன்(தட் மீன்ஸ் ரவிகுமார்ஸ் டெட்லி  ஸ்டான்ட்).

அதன்பின்பும் புலம்பல் வசனங்கள், ரவியின் ஓவர் ஆக்டிங் நமது பொறுமையை ஏகத்துக்கும் சோதித்தது. ஓரளவேனும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய படைப்பு நீளமான, பலமுறை கேட்டு புளித்த வசனங்களால் டுமீல் ஆகிப்போனது.'குலச்செடில விஷச்செடி சேந்துருச்சி', கலாச்சாரம் குல ஆச்சாரம்' டைப் டயலாக்குகள்...ஸ்ஸ்!!  இது போதாதென்று 'டேய் தர்மா தீட்சிதர்னா அப்பாவின்னு நெனச்சியா. இப்ப பாரு என் கோவத்த' என்று விச்சு கோபக்கனல் வீசி ஒற்றைக்காலில் ருத்ரதாண்டவ போஸ் தந்து இளகிய மனம் கொண்ட ரசிகர்களை)?) கிலியேற்றுகிறார். அத்தோடு விட்டார்களா? அவர் முகத்தில் சிகப்பு விளக்கை பாய்ச்சி அதற்கு சோடியாக பீதியான ஒலியை கிளப்பி பார்ப்போரை பதற வைக்க பகீதரப்பிரயத்தனம் பட்டாலும் என்ன பிரயோஜனம். சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது!!

சென்னை அக்னி நட்சத்திர வெயிலில் செருப்பின்றி 20 கிலோ மீட்டர் நடக்கும் கொடூரத்திற்கு சவால் விடும் வகையில் ரவியின் 'குடுத்த காசுக்கு மேல' கூவல் நடிப்பு முடிந்து சுபம் போட்டபோது அண்டார்டிகா பனிக்கட்டியில் ஆடையின்றி அமர்ந்து குளிர்ச்சியை தந்ததடா தாண்டவக்கோனே.

மேடைக்கு பின் புறம் சென்று வழக்கபோல் நடித்தவர்களை பாராட்டும் வைபவம் துவங்கியது. அங்கே புகழ்பெற்ற நாடக நடிகர் 'மேனேஜர்' சீனா, திரைப்பட நடிகர் 'எஸ் க்யூஸ்மி மிஸ்டர் பிள்ளைவாள்' புகழ் வி.எஸ். ராகவன் ஆகியோர் தென்பட்டனர். 

அங்கேயும் என் ரத்த கொதிப்பை ஏற்ற ஒரு ரசிக சிகாமணி வந்து சேர்ந்தார். ரவிகுமாரை பார்த்து 'டேய்..நாடக நடிப்பாடா இது?' என்று அவர் குரலெழுப்ப 'அப்பாடா..நாம கேக்க வேண்டிய கேள்விய இவராவது கேட்டாரே' என்று புளகாங்கிதம் அடைந்தால் அந்த நல்லவர் அடுத்து சொன்னது:

"காவியம் படச்சி இருக்கேடா ரவி".

(இன்னொரு தடவ நீர் என் கண்ல படும் ஓய்) அன்னாரின் நெக்குருகலை விஞ்சும் வகையில் ரவி மீண்டும் குதிகால் தூக்கி கைகூப்பி வணங்க ஆரம்பிக்க.. டேய் சிவா எட்றா ஓட்டம்!!!
....................................................................


................................................
சமீபத்தில் எழுதியது:................................................   


   

2 comments:

ஜீவன் சுப்பு said...

ஹா ஹா ஹா ...!

பதிவர்களுக்கு பட்டங்கள் சூப்பருங்கோ ...!

பால கணேஷ் said...

என்னாது...? கேங் லீடரா? நானா? எங்கள் குழுவுக்கு என்றுமே சிவாதான் தளபதி என்பதை உரக்க்க்கச் சொல்லிக்கறேன் நியாயமாரேஏஏஏஏஏ! கொஞ்சம் தயவுதாட்சண்யம் பாத்து நான் விமர்சனம் எழுதினேன். முழுக்க உண்மையா நீங்க எழுதி அசத்திருக்கீங்க சிவா! ஸேம் பிளட்!

Related Posts Plugin for WordPress, Blogger...