நையாண்டி அரசியல் படங்கள் என்பதே தமிழ் சினிமாவில் அரிது. சத்யராஜ் போன்ற தனித்தன்மை வாய்ந்த நடிகர்களுக்கு மட்டுமே அம்சமாக பொருந்தும் அமாவாசை கேரக்டர்கள். கூட மணிவண்ணனும், கவுண்டரும் சேர்ந்தால் ரணகளம்தான். தாய்மாமன், அமைதிப்படை போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். சில வாரங்களுக்கு முன்பு கூட டி.வி.யில் அமைதிப்படையை இன்னொரு முறை ரசித்து பார்த்தேன். எப்போது இரண்டாம் பாகம் வெளிவரும் எனும் ஆவல் பல ரசிகர்களைப்போல் எனக்கும் இருந்தது ஆச்சர்யமில்லை. இரண்டாம் முறை நம் மனதில் அன்னபோஸ்ட் ஆக இக்கூட்டணி ஜெயித்ததா?
துணை முதல்வராக இருக்கும் நாகராஜ சோழன் எப்படி முதல்வரை கவிழ்த்து அந்த நாற்காலியை பிடிக்கிறார் என்பதுதான் கதை. வழக்கம்போல் இங்கும் அவரது வலதுகையாக மணி(வண்ணன்). மகனாக மணிவண்ணனின் மகன் ரகு. முந்தைய பார்ட்டில் போலீஸாக வந்த இளைய சத்யராஜ் இங்கே சி.பி.ஐ. ஆக பிரமோட்டட். மலைவாழ் மக்களின் உரிமைக்காக போராடுபவராக செந்தமிழன் சீமான். அவசரத்திற்கு கிடைத்த துணை நடிகைகளை சட்டென மேக்கப் போட்டு பட்டென கேமரா முன் நிறுத்தியதுபோல் ஒரு சில நாயகிகள்(!).
படத்தின் ப்ளஸ் என்ன என்பதை தேடிப்பார்க்கவே 2.30 மணிநேரம் ஓடிவிடுகிறது. ஒரு சில வசனங்களில் விஜயகாந்த், கருணாநிதி போன்றோரை தாக்கி உள்ளனர். மகளிரணி தலைமைக்கு எதற்கு ஒரு ஆம்பிளையை தேர்வு செய்ய வேண்டும் எனும் கேள்விக்கு 'இளைஞர் அணிக்கு கிழவங்க எல்லாம் தலைவர் ஆகுறதில்லையா?' எனும் அதிரடி வசனம் ட்ரெயிலரில் இருந்தது. ஆனால் கிழவங்க என்று சத்யராஜ் தியேட்டரில் பேசும்போது பீப் சவுண்ட். போங்கய்யா....
முதுமை/உடல்நலக்குறைவு காரணமாக மணிவண்ணன் பேசும் மிக மெதுவான வார்த்தை உச்சரிப்புகள் பரிதாபத்தை மட்டுமே வரவழைக்கின்றன. அமைதிப்படையில் இருந்து அப்படியே கொலை, ஆப்படித்தல், ஜால்ரா தட்டும் தொனி போன்ற முக்கிய அம்சங்களை லேசாக மாற்றிப்போட்டு புதிதாக எந்த ஒரு ஆச்சர்யத்தையும் தராமல் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார் இயக்குனர்.
ரகு மணிவண்ணன் அப்பாவின் தயவில் சில சீன்களில் வந்து போனாலும் 100% தயிர் சாத நடிப்பு மட்டுமே. கஸ்தூரி அல்மா கில்மா, சுஜாதாவின் சிறந்த குணச்சித்திர நடிப்பு, சத்யராஜ் vs சத்யராஜ் மோதல், விறுவிறுப்பான திரைக்கதை என பின்னி பெடலெடுத்த அமைதிப்படைக்கு முன்பு இப்படம் 10% கூட சுவாரஸ்யத்தை தராதது பெரும் பின்னடைவு. முந்தைய பாகத்தில் தனிப்பெரும்பான்மையில் ஜெயித்து பௌர்ணமியான நாகராஜ சோழன் இம்முறை டெபாசிட் இழந்து அமாவாசை ஆகிப்போனது துரதிர்ஷ்டம்.
அமைதிப்படைக்கு பின்பு ஒரு செம ரவுசான அரசியல் சப்ஜெக்ட் உள்ள தமிழ் சினிமா இனி எப்போது வரும் என்பது பெரிய கேள்விக்குறி. புதிது புதிதாக வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் கூட இது போன்ற ஒரு களத்தை தேர்வு செய்ய இதுவரை முன்வராதது வருத்தம்தான். இன்னொரு சத்யராஜ், மணிவண்ணன் டைப் கூட்டணி கோடம்பாக்கத்தின் கதவை எப்போது தட்டும் என ஆவலுடன் காத்திருக்கும்....அமாவாசை தாசர்களில் ஒருவன்!!
.......................................................
6 comments:
அடடா... நமக்கு அல்வா தந்துட்டாங்களே...!
அல்வா நமக்கா
முந்தைய பாகத்தில் தனிபெருன்பான்மையில் ஜெயித்து பௌர்ணமியானா நாகராஜ சோழன் இம்முறை டெபொசிட் இழந்து அம்மாவாசை ஆகி போனது துரதிஷ்டம் //////
செம்ம பஞ்ச்ன்னே
எதிர்பார்ப்பை தூண்டி ஏமாற்றி விட்டதோ? பகிர்வுக்கு நன்றி!
படத்தின் உண்மை தரத்தை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றிகள்.
இந்த மாதிரி பாகம்-2 கள்லாம் தமிழ்சினிமாவுல எப்பவுமே எடுபட்டதில்லை....
Post a Comment