வடபழனி ஃபோரம் விஜயா மாலின் மூன்றாம் தளத்தில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டு இருக்கும் ஃபுட் கோர்ட்டை வடிவமைத்து பராமரிப்பது - வயா சவுத். கண்கவர் வண்ணம் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். இங்கும் உணவுகள் வாங்க கார்ட் சிஸ்டம்தான். குறைந்தது 100 ரூபாய்க்கு கார்ட் வாங்க வேண்டுமாம். முதலில் வாங்கும்போது 20 ரூபாயை ஏப்பம் விட்டு 80 ரூபாய்க்கு சார்ஜ் செய்து தருகிறார்கள். எக்ஸ்ப்ரஸ் அவின்யூவில் இதுபோல ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து வந்ததை 'கேட்டால் கிடைக்கும்' தல தளபதிகளாகிய கேபிள் சங்கர், சுரேகா தட்டிக்கேட்டதால் அந்நிலை மாறியது. இங்கும் அம்மாற்றம் விரைவில் நிகழ வாய்ப்புண்டு என எதிர்பார்க்கலாம்.
பொதுவாக ஃபுட் கோர்ட்களில் விற்கும் அனைத்து உணவுகளுமே 100 ரூபாய்க்கு மேல்தான். ஆனால் குடிப்பதற்கு சுகாதாரமான குடிநீர் மட்டும் உணவுடன் தருவதில்லை. 20 ரூபாய்க்கு விற்கும் தண்ணீர் பாட்டில் வாங்கினால்தான் நமக்கு விக்கல் நிற்கும். ஆனால் இந்த மாலில் சுத்தமான குடிநீர் வழங்கும் மிஷினொன்றை உணவங்களுக்கு அருகிலேயே வைத்திருப்பது ஆறுதல். சாதாரண மற்றும் குளிர்ந்த நீர் இரண்டும் கிடைக்கிறது. டம்ளர் இல்லை. பலரும் காலி தண்ணீர் பாட்டிலில் பிடித்து செல்கிறார்கள்.
வாங்ஸ் கிட்சன், மதுரை பாண்டிக்கடை, அரேபியன், மெக்சிகன் உணவங்கள் என ஒரே வரிசையில். இன்னும் சில கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. முதலில் கண்ணில் பட்டது கைலாஷ் பர்பத் எனும் வடக்கத்தி சாட்டகம். கைலாஷின் ஆரம்ப கால வரலாறு சுவாரஸ்யங்கள் நிறைந்தது. 1940 களில் முல்சந்தானி சகோக்களின் பானிபூரி பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெகு பிரபலம். 1947 பிரிவினையின்போது தமது சொந்த நாடான இந்தியாவிற்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம். வீடு மற்றும் கடையில் இருக்கும் அனைத்து பொருட்களையும் தூக்கிக்கொண்டு நெடும்பயணம் மேற்கொள்ள முடியாத நிலை. எனவே உணவு தயாரிக்க பயன்படும் பாத்திரங்களை மட்டும் சுமந்து கொண்டு இந்தியா வந்தனர்.
சில ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு 1952 ஆம் ஆண்டு பாம்பேயில் உதயமானது இந்த கைலாஷ் பர்பத். ரோட்டோரம் துவக்கப்பட்ட சிறுகடை காலப்போக்கில் பெரும் வளர்ச்சி பெற்றது. உபயம் நாவை சுண்டி இழுக்கும் பானிபூரி, குலாப் ஜாமூன் மற்றும் சில சாட் ஐட்டங்கள். 'அச்சா..! நம்மூர் கடைய பத்தி சொல்லுடா பச்சா..' என்கிறீர்களா? வாங்க மதுரை பாண்டிக்கடைக்கு.
மொத்த ஃபுட்கோர்ட்டில் பரபரப்பாக வியாபாரம் ஆகிக்கொண்டு இருந்தது இங்குதான். அருகிலிருந்த அரேபியன், சைனீஸ் கடையாட்கள் முகத்தில் கடுகை தாளிக்க வைத்து விட்டு மும்முரமாக கஸ்டமர்களை கவனித்துக்கொண்டு இருந்தார்கள் மதுரைமார்கள். 'பெயர்ப்பலகையில் போஸ்ட் எண்.5' என்பதற்கான காரணம் கேட்டால் 'ச்சும்மா' என்றார் ஒரு அண்ணாத்தை. தாமரைக்குளம், மதுரை மல்லி என மண் மணம் கமக்கும் பெயர்களில் உணவுகள். தொடர் பிரியாணி சாப்பிட்டு சலித்துவிட்டதால் மதுரை மல்லியை ஆர்டர் செய்தேன். ரெமோ பாலகணேஷின் சாய்ஸ் சிக்கன் பிரியாணி. விலை முறையே 115, 150 (வரி நீங்கலாக).
ஆனியன் ராய்த்தா, பொரியல் போன்றவற்றை கோவில் பிரசாதத்தில் 25% அளவு தம்மாத்தூண்டு தருவது அநியாயம். 'கூட கொஞ்சம் ராய்த்தா போடுங்க'என்று ரெமோ அந்நியனாக கொந்தளித்ததால் கேட்டது கிடைத்தது. எதிரெதிரே இருவர் அமர்ந்து சாப்பிட சிரமப்படும் அளவிற்கு டேபிளின் பரப்பளவு சற்று சிறிதாக இருப்பது குறை. 'இங்கயும் உங்க மூஞ்ச பாக்கணுமா?' என்று விரும்பும் தம்பதிகள், 'உன் தட்ட பாருடா. என் ஐட்டத்தையே வழிச்சிக்கிட்டு இருக்கியே' என்று கதறும் நண்பர்களுக்கு இந்த டேபிள் கண்டிப்பாக வரப்பிரசாதம்தான்!!
முக்கால் வயிறு நிரம்பும் அளவிற்கு சாதம், கோஸ் பொரியல், குட்டி(but கெட்டி) பரோட்டா, அரை கப் சாம்பார், ரசம் மற்றும் தயிர் இத்யாதிகள். சாம்பார் சற்று உப்பு சப்பின்றி இருந்தாலும் காரக்குழம்பு, ரசம் மற்றும் சேமியா பாயசம் டாப் டேஸ்ட் வாத்யாரே.
ஆர்டர் செய்வதற்கு முன்பு நாங்கள் ஒரு குறிப்பிட்ட மெனுவை படித்த லட்சணம் பெருங்கூத்து. Kai Kari Kulambu என்று எழுதப்பட்டு இருந்ததைக்கண்டு ரெமோ சீரியசாக 'அது என்னடா கைகாரி குழம்பு?' என வினவ நானும் டுபுக்கு போல புருவத்தை உயர்த்தி 'தெரியலியே சார். ஒருவேள இங்க சமைக்கிற பெண் சமையல்காரர் ஊர்ப்பக்கம் பிரசித்தி பெற்றவர் போல' என்று பதிலளித்தேன். சாப்பிட அமர்ந்த பின்பும் எமக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை. 'சார் கைக்கறி கொழம்பு சார் அது. எந்திரம் எதுவும் இல்லாம கைலயே செஞ்சி இருப்பாங்க'என்று பூரிக்க ரெமோ மீண்டும் விழித்தார். இறுதியில் இருவருக்கும் ஒரு சேர ட்யூப்லைட் பிரகாசமாக எரிந்தது: ''அடச்சே....காய்கறி கொழம்பு. இதைத்தான் அப்படி எழுதி இருக்கான் புண்ணியவான்". அதை Kaai kari kolambu ன்னு எழுதி இருந்தாத்தான் என்ன..எப்படி சுத்தவிட்டு வேடிக்க பாக்கறீங்க நைனா!!
'பட்டனை தட்டுனா சோறு ரெடி' - சென்னையில் புதிதாக உதயமாகி இருக்கும் இன்னொரு உணவகம் பற்றிய பதிவு விரைவில்...
Images copyright - madrasbhavan.com
.......................................................................
.......................................
முந்தைய பதிவுகள்:
.......................................
6 comments:
Nice writeup siva. Nasn intha kai kari matter pathi siva eluthuvar nnu solli irinthen. Good.
அப்பாடா... சாப்பிட்ட thiruppthi.. சே திருப்தி...!
அப்பாடா... Unga Comment paatha thiruppthi.. சே திருப்தி...!
http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_25.html
சிவகுமாருடன் சில அனுபவங்கள்
hahahahaha
Post a Comment