சென்ற ஆண்டு கேரளத்தில் சக்கை போடு போட்ட தட்டத்தின் மறயத்து எனும் காதல் காவியத்தின் நாயகன் நிவின் நடித்த ஒரே காரணத்திற்காக நேரம் பார்க்க விரும்பினேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளம் என பக்கத்து ஸ்டேட் நாயகர்கள் தமிழில் தடம் பதிக்க பெரும் முனைப்பு காட்டி வரும் இந்நேரத்தில் இவரும் ஆஜர். கேரள முக அம்சம் எதுவுமின்றி (தென்) இந்தியாவின் பாய் நெக்ஸ்ட் டோர் இமேஜ் நிவினுக்கு மெகா ப்ளஸ். இயக்குனர், நாயகன் ஆகியோர் கேரள நபர்கள் என்றாலும் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் தனித்தனியே படமெடுக்கப்பட்டிருப்பது இன்னொரு ஆறுதல்.
ஒரு நாளில் வெற்றிக்கு நடக்கும் சோதனைகள்தான் கரு. சென்னையில் வேலை தேடி அலையும் வெற்றியை கரம் பிடிக்க தேடி வரும் காதலி, வட்டிக்கு பணம் தரும் நபர், மச்சான் என அனைத்து திசையில் இருந்தும் நெருக்கடிகள் ஒரே நேரத்தில் சூழ்ந்து வர மதியால் வெல்கிறானா அல்லது விதியால் ஓட ஓட விரட்டப்படுகிறானா என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். 'பீட்சா' கார்த்திக் சுப்பராஜின் குறும்படமான ப்ளாக் & ஒயிட் குறும்படத்தின் எடிட்டர் இவர்தான்.
'குறையொன்றுமில்லை' என்று அடித்து சொல்லும் அளவிற்கு நிவின் இயல்பாக நடித்து பட்டினப்பாக்கம், மந்தைவெளி தெருக்களில் வியர்வை சிந்த வாழ்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம். 'காதல் என்னுள்ளே வந்த நேரம்' பாடலொன்று போதும்..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். காதலியுடன் பேசிக்கொண்டு இருக்கையில் தன்னை கடந்து செல்லும் பெண்ணைக்கண்டு சில நொடிகள் மெய் மறந்து பின்னர் சுதாரித்து விட்டு 'அவ மூஞ்சியே சரியில்ல' என நிவின் சொல்ல அதற்கு காதலியின் கேள்வி ..'நீ மூஞ்சா பாத்த?'. அப்போது வழிந்தவாறு நிவின் தரும் ரியாக்சன் இருக்கிறதே....கோடம்பாக்கத்தை ஆள வந்திருக்கும் இளவரசே வா!!
காதலியாக நஸ்ரியா. வெள்ளிநிலா, வெண்ணிலா ஐஸ்க்ரீம், மலைத்தேன், மான்விழியாள் என்று ஆகச்சிறந்த வர்ணனைகளை எல்லாம் சேர்த்து ஒற்றை சொல்லில் அடக்கினால் 'நஸ்ரியா'. முதல் பாதி முழுக்க பப்ள் டாப் தண்ணீர் கேன் அளவிற்கு ஜொள் ஊற்றிக்கொண்டே படம் பார்க்க வைத்த கள்ளி!!
வட்டிராஜாவாக 'சூது கவ்வும்' புகழ் சிம்மா குர்குரே மீசையுடன் நெஞ்சைக்கவ்வ, தம்பி ராமய்யா, 'கட்ட குஞ்சு' ஜான் விஜய், 'ஆசம்' நாசர் மற்றும் குட்டி வில்லன்கள் அனைவரும் கச்சிதமான தேர்வு. பட்டினப்பாக்கம், மந்தைவெளி பகுதிகளில் குறைந்த பட்ஜெட்டில் மொத்தப்படத்தையும் கேமராவுக்குள் அடக்கி இருக்கிறார்கள். இரண்டு முறை துள்ளி விளையாடும் 'பிஸ்தா' பாடல் எகிறி அடிக்கும் வீச்சு பரோட்டா.
'10,000 ரூபாய்க்கு வாங்கி இருக்க..பட்டனே இல்ல'(சிம்மா), 'சின்ன வயசுல சரவணன். மிடில் ஏஜ் ஆனதால இப்ப சரவணர்(தம்பி ராமய்யா) வசனங்கள் பின்னல். குறும்படம் பார்க்கும் ஃபீல் அழுத்தமாக இருப்பது ஒரு குறை என்பதை மறுப்பதற்கில்லை. இரண்டு மணி நேரத்திற்குள் படத்தை முடித்து இருப்பது ரிலீஃப்.
காதல் ரசம் சொட்டும் படங்கள் என்றாலே பொதுவாக எனக்கு அலர்ஜி. 'விண்ணைத்தாண்டி வருவாயா'..இன்னும் பார்க்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.அக்கொள்கையை தகர்த்தெறிந்து என்னை கவர்ந்திழுத்த 'தட்டத்தின் மறயத்து'விற்கு பின்பு தற்போது மனதை சுண்டி இழுத்திருப்பது இந்த நேரக்காதல் . 'காதல் என்னுள்ளே' பாடலை யூ ட்யூப்பில் பலமுறை கண்டும் சலிக்கவில்லை.
நான் ஈ மூலம் தெலுங்கு இயக்குர் ராஜமௌலியும் , கன்னட நாயகன் சுதீப்பும் நம்மூர் ஃபேன்டசி சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தது போல கேரள வரவுகளான அல்போன்ஸ் புத்திரன், நிவின், நஸ்ரியா ஆகியோர் புது ட்ரென்ட் சினிமாவை கொண்டாடும் இளையோர்களால் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டு அரியாசனம் ஏற்றப்படுவார்கள் என்பது உறுதி.
................................................................
1 comments:
thiramaiyai mathippom manila verupadinri..nallathoru vimarsanam..
Post a Comment