CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, May 15, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (15/05/13)உடன்பிறப்பு: 
                                                                   

பீட்டர்ஸ் சாலையோரம் ஒரு காலை நேரம் எடுத்த புகைப்படம்.
......................................................................

மின்சார கனவு:
சென்னையில் சுழற்சி முறையில் 2 மணிநேர மின்வெட்டு அமலில் இருப்பது பலருக்கும் தெரியும். சென்ற மாதம் முழுக்க எங்கள் ஏரியாவில் மாலை 4-6 கட். எனவே இம்மாதம் காலை 8-10 கட் செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் மதியம் 12-2 நிறுத்தி விட்டார்கள். பாரிமுனையில் கடை வைத்திருப்பவர் ஒருவரிடம் பேசியபோது "அரசாங்க வேல செய்றவங்க காத்தால 8-10, 10-12 பவர் கட்டால கடுப்பாகறாங்களாம். அதனால இனிமே சென்னைல மதியம் 12-2, சாந்திரம் 4-6 மட்டும்தான்" எனும் தகவலை தந்தார். வாழ்ந்தா கவர்மண்ட் மாப்ளையா வாழனும். ஜிம்பலக்கடி பம்ப்பா!!
....................................................................

பட்டாபட்டி:
தமிழ்ப்பதிவர்களில் அரசியல் சார்ந்த விஷயங்களை 100% துணிவுடன் எழுதிய பதிவர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் பட்டாபட்டி. சுயபுராணம் போடாமல், ஜால்ராக்களை அண்டவிடாமல் காரசாரமாக எழுதி வந்தவர். குறிப்பாக நான் பதிவுலகில் நுழைந்த 2010 ஆண்டின் இறுதியில் பட்டையை கிளப்பி வந்தார். அவரது இழப்பு எமக்கு அதிர்ச்சிதான்.  நண்பரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
................................................................... 

மும்பை போலீஸ்: 
                                                         
                     

ப்ரித்விராஜின் மகுடத்தில் இன்னொரு வைரக்கல்லாக பதிந்திருக்கிறது இந்த மும்பை போலீஸ். சக போலீஸ் அதிகாரியும் நண்பனுமான ஆர்யன் (ஜெயசூர்யா) வீரச்செயல் விருது பெறும் வேளையில் அருகில் உள்ள  கட்டிடத்தில் இருந்து பாய்ந்து வரும் தோட்டாவால் பலியாகிறான். கடும் முயற்சி செய்து விசாரணை மேற்கொள்கிறான் ஆண்டனி(ப்ரித்வி). விசாரணையின் இறுதி கட்டத்தை நெருங்கும்போது ஏற்படும் விபத்தில் ஞாபக சக்தியை இழக்கிறான் ஆண்டனி. மீண்டு வந்து அவ்வழக்கை எப்படி முடிக்கிறான் என்பதுதான் கதை. கொலை செய்யப்பட விதம், கொலை செய்த நபர் யார் என்பதை சஸ்பென்ஸ் நிரம்ப சொல்லி இருக்கிறார்கள்.

கோபம்,நகைச்சுவை,சோகம் என அனைத்து தளங்களிலும் ப்ரித்வி...ஏவுகணை. படத்தில் ஒரு பாடல் கூட இல்லை. நாயகியும்தான். அதை ஒப்பேற்றும் விதமாக ப்ரிதிவியின் டீமில் இருக்கும் போலீஸ் அபர்ணா நாயர் 'கின்'னென்று  அவ்வப்போது வந்து செல்வது...கோடை கனமழை!! ரகுமான்,ரியாஸ்கான்  குஞ்சன் ஆகியோரும் 'உள்ளேன் ஐயா'. 

தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நாயகன் Gay வாக நடிக்க ஒப்புக்கொள்வது லேசுப்பட்ட காரியமா? அந்த இமேஜை எல்லாம் உடைத்து இப்படத்தில் நடித்ததற்கே ப்ரித்வியை தோள்தட்டி பாராட்டலாம். இதுபோக இன்னொரு உளுத்துப்போன ஹீரோயிசத்தையும் தகர்த்து எறிந்திருக்கிறார். அது என்ன என்பது டாப் சீக்ரெட். தியேட்டரில் பார்க்க. இவருடைய Gay தோழனாக வரும் இளைஞனின் உடல்மொழியும், உச்சரிப்பும் 100% Gay வைப்போலவே இருப்பது க்ளாஸ்.  

விறுவிறுப்பான ட்விஸ்ட்களுடன் ஒரு சிறந்த போலீஸ் ஸ்டோரியை தந்திருக்கும் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்...குட் வொர்க்!!
.................................................................    

தில்லுமுல்லு:
                                                          


ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உணவகங்கள் மற்றும் அதனுள் இருக்கும் சொகுசு தியேட்டர் கேன்டீன்களில் பெரும்பாலும் பணத்தை செலவழிப்பதில்லை நான். மலிவு விலையில்(?) தரமான உணவுகளை அவர்கள் தருவதால் கார்களில் வரும் ஏழைகள் சாப்பிடட்டுமே என்று ஒதுங்கி விடுவதுண்டு. சென்ற வாரம் சும்மா வேடிக்கை பார்க்கலாமே என்று எக்ஸ்ப்ரஸ் அவின்யூ ஃபுட் கோர்ட்டை சுற்றி வரும்போது கண்ணில் பட்டது படத்தில் உள்ள மெனு(ஹோட்டல் பொன்னுசாமி).ஆனியன் ராய்த்தா,கத்தரிக்காய் கொஸ்துவைக்கூட காம்போவில் சேர்த்த அபார வியாபார யுக்தியை என்னவென்று சொல்ல? இது பரவலாக பிற உணவங்களிலும் பின்பற்றப்படுவதை அடுத்தடுத்த நாட்களில் கண்டேன்.  

போகிற போக்கை பார்த்தால் காம்போ ஆஃபரில் ஒரு டம்ளர் குடிநீரை சேர்த்தாலும் ஆச்சர்யமில்லை. பேசாமல் நானும் ஒரு ஹோட்டலை துவங்கி வெறும் இட்லி 10 ரூபாய். காம்போ இட்லி(சாம்பார், சட்னியுடன்) 20 ரூபாய் என்று யாவாரம் செய்தாலென்ன? விலையை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் ஒரே அப்பு. கடைப்பெயர்: இட்லி குண்டா(ஸ்).  
.......................................................................

தலைநகரம்: 
ஸ்டாலின் சென்னை மேயராக இருக்கையில் அண்ணாசாலை போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடைபாதைகளின் அகலத்தை சுருக்கினார். மூன்று பேர் சேர்ந்தாற்போல நடந்து செல்லும் அளவிற்கு இருந்த அச்சாலை ஒற்றையடிப்பாதை ஆகிப்போனது. அதன்பின் ப்ளெக்ஸ் கலாச்சாரம் வெகு வேகமாக வளர்ந்து நடைபாதைகளையும் ஆக்ரமிக்க ஆரம்பித்தன. தற்போது நகரில் இருக்கும் சில பெரிய ரவுண்டானாக்களின் அகலத்தை அநியாயத்திற்கு சுருக்கி வாகன ஓட்டிகளுக்கு ஒத்தாசை செய்வது பலனை தருகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

குறைந்தது நான்கு தெருக்கள் பிரியுமிடத்தில் இருக்கும் ரவுண்டானாக்களை சுருக்குவதால் மேலும் சில வண்டிகள் அதிகமாக பயணிக்க ஏதுவாக இருக்கலாம். அத்துடன் அவற்றின் வேகமும் அதிகரிப்பதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அவ்விடத்தை கடக்கும் பாதசாரிகளுக்கும் பதற்றத்தை உருவாக்கி விடுகின்றன இம்மாதிரி சுருக்கல்கள். நந்தனம் சி.ஐ.டி. நகர் ரவுண்டானா சுருங்கிய பிறகு அவ்வப்போது நடக்கும் விபத்துகளுக்கு கீழுள்ள புகைப்படமும் ஒரு உதாரணம். அன்றைய தினம் மயிரிழையில் உயிர் தப்பினார் சைக்கிளோட்டி.    
                                                                   

...................................................................     

அதிரடிப்படை:
"அரசு தரும் விலையில்லா பொருட்கள், அரசு அலுவலகங்கள் என்று அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் முதல்வர் ஜெ அவர்களின் படத்தை டாஸ்மாக்கில் மட்டும் வைக்க மாட்டீர்களா? இன்னும் சற்று அவகாசம் தருகிறோம். புகைப்படத்தை மாட்டாவிடில் நாங்களே ஒவ்வொரு டாஸ் மாக்கிற்கும் சென்று முதல்வர் படத்தை மாட்டி விடுவோம்" என்று அண்ணி ப் ரேமலதா அதிரடி கர்ஜனை செய்திருப்பது அக்னி அனலை கிளப்பி இருக்கிறது. அநேகமாக அடுத்த முதல்வராக வரும் வாய்ப்பு கேப்டனை விட அண்ணிக்கு தான் பிரகாசம்!!
.............................................................   

இங்கிலீஷ்காரன்:
வாசகர்களின் வயிற்றை கலக்கும் விதமாக ஒரு deadly dangerous attempt செய்திருக்கிறேன்.பாம்பே டாக்கீஸ் -ஆங்கில விமர்சனம் என்னுடைய இன்னொரு தளத்தில். இறைவன் உம்மை ரட்சிப்பாராக..

............................................................

மனம் கொத்தி பறவை: 
"இந்தியா என் சகோதர நாடு. என்னை அழைக்காவிடினும் விரைவில் அங்கு செல்வேன். என் பதவி ஏற்பு விழாவிற்கு மன்மோகன் வரவேண்டும். வாருங்கள் ஒரு புதிய அத்யாயம் படைப்போம்"...போதும் நவாஸ் போதும். ஓவர் பாசம் ஒடம்புக்கு ஆகாது. முன்பு பதவியில் இருந்தபோது நீங்கள் காஷ்மீர் பிரச்னையில் செய்த சேட்டைகளை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? ஐந்து வருட நடிப்பை ஒரே ஷோவில் காட்டினால் எப்படி? பொறுமை எருமையை விட பெரிசு!!
.............................................................   

சிறைச்சாலை: 
படபடக்கும் ஆக்சன் சினிமாவிற்கு நிகராக எடுக்கப்பட்ட டாடா ஸ்கை டிஷ் ஆன்டனா விளம்பரத்தை சமீபத்தில் பார்த்து பிரமித்தேன். Simply Stunning.

காண க்ளிக் செய்க: டாடா ஸ்கை  
..................................................................

Image Copyrights: madrasbhavan.com
mumbai police image courtesy: Google6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கேப்டனுக்கு கேப்டன் அவர்கள் தானே...!

Unknown said...

நானும் அவங்க பேசுனத பார்த்தேன் அனல் தெறிக்கும் பேச்சு

கேப்டன் பேசுனதையும் பார்த்தேன் செம்ம காமெடி

கலியபெருமாள் புதுச்சேரி said...

அப்ப அடுத்தது அண்ணி ஆட்சிதானா...அண்ணி வாழ்க..

saidaiazeez.blogspot.in said...

இட்லி குண்டா(ஸ்) சூப்பர் ஐடியாபா!
அப்பாலிக்கா அந்த டாடா ஸ்கை ஆட்... நல்லா தின்க் பண்ணீக்கீறாங்க வாத்யாரே!

ஜீவன் சுப்பு said...

அறுசுவையான மீல்ஸ் அட்டகாசம் . குறிப்பா அண்ணியோட அக்னி கொழம்பும் . டாட்டா ஸ்கை யோட விறு விறுப்பான வெளம்பரமும் .

arul said...

good introductions

Related Posts Plugin for WordPress, Blogger...