CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, May 31, 2013

துர்கா க்ளைமாக்ஸ் - 2


தமிழகத்தையே கலக்கி உலுக்கிய துர்கா படத்தின் க்ளைமாக்ஸ் பற்றிய  எனது மலரும் நினைவுகள்: 

துர்கா க்ளைமாக்ஸ் - 1

பாகம் இரண்டு தொடர்கிறது:
                                                                         

பிரம்மாண்ட பங்களா செட்: நெடும் சோபாவில் அமர்ந்தவாறு வில்லர் கிட்டி கடும் யோசனையில் ஆழ்கிறார். பரம்பரை பரம்பரையாக கோவில் மரியாதை கிட்டி பேமிலிக்கு மட்டுமே தரப்படுவது வழக்கம் என்றும் இம்முறை யாரை அனுப்ப போகிறீர்கள் என்றும் சூனியர் ஆர்டிஸ்ட்கள்(அதாகப்பட்டது சீனியர் ஊர்ப்பெருசுகள்) கேட்கிறார்கள். ரெண்டுல எது உண்மையான துர்கான்னு நேக்கா கண்டுபிடிக்க சோக்கா ஒரு ஐடியா சொல்கிறார் சுட்டி கிட்டி: 'அசல் துர்கா யாருன்னு தெரிஞ்சிக்க நம்ம டைரக்டரோட மொக்க கிராபிக்ஸே போதும். ஆனா படம் பாக்குறது 1990 ஜனங்க. So...எலே டோன்ட் வொர்ரி. பீ ஹாப்பி.  ரெண்டு பேரையும் தீ மிதிக்க வக்கலாம். அசல் துர்கா யாருன்னு அப்பால சொல்லலாம்'. 

அந்நேரம் பார்த்து சம்பளம் வாங்காமல் ஷூட்டிங் பொங்கலை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த தேனாண்டாள் பிலிம்ஸ் ப்ராப்பர்டியான நிழல்கள் ரவி ஆவேசமாக 'பச்ச கொழந்தைய தீ மிதிக்க சொல்றியே..நீயல்லாம் ஒரு மனுஷனா?' என்று பொங்கல் வைக்க..கிஞ்சித்தும் கிடுகிடுக்காத கிட்டி தரும் பதிலடி 'பின்ன நான் என்ன ரெண்டு மனுஷனா? இருக்குற பட்ஜெட்ல துர்காவுக்கு மட்டுந்தாய்யா க்ராபிக்ஸ் பண்ண முடியும். ரொம்ப பேசுன அடுத்த சீன்ல ராமு/ராஜாவுக்கு டூப் போட  வச்சிருவேன். ஒத்திப்போ'.    

டயனோரா டி.வி.யில் ப்ளாஷ் ந்யூஸ் கேட்டது போல் அதிரும் முண்டகக்கண்ணி கனகா அவர்கள் துர்காவை பார்த்து 'வேண்டாம்மா. தீ மிதிக்காத' என்று முட்டுக்கட்டை போட்டென்ன லாபம்? ''க்ளைமாக்சில் ஜோராக நடித்தால்தான் 2 மூட்டை தேன் மிட்டாய் தருவேன்'' என்று டைரக்டர் அங்கிள் சொன்னது மனதில் வந்து போக ரிக்வஸ்டை ரிஜெக்ட் செய்கிறாள் துர்கா.காந்தக்கண்ணழகி கனகா.. உனக்கு போஜ்பூரி படத்துல சான்ஸ் வாங்கித்தர்றேன். இப்ப அம்மன் பாட்டுக்கு ஸ்டார்ட் ம்யூஸிக். கனகதுர்கா அருளுடன் 'மாரியம்மா முத்து மாரியம்மா' பிகின்ஸ்.

அப்பாவி தாய்மார்கள் மனதை கவ்வும் பொருட்டு கோவில், சுற்றுப்புற சுவர் முழுக்க மஞ்சா புடவையுடன் க்ரூப் டான்சர்கள் மான் போலாட, சேப்பு கலர் சாரியில் கனகா மயில் போலாட..யப்பா!!! இன்னொரு பக்கம் 2 ஷாமிலிக்கும் மாலை போட்டு தீயில் 'இறக்க' வைக்க தீக்குழியில் இறக்கும் படலத்தை துவக்குகிறது ஊரு சனம். 

"சர்தான் நிறுத்துடா சொங்கி. பச்ச மண்ணுங்க ரெண்டும் நெருப்புல ஊந்து கருப்பாவ போவுது. எங்கடா எங்க ராமுவும், ராஜாவும்? உம்மூஞ்சில ஹர்பஜன் சிங் கைய வக்க"ன்னு இன்னாத்துக்கு பா கொர்லு வுட்றீங்க. சொல்றம்பா.

ஊரே தீமிதி நிகழ்வை குருகுருவென்று பார்க்கும் நேரத்தில் கிட்டியின் முதுகுப்பக்கம் தரையோடு ஊர்ந்தவாறு ராமு, ராஜா என்ட்ரி. ரசிகர்களின்  குஷிக்கு கேட்கவா வேண்டும். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களே அம்பேலாகும் வண்ணம் தரை, (நமது) தொடை, முன்சீட்டுக்காரர் முதுகு என கைக்கு கிட்டும் இடத்தில் எல்லாம் ஓங்கித்தட்டி பலத்த கரவொலி எழுப்பி ராமு,ராஜா பக்தர்களின் பலத்தை நிரூபிக்கிறோம். துர்காவின் மம்மியை மாடு முட்டி கொல்ல வைத்த கிட்டியின் கொடுஞ்செயலை ஒருகணம் மனத்திரையில் ஓட்டிப்பார்க்கிறான் ராமு. மெல்ல நகர்ந்து கிட்டியின் மஞ்சள் நிற துண்டை கைப்பற்றி ராஜாவுடன் இன்னொரு திசை நோக்கி ஓட இங்கோ குலவி அடித்து துர்காவை தீக்களம் இறக்குகிறார்கள்.

நெருப்பு..துர்கா..அம்மன்..மறுக்கா நெருப்பு..துர்கா..அம்மன். மறுபடியும் நெருப்பு..துர்கா..அம்மன்..கேமராமேன் சொயட்டி சொயட்டி அடிக்கிறார்.

"இப்ப ராமு ராஜா எங்க போனாங்கன்னு சொல்றியா..இல்ல வாயில செருப்ப கவ்வ குடுத்து அடிக்கவா?" அதான?  கேட்டுக்க நைனா.

எந்த மாடு(இம்மாட்டிற்கு பெயர் சூட்ட தவறியதால் ரானா நானா அண்ணன் ஆஸ்கரை இழந்தார் என்று 1990-களில் பேசிக்கொண்டதாக கேள்விப்பட்டேன்) துர்கா மம்மியை முட்டிக்கொன்றதோ அதே மாட்டை தேடிப்பிடித்து கிட்டியின் மஞ்சா துண்டை அதன் மூக்கருகே வாசம் பிடிக்க வைக்கிறான் நம்ம ராமு. செகண்ட் ஹீரோ ராஜா மட்டும் சொம்மா இருப்பானா? மாட்டின் வாலை கண்டமேனிக்கு கடித்து அதை வெறியேற்றுகிறான். கவுத்த அத்துக்குனு காத்தா கெளம்புது காள.

துர்கா தீயை pedestrian crossing செய்ய...மாடு கிட்டியை நோக்கி Axe effect உடன் ஓடிவர..எகிறி அடிக்கிறது பரபரப்பு. முதல் துர்கா தீயை கடந்ததும், அடுத்த துர்கா நெருப்பை நோக்கி வருகிறாள். அந்நேரம் பார்த்து வாக்காக வரும் வாகை சந்திரசேகர் அவளை காப்பாற்றி கிட்டியின் முகத்திரையை கிழிக்க, ஊரு சனம் அக்கொடூரனை துரத்த...Climax inching towards edge of the seat moment வாத்யாரே.
                                                               

கிட்டியை ஊரார் துரத்திக்கொண்டு இருப்பது ஏ.வி.எம். ஸ்டுடியோவில்தான் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து உள்ளே நுழைகிறது நம்ம மாடு (மவனே பீட்டர் ஜாக்சன்..ஒழுங்கா வி.ஆர்.எஸ்.வாங்கிட்டு ஓடிப்போயிடு). உருட்டுக்கட்டையுடன் கனகா, அட்டை அரிவாளுடன் நிழல்கள் ரவி, கம்புகளுடன் ஊர் மக்கள்  வெகுவேகமாக சூப்பர் ஸ்லோமோஷனில் கிட்டியை பாஞ்சி பிடிக்க ஓடிக்கொண்டு இருக்கையில், அனைவரையும் ஒரே டேக்கில் ஓவர்டேக் செய்து மின்னலென பாய்கிறது அக்காளை. நாலடி ஒசர நட்ராஜ் ஷார்னரில் கூர் தீட்டப்பட்ட கொம்பால் கிட்டியை ஒரே முட்டு....

தான் மூட்டிய தீயில் தானே விழுந்து சாகிறார் மனிதர். இதைத்தான் அன்றே சொன்னார் கவுண்டர்: 'தனக்கு தனக்குன்னாலே தனக்கு தனக்குதான்'.

சத்யம் தியேட்டரில் அவதார் ஒரு வருடம் அதிரிபுதிரியாக ஓடியது என்று பெருமை பீத்திக்கொள்ளும் ஏ ஜேம்ஸ் கமரூனே..எங்க அண்ணாத்த எடுத்த துர்கா கூடத்தான் கிருஷ்ணவேனில ஒரு வருஷம் செம காட்டு காட்டிச்சி. அவதார் - 2 டைட்டில் கார்டுல: எ பிலிம் பை  'ஹாலிவுட்டின் ராமநாராயணன்' ஜேம்ஸ் கமரூன்'ன்னு போட்டு பொழச்சிக்க!! சொல்லிப்புட்டேன்.
.....................................................................
   
        


Monday, May 27, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (26/05/2013)நஞ்சுபுரம்:  
                                                                         

'இந்தியர்கள்/சர்தார்ஜி/தமிழர்கள் இப்படித்தான்'என்று சொத்தையாக அடிக்கப்படும் ஜோக்குகளை கண்டால் கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனால் சில நேரங்களில் அது சரிதான் என்று தோன்றுமளவிற்கு இருக்கின்றன படித்த பன்னாடைகள் செய்யும் காரியங்கள். வெள்ளியன்று சென்னை ஐ.டி.பார்க் ஒன்றில் நான் கண்ட காட்சி மேலுள்ள படத்தில். பேப்பர் கப், சிகரெட் பெட்டி போன்றவற்றை செடிகளின் அருகே பல இடங்களில் வீசி இருந்தனர் பீட்டர்கள். இன்னொரு செடி மீது பப்பில் கம்மை துப்பி இருந்தான் பக்கி. 

லிப்ட் மீது பப்பில் கம்மை சொருகுதல், கூல் ட்ரிங்க் பாட்டில்களை லிப்டிலேயே போட்டு விடுவது...உச்சக்கட்ட அராஜகமாக யூரின் அடிக்கும் பேசினில் பப்பில் கம்மை துப்பி விட்டு செல்வது என பட்டியல் நீளும். இத்தனைக்கும் rest room etiquettes என்று பட்டியல் போட்டு எழுதியும் இப்படி. அதை சுத்தம் செய்யும் தொழிலாளியின் நிலை குறித்து ஒரு நொடியேனும் சிந்திக்காத பட்டதாரி எருமைகளை என்ன சொல்ல?
...........................................................

குட்லக்: 
கேபிள் டி.வி.ஆபரேட்டர், விநியோகஸ்தர், Blogger, வசனகர்த்தா என்று படிப்படியாக வெற்றித்தடம் பதித்து தற்போது 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குனராக முன்னேறி இருக்கும் எவர்யூத் சங்கத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் கேபிள் சங்கருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
...............................................................  

வேடிக்கை என் வாடிக்கை:
தமிழ்த்தாய்க்கு 100 கோடியில் சிலை எழுப்ப உத்தரவிடும் அதே நேரத்தில் கலை, அறிவியல் கல்லூரி தேர்வுகளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் எனும் அரச கட்டளை வரலாறு காணாத முரண். மாணவர்களின் விருப்பத்தை கூட கேட்காமல் தமிழ் மொழிக்கு சமாதி கட்டும் இந்த கொடுமைக்கு எனது கடும் கண்டனங்கள். பத்தாம் வகுப்பு வரை (தாய்த்)தமிழில் படித்த பெருமை ஒன்று போதுமெனக்கு. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமை இன்றி தவிக்கும் ரெண்டுங்கெட்டான் மாணவ சமுதாயத்தை எண்ணி பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை.

ஈழப்பிரச்னைக்கு ஒற்றுமையுடன் குரலெழுப்பிய மாணவர்கள் இந்த அநீதிக்கு மௌனம் சாதித்தால் நஷ்டம் அவர்களுக்குத்தான்.
.....................................................................
நளதமயந்தி:
ஈகா தியேட்டர் அருகே உள்ள Door No.27 உணவகம்(உபயம் கேபிள் சங்கர்) சென்றிருக்கிறீர்களா? சென்ற மாதம் மட்டும் மூன்று முறை விசிட் அடிக்க வைத்து விட்டது உணவின் தரம். ஆரக்ள் (அமெரிக்கா) நிறுவனத்தில் செம டப்பு வேலையை உதறிவிட்டு ரெஸ்டாரன்ட் ஆரம்பித்து இருக்கிறார் யூத் ஓனர். சிம்பிளாக இரண்டு பக்க மெனு மட்டுமே. சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி ரைஸ் ருசி பெரும்பாலான ஹோட்டல்களில் ஒரே மாதிரித்தான் இருக்கும். இங்கு இரண்டும் தனிச்சுவை. சென்னையில் சிறந்த கத்தரிக்கா கொஸ்து கிடைக்கும் சிற்சில இடங்களில் இதுவும் ஒன்று என அடித்து சொல்லலாம். அதுபோக 55 ரூபாய்க்கு கேரட் தூவப்பட்ட  தயிர் சாதம்...ஆசம் ஆசம்.

இலியானா இடுப்பு போல ஒல்லியான க்ளாஸில் இத்னூண்டு திரவத்தை தந்து ஏமாற்றாமல் பெரிய க்ளாசில் தரப்படும் தரமான ஜூஸ்களும் சிறப்பு. உணவு வகைகள் மிகக்குறைவு என்பது சற்று ஏமாற்றம். விரைவில் கூடுதல் டிஷ்களை சேர்க்கவுள்ளனர். மென்பொருள் பூங்காக்களில் கிளையை திறப்பது தங்களுக்கு கட்டுப்படி ஆகாததால் தற்போதைக்கு அவ்வெண்ணம் இல்லை என்றார் ஓனர். ஆகமொத்தத்தில் Door No.27 வொர்த் ஈட்டிங்.
.......................................................................

மரியான்: 
'சட்டசபை பக்கமே எட்டிப்பார்க்காத இவரெல்லாம் ஒரு எதிர்க்கட்சி தலைவரா?' என்று ஓலமிடும் சோனகிரிகளே. ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு கேப்டன் டி.வி. பாருங்கய்யா. 'மக்களின் கேள்விக்கு கேப்டனின் பதில்' நிகழ்ச்சியில் எங்கள் அண்ணா பாட்டாளிகளின் கேள்விகளுக்கு வீட்டில் அமர்ந்தவாறு 'இன்னா சோக்கா ஆன்சர் சொல்றார் தெர்மா'! தல ஒக்காஞ்சி இக்குற கெம்பீரமான ராஜாகாலத்து சேர் இருக்கே..யம்ம யம்மா. அதை வடிவமைச்ச டிசைனரை...இறுக்க அணச்சி ஒரு உம்மா தரனும்!!
.....................................................................

திரு...மதி தமிழ்: 
                                                                       

மேட்லி ரோடு எப்ப மெட்லி ரோடாச்சி. 'மெட்லி'க்கு அகராதில அர்த்தம் பாத்தா ஒரே கொயப்பம் தான். கவுண்டர் அட்டாக் இப்படித்தான் இருந்திருக்கும் 'ஸ்ஸ்..எனக்கு ரெண்டு பொண்டாட்டி, மூணு சம்சாரம்..லாட் ஆப் கன்ப்யூசன்'
........................................................................

பம்பாய்: 
தேவி தியேட்டர் பின்பக்க கேட் எதிரே இருக்கும் பாப்புலரான பாம்பே லஸ்ஸி கடைக்கு வார இறுதியில் விஜயம். 20 ரூபாய்க்கு 'சூப்பர் மாமே' என்று கரவொலி எழுப்பி க்ளாஸை கொட்டுமளவிற்கு இல்லாவிட்டாலும் சிட்டியின் பிரதான இடத்தில் இப்படி ஒரு அபவ் ஆவரேஜ் லஸ்ஸி கிடைப்பது ஜோர். மிதமான இனிப்புடன் முந்திரி கலந்த கேரட் அல்வா அல்டிமேட். நொறுக்கு தீனிகளில் பார்சல் வாங்கிச்சென்றது ஓமப்பொடி, மிக்சர், ரிப்பன் பகோடா , காராபூந்தி மற்றும் கீரை பகோடா. கீரை பக்கோடாவை தவிர மற்ற அனைத்தும் சுமார் ருசிதான். அதிகமாக டால்டா சேர்த்திருப்பதால் தொண்டைக்குள் அணிவகுக்க அடம் பிடிக்கின்றன.

சமோசா, கச்சோடிகளை ஸ்பாட்டில் சாப்பிடுவோருக்கு தையல் இலையில் வைத்து அவற்றின் மேல் கொஞ்சம் ஒமப்பொடியை தூவித்தருகிறார்கள். முன்பெல்லாம் தேவியில் படம் பார்க்கும்போது இடைவேளை நேரத்தில் செக்யூரிட்டி அண்ணாத்தைக்கு 5 ரூபாய் வெட்டினால் வாயிற்கதவு ஓப்பனாகும். சட்டென இக்கடைக்கு ஓடிவந்து இரண்டு சமோசாவை உள்ள தள்ளிவிட்டு ரிட்டர்ன் ஆவது வழக்கம். இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
.........................................................................

பெண்சிங்கம்:
அண்ணாசாலை சாந்தி தியேட்டர் எதிரே உள்ள பாட்டா ஷோ ரூம் அருகே அம்மாவை பாராட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்:

'சிங்கத்தை யாரும் கொஞ்ச முடியாது. அம்மாவை யாரும்  மிஞ்ச முடியாது'.

கோமா ஸ்டேஜில் இருக்கும் தமிழை வாழ வைக்கும் ஒரே ஆக்ஸிகன் இதுபோன்ற ப்ளெக்ஸ் பேனர் ஒட்டிகள்தான். நீ கலக்கு சித்தப்பா.
.........................................................................

..............................................
சமீபத்தில் எழுதியது:

அட்சயம் - பட்டன தட்டு. சோத்த வெட்டு
..............................................

Images copyright: madrasbhavan.com
Saturday, May 25, 2013

அட்சயம் - பட்டன தட்டு. சோத்த வெட்டு!

                                                           
                                                             
'பட்டன தட்டி விட்டா ரெண்டு தட்டுல இட்டிலி நம்ம பக்கத்துல வந்திடனும்' என்றொரு பாடலில் கலைவாணருக்கு கோரிக்கை வைப்பார் டி.ஏ.மதுரம். அவர்களின் கனவு மெய்ப்பட்ட நாள் இம்மாதம் 13 ஆம் தேதி. ஆம். அன்றுதான் ராமாபுரம் DLF மென்பொருள் பூங்காவில்(முன்பு சிவாஜி தோட்டம்)  அட்சயம் துவக்கப்பட்ட தினம். நண்பர் ஒருவருடன் எந்த உணவகத்தில் சாப்பிடலாம் என்று சுற்றி வந்தபொழுது கண்ணில் பட்டது இவ்விடம். கண்ணாடி கதவுகளுக்கு வெளியே நின்றவாறு LCD திரையில் ஓடிக்கொண்டு இருந்த மெனுவை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தபோது 'ப்ளீஸ் கம் இன் சார்' என்று ஒரு செக்க செவேல் பெண் பகுமானமாக மீண்டும் மீண்டும் அழைக்க..'டெபனட்லி'யைத்தவிர வேறென்ன சொல்ல முடியும்? என்ன சொல்றேள்?

உள்ளே சென்ற எம்மிடம் அட்சய புராணத்தை ஆரம்பித்தார் செக்க செவேல். இந்தியாவிலேயே முதன்முறையாக 'பட்டன தட்டு. சோத்த வெட்டு' சிஸ்டத்தை நாங்கள்தான் அறிமுகம் செய்துள்ளோம் என்றார்(நெச மாத்தானா??).  இங்கும் மால்களில் இருப்பதுபோல பிரத்யேக இஸ்துக்கோ நைனா(Swipe it bro) கார்ட். அதை வாங்கிக்கொண்டு அருகில் இருக்கும் டச் ஸ்க்ரீன் கணினியில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்ய வேண்டும். ஒவ்வொரு உணவிலும் எவ்வளவு கலோரி, புரோட்டின் வகையறாக்கள் உள்ளன என்பதை பார்த்துக்கொள்ளலாம். அட்சயம்/க்ரெடிட் கார்டை இஸ்து தேய்த்தால் புவ்வா ரெடி.                                                                    
                                                                
பார்ட்னர்கள் ரமேஷ், சதீஷ் 

ரமேஷ், சதீஷ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பில் இயங்கும் இக்கடையில் மேலும் சில ஒஸ்தி வீட்டு தோழர்/தோழியர்கள் உடன் வேலை செய்கிறார்கள். மேலிருக்கும் படத்தின் பின்னணியில் தெரியும் சிகப்பு நிற கருவியில்தான் உணவுகள் அனைத்தும் தட்டுகளில் நிரப்பப்படுகின்றன. அட்சயம் எந்த ஒரு உணவையும் தயாரிப்பது கிடையாது. போரூர், கிண்டியை சுற்றி இருக்கும் பிரபல ரெஸ்டாரன்ட்களில்(ஆசிப் பிரதர்ஸ், காரைக்குடி, அமராவதி, சங்கீதா, பஞ்சாபி நேஷன் மற்றும் சில) ஆறு மணி நேரத்திற்கு முன்பாக ஆர்டர் செய்து இங்கு அடுக்கி விடுகிறார்கள். 

நாம் உணவை தேர்வு செய்தபின்பு ப்ரோக்ராம் செய்யப்பட சிஸ்டம் மூலம் அவ்வுணவை கேட்ச் செய்து இன்னொரு மிஷினுக்கு அனுப்ப அங்கு சூடேற்றல் நடைபெறுகிறது. சிறப்பாக பேக் செய்யப்பட தட்டு நம்மருகே அதிகபட்சம் 100 நொடிக்குள் வந்து நிற்க..பிறகென்ன ஸ்வாகாதான்.
                                                             
 

அட்சயத்தின் நிறை என்றால் உணவின் தரம். எண்ணை, மசாலா உள்ளிட்ட அனைத்து 'கலக்கும்' வஸ்துக்களையும் அளவோடு கலந்து ருசியுடன் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பது நன்று. நான் ஆர்டர் செய்தது அசைவ மீல்ஸ் (விலை 150. வரி தனியே). சிக்கன் கிரேவி, சிக்கன் வறுவல், மிளகு தூவப்பட்ட காய்கறிகள் என அனைத்தும் வீட்டு ருசி. ஆனால் குறை சொல்ல நிறைய உண்டு.

100 நொடியில் சட்டென உணவு, ப்ரோட்டீன் - கலோரி போன்ற மேஜிக்குகளை செய்தாலே கணினித்துறை இளைஞர்களை சுண்டி இழுத்துவிடலாம் எனும் அபார கணிப்புடன் இவர்கள் களத்தில் இறங்கி இருப்பது வியப்பை அளிக்கிறது. அதிலும் ஆங்கிலேயர்கள் பாணியில் நாக்கை குழைத்து சதீஷ் ஆங்கிலம் பேசி வாடிக்கையளர்களை இழுக்க மெனக்கெடுவது..very funny!

பிறந்த நாள், பதவி உயர்வு மற்றும் பல சந்தோச நிகழ்வுகளுக்கு ட்ரீட் வைக்க எண்ணுபவர்கள் அட்சயத்தை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு குறைவு. ட்ரீட் தருபவர் தலைக்கு ரூ. 300 செலவு செய்து வயிற்றை நிரப்பியாக வேண்டும். இந்நிலையில் விரைவில் தாம்பரம் மெப்ஸ் கணினிப்பூங்காவில் கிளையை துவக்க உள்ளனர். பார்க்கலாம்.

ராமாபுரம் DLF-இல் கடை தொடங்கிய முதல் சில நாட்களிலேயே காலை உணவை நிறுத்தி விட்டனர்(விலை ஏகத்துக்கும் இருந்ததால் பலர் எட்டிப்பார்க்கவில்லை). இங்கு அரைவயிறு உண்ட வெறுப்பில் நண்பனுடன் DLF எதிரே இருந்த லோக்கல் ஹோட்டல் ஒன்றில் தளமான பரோட்டா நான்கு, ஒரு ஆம்லெட் மற்றும் தரமான சிக்கன் சால்னா சாப்பிட்டுவிட்டு வெறும் 50 ரூபாய் பில் கட்டிவிட்டு திருப்தியுடன் வெளியேறினேன். 

அட்சயம் - பெயரில் மட்டும்.....
...............................................................
Tuesday, May 21, 2013

ஃபோரம் விஜயா மால் - உணவகங்கள்


                                                               

வடபழனி ஃபோரம் விஜயா மாலின் மூன்றாம் தளத்தில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டு இருக்கும் ஃபுட் கோர்ட்டை வடிவமைத்து பராமரிப்பது - வயா சவுத். கண்கவர் வண்ணம் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். இங்கும் உணவுகள் வாங்க கார்ட் சிஸ்டம்தான். குறைந்தது 100 ரூபாய்க்கு கார்ட் வாங்க வேண்டுமாம். முதலில் வாங்கும்போது 20 ரூபாயை ஏப்பம் விட்டு 80 ரூபாய்க்கு சார்ஜ் செய்து தருகிறார்கள். எக்ஸ்ப்ரஸ் அவின்யூவில் இதுபோல ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து வந்ததை 'கேட்டால் கிடைக்கும்' தல தளபதிகளாகிய கேபிள் சங்கர், சுரேகா தட்டிக்கேட்டதால் அந்நிலை மாறியது. இங்கும் அம்மாற்றம் விரைவில் நிகழ வாய்ப்புண்டு என எதிர்பார்க்கலாம்.

பொதுவாக  ஃபுட் கோர்ட்களில் விற்கும் அனைத்து உணவுகளுமே 100 ரூபாய்க்கு மேல்தான். ஆனால் குடிப்பதற்கு சுகாதாரமான குடிநீர் மட்டும் உணவுடன் தருவதில்லை. 20 ரூபாய்க்கு விற்கும் தண்ணீர் பாட்டில் வாங்கினால்தான் நமக்கு விக்கல் நிற்கும். ஆனால் இந்த மாலில் சுத்தமான குடிநீர் வழங்கும் மிஷினொன்றை உணவங்களுக்கு அருகிலேயே வைத்திருப்பது ஆறுதல். சாதாரண மற்றும் குளிர்ந்த நீர் இரண்டும் கிடைக்கிறது. டம்ளர் இல்லை. பலரும் காலி தண்ணீர் பாட்டிலில் பிடித்து செல்கிறார்கள்.  

வாங்ஸ் கிட்சன், மதுரை பாண்டிக்கடை, அரேபியன், மெக்சிகன் உணவங்கள் என ஒரே வரிசையில். இன்னும் சில கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. முதலில் கண்ணில் பட்டது கைலாஷ் பர்பத் எனும் வடக்கத்தி சாட்டகம். கைலாஷின் ஆரம்ப கால வரலாறு சுவாரஸ்யங்கள் நிறைந்தது. 1940 களில் முல்சந்தானி சகோக்களின் பானிபூரி பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெகு பிரபலம். 1947 பிரிவினையின்போது தமது சொந்த நாடான இந்தியாவிற்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம். வீடு மற்றும் கடையில் இருக்கும் அனைத்து பொருட்களையும் தூக்கிக்கொண்டு நெடும்பயணம் மேற்கொள்ள முடியாத நிலை. எனவே உணவு தயாரிக்க பயன்படும் பாத்திரங்களை மட்டும் சுமந்து கொண்டு இந்தியா வந்தனர். 

சில ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு 1952 ஆம் ஆண்டு பாம்பேயில் உதயமானது இந்த கைலாஷ் பர்பத். ரோட்டோரம் துவக்கப்பட்ட சிறுகடை காலப்போக்கில் பெரும் வளர்ச்சி பெற்றது. உபயம் நாவை சுண்டி இழுக்கும் பானிபூரி, குலாப் ஜாமூன் மற்றும் சில சாட் ஐட்டங்கள். 'அச்சா..! நம்மூர் கடைய பத்தி சொல்லுடா பச்சா..' என்கிறீர்களா? வாங்க மதுரை பாண்டிக்கடைக்கு.   

                                                           
மொத்த ஃபுட்கோர்ட்டில் பரபரப்பாக வியாபாரம் ஆகிக்கொண்டு இருந்தது இங்குதான். அருகிலிருந்த அரேபியன், சைனீஸ் கடையாட்கள் முகத்தில் கடுகை தாளிக்க வைத்து விட்டு மும்முரமாக கஸ்டமர்களை கவனித்துக்கொண்டு இருந்தார்கள் மதுரைமார்கள். 'பெயர்ப்பலகையில் போஸ்ட் எண்.5' என்பதற்கான காரணம் கேட்டால் 'ச்சும்மா' என்றார் ஒரு அண்ணாத்தை. தாமரைக்குளம், மதுரை மல்லி என மண் மணம் கமக்கும் பெயர்களில் உணவுகள். தொடர் பிரியாணி சாப்பிட்டு சலித்துவிட்டதால் மதுரை மல்லியை ஆர்டர் செய்தேன். ரெமோ பாலகணேஷின் சாய்ஸ் சிக்கன் பிரியாணி. விலை முறையே 115, 150 (வரி நீங்கலாக).

ஆனியன் ராய்த்தா, பொரியல் போன்றவற்றை கோவில் பிரசாதத்தில் 25% அளவு தம்மாத்தூண்டு தருவது அநியாயம். 'கூட கொஞ்சம் ராய்த்தா போடுங்க'என்று ரெமோ அந்நியனாக கொந்தளித்ததால் கேட்டது கிடைத்தது. எதிரெதிரே இருவர் அமர்ந்து சாப்பிட சிரமப்படும் அளவிற்கு டேபிளின் பரப்பளவு சற்று சிறிதாக இருப்பது குறை. 'இங்கயும் உங்க மூஞ்ச பாக்கணுமா?' என்று விரும்பும் தம்பதிகள், 'உன் தட்ட பாருடா. என் ஐட்டத்தையே வழிச்சிக்கிட்டு இருக்கியே' என்று கதறும் நண்பர்களுக்கு இந்த டேபிள் கண்டிப்பாக வரப்பிரசாதம்தான்!!   
                                                              
 
                                                                             மல்லி....மதுரை மல்லி

முக்கால் வயிறு நிரம்பும் அளவிற்கு சாதம், கோஸ் பொரியல், குட்டி(but  கெட்டி)  பரோட்டா, அரை கப் சாம்பார், ரசம் மற்றும் தயிர் இத்யாதிகள். சாம்பார் சற்று உப்பு சப்பின்றி இருந்தாலும் காரக்குழம்பு, ரசம் மற்றும் சேமியா பாயசம் டாப் டேஸ்ட் வாத்யாரே. 

ஆர்டர் செய்வதற்கு முன்பு நாங்கள் ஒரு குறிப்பிட்ட மெனுவை படித்த லட்சணம் பெருங்கூத்து. Kai Kari Kulambu என்று எழுதப்பட்டு இருந்ததைக்கண்டு ரெமோ சீரியசாக 'அது என்னடா கைகாரி குழம்பு?'  என வினவ நானும் டுபுக்கு போல புருவத்தை உயர்த்தி 'தெரியலியே சார். ஒருவேள இங்க சமைக்கிற பெண் சமையல்காரர் ஊர்ப்பக்கம் பிரசித்தி பெற்றவர் போல' என்று பதிலளித்தேன். சாப்பிட அமர்ந்த பின்பும் எமக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை. 'சார் கைக்கறி கொழம்பு சார் அது. எந்திரம் எதுவும் இல்லாம கைலயே செஞ்சி இருப்பாங்க'என்று பூரிக்க ரெமோ மீண்டும் விழித்தார். இறுதியில் இருவருக்கும் ஒரு சேர ட்யூப்லைட் பிரகாசமாக எரிந்தது: ''அடச்சே....காய்கறி கொழம்பு. இதைத்தான் அப்படி எழுதி இருக்கான் புண்ணியவான்". அதை Kaai kari kolambu ன்னு எழுதி இருந்தாத்தான் என்ன..எப்படி சுத்தவிட்டு வேடிக்க பாக்கறீங்க நைனா!!

'பட்டனை தட்டுனா சோறு ரெடி' - சென்னையில் புதிதாக உதயமாகி இருக்கும் இன்னொரு உணவகம் பற்றிய பதிவு விரைவில்...

Images copyright - madrasbhavan.com
.......................................................................  

.......................................
முந்தைய பதிவுகள்:


.......................................

   

Monday, May 20, 2013

பெரு'மால்' பெருமை - ஃபோரம் விஜயா

                                                     
                                                                 

கமலா தியேட்டர் எதிரே புதிதாக முளைத்திருக்கும் ஃபோரம் விஜயா மாலுக்கு 'ரெமோ' பாலகணேஷ்(மின்னல் வரிகள்) அவர்களுடன் நேற்று மட்ட மதிய நேரத்தில் விசிட். கோடம்பாக்கம்-வடபழனி உரசும் ஒரு சந்தினுள் இருந்து மெயின் ரோட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஷேர் ஆட்டோ ஓட்டியிடம் 'அண்ணே புது மால் எங்க இருக்கு' என்று கேட்க 'எதிர்லயே பப்பரப்பேன்னு நிமுந்து நிக்குது. கேக்குறான் பாரு கேள்விய..' எனும் முகபாவத்துடன் ஆள்காட்டி விரலை எதிர்ப்புறம் நீட்டினார். ஆத்தாடி எத்தே பெருசு!!

'பார்க்கிங் சார்ஜ் எம்புட்டோ?' என்று பதறியவாறு ரெமோ தமது டூ வீலருடன் உள்ளே நுழைய (சில நாட்களுக்கு மட்டும்) இலவசம் என்று கேள்விப்பட்டதும் பூரிப்பில் மிதந்தார். பாதாள தளத்தில் பொதுவாக பிக் பஜார் தான் எல்லா மால்களிலும் மளிகைக்கடைகளை விரிப்பது வழக்கம். ஆனால் இங்கு அவ்விடத்தை பிடித்திருப்பது இன்னொரு சூப்பர் மார்க்கெட். 'கடை பேரு என்னண்ணே?'... காவலாளி 'தெறக்க இன்னும் கொஞ்சம் நாளாகும். பேரு motion. வேல்ட் பேமஸ் கடைங்க' என்றார். 'என்னது மோஷனா?' புலம்பலுடன் பெயர்ப்பலகையை தேடிப்பார்த்தால் Auchan. ஸ்ஸ்..!!  ஆனால் நிஜமாகவே வேல்ட் பேமஸ் கடைதான். ஃபிரான்ஸை தலைமையிடமாக கொண்டு 12 தேசங்களில் வியாபாரம் செய்கிறார்கள்.
                                                                 
                                              'ரம்பைகள் ஹார்ட்டின் ரிங்டோன் ரெமோ' - பாலகணேஷ் 

செயற்கை பட்டாம்பூச்சிகள் மாலின் பல்வேறு இடங்களில் பதிந்திருக்க சிறப்பாக ஃப்ளோரிங் செய்திருக்கிறார்கள். உட்புற வடிவமைப்பில் சென்னையின் சிறந்த மால் என்று அடித்து சொல்லலாம். சோனி, சாம்சங், விவேக்ஸ், KFC மற்றும் சில விரைவில் உதயம். தரை மற்றும் முதல் தளங்களில் ஆர்.எம்.கே.வி.யின் இரு பிரம்மாண்ட ஷாப்கள். முதல் தளத்தில் ஆர்.எம்.கே.வி.யினுள் நுழைந்ததுமே நெற்றியில் விபூதியுடன் படுபவ்யமாக ஊழியர்கள் வணக்கம் போட்டு வரவேற்றனர். அருகிலேயே எலக்ட்ரானிக் கருவியின் உதவியுடன் புடவை நெய்து கொண்டிருந்தார் ஒருவர். படம் கீழே.
                                                            

தி.நகரில் புதிதாக காலடி வைத்த காலத்தில் பெயர்பெற்று விளங்கிய ஆ.எம்.கே.வி அதன்பின்பு போத்தீஸின் அசுர வளர்ச்சி மற்றும் அருகருகே உதயமான சரவணா பிரம்மாண்டம், ஜெயச்சந்திரன் ஆகியவற்றால் டல்லடிக்க ஆரம்பித்தது. ஆனால் தற்போது வேளச்சேரி ஃபீனிக்ஸ் மற்றும் ஃபோரம் மால்களில் தடம் பதித்து மறுமலர்ச்சிக்காக காத்திருக்கிறது.

ஆர்.எம்.கே.வி.அருகிலேயே Sportsxs. விளையாட்டு பொருட்களுக்கான பிரத்யேக ஷாப். அந்தக்கால கவாஸ்கர்/எம்.ஜி.ஆர் தொப்பி ரூ.600. மலையேறும் வீரர்களுக்கான டென்ட் ரூ.4999. இரண்டே நொடியில் டென்ட் அடித்து விடலாம் என்பது இதன் சிறப்பு. 

அடுத்து கண்ணில் தென்பட்டது Tambulya. ரிடர்ன் கிஃப்ட் ஷாப் என்று பெயரிப்பட்டு இருந்தது. 'அதென்ன ரிடர்ன் கிஃப்ட்?' என்று கல்லா பெட்டியாளை கேட்டால் '(தப்பித்தவறி) உங்களுக்கு கல்யாணம் ஆகுதுன்னு வச்சிக்கங்க...($%^& மேல சொல்றா) உங்களுக்கு நிறையே பேரு கிஃப்ட் கொடுப்பாங்க இல்லையா...(எனக்கு ஒரு சொந்தக்காரன் கூட இல்ல. நண்பன்னு சொல்லிட்டு திரியற பயலுக கூட 10 பேர் க்ரூப் க்ரூப்பா சேந்து 101 ரூவா/ 200 ரூவா கடிகாரம் ஒரே  கிஃப்ட்டா தந்துட்டு ஓடிருவானுங்க)....அவங்களுக்கு பதில் மரியாத மரியாத செய்ற மாதிரி நீங்க தர்றதுக்கு பேருதான் ரிடர்ன் கிஃப்ட் (அடங்கொக்க அடங்கொக்க மக்கா. ஒத்த தேங்கா, ரெண்டு கல்கண்டுக்கே வக்கில்ல. படுவா).'

அருகே இருந்த பட்டத்து யானை பொம்மையின் புட்டத்தில் ஒட்டப்பட்டிருந்த விலையை எட்டிப்பார்த்தால்...ராஸ்கோல் 13,500 ஓவாயாம்ல!!
                                                               

சரி. நம்ம ஏரியா எங்கே என்று மூன்றாவது தளத்தில் நுழைந்தால் சத்யம் தனது 9 திரைகள் கொண்ட வாயிலை அடைத்து 'சீக்கிரம் வாரோம்' என்று அறிவிப்பு செய்திருந்தது ஏமாற்றம். தூரத்தில் இருந்து பார்த்ததில் அரண்மனை லுக்கில் இழைத்து கட்டி இருப்பது கண்ணில் பட்டது. ஐமேக்ஸ் டிக்கட் விலை நிர்ணயம் செய்வதில் அரசுடன் பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருப்பதால் வேளச்சேரியிலும்  சத்யம் தியேட்டர்கள் திறப்பதில் தாமதம் ஆவதாக கேள்விப்பட்டேன்.

எக்ஸ்ப்ரஸ் அவின்யூவை  விட பல விதங்களில் சிறப்பாக இருக்கிறது இந்த  ஃபோரம் விஜயா மால்.சிறப்பான ஃப்ளோரிங், மித வேகத்தில் நகரும் எஸ்கலேட்டர்கள், விசாலமான நடைபாதைகள், கலர் சென்ஸுடன் அமைக்கப்பட்டிருக்கும் உட்புற அமைப்பு என ப்ளஸ்கள் அதிகம். ஃபோரம் ஃபுட் கோர்ட் பற்றிய பதிவை விரைவில் பகிர்கிறேன்!!

Image copyrights: madrasbhavan.com
........................................................

......................................
சமீபத்தில் எழுதியது:

நேரம் - விமர்சனம்
.....................................
Sunday, May 19, 2013

நேரம்


                                                             


சென்ற ஆண்டு கேரளத்தில் சக்கை போடு போட்ட தட்டத்தின் மறயத்து எனும் காதல் காவியத்தின் நாயகன் நிவின் நடித்த ஒரே காரணத்திற்காக நேரம் பார்க்க விரும்பினேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளம் என பக்கத்து ஸ்டேட் நாயகர்கள் தமிழில் தடம் பதிக்க பெரும் முனைப்பு காட்டி வரும் இந்நேரத்தில் இவரும் ஆஜர். கேரள முக அம்சம் எதுவுமின்றி (தென்) இந்தியாவின் பாய் நெக்ஸ்ட் டோர் இமேஜ் நிவினுக்கு மெகா ப்ளஸ். இயக்குனர், நாயகன் ஆகியோர் கேரள  நபர்கள் என்றாலும் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் தனித்தனியே படமெடுக்கப்பட்டிருப்பது இன்னொரு ஆறுதல்.

ஒரு நாளில் வெற்றிக்கு நடக்கும் சோதனைகள்தான் கரு. சென்னையில் வேலை தேடி அலையும் வெற்றியை கரம் பிடிக்க தேடி வரும் காதலி, வட்டிக்கு பணம் தரும் நபர், மச்சான் என அனைத்து திசையில் இருந்தும் நெருக்கடிகள் ஒரே நேரத்தில் சூழ்ந்து வர மதியால் வெல்கிறானா அல்லது விதியால் ஓட ஓட விரட்டப்படுகிறானா என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். 'பீட்சா' கார்த்திக் சுப்பராஜின் குறும்படமான ப்ளாக் & ஒயிட் குறும்படத்தின் எடிட்டர் இவர்தான்.

'குறையொன்றுமில்லை' என்று அடித்து சொல்லும் அளவிற்கு நிவின் இயல்பாக நடித்து பட்டினப்பாக்கம், மந்தைவெளி தெருக்களில் வியர்வை சிந்த வாழ்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம். 'காதல் என்னுள்ளே வந்த நேரம்' பாடலொன்று போதும்..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். காதலியுடன் பேசிக்கொண்டு இருக்கையில் தன்னை கடந்து செல்லும் பெண்ணைக்கண்டு சில நொடிகள் மெய் மறந்து பின்னர் சுதாரித்து விட்டு 'அவ மூஞ்சியே சரியில்ல' என நிவின் சொல்ல அதற்கு காதலியின் கேள்வி ..'நீ மூஞ்சா பாத்த?'. அப்போது வழிந்தவாறு நிவின் தரும் ரியாக்சன் இருக்கிறதே....கோடம்பாக்கத்தை ஆள வந்திருக்கும் இளவரசே வா!!  

காதலியாக நஸ்ரியா. வெள்ளிநிலா, வெண்ணிலா ஐஸ்க்ரீம், மலைத்தேன், மான்விழியாள் என்று ஆகச்சிறந்த வர்ணனைகளை எல்லாம் சேர்த்து ஒற்றை சொல்லில் அடக்கினால் 'நஸ்ரியா'. முதல் பாதி முழுக்க பப்ள் டாப் தண்ணீர் கேன் அளவிற்கு ஜொள் ஊற்றிக்கொண்டே படம் பார்க்க வைத்த கள்ளி!!
                                                                     

வட்டிராஜாவாக 'சூது கவ்வும்' புகழ் சிம்மா குர்குரே மீசையுடன் நெஞ்சைக்கவ்வ, தம்பி ராமய்யா, 'கட்ட குஞ்சு' ஜான் விஜய், 'ஆசம்' நாசர் மற்றும் குட்டி வில்லன்கள் அனைவரும் கச்சிதமான தேர்வு. பட்டினப்பாக்கம், மந்தைவெளி பகுதிகளில் குறைந்த பட்ஜெட்டில் மொத்தப்படத்தையும் கேமராவுக்குள் அடக்கி இருக்கிறார்கள். இரண்டு முறை துள்ளி விளையாடும் 'பிஸ்தா' பாடல் எகிறி அடிக்கும் வீச்சு பரோட்டா. 

'10,000 ரூபாய்க்கு வாங்கி இருக்க..பட்டனே இல்ல'(சிம்மா), 'சின்ன வயசுல சரவணன். மிடில் ஏஜ் ஆனதால இப்ப சரவணர்(தம்பி ராமய்யா) வசனங்கள் பின்னல். குறும்படம் பார்க்கும் ஃபீல் அழுத்தமாக இருப்பது ஒரு குறை என்பதை மறுப்பதற்கில்லை. இரண்டு மணி நேரத்திற்குள் படத்தை முடித்து இருப்பது ரிலீஃப்.

காதல் ரசம் சொட்டும் படங்கள் என்றாலே பொதுவாக எனக்கு அலர்ஜி. 'விண்ணைத்தாண்டி வருவாயா'..இன்னும் பார்க்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.அக்கொள்கையை தகர்த்தெறிந்து என்னை கவர்ந்திழுத்த 'தட்டத்தின் மறயத்து'விற்கு பின்பு தற்போது மனதை சுண்டி இழுத்திருப்பது இந்த நேரக்காதல் . 'காதல் என்னுள்ளே' பாடலை யூ ட்யூப்பில் பலமுறை கண்டும் சலிக்கவில்லை.   
   
நான் ஈ மூலம் தெலுங்கு இயக்குர் ராஜமௌலியும் , கன்னட நாயகன் சுதீப்பும் நம்மூர் ஃபேன்டசி சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தது போல கேரள வரவுகளான அல்போன்ஸ் புத்திரன், நிவின், நஸ்ரியா ஆகியோர் புது ட்ரென்ட் சினிமாவை கொண்டாடும் இளையோர்களால் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டு அரியாசனம் ஏற்றப்படுவார்கள் என்பது உறுதி.
................................................................

Friday, May 17, 2013

காசு, துட்டு, பணம், மணி, Money!!

                                                           
                                                               
                                       
ஆயிரம் போலிச்சாமியார்கள் கைது செய்யப்பட்டாலும் 'குனிஞ்சி நிமுருற நேரத்துக்குள்ள கூரைய பிச்சிக்கிட்டு தங்கம் கொட்ட வக்கிறேன். வாங்கோ' என்று இன்னொரு உடான்ஸ் சாமியார் அழைத்தால் அடித்து பிடித்துக்கொண்டு ஓடுவது நம்மாட்களின் இயல்பு. அதுபோலத்தான் இந்திய திருநாட்டின் க்ரிக்கட் ரசிகசிகாமணிகளும். தான் கெடுவதோடு/ஏமாறுவதோடு மட்டுமின்றி பிள்ளைகள், பக்கத்து வீட்டாரையும் சேர்த்துக்கொண்டு நேரத்தையும், பணத்தையும் விரயமாக்குவதில் அப்படி என்ன ஆத்ம திருப்தியோ? ஏற்கனவே ஃபிக்ஸ் செய்யப்பட ஆட்டத்தை பல்லை இளித்துக்கொண்டு சீட்டின் நுனியில் அமர்ந்து 'ஹேய்..ஹோய்' என்று ஆரவாரம் வேறு! 

90'களில் ஷார்ஜா கோப்பை க்ரிக்கட் போட்டிகள் நடந்து கொண்டிருந்தபோதுதான் இந்த மேட்ச் ஃபிக்சிங் தனது கோரமுகத்தை பரவலாக காட்டத்தொடங்கியது. எந்த அணி பங்கேற்க வேண்டும், யார் வெல்ல வேண்டும் என்பதை பலமுறை தீர்மானித்தது தாவூத் & கோ எனும் பரபரப்பான தகவல் க்ரிக்கட் உலகை சுற்றிவந்தது. சொல்லி வைத்தாற்போல ஷார்ஜாவில் பெரும்பாலும் பங்கேற்பது பாகிஸ்தானாகவே இருக்கும்.ஜென்டில்மேன்ஸ் கேம் என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட இவ்விளையாட்டு தற்போது அவமானத்தில் தத்தளிப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டதே ஷார்ஜாவில்தான்.

கோலெடுத்தால் ஆடும் குரங்கு போல தாவூத் அண்ணாத்தை இடும் கட்டளைகளை செவ்வனே செய்தது பாகிஸ்தான் அணி. இந்த சூதாட்டத்தின் உச்சகட்டமாக இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று உலக க்ரிக்கட் ரசிகர்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட முன்னாள் தென்னாப்ரிக்க அணி கேப்டன் ஹான்ஸி குரோன்யே மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக அளித்த ஒப்புதல் வாக்குமூலம். அதன்பின் விமான 'விபத்தில்(?)' அவர் இறந்தது. இன்னொன்று  பாகிஸ்தான் கோச் பாப் உல்மரின் படுகொலை. 
                                                       

சூதாட்டம் குறித்த பல தகவல்களை அறிந்திருந்த பாப் அது குறித்த ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கும் தருவாயில் இருந்த சமயமது(2007). புத்தகம் வெளியானால் மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து நிழல் உலகம் ஜமைக்கா ஓட்டலில் தங்கியிருந்த பாப்பை கொன்று போட்டது. அப்படியே அவர் எழுதிய ஆதாரங்களையும் அள்ளிக்கொண்டு மாயமானது. இதன் பின்னணியில் தாவூத் இருப்பது தெரிந்திருந்தும் இன்றுவரை அந்த வழக்கு ஒரு அடி கூட முன்னே நகரவில்லை. 

இந்நிகழ்வுகளை பார்த்த பிறகு க்ரிக்கெட் மீதிருந்த 10% மோகம் கூட என்னிடம் இருந்து அறவே ஒழிந்து போனது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல். ரூபத்தில் ஆசியாவில் தனது களியாட்டத்தை துவக்கின  அதிகார, பண மற்றும் சூதாட்ட மையங்கள். நம் நாட்டு இளிச்சவாய் ரசிகர்கள் மீண்டும் வாயை அகலமாக்கி ஸ்டேடியம்/டி.வி. முன்பு திரளாக குத்த வைக்க ஆரம்பித்தனர். 'யார் ஜெயிப்பார்கள்? இந்த பந்தில் அவுட்டா? சிக்ஸா' என்று நகத்தை விரலை கடித்து துப்பியவாறு பொழுதை வீணாக்கி கொண்டிருந்த வேளையில் 'அட கிறுக்குகளா' என்று கண்களை திறந்திருக்கிறார் ஸ்ரீசாந்த்.    
                                                                    

'என்ன எனது அணியில் ஊழலா? ஐயகோ. சட்டம் தன் கடமையை செய்யும்' என்று ராஜஸ்தான் அணியின் ஓனர் ஷில்பா சிலுப்ப, 'என்ன கொடும சரவணன். வெரி பேட். அதுக்காக ஐ.பி.எல். நடக்காம இருக்காது. ஸ்டார்ட் டுடேஸ் கேம். கெட்டி மேளம். கெட்டி மேளம்' என்று பி.சி.சி.ஐ ஜனாதிபதி ஸ்ரீனிவாசன் பட்டையை கிளப்ப...அப்படி போடு அருவாள.      

உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச்செய்ய ஏகப்பட்ட விளையாட்டுகள் இருக்க வெறும் 10 அல்லது 12 நாடுகள் ஆடும் சோட்டா விளையாட்டான க்ரிக்கெட் மீது கோடிக்கணக்கில் பணத்தை கொட்டும் அம்பானி, மல்லையா ப்ரீத்தி, ஷாருக் ஆகியோரின் நோக்கமென்ன? ஒரு ஓவரில் குறைந்தது 12 ரன்கள் தந்தால் 60 லட்சத்தை சோதா கிரிக்கெட் வீரருக்கு அள்ளித்தர  நிழலுலக தாதாக்கள் பேரம் பேசுவதன் பின்னணி என்ன? காசு, துட்டு, பணம், மணி, money.

இனி ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தருபவர் நேர்மையான பவுலராக இருந்தாலும் அவரை இவ்வுலகம் சந்தேகக்கண்களோடு பார்க்கத்தான் போகிறது. ஐ.பி.எல்லில் சாதாரணமாகவே ஓவருக்கு 10 ரன் அடிப்பது ஜகஜம். அதுவும் க்ரிஸ் கெயிலுக்கு பந்து வீசப்போகும் அப்பாவிகளை நினைத்தால் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.

இத்தனை தகிடுதத்தங்கள் நடந்தேறிய பின்பும் 'நாளைக்கி யார் யாருக்கு மேட்ச்?' 'இந்த மேட்ச்ல அவன் இல்லையாமே?' என்று விவாதிக்க போகும் இந்தியர்களுக்கா பஞ்சம். நீ பட்டைய கெளப்பு (தாவூத்) பாண்டியா!!
................................................................................   


                      

Wednesday, May 15, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (15/05/13)உடன்பிறப்பு: 
                                                                   

பீட்டர்ஸ் சாலையோரம் ஒரு காலை நேரம் எடுத்த புகைப்படம்.
......................................................................

மின்சார கனவு:
சென்னையில் சுழற்சி முறையில் 2 மணிநேர மின்வெட்டு அமலில் இருப்பது பலருக்கும் தெரியும். சென்ற மாதம் முழுக்க எங்கள் ஏரியாவில் மாலை 4-6 கட். எனவே இம்மாதம் காலை 8-10 கட் செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் மதியம் 12-2 நிறுத்தி விட்டார்கள். பாரிமுனையில் கடை வைத்திருப்பவர் ஒருவரிடம் பேசியபோது "அரசாங்க வேல செய்றவங்க காத்தால 8-10, 10-12 பவர் கட்டால கடுப்பாகறாங்களாம். அதனால இனிமே சென்னைல மதியம் 12-2, சாந்திரம் 4-6 மட்டும்தான்" எனும் தகவலை தந்தார். வாழ்ந்தா கவர்மண்ட் மாப்ளையா வாழனும். ஜிம்பலக்கடி பம்ப்பா!!
....................................................................

பட்டாபட்டி:
தமிழ்ப்பதிவர்களில் அரசியல் சார்ந்த விஷயங்களை 100% துணிவுடன் எழுதிய பதிவர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் பட்டாபட்டி. சுயபுராணம் போடாமல், ஜால்ராக்களை அண்டவிடாமல் காரசாரமாக எழுதி வந்தவர். குறிப்பாக நான் பதிவுலகில் நுழைந்த 2010 ஆண்டின் இறுதியில் பட்டையை கிளப்பி வந்தார். அவரது இழப்பு எமக்கு அதிர்ச்சிதான்.  நண்பரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
................................................................... 

மும்பை போலீஸ்: 
                                                         
                     

ப்ரித்விராஜின் மகுடத்தில் இன்னொரு வைரக்கல்லாக பதிந்திருக்கிறது இந்த மும்பை போலீஸ். சக போலீஸ் அதிகாரியும் நண்பனுமான ஆர்யன் (ஜெயசூர்யா) வீரச்செயல் விருது பெறும் வேளையில் அருகில் உள்ள  கட்டிடத்தில் இருந்து பாய்ந்து வரும் தோட்டாவால் பலியாகிறான். கடும் முயற்சி செய்து விசாரணை மேற்கொள்கிறான் ஆண்டனி(ப்ரித்வி). விசாரணையின் இறுதி கட்டத்தை நெருங்கும்போது ஏற்படும் விபத்தில் ஞாபக சக்தியை இழக்கிறான் ஆண்டனி. மீண்டு வந்து அவ்வழக்கை எப்படி முடிக்கிறான் என்பதுதான் கதை. கொலை செய்யப்பட விதம், கொலை செய்த நபர் யார் என்பதை சஸ்பென்ஸ் நிரம்ப சொல்லி இருக்கிறார்கள்.

கோபம்,நகைச்சுவை,சோகம் என அனைத்து தளங்களிலும் ப்ரித்வி...ஏவுகணை. படத்தில் ஒரு பாடல் கூட இல்லை. நாயகியும்தான். அதை ஒப்பேற்றும் விதமாக ப்ரிதிவியின் டீமில் இருக்கும் போலீஸ் அபர்ணா நாயர் 'கின்'னென்று  அவ்வப்போது வந்து செல்வது...கோடை கனமழை!! ரகுமான்,ரியாஸ்கான்  குஞ்சன் ஆகியோரும் 'உள்ளேன் ஐயா'. 

தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நாயகன் Gay வாக நடிக்க ஒப்புக்கொள்வது லேசுப்பட்ட காரியமா? அந்த இமேஜை எல்லாம் உடைத்து இப்படத்தில் நடித்ததற்கே ப்ரித்வியை தோள்தட்டி பாராட்டலாம். இதுபோக இன்னொரு உளுத்துப்போன ஹீரோயிசத்தையும் தகர்த்து எறிந்திருக்கிறார். அது என்ன என்பது டாப் சீக்ரெட். தியேட்டரில் பார்க்க. இவருடைய Gay தோழனாக வரும் இளைஞனின் உடல்மொழியும், உச்சரிப்பும் 100% Gay வைப்போலவே இருப்பது க்ளாஸ்.  

விறுவிறுப்பான ட்விஸ்ட்களுடன் ஒரு சிறந்த போலீஸ் ஸ்டோரியை தந்திருக்கும் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்...குட் வொர்க்!!
.................................................................    

தில்லுமுல்லு:
                                                          


ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உணவகங்கள் மற்றும் அதனுள் இருக்கும் சொகுசு தியேட்டர் கேன்டீன்களில் பெரும்பாலும் பணத்தை செலவழிப்பதில்லை நான். மலிவு விலையில்(?) தரமான உணவுகளை அவர்கள் தருவதால் கார்களில் வரும் ஏழைகள் சாப்பிடட்டுமே என்று ஒதுங்கி விடுவதுண்டு. சென்ற வாரம் சும்மா வேடிக்கை பார்க்கலாமே என்று எக்ஸ்ப்ரஸ் அவின்யூ ஃபுட் கோர்ட்டை சுற்றி வரும்போது கண்ணில் பட்டது படத்தில் உள்ள மெனு(ஹோட்டல் பொன்னுசாமி).ஆனியன் ராய்த்தா,கத்தரிக்காய் கொஸ்துவைக்கூட காம்போவில் சேர்த்த அபார வியாபார யுக்தியை என்னவென்று சொல்ல? இது பரவலாக பிற உணவங்களிலும் பின்பற்றப்படுவதை அடுத்தடுத்த நாட்களில் கண்டேன்.  

போகிற போக்கை பார்த்தால் காம்போ ஆஃபரில் ஒரு டம்ளர் குடிநீரை சேர்த்தாலும் ஆச்சர்யமில்லை. பேசாமல் நானும் ஒரு ஹோட்டலை துவங்கி வெறும் இட்லி 10 ரூபாய். காம்போ இட்லி(சாம்பார், சட்னியுடன்) 20 ரூபாய் என்று யாவாரம் செய்தாலென்ன? விலையை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் ஒரே அப்பு. கடைப்பெயர்: இட்லி குண்டா(ஸ்).  
.......................................................................

தலைநகரம்: 
ஸ்டாலின் சென்னை மேயராக இருக்கையில் அண்ணாசாலை போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடைபாதைகளின் அகலத்தை சுருக்கினார். மூன்று பேர் சேர்ந்தாற்போல நடந்து செல்லும் அளவிற்கு இருந்த அச்சாலை ஒற்றையடிப்பாதை ஆகிப்போனது. அதன்பின் ப்ளெக்ஸ் கலாச்சாரம் வெகு வேகமாக வளர்ந்து நடைபாதைகளையும் ஆக்ரமிக்க ஆரம்பித்தன. தற்போது நகரில் இருக்கும் சில பெரிய ரவுண்டானாக்களின் அகலத்தை அநியாயத்திற்கு சுருக்கி வாகன ஓட்டிகளுக்கு ஒத்தாசை செய்வது பலனை தருகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

குறைந்தது நான்கு தெருக்கள் பிரியுமிடத்தில் இருக்கும் ரவுண்டானாக்களை சுருக்குவதால் மேலும் சில வண்டிகள் அதிகமாக பயணிக்க ஏதுவாக இருக்கலாம். அத்துடன் அவற்றின் வேகமும் அதிகரிப்பதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அவ்விடத்தை கடக்கும் பாதசாரிகளுக்கும் பதற்றத்தை உருவாக்கி விடுகின்றன இம்மாதிரி சுருக்கல்கள். நந்தனம் சி.ஐ.டி. நகர் ரவுண்டானா சுருங்கிய பிறகு அவ்வப்போது நடக்கும் விபத்துகளுக்கு கீழுள்ள புகைப்படமும் ஒரு உதாரணம். அன்றைய தினம் மயிரிழையில் உயிர் தப்பினார் சைக்கிளோட்டி.    
                                                                   

...................................................................     

அதிரடிப்படை:
"அரசு தரும் விலையில்லா பொருட்கள், அரசு அலுவலகங்கள் என்று அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் முதல்வர் ஜெ அவர்களின் படத்தை டாஸ்மாக்கில் மட்டும் வைக்க மாட்டீர்களா? இன்னும் சற்று அவகாசம் தருகிறோம். புகைப்படத்தை மாட்டாவிடில் நாங்களே ஒவ்வொரு டாஸ் மாக்கிற்கும் சென்று முதல்வர் படத்தை மாட்டி விடுவோம்" என்று அண்ணி ப் ரேமலதா அதிரடி கர்ஜனை செய்திருப்பது அக்னி அனலை கிளப்பி இருக்கிறது. அநேகமாக அடுத்த முதல்வராக வரும் வாய்ப்பு கேப்டனை விட அண்ணிக்கு தான் பிரகாசம்!!
.............................................................   

இங்கிலீஷ்காரன்:
வாசகர்களின் வயிற்றை கலக்கும் விதமாக ஒரு deadly dangerous attempt செய்திருக்கிறேன்.பாம்பே டாக்கீஸ் -ஆங்கில விமர்சனம் என்னுடைய இன்னொரு தளத்தில். இறைவன் உம்மை ரட்சிப்பாராக..

............................................................

மனம் கொத்தி பறவை: 
"இந்தியா என் சகோதர நாடு. என்னை அழைக்காவிடினும் விரைவில் அங்கு செல்வேன். என் பதவி ஏற்பு விழாவிற்கு மன்மோகன் வரவேண்டும். வாருங்கள் ஒரு புதிய அத்யாயம் படைப்போம்"...போதும் நவாஸ் போதும். ஓவர் பாசம் ஒடம்புக்கு ஆகாது. முன்பு பதவியில் இருந்தபோது நீங்கள் காஷ்மீர் பிரச்னையில் செய்த சேட்டைகளை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? ஐந்து வருட நடிப்பை ஒரே ஷோவில் காட்டினால் எப்படி? பொறுமை எருமையை விட பெரிசு!!
.............................................................   

சிறைச்சாலை: 
படபடக்கும் ஆக்சன் சினிமாவிற்கு நிகராக எடுக்கப்பட்ட டாடா ஸ்கை டிஷ் ஆன்டனா விளம்பரத்தை சமீபத்தில் பார்த்து பிரமித்தேன். Simply Stunning.

காண க்ளிக் செய்க: டாடா ஸ்கை  
..................................................................

Image Copyrights: madrasbhavan.com
mumbai police image courtesy: GoogleSaturday, May 11, 2013

நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ


                                                           

நையாண்டி அரசியல் படங்கள் என்பதே தமிழ் சினிமாவில் அரிது. சத்யராஜ் போன்ற தனித்தன்மை வாய்ந்த நடிகர்களுக்கு மட்டுமே அம்சமாக பொருந்தும் அமாவாசை கேரக்டர்கள். கூட மணிவண்ணனும், கவுண்டரும் சேர்ந்தால் ரணகளம்தான். தாய்மாமன், அமைதிப்படை போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். சில வாரங்களுக்கு முன்பு கூட டி.வி.யில் அமைதிப்படையை இன்னொரு முறை ரசித்து பார்த்தேன். எப்போது இரண்டாம் பாகம் வெளிவரும் எனும் ஆவல் பல ரசிகர்களைப்போல் எனக்கும் இருந்தது ஆச்சர்யமில்லை. இரண்டாம் முறை நம் மனதில் அன்னபோஸ்ட் ஆக இக்கூட்டணி ஜெயித்ததா?

துணை முதல்வராக இருக்கும் நாகராஜ சோழன் எப்படி முதல்வரை கவிழ்த்து அந்த நாற்காலியை பிடிக்கிறார் என்பதுதான் கதை. வழக்கம்போல் இங்கும் அவரது வலதுகையாக மணி(வண்ணன்). மகனாக மணிவண்ணனின் மகன் ரகு. முந்தைய பார்ட்டில் போலீஸாக வந்த இளைய சத்யராஜ் இங்கே சி.பி.ஐ. ஆக பிரமோட்டட். மலைவாழ் மக்களின் உரிமைக்காக போராடுபவராக செந்தமிழன் சீமான். அவசரத்திற்கு கிடைத்த துணை நடிகைகளை சட்டென மேக்கப் போட்டு பட்டென கேமரா முன் நிறுத்தியதுபோல் ஒரு சில நாயகிகள்(!).

படத்தின் ப்ளஸ் என்ன என்பதை தேடிப்பார்க்கவே 2.30 மணிநேரம் ஓடிவிடுகிறது. ஒரு சில வசனங்களில் விஜயகாந்த், கருணாநிதி போன்றோரை தாக்கி உள்ளனர். மகளிரணி தலைமைக்கு எதற்கு ஒரு ஆம்பிளையை தேர்வு செய்ய வேண்டும் எனும் கேள்விக்கு 'இளைஞர் அணிக்கு கிழவங்க எல்லாம் தலைவர்  ஆகுறதில்லையா?' எனும் அதிரடி வசனம் ட்ரெயிலரில் இருந்தது. ஆனால் கிழவங்க  என்று சத்யராஜ் தியேட்டரில் பேசும்போது பீப் சவுண்ட். போங்கய்யா....  
                                                             
 
முதுமை/உடல்நலக்குறைவு காரணமாக மணிவண்ணன் பேசும் மிக மெதுவான வார்த்தை உச்சரிப்புகள் பரிதாபத்தை மட்டுமே வரவழைக்கின்றன. அமைதிப்படையில் இருந்து அப்படியே கொலை, ஆப்படித்தல், ஜால்ரா தட்டும் தொனி போன்ற முக்கிய அம்சங்களை லேசாக மாற்றிப்போட்டு புதிதாக எந்த ஒரு ஆச்சர்யத்தையும் தராமல் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார் இயக்குனர். 

ரகு மணிவண்ணன் அப்பாவின் தயவில் சில சீன்களில் வந்து போனாலும் 100% தயிர் சாத நடிப்பு மட்டுமே. கஸ்தூரி அல்மா கில்மா, சுஜாதாவின் சிறந்த குணச்சித்திர நடிப்பு, சத்யராஜ் vs சத்யராஜ் மோதல், விறுவிறுப்பான திரைக்கதை என பின்னி பெடலெடுத்த அமைதிப்படைக்கு முன்பு இப்படம் 10% கூட சுவாரஸ்யத்தை தராதது பெரும் பின்னடைவு. முந்தைய பாகத்தில் தனிப்பெரும்பான்மையில் ஜெயித்து பௌர்ணமியான நாகராஜ சோழன் இம்முறை டெபாசிட் இழந்து அமாவாசை ஆகிப்போனது துரதிர்ஷ்டம்.

அமைதிப்படைக்கு பின்பு ஒரு செம ரவுசான அரசியல் சப்ஜெக்ட் உள்ள தமிழ் சினிமா இனி எப்போது வரும் என்பது பெரிய கேள்விக்குறி. புதிது புதிதாக வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் கூட இது போன்ற ஒரு களத்தை தேர்வு செய்ய இதுவரை முன்வராதது வருத்தம்தான். இன்னொரு சத்யராஜ், மணிவண்ணன் டைப் கூட்டணி கோடம்பாக்கத்தின் கதவை எப்போது தட்டும் என ஆவலுடன் காத்திருக்கும்....அமாவாசை தாசர்களில் ஒருவன்!!
.......................................................Thursday, May 9, 2013

Shootout at Wadala

                                                               
         
70 & 80 களில் பாம்பேவை கலக்கிய தாதாக்களின் வரலாற்றை மையமாக கொண்டு ஹுசைன் ஜைதியால் எழுதப்பட்ட நூல்தான் டோங்ரி டு துபாய். ஹாஜி மஸ்தான் போன்ற பெரிய வஸ்தாதுக்களின் பிஸ்தாத்தனங்களை ஓரிரு நிமிடங்களில் கடந்துவிட்டு பாம்பேவின் முதல் அதிகாரபூர்வ என்கவுன்டரை பிரதானமாக வைத்து ஷூட் செய்யப்பட்டுள்ளது இந்த ஷூட் அவுட் அட் வடாலா. Shootout at Lokhandwala வின் ப்ரீக்வலான இப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல் மட்டும் 27 கோடி! 

'தேசி அர்னால்ட்' ஜான் ஆப்ரஹாமின் மிரட்டும் உடற்கட்டை ட்ரெயிலரில் கண்ட பிரமிப்பில் சென்ற வார இறுதியில் எஸ்கேப்பிற்கு எஸ்கேப் ஆனேன். கல்லூரியில் நன்றாக படிக்கும் மாணவன் மனோஜ். அவனுக்கொரு அழகிய காதலி வித்யா. தவறான வழியில் செல்லும் அண்ணனின் எதிரிகள் ஒருநாள் வீடேறி வந்து கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். அங்கு நடக்கும் களேபரத்தில் அண்ணன் எதிரி ஒருவனை கொன்றுவிட தவறேதும் செய்யாத மனோஜும் கைது செய்யப்படுகிறான். சிறையில் முனீர் எனும் சக கைதியின் உதவியால் அங்கிருந்து தப்பி பாம்பேயில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைக்கிறான் மன்யா சுர்வே(மனோஜ்). போலீஸ், மன்யா, ஹஸ்கர் பிரதர்ஸ் இடையே நடக்கும் ரத்த சரித்திரம்தான் கதை.  

'நடிப்பை தூக்கி பரண்ல போடு' என்று வழக்கம்போல இறுக்கமான முகத்துடன் படம் நெடுக ரெட்ரோ லுக்கில் நடமாடுகிறார் ஆஜானுபாகு ஜான். நாயகி கங்கனா ரனவத்துடனான அதி நெருக்கமான சீன்களில் கூட ஒரு துளி ரொமான்ஸ் இல்லை. ஜானின் தோழனாக துஸ்ஸார் கபூர். சிறையில் நடக்கும் அனைத்து தகிடு தத்தங்களையும் அறிந்து வைத்திருக்கும் கேரக்டர். ஆனால் முகத்தில் மட்டும் காம்ப்ளான் சொட்டுவது சிரிப்பு. பாம்பேவை கண்ட்ரோலில் வைத்திருக்கும் சகோக்களாக மனோஜ் பாஜ்பாய் - சோனு சூத் பார்ன் ஃபார் ஈச் அதர். போலீஸ் அதிகாரியாக அனில் கபூர் பாந்தமாய் பொருந்துகிறார்.  
                                                                   

'டால்பி அட்மாஸ்' ஒலியில் பலத்த எதிர்பார்ப்புடன் சீட்டில் அமர்ந்தால் பல இடங்களில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. மொத்தம் ஐந்து இசையமைப்பாளர்கள் என்பதால் ஆளுக்கொரு டம்ளர் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றினர். அவதார் போன்ற அட்ரா சக்க படங்களுக்குத்தான் இம்மாதிரி சவுண்ட் எபெக்டுகள் செட் ஆகும் என்பது 100% உண்மை. 'லைலா' பார்ட்டி பாடலில் கவர்ச்சி மழை கொட்டி சம்மர் ஹீட்டை விரட்டி அடித்திருக்கும் ஜிவ்வ் தேவதை சன்னி லியோன்...பாலிவுட்ல உன்ன யாரும் அசச்சிக்க முடியாது. அசச்சிக்க முடியாது.

வசனங்கள் ஆங்காங்கே நெத்தியடி. வளரும் தாதாவான ஜான் தனது சகாக்களுடன் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்திருக்கு அங்கு வரும் டாப் தாதா சோனு 'இது நாங்க ரிசர்வ் பண்ண எடம். சிங்கம் இருக்குற எடத்துல நாய்க்கு என்ன வேலை?. ஜானின் பதிலடி: 'நாய்ங்கதான் தன்னோட எடத்த ரிசர்வ் செய்யும். சிங்கம் தன்னோட ஏரியாவுல எங்க வேண்ணா உக்காரும்'.

இவர்களின் சண்டையை கண்டு பக்கத்தில் சீட்டில் இருக்கும் ஜென்டில்மேன் எகிறியவாறு: 'Waiter.What the fuck is this?' என்று அலம்ப இவர்களை சத்தம் போட வேண்டாம் என்கிறார் ஊழியர். அதற்கு ஜான்: 'நாங்க ஹிந்தில பேசுன அதே கெட்ட வார்த்தைய அவன் இங்க்லீஷ்ல பேசுனான். அதால அவன் உங்களுக்கு பெரிய ஆளா?'

துரோகம் செய்த குட்டி தாதா ஒருவனை ஜான் சுட்டுத்தள்ள அருகில் படபடப்புடன் நிற்பவனை பார்த்து 'நீ இவனுக்கு என்ன வேணும்?' என்று கேட்பதற்கு வரும் பதில்: 'பாடிகார்ட்'.         

நிறுத்தி கதை சொல்வதை ஒரு பொருட்டாக கொள்ளாமல் 1980 களின் டிபிக்கல் ஹீரோ vs  தாதா மோதல், காதல், கொஞ்சம் ஹெவி செக்ஸ், டெம்ப்ளேட் பாடல்கள் போன்றவற்றை பாலீஷான ஒளிப்பதிவின் துணை கொண்டு ஜகஜ்ஜாலம் செய்ய முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சஞ்சய் குப்தா. 

ஆகமொத்தத்தில் இது ஒரு ஆவரேஜ் பாப்கார்ன் என்(கவுன்)டர்டெய்னர்!!
...............................................................................

.........................................
சமீபத்தில் எழுதியது:
........................................Wednesday, May 8, 2013

Bombay Talkies

             
                                        
     
இந்திய சினிமாவின் 100 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்க எடுக்கப்பட்டிருக்கும் புதிய முயற்சிதான் இந்த பாம்பே டாக்கீஸ். கரன் ஜோ ஹர், ஜோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, அனுராக் காஷ்யப் ஆகிய நான்கு இயக்குனர்களின் அரை மணி நேர (குறும்)படங்களை ஒரே பேக்கேஜாக தந்துள்ளனர். க்ளாஸ்ஸிக்  சினிமா ரசிகர்களால் தவிர்க்க முடியாத படமாக இருப்பதற்கு இது ஒன்றே முக்கிய காரணமாக ஆகிப்போனது. நான்கிற்கும் தனித்தனி டைட்டில் கிடையாது. அனைத்து கதைகளுக்குமான ஒரே ஒற்றுமை 'சினிமா'. 

கரன் ஜோஹர்: பாலிவுட் விக்ரமன் கரனின் 'கே' சீரிஸ் குடும்ப படங்கள் என்றாலே எனக்கு திகட்டிக்கொண்டு வரும். ஆனால் அந்த இமேஜில் இருந்து வெளிவந்து துணிச்சலாக ஒரு சப்ஜெக்டை கையிலெடுத்து இருக்கிறார். தனியார் டி.வி.யில் political analyst ஆக வேலை பார்க்கும் ரந்தீப் ஹூடாவின் மனைவி ராஜி முகர்ஜி. மும்பை மசாலா எனும் சினிமா பத்திரிகையில் வேலை செய்பவர். அங்கு புதிதாக வேலைக்கு சேரும் சகிப் அவருடன் நட்பு பாராட்டுகிறான். 

சகிப் ஒரு Gay என்பதை உணர்ந்து அவனை வெறுக்கும் ரந்தீப் ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி சகிப்பிற்கு லிப் டு லிப் அடிக்க(தியேட்டரில் யூத் கேர்ள்ஸ் பக்கமிருந்து என்னா க்ளாப்ஸ்!!) குடும்பத்தில் விரிசல். இறுதியில் ஒரு எமோஷனல் என்டிங். மூவரின் நடிப்பும் ஸோ ஹாட். ரந்தீப் ஒரு படி மேலே. 'கழுத்துல மங்கள சூத்ரம். கண்ல காம சூத்ரம்' 'Your husband kissed me last night' என ராணியை பார்த்து சகிப் பேசுமிடங்கள் செம 'கரன்'ட். 

திபாகர் பேனர்ஜி: சினிமாவில் தோற்றுப்போய் பிஸினசிலும் தடுமாறி வரும்  கீழ்தட்டு நபராக நவாசுதீன் சித்திக்கி. திரைப்பட கதைகளை சொல்லி தன் செல்ல மகளை உறங்கச்செய்வது நவாசின் தலையாய கடமைகளுள் ஒன்று. பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் வாட்ச்மேன் வேலை தேடி செல்கிறார். அங்கும் தோல்விதான். அருகாமையில் ரன்பீர் கபூர் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க வேடிக்கை பார்க்கும் நவாஸை ஒரு சில நிமிடங்கள் நடிக்க அழைக்கின்றனர். 

'மிகப்பெரிய' வசனத்தை ஒத்திகை செய்து ஒரு வழியாக 'ஷாட் ஒகே' வாங்கிவிட்டு வீட்டிற்கு ஓடோடி வருமிவர் என்ன செய்கிறார் என்பது நெகிழ்ச்சியான கவிதை. சற்றே மெதுவாக நகரும் இக்குறும்படம் நவாசினால் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளது.
                                                          

ஜோயா அக்தர்: நடுத்தர குடும்பத்தில் கண்டிப்பான தந்தையின் வாரிசாக சிறுவன் நமன். கால்பந்தில் பயிற்சி எடுக்க சொல்லி தந்தை வற்புறுத்தினாலும் இவனது நினைவு முழுக்க கத்ரினா கைப் தான். பெண்களைப்போல் உடை அணிந்து நடனமாட வேண்டும் எனும் அவனது கனவு எத்திசை நோக்கி சென்றது என்பதுதான் கதை. க்ளாமர் உடையில் குறும்பு கொப்பளிக்க நமன் காட்டும் முகபாவங்கள் அனைத்தும் சோ ச்வீட்.

அனுராக் காஷ்யப்: நான்கில் என்னுடைய பேவரிட் என்றால் அனுராக்கின் இந்த படைப்புதான். தந்தையின் இறுதி ஆசை நிறைவேற முரப்பா(குலாப் ஜாமூன் டைப்) எனும் தின்பண்டத்தை ஒரு ஜாரில் ஏந்திக்கொண்டு உ.பி.யில் ரயிலேறி மும்பை வரும் இளைஞன் விஜய்யின் கதை. அமிதாப்பின் தீவிர ரசிகரான தந்தை இடும் கட்டளை இதுதான்: 'அமிதாப் முரப்பாவை பாதி சாப்பிட்டு விட்டு தர வேண்டும். அதன் மீதியை எனக்கு கொண்டு வா'. நித்தம் அமிதாப் வீட்டு வாசலில் அவரைக்கான காத்திருக்கிறான் விஜய். தொடர்ந்து ஏமாற்றம்தான் மிச்சம்.

ஊருக்கு திரும்ப ரிட்டன் டிக்கட் எடுத்த நாள் நெருங்க நெருங்க பதட்டம் கூடுகிறது. செக்யூரிட்டி காலில் விழுந்து எப்படியேனும் காரியம் சாதிக்க முயல்பவனின் முயற்சி என்ன ஆனது என்பதை வெகு சுவாரஸ்யமாக காட்சிபடுத்தி இருக்கிறார் அனுராக். தம்மாத்தூண்டு இனிப்பு பண்டத்தை வைத்து இவ்வளவு சிறப்பாக ஒரு குறும்படம் எடுத்திருக்கும் அனுராக்..யூ ஆர் ராக்கிங் பய்யா!!

இந்நான்கு படங்களிலும் சிறப்பான நடிப்பை தந்தது விஜய் கேரக்டராக வரும் வினீத் குமார்தான். பாலிவுட் ஸ்டாரைக்காண வெவ்வேறு ஊர்களில் இருந்து மும்பைக்கு வரும் அப்பாவி ரசிகர்களின் ஏக்கத்தையும், தந்தையின்  ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் எனும் பரிதவிப்பையும் வினீத் ஒவ்வொரு நொடியும் வெளிப்படுத்தும் போதெல்லாம் நாம் திரைப்படம் பார்க்கிறோம் எனும் உணர்வையே மறக்கடிக்க செய்கிறார்.
                                                             

அமித் த்ரிவேதியின் இசையில் அனைத்து பாடல்களும் அட்டகாசம். முதல் குறும்படத்தில் யாசகம் கேட்கும் சிறுமி  லதா மங்கேஷ்கரின் சூப்பர்  ஹிட்டான 'அஜீப் தஸ்தன் ஹை யே' பாடும்போது நெஞ்சத்தை கிள்ளியதே. தியேட்டரில் அனைவரையும் வசீகரித்த இப்பாடல் இணையத்தில் ஆடியோ வடிவில் கூட கிடைக்காதது வருத்தமே. இறுதியில் சல்மான், ரன்பீர் தவிர்த்து பல்வேறு பாலிவுட் ஸ்டார்கள் 'ஓம் சாந்தி ஓம்' பாணியில் ஆடிப்பாடும் Tribute பாடல் சம்மர் தீபாவளி!! அப்பாடலைக்காண க்ளிக் செய்க:  'அப்னா பாம்பே டாக்கீஸ்'.

சினிமாவை கொண்டாடும் ரசிகனை ஆராதிக்கும் இந்த 'பாம்பே டாக்கீஸ்' பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் - Worth Watching Yaar.
.........................................................................
                                                                      

Saturday, May 4, 2013

கோடை நாடக விழா - சத்திய வாக்கு

                                                             

வருடா வருடம் ஏப்ரல் இறுதியில்  கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் நடத்தும் கோடை நாடக விழா மிகப்பிரசித்தி பெற்றது. நித்தம் ஒரு புதிய நாடகம் அரங்கேறுவது இதன் சிறப்பு. கடந்த ஞாயிறு அன்று கேங் லீடர் பாலகணேஷ்(மின்னல் வரிகள்),   சின்ன பகவதி சீனு(திடங்கொண்டு போராடு), லேட்டஸ்ட் ஆடு ரூபக் ராம்(கனவு மெய்ப்பட)  ஆகிய பதிவர்களுடன் ஸ்ரீ ராஜ மாதங்கி கிரியேஷன்ஸின்  சத்திய வாக்கு எனும் நாடக அரங்கேற்றம் காண நாரத கான சபாவை முற்றுகை இட்டேன். 

நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து மொத்த அரங்கையும் நிரப்பி இருந்தனர். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சத்திய வாக்கு? பார்க்கலாம். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதராக பணிபுரியும் விஸ்வநாதர்தான் (ரவிகுமார்) நாடகத்தின் நாயகன். இவரது தந்தை உமாசங்கர் தீட்சிதர்(வாசுதேவன்),  மனைவி கலக்டர் கற்பகம்(லட்சுமி), அத்தை காமாட்சி(காவேரி), அரசியல்வாதி தர்மராஜனாக ராஜாமணி. புனைப்பெயர் மதுரை ஜடாவல்லபன். வசனம், இயக்கம் இரண்டும் இவரே.         
                                                                      

தீட்சிதர்களுக்கு இடையே நடக்கும் அரசல் புரசல்களுடன் முதல் காட்சி துவங்க 'அட. சிதம்பரம் தீட்சிதர்கள் பிரச்னை குறித்த அரசியல் நாடகம் போல' என்று ஆவலுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடுத்த காட்சியில் மூலவர் அர்ச்சனை நடக்கும் இடத்தை அற்புதமாக செட் போட்டு பலத்த கைத்தட்டலை அள்ளினார் பத்மா ஸ்டேஜ் கண்ணன். என் நாடக அனுபவத்தில் பார்த்த செட்களில்  இதுவரை இதுதான் டாப். நாம் கோவிலில் இருப்பது போன்ற உணர்வைத்தரும் வண்ணம் ஒளி அமைப்பும் கச்சிதம். கண்ணனின் கலைக்கு எழுந்து நின்றே கைதட்டலாம். 

விச்சுவின் (விஸ்வநாதர்) பால்ய நண்பரான தர்மராஜன் ஒரு யதார்த்தமான(!) அரசியல்வாதி. தனது நண்பரை வீட்டிற்கு அழைத்து கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள கோவில் சிலையை அபகரித்து வருமாறு வற்புறுத்த 'இது உனக்கே அடுக்குமா' என்று மறுக்கிறார் விச்சு. ஆனாலும் விடாமல் நச்சரிப்பு தொடர்கிறது. அவ்வப்போது தர்மாவை விச்சு சந்திப்பதால் அவரது வீட்டில் மனைவி(கலக்டர்) மூலம் ஏகப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே ஆருத்ரா தரிசனத்தன்று கலக்டரை தீர்த்துக்கட்ட தர்மா திட்டம் போட இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் கதை. 
                                                               
                                                                           ராஜாமணி, ரவிகுமார்

முன்பொரு காலத்தில் பொதிகை சேனலில் கலக்கிய செவ்வாய்கிழமை இரவு 7.30 மணி ட்ராமாக்கள் நினைவிருக்கிறதா? அப்போது வெற்றிகரமாக வலம் வந்த நடிகைகளில் காவேரியும் ஒருவர். தோற்றத்தில் சற்று மாற்றம் இருந்தாலும் குரல்வளம் அப்படியே. வழக்கபோல புலம்பித்தள்ளும் ஆத்துக்காரி வேடம்தான். ஆனால் சிறந்த நடிப்பு. இன்னொரு புகழ்பெற்ற நடிகையான லட்சுமிக்கு இம்முறை யானைப்பசிக்கு சோளப்பொறி. தர்மராஜனாக ராஜாமணி கனகச்சிதம். பத்திரிகை நிருபராக காவி வேட்டியில் வரும் ஜெயராமன் 'சென்னை தண்ணில தொவச்சி தொவச்சி வெள்ளை வேட்டி தானாவே காவி கலராயிடுச்சி. நான் சாமியார் இல்லை' வசனம் புன்முறுவல் பூக்க வைக்கிறது.

நாடக நாயகன் ரவிகுமார் பற்றி சொல்ல வார்த்தைகள் ஏது? அடங்கப்பா. வியட்நாம் வீடு, மிருதங்க சக்ரவர்த்தி, திருமால் பெருமை சிவாஜிகளை சேர்த்து செய்த கலவை இவர். ஒவ்வொரு சீனிலும் 'அய்யய்யோ இது கடவுளுக்கே அடுக்காது. நான் நல்லவனுங்கோ' என்று குதிகாலில் நின்று எதிரில் நிற்கும் நடிகர்களிடம் கைகூப்பி பேசும் சோக வசனத்தால் நம்மை உக்கிரத்தின் உச்சிக்கே அழைத்து செல்கிறார் மனிதர்.     
                                                           

'இவரோட இம்ச தாங்கல. இன்டர்வல் போடுங்கப்பா' எனும் முனகல்கள் சிலரிடம் இருந்து. நானும் அவ்வாறே அலற நேர்ந்தது. ஒரு சில நாடகங்கள் இடைவேளை இன்றி கூட 2 மணிநேரம் தொடர்ந்து நடப்பதுண்டு. அந்த பயம் வேறு நெஞ்சைக்கவ்வ நடராஜர் புண்ணியத்தில் இடைவேளை போட்டதும் உயிர் வந்தது. ஆசவாசப்படுத்த வெளியே சென்ற பொழுது 'குறுக்கு வழியில் ட்ராஃபிக் ஜாம்' நாடக நடிகர் கார்த்திக் பட் ஹாய் போட சிறிது நேரம் உரையாடிவிட்டு....பேக் டு தி பெவிலியன்(தட் மீன்ஸ் ரவிகுமார்ஸ் டெட்லி  ஸ்டான்ட்).

அதன்பின்பும் புலம்பல் வசனங்கள், ரவியின் ஓவர் ஆக்டிங் நமது பொறுமையை ஏகத்துக்கும் சோதித்தது. ஓரளவேனும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய படைப்பு நீளமான, பலமுறை கேட்டு புளித்த வசனங்களால் டுமீல் ஆகிப்போனது.'குலச்செடில விஷச்செடி சேந்துருச்சி', கலாச்சாரம் குல ஆச்சாரம்' டைப் டயலாக்குகள்...ஸ்ஸ்!!  இது போதாதென்று 'டேய் தர்மா தீட்சிதர்னா அப்பாவின்னு நெனச்சியா. இப்ப பாரு என் கோவத்த' என்று விச்சு கோபக்கனல் வீசி ஒற்றைக்காலில் ருத்ரதாண்டவ போஸ் தந்து இளகிய மனம் கொண்ட ரசிகர்களை)?) கிலியேற்றுகிறார். அத்தோடு விட்டார்களா? அவர் முகத்தில் சிகப்பு விளக்கை பாய்ச்சி அதற்கு சோடியாக பீதியான ஒலியை கிளப்பி பார்ப்போரை பதற வைக்க பகீதரப்பிரயத்தனம் பட்டாலும் என்ன பிரயோஜனம். சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது!!

சென்னை அக்னி நட்சத்திர வெயிலில் செருப்பின்றி 20 கிலோ மீட்டர் நடக்கும் கொடூரத்திற்கு சவால் விடும் வகையில் ரவியின் 'குடுத்த காசுக்கு மேல' கூவல் நடிப்பு முடிந்து சுபம் போட்டபோது அண்டார்டிகா பனிக்கட்டியில் ஆடையின்றி அமர்ந்து குளிர்ச்சியை தந்ததடா தாண்டவக்கோனே.

மேடைக்கு பின் புறம் சென்று வழக்கபோல் நடித்தவர்களை பாராட்டும் வைபவம் துவங்கியது. அங்கே புகழ்பெற்ற நாடக நடிகர் 'மேனேஜர்' சீனா, திரைப்பட நடிகர் 'எஸ் க்யூஸ்மி மிஸ்டர் பிள்ளைவாள்' புகழ் வி.எஸ். ராகவன் ஆகியோர் தென்பட்டனர். 

அங்கேயும் என் ரத்த கொதிப்பை ஏற்ற ஒரு ரசிக சிகாமணி வந்து சேர்ந்தார். ரவிகுமாரை பார்த்து 'டேய்..நாடக நடிப்பாடா இது?' என்று அவர் குரலெழுப்ப 'அப்பாடா..நாம கேக்க வேண்டிய கேள்விய இவராவது கேட்டாரே' என்று புளகாங்கிதம் அடைந்தால் அந்த நல்லவர் அடுத்து சொன்னது:

"காவியம் படச்சி இருக்கேடா ரவி".

(இன்னொரு தடவ நீர் என் கண்ல படும் ஓய்) அன்னாரின் நெக்குருகலை விஞ்சும் வகையில் ரவி மீண்டும் குதிகால் தூக்கி கைகூப்பி வணங்க ஆரம்பிக்க.. டேய் சிவா எட்றா ஓட்டம்!!!
....................................................................


................................................
சமீபத்தில் எழுதியது:................................................   


   

Friday, May 3, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (03/05/13)


சேட்டை: 
                                                               

மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டர் அருகே எடுத்த புகைப்படம். தில்லுமுல்லு படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் வீட்டில் மீசையில்லா ரஜினி அமர்ந்திருக்கும்போது சிறுவன் கட்டபொம்மன் அவரைப்பார்த்து 'நீ எம்.ஜி.ஆர் இல்ல. நம்பியாரும் இல்ல. ஏதோ எம்.ஆர்.ராதா வேல பாக்கற' என்பான். அதுபோல 'ஜாதி இருக்கு ஆனா இல்ல' என்று அரசாங்க தெருப்பலகை என்னமா ஈயம் பூசுது.
...........................................................................

கற்றது தமிழ்: 


'இலக்கிய சிந்தனை' விருதுபெற்ற பாரத ரத்னா எனும் நாடகத்தை தி.நகர் ஒய்.ஜி.பி. ஆடிட்டோரியத்தில் பார்த்தேன். சௌம்யா குழுவினரின் படைப்பான இதில் தமிழாசிரியார் ராமச்சந்திரனாக கரூர் ரங்கராஜன், அவரது மகன் ப்ரித்வியாக வெங்கட், இன்ஸ்பெக்டர் அருணாக ஜெயசூர்யா, கலெக்டர் பஞ்சாபகேசனாக முத்துகுமார், எம்.எல்.ஏ. வாக சுந்தர் மற்றும் சிவநேசன் செட்டியாராக டி.வி.ராதாகிருஷ்ணன்(இயக்குனரும் இவர்தான்).

மாசற்ற தமிழாசிரியர் ராமச்சந்திரன் ஒரு முறை பள்ளியில் எம்.எல்.ஏ பேத்தியை கண்டிக்க அவள் மயங்கி விழுகிறாள். 'எனக்கு சாதகமாக சில காரியங்கள் செய்தால் நல்லது. இல்லாவிடில் உம்மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்வேன்' என எம்.எல்.ஏ மிரட்டல் ஒருபுறம், வேலைக்கு அலையும் மகனுக்கு சிபாரிசு செய்யாமல் தடுக்கும் கவுரவம் மறுபுறம். எப்படி மீள்கிறார் என்பதை மேடையில் காண்க.

தமிழாசான் வேடத்திற்கு மிகப்பொருத்தமாக தேர்வு ராமச்சந்திரன். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் இருப்பதாக கூறினார். கலெக்டர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் இவரது முன்னாள் மாணவர்கள் என்று கூறி அன்பு பாராட்ட நமக்கு 'பள்ளிக்கூடம்' படம் பார்த்த உணர்வு. எம்.எல்.ஏ. சுந்தரின் நடிப்பு இழுவை. இயக்குனர் நகைச்சுவையாக நடிக்க கஷ்டப்படுகிறார். ஆங்காங்கே உச்சரிப்பு பிழைகள். நாடகம் முடிந்து அவர்களிடம் இதை சுட்டிக்காட்டியபோது 'இறுதி நேரத்தில்தான் அரங்கம் கிடைத்தது. அவசர ஒத்திகை. அதான்' என்றனர். 

'பல பாரத ரத்னாக்களை உருவாக்கும் உங்களைப்போன்ற ஆசிரியர்களுக்கு எதுக்கு சார் பாரத ரத்னா விருது. நீங்கள் எல்லாருமே பாரத ரத்னாக்கள் தான்' என்று தங்கள் ஆசானை கௌரவிக்கின்றனர் கலெக்டரும், இன்ஸ்பெக்டரும். அதீத பொறுமை இருந்தால் தாராளமாக பார்க்கலாம்.
.....................................................................

தில்லாலங்கடி:
பிற மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களை சென்னையில் ஏன் சத்யம் பல அடிகள் முன்னே இருக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இது. ஃபவுன்டைன் ரக கோக்கை மினி, மீடியம், லார்ஜ் என்று தனித்தனியே சத்யம் கேன்டீனில் விற்கிறார்கள். தனியாக படத்திற்கு செல்வோருக்கு மினிதான் முதல் சாய்ஸ். சென்ற வாரம் பி.வி.ஆர். சென்றபோது இடைவேளையில் 'மினி பெப்ஸி குடுங்க' எனக்கேட்டால் கிடைத்த பதில் 'சாரி சார். மீடியம்தான் இருக்கு. காம்போ பேக் வாங்குனாதான் மினி'. 'பரவாயில்லை. காம்போ வாங்கிக்கலாம்' என நண்பர் வலியுறுத்த நான் செவிசாய்க்கவில்லை. 'அவன் யாரு நம்ம சாப்புடற பொருளை தீர்மானிக்க?' என்று மறுத்துவிட்டு எதுவும் வாங்காமல் மீண்டும் படம் பார்க்க சென்று விட்டேன்.  
...................................................................

போக்கிரி ராஜா: 
அஜ்மல் கசாப்பிறகு இந்தியா மரண தண்டனை தந்ததால் கடும் கோபத்தில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளின் நிர்பந்தத்தின் பேரில் பாகிஸ்தான் சரப்ஜித் சிங்கை தீர்த்து கட்டி விட்டது எனத்தெரிகிறது. குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் குற்றம் சாட்டப்பட்டவரை திடுதிப்பென தூக்கில் ஏற்றுவது காங்கிரஸ் அரசின் ஸ்டைல் என்றால், அதைவிட சற்று டெர்ரராக சிந்திப்பது பாகிஸ்தான் ஸ்டைல். இவர்களது அரசியல் ஆட்டங்களுக்கு பலியாகும் அப்பாவிகள் பாவம். குறிப்பாக அவர்களது குடும்பத்தினரை ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வைத்து இறுதியில் இப்படி அழவிட்டு வேடிக்கை பார்ப்பது மகா கேவலம்.
...................................................................

முகமூடி: 
பிலிம்பேர் விருதுக்கு இணையாக தமிழகத்தில் 'நாங்கள்தான்' என்று விஜய் அவார்ட்ஸ் குழு நம்பிக்கொண்டு இருக்கிறது போலும். முதல் ஓரிரு ஆண்டுகள் வெற்றியாளர்களை சிறப்பாக தேர்வு செய்து பெயர் பெற்றாலும் அதன் பின் தரப்பட்ட விருதுகளைக்கண்டு விஜய் அவார்ட்ஸ் பார்க்கும் ஆவல் குறைய ஆரம்பித்தது. ஃபேவரிட் வகையில் ஒருபுறம் தங்கள் அபிமான ஸ்டார்களை மக்கள் தேர்ந்தெடுக்க, மறுபக்கம் க்ரிடிக்ஸ் சாய்ஸ் என்று நடுவர்களின் தேர்வு. 

அப்படி செய்தால்தானே அஜித், விஜய், சிம்பு, தனுஷ் என எல்லாருக்கும் விருது தந்து சகல தரப்பினரையும் திருப்தி படுத்தலாம். இது போக ரக ரகமாக புதுப்புது பெயரில் விருதுகள். இவ்வாண்டு சிறந்த நடிகைக்கான போட்டியில் ஹன்சிகா வேறு இருக்கிறார். எல்லாம் கடந்து போகுமடா.......
.................................................................    

சும்மா நச்னு இருக்கு: 
சீன ஊடுருவல், விலைவாசி ஏற்றம், இமாலய ஊழல், சுப்ரீம் கோர்ட் கண்டனங்கள் என எத்தனை பவுன்சர்கள் போட்டாலும் அசராமல் இருக்கும் பிரதமரை பெற என்ன தவம் செய்தோமோ? அண்ணாத்தையை பார்க்கும்போது வடிவேலின் நகைச்சுவை அடிக்கடி எண்ணத்திரையில் வந்து போகிறது:

'ஏ.கே.ஆண்டனி சார். உங்கள பாக்க சீன தூதர் வந்துருக்கார்'

மன்மோகன்: 'ஆண்டனி...ஒரு வாரம் சும்மா இருக்கணும். சும்மா இருக்கறதுன்னா சும்மாவா?'

'ராகுல் ஜி..தமிழ்நாட்ல காங்கிரஸ் அதல பாதாளத்துல தொங்கிட்டு இருக்கு. நீங்கதான் காப்பாத்தணும்'

மன்மோகன்: 'பப்லு...போகோ பாக்கறதோட சரி. சும்மா இரு. தானா நடக்கும்'
............................................................    

தேன் மழை: 
'நான் ஆணையிட்டால்' படத்தில் டி.எம்.எஸ்.ஸின் வசீகர குரலில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் 'நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்'. எம்.ஜி.ஆரின் மெஜஸ்டிக் திரையாள்கையும், ஆடைத்தேர்வும் பாடலுக்கு பக்க பலம். என்ன சரோஜா தேவி மாடர்ன் உடைகள் போட்டுக்கொண்டு ஆடுவதையும் சேர்த்து  பார்க்கும் இன்னலுக்கு ஆளாயினர் அக்கால ரசிகர்கள். நீங்களும் பார்க்க:


'சரோசா'

'என்ன டெய்லர்?'

'டான்ஸ் ஆடறியா?'

'ஆமா டெய்லர்'

'ஆடு ஆடு'     
...........................................................................................................
சமீபத்தில் எழுதியது:

................................................. 

Related Posts Plugin for WordPress, Blogger...