நடிப்பிற்கு சாவித்ரி, நடனத்திற்கு பத்மினி, ஆளுமைக்கு பானுமதி.ஆனால் இவையனைத்தையும் உள்ளடக்கி அழகிலும் அடித்துக்கொள்ள ஆளின்றி தமிழ் சினிமாவின் முழுநிலவாக திகழ்ந்தவர் மேடம் ஜெ. கே.ஆர்.விஜயா போன்றவர்கள் மாடர்ன் உடைகளணிந்தும், சரோஜா தேவிகள் 'நானும் நடனம் ஆடுகிறேன். பாருங்க கோப்பால்' என்று ரசிகர்களின் உயிரெடுத்த பதட்டமான கால கட்டங்களையும் தாண்டி வந்திருக்கிறோம். எந்த உடை அணிந்தாலும் பாந்தமாக பொருந்திக்கொள்ளவும், நேர்த்தியாக நடனக்கலையை வெளிப்படுத்தவும் அருள் வேண்டும். அது இவருக்கு போதுமென்ற அளவிற்கு இருந்ததென்பதில் ஐயமில்லை. தட் இஸ் ஜெ!!
எம்.ஜி.ஆர். ஸ்தோத்திரம் பாடும் நாயகிகள், 'ஏன் ராமு இப்படி எளச்சிட்ட' என்றுருகும் (சினிமா) அம்மாக்கள், 'முதல் சம்பளம் வாங்கினதும் எனக்கு ஒரு டசன் குருவி ரொட்டிண்ணே' எனக்குழையும் தொங்கச்சி கேரக்டர்கள் வாழ்ந்த காலத்தில் 'ஏய் ஸ்டுபிட்..ஆளப்பாரு' என்று தலைவரை எதிர்த்து போல்ட் & பியூட்டிபுல் வசனங்களை பேசியது இவரைத்தவிர எவருமில்லை. அரசியலாற்றில் கலந்த பின்பு உடன்பிறந்த துணிச்சலும், எதிர்பாராத முடிவெடுக்கும் பாங்கும் கூடவே பிரயாணப்பட்டன. புரட்சித்தலைவி மூன்றாம் முறை முதல்வரான பின்பு எப்படி நகர்கிறது ஆட்சித்தேர்?
இலவசங்களை அள்ளி இறைத்து தமிழ் மக்கள் நெஞ்சில் லீசுக்கு குடியிருக்கும் கலைஞர் டெக்னிக்கில் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் கலர் டி.வி.க்கு கலர் மாறிய மக்களைக்கண்டு சுதாரித்துக்கொண்டார். தலைமைச்செயலகம் மருத்துவமனையாக மாற்றம், மலிவு விலை உணவகம் என சென்டிமென்ட் ரசத்தை அண்டா கணக்கில் பிழிந்து கலைஞரையே திக்கு முக்காட செய்திருப்பது... யாஹூ. காவிரிக்கான சட்டபூர்வ போராட்டம் போன்ற சொல்லிக்கொள்ளும் சில சாதனைகளும் இல்லாமலில்லை. அதற்காக 'மேடம் ஆட்சியில் குறை ஒன்றும் இல்லை. மறைமூர்த்தி கண்ணா' என்று திண்ணையில் அமர்ந்து தொண்ணை போல காலாட்டிக்கொண்டு பாடிவிடவும் முடியாது.
'யாருய்யா அந்த மினிஸ்டர்..ஒரு கைல மட்டும் வணக்கம் போடுறது'
வெனிசுலா ஜனாதிபதி, கராச்சி கமிஷனர் பேரைக்கூட பொது அறிவுத்தேர்வில் பளிச்சென பதிலாக அளிக்கும் பாரத பட்டதாரிகளுக்கு 'உங்க ஸ்டேட் கவர்னர் யார்?' என்று கேட்டால் மட்டும் அடிவயிறு கலங்கும். எக்சப்சன் தமிழர்கள். பின்னே!! அடிக்கடி அமைச்சரவையை மாற்றி பதவிப்பிரமாணம் செய்து கொண்டே இருப்பதால் 'ரோசய்யா' எனும் பெயர் பேப்பர், டி.வி. வாயிலாக ப்ளாஷ் அடிக்க அம்மாதானே முக்கிய காரணம். காவிரியை மீட்டெடுத்த பொன்னியின் செல்வி விவசாயிகள் மத்தியில் செஞ்சுரி அடித்த அதே தருணத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சையில் நடந்த கூட்டமொன்றில் விவசாயிகளை பார்த்து ''முதல்வரின் சாதனையை பாராட்டி பேசுகிறேன். கை தட்டாமல் உணர்ச்சியற்ற பிண்டங்களாக இருக்கிறீர்களே'' என வசவு பாடினாரே? அவர் மட்டும் எப்படி மேடமின் கத்தியால் 'சதக்' ஆகாமல் பதவில் நீடித்துக்கொண்டு இருக்கிறார்?
ஸ்டாலின், மா.சுப்பிரமணியம் சென்னை மேயர்களாக இருந்த பொழுது பல்வேறு மேம்பால கட்டுமானங்களும்,மக்களை நேரில் சந்திக்கும் படலங்களும் நடந்தேறியது. ஆனால் ஜெ அரசு இதுவரை மும்முறை ஆண்ட காலத்தில் கலைஞர் ஆட்சி அளவிற்கு வளர்ச்சிப்பணிகள் நடந்ததாகவோ/நடப்பதாகவோ பாமரனுக்கு தெரியாமல் இருப்பது உண்மையே.
ஆளுங்கட்சிக்கு தெரிந்தவன் என்பதற்காக கலெக்டரை மிரட்டி காரியம் சாதிக்க முயன்றாராம் ஒரு செல்வந்தர். ஆனால் எடுபடவில்லை. செய்தியறிந்த காமராஜர் காரேறி கலெக்டர் இல்லம் அடைகிறார். 'பதவிக்கு ஆபத்தோ' எனும் பதற்றத்தில் கலெக்டரும், அவர்தம் துணைவியும். நலம் விசாரித்து விட்டு 'என் பெயர் சொன்னாலும் பயமின்றி அவரிடம் பேசியதற்கு பாராட்டுகள். இப்படியே தொடர்க' என தோள்தட்டி விட்டு செல்கிறார் கர்மவீரர். இன்றோ தனியார் மருத்துவமனையின் குறிப்பிட்ட அறைக்கு காலணி அணிந்து செல்லும் முதல்வரை பார்த்து பவ்யமாக 'மேடம்..ஷூவை வெளியே கழற்றி விட்டு வரவும்' என்று சொல்லி இருக்கிறார் பாவம். தனது கடமையை ஆற்றியதற்காக அந்த மருத்துவரை சூடாக 'ஆத்தி' அனுப்பினராம். அடி ஆத்தி!!
காதுல அன்'பூ'
ஜெ பேசும் பெரும்பாலான சமயங்களில் 'எனது ஆட்சி' என்று பெருமைப்பட சொல்லிக்கொள்வது புல்லரிக்கத்தான் செய்கிறது. இதை நான் சொல்லவில்லை. ''நமது ஜெயா டி.வி.ன்னு சொல்ற மாதிரி நமது ஆட்சின்னு சொன்னா என்னவாம்?" என்று நமது மக்கள் புலம்பியது எனது செவியில் விழுந்தது.
பார்லிமென்ட்ல தான் குத்தால கொரங்கு கணக்கா அங்கயும்,இங்கயும் தவ்விக்கிட்டு 'இஸ் சமோசா மே உருளைக்கிழங்கி நஹி ஹை. காங்க்ரஸ் வாலோ ஜவாப் தீஜியே'என்று சட்டையை கிழித்துகொள்கிறார்கள் என்று நொந்து சட்டசபை நிகழ்வுகளை பார்க்க ஜெயா ந்யூஸ் பக்கம் குடியமர்ந்தால்..அடங்கப்பா. 'மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா' என்று லட்சார்ச்சனை ஒரு பக்கமென்றால், 'தொம், தொம்' என மேசைகளின் முதுகை சாத்தியெடுக்கும் செல்லப்பிள்ளைகள் மறுபக்கம். சில்லி உஸ்கூல் கைஸ்!!
'ப்ளெக்ஸ் பேனர்களில் எனது படம் மட்டுமே இருக்க வேண்டும்'ன்னு நீங்க போட்ட ஆர்டர் சிட்டி மெயின் ரோடுகள்ல மட்டுமே பின்பற்றப்படுது. சிட்டி அவுட்டர்ல உங்க படத்துக்கு கீழ பட்டை தங்க செயின் பளபளக்க செல்போன் பேசுறாப்ல போஸ் தர்ற ரத்தத்தின் ரத்தங்களோட ஸ்டில்லு அங்கங்க தென்படுது. என்னான்னு விசாரிங்க.
'இப்போதுதான் ஆட்சிக்கு வந்தோம். முந்தைய அரசின் முட்டாள் தனங்களே இதற்கு காரணம்' என்று காரணம் சொல்லும் காலம் கடந்து விட்டது. மக்களுக்கு நிறைய செய்வதற்கான 'யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்'.
..............................................................
6 comments:
எப்போது பார்த்தாலும் - இருபத்திநாலு மணி நேரமும் லட்சார்ச்சனை தான்...
என்னே அன்பூ + சிரிப்பூ..!
எல்லாம் சரிங்க தல கே ஆர் விஜயா நல்ல நடிகை ஆனா நல்லா ஆடுவாஙுங்களா???நான் பார்த்த படங்களிலெல்லாம் நடனத்தில் அவர் சரோஜாதேவியைக் காட்டிலும் தேவல மற்றபடி வாய்க்கல என்பது தான் என் எண்ணமாய் இருந்திருக்கின்றது
SORRY SMALL CORRECTION ...YOUR TIME STARTS AT L(E)AST NOW...................
சினிமாவில் ஆரம்பித்து அரசியலில் நுழைந்து ஆட்சியில் முடித்திருக்கும் அலசல் கட்டுரை சிறப்பு! நன்றி!
திருமதி தமிழ் விமர்சனம் எங்கே? விரைவில் விடவும், காத்திருக்கிறோம்!
வணக்கம்,சிவா!!!நீங்கள் வாசித்த(ஜெயா ந்யூஸ்)விதம் தித்திக்கவில்லையே?(ச்சும்மா)ஹி!ஹி!!ஹீ!!!!அருமை!
Post a Comment