CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, April 17, 2013

குறுக்கு வழியில் ட்ராஃபிக் ஜாம்


                                                               
                                                             
பொதுவாக நகைச்சுவை நாடங்கள் என்றால் அதில் எஸ்.வி.சேகர், கிரேசி மோகன்-மாது பாலாஜி,ஒய்.ஜி.மகேந்திரா போன்றவர்கள் மட்டுமே அதிகப்படியான ஜோக்குகளை பேசி பெயர் பெறுவர். கூட நடிப்பவர்கள் அதிக வசனங்கள் பேச வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே. பெயருக்கு ஓரிரு இளைய வயதினர் முக்கிய கேரக்டரின் மகன் அல்லது மகளாக வந்து செல்வதுதான் பெரும்பாலும் நடக்கும். எப்போதுதான் முற்றிலும் இளைஞர்களை உள்ளடக்கி ஓர் சிறந்த காமடி கலாட்டா நாடகத்தை பார்க்க போகிறோம் என்று காத்துக்கிடந்ததுண்டு. அதற்கு சரியான பதிலை தந்துள்ளது சென்னை டிராமா ஹவுஸின் 'குறுக்கு வழியில் ட்ராஃபிக் ஜாம்'.

மயிலை சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியத்தில் ஞாயிறு மாலை 7 மணிக்கு நாடகம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பெரிதாக தாமதமின்றி சட்டென ஆரம்பமானது கு.வ.ட்.ஜா. கூட்டம் எப்படி இருக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தால்..ஹவுஸ்ஃபுல். ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் இளையவர்கள். நான் இதுவரை பார்த்த நாடகங்களில் இத்தனை யூத் ஆடியன்ஸ் இருந்தது இதற்குத்தான். டாப் காமடி நடிகர்களின் குறைந்தபட்ச டிராமா டிக்கெட்டே ரூ. 200 என்று ஆகிப்போன காலத்தில் நியாயமான ரேட்டை இவர்கள் ஃபிக்ஸ் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. பதிவர் சீனுவும் என்னுடன் அரங்கினுள் ஐக்கியமானார். 
                                                                   

சைகாட்ரிஸ்ட் அரவிந்திடம்(விக்ரம்) தனது கோபம்/ஈகோ பிரச்னையை சரி செய்ய சிகிச்சைக்கு வருகிறார் 'ஷூட்டிங் ஸ்டார்' வேதன்(தேவராஜ்).  ஓர் நாளிரவு அரவிந்த் வீட்டு மாடியில் குடியிருக்கும் சுந்தரை(ஸ்ரீவத்சன்) காரில் இடித்து கொன்று விடுகிறார் வேதன். தற்செயலாக அரவிந்திடம் அவர் இதை உளறிவிட பிரச்னை வலுக்கிறது. உண்மையை மறைக்க வேதனால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு க்ரிமினலாக சித்தரிக்கப்படுகிறார் அரவிந்த். 'உலகமே உங்களை எதிர்த்தாலும் நான் இருக்கிறேன்' என்று அவரை காப்பாற்ற கரம் நீட்டுகிறார் வக்கீல் சரவணவேல்(விவேக் ராஜகோபால்). அவருக்கு உதவியாளராக ரங்கபாஸ்கர்  (கௌசிக்). சிம்மசொப்பனமாக இருக்கும் சீனியர் வக்கீல் ராமசாமியை(கார்த்திக்) எப்படி எதிர்கொண்டு வழக்கை முடிக்கிறார்கள் என்பதுதான் கதை.    

தேவராஜ் அறிமுக சீனில் விக்ரமிடம் பேசும் நீண்ட பஞ்ச் வசனம் சிறப்பு.  விவேக் & கௌசிக் கூட்டணி விக்ரமை கலாட்டா செய்து வெறுப்பேற்றும் காட்சிகள் பல இடங்களில் கைத்தட்டல்களை அள்ளுகிறது. மாடர்ன் ஏஜ் கவுண்டமணி செந்திலாக இருவரும் பின்னி எடுக்கிறார்கள். அதே நேரத்தில் கதையையும் நகர்த்த தவறாதது ப்ளஸ். இதற்கு முன்பு பார்த்த சீனியர்களின் ட்ராமாக்களில் ஒரு சில கேரக்டராவது மேடையில் பதற்றத்துடன் நடித்து காட்சியுடன் ஒன்றாமல் இருப்பது வழக்கம். ஆனால் வசன உச்சரிப்பு, எனர்ஜி, இயல்பான நடிப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளது இந்த குழு.  

2 மணிநேரம் நான் ஸ்டாப் காமடி, குபீர் காமடி என்று நாடக விளம்பரங்களை நம்பி உள்ளே சென்று குறைந்தது ஒரு மணி நேரமாவது கொட்டாவி விட்ட அனுபவங்களும் உண்டெனக்கு. ஆனால் ஆரம்பம் முதல் இறுதிவரை  100% சுறுசுறுப்பான நடிப்புடன் சரவெடி காமடிகளை ரசிகர்களுக்கு அளித்த இந்த 7 பேர் கொண்ட குழுவை வெகுவாக பாராட்டலாம். வசனம் எழுதி இருக்கும் விவேக் ராஜகோபாலுக்கு டபுள் சியர்ஸ். 'இதெல்லாம் ஏற்கனவே கேட்ட/பாத்தா ஜோக்குதான. எத்தனை தரம்தான்..'என்று நம்மை சலிப்படைய செய்யாமல் இக்கால இளையோரின் ரசனைக்கேற்ப ஃப்ரெஸ்ஸான வசனங்களை எழுதி சிரிப்பில் ஆழ்த்தி இருக்கிறார் விவேக். எனக்கு பிடித்ததில் சில...

'வீண் வம்புக்கு போகாம தேவையான விஷயத்துக்குதான் எங்க வக்கீல் எதிர்க்கட்சி வக்கீலோட வாதாடுவார். நாத்தமா இருக்குற எருமை மாடை க்ராஸ் செஞ்ச கோவத்துல நாம இன்னும் நாத்தமா போயி அது கிட்ட நின்னு வெறுப்பேத்த கூடாது' 

சரவணவேல்: 'மேட்ச் ஃபிக்சிங் கேஸ்ல மேரேஜ் ப்ரோக்கரையே உள்ள தள்ளி இருக்கேன் சார்'. 

ரங்கபாஸ்கர்: 'ஜீப்ரா மாதிரி கம்பீரமா இருக்கணும் சார். மத்த மிருகங்க மாதிரி கலர் மாறக்கூடாது'. 'கலர் மாறும் மிருகங்களா?' என்று டாக்டர் அரவிந்த் வியக்க ரங்கா: 'ஆமா சார். மொதல்ல எல்லா மிருகமும் ப்ளாக் & ஒயிட்டாதான இருந்தது'. அரவிந்த் மீண்டும் குழம்புகிறார். அதற்கு ரங்காவின் பதில்: 20 வருஷத்துக்கு முன்ன டி.வி.ல பாத்துருக்கனே..அப்ப எல்லா மிருகங்களும் ப்ளாக் & ஒயிட்தான். இப்ப கலருக்கு மாறிடுச்சி. ஜீப்ராவை தவிர'.

குறையென்று பெரிதாக சொல்ல ஏதுமில்லை. பழைய கால ட்ராமா/சினிமா போல் வெறும் டம்ளரை கையில் வைத்துக்கொண்டு காபி குடிப்பது போன்ற படு செயற்கைத்தனங்களை அடுத்த முறை  தவிர்க்கலாம். காபி இல்லாவிடினும் தண்ணீர் ஊற்றியாவது குடித்தால் யதார்த்தமாக இருக்கும். பெண்களுக்கு நகைச்சுவை ட்ராமாக்களில் பெரிய ஸ்கோப் இருப்பது அரிதுதான். இங்கும் அப்படியே. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார் டாக்டரின் மனைவி நித்யாவாக நடித்த ஸ்ம்ரிதி. பெண்கள் முக்கிய காமடி கேரக்டராக நடிக்கும் ப்ளே ஒன்று சென்னை ட்ராமா ஹவுஸ் மூலம் வருமென எதிர்பார்க்கிறேன். குற்றவாளி தன்னை மறந்து கோர்ட்டில் உண்மையை ஒத்துக்கொள்ளும் பழைய பாணியையும் மாற்றி இருக்கலாம். Because we expect innovation from all angles from this youthful team!! :))

 விக்ரம், விவேக் ராஜகோபால், கௌசிக், ஸ்ரீவத்சன், தேவராஜ், ஸ்ம்ரிதி, கார்த்திக் பட்.

100% புதிய தலைமுறையினரால் நடத்தப்பட்டு வரும் சென்னை ட்ராமா ஹவுஸ் குழு மேடையில் போடப்படும் செட்களிலும் புதுமை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. அதற்கான செலவு அதிகமாகும் என்பது நிதர்சனம் என்றாலும், இவர்கள் போன்ற இளம் படைப்பாளிகளிடம் புதுமைகளை எதிர்பார்ப்பதும் என் போன்ற நாடக ரசிகர்களின் இயல்புதானே.  ஆர்.எஸ்.மனோகர் போன்ற ஜாம்பவான் அளவிற்கு பிரம்மாண்ட/ஜகஜ்ஜால செட்களை போட முடியாவிட்டாலும், கதைக்கு தேவைப்படும்போது வழக்கமான அரங்க அமைப்புகளில் இருந்து சற்று விலகி வித்யாசமான அரங்க அமைப்பினை விவேக் & கோ செய்தால் மேலும் பல தரப்பு ரசிகர்களை ஈர்க்கலாம். 

நகைச்சுவை நாடகங்கள் என்றாலும் கூட மக்களிடம் வரவேற்பு வெகுவாக குறைந்து வரும் இக்காலத்தில் அவர்களை மீண்டும் சபாக்களுக்கு கொண்டு வருவதில் சென்னை ட்ராமா ஹவுஸின் பங்கு கணிசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

Images copyright: madrasbhavan.com
.........................................................................

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம்... ஐக்கியமான சீனு அவர்களே... உங்களின் விமர்சனம் உண்டா...?

பால கணேஷ் said...

வொர்க் கமிட்மெண்ட்களால நிறைய நல்ல சந்தர்ப்பங்களை மிஸ் பண்றேன்னு தெரியுது. இனியாவது மிஸ் பண்ணாம இருக்க முயல்கிறேன். நல்ல நகைச்சுவை நாடகங்கள் அரிதான இந்தக் காலச்சதுரத்தில் இதுமாதிரி முயற்சிகள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியவைதான்! D.D.! சிவாவோட பேட்டையில யாரும் குறுக்கிட முடியாது! அது ராஜபாட்டைய்யா!

சீனு said...

மிகச் சில இடங்களில் மட்டுமே திணறினர்... மற்றபடி மிக அருமையான நாடகம்.

ஹீரோ ஒரு இடத்தில் வசனத்தில் தண்டர் கிளாப்ஸ் என்று சொல்லிய பொழுது அரங்கமே தண்டர் கிளாப்சில் அதிர்ந்தது.. அங்கு அந்த நாடகத்தின் வெற்றி பிரகாசமாய் தெரிந்தது.

@DD - அண்ணன் மெட்ராஸ் ரூட்டில் நான் குறுக்கே வரவில்லை.... வாத்தியார் சொன்னது போல் அது ராஜபாட்டை தான் :-)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம். நகைச்சுவை நாடகங்கள் மலிந்து விட்ட நிலையில் இது ஒரு நல்ல மாற்றம்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...