CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, April 11, 2013

தண்ணீர் தண்ணீர்


                                                             
   
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட/கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கிராம மக்களின் வாழ்வை வெகு யதார்த்தமாக பிரதிபலிப்பதில் 'பரதேசி'க்கெல்லாம் காட் ஃபாதர் சினிமாதான் பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர். சிறந்த தமிழ்ப்படம் மற்றும் திரைக்கதைக்கு(கே.பி) தேசிய விருதை வென்றுள்ள திரைப்படமிது. 'அச்சமில்லை, அச்சமில்லை' பார்த்த பின்பு இப்படத்தையும் தவற விட வேண்டாம் என அம்மா பரிந்துரை செய்ய பல மாதங்களாக குறுந்தகடு கிடைக்காமல் அலைந்தேன். மிக அரிதாக விஜய் டி.வி.யில் போட்டபோதும் காண இயலவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு நாரத கான சபாவில் இந்நாடகம் அரங்கேறும் செய்தி கண்டு அரங்கிற்கு சிட்டாய் பறந்தேன். அடுத்த சில நாட்களில் திரைப்பட குறுந்தகடும் கிடைத்தாகிவிட்டது. இனி தண்ணீர் தண்ணீர் நாடக - சினிமா விமர்சனம்.... 

கோமல் ஸ்வாமிநாதனின் ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் குழுவால் 1981 முதல் 250 முறை மேடையேறி உள்ளது இப்படைப்பு. 18 வருடங்களுக்கு பிறகு கோமலின் புதல்வியால் அவரது நாடகங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.அதன் முதல் முயற்சிதான் தண்ணீர் தண்ணீர். 33 வருடங்களுக்கு முன்பு  எழுதப்பட்ட வசனத்தில் ஒரு வரியைக்கூட மாற்றாமல் அப்படியே நாடகமாக்கி உள்ளது சிறப்பு.  

கதை: நெல்லை அத்திப்பட்டி எனும் சிறு கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கின்றனர். நாடோடியாக வரும் வெள்ளைச்சாமி அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண சில யோசனைகள் சொல்கிறான். அதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க இறுதியில் வேறு வழி இன்றி சம்மதிக்கின்றனர். ஆனால் சில காலம் கழித்து வெள்ளைச்சாமி ஒரு கொலையாளி என்று ஊராருக்கு தெரிய வர மீண்டும் சர்ச்சை கிளம்புகிறது. போலீஸ் அவனை தீவிரமாக தேட ஊர் மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள்? தண்ணீர் பஞ்சம் தீர்ந்ததா? என்பதை மேடையில் காண்க.
                                                                   

தொடர்ச்சியாக ஐயராத்து நாடகங்களை பார்த்து சற்று அயர்ச்சி ஆன எனக்கு இது முற்றிலும் மாறுபட்ட களம். படத்தில் கோவக்கார இளைஞன் கோபாலாக நடித்த ராஜ் மதன் நாடகத்தில் வெள்ளைச்சாமியாக ப்ரமோட் ஆகியுள்ளார். மொத்த கதாபாத்திரங்களுக்கும் நெல்லை பேச்சு வழக்காட பயிற்சி தந்திருப்பதும் இவர்தான். பிசிறின்றி அனைவரும் உச்சரித்த பெருமை இவரையே சாரும். 'சாமி எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும்' வீராசாமியின் அடைக்கப்பன் கேரக்டரில் ரவி. 'செவ்வந்தி' சரிதா இங்கே 'லொள்ளு சபா புகழ்' ஸ்வேதா. படத்தில் இஞ்சினியர், நிருபராக நடித்த ராஜன் மற்றும் தாம்பரம் ஸ்ரீனிவாசன் ஆகியோர் அதே பாத்திரங்களில் இந்நாடகத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜ் மதன், ரவி ஆகியோரின் யதார்த்த நடிப்பு சிறப்பென்றால் அவர்களை விட அதிகம் பெயரை வாங்கிச்சென்றது வாத்தியாராக நடித்த தம்பி பார்த்தசாரதி அவர்கள்தான். படத்தில் 'வாத்யார்' ராமன் தனக்கே உருவான ரோலில் பொருந்தி இருப்பினும் அவரை விட கச்சிதமாக நடித்துள்ளார் பார்த்தசாரதி. கான்ஸ்டபில் அழகிரியாக  ராதாராவி காட்டும் கடுகடு முகபாவம் இங்கே பால்ராஜிடம் இல்லாதது குறைதான்.
                                                               

கோமல் ஸ்வாமிநாதனின் நாடக காட்சி அமைப்புகள்/வசனங்கள் ஆகியவற்றை பெரிதும் சிதைக்காமல் படமாக்கி இருக்கும் கே.பாலச்சந்தரை பாராட்டலாம். சிறுவன் ஒருவன் நிலத்தில் கிடக்கும் ரஜினியின் புகைப்படத்தை கையிலெடுக்கும் ஆர்வத்தில் தண்ணீர் பானையை தவற விடும் முதல் ஷாட்டிலேயே 'இயக்குனர் சிகரம்' முத்திரையை பதித்து உள்ளார். என்ன நம்மூர் சினிமாக்காரர்களுக்கே உரித்தான காதலை படத்திலும் சொருகி தலையை சொரிய வைத்து இருப்பது தடுமாற்றம். 

 கோமலின் கிளாசிக் வசனங்களில் சில:

'எங்க ஊரு அம்மனே மாசம் ஒரு முறைதான் குளிக்கரா.'

'குடிக்க மட்டும்தான் தண்ணி. மூஞ்சி கழுவரதெல்லாம் இங்க ஆடம்பரம்'  

'எங்க ஊரை ஆராய்ச்சி பண்ணி நீ டாக்டர் பட்டம் வாங்கிட்டு போய்டுவ. நாங்க மட்டும் அப்படியே கெடக்கனுமா? இந்தா மம்முட்டிய புடி'.

மொத்த படைப்பில் மாஸ்டர் பீஸ் வசனம் இதுதான்: தண்ணீர் பிரச்னை தீர மந்திரியிடம் ஊர்மக்கள் மனு தர அது பி.ஏ, கலெக்டர், தாசில்தார் என பலரது கை மாறுகிறது. மனு என்னவானது என்று ஊர்மக்கள் கேட்க அதற்கு வாத்தியார் ''மந்திரி பி.ஏ. கிட்ட மனுவ தந்து 'இது என்னன்னு பாரு' அப்படின்னார். அது ஒவ்வொருத்தர் கிட்டயா போச்சி. 'ஆமாங்க அத்திப்பட்டில தண்ணி இல்ல'ன்னு அதிகாரி சொன்னாராம். அந்த செய்தி அப்படியே ரிவர்ஸ் ஆர்டர்ல உயர் ஆட்கள் கிட்ட வந்தது. கடைசில மந்திரி சட்டசபைல 'ஆமாம். அத்திபட்டில தண்ணி இல்லை'ன்னு ஒத்துக்கிட்டார். அவ்ளோதான்''  

நாயகி சரிதா தண்ணீருக்கு தவிக்கும் அத்திப்பட்டியாளாக கோபக்கனலை வீசி வழக்கம்போல் அருமையாக நடித்து இருக்கிறார். எப்படியும் ஊருக்கு விமோச்சனம் கிடைக்குமென வெள்ளந்தியாக நம்பும்போதும், அது கிடைக்காத ஏமாற்றத்தில் வெம்பும்போதும்... 'செவ்வந்தி'யாக வெளுத்துக்கட்ட இவரை விட்டால் வேறு யார்? 
                                                              

எம்.எஸ்.வி.யின் இசையில் அனைத்து பாடல்களும் பொட்டல் காட்டு அனற்காற்று.  

நாடக-சினிமா நாயகர்களை ஒப்பிட மறந்தே போனேனே? மன்னிக்க. ராஜ் மதன் (நாடகம்) செம்மையாக தனது உழைப்பை கொட்டி இருப்பினும் அவரை விட இயல்பாக நடித்தது திரைப்பட நாயகன் சண்முகம்தான் என்பது எனது கருத்து. படத்தில் கோபால்(ராஜ் மதன்) காதலி செல்லியாக வரும் தேவதை பெயர் அருந்ததி என நினைக்கிறேன். சொக்க வைக்கும் நடிப்பும், தொண்டைக்குழி விக்க வைக்கும் அழகும்...யப்பா!! பார்த்த விழி பார்த்தபடி பூத்துக்கிடந்தேன்.  தேவதையின் படம் கீழே :) 
                                                             

நாடகம் பார்த்த அனுபத்தை அம்மாவிடம் கூறியபோது "ஊருக்காக தண்ணி வண்டி கட்டி வெள்ளைச்சாமி போற காட்சிய எப்படி ட்ராமால எடுத்தாங்க?" எனும் வினாவை முன்வைத்தார். என் பதில்: "அந்த சீன்  மேடைல  வரல". அதற்கு அவர் சலித்தவாறு சொன்னது: "இதே ஆர்.எஸ். மனோகர் ட்ராமாவா இருந்திருந்தா அந்த தண்ணி வண்டியை மேடைக்கு கொண்டு வந்துருப்பாரே...".  நாடகங்களில் எதிர்பாராத பிரம்மாண்டம் மற்றும் தந்திர காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக படைப்பதில் மனோகரை மிஞ்ச ஆளில்லை என்பதை மறுப்பார் யார்? 

இதிகாசம், அறிவுரை, கேளிக்கை, சுதந்திர போராட்டம் என்று ஒரு வட்டத்திற்குள் கிடந்த/கிடக்கும் நாடகங்களுக்கு மத்தியில், இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடவுள்ள நீர்ப்பிரச்சனையை தீர்க்கதரிசனமாக எடுத்துரைத்துள்ள தண்ணீர் தண்ணீர் காலத்தால் அழிக்க முடியாத கங்கைதான்!!

Drama Photos copyright: madrasbhavan.com  
................................................................

முந்தைய பதிவு:


................................................................

                                                                

7 comments:

கவியாழி said...

நாடகத்தை போற்றும் உங்களைப் போன்றவர்களால் தான் இன்னும் நாடகம் வாழ்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் தெரிந்துகொள்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

இதைவிட துயரமான வசனங்கள் வரக்கூடும் என்பது மட்டும் உண்மை...

ஜீவன் சுப்பு said...

இதுவே இப்ப நடந்துருந்தா ....?

அத்திப்பட்டியே இல்லன்னு சொல்லிருப்பாரு மாண்புமிகு மந்திரி ...!

Yoga.S. said...

அருமை!ஒப்பீடும்!!!

பால கணேஷ் said...

தண்ணீர் தண்ணீர் படம் பார்த்திருக்கிறேன் நான். பாலசந்தரின் படைப்பில் நாடகத்தன்மை மேலோங்கியிருககிறது என்று அவரின் ஆரம்ப காலங்களில் புகார் எழும்பியது. பின்னால் அவரே இந்த நாடகத்தை படமாக்கியபோது அதை சினிமாவுக்கேற்றபடி நிறைய மாற்றியிருந்ததாகச் சொலவார்கள். நான் நாடகம் பார்க்காததால சொல்ல முடியல. இப்ப உங்க விமர்சனம் மூலமா நல்லாப் புரிஞ்சுகிட்டாச்சு சிவா! டாங்க்ஸு...!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கம்பேரிசன்..... இரண்டையும் பார்த்து அன்பவங்களைப் பகிர்ந்து கொண்டது நன்று!

சீனு said...

தவற விட்ட மற்றுமொரு நாடகம்... இக்காலத்திற்கும் பொருந்தும் அருமையான கதை மற்றும் படம் நாடகம்

Related Posts Plugin for WordPress, Blogger...