CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, April 10, 2013

காத்தாடி ராமமூர்த்தியின் - பிள்ளையார் பிடிக்க

                                                           
                                                                   

தி.நகர் கிருஷ்ணா கான சபாவில்  சித்திர நாடக விழா ஏப்ரல் ஆறாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நித்தம் ஒரு நாடகமென வரும் ஞாயிறு வரை நிகழ்ச்சி நிரலை வெளியிட்டு இருந்தனர். சென்னையில் சிறந்த கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கும் சபா என்றால் அது கிருஷ்ணா கான சபா தான் என்று அடித்து சொல்லலாம். விழாவின் துவக்கமாக வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு 'நாடக சூடாமணி' விருது வழங்கும் நிகழ்ச்சி.

நீண்ட நாட்களாக 'ட்ராமா பார்க்க இதோ வரேன். அதோ வரேன்' என்று போக்கு காட்டி வந்த பதிவர் 'மின்னல் வரிகள்' பாலகணேஷ் அவர்களை 'பிள்ளையார் பிடிக்க' படாத பாடு பட்டு ஒருவழியாக சபா வாசலில் நிறுத்தினேன். பத்தடி தூரத்தில் சிகரெட் பிடித்த சிலரை திட்டியவாறு 'ஏன்டா இப்படி தம் அடிச்சி கேட்டு போறாங்க. இந்த லோகத்துல யாருக்கும் பொறுப்பில்ல. அக்கறை இல்ல' என பாலகணேஷ் தலையில் அடித்துக்கொண்டபோது அவரின் சமுதாய அக்கறை கண்டு கண்ணோரம் நீர்த்துளிகள் தாறுமாறாக பெருக்கெடுத்து ஓடியது எனக்கு. 
                                                            

சரியாக 5 மணிக்கு டாண் என சபா வாசலில் வந்து  காத்திருந்த வியட்நாம் வீடு சுந்தரத்திடம் ஒரு சில வார்த்தைகள் பேசினேன். அவரிடம் நீண்ட நாட்களாக கேட்க எண்ணி இருந்த கேள்வியை முன்வைத்தேன்: 'சிவாஜி ப்ரெஸ்டீஜ் பத்மநாபனாக நடிக்க இன்ஸ்பிரேஷனாக இருந்தவா பெயர் என்ன?' அதற்கு சுந்தரம் தந்த பதில்: 'இந்தியா சிமென்ட்ஸ் நாராயணசாமி எனும் ஹை கிளாஸ் ஐயர் தான் அவர்'. கௌரவம், ஞான ஒளி போன்ற படங்களில் காலத்தால் அழியாத வசனங்களை  படைத்ததும்   வி.வீ.சுதான்  என்று அப்போதுதான் அறிந்து கொண்டேன். நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களாக கே.பாலச்சந்தர், நல்லி குப்பு, ஒய்.ஜி. மகேந்திரா & குடும்பம், தமிழக இயலிசை நாடக மன்ற செயலாளர் நடிகை சச்சு. 20 வயதில் வியட்நாம் வீடு நாடகத்திற்கு வசனம் எழுதிய சுந்தரத்தை பற்றி சுவையான தகவல்களை பரிமாறினர். இவருடன் சேர்த்து நாடக உலகின் பிதாமர்களில் ஒருவரான மாலி அவர்களுக்கு பூர்ணம் விருதும் வழங்கப்பட்டது. 
                                                               

ஏழு மணிக்கு காத்தாடியாரின் நாடகம் துவங்குமென அறிவித்து இருந்தனர். எனக்கு தெரிந்து சமீபத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாடகம் இதுவாகத்தான் இருக்கக்கூடும். சத்யம் தியேட்டருக்கு இணையான விஸ்தாரம் கொண்ட அரங்கு கணிசமாக நிரம்பித்தான் இருந்தது. கதை, திரைக்கதை, இயக்கம் நானு. செல்லப்பாவாக நடித்து இருப்பதும் இவர்தான். 

கதை என்னவெனில்...சிவராமன்(காத்தாடி), லலிதா தம்பதியரின் ஒரே மகன் சுரேஷ். பழங்கால ஸ்டைலில் பெண் தேடும் பெற்றோர் இறுதியாக மேட்ச் பிக்சிங் .காம் எனும் இணையத்தின் வாயிலாக படலத்தை தொடர்கின்றனர். தான் நேர்முகத்தேர்வு நடத்திய நந்தினி எனும் பெண் மீது ஆசை கொண்டு அவளையே மணமுடித்து தருமாறு கோரிக்கை வைக்கிறான் மகன். சொந்த பந்தம் எவருமின்றி தந்தையுடன் வாழும் நந்தினி ஒரு அல்ட்ரா மாடர்ன் ஐ.டி. கேர்ள். அவள் போடும் நிபந்தனைகளை கண்டு நொந்து போகின்றனர் சுரேஷின் பெற்றோர்கள். நந்தினியை சமாளிக்க லலிதாவின் சகோதரன் செல்லப்பா செய்யும் சின்ன தில்லுமுல்லு மேலும் பிரச்னையை உருவாக்க அதை எப்படி சரி செய்கின்றனர் என்பதை கூடுமானவரை நகைச்சுவை ததும்ப சொல்லி/நடித்து உள்ளனர். 


காத்தாடியாரின் மேஜர் ப்ளஸ்ஸே  அவருடைய தனித்துவமான குரல்தான். எவராலும் மிமிக்ரி செய்ய முடியாத வாய்ஸ். தூர்தர்ஷன் ஸ்டுடியோ ட்ராமா காலத்தில் இருந்த குரலின் வசீகரம் இன்றும் அதே வளத்துடன் இருந்தது அபாரம். எத்தனை நாட்கள் ஆயிற்று இக்குரலை தொடர்ச்சியாக இவ்வளவு நேரம் கேட்டு..!! 'டேய் சுரேஷ். என்னடா சட்டுன்னு பொண்ணு பிடிச்சிருக்குனு சொல்லிட்ட? நான் முதல்ல ஹை பிட்ச்ல கோவமா கத்திட்டு அப்பறம் சமாதானம் ஆன மாதிரி இறங்கி வந்து குணசித்திர நடிகனாட்டம் சீன் க்ரியேட் செய்யலாம்னு பாத்தேன்....' என்று  காத்தாடி பேசுமிடம் பட்டாசு. பல்லாண்டுகள் ஆகியும் சற்றும் எனர்ஜி குறையாமல் வெளுத்து வாங்குகிறார் தலைவர். 

கருப்பூர் வைத்தியாக ஸ்ரீதர். 'என் பெண்ணை சுரேஷிற்கு திருமணம் செய்ய சில பொய்களை சொல்லி விட்டேன். மன்னிக்கவும்' என நெகிழ்வாக நடித்த அவருக்கு அப்ளாஸை அள்ளி வழங்கினர் ரசிகர்கள். நந்தினியாக நடித்த பெண் சற்றே ஆன்ட்டி தோற்றத்தில் இருந்தாலும் நடிப்பில் பாஸ் செய்கிறார். ஏகப்பட்ட காஸ்ட்யூம்களில் வந்து செல்லும் நந்தினிக்கு கருப்பு நிற   லெக்கின்ஸ் கனப்பொருத்தம். சில நாட்களுக்கு முன்பு அலுவலக நண்பன் ஒருவன் 'லெக்கின்ஸ் எல்லாம் சிலருக்குதான் பொருந்தும். உருண்டை, குட்டையான, ஓவர் ஒசரம் இருக்குற பொண்ணுங்க எல்லாம் ஏண்டா இதை போட்டு உசுரை வாங்கறாங்க' என்று அங்கலாய்த்து கொண்டான். அவன் நாடகம் பார்க்க வந்திருந்தால் நந்தினிக்கு 100/100 மார்க் போட்டிருப்பான் என்பது உறுதி.   

அமெரிக்கா, ஐ.டி மோகத்தில் இருக்கும் இளைய சமூகத்தை நல்வழிப்படுத்தும் பழைய ட்ரென்டை நாடமாக்கி உள்ளனர். இளைஞர்களை விட   பெற்றோர்களை அதிகமாகவே குஷிப்படுத்தலாம் 'பிள்ளையார் பிடிக்க' வசனங்கள். 

Drama stage images copyright: madrasbhavan.com
.................................................................

என்னுடன் சேர்ந்த (சந்)தோஷத்தில் 'பிள்ளையார் பிடிக்க' சென்ற அனுபவத்தை பால பிள்ளையார் எழுதிய பதிவு:

...................................................................


முந்தைய பதிவு: 
6 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

பிள்ளையாரை இழுத்த செம்மல் அப்படின்னு விருது தந்துரலாம் சிவா...

திண்டுக்கல் தனபாலன் said...

அழ வைத்ததற்காக அவரை பிள்ளையார் என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்... ஹிஹி...

Yoga.S. said...

வணக்கம்,சிவா!///விமர்சித்த விதமே நாடகம் பார்த்த உணர்வைக் கொடுத்தது.நன்றி,பகிர்வுக்கு!!!

CrazyBugger said...

Yoi..

வெங்கட் நாகராஜ் said...

காத்தாடி ராமமூர்த்தியின் குரல்.... நிச்சயம் தனித் தனமை வாய்ந்தது தான்....

பாலகணேஷ் அண்ணனையும் அழைத்துப் போய் ஒரு நாடகம் பார்க்க வைத்தாயிற்று! அடுத்தது என்ன?

பால கணேஷ் said...

பால பிள்ளையாரா...? இதுவும் கேக்க நல்லாத்தேங் இருக்குது! காத்தாடியின் குரல்வளத்தை நானும் அங்கே மிக ரசித்தேன். முதல் முறை நாடகம் பார்த்த இந்த (நல்ல) அனுபவம் மனசை விட்டு அகலாது சிவா! மிக்க நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...