CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, April 9, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (9/4/13)அமர்க்களம்: 
                                                               
                                                                      ரவா உப்மா @ மியூசிக் அகாடமி

சில நாட்களுக்கு முன்பு ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமிக்கு விசிட். வளாகத்தில் இருக்கும் உட்லண்ட்ஸ் சிற்றுண்டியகம் கண்ணில் தென்பட்டது. வெட்டவெளி. சிலு சிலு மாலைக்காற்றுடன் கூடிய சூழல். பஞ்சு போல மென்மையான பூரி-கம்-உயர்தர பூரிக்கிழங்கை ஆர்டர் செய்து லபக்கிக்கொண்டு இருந்தேன். சிறப்பு உணவு என்னவாக இருக்கக்கூடும் என சுற்றும் முற்றும் பார்க்க, பொங்கல் போன்ற ஒரு வஸ்துவை தூரத்தில் இருந்த  டேபிள்களுக்கு பரிமாறிக்கொண்டு இருந்தனர். 'ஒரு பொங்கல்' என்றதும் 'அது ரவா உப்மாங்க' என்றார் சர்வரண்ணா. 'அதுதான்..கொண்டு வாங்க' என சைகை காட்டிய 10 நிமிடங்கள் கழித்து ரவா உப்மா டேபிளேறியது.

உப்மா என்றாலே உசைன் போல்ட் வேகத்தில் உதறிக்கொண்டு ஓடும் நபர்களைக்கூட உமிழ்நீர் சொட்ட ரெண்டு ப்ளேட் சாப்பிட வைக்கும் அளவிற்கு அற்புதமான சுவை. பொதுவாக ரவா உப்மாக்கள் என்றாலே திரி திரியான  ரவைத்தீவுகளால் தொண்டைக்குள் செல்ல அடம் பிடிக்கும். ஆனால் இங்கோ அதன் மகோன்னத ருசி கோவில் பிரசாதத்திற்கு சப்ஸ்டிட்யூட் போல ஜகஜோராக இருந்தது. 'எதுக்குடா ஸ்பூன். நானே நேரா தட்ல போயி நக்கிக்கறேன்' என நாக்கு போக்கு காட்டியது மிகையில்லை. விலை ரூ.40 மட்டுமே. 

சரவண பவனில் தரும் 'உள்ளங்கை நெல்லிக்கனி' பொங்கல் போல தம்மாதூண்டு இல்லாமல் ஆரூர் முனா செந்திலின் இரண்டு உள்ளங்கை கொள்ளளவிற்கு நிறையவே பரிமாறியது சிறப்பு.    
......................................................................... 

ஆளுக்கொரு ஆசை: 
'தமிழ்நாட்டில் ஏழரை கோடி சினிமா விமர்சகர்கள் உள்ளனர்' என இணையத்தில் நண்பர் ஒருவர் அடித்த கமண்ட் சமீபத்தில் மிக பிரபலம் ஆனது. அதே நேரத்தில் நான்கு நண்பர்கள், ஒரு காஸ்ட்லி செல்போன் வைத்துக்கொண்டு கல்லூரி மாணவர்களும், நிறைய சினிமா பார்ப்பதாலேயே சினிமா எடுப்பதற்கான தகுதி தனக்குள்ளது என நினைத்து குறும்படம் எடுக்க கிளம்பி விடும் அங்கிள்களும்  கணிசமாக இருக்கத்தான் செய்கின்றனர். இன்னொரு நபர் முதலீடு செய்யும் பணத்தில்  ஆளாளுக்கு படம் எடுத்து தள்ளும்போது சொந்தக்காசை போட்டு படம் பார்ப்போர் விமர்சனம் செய்வது எவ்வகையில் தவறு?
.............................................................

தலைநகரம்: 
தலைநகரின் பேருந்து நிறுத்தங்கள் அனைத்தும் விளம்பரதாரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன. பல்வேறு நிழற்குடைகளில் பேருந்து எண்கள் காணக்கிடைப்பதில்லை. எந்தப்பேருந்து இங்கு நிற்கும் என்பதை கண்டறிய நிழற்குடை(?)யின் பக்கவாட்டில் சென்று பார்க்க வேண்டி உள்ளது. முன்பக்கத்தில் 'காஜலுக்கு மிஸ்ட் கால் குடுங்க' போன்ற வகை வகையான விளம்பரங்கள். அங்கே 70% இடத்தை மட்டும் விளம்பரத்திற்கு ஒதுக்கி விட்டு மீதி இடத்தில் பேருந்து எண்களை போட வேண்டும் என அரசாங்கம் கட்டளை போட்டால் புண்ணியமாய் போகும். 
............................................................

பீஷ்மர்:
இவ்வாரம் படித்த அருமையான பதிவு அபி அப்பா எழுதிய 'என்றும் இந்த ஆனந்தம் நிலைக்கட்டும்'. கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு கஸ்தூரி, ஆனந்தவல்லி டீச்சர்களை சமீபத்தில்  இவர் கண்டபோது நடந்த அனுபவங்களை எழுதி இருக்கிறார். சாலையோரம் இவரருகே நின்று கொண்டு மாணவன் மற்றும் டீச்சர்களுக்கு இடையே நடக்கும் மலரும் நினைவுகளை நாமும் கேட்டு வருவது போன்ற உணர்வை தந்த சிறந்த பதிவு அது. 


'நீயெல்லாம் என்னத்தடா எழுதற?' என்று மனசாட்சி பொளேரென அறைய வேதம் புதிது பாலுத்தேவர் போல மூன்று முறை முகத்தை திருப்பித்தொலைந்தேன்.
.............................................................

ஜெயம் கொண்டான்: 
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் மே மூன்றாம் தேதி நடைபெற உள்ளதாம். வெற்றி பெற்றோரின் பட்டியல் முன்பே வந்திருப்பினும் அது குறித்து சிறுகுறிப்பு வரைவதற்கான சந்தர்ப்பம் இப்போதுதான் வாய்த்துள்ளது. சிறந்த நடிகர், படத்திற்கான விருதை பான் சிங் தொமர் வென்றிருப்பது மகிழ்ச்சி. சென்ற ஆண்டு என்னை மிகவும் கவர்ந்த ஹிந்தி திரைப்படமாக விக்கி டோனரை குறிப்பிட்டு இருந்தேன். சிறந்த ஜனரஞ்சக சினிமாவாக உஸ்தாத் ஹோட்டலுடன் அப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த துணை நடிகராக அன்னுகபூர்(விக்கி டோனர்) வாகை சூடி இருப்பதும் பொருத்தமே. கேங்ஸ் ஆப் வாசேபூருக்கு பிரதான விருதுகள் கிடைக்கும் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்:

பான் சிங் தொமர்  உஸ்தாத் ஹோட்டல் ஹிந்தி சினிமா 2012

....................................................................

இருவர் உள்ளம்: 
சென்ற வாரம் எக்ஸ்பிரஸ் அவின்யூ சென்றபோது எடுத்த க்ளிக். பொம்மை போல இருக்கும் சீன, கொரிய, ஜப்பான் குழந்தைகளை கண்டாலே மனம் துள்ளியாடும். இம்முறை கொரிய பெண் பிள்ளைகள் இருவர் கண்ணில்பட ஒரு க்ளிக் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டேன். அச்சத்தில் தங்கை தாயின் பின்னே ஒளிந்து கொள்ள,  மூத்தவளோ வெட்கத்தில்நிலம் டைல்ஸ் பார்த்தாள். யாதும் ஊரே....  
                                                             

................................................................

யார்: 
கடந்த சில மாதங்களாக அயல்நாட்டு தொலைபேசி எண்களில் இருந்து  சிற்சில  அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலும் அலுவலக நேரம் பார்த்து கால்கள் வருவதால் பேச இயலவில்லை. அழைத்த நண்பர் தயை கூர்ந்து ஒரு மின்னஞ்சல்(madrasminnal@gmail.com) அனுப்பினால் பேசுவதற்கு உகந்த நேரத்தை குறிப்பிட ஏதுவாக இருக்கும். இதுவரை உரையாட சந்தர்ப்பம் கிடைக்காதற்கு எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.
............................................................

மை: 
சமீபத்திய ஆனந்த விகடனில் ஜெ அரசை ஏகத்துக்கும் போற்றி திருமாவேலன் எழுதிய கட்டுரை  தீவிர தி.மு.க. எதிர்ப்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க. ஆதரவாளர்களை கூட வாய் விட்டு சிரிக்க வைக்கும். ஜெ ஆட்சியில் ஒரு குறை கூட இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தது அந்த ஜெயா ஹோ' புகழாரம். சும்மா சொல்லப்படாது. டக்கர் டமாசுங்கோ. இன்று காலை குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைப்பட டைட்டில் 'சிதைந்ததா மாணவர் ஒற்றுமை? -  கொண்டாட்டத்தில் தி.மு.க'. அடேங்கப்பா. 

தி.மு.க. மீது வெறுப்பை உமிழும் அளவிற்கு கோபங்கள் பலருக்கு இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் தொடர்ச்சியாக இம்மாதிரி சார்புநிலை உடைய கவர் ஸ்டோரி   கட்டுரைகள்  எழுதி வருவது முன்னணி இதழ்கள் என்று கருதப்படும்(!)  விகடன், குமுதம் மீதான மரியாதையை குறைத்தே வருகின்றன என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

அருகில் இருந்து பார்த்தது போல கட்டுரைகளின் கடைசி வரிகளில் இவர்கள் எடுக்கும் அஸ்திரம் 'நம்மிடம் பேசிய கட்சியின் பிரமுகர் ஒருவர் இக்கருத்தை முன்வைத்தார்'. அது அந்த பத்திரிக்கைகளின் கருத்தா அல்லது நிஜமாகவே அப்படி ஒருவர் பேசினாரா என்பது மயிலை கபாலிக்கே வெளிச்சம்!!
............................................................... 


.......................................
சமீபத்தில் எழுதியது:


....................................

7 comments:

சீனு said...

சின்ன புள்ளை எல்லாம் பயந்து ஒளியுது கலி முத்திடிச்சு டோய்...

யார்:
ஒருவேள ஒபாமாவா இருக்குமோ

எனக்குத் ட்ஜெரிந்த வரையில் விகடன் திமுக சார்பு பத்திரிகை என்று நினைக்கிறன்.. எப்போதாவது தான் இது போன்ற கட்டுரைகள் வருவதுண்டு

சக்தி கல்வி மையம் said...

ஒருநல்ல பதிவை படிக்க வைத்ததற்கு நன்றி சிவா...

பீஷ்மர் ராக்ஸ்..

Unknown said...

யாரு என்ன சொன்னாலும் கண்டுக்காத கட்சி திமுக தான் அதான் எல்லாம் நல்லா காட்சுவாங்க? அம்மாவை பத்தி எழுதுனா என்ன நடக்கும்னு தெரியாதா அவங்களுக்கு?

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பகிர்வை ரசிக்க வைத்தமைக்கு நன்றி... எல்லோருக்கும் என்றும் இந்த ஆனந்தம் நிலைக்கட்டும்...

நன்றி...

சுபா said...

ஒன்னு ரைட் க்ளிக் அலவ் பண்ணனும். இல்ல ஹைபர்லின்க் புது விண்டொவ்ல ஓபன் ஆகணும். ரெண்டுமே இல்லாட்டி எப்டின்னே. உங்க பதிவ பாதியில விட்டுட்டு அடுத்த வலைக்கு தாவணுமோ ?

Shankar said...

Hi. Good article . I too love that restaurant.incidentaly, it is in Narmada Ghana Sabha hall. Or, am I wrong and there is a branch at music academy too. Clarify.
Shankar


திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - பனி சறுக்கு விளையாட்டு

Related Posts Plugin for WordPress, Blogger...