Emmanuel:
சில காலமாக பீல்ட் அவுட் ஆகி இருந்த மம்முட்டி புதிய ரவுண்டில் வெற்றிகரமாக வலம் வர துவங்கிவிட்டார். அதற்கு இன்னொரு ஆதாரம்தான் இம்மானுவேல். சொற்ப சம்பளத்திற்கு ஒரு பழங்கால பத்திரிகை ஆபீசில் வேலைபார்க்கும் மம்முட்டிக்கு முற்றிலும் நவீன சூழலில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. நேர்மையான ஹீரோவான (!) இம்மானுவேலுக்கும்,தில்லுமுல்லு மேனேஜருக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் களம். 'என்னடா இந்தப்படம் சத்யம்ல ரிலீஸ் ஆகல?' என்று புலம்பும் சேட்டன்களுக்கு பி.வி.ஆர்.தான் ஒரே நிவாரணி. நான் இம்மானுவேலை தரிசித்ததும் பி.வி.ஆர் நைட் ஷோவில் தான்.
இன்சூரன்ஸ் வேலையில் சேர 25 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது என்பது கம்பனி பாலிசி. ஆனால் பலத்த சிபாரிசுடன் அந்த தடையை தகர்த்து இளைஞர்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்கிறார் மம்முட்டி. ஐந்து பேர் சேர்ந்து கேள்விக்கணைகளை தொடுக்க நிலைகுலைகிறார் இவர். 'சரி பரவாயில்லை. ஏதேனும் ஒரு பொருளை எம்மில் ஒருவருக்கு விற்றுக்காமியுங்கள்' என டெஸ்ட் வைக்கின்றனர்.
தனது பழைய செல்போன் கவரை ஃபஹத்திடம் நீட்டி 'இதன் விலை 60 ரூபாயென ரோட்டோர வியாபாரி சொன்னான். என் மனைவி பேரம் பேசி 50 ரூபாய்க்கு வாங்கினாள். நீங்கள் 100 ரூபாய் தந்து இதை வாங்கினால் 2 00 ரூபாய்க்கு விற்பது எப்படி என செய்து காட்டுகிறேன்' என்கிறார் மம்முட்டி. 'பிடி 100 ரூபாயை' எனக்கூறி செல்போன் கவரை வாங்கிவிட்டு 'எங்கே உனது சாமர்த்தியத்தால் இதை 200 ரூபாய்க்கு விற்றுக்காட்டு பார்க்கலாம்' என ஃபஹத் செல்போன் கவரை அவரிடம் மீண்டும் நீட்ட அதற்கு மம்முட்டியின் பதில் '50 ரூபாய் பொருளை 100 ரூபாய் தந்து வாங்கிவிட்டீர்கள். அதை மீண்டும் வாங்க நான் என்ன முட்டாளா?'. இதன் மூலம் வேலைக்கு செலக்ட் ஆகிவிடும் மம்முட்டி மீது அவ்வப்போது 'உர்ர்' முகம் காட்ட ஆரம்பிக்கிறார் ஃபஹத்.
மம்முட்டியை விட நடிப்பில் மிளிர்வது ஃபஹத் தான். கார்ப்பரேட் சூழலுக்கு பாந்தமாக பொருந்தும் முகவெட்டு, நுனிநாக்கு ஆங்கிலம் கலந்த அதிகார தோரணை..அருமை. ஒத்துப்போகாத மேனேஜர்-தொழிலாளி கெமிஸ்ட்ரி இவருக்கும், மம்முட்டிக்கும் இடையே பக்காவாக ஒத்துப்போகிறது. ஆபீஸ் ப்யூனாக சலீம். நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லாமல் போய்விட்டது இவருக்கு. கேன்சர் நோயாளியாக தாமிரபரணி பானு. தலைமுடி உதிர்ந்து, உடலிளைத்த பெண்ணாக வரும் ஓரிரு காட்சிகளில் மேக்கப் தத்ரூபம். மேக்கப் மேனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள். சமீபத்தில் மறைந்த மூத்த நடிகை சுகுமாரி இன்சுரன்ஸ் பணத்திற்காக அலைச்சலுக்கு உள்ளாகும் சோகம் ததும்பும் கேரக்டரில் வந்து செல்ல, குட்டிக்கவியாக ஃபக்ரு சில நிமிடங்கள் சிரிக்க வைத்துவிட்டு காணாமல் போகிறார்.
கோடீஸ்வர பெண் தொழிலதிபர் ஒருவரிடம் இன்சுரன்ஸ் கேன்வாஸ் செய்ய மம்முட்டிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. 'எனது காரை பாலோ செய்து வாருங்கள்' என அப்பெண் சொல்ல தனது டூவீலரில் பின்தொடர்கிறார் மம்முட்டி. சிக்னல் ஒன்றில் வண்டி நொண்டியடிக்க அதை அப்படியே விட்டுவிட்டு சில கிலோ மீட்டர் தூரம் காருக்கு பின்னாலேயே ஓடுகிறார் தலைவர். அதுவும் சாதாரண கார் அல்ல. 'ஆடி' காராம். எந்த சேட்டா இது??
மம்முட்டி மனைவியாக வரும் ரீனு சிம்ப்ளி & ஹோம்லி. குட்டிப்பையன் கவுரி சங்கர் பேசும் செல்லமான வசனங்கள் அனைத்தும் செவிக்கினிமை. தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் நடக்கும் தகிடுதத்தங்களை வெளிச்சம் போட்டி காட்டியிருக்கும் இயக்குனர் லால் ஜோஷிற்கு சபாஷ் போடலாம். படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வரும் நவீன ஆபீஸ் சூழல் முழுக்க செட் என்பதை நண்பர் சொல்லித்தான் கேள்விப்பட்டேன். எனவே கலை இயக்குனருக்கும் ஒரு சபாஷை மிச்சம் வைக்கலாம்.
அ ஃப்சல் இசையில் 'மனதுதிச்சது' பாடல் பலமுறை நம்மை கேட்கத்தூண்டும் க்யூட் க்ளாச்சிக். மொத்தத்தில் ஒருதரம் பார்க்கக்கூடிய ஃபீல் குட் பேமிலி சினிமா இந்த இம்மானுவேல்.
............................................................
Ladies & Gentleman:
இப்படத்திற்கு என்ன விமர்சனம் எழுதுவது என்று மண்டை காய்கிறது. லால் ரசிகர்கள் பெருத்த ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படமென பில்ட் அப்பை ஏற்றி டிக்கட் ரிசர்வ் செய்தார் கேரள நண்பர். நம்பிப்போய் வெம்பி திரும்பியதுதான் மிச்சம். இம்மானுவேல் போல யூத்/மாடர்ன் சூழல் நிறைந்த கதைக்களத்தில் அரிதாரம் பூசி இருக்கிறார் மோகன் லால்.
தனது லட்சியம் நிறைவேறாமல் தற்கொலை செய்ய முயலும் இளைஞன் சரத்தை காப்பாற்றி அவனுக்கு ஐ.டி. நிறுவனம் ஒன்றை அமைத்து தருகிறார் ஜென்டில்மேன் சந்திரபோஸ். எந்நேரமும் போதையில் மிதக்கும் போஸ் இயற்கையில் ரொம்ப நல்லவர்/புத்திசாலி. மிகப்பெரிய ஐ.டி.நிறுவன அதிபரான தனது தந்தையை வெறுத்து சரத் மற்றும் அவனது தோழர்களின் புதிய முயற்சிக்கு தோள் கொடுக்கிறார் அனு(மம்தா மோகன்தாஸ்). குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்ட துவங்கியதும் தன்னிச்சையாக முடிவெடுக்க ஆரம்பிக்கிறான் சரத். நட்பில் விரிசல் விழ இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.
குடிபோதையில் முதல் அரைமணிநேரம் மோகன்லால் கலாபாவன் சஜோனுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் தியேட்டரில் குழந்தைகள் உட்பட அனைவரும் சிரித்து மகிழ்கிறார்கள். படத்தில் ஏகப்பட்ட ஸ்டார்கள் அணிவகுக்க 'சம்திங் ஸ்பெஷல்' என்று நம்பினால் போகப்போக இழுவையின் உச்சத்திற்கு செல்கிறது கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் உள்ளிட்ட அனைத்தும்.
ஏர் ஹோஸ்டஸ் என்கிற பெயரில் பத்மப்ரியாவின் ஹேர் ஸ்டைல், டூயட் பாடலில் மீரா ஜாஸ்மின் ஆன்ட்டியின் முகத்தில் அப்பப்பட்டு இருக்கும் அப்பப்பா மேக்கப்...கெரகமடா தேவுடா. சென்ற ஆண்டு மம்முட்டி நடித்த கோப்ரா எனும் சொத்தையான படத்திற்கு போட்டியாக மோகன்லால் தரப்பில் இருந்து வந்திருக்கிறது இந்த சித்திரம்.
பலத்த தலைவலியுடன் படம் முடிந்து வெளியே வந்து டிக்கட் எடுத்த நண்பரை முறைத்து பார்க்க 'சேம் ப்ளட். சாரி' என்றார் பரிதாபமாக. இந்த ரம்பத்திற்கு எதற்கு இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக காட்சிகள் அமைத்தார்களோ? இயக்குனர் சித்திக்...ஆனாலும் ஒமக்கு ஓவர் ரவுசு ஓய். நேரில் கண்டால் சவட்டி களையும்.
..........................................................