CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, March 28, 2013

Traffic - சென்னையில் ஒரு நாள்

                                                             
                             

நாளை தமிழில் ரிலீஸ் ஆகவுள்ள 'சென்னையில் ஒரு நாள்' படத்தின் ஒரிஜினல்தான் இந்த ட்ராஃபிக் எனும் மலையாள சினிமா. சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படமாக்கி உள்ளனர். 2011 ஆம் ஆண்டு கேரளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது இப்படைப்பு. 

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக சஸ்பன்சனில் இருக்கும் காவலர் ஸ்ரீனிவாசன், சினிமா ஸ்டார் சித்தார்த், டி.வி.நிருபர் வேலைக்கு தேர்வாகி முதல் நாள் ப்ரோக்ராமிற்கு செல்லும் இளைஞர் வினீத், திருமண நாளை கொண்டாட உள்ள டாக்டர் குஞ்சக்கோ..இவர்கள் வாழ்வை செப்டம்பர் 16 ஆம் தேதி எப்படி புரட்டிப்போடுகிறது என்பதுதான் கதை. 

அன்றைய நாளில் பைக்கில் நண்பனுடன் செல்லும் வினீத்தை கார் ஒன்று அடித்து தள்ள கோமாவில் விழுகிறார். ப்ரெயின் டெட் ஆன அவரது இதயத்தை சித்தார்த்தின் 13 வயது மகளுக்கு பொருத்த ஆலோசனை சொல்கின்றனர் டாக்டர்கள். கொச்சியில் இருந்து பாலக்காடு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியான வேகத்தில் வண்டியை ஓட்டி இதயத்தை ஒப்படைக்கும் பொறுப்பு ஸ்ரீனிவாசனுக்கு வழங்கப்படுகிறது. பயணத்தின் இடையே நடக்கும் பல்வேறு சிக்கல்களை எப்படி அனைவரும் சமாளிக்கின்றனர் என்பதை பரபரக்கும் எமோஷனல் த்ரில்லராக எடுத்துள்ளார் இயக்குனர் ராஜேஷ்.

வேலையில் கரும்புள்ளி விழுந்த சோகத்தில் இருப்பவராக ஸ்ரீனிவாசன். இடைநீக்கம் முடிந்த பிறகு அந்த அவப்பெயரை துடைக்க தானே முன்வந்து பாலக்காட்டிற்கு வண்டியை ஓட்டிச்செல்ல தயார் என்கிறார். அதுவரை அவரது சோகம் படர்ந்த நடிப்புத்திறன் சிறப்புதான் என்றாலும் அதிமுக்கிய பயணத்தின்போதும் அதே இறுக்கத்துடன் இருந்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. கதையின் முக்கியமான கேரக்டர் இவர். குறித்த நேரத்தில் இலக்கை அடைய வேண்டும் எனும் படபடப்பு நிரம்பிய முகபாவம் இல்லாதது குறைதான்.  தமிழில் சேரனாம். நம்மாள் ரொமான்ஸ் சீனிலேயே மூட் அவுட் ஆனது போல ரியாக்சன் தருவார். இருந்தாலும் இந்த கேரக்டரில் சேரன் ஸ்ரீனிவாசனை விட நன்றாக நடித்து விடுவார் என பலத்த நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக காரோட்டும் படபட நிமிடங்களில்.
                                                                

அஜ்மல் நாசர் எனும் போலீஸ் கமிஷனராக வரும் அனூப் மேனன்தான்  இயல்பான நடிப்பினால் அதிகமாக ஸ்கோர் செய்கிறார். 'கொச்சி டு பாலக்காடு மிஷன் சாத்தியமே இல்லை. ட்ராஃபிக்கை அவ்வளவு நெடிய தூரம் ஒழுங்குபடுத்துவது லேசான காரியமில்லை. சற்று பிசகினாலும் பாலக்காட்டில் உயிருக்கு போராடும் சிறுமி மற்றும் இவ்வழி செல்லும் பொதுமக்கள் ஆகியோரில் எவருக்கேனும் பிரச்சினை நேர்ந்தால் போலீஸ்தான் பொறுப்பு ஏற்க வேண்டி வரும்' என்று கோபத்துடன் பெரிய டாக்டர் ஒருவருடன் பேசிவிட்டு இறுதியில் நிலைமை உணர்ந்து மிஷனுக்கு சம்மதம் தெரிவிக்கும் இடம், அதன் பின் சக அதிகாரிகளுடன் இணைந்து கட்டளைகள் போடுமிடம் என மேன் ஆஃப் தி மாட்ச் பெர்பாமன்ஸ் தந்துள்ளார் அனூப். இந்த வேடத்தை தமிழில் ஏற்றிருப்பது சரத்குமார். லெட்ஸ் ஸீ.  

வினீத் ஸ்ரீனிவாசன், ரஹ்மான், குஞ்சக்கோ, சந்தியா, ரம்யா நம்பீசன் என நட்சத்திர கூட்டம் நிரம்பி இருக்கிறது. படம் நெடுக மெஜோ ஜோசப்பின் பின்னணி இசை பக்கபலமாக. குறிப்பாக நெரிசல் மிக்க பிலால் காலனியில் கார் புகுந்து செல்லுமிடத்தில் மெஜோவின் வாத்தியங்கள் மெகா ஜோர். விபின் மற்றும் ஹிஷாம் குரல்களில்  இறுதியில் வரும் 'கன்னேரிஞ்சல்' பாடல் நாடோடிகள் சங்கர் மகாதேவனின் சம்போ சிவா சம்போ வேகத்தில் பின்னியெடுக்கிறது. 

ராதிகா, ப்ரகாஷ்ராஜ், ப்ரசன்னா என வலுவான ஸ்டார் காஸ்டை தமிழில் தேர்ந்து எடுத்து இருப்பதால் ட்ராஃபிக்கிற்கு இணையாக சென்னையில் ஒரு நாள் வரவேற்பை பெரும் என மனது சொல்கிறது.போரடிக்காத ஒரு எமோஷனல் த்ரில்லர் திரைப்படம் என்பது தமிழில் எப்போதேனும் பூக்கும் குறிஞ்சிப்பூதான். ரசிகர்களுக்கான அத்தருணம் நாளை முதல் தமிழக திரையரங்குகளில் காத்திருக்கிறது. தவற விட வேண்டாம்.
..................................................................          
  

7 comments:

Unknown said...

கண்டிப்பா பார்க்கணும்னே

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

சென்னை பித்தன் said...

வித்தியாசமான படைப்பாகத்தான் தெரிகிறது. தமிழையும் பார்த்து விட்டு விமரிசனம் எழுதி விடுங்கள் சிவா!

Yoga.S. said...

அறிமுகத்துக்கு நன்றி.இங்கெல்லாம் வராது,இணையம் தான்!

திண்டுக்கல் தனபாலன் said...

தொலைக்காட்சியிலும் விளம்பரம் அசத்தல்... பார்க்க வேண்டும்...

நன்றி...

கார்த்திக் சரவணன் said...

நாளை இந்தப்படத்தைப் பார்க்கவிருப்பதால் கதையைப் படிக்கவில்லை...

DaddyAppa said...

நம்ம சுஜாதா சார் இதே நாட் வெச்சு ஒரு சிறுகதை எழுதி இருக்கார்.

Related Posts Plugin for WordPress, Blogger...