CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, March 3, 2013

The Attacks of 26/11

 
                 
இவ்வாண்டு எதிர்பார்த்து காத்திருந்த படங்களுள் ஒன்று. மும்பை தீவிரவாத தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்கு பிறகு தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட ரத்தக்கறை படிந்த இடங்களை இயக்குனர் ராம் கோபால் வர்மா சுற்றிப்பார்த்தது சர்ச்சையை கிளப்பியது. இந்த கோர நிகழ்வுகளை திரைப்படமாக எடுத்தே தீருவேன் என்று அப்போது கூறினார். ஒருவழியாக  நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆகி உள்ளது The Attacks of 26/11. அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையும்  இதில் 'அடக்கம்'. 

ஜாய்ன்ட் கமிஷனர் நானா படேகர் பார்வையில் மொத்த கதையையும் சொல்லி இருக்கிறார்கள். தீவிரவாதிகள், அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட வெவ்வேறு சாராரின் கருத்துக்களை திணித்து சராசரி ரசிகனை சுற்றலில் விடாமல் நடந்த சம்பவங்களை மட்டுமே பெரும்பாலும் திரையாக்கம் செய்துள்ளார் ராம் கோபால். இப்படத்தின் முதல் 7 நிமிட காட்சிகளை ஏற்கனவே இணையத்தில் ரிலீஸ் செய்து அதிரடி விளம்பரம் தந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் சிலர் படகில் கராச்சி கடலோரம் தம்மை அறியாமல் சென்று விட அவர்களை வளைத்துப்பிடிக்கிறார் டெர்ரர் அட்டாக் தலைவன். 10 இளைஞர்களை வெடிகுண்டு மற்றும் நவீன ரக துப்பாக்கிகளுடன் அப்படகில் ஏற்றி விட்டு மும்பை அரபிக்கடலோரம் இறக்கிவிடுமாறு இந்தியரை மிரட்டி அனுப்புகிறார். அந்நாள் இரவு 9 முதல் 1 மணிவரை லியோபோல்ட் கஃபே, தாஜ் ஹோட்டல், காமா ஹாஸ்பிட்டல் மற்றும் சிவாஜி ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நடக்கும் கொலைவெறி தாக்குதல்கள் நடக்கும் காட்சிகளில் எல்லாம் ரத்தாபிஷேகம்தான். தாஜ் ஹோட்டலில் அனுமதி கிடைக்காததால் அச்சு அசலாக செட் போட்டு உள்ளனர். லியோபோல்ட் கஃபேயின் உரிமையாளரே தான் சம்மந்தப்பட்ட சீனில் நடித்துள்ளார். குழந்தைகள், பெண்கள், நாய் என  பாரபட்சம் பார்க்காமல் தீவிரவாதிகள் கொன்று குவிக்கும்  நிமிடங்கள் எல்லாமே கண்டிப்பாக 18+ ஆட்களுக்கு மட்டுமே!      

                                                                  
ஏற்கனவே ஹிஸ்டரி சேனலில் கராச்சியில் தீவிரவாதிகள் படகேறுவது முதல் தாக்குதலுக்கு பிந்தைய நிகழ்வுகள் வரை அங்குலம் அங்குலமாக அலசி எடுக்கப்பட்ட சிறப்பு ஆவணப்படம் ஒன்றை பார்த்தேன். அதைத்தாண்டி இதில் புதிதாக என்ன உள்ளது என்று கேட்டால் கண்டிப்பாக சில விஷயங்களை சொல்லலாம்.சம்பவங்கள் நடந்த இடங்களில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் (எண்ண) ஓட்டங்கள், தாஜ் ஹோட்டல் மற்றும் காமா ஹாஸ்பிட்டல் நடக்கும் அதிரடி தாக்குதல்கள், கசாப் பிடிபடுதல் மற்றும் அவனை தூக்கிலிடும் கட்டங்கள் போன்றவற்றை நேரில் பார்ப்பது போல் படமாக்கியிருக்கும் விதம் சிலிர்க்க வைக்கும் சிகப்பதிகாரம்.

கசாப் வேடத்தில் நடித்த சஞ்சீவ் பாஸ்மார்க் எடுக்கிறார். ஆனால் பெரிதாக ஸ்கோர் செய்வது தலைவர் நானா படேகர் தான். கொடுரம் நடந்தேறிய தருணத்தில் தான் எப்படி செயல்பட்டேன் என்பதை விளக்குமிடங்களில் அருமையான நடிப்பு. குறிப்பாக ஜிகாத், குர் ஆன் பற்றி கசாப்பிற்கு மார்ச்சுவரியில் தெளிவுபடுத்தும் சீனில் 'தான் ஏன் தேசத்தின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவனாக போற்றப்படுகிறேன்'என்பதை திண்ணமாக நிரூபிக்கிறார். "இது(கசாப்)வெறும் நாய்தான். முதலாளி குலைக்க சொன்னதால் குலைத்துள்ளது. ஏவி விட்டவனை பிடிக்க வேண்டும்" என ஆங்காங்கே நறுக்குத்தெறிக்கும் வசனங்கள்.

படபடக்கும் தருணங்களின்போது இடையூறின்றி வந்து செல்கின்றன பாடல்கள்.  'மவுல மவுல' பாடல் மயிர்கூச்செறிய வைக்கிறது. தாஜில் கமாண்டோக்கள் தீவிரவாதிகளிடம் மோதும் முக்கியமான நிகழ்வு படத்தில் இடம்பெறாதது குறையாக விமர்சிக்கப்படுகிறது. இதுபோக 'இவர்கள் கோணத்தில் ஏன் சொல்லவில்லை, அவர்கள் பற்றிய விஷயத்தை ஏன் பதிவு செய்யவில்லை' என்று விமர்சன கூப்பாடுகளும் இல்லாமல் இல்லை.

                                                                 
118 நிமிடங்களே ஓடும் திரைப்படத்தில் 'எல்லா சம்பவங்களையும் ஏன்யா காட்டல?' எனக்கேட்பது இந்திய திரை ரசிப்புத்தனங்களில் ஒன்றாகிப்போனது ஆச்சர்யமல்ல. "26/11/2008 அன்று இரவு 9 முதல் 1 மணிவரை நடந்த நிகழ்வுகளை அரசியல் சாயம் பூசாமல் படமாக்கி உள்ளேன்'' என்று தெளிவாக இயக்குனர் சொன்ன பிறகும் இப்படி கேள்விகள் எழுப்புவது விந்தைதான்.

ஈ.வெ .ரா எனும் மாமனிதரின் 94 ஆண்டு கால வாழ்க்கையை 'பெரியார்' எனும் ஒற்றை படத்தின் மூலம் பதிவு செய்ய முனைந்து எப்படி மூச்சு திணறினார்கள் நம்மூர் படைப்பாளிகள் என்பது பலருக்கு தெரியும். அதுபோல 26/11 அட்டாக்கை பரிபூரணமாக 2 மணி நேரத்திற்குள் அடைத்து அழுத்த வேண்டும் என நினைப்பது எந்த அளவிற்கு சரி என்பது முக்கியமான கேள்வி. ஹாலிவுட்டில் ஹிட்லர் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்து டவ்ன்ஃபால், சிண்ட்லெர்ஸ் லிஸ்ட், இங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ் மற்றும் சாப்ளினின் தி க்ரேட் டிக்டேட்டர் என பல படங்கள் எடுக்கப்பட்டது போல மும்பை தாக்குதல் குறித்து The Attacks of 26/11 சொன்ன விதத்தை தாண்டி வெவ்வேறு கோணங்களில் இன்னொரு இயக்குனர் படமாக்கினால் தடுப்பார் யார்?

எது எப்படியோ நோண்டி நொங்கெடுக்கும் பிதாமகர்களை பற்றி கவலைப்படாமல்  26/11 தாக்குதலின் கோர தாண்டவத்தை சாதாரண சினிமா ரசிகனின் பார்வைக்கு நெருக்கமாக கொண்டு சேர்த்துள்ள ராம் கோபால் வர்மாவின் தோள்களை தட்டிக்கொடுக்கலாம்.

 The Attacks of 26/11 - கசாப்(பு) கடை 
..............................................................................

முந்தைய பதிவு:

அம்மா ஸ்பெஷல் மீல்ஸ்          
                              

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுருக்... நறுக்... (விமர்சனமும்)

CS. Mohan Kumar said...

Good to know that RGV has taken a decent and effective film after sometime.

Unknown said...

Nice

கவியாழி said...

நிச்சயம் வர்மாவின் முயற்சியை மதிப்போம் .தியேட்டரில் போய் படம் பார்கிறேன்

ஆமினா said...

வர்மா என்னவர்க்கு பிடித்த இயக்குநர். பேய் படம் தவிர்த்து அனைத்துபடங்களும் பிடிக்கும் (அப்பன்னா 3,4 படம் தான் தேறும்ன்னு சொல்றது தெரியுது :-)

இந்தபடம் பத்தி இப்பதான் இந்தபோஸ்ட் மூலம் கேள்விபடுறேன். வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன் :-)

நேர்த்தியான விமர்சனம்... வாழ்த்துக்கள்

சிராஜ் said...

ஒரு படம் விட்றது இல்லை போல சிவா???

பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நீங்க தான் ரீப்லேஸ்மெண்ட் னு நினைக்கிறேன்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Related Posts Plugin for WordPress, Blogger...