Lucky Star:
கோட்டயம் சென்ட்ரல் சினிமாஸில் சில நாட்களுக்கு முன்பு பார்த்த படமிது. கேரளத்தில் இருந்து வந்து சென்னையில் சினி டெய்லராக வேலைபார்க்கும் ஜெயராம். மனைவியாக ரச்சனா. வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் முன்னேற படாத பாடு படும் ஜெயராமுக்கு திடீரென ஒரு ஜாக்பாட் அடித்து எப்படி முன்னேறுகிறார் என்பதே கதை. அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் வாடகைத்தாய் தேடி டாக்டரை (முகேஷ்) அணுகுகின்றனர். தமக்கு பிள்ளையை ஈன்றெடுக்கப்போகும் பெண்மணி ஓரளவேனும் அழகாய் இருக்க வேண்டும் என்பது அத்தம்பதிகளின் முக்கிய கண்டிஷன்.
அப்படி ஒரு பெண்ணை ஜெயராம் துணையுடன் தேடி அலைந்து நோகின்றார் டாக்டர். 'நிதி சிக்கலில் தள்ளாடும் குடும்பத்தை காப்பாற்ற ஏன் நானே வாடகைத்தாய் ஆகக்கூடாது?' என யோசனை சொல்கிறார் ரச்சனா. முதலில் மறுத்து பிறகு ஒருவழியாக ஜெயராம் சம்மதிக்கிறார். அழகிய ஆண்பிள்ளையை பெற்றெடுக்கும் நேரத்தில் இவர்களுக்கு வந்து சேர்கிறது பேரதிர்ச்சியும், பேரின்பமும். மகனுக்கு இவர்கள் வைக்கும் பெயர் லக்கி. சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட படத்தில் நகைச்சுவை, சென்டிமென்ட் இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து தந்துள்ளார் இயக்குனர் தீபு.
ஜெயராம், முகேஷ் மற்றும் பூஜா ஆகியோரின் நடிப்பு நன்று. துணை நடிகர்கள் ஏஜண்டாக மம்முகோயாகவின் பெர்பாமன்ஸ் வழக்கம்போல் நிறைவு. ஆனால் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்து பட்டையை கிளப்பி இருக்கிறார் ரச்சனா.முக்கியமான காட்சிகளில் இவரது கேரக்டர் 'இதைத்தானே செய்யப்போகிறது' என்று எதிர்பார்க்கும் இடங்களில் எல்லாம் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்து அதகளம் செய்துள்ளார். சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சமீபகால தென்னிந்திய சினிமாவில் நாயகிகளின் நடிப்புத்திறன் பெரும்பாலும் என்னை ஈர்த்ததில்லை. அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்து எனது அபிமான நடிகையாகிவிட்டார் ரச்சனா.
உதாரணத்திற்கு 'மகளுக்கு ஃபீஸ் கட்ட இன்னும் பெரிய தொகை தேவைப்படுகிறதே..என்ன செய்யலாம்?' என ஆலோசிக்கும் தருணத்தில் தனது தங்க செயின் மீது கை வைக்கும் ரச்சனாவை ஜெயராம் நன்றி கலந்த பார்வை பார்க்க, சட்டென மகளை நோக்கி கையை காட்டியவாறு 'இவளோட செயினை வைத்து ஃபீஸ் கட்டினால் என்ன?' என்று ரச்சனா சொல்லுமிடம் ரவுசு. ஜெயராம் கடையில் வேலை செய்யும் இஸ்திரி முத்து பேசும் தமிழ் கொடுமை. விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு 'என்ன கொடும சரவணன்?'. மொக்கையான ஆங்கிள்களில் கோடம்பாக்க, வடபழனி ஏரியாக்களை அவர் கவர் செய்திருக்கும் விதம்..விதி விட்ட வலி!!
இரண்டாம் பாதி முழுக்க எமோஷனல் தருணங்களால் நிரம்பி இருக்கிறது லக்கி ஸ்டார். பெரியளவில் ஆச்சர்யங்களை தராத திருப்பங்கள் இரண்டாம் பாதியில் இருந்தாலும் அழுத்தமான சீன்களால் நம்மை ஆட்கொண்டு விடுகின்றது. லக்கியாக வரும் சிறுவன் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் க்ளைமாக்ஸில் மனதை கனக்க வைத்து விடுகிறான்.
ஹிந்தியில் கலக்கிய விக்கி டோனர் திரைப்படத்தின் வேறொரு வடிவமாக வந்திருக்கும் நல்லதொரு குடும்ப திரைப்படம்.
....................................................................
Amen:
சமகால மலையாள சினிமாவில் சிறந்த நடிகராக பரிமளித்து வரும் ஃபகத்திடம் இருந்து இன்னுமொரு முக்கிய படைப்பாக வந்துள்ளது ஆமென். இவ்வாரம் சென்னையில் வெளியான இன்னொரு திரைப்படம் மோகன்லாலின் ரெட் ஒயின். ஆனால் ஆமென் தான் எனது சாய்ஸ். ஈஸ்டர் நெருங்கும் நேரத்தில் பொருத்தமாக வெள்ளித்திரையில் காதலிசைத்தாலாட்டு பரப்ப வந்துள்ளது ஆமென்.
குமரகிரி எனும் சிறிய ஊரில் புகழ்பெற்ற கிளாரினெட் வித்வான் மகனான இருக்கும் ஏழை வாலிபன் சோலமனும், அவனது பால்ய வயது தோழியான செல்வந்த புத்ரி சோசன்னாவும் காதல் வயப்படுகின்றனர். தந்தையின் இறப்பால் குமரகிரியின் பிரபல பேன்ட் குழு பெரும் தொய்வை சந்திக்கிறது. அதனால் அவர்களின் எதிர்க்குழு பேன்ட் போட்டிகளில் கோப்பைகளை வெல்கிறது. தந்தையின் மரணத்தால் வாடும் சோலமன் கிளாரினெட்டை திறம்பட வாசிக்க இயலாமல் தவிக்கிறான். திறமையற்றவன் என அவனை ஒதுக்கி சர்ச்சில் எடுபிடி வேலையாள் ஆக்குகின்றனர். அப்போது வெளியூரில் இருந்து குமரகிரிக்கு புதிய ஃபாதராக வந்து சேர்கிறார் இந்திரஜித்(நடிகர் ப்ரித்விராஜின் அண்ணன் இவர்).
ஃபகத்திற்கு பக்கபலமாக நின்று குமரகிரி பேன்ட் குழுவையும், அவனது காதலையும் எப்படி கரை சேர்க்கிறார் இந்திரஜித் என்பதை ஏகப்பட்ட கேரக்டர்களின் சிறந்த நடிப்புத்திறனை வெளிக்கொணர்ந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் இயக்குனர் லிஜோ ஜோஸ்.
ஃபகத்...கிளாரினெட் வாசிக்க தகுதியற்றவன் என சர்ச் தரப்பினால் ஒதுக்கிவைக்கப்படும்போதும், ''உனக்கு எங்கள் வீட்டுப்பெண் மனைவியாக வேண்டுமா?" என்று காதலி வீட்டாரால் அடித்து உதைக்கப்படும்போதும் சோகத்தை முகத்தில் தேக்கியவாறு என்ன பெர்ஃபாமன்ஸ் தருகிறார் சாமி இந்த மனிதர். 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதிக்கு முதல் மலையாளப்படமாம் இது. மினி முட்டை கண்கள் மற்றும் இடது பக்க தெத்துப்பல்...இந்த சௌந்தர்ய தரிசனம் போதாதா நமக்கு? போனசாக காதல், கோபம், தவிப்பு என வெவ்வேறு எக்ஸ்ப்ரசன்களால் அசால்ட் செய்கிறார் இந்த அல்டிமேட் ப்யூட்டி. ஷீ இஸ் ஸ்டன்னிங்லி க்யூட். வேறன்ன சொல்ல!!
இந்திரஜித், கள்ளுக்கடை ஓனராக வரும் மூத்த நடிகை குலப்புள்ளி லீலா, போட்டி பேன்ட் க்ரூப்பின் பிரதான வாத்திய கலைஞர், ஃப்ரெஞ்ச் பெண்மணி இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட கேரக்டர்கள் தனித்தன்மையுடன் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். கலாபாவன் மணி மற்றும் 'லக்கி ஸ்டார்' புகழ் ரச்சனா இருவருக்கும் ஸ்கோப் குறைவாக இருந்தது வருத்தமே. தேங்காய் பறிக்கும் நபர் அவ்வப்போது அடிக்கும் ஒன்லைன் வசனங்கள் செயற்கையாக தெரிவது மைனஸ்.
முதல் பாதியில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்களுடன் நம்மை கட்டிப்போடும் படம் அதன் பின் சற்றே எதிர்பார்த்த பாதையில் பயணிக்கிறது. பேன்ட் குழுவினர்க்கு இடையே நடக்கும் போட்டியில் குமரகிரி அணி வென்றால் சோலோமன் - சோசன்னா திருமணம் உறுதி என சவால் விட ஆரம்பித்த உடனேயே நமதுள்ளத்தில் சோர்வு குடிகொள்ள துவங்குகிறது. இறுதியில் நடக்கும் போட்டியை இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம்.
சில குறைகள் இருந்தாலும் இவ்வாண்டின் குறிப்பிடத்தக்க படங்களில் ஆமென் கண்டிப்பாக இடம் பெற்று விடுமென்பதில் சந்தேகமேயில்லை. அதற்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு: அபிநந்தனின் அசாத்தியமான ஒளிப்பதிவு மற்றும் ப்ரசாந்த் பிள்ளையின் மனதை கொள்ளை கொள்ளும் பின்னணி இசை.
பசுமை போர்த்திய கேரள இயற்கை அழகை பல்வேறு கோணங்களில் மிகச்சிறப்பாக படம் பிடித்து இருக்கிறார் அபிநந்தன். பெரும்பாலான காட்சிகளில் கேரக்டர்களை வெள்ளுடையில் உலவவிட்டு பசுமையும், வெண்மையும் கலந்த ஃப்ரேம்களை ரசிகர்களின் மனதில் ஆழப்பதிய வைத்துள்ளார். இரவு நேரக்காட்சிகளை பிரமாதமான லைட்டிங்கில் ஒளிப்பதிவு செய்திருக்கும் விதத்திற்கு டபுள் சபாஷ்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி தித்திக்கும் ஈஸ்டர் ஸ்பெஷல் சினிமாவை பரிசளித்து இருக்கும் இயக்குனர் லிஜோ ஜோஷிற்கு ஒரு கண்டெய்னர் கிரீட்டிங் கார்டுகள் பார்சல். இன்னும் சிலமுறையேனும் ஆமெனை பார்த்து விடுவதென என எண்ணி இருக்கிறேன் கர்த்தாவே.
கள்ளுக்கடை கலக்கல் கானா காணொளி...
................................................................................
கள்ளுக்கடை கலக்கல் கானா காணொளி...
................................................................................
2 comments:
விமர்சனம் சூப்பர் அண்ணே ஆனா நாங்க எங்க பாக்குறது பார்த்தாலும் புரியாது?
ரச்சனா மிகச்சிறந்த நடிகை , அவர் மனோரமா டிவி சேனலில் மரிமாயம் என்ற சீரியலில் வருவார் (அது அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் பற்றிய சீரியல் மிக அருமையாக நடிப்பார் )
இப்போதும் காமெடி பெஸ்டிவல் என்கிற ப்ரோக்ராம்மில் அங்கார் ஆக வருகிறார் . இவர் கண்கள் குட்டி பத்மினியை நியாபகபடுத்தும் .இவர் சிறந்த நடன கலைஞர் , இப்போதும் நடன நிகழ்சிகளை நடத்தி வருகிறார் .ஆசியாநெட்டில் நேர் கானலில் இந்த விவரங்களை பகிர்ந்திருந்தார் .
Post a Comment