இவ்வாண்டு நடந்த சென்னை புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த இலங்கைத்தமிழ் பெண்மணி ஒருவர் டி.வி.க்கு அளித்த பேட்டி: "இங்கே ஏராளமான ஈழம் சார்ந்த புத்தகங்களை கண்டேன். ஒரு சிலவற்றை தவிர மற்ற அனைத்துமே நம் ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றை அரைகுறையாகவும், அர்த்தமின்றியும் பதிவு செய்துள்ளன.குறுந்தகடு விற்பனைக்கும் பஞ்சமில்லை. தயவு செய்து எம்மை வைத்து ஆளாளுக்கு வியாபாரம் செய்யாதீர்கள் என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்". ஆனால் நாளுக்கு நாள் ஈழத்தை வைத்து தமிழகத்தில் வணிகமும், அரசியல் காய்களும் முன்பை விட இன்னும் வேகமாக நடத்தப்பட்டும், நகர்த்தப்பட்டும்தான் வருகின்றன என்பதை மறுப்பார் யார்?
'நீர் செய்வது நியாயமா தாத்தா?', 'நீங்கள் செய்தது சரியா அம்மா?' என்று பாலச்சந்திரன் சடலமான படத்தை வீதியெங்கும் ஒட்டி மட்டமான ஆட்டம் ஆடுகின்றன இரு கழகங்களும். பாலகனின் இறப்பை வைத்து அரசியல் செய்யும் நிலை தமிழகத்திற்கு நேர்ந்திருக்கும் பேரவமானம். ஈழத்தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் வரை படாடோப பிறந்த நாள் கொண்டாடாமல் நல உதவி மட்டுமே செய்து வந்த நடிகர் விஜயகாந்த் தற்போது தலைவர் ஆனதும் ஈழ விவகாரத்தில் அடக்கி வாசிப்பதும் வெகு சிறப்பு.
ராஜபக்சேவை தூக்கிலேற்று, காங்கிரஸை கருவறு, தமிழின துரோகி கலைஞரை நம்பாதே, இலங்கை வீரர்களை வெளியேற்று...வகை வகையான கோஷங்கள். உச்சக்கட்ட போரில் இத்தனை உயிர்கள் பலியானதற்கு இந்திய-சீன அரசுகளின் ஆயுத உதவி, ராஜபக்சேவின் மிருகத்தனம், அப்போது தமிழகத்தை ஆண்ட தி.மு.க.வின் கபட நாடகம் என பல்வேறு காரணங்களை கூறி போஸ்டர்கள், பேனர்கள், நோட்டீஸ்கள், மேடை உரைகள், இணைய பகிர்வுகள்..எத்தனை எத்தனை.
ஆனால் அனைத்திலும் மேலாக லட்சோப லட்சம் தமிழ் மக்களின் இறப்பிற்கு காரணமாய் அமைந்த துரோகி கருணாவை அனைவரும் மறந்து விட்டோம். புலிகளின் போர்த்தந்திர ரகசியங்களை இலங்கை அரசுக்கு போட்டுக்கொடுத்து இனப்படுகொலைக்கு மிக முக்கியமான பங்காற்றிய இந்த எட்டப்பனுக்கு எதிராக அல்லவா விண்ணதிர குரல்கள் எழுப்பப்பட்டு இருக்க வேண்டும்? எப்படி வந்தது நமக்கு இப்படியொரு மறதி? இனிவரும் போராட்டங்களில் எட்டப்பன் கருணாவை எதிர்த்து குரல்கள் ஒலிக்காமல் இருத்தல் சரியெனப்படுமா?
அந்த நல்லவனுக்கு அடுத்து நம்நாட்டில் இன்னொரு வல்லவர் தமிழர்களுக்கு செய்யும் தொண்டு அளப்பரியது. 'சென்னையில் இருக்கும் இலங்கை தூதரகத்தை கேரளத்திற்கு மாற்ற ஆட்சேபனை இல்லை. ரத்தாகும் சென்னை ஐ.பி.எல் போட்டிகளை எமது மாநிலத்தில் நடத்த தயார்' என தானே முன்வந்து அறிக்கை தருகிறார் உம்மன் சாண்டி. சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்திற்கு உள்ளான தமிழ் மக்களுக்கு மருத்துவ பொருட்களை வாரி வழங்கிய மம்முட்டி எனும் மனிதாபிமானி இருக்கும் அதே கேரளத்தில்தான் இந்த தலைவரும் வாழ்கிறார். வாழ்வாங்கு வாழ்க!!
மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து இருப்பதால் அரண்டு போயிருக்கின்றன பிரதான கட்சிகள். எனவே தமிழகத்தில் 2014 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, 2016 சட்டசபை தேர்தல் வரையும் ஈழத்தை வைத்து கணக்கிலடங்கா கூத்துகள் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை. இதையா ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்? 'எப்படியோ மின்வெட்டு பிரச்னை குறித்து இப்போது யாரும் பெரிதாக பேசவில்லை' என மேடம். ஜெ சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ளலாம்.
ஊத்தி மூடிக்கொண்ட டெல்லி டெ'ஷோ' மாநாடு, தமிழக பந்த் ஆகியவற்றால் 'அம்மா அம்மா. அம்மா மம்ம மா' என்று நொந்து போயிருக்கும் சன் தாத்தாவிற்கு அடுத்த தலைவலி சன் ரைசர்ஸ் 'மூலமாக'. தம்பி கலாநிதி போயும் போயும் சிங்களவன் சங்கக்கராவையா கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும்? "ஸ்ஸ்ஸ்... போடுற பால் எல்லாமே நோ பாலா போனா என்னய்யா அர்த்தம்" என கலைஞர் குமுறுவது அந்தோ பரிதாபம். கலா பிஸினஸில் கலைஞர் அரசியலும், கலைஞர் அரசியலில் கலா பிசினஸும் இப்படியா முட்டிக்கொண்டு நிற்க வேண்டும்? எந்தா சேட்டா!!
சென்னை வரும் சிங்கள பயணிகளை அடித்து விரட்டுவதால் ஈழத்தமிழர் மீதான பற்றை நிரூபிப்பதாக நினைப்பது முட்டாள்தனம். இங்கு சிங்களர்களுக்கு விழும் ஒவ்வொரு அடிக்கும் வட்டியும் முதலுமாக சேர்த்து கடலோர மீனவர்களுக்கும், அப்பாவி தமிழ் சொந்தங்களுக்கும் தண்டனை தராமல் விட்டு விடுமா சிங்கள அரசு? முன்பை விட உக்கிரமாக அல்லவா அவர்களது சித்ரவதைகள் தொடரும்? குறிப்பாக நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் போன்ற ஆக்ரோஷ அண்ணன்மார்கள் இதை உணர்ந்தால் புண்ணியமாய் போகும்.
உண்மையாகவே நெஞ்சில் ஒரு சொட்டு ஈரம் கூட இன்றி ஏட்டிக்கு போட்டியாக போலி ஈழப்பாசம் காட்டி அரசியல் செய்வதாலோ, கட்சிகள் அனைத்தும் தனித்தனியே மேடை கட்டி பொங்குவதாலோ எம்மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்க வாய்ப்பில்லை. ஈழத்தை வைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் இந்த பிக் பஜாரை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருப்பது ராஜபக்சே செய்ததை விட கொடூரமான இன அழிப்பு!!