CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, February 11, 2013

Special 26, Midnight's Children, Lokpal


                                                             
A Wednesday (உன்னைப்போல் ஒருவன்) படத்தை இயக்கிய நீரஜ் பாண்டேவின் லேட்டஸ்ட் ஹிட்டுதான் இந்த ஸ்பெஷல் 26. ட்ரெயிலர் பார்க்கும்போதே சம்திங் ஸ்பெஷல் என உணர்ந்ததால் செவ்வாய் அன்றே ரிசர்வ் செய்து நேற்று பார்த்தேன். 

Fake is real. Real is Fake. இதுதான் கதையின் அடித்தளம். 80 களின் துவக்கத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளாக அக்சய், அனுபம் கேர், ராஜேஷ் மற்றும் கிஷோர். முதல் இருவரும் சி.பி.ஐ. இக்காக இண்டர்வியூ எடுக்கும் காட்சியுடன் துவங்குகிறது ஸ்பெஷல் 26. வேலைக்காக வரும் இளம்பெண்ணை பார்த்து அக்சய் "ஏன் இத்துறையில் சேர ஆசைப்படுகிறீர்கள்?'" எனக்கேட்க அதற்கு அவள் "மக்களை ஏமாற்றி பிழைக்கும் நபர்களை களை எடுத்தாக வேண்டும் சார். அதுதான் எனது லட்சியம்" என்கிறார். அடுத்த கேள்வி  "நீ மட்டும் அதை செய்வாயா?". பதில் "இல்லை சார்...நாம..எல்லாரும்தான்..". இக்காட்சியுடன் ஆரம்பிக்கிறது சி.பி.ஐ.ரெய்டு.

மேற்குறிப்பிட்ட நால்வரும் தங்கள் 48-வது  ரெய்டை டில்லியில் இருக்கும் மந்திரி வீட்டில் துவக்குகிறார்கள். கருப்புப்பணம் அனைத்தையும் பிடித்துவிட்டு மந்திரியிடம் கையெழுத்து வாங்கிவிட்டு கிளம்பும் நேரத்தில் அனுபம் கேரை தனியே அழைத்து 'எவ்ளோ வேண்ணாலும் வாங்கிக்கங்க' என்று பேரம் பேசுகிறார் மந்திரி. அனுபம் 'எவ்வளவு?', மந்திரி 'இரண்டு'. அவர் கன்னத்தில் இரண்டு அறைகளை விட்டு 'போதுமா? ஒரு நேர்மையான அதிகாரியிடம் இப்படியா பேசுவது' என காட்டமாக கூறிவிட்டு வெளியேறுகிறார். சில மணிநேரங்கள் கழிந்த பிறகுதான் தெரிகிறது வந்து சென்றது, வாரிச்சென்றது  எல்லாமே போலி சி.பி.ஐ. க்ரூப் என்று. பிறகென்ன..ஜெட் வேகத்தில் பறக்கிறது ஸ்பெஷல் 26.

போலிகளை கண்டுபிடிக்கும் அசல் சி.பி.ஐ. அதிகாரியாக 'மகா நடிகன்' மனோஜ் பாஜ்பாய். கேங்க்ஸ் ஆப் வாஸேபூர் போன்ற வலுவான கேரக்டரையே அடித்து கிளப்பி இருக்கும் இவருக்கு இந்த கேரக்டர் சிம்ப்ளி கூல். பறிகொடுத்தது கருப்புப்பணம் என்பதால் புகார் கொடுக்க மறுக்கும் செல்வந்தர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் தவிக்கும் மனோஜ் போலி ரெய்டின் போது உடனிருந்து அசல் போலீஸ் அதிகாரி ஜிம்மி ஷேர்கில் உதவியுடன் அந்த நால்வரை தொடர்கிறார் மனோஜ். பிடிபட்டார்களா? வாட்ச் இட்.

அக்சய், அனுபம் மற்றும் மனோஜ் மூவருக்கும் சமமான ஸ்கோப்பை தந்திருக்கும் இயக்குனரை பாராட்டலாம். அக்சயின் காதலியாக காஜல் அகர்வால். விறுவிறு திரைக்கதைக்கு பெரிதாக இடையூறு செய்யாமல் அளவாக வந்து போகிறார். அழகில் அப்சரஸ் தோற்றால் போங்கள். 'இத்தனை நாள் இவரை ஏன் அலட்சியம் செய்தாய் பதரே' என மனசாட்சி கொக்கியது. 

பாம்பே நகரில் நடக்கும் சி.பி.ஐ. இண்டர்வியூவில் விபூதி வைத்திருக்கும் இளைஞரை பார்த்து அக்சய் நீங்கள் தமிழரா எனக்கேட்க ஆம் என்கிறார் அவர். ஒரு பஞ்ச் டயலாக்கை உதிர்த்துவிட்டு 'எப்படி'? என அக்சய் வினவ அவ்விளைஞன் சொல்லும் பதில் 'தலைவா நீங்க ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி'. தமிழர்களை கிண்டல் செய்ய பாலிவுட் நபர்களுக்கு தெரிந்த இரண்டே விஷயம் 'ஐயோ' அல்லது ரஜினி. ஆனால் இப்படி காட்சிகள் வைத்து அடிக்கடி செல்ப் கோல் அடித்துகொள்வதும் வாடிக்கை அவர்களுக்கு. ஏனெனில் காட்சி நடந்ததாக சொல்லப்படும் ஆண்டு 1987. பாட்ஷா வந்தது 1995. நக்கல் விட்டாலும் வரலாறு முக்கியம் அமைச்சர்ஜி!!

பாடல்கள் நிறைய இல்லாதது பெரிய ஆறுதல். அரசு ஊழியர்கள் அந்த காலத்தில்(!) எப்படி பணியாற்றினார் என்பதை ஒரு சீனில் கச்சிதமாக காட்டி இருக்கிறார் இயக்குனர். சி.பி.ஐ. அலுவலகத்தில் மனோஜ் சிலருடன் பேசிக்கொண்டு இருக்க பக்கத்து இருக்கையில் சட்டையை கழற்றிப்போட்டு விட்டு காற்று வாங்கும் அதிகாரி, சிவன் வேடம் பூண்டு உள்ளே கலெக்சனுக்கு வரும் நபர் என மினி ரகளை. யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு சூப்பர் ட்விஸ்டை வைத்துள்ளார் இயக்குனர். அதைக்கண்டு தியேட்டரில் எழும் சலசலப்பு சூப்பர் அப்பு.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தரமான படமென்பதால் தனது சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டு நடித்துள்ளார் அக்சய். ரவுடி ராத்தோர், ஹவுஸ்புல் போன்ற மசாலா காமடி படங்களில் நடித்த இவருக்கு ஸ்பெஷல் 26 ஒரு மைல்கல். கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் பறந்தடிக்கும் திரைக்கதை கொண்ட படத்தை விரும்பும் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் மூவி இது.
...............................................................   

         
                                                           
கடல், டேவிட்...ஆளை விட்றா சாமி என முடிவு செய்து இன்னொரு வித்யாசமான திரைப்படம் பார்க்கலாம் என தேர்ந்து எடுத்ததுதான் தீபா மேத்தாவின் தேசி ஆங்கிலப்படமான மிட்நைட்ஸ் சில்ட்ரென். உலகப்புகழ் பெற்ற சல்மான் ருஷ்டியின் நாவலை திரைக்கு கொண்டு வந்துள்ளார் தீபா. நாவல் படித்த பலரும் அதிலிருந்த விறுவிறுப்பு சினிமாவில் இல்லை என்று ஆதங்கப்பட்டனர். 600 பக்கங்கள் கொண்ட நாவலை படிக்காததால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க சென்றேன்.

இந்தியா சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் பணக்கார தம்பதியருக்கும், தெருவில் பாட்டுப்பாடி காசு பார்க்கும் தம்பதியருக்கும் பிறக்கும் இரு குழந்தைகளை இடம் மாற்றுகிறாள் நர்ஸ் மேரி. சுதந்திர இந்தியாவில் ஏழை பணக்காரன் வித்யாசம் ஒழிய வேண்டும் என தன் கணவன் சொன்னதே அதற்கு காரணம். சிவா எனும் பெயருடன் பணக்கார பிள்ளை பாட்டுபாடுபவனிடம் வளர சலீம் எனும் பெயரில் பணக்கார இஸ்லாம் குடும்பத்தில் வளர்கிறான் ஏழை பெற்ற மகன். அவ்வப்போது மூக்கை உறிஞ்சுவதன் மூலம் சலீமின் பிரமையில் 1947 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகள் வந்து அவனுடன் உரையாடி விட்டு செல்கின்றன.

ஒருமுறை தந்தையின் அடிக்கு பயந்து பெட்ரூம் அருகே துணிகளை அடைக்கும் தொட்டியில் அமர்ந்து கொள்கிறான் சலீம். அந்நேரம் பார்த்து முன்னாள் காதலனை எண்ணி விரகதாபத்தில் தனது தாய் சுய இன்பத்தில் ஈடுபடுவதைக்கண்டு அதிர்கிறான். சட்டென சுதாரிக்கும் தாய் அதை சமாளிக்க அவனிடம் படாத பாடுபடுகிறாள். விஸ்வரூப எதிர்ப்பாளர்கள் ஹிந்தி சினிமாவில் காட்டப்படும் இம்மாதிரி காட்சிகளை கண்டால் வாயடைத்து போவார்கள். கேங்க்ஸ் ஆப் வாஸேபூரில் கூட அல்லாவை கொச்சையாக நாயகி நக்கல் விடும் வசனம் ஒன்று வந்தது. நியாயப்படி அதற்குத்தான் இதைவிட பலமடங்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். 

சித்தார்த், ஸ்ரேயா கொஞ்சமே வந்து செல்கிறார்கள். 'விஸ்வரூப புகழ்' ராகுல் போஸ் இதில் பாகிஸ்தான் ஆர்மி அதிகாரியாக. ஜஸ்ட் ஓக்கே. சலீமாக வரும் சிறுவன் மற்றும் அவனது தாயாக வரும் சஹானா இருவரின் நடிப்பும் கச்சிதம்.டிபிக்கல் தீபா மேத்தா ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாதி சிறப்பென்றாலும் இடைவேளைக்கு பின்பு ஜவ்வாக இழுக்கிறது. ஒருமுறை தாராளமாக பார்க்கலாம்.
.......................................................................


                                                              
உஸ்தாத் ஹோட்டல், தட்டத்தின் மறையத்து போன்ற மாணிக்கங்களுக்கு நடுவே வந்திருக்கும் அடுத்த குப்பைதான் இந்த 'லோக்பால்'. மோகன்லாலின் காரோட்டிதான் இதன் தயாரிப்பாளர் என கேரளத்து நண்பர் சொன்னார். 

என்னது கதையா? அட போங்க. ஏற்கனவே அந்நியன் படத்தில் வெவ்வேறு கெட்டப்பில் சமூக விரோதிகளை களையெடுக்கும் விக்ரம் கேரக்டரைத்தான் அநியாயத்திற்கு லோ பட்ஜெட்டில் முயற்சித்து இருக்கிறார் லால். ப்ரெஞ்ச் தாடிக்காரன் , நீண்ட தலைமுடிக்காரன், தமிழ் பேசும் டி.டி.ஆர் என நாக்கில் விரலை வைக்கும் கெட்டப்புகள். தவறு செய்யும் வி.ஐ.பி. வீட்டிற்கு கால் செய்து 'நான்..லோக்பால். உன் கதை இத்தோடு க்ளோஸ்' என மிரட்டி சொன்னதை செய்கிறார் ஹீரோ. 

டைட்டிலில் தி கம்ப்ளீட் ஆக்டர் L(OKP)AL என்று காட்டி அசத்துகிறார்கள். லோக்பால் எல்லாம் என்னைப்பொறுத்தவரை 'லோக பாலகன்' தான் என அலட்சியம் செய்யும் வி.ஐ.பி.க்கு ஆப்படிக்கிறார் லால் ஏட்டன். இந்தக்கதை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

மீரா நந்தன், மனோஜ் கே. ஜெயன், தலைவாசல் விஜய், காவ்யா மாதவன் ஆகியோரும் உண்டிங்கே. "என்னய்யா இப்படி இஷ்டத்துக்கு மொக்கை படமா நடிச்சி தள்ளுறாரு உங்கள் லால் ஏட்டன்" என கடுப்பாகி கேட்டதற்கு கேரள நண்பர் சொன்னது "அவர்தான் ஏற்கனவே பேட்டியில் சொல்லிவிட்டாரே. என்னை வைத்து குறுகிய காலத்தில் படமெடுக்க நிறைய தயாரிப்பாளர்கள் இருப்பதால் இப்போதெல்லாம் முன்பு போல கதை கேட்பதில்லை". அது செரி.
.........................................................................


சமீபத்தில் எழுதியது:


2 comments:

arasan said...

முதல் இரண்டையும் விரைவில் பார்த்துவிட வேண்டியது தான் அண்ணே

செங்கோவி said...

ஆஹா..ஸ்பெஷல் 26 பார்க்கும் ஆவலைத் தூண்டிட்டீங்களே..பார்த்திடுவோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...