இந்தாண்டின் ஆரம்பமே பாலிவுட்டில் அதகளமாத்தான் துவங்கி இருக்கிறது. ஸ்பெஷல் 26 எனும் சூப்பர் சினிமாவிற்கு பிறகு அடுத்ததொரு க்ளாஸ் படம் இவ்வளவு விரைவில் வருமென எதிர்பார்க்கவில்லை. 'ராக் ஆன்' மூலம் வெற்றிக்கொடி நாட்டிய அபிஷேக்கின் அடுத்த படைப்பிது. 'அது என்ன டைட்டில் கை போச்சே'...நக்கலாடா விடறீங்க' என்று தமிழக காங்கிரஸ் ஆட்கள் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டாம். காத்தாடி விடும்போது எதிராளியின் கயிற்றை அறுத்த உற்சாகத்தில் 'கீஷ்டம்பா' என்று எங்க ஊரு(சென்னை) ஆட்கள் கத்துவதை குஜராத்தியில் சொல்வதுதான் காய் போ சே. வாட் எ பிலிம் வாத்யாரே!!
சராசரி ஆங்கில அறிவு/வாசிப்பார்வம் கொண்ட யுவன் யுவதிகளால் கொண்டாடப்படும் எழுத்தாளர் சேதன் பகத் எழுதிய '3 mistakes of my life' எனும் புத்தகம்தான் இப்போது திரை வடிவமெடுத்துள்ளது. ஆங்கிலத்தில் நான் வாசித்த ஒரே புத்தகம் இவர் எழுதிய '5 point someone'. அதுதான் த்ரீ இடியட்ஸ் ஆக சக்கை போடு போட்டது. இப்போது அடுத்ததொரு அட்ரா சக்கை.
குஜராத்தில் 2000-ஆவது ஆண்டின் துவக்கத்தில் மூன்று நண்பர்களுக்கு இடையே உள்ள நட்பைப்பற்றி பேச ஆரம்பிக்கிறது இப்படம். க்ரிக்கெட்டை சுவாசிக்கும் குறும்புக்காரன் இஷான்(சுஷாந்த்), இந்துத்வ அரசியல் சூழலில் வாழும் ஓமி(அமித்), நிதானித்து முடிவெடுக்கும் கூச்ச சுபாவி கோவிந்த்(ராஜ்குமார்). இம்மூன்று நெருங்கிய நண்பர்களின் முக்கிய இலக்கு க்ரிக்கெட் அகாடமி மற்றும் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடையமைப்பது. ஒரு சில போராட்டங்களுக்கு பிறகு தங்கள் எண்ணம் நிறைவேறினாலும் 2001 குஜராத் பூகம்பமும், கோத்ரா ரயில் எரிப்பும் இவர்களது வாழ்வை எப்படி திசை திருப்புகின்றன என்பதே கதை.
அலி எனும் அசாத்திய பேட்டிங் திறன் கொண்ட சிறுவனை தமது அகாடமியில் சேர்த்து பெரிய வீரனாக ஆக்க கனவு காணும் இளைஞனாக சுஷாந்தின் நடிப்பு முதல் படத்திலேயே செஞ்சுரி. இந்துத்வ கட்சியில் பெரும்புள்ளியாக இருக்கும் மாமாவிடம் பேசி பணத்தை பெறும் அமித், சுஷாந்தின் சகோதரிக்கு பாடம் சொல்லித்தரப்போய் காதல் இம்சைக்கு ஆளாகி கூச்சத்தில் நெளிந்து பிறகு 'வழிக்கு' வரும் ராஜ்குமார் என மற்ற இரு முக்கிய கேரக்டர்களின் நடிப்பும் பிக்சர் பெர்பெக்ட். அலி எனும் சிறுவனாக உர்ரென வந்து போகும் திக்விஜய் குட்டி ராட்சசன். சுஷாந்தின் சகோதரி ராஜ்குமாரை ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் வாவ்ரே.
ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் முஸ்லிம்கள் இருப்பார்கள் என கொதித்து ஓமியை தூண்டிவிட்டு அவனது மாமா ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் காட்சி படபடப்பின் உச்சம். பார்வையாளனை சம்பவங்களோடு ஒன்ற வைக்கும் அளவிற்கு அற்புதமான ஒளிப்பதிவை தந்துள்ள அனய் கோஸ்வாமிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். ஞாயிறன்று விடுமுறை கொண்டாட்டத்தில் மூன்று பேரின் நட்பை விளக்கும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் பிரமாதம். பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து இஷான் அவதிப்படுவதை பார்த்து மற்ற இருவரும் எகத்தாளம் செய்யும்போது சட்டென ஜன்னல் வழியே சென்று உச்சியில் அமர்ந்து விடுகிறான் அவன். இஷானின் அலைவரிசைக்கு பெரும்பாலும் ஒத்துப்போகும் ஓமியும் மேலே சென்றுவிட இறுதியாக கோவிந்த் அவர்களை நெருங்கும் சீன் ஹ்யூமர் ரகளை.
இந்தியா ஆஸ்திரேலியா 2001 டெஸ்ட் மேட்ச்சில் நடக்கும் விறுவிறுப்பான கட்டங்களை நுட்பமாக கதையுடன் கோர்த்து சொல்லி இருக்கும் இயக்குனர் அபிஷேக்கை கொண்டாடலாம். சமீப காலத்தில் பெரும் வசூலையும், விருதுகளையும் அள்ளிய த்ரீ இடியட்ஸ், ஜிந்தகி நா மிலேகி தொபாரா போன்ற 'நண்பேன்டா' படங்களை விட சிறந்த திரைப்படமாக காய் போ சே போற்றப்படுவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. பிரம்மாண்ட பட்ஜெட், பெரிய ஸ்டார்கள், கலர்புல் காட்சியமைப்புகள் என பல்வேறு விஷயங்களை தவிர்த்து குஜராத்தை மட்டுமே களமாக கொண்டு ஒரு கம்ப்ளீட் தேசி திரைப்படத்தை தந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம். சுருக்கமாக சொன்னால் இந்தியாவில் இருந்து இன்னொரு உலக சினிமா!!
...................................................................
...................................................................
..............................................
7 comments:
என்னாதிது கை போச்சே கால் போச்சேன்னு...? விளையாடுராயிங்களா ...
வட போச்சே!
Watched this awesome movie yesterday. Excellent story, screenplay and acting. It's a must see movie.
-Shan
அட... படம் நல்லாயிருக்கும் போலிருக்கே... ஆனா எனக்கு இந்தி தெரியாதே...
மால் போனபோது நான் கூட கை போச்சே அப்படின்னு தான் படிச்சேன்...விமர்சனம் நன்று..பார்க்கனும்...
சீக்கிரம் டி.வி.டி ரெடி பண்ணியாகனுமே.....
//அட... படம் நல்லாயிருக்கும் போலிருக்கே... ஆனா எனக்கு இந்தி தெரியாதே...// நல்ல படம் பார்க்க மொழி அவசியமில்லை! :-)
Post a Comment