CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, February 10, 2013

சிவகாமியின் சபதம்                                                       

கல்கியின் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகமாக சென்னையில் நேற்று மதியம் கலைமாமணி முரளிதரனால் அரங்கேற்றப்பட்டது. நாட்டிய நாடகம் ஒன்றை இதற்கு முன்பு நேரிலோ அல்லது தொலைக்காட்சியிலோ  பார்த்திராததால் அக்குறையை போக்கும் பொருட்டு ஹாரிங்டன் சாலை லேடி ஆண்டாள் பள்ளியில் இருக்கும் ஆடிட்டோரியத்தை அடைந்தேன். சிவகாமியின் சபதம் கல்கியின் படைப்பு என்பதைத்தவிர வேறெதுவும் அறிந்திடாதவான் என்பதால்  நூற்றுக்கணக்கான பக்கங்களை படிப்பதை விட நாட்டிய நாடகம் வாயிலாக அவ்வொப்பற்ற காவியத்தின் சிறப்பம்சங்களை  கிரகித்து கொள்ளலாம் என்றெண்ணி அரங்கினுள் கால் பதித்தேன்.

சும்மா சொல்லக்கூடாது. சர்வதேச தரத்தில் ஒலி, ஒளி அமைப்பு, சிறப்பான இருக்கைகள்(குறிப்பாக முன்னிருப்பவர் தலை மறைக்கவில்லை) என லேடி ஆண்டாள் மனதை ஆண்டாள். சிவகாமியின் சபதத்தின் முக்கிய அம்சங்களை தொகுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை அனைவருக்கும் தந்தனர். நிகழ்ச்சி தொடங்க சில நிமிடங்களே இருந்ததால் அவசர கோலத்தில் படிக்கும்படி ஆனது. ஆனால் நிகழ்ச்சி துவங்கியதும் ஒவ்வொரு காட்சிக்கு முன்பாக புத்தகத்தில் இருந்ததை பின்னணிக்குரலில் அறிவித்தபோதும், கதாபாத்திரங்கள் அனைத்தும் தமிழில் உரையாடிய போதும்தான் நிம்மதி அடைந்தேன். 

மன்னர் நரசிம்ம பல்லவர் ராணி வனம தேவியிடம் தனது இளம்பிராயத்தில் சிற்பியின் மகள் சிவகாமியிடம் கொண்ட காதலை ஒப்புக்கொள்ளும் காட்சியுடன் துவங்கி, நரசிம்மர் - சிவகாமி இளம்பிராயம், புலிகேசியின் சகோதரர் நாகநந்திக்கு சிவகாமி மீதேற்படும் காதல், பரஞ்சோதி புலிகேசியிடம் பிடிபடல், புலிகேசியிடம் சிவகாமி சிறைபடல், வஜ்ரபாகுவாக மகேந்திர பல்லவர் நடித்து புலிகேசியின் படையெடுப்பை காலதாமதம் செய்தல், நரசிம்மர் புலிகேசி படையை வீழ்த்துதல் உள்ளிட்ட மேலும் சில காட்சிகளுடன்  இறுதியாக நரசிம்மர் மணமுடித்துவிட்டார் என்பதறிந்து சிவகாமி இறைவன் ஏகாம்பரேஸ்வரரையே கணவனாக ஏற்கும் காட்சியோடு நிறைவடைகிறது  இப்பிரம்மாண்ட கலையாக்கம்.  

புலிகேசி மற்றும் நாகநந்தியாக இயக்கம் உள்ளிட்ட பலதுறைகளை இதில் கையாண்ட முரளிதரன் நடித்துள்ளார். முப்பருவங்களில் சிவகாமியாக அனன்யா, காவ்யா மற்றும் உமா. வனம தேவியாக டி.வி.புகழ் ப்ரியதர்ஷினி. நரசிம்ம பல்லவராக திரைப்பட நடிகரும், தேர்ந்த நாட்டியக்கலைஞருமான வினீத்தை தேர்வு செய்யலாம் என சிலர் பரிந்துரை செய்தபோது நட்சத்திர அடையாளம் வேண்டாம் என முரளி மறுத்துள்ளார். ஸ்ரீனிவாஸின் அற்புதமான பின்னணி இசையும், அகன்று விரிந்த 70mm திரையில் ஓவியர் பத்மவாசனின் கைவண்ணமும் மெச்சத்தக்கவை. புலிகேசியிடம் நாகநந்தி உரையாடும்போது மட்டும் இசை இரைச்சல்.      

ஓரிரு இடங்களில் ஆபரணங்கள் கழன்று விழுதல், பின்னணி ஒலி சொற்ப நொடிகள் சட்டென மௌனமாதல் போன்ற சின்னஞ்சிறு குறைகள் மட்டுமே.

                                                  ஸ்ரீனிவாஸ், அனன்யா, காவ்யா, முரளிதரன், உமா       

நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பக்கபலமாக இவ்வாக்கத்தில் இடம்பெற்றுள்ளனர். தீபமேந்தி வரும் சிறுமிகள், துணை நடனம் புரியும் நங்கைகள், போர் வீரர்கள், சிற்பிகள் என கச்சிதமாக ஆட்களை தேர்வு செய்து நம்மை ஏழாம் நூற்றாண்டிற்கே அழைத்து சென்றுள்ளனர். பார்வையாளர்கள் இருக்கும் இடத்தின் நடுவில் இருந்து புலிகேசி பவனி வருதல், யானை மக்களை துரத்துதல் என காண்போரை பரவசப்படுத்தி இருக்கிறார்கள். ஆடை, ஆபரணங்கள் தேர்வும் சிறப்பு. மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என தத்தமது துறையில் தேர்ச்சி பெற்ற நபர்களை களமிறக்கி இருப்பது பார்ப்போரை பிரம்மிலாழ்த்துமென்பதிலயமில்லை.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நடந்த இந்த பிரமிப்பு தரும் சிவகாமியின் சபதத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்திழுத்தது இளநங்கை சிவகாமியாக நடனமாடிய காவ்யாதான். 17 வயதில் பரதப்புலியின் பாய்ச்சல். புலிகேசி, நரசிம்ம பல்லவர், சிற்பியாக நடித்தவர் என பலர் காவ்யாவை சுற்றி உயிரைக்கொடுத்து பெர்பாமன்ஸ் செய்து கொண்டிருந்தாலும் கண்கள் முழுக்க காவ்யா மீதே நிலைகுத்தி நின்றதை என் சொல்வேன்.  அபிராமியைக்கண்ட கமலைப்போல....'சிவகாமி சிவகாமி' என இன்னபிற கலாரசிகர்கள் போல என்னையும் ஆட்கொண்டது அந்த நடனம். 

                                                       
நிகழ்ச்சியின் இறுதியில் முரளிதரன் பேசியது:

"சிறுவயது முதலே கல்கியின் சிவகாமியின் சபதத்தின் பெரும் ரசிகன் நான். மொத்தம் 60 முறை அதனை படித்துள்ளேன். அதனை மேடை வடிவில்   கொண்டு வர அரும்பாடு பட்டேன். ஸ்ரீனிவாசன் அவர்களுடன் இணைந்து ஒலி அமைப்பிற்கு மட்டுமே நான்கு மாதம் உழைத்தோம். வீணை, சித்ரவீணை, சித்தார், சாரங்கி, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வாத்தியங்களின் இசையுடன், 50 தேர்ந்த நடனக்கலைஞர்கள், 10 நாடக நடிகர்கள், 20 சண்டைப்பயிற்சி வீரர்கள் மற்றும் 20 நாட்டுப்புற கலைஞர்கள் போன்றோரை தேர்ந்து எடுத்தோம்.

சிவகாமியின் சபதத்தை முழு வடிவமாக கொண்டுவருவது இது போன்ற மேடைகளில் சாத்தியம் அல்ல என்பது உண்மைதான். 'ஆயிரக்கணக்கான குதிரைகள், யானைகள் புடைசூழ' என கல்கி எழுதி இருந்ததே அதற்கு சான்று. திரைப்படத்தில் வேண்டுமானால் ஓரளவிற்கு இப்படைப்பை இன்னும் நிறைய பொருட்செலவு செய்து உருவாக்கலாம். எம்மாலான முக்கிய அம்சங்களை இங்கு பதிவு செய்துள்ளோம். நிறை, குறை இருப்பின் நீங்கள் சொல்லுங்கள். அதற்கேற்ப இன்னும் மெருகேற்றலாம்.

சென்னையில் எப்படியேனும்  சிவகாமியின் சபதத்தை அரங்கேற்றி விட  பிரம்ம பிரயத்தனப்பட்டேன் என்றால் அதில் மிகையில்லை. 'மானாட, மயிலாட, குயிலாட, குரங்காட' போன்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஓடோடி வந்து ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் ஒன்று கூட எங்களுக்கு ஆதரவு தராதது முற்றிலும் வருந்தத்தக்கது. ஒருசில ஸ்பான்சர்கள் இறுதி நேரத்தில் துணையாய் இருந்ததால் இது சாத்தியம் ஆயிற்று. அடுத்து அமெரிக்க, கனடா உள்ளிட்ட தேசங்களில் இப்படைப்பை அரங்கேற்ற உள்ளோம். நன்றி."
...........................................................................

குறிப்பு:

இனியொருமுறை சென்னையில்...ஏன் இந்தியாவில் எப்போது இந்த சாலச்சிறந்த நாட்டிய நாடகம் மேடையேற்றப்படும் என்று தெரியவில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் நண்பர்கள் தவற விட வேண்டாம். ராஜதர்பாரில் பிரதான இருக்கையில் வீற்று சர்வேதேச தரத்திலமைந்த தமிழனின் படைப்பை பார்த்த பிரமிப்பு கலந்த பெருமையுடன் சொல்கிறேன்.

..........................................................................
  

          

6 comments:

பால கணேஷ் said...

பெருமைப்படலாம் சிவா. இந்தப் புதிய (நல்ல) முயற்சி இன்னும் நிறையப் பேரைச் சென்றடைய வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இந்த விஷயத்தை ஃபோகஸ் செய்து நீ்ஙகள் எழுதியது போல விமர்சனங்களும், பாராட்டுகளும் அளிக்க வேண்டும் என்ப‌து என் ஆசை.

கார்த்திக் சரவணன் said...

அதிக அளவில் உழைத்திருக்கிறார்கள்... இந்த நிகழ்ச்சி நடப்பது தெரிந்திருந்தால் போயிருக்கலாம்...தெரியாமல் போய்விட்டது....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பாராட்டப்பட வேண்டிய முயற்சி. சிவகாமியின் சபதம் சுவையான நாவல்.சிவகாமி பாத்திரம் கற்பனை என்றாலும் மனதை விட்டு நீங்காத படைப்பு.
உங்கள் வித்தியாசமான ரசனை கண்டு ஆச்சர்யப் படுகிறேன்.

சமீரா said...

இதுவரை நாடகம், நாட்டியம் எதையும் நேரில் பார்த்ததில்லை...அந்த வகையில் உங்கள பார்த்த பொறாமைதான்...
இன்னும் சிவகாமியின் சபதம் படிக்கவில்லை...உங்கள் பதிவில் கதை ஓரளவிற்கு புரிகிறது.. மிக அருமையான ஒரு நாடக நிகழ்ச்சி... இன்னொருமுறை அரங்கேறினால் கண்டிப்பாக பார்க்க வேண்டும்!!! தெரிந்தால் முன்கூட்டியே சொல்லவும்!!!

கவியாழி said...

இன்று ச்போன்சொர் இல்லாமல் பொது நிகழ்ச்சியைநடத்த முயாது என்பது உண்மையே.
நீங்கள் சிவகாமியின் சபதம் பட்டி சொல்லிய விதம் அருமை.அதுவும் காவ்யாவின் நடிப்ப பற்றி சிலாகித்து சொல்லியுள்ளீர்கள்.இதை நேரில் பார்க்க முடியாமைக்கு வருந்துகிறே, உங்களின் விமர்சனம் அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டது.நன்றி சிவா.

கோவை நேரம் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...