CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, February 24, 2013

Kai Po Che


   
இந்தாண்டின் ஆரம்பமே பாலிவுட்டில் அதகளமாத்தான் துவங்கி இருக்கிறது. ஸ்பெஷல் 26 எனும் சூப்பர் சினிமாவிற்கு பிறகு அடுத்ததொரு க்ளாஸ் படம் இவ்வளவு விரைவில் வருமென எதிர்பார்க்கவில்லை. 'ராக் ஆன்' மூலம் வெற்றிக்கொடி நாட்டிய அபிஷேக்கின் அடுத்த படைப்பிது. 'அது என்ன டைட்டில் கை போச்சே'...நக்கலாடா விடறீங்க' என்று தமிழக காங்கிரஸ் ஆட்கள் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டாம். காத்தாடி விடும்போது எதிராளியின் கயிற்றை அறுத்த உற்சாகத்தில் 'கீஷ்டம்பா' என்று எங்க ஊரு(சென்னை) ஆட்கள் கத்துவதை குஜராத்தியில் சொல்வதுதான் காய் போ சே. வாட் எ பிலிம் வாத்யாரே!!

சராசரி ஆங்கில அறிவு/வாசிப்பார்வம் கொண்ட யுவன் யுவதிகளால் கொண்டாடப்படும் எழுத்தாளர் சேதன் பகத் எழுதிய '3 mistakes of my life' எனும் புத்தகம்தான் இப்போது திரை வடிவமெடுத்துள்ளது. ஆங்கிலத்தில் நான் வாசித்த ஒரே புத்தகம் இவர் எழுதிய '5 point someone'. அதுதான் த்ரீ இடியட்ஸ் ஆக சக்கை போடு போட்டது. இப்போது அடுத்ததொரு அட்ரா சக்கை. 

குஜராத்தில் 2000-ஆவது ஆண்டின் துவக்கத்தில் மூன்று நண்பர்களுக்கு இடையே உள்ள நட்பைப்பற்றி பேச ஆரம்பிக்கிறது இப்படம். க்ரிக்கெட்டை சுவாசிக்கும் குறும்புக்காரன் இஷான்(சுஷாந்த்), இந்துத்வ அரசியல் சூழலில் வாழும் ஓமி(அமித்), நிதானித்து முடிவெடுக்கும் கூச்ச சுபாவி கோவிந்த்(ராஜ்குமார்). இம்மூன்று நெருங்கிய நண்பர்களின் முக்கிய இலக்கு க்ரிக்கெட் அகாடமி மற்றும் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடையமைப்பது. ஒரு சில போராட்டங்களுக்கு பிறகு தங்கள் எண்ணம் நிறைவேறினாலும் 2001 குஜராத் பூகம்பமும், கோத்ரா ரயில் எரிப்பும் இவர்களது வாழ்வை எப்படி திசை திருப்புகின்றன என்பதே கதை.

அலி எனும் அசாத்திய பேட்டிங் திறன் கொண்ட சிறுவனை தமது அகாடமியில் சேர்த்து பெரிய வீரனாக ஆக்க கனவு காணும் இளைஞனாக சுஷாந்தின் நடிப்பு  முதல் படத்திலேயே செஞ்சுரி. இந்துத்வ கட்சியில் பெரும்புள்ளியாக இருக்கும் மாமாவிடம் பேசி பணத்தை பெறும் அமித், சுஷாந்தின் சகோதரிக்கு பாடம் சொல்லித்தரப்போய் காதல் இம்சைக்கு ஆளாகி கூச்சத்தில் நெளிந்து பிறகு 'வழிக்கு' வரும் ராஜ்குமார் என மற்ற இரு முக்கிய கேரக்டர்களின் நடிப்பும் பிக்சர் பெர்பெக்ட். அலி எனும் சிறுவனாக உர்ரென வந்து போகும் திக்விஜய் குட்டி ராட்சசன்.  சுஷாந்தின் சகோதரி ராஜ்குமாரை ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் வாவ்ரே. 


ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் முஸ்லிம்கள் இருப்பார்கள் என கொதித்து ஓமியை தூண்டிவிட்டு அவனது மாமா ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் காட்சி படபடப்பின் உச்சம். பார்வையாளனை சம்பவங்களோடு ஒன்ற வைக்கும் அளவிற்கு அற்புதமான ஒளிப்பதிவை தந்துள்ள அனய் கோஸ்வாமிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். ஞாயிறன்று விடுமுறை கொண்டாட்டத்தில் மூன்று பேரின் நட்பை விளக்கும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் பிரமாதம். பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து இஷான் அவதிப்படுவதை பார்த்து மற்ற இருவரும் எகத்தாளம் செய்யும்போது சட்டென ஜன்னல் வழியே சென்று உச்சியில் அமர்ந்து விடுகிறான் அவன். இஷானின் அலைவரிசைக்கு பெரும்பாலும் ஒத்துப்போகும் ஓமியும் மேலே சென்றுவிட இறுதியாக கோவிந்த் அவர்களை நெருங்கும் சீன்  ஹ்யூமர் ரகளை.

இந்தியா ஆஸ்திரேலியா 2001 டெஸ்ட் மேட்ச்சில் நடக்கும் விறுவிறுப்பான கட்டங்களை நுட்பமாக கதையுடன் கோர்த்து சொல்லி இருக்கும் இயக்குனர் அபிஷேக்கை கொண்டாடலாம். சமீப காலத்தில் பெரும் வசூலையும், விருதுகளையும் அள்ளிய த்ரீ இடியட்ஸ், ஜிந்தகி நா மிலேகி தொபாரா போன்ற 'நண்பேன்டா' படங்களை விட சிறந்த திரைப்படமாக காய் போ சே போற்றப்படுவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. பிரம்மாண்ட பட்ஜெட், பெரிய ஸ்டார்கள், கலர்புல் காட்சியமைப்புகள் என பல்வேறு விஷயங்களை தவிர்த்து குஜராத்தை மட்டுமே களமாக கொண்டு ஒரு கம்ப்ளீட் தேசி திரைப்படத்தை தந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம். சுருக்கமாக சொன்னால் இந்தியாவில் இருந்து இன்னொரு உலக சினிமா!!
...................................................................

சமீபத்தில் எழுதியது:

ஹரிதாஸ் - விமர்சனம்  
..............................................


Saturday, February 23, 2013

ஹரிதாஸ்     
சென்ற ஆண்டு அத்தே பெரிய டைட்டானிக் கப்பல்களை எல்லாம் அல்லாக்க தூக்கி மல்லாக்க போட்டு விட்டு குறும்படகுகளின் வெற்றியை கொண்டாடினர் தமிழ் ரசிகர்கள். மசாலா(?), கமர்சியல் படம் எடுத்தால் கூட அதை சரிவிகிதத்தில் கலந்து யதார்த்த பதார்த்தம் படித்தால் மட்டுமே பார்ப்போம் என்று தெளிவாக தீர்ப்பெழுதினர். அதுபோல இவ்வாண்டு தரமான படைப்புகள் வரத்துவங்கும் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்தோம் அல்லவா? இதோ வந்துவிட்டது...ஹரிதாஸ்!!

காவல்துறையில் தரப்படும் கடின பணிகளுக்கு நடுவே 10 ஆண்டுகள் பாட்டியிடம் வளரும் மகன் ஹரிதாஸைப்பற்றி பெரிதாக கவனம் எடுத்து கொள்ளும் வாய்ப்பு சிவதாசுக்கு(கிஷோர்)  இல்லாமல் போகிறது. பாட்டியின் இறப்பிற்கு பிறகு தாயில்லா மகனை தனது முழு கவனிப்பில் வைத்துக்கொள்ள முடிவு செய்கிறார் சிவதாஸ். ஆடிசம் குறைபாட்டால் அவதிப்படும் மகனை வைத்துக்கொண்டு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன தந்தை எப்படி சமுதாயத்தில் இன்னல்களை சந்திக்கிறார் என்பதுதான்  மையம். ஒருபக்கம் என்கவுன்டர் துரத்தல்கள், மறுபக்கம் தந்தைப்பாசம், கொஞ்சம் நகைச்சுவை என கலந்து கட்டி அசத்தி இருக்கிறார் இயக்குனர் குமரவேலன்.    

தந்தையாக கிஷோர். பிரகாஷ்ராஜுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் ஆல்ரவுண்ட் நடிகர் என ஆணித்தரமாக நிரூபித்து இருக்கிறார் இப்படத்தின் மூலம். ரவுடிகளை கட்டம் கட்ட திட்டம் போடும்போதும் சரி, ஹரிதாஸ் மீது காட்டும் பாசத்திலும் சரி..என்ன நடிப்புய்யா!! குறிப்பாக வீட்டை விட்டு வெளியே சென்று மழையில் நனையும் மகனிடம் 'உன்னை எப்படி புரிந்து கொள்வது..' என அழும்போதும், பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் மீண்டும் அவன் தொலையும் போது கண்ணாடியை கழற்றி விட்டு சிவந்த கண்களுடன் வெம்பும்போதும்...பிரமாதமான நடிப்பு.  

டீச்சராக ஸ்னேஹா சரியான சாய்ஸ். ஓரிரு காட்சிகளில் வந்தாலும் மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியை கேரக்டர் கோபமாக பேசுமிடம் நடிப்பாகவே தெரியவில்லை. வெகு இயல்பு. கொஞ்சமே கொஞ்சம் 'கடி'த்தாலும் சூரியின் காமடி பெரிய இடையூறாக இல்லாதது ஆறுதல். போலீஸ் அதிகாரிகள், பள்ளி சிறுவர்கள் என கிட்டத்தட்ட அனைவரும் நடிப்பும் படத்தின் பலம். டாக்டராக யூஹி சேது சில நிமிடங்களே வந்து சென்றாலும் தனது பாணியில் முத்திரை பதிக்கிறார். 

திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தாமல் சமபவங்கள் நடந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வை தந்ததற்கு கேமராமேன் ராண்டியை பாராட்டலாம். 'நல்லத மட்டுமே நெனைக்கணும்னு சொல்லிட்டு நீங்க ஏன் சார்..?' என பள்ளிச்சிறுவன் கிஷோரை கேட்குமிடம் என ஆங்காங்கே நறுக் வசனங்கள். 'வெள்ள குதிர', 'அன்னையின் கருவில்' ஆகிய இரண்டு பாடல்களும் கதையோட்டத்தின் ஆணிவேர்கள். என்னதான் கமர்ஷியல் காரணம் சொன்னாலும் இப்படி ஒரு தரமான படைப்பில் எதற்கு அந்த 'போலீஸ் கானா' பாடல்? குத்துப்பாட்டு ரசிகர்களே குத்தப்பாட்டு என்று சொல்லுமளவிற்கு  புஸ்வானம் ஆகிப்போனது. ஓமக்குச்சி எனும் பெயருடன் பருமனான சிறுவன் அறிமுகம் ஆகும் காட்சியில் யானை பிளிரும் ஒலி பின்னணியில். பருமனான  நபர்களை இதேபோன்று இன்னும் எத்தனை ஆண்டுகள் நம் சினிமாக்கள் அறிமுகம் செய்து கழுத்தை அறுக்குமோ?   ஆடிசம் மற்றும் இதர குறைபாடுகள்   உள்ள குழந்தைகளை ஒதுக்கக்கூடாது என்பதை முக்கிய அம்சமாக வைத்து கதை பண்ணும் இயக்குனர்கள் இது போன்ற காட்சிகளை வைப்பது கண்டிக்கத்தக்கது. 

  
கதையின் நாயகன் ப்ரித்விராஜ் தாஸ் மொத்தப்படத்தில் 'அப்பா' என்றொரு வசனம் மட்டுமே பேசுகிறான். ஆனால் ஆடிசத்தால் பாதிக்கப்பட்டவனாக வந்து செல்லும் காட்சிகளில் எல்லாம் தத்ரூப நடிப்பு. மராத்தான் போட்டியில் அவன் பங்கேற்கும் காட்சியின்போது கூடுமானவரை உணர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும் மனதை அசைத்துப்பார்த்து கண்ணோரம் நீர்த்துளியை எட்டிப்பார்க்க செய்துவிடுகிறான். எல்லாப்புகழும் குமாரவேலுக்கே. மணமாகாத ஆண்கள், பெண்கள் அனைவரையும் தந்தையின் ஸ்தானத்தில் இரண்டரை மணிநேரம் கூடுவிட்டு கூடுபாய வைத்திருக்கும் கிஷோரை இதற்கு மேல் என்ன சொல்லி புகழ்வதென்றே தெரியவில்லை. தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சில படங்கள் தந்தையை மையமாக வைத்து தமிழ் சினிமா வரலாற்றில் வந்திருப்பினும் 'ஹரிதாஸ்'தான் ஆல்டைம் பெஸ்ட் என்பதில் துளிகூட எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.  

காக்க காக்க, தாரே ஜமீன் பர் இரண்டையும் கலந்து பார்த்த உணர்வை தந்துள்ள ஹரிதாஸ் அணிக்கு ஹாட்ஸ் ஆப். 
..................................................................

  

Monday, February 11, 2013

Special 26, Midnight's Children, Lokpal


                                                             
A Wednesday (உன்னைப்போல் ஒருவன்) படத்தை இயக்கிய நீரஜ் பாண்டேவின் லேட்டஸ்ட் ஹிட்டுதான் இந்த ஸ்பெஷல் 26. ட்ரெயிலர் பார்க்கும்போதே சம்திங் ஸ்பெஷல் என உணர்ந்ததால் செவ்வாய் அன்றே ரிசர்வ் செய்து நேற்று பார்த்தேன். 

Fake is real. Real is Fake. இதுதான் கதையின் அடித்தளம். 80 களின் துவக்கத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளாக அக்சய், அனுபம் கேர், ராஜேஷ் மற்றும் கிஷோர். முதல் இருவரும் சி.பி.ஐ. இக்காக இண்டர்வியூ எடுக்கும் காட்சியுடன் துவங்குகிறது ஸ்பெஷல் 26. வேலைக்காக வரும் இளம்பெண்ணை பார்த்து அக்சய் "ஏன் இத்துறையில் சேர ஆசைப்படுகிறீர்கள்?'" எனக்கேட்க அதற்கு அவள் "மக்களை ஏமாற்றி பிழைக்கும் நபர்களை களை எடுத்தாக வேண்டும் சார். அதுதான் எனது லட்சியம்" என்கிறார். அடுத்த கேள்வி  "நீ மட்டும் அதை செய்வாயா?". பதில் "இல்லை சார்...நாம..எல்லாரும்தான்..". இக்காட்சியுடன் ஆரம்பிக்கிறது சி.பி.ஐ.ரெய்டு.

மேற்குறிப்பிட்ட நால்வரும் தங்கள் 48-வது  ரெய்டை டில்லியில் இருக்கும் மந்திரி வீட்டில் துவக்குகிறார்கள். கருப்புப்பணம் அனைத்தையும் பிடித்துவிட்டு மந்திரியிடம் கையெழுத்து வாங்கிவிட்டு கிளம்பும் நேரத்தில் அனுபம் கேரை தனியே அழைத்து 'எவ்ளோ வேண்ணாலும் வாங்கிக்கங்க' என்று பேரம் பேசுகிறார் மந்திரி. அனுபம் 'எவ்வளவு?', மந்திரி 'இரண்டு'. அவர் கன்னத்தில் இரண்டு அறைகளை விட்டு 'போதுமா? ஒரு நேர்மையான அதிகாரியிடம் இப்படியா பேசுவது' என காட்டமாக கூறிவிட்டு வெளியேறுகிறார். சில மணிநேரங்கள் கழிந்த பிறகுதான் தெரிகிறது வந்து சென்றது, வாரிச்சென்றது  எல்லாமே போலி சி.பி.ஐ. க்ரூப் என்று. பிறகென்ன..ஜெட் வேகத்தில் பறக்கிறது ஸ்பெஷல் 26.

போலிகளை கண்டுபிடிக்கும் அசல் சி.பி.ஐ. அதிகாரியாக 'மகா நடிகன்' மனோஜ் பாஜ்பாய். கேங்க்ஸ் ஆப் வாஸேபூர் போன்ற வலுவான கேரக்டரையே அடித்து கிளப்பி இருக்கும் இவருக்கு இந்த கேரக்டர் சிம்ப்ளி கூல். பறிகொடுத்தது கருப்புப்பணம் என்பதால் புகார் கொடுக்க மறுக்கும் செல்வந்தர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் தவிக்கும் மனோஜ் போலி ரெய்டின் போது உடனிருந்து அசல் போலீஸ் அதிகாரி ஜிம்மி ஷேர்கில் உதவியுடன் அந்த நால்வரை தொடர்கிறார் மனோஜ். பிடிபட்டார்களா? வாட்ச் இட்.

அக்சய், அனுபம் மற்றும் மனோஜ் மூவருக்கும் சமமான ஸ்கோப்பை தந்திருக்கும் இயக்குனரை பாராட்டலாம். அக்சயின் காதலியாக காஜல் அகர்வால். விறுவிறு திரைக்கதைக்கு பெரிதாக இடையூறு செய்யாமல் அளவாக வந்து போகிறார். அழகில் அப்சரஸ் தோற்றால் போங்கள். 'இத்தனை நாள் இவரை ஏன் அலட்சியம் செய்தாய் பதரே' என மனசாட்சி கொக்கியது. 

பாம்பே நகரில் நடக்கும் சி.பி.ஐ. இண்டர்வியூவில் விபூதி வைத்திருக்கும் இளைஞரை பார்த்து அக்சய் நீங்கள் தமிழரா எனக்கேட்க ஆம் என்கிறார் அவர். ஒரு பஞ்ச் டயலாக்கை உதிர்த்துவிட்டு 'எப்படி'? என அக்சய் வினவ அவ்விளைஞன் சொல்லும் பதில் 'தலைவா நீங்க ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி'. தமிழர்களை கிண்டல் செய்ய பாலிவுட் நபர்களுக்கு தெரிந்த இரண்டே விஷயம் 'ஐயோ' அல்லது ரஜினி. ஆனால் இப்படி காட்சிகள் வைத்து அடிக்கடி செல்ப் கோல் அடித்துகொள்வதும் வாடிக்கை அவர்களுக்கு. ஏனெனில் காட்சி நடந்ததாக சொல்லப்படும் ஆண்டு 1987. பாட்ஷா வந்தது 1995. நக்கல் விட்டாலும் வரலாறு முக்கியம் அமைச்சர்ஜி!!

பாடல்கள் நிறைய இல்லாதது பெரிய ஆறுதல். அரசு ஊழியர்கள் அந்த காலத்தில்(!) எப்படி பணியாற்றினார் என்பதை ஒரு சீனில் கச்சிதமாக காட்டி இருக்கிறார் இயக்குனர். சி.பி.ஐ. அலுவலகத்தில் மனோஜ் சிலருடன் பேசிக்கொண்டு இருக்க பக்கத்து இருக்கையில் சட்டையை கழற்றிப்போட்டு விட்டு காற்று வாங்கும் அதிகாரி, சிவன் வேடம் பூண்டு உள்ளே கலெக்சனுக்கு வரும் நபர் என மினி ரகளை. யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு சூப்பர் ட்விஸ்டை வைத்துள்ளார் இயக்குனர். அதைக்கண்டு தியேட்டரில் எழும் சலசலப்பு சூப்பர் அப்பு.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தரமான படமென்பதால் தனது சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டு நடித்துள்ளார் அக்சய். ரவுடி ராத்தோர், ஹவுஸ்புல் போன்ற மசாலா காமடி படங்களில் நடித்த இவருக்கு ஸ்பெஷல் 26 ஒரு மைல்கல். கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் பறந்தடிக்கும் திரைக்கதை கொண்ட படத்தை விரும்பும் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் மூவி இது.
...............................................................   

         
                                                           
கடல், டேவிட்...ஆளை விட்றா சாமி என முடிவு செய்து இன்னொரு வித்யாசமான திரைப்படம் பார்க்கலாம் என தேர்ந்து எடுத்ததுதான் தீபா மேத்தாவின் தேசி ஆங்கிலப்படமான மிட்நைட்ஸ் சில்ட்ரென். உலகப்புகழ் பெற்ற சல்மான் ருஷ்டியின் நாவலை திரைக்கு கொண்டு வந்துள்ளார் தீபா. நாவல் படித்த பலரும் அதிலிருந்த விறுவிறுப்பு சினிமாவில் இல்லை என்று ஆதங்கப்பட்டனர். 600 பக்கங்கள் கொண்ட நாவலை படிக்காததால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க சென்றேன்.

இந்தியா சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் பணக்கார தம்பதியருக்கும், தெருவில் பாட்டுப்பாடி காசு பார்க்கும் தம்பதியருக்கும் பிறக்கும் இரு குழந்தைகளை இடம் மாற்றுகிறாள் நர்ஸ் மேரி. சுதந்திர இந்தியாவில் ஏழை பணக்காரன் வித்யாசம் ஒழிய வேண்டும் என தன் கணவன் சொன்னதே அதற்கு காரணம். சிவா எனும் பெயருடன் பணக்கார பிள்ளை பாட்டுபாடுபவனிடம் வளர சலீம் எனும் பெயரில் பணக்கார இஸ்லாம் குடும்பத்தில் வளர்கிறான் ஏழை பெற்ற மகன். அவ்வப்போது மூக்கை உறிஞ்சுவதன் மூலம் சலீமின் பிரமையில் 1947 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகள் வந்து அவனுடன் உரையாடி விட்டு செல்கின்றன.

ஒருமுறை தந்தையின் அடிக்கு பயந்து பெட்ரூம் அருகே துணிகளை அடைக்கும் தொட்டியில் அமர்ந்து கொள்கிறான் சலீம். அந்நேரம் பார்த்து முன்னாள் காதலனை எண்ணி விரகதாபத்தில் தனது தாய் சுய இன்பத்தில் ஈடுபடுவதைக்கண்டு அதிர்கிறான். சட்டென சுதாரிக்கும் தாய் அதை சமாளிக்க அவனிடம் படாத பாடுபடுகிறாள். விஸ்வரூப எதிர்ப்பாளர்கள் ஹிந்தி சினிமாவில் காட்டப்படும் இம்மாதிரி காட்சிகளை கண்டால் வாயடைத்து போவார்கள். கேங்க்ஸ் ஆப் வாஸேபூரில் கூட அல்லாவை கொச்சையாக நாயகி நக்கல் விடும் வசனம் ஒன்று வந்தது. நியாயப்படி அதற்குத்தான் இதைவிட பலமடங்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். 

சித்தார்த், ஸ்ரேயா கொஞ்சமே வந்து செல்கிறார்கள். 'விஸ்வரூப புகழ்' ராகுல் போஸ் இதில் பாகிஸ்தான் ஆர்மி அதிகாரியாக. ஜஸ்ட் ஓக்கே. சலீமாக வரும் சிறுவன் மற்றும் அவனது தாயாக வரும் சஹானா இருவரின் நடிப்பும் கச்சிதம்.டிபிக்கல் தீபா மேத்தா ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாதி சிறப்பென்றாலும் இடைவேளைக்கு பின்பு ஜவ்வாக இழுக்கிறது. ஒருமுறை தாராளமாக பார்க்கலாம்.
.......................................................................


                                                              
உஸ்தாத் ஹோட்டல், தட்டத்தின் மறையத்து போன்ற மாணிக்கங்களுக்கு நடுவே வந்திருக்கும் அடுத்த குப்பைதான் இந்த 'லோக்பால்'. மோகன்லாலின் காரோட்டிதான் இதன் தயாரிப்பாளர் என கேரளத்து நண்பர் சொன்னார். 

என்னது கதையா? அட போங்க. ஏற்கனவே அந்நியன் படத்தில் வெவ்வேறு கெட்டப்பில் சமூக விரோதிகளை களையெடுக்கும் விக்ரம் கேரக்டரைத்தான் அநியாயத்திற்கு லோ பட்ஜெட்டில் முயற்சித்து இருக்கிறார் லால். ப்ரெஞ்ச் தாடிக்காரன் , நீண்ட தலைமுடிக்காரன், தமிழ் பேசும் டி.டி.ஆர் என நாக்கில் விரலை வைக்கும் கெட்டப்புகள். தவறு செய்யும் வி.ஐ.பி. வீட்டிற்கு கால் செய்து 'நான்..லோக்பால். உன் கதை இத்தோடு க்ளோஸ்' என மிரட்டி சொன்னதை செய்கிறார் ஹீரோ. 

டைட்டிலில் தி கம்ப்ளீட் ஆக்டர் L(OKP)AL என்று காட்டி அசத்துகிறார்கள். லோக்பால் எல்லாம் என்னைப்பொறுத்தவரை 'லோக பாலகன்' தான் என அலட்சியம் செய்யும் வி.ஐ.பி.க்கு ஆப்படிக்கிறார் லால் ஏட்டன். இந்தக்கதை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

மீரா நந்தன், மனோஜ் கே. ஜெயன், தலைவாசல் விஜய், காவ்யா மாதவன் ஆகியோரும் உண்டிங்கே. "என்னய்யா இப்படி இஷ்டத்துக்கு மொக்கை படமா நடிச்சி தள்ளுறாரு உங்கள் லால் ஏட்டன்" என கடுப்பாகி கேட்டதற்கு கேரள நண்பர் சொன்னது "அவர்தான் ஏற்கனவே பேட்டியில் சொல்லிவிட்டாரே. என்னை வைத்து குறுகிய காலத்தில் படமெடுக்க நிறைய தயாரிப்பாளர்கள் இருப்பதால் இப்போதெல்லாம் முன்பு போல கதை கேட்பதில்லை". அது செரி.
.........................................................................


சமீபத்தில் எழுதியது:


Sunday, February 10, 2013

சிவகாமியின் சபதம்                                                       

கல்கியின் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகமாக சென்னையில் நேற்று மதியம் கலைமாமணி முரளிதரனால் அரங்கேற்றப்பட்டது. நாட்டிய நாடகம் ஒன்றை இதற்கு முன்பு நேரிலோ அல்லது தொலைக்காட்சியிலோ  பார்த்திராததால் அக்குறையை போக்கும் பொருட்டு ஹாரிங்டன் சாலை லேடி ஆண்டாள் பள்ளியில் இருக்கும் ஆடிட்டோரியத்தை அடைந்தேன். சிவகாமியின் சபதம் கல்கியின் படைப்பு என்பதைத்தவிர வேறெதுவும் அறிந்திடாதவான் என்பதால்  நூற்றுக்கணக்கான பக்கங்களை படிப்பதை விட நாட்டிய நாடகம் வாயிலாக அவ்வொப்பற்ற காவியத்தின் சிறப்பம்சங்களை  கிரகித்து கொள்ளலாம் என்றெண்ணி அரங்கினுள் கால் பதித்தேன்.

சும்மா சொல்லக்கூடாது. சர்வதேச தரத்தில் ஒலி, ஒளி அமைப்பு, சிறப்பான இருக்கைகள்(குறிப்பாக முன்னிருப்பவர் தலை மறைக்கவில்லை) என லேடி ஆண்டாள் மனதை ஆண்டாள். சிவகாமியின் சபதத்தின் முக்கிய அம்சங்களை தொகுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை அனைவருக்கும் தந்தனர். நிகழ்ச்சி தொடங்க சில நிமிடங்களே இருந்ததால் அவசர கோலத்தில் படிக்கும்படி ஆனது. ஆனால் நிகழ்ச்சி துவங்கியதும் ஒவ்வொரு காட்சிக்கு முன்பாக புத்தகத்தில் இருந்ததை பின்னணிக்குரலில் அறிவித்தபோதும், கதாபாத்திரங்கள் அனைத்தும் தமிழில் உரையாடிய போதும்தான் நிம்மதி அடைந்தேன். 

மன்னர் நரசிம்ம பல்லவர் ராணி வனம தேவியிடம் தனது இளம்பிராயத்தில் சிற்பியின் மகள் சிவகாமியிடம் கொண்ட காதலை ஒப்புக்கொள்ளும் காட்சியுடன் துவங்கி, நரசிம்மர் - சிவகாமி இளம்பிராயம், புலிகேசியின் சகோதரர் நாகநந்திக்கு சிவகாமி மீதேற்படும் காதல், பரஞ்சோதி புலிகேசியிடம் பிடிபடல், புலிகேசியிடம் சிவகாமி சிறைபடல், வஜ்ரபாகுவாக மகேந்திர பல்லவர் நடித்து புலிகேசியின் படையெடுப்பை காலதாமதம் செய்தல், நரசிம்மர் புலிகேசி படையை வீழ்த்துதல் உள்ளிட்ட மேலும் சில காட்சிகளுடன்  இறுதியாக நரசிம்மர் மணமுடித்துவிட்டார் என்பதறிந்து சிவகாமி இறைவன் ஏகாம்பரேஸ்வரரையே கணவனாக ஏற்கும் காட்சியோடு நிறைவடைகிறது  இப்பிரம்மாண்ட கலையாக்கம்.  

புலிகேசி மற்றும் நாகநந்தியாக இயக்கம் உள்ளிட்ட பலதுறைகளை இதில் கையாண்ட முரளிதரன் நடித்துள்ளார். முப்பருவங்களில் சிவகாமியாக அனன்யா, காவ்யா மற்றும் உமா. வனம தேவியாக டி.வி.புகழ் ப்ரியதர்ஷினி. நரசிம்ம பல்லவராக திரைப்பட நடிகரும், தேர்ந்த நாட்டியக்கலைஞருமான வினீத்தை தேர்வு செய்யலாம் என சிலர் பரிந்துரை செய்தபோது நட்சத்திர அடையாளம் வேண்டாம் என முரளி மறுத்துள்ளார். ஸ்ரீனிவாஸின் அற்புதமான பின்னணி இசையும், அகன்று விரிந்த 70mm திரையில் ஓவியர் பத்மவாசனின் கைவண்ணமும் மெச்சத்தக்கவை. புலிகேசியிடம் நாகநந்தி உரையாடும்போது மட்டும் இசை இரைச்சல்.      

ஓரிரு இடங்களில் ஆபரணங்கள் கழன்று விழுதல், பின்னணி ஒலி சொற்ப நொடிகள் சட்டென மௌனமாதல் போன்ற சின்னஞ்சிறு குறைகள் மட்டுமே.

                                                  ஸ்ரீனிவாஸ், அனன்யா, காவ்யா, முரளிதரன், உமா       

நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பக்கபலமாக இவ்வாக்கத்தில் இடம்பெற்றுள்ளனர். தீபமேந்தி வரும் சிறுமிகள், துணை நடனம் புரியும் நங்கைகள், போர் வீரர்கள், சிற்பிகள் என கச்சிதமாக ஆட்களை தேர்வு செய்து நம்மை ஏழாம் நூற்றாண்டிற்கே அழைத்து சென்றுள்ளனர். பார்வையாளர்கள் இருக்கும் இடத்தின் நடுவில் இருந்து புலிகேசி பவனி வருதல், யானை மக்களை துரத்துதல் என காண்போரை பரவசப்படுத்தி இருக்கிறார்கள். ஆடை, ஆபரணங்கள் தேர்வும் சிறப்பு. மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என தத்தமது துறையில் தேர்ச்சி பெற்ற நபர்களை களமிறக்கி இருப்பது பார்ப்போரை பிரம்மிலாழ்த்துமென்பதிலயமில்லை.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நடந்த இந்த பிரமிப்பு தரும் சிவகாமியின் சபதத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்திழுத்தது இளநங்கை சிவகாமியாக நடனமாடிய காவ்யாதான். 17 வயதில் பரதப்புலியின் பாய்ச்சல். புலிகேசி, நரசிம்ம பல்லவர், சிற்பியாக நடித்தவர் என பலர் காவ்யாவை சுற்றி உயிரைக்கொடுத்து பெர்பாமன்ஸ் செய்து கொண்டிருந்தாலும் கண்கள் முழுக்க காவ்யா மீதே நிலைகுத்தி நின்றதை என் சொல்வேன்.  அபிராமியைக்கண்ட கமலைப்போல....'சிவகாமி சிவகாமி' என இன்னபிற கலாரசிகர்கள் போல என்னையும் ஆட்கொண்டது அந்த நடனம். 

                                                       
நிகழ்ச்சியின் இறுதியில் முரளிதரன் பேசியது:

"சிறுவயது முதலே கல்கியின் சிவகாமியின் சபதத்தின் பெரும் ரசிகன் நான். மொத்தம் 60 முறை அதனை படித்துள்ளேன். அதனை மேடை வடிவில்   கொண்டு வர அரும்பாடு பட்டேன். ஸ்ரீனிவாசன் அவர்களுடன் இணைந்து ஒலி அமைப்பிற்கு மட்டுமே நான்கு மாதம் உழைத்தோம். வீணை, சித்ரவீணை, சித்தார், சாரங்கி, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வாத்தியங்களின் இசையுடன், 50 தேர்ந்த நடனக்கலைஞர்கள், 10 நாடக நடிகர்கள், 20 சண்டைப்பயிற்சி வீரர்கள் மற்றும் 20 நாட்டுப்புற கலைஞர்கள் போன்றோரை தேர்ந்து எடுத்தோம்.

சிவகாமியின் சபதத்தை முழு வடிவமாக கொண்டுவருவது இது போன்ற மேடைகளில் சாத்தியம் அல்ல என்பது உண்மைதான். 'ஆயிரக்கணக்கான குதிரைகள், யானைகள் புடைசூழ' என கல்கி எழுதி இருந்ததே அதற்கு சான்று. திரைப்படத்தில் வேண்டுமானால் ஓரளவிற்கு இப்படைப்பை இன்னும் நிறைய பொருட்செலவு செய்து உருவாக்கலாம். எம்மாலான முக்கிய அம்சங்களை இங்கு பதிவு செய்துள்ளோம். நிறை, குறை இருப்பின் நீங்கள் சொல்லுங்கள். அதற்கேற்ப இன்னும் மெருகேற்றலாம்.

சென்னையில் எப்படியேனும்  சிவகாமியின் சபதத்தை அரங்கேற்றி விட  பிரம்ம பிரயத்தனப்பட்டேன் என்றால் அதில் மிகையில்லை. 'மானாட, மயிலாட, குயிலாட, குரங்காட' போன்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஓடோடி வந்து ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் ஒன்று கூட எங்களுக்கு ஆதரவு தராதது முற்றிலும் வருந்தத்தக்கது. ஒருசில ஸ்பான்சர்கள் இறுதி நேரத்தில் துணையாய் இருந்ததால் இது சாத்தியம் ஆயிற்று. அடுத்து அமெரிக்க, கனடா உள்ளிட்ட தேசங்களில் இப்படைப்பை அரங்கேற்ற உள்ளோம். நன்றி."
...........................................................................

குறிப்பு:

இனியொருமுறை சென்னையில்...ஏன் இந்தியாவில் எப்போது இந்த சாலச்சிறந்த நாட்டிய நாடகம் மேடையேற்றப்படும் என்று தெரியவில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் நண்பர்கள் தவற விட வேண்டாம். ராஜதர்பாரில் பிரதான இருக்கையில் வீற்று சர்வேதேச தரத்திலமைந்த தமிழனின் படைப்பை பார்த்த பிரமிப்பு கலந்த பெருமையுடன் சொல்கிறேன்.

..........................................................................
  

          

Saturday, February 9, 2013

வா வாத்யாரே நாட்டான்ட     
வா வாத்யாரே நாட்டான்ட.
நீ வராங்காட்டி நான் வுட மாட்டேன்.
டெல்லி பஜார் ஜக்கு.
நான் தமிழனுக்கு அல்வா தர்ற கொக்கு.

இந்தியா கேட்ல நின்னுகிட்டு இருந்தேன் புனுகுப்பூனையாட்டம்.
வைகோவை பாத்து ஜகா வாங்குனேன். எப்படி நம்ம ஆட்டம்.
அன்பா பாத்து கைய குலுக்கி தமிழனை உலுக்கினேன் வழக்கம்போலே.

சர்தா வாம்மா கண்ணு.
எதிர்க்கறவன் வாயில மண்ணு.

அட சர்தா வாம்மா கண்ணு.
எதிர்க்கறவன் வாயில மண்ணு.

நைனா உன் விசிட்டுக்கு வைட் பண்ணி நான் நாஸ்டா துன்னு நாளாச்சி.
மச்சான் உன் மூஞ்ச பாத்தேன். செஞ்ச பாவமெல்லாம் பறந்து போச்சி.
ஆயாக்கடை இடியாப்பம் நான். பாயாக்கறியும் நீயாச்சி.

வா வா மச்சான். வா மச்சான். வா வா மச்சான். வா மச்சான்.

வா வா மச்சான் ஒண்ணா சேந்து மொளகா பஜ்ஜி துன்னுக்கலாம்.

வா வாத்யாரே நாட்டான்ட.
நீ வராங்காட்டி நான் வுட மாட்டேன்.
டெல்லி பஜார் ஜக்கு.
நான் தமிழனுக்கு அல்வா தர்ற கொக்கு.
......................................................

                 
                                   

Friday, February 8, 2013

பெரு'மால்' பெருமை                                                   
ஸ்பென்சர் ப்ளாசா...மதராசப்பட்டினத்தின் முதல் ஷாப்பிங் மால். இன்றும் நடுத்தர மக்களின் நண்பனாய் விளங்கும் புண்ணியாத்மா. நானும் மால் திறந்திருக்கேன் என்று 'கொச கொச' கட்டமைப்பில் அபிராமி மெகா மாலை திறந்தார் ராமநாதன் அங்கிள். 'கோன் போலா யே மால் ஹை? அரே க்யா யார்?' என்று சப்பாத்தி தோ(ல)ழர்கள் அங்கலாய்த்தனர் அப்போது. அரும்பாக்கத்தில் உதயமான ஸ்கைவாக்கும் பெரிதாக பேசப்படவில்லை. ஜன நெருக்கடியை சமாளிக்க இடவசதி இன்று கூனிக்குறுகி மூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறது வானநடை. துரித நிழற்சாலை (எக்ஸ்ப்ரஸ் அவின்யூ) வந்த பிறகுதான் அசல் மால்தாசர்கள் பெருமூச்சு விட்டனர். செவ்வக வடிவில் ஒரே நேர்க்கோட்டில் குழப்பமின்றி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது E.A வின் ப்ளஸ். ஆனால் அதையே அப்பீட் செய்யும் வண்ணம் வந்துள்ளது ஃபீனிக்ஸ் மார்கெட் சிட்டி!! சென்ற வாரம் அங்கெடுத்த புகைப்படங்களுடன் இப்பதிவு துவக்கம்.

வேளச்சேரி பிரதான சாலையில் செக்போஸ்ட் மற்றும் குருநானக் கல்லூரி பேருந்து நிறுத்தங்களுக்கு இடையே வீற்றிருக்கிறது ஃபீனிக்ஸ். மற்ற மால்களை போல சாலையில் இருந்து வாயை பிளந்து பார்க்கும் படி இன்றி உள்ளே சில பல மீட்டர்கள் தள்ளி கட்டிடத்தை நிறுவியுள்ளனர். ஃபீனிக்ஸ் குழுவினர் மால் கட்டுவதில் ஜித்தர்கள்  என்பது தெளிவாக தெரிகிறது. மும்பை, பெங்களூரு, புனேவிற்கு பிறகு சென்னையில் கால் பதித்துள்ளனர். மொத்தம் 25 லட்சம் ஏக்கராம்ல!!  

                                                                     பீச், பார்க்...அது ஒரு கனாக்காலம் 
      

வழக்கம்போல கீழ் தளத்தில் பெரிய சைஸ் துண்டு போட்டு இடம்பிடித்து உள்ளது பிக் பஜார். அதாகப்பட்டது 'சரவணா ஸ்டோர்ஸ்' ரீமேக். பருத்திக்கொட்டை, ஆமணக்கு முதல் ஆலிவ் ஆயில், ஜீன்ஸ் பேன்ட் வரை இவர்கள் விற்காத பொருட்கள் இல்லை. வீக்கென்ட் ஸ்பெஷல் தள்ளுபடி என்று 9 ரூபாய் கீரையை 2 ரூபாய்க்கு விற்கும் வள்ளல் தன்மையை என்னவென்று சொல்ல? சிறுகீரை கட்டொன்றை ஆளுக்கு 2 ரூபாய் தந்து வாங்கி வீட்டில் நானும், நண்பனும் கழுவி ஊற்றப்பட்டதுதான் மிச்சம். அம்மா தந்த பாராட்டு "பஞ்சத்துல அடிபட்ட ஆடு, மாடு கூட சீந்திப்பாக்குமா இந்த சிறுகீரைய?". ஏகப்பட்ட பொருட்களை தள்ளுபடியில் போட்டு தாக்குகிறார்கள். ப்ராண்டட் பொருட்கள் தவிர்த்து இவர்களே பேக் செய்து விற்கும் நொறுக்குத்தீனிகள் மட்டரக எண்ணையில் தலைக்கு குளித்து விட்டு கெம்பீரமாக க்யூ கட்டி நிற்கின்றன. பிக் பஜார்...சோட்டா க்வாலிட்டி. அரே ஓ சம்போ!!  

                                                                          இன்னாபா? எப்டி கீர?                                                    

ஃபீனிக்ஸ் சிட்டி உள்ளே நுழைந்ததும் எங்கெங்கு என்னென்ன கடைகள் உள்ளன என்பதை கன்னிமாலர்கள் அறிய ஏதுவாக ஒரு தொடுதிரையை வைத்துள்ளது நன்று. எக்ஸ்ப்ரஸ் அவின்யூவை விட விசாலமான இடம் இதன் மிகப்பெரிய ப்ளஸ். ஆனால் சந்தடி சாக்கில் மன்மதர்கள்/ரம்பைகள் எதிர்பாலினரை உரசா வண்ணம் அநியாயத்திற்கு விசாலமாக இருப்பதால் 'வகுறு' எரிகிறது. மெகாமார்ட், க்ளோபஸ், லைஃப் ஸ்டைல், டாடா க்ரோமா எல்லாமே ஓப்பனிங் சூன். கம்ப்ளீட் எக்ஸ்சேஞ்ஜ் ஸ்டோர் சென்னையில் முதன் முறை ஷட்டரை திறந்து 'எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க, விற்க, மாற்றிக்கொள்ள' வாங்கோ வாங்கோ என்று வசியம் செய்கின்றனர். 

                                                                      அந்தர ஆங்கிளில் ஒரு க்ளிக்           
   
'நம்ம ஏரியால சோக்கா ஒரு மார்க்கெட்டாமே?' என்று வியப்பு மேலிட சாமான்யர்கள் சிலர் மேலுள்ள படத்தின் வலது ஓரத்தில் இருப்பவர் போல கூச்சத்துடன் உலா வந்தபோது 'முக்காவாசி பேரு சும்மா சுத்தி பாக்க வர்றவங்கதான். நம்ம ஊருன்னே இது. எதுக்கு படபடப்பு?' என்று அவர்களை ஆசுவாசம் செய்யதூண்டியது மனது. ஃபுட் கோர்ட் பக்கம் எட்டி மட்டும் பார்த்தேன். மற்ற மால்களில் இருப்பது போல ப்ரீ பெய்ட் கார்ட் சிஸ்டத்தை ஒழித்து கைல காசு வாய்ல தோசை போடுகின்றன உணவகங்கள். மிகவும் வரவேற்க்கத்தக்க அம்சம். மாறாமல் இருந்தால் சரி. சுமார் 20 பேர் அமரும் வண்ணம் வெட்டவெளி ஃபுட்கோர்ட் அருகில் இருப்பது அடடே. அங்கே நுழைந்து சுவற்றோரம் கையமர்த்தி வேளச்சேரி நில அழகை ரசித்துவிட்டு திரும்பினால் யார் கண்ணிலும் படாத ஒரு ஓரத்தில் 'கப்புள்ஸ் டேபிள்'. அனேகமாக அங்கு அமர ஜோடிகள் மத்தியில் பெரும் கலவரம் ஏற்படலாம்.

                                                            கலையின் விலை ஜஸ்ட் 1,35,000 ரூ மட்டுமே!! 
     
இதெல்லாம் இருக்கட்டும். 'நம்ம' ஏரியா எங்கய்யா என்று புலம்பியபோது நண்பன் மேல் தளத்திற்கு அழைத்து சென்றான். வந்துட்டோம்ல. LUXE(Luxury  Entertainment) என்று பெயரிடப்பட்டிருக்கும் மல்டிப்லெக்ஸ் ஜகஜோராக காட்சி அளிக்கிறது. சத்யம் தியேட்டரின் அடுத்த ஆ(தி)க்கம். மொத்தம் 11 திரைகள். அதில் ஒன்று மிகப்பெரிய ஸ்க்ரீன் கொண்ட 'ஐமேக்ஸ்'. அடுத்த வாரம் கதவுகள் திறக்கப்படலாம் என்று தெரிகிறது. ஜெட்லியின் ட்ராகன் கேட் மற்றும் ப்ரூஸ் வில்லிஸின் டை ஹார்ட் ஐமேக்ஸ் ரிலீசிற்கு தயார். வார இறுதியில் சும்மாவே 'ஹவுஸ்ஃபுல்' என்று அண்ணாசாலை சத்யம் படம் காட்டுவது இயல்பு. ஐமேக்ஸ் என்றால் மொக்கைப்படம் கூட நிரம்பி வழியும். 'அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்னலே பிரமாதம். ஐமேக்ஸ்ல டிக்கெட் எடுத்துக்காட்டு பாப்போம்' என்று கட்டிளம் காளையர்கள் பந்தயம் கட்டும் நாட்கள் வெகு அருகில்.

                                                                        'சத்யமா சீக்கிரம் தொறப்போம் சார்' 

'தமிழ்நாட்டு எப்பங்க காவேரி தண்ணி வரும்?' என்பதை விட பன்மடங்கு ஆர்வத்தில் 'எப்ப பாஸ் தியேட்டரை தெறப்பீங்க' என்று விசாரித்தவர்கள் ஏராளம். விஸ்வரூபத்தை விஸ்வரூப ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் திரையிடவே முதலில் ப்ளான் செய்திருந்தனர். ஆனால் சர்ச்சையில் கமல் சிக்கி சிங்கி அடித்ததால் சற்று தாமதம். இன்னும் சில நாட்களுக்கு இலவச பார்க்கிங் உண்டு. வளாகத்தின் உள்ளேயே குடியிருப்பு பகுதி ஒன்று வேகமாக கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே வார இறுதியில் மகிழுந்தில் வந்து செல்வோரால் ட்ராபிக் பிதுங்கிக்கொண்டு இருக்கிறது. அபார்ட்மென்டும்  வந்தால் அமோகம்.  

தியேட்டர், லான்ட்மார்க் இருந்தால் மட்டுமே பெரும்பாலும் மால்களில் கொஞ்சூண்டு காசு செலவு செய்யும் நபர் நான். இரண்டும் இன்னும் ஓப்பன் ஆகாததால் 2 ரூபாய் கீரைக்கட்டுடன் கெட்/கேட் அவுட் ஆனேன். பார்க்கிங் பிரச்னையில் மேட்டுக்குடிகள் ரதங்களை வைத்துக்கொண்டு மாலின் நாலாபுறமும் திணறிக்கொண்டு இருக்க அலட்சிய சிரிப்பை உதிர்த்து விட்டு நான்கே ரூபாய் டிக்கட் எடுத்து மாநகர பேருந்தில் ஏறியமர்ந்தேன். செல்வந்தர்களின் சொகுசூர்திகளை விட பெரிய வடிவில் இருந்த 'எங்க' பேருந்து சும்மா ஜொய்யுனு பறந்தது!!

Images: madrasbhavan.com   
............................................................................. 

சமீபத்தில் எழுதியது:

விஸ்வரூபம் - விமர்சனம்

Thursday, February 7, 2013

விஸ்வரூபம்         
'America's Most Loved' கலைஞன் ஆக கமல் எடுத்திற்கும் விஸ்வரூப முயற்சிதான் இப்படைப்பு.  சுவற்றில் சுச்சா அடிக்கும் பச்சா முதல் பல்லு போன கொள்ளு தாத்தா வரை கடந்த சில வாரங்களில் உச்சரித்து ஓய்ந்த வார்த்தை 'விஸ்வரூபம்'. இன்று முதல் விமர்சனங்களில் வேறு நம் சகோக்கள் நீக்கமற நிறைக்கப்போகும் வார்த்தையும் கூட. டெல்லி கற்பழிப்பு வழக்கு, புதிய தலைமைச்செயலகம் மருத்துவமனையாக மாறியது, அனைத்திலும் மேலாக   அண்ணாத்தை அஞ்சாநெஞ்சனின் பிறந்த நாள் விழாவைக்கூட மறக்கடித்து தலையாய சமூக பிரச்னை ஆகிப்போன இந்த 'விஸ்' எப்படித்தான் இருந்தது? 

அமெரிக்காவில் வசிக்கும் நியூக்ளியர் டாக்டர் பூஜா நடனக்கலைஞன் ஒருவனை மணக்கிறார். கணவனின் நடவடிக்கைகளை ரகிசய ஏஜன்ட் மூலமாக கண்காணிக்கிறார். ஒரு இக்கட்டான சூழலில் அவனுடைய சுயரூபம் கண்டு வாயை பொளக்கறது அந்த பொம்மனாட்டி. அந்த டெர்ரர் ஏரியாவுல இருந்து நம்மளை ஆப்கான் அழச்சிண்டு போறார் டைரக்டர். கெட்டவா மாதிரி நடிக்கிற ஹீரோ அசல் கெட்டவா(அதான் ஓய் டெர்ரரிஸ்ட்) கூட சேந்து அமெரிக்காவுக்கு ஒத்தாசை செய்யறார். என்ன மொத்தை கதையையும் சொல்லணுமா? ஓய் பிரம்மகத்தி. என்னங்கானும் பேசறேள்? 

சமாதான(!) புறாக்கள் இருக்கும் அறையில் டைட்டில் கார்டை போடுகிறார்கள். அய்யராத்து பாஷையில் பேஷா பூஜா பேசும் முதல் காட்சி கனஜோர். கதக் கலைஞனாக கமலின் நளின உடல்மொழி வாவ். வில்லன்களிடம் உதைபட்டு வாடும் நேரத்தில் தொழுதுவிட்டு சட்டென அடிக்கும் ஸ்டன்ட் - ஸ்டன்னிங் ஹீரோயிசம். பின்னணியில் 'யாரென்று நினைத்தாய்' பாடல். க்ளாஸும், மாஸும் லிப் டு லிப் அடித்தாற்போல் ஏகப்பொருத்தம். ஓமர் ஆக ராகுல் போஸ் பலே பேஷ். சில இடங்களில் அவர் பேசும் வசனங்கள் காதில் விழவில்லை. 10 ரூபாய் டிக்கெட் எடுத்து ஸ்க்ரீனுக்கு அருகே அமர்ந்து இருக்கலாமோ எனத்தோன்ற வைக்கும். ஆன்ட்ரியா, 'மாமா' சேகர் கபூர் அட்மாஸ்பியருக்கு வந்து செல்கின்றனர். நாசருக்கு மட்டும் கொஞ்சம் டயலாக் தந்து மரியாதை செய்துள்ளார் கமல். ஒருவர் கூட ஓவர் ஆக்டிங் செய்யாதது பெரிய ஆறுதல்.

கதாபாத்திர தேர்வுகள் படத்தின் அசுர பலம். துணை நடிகர்கள் பலரும் கதைக்கு தேவைப்படும் தேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு அளவாக நடிக்க வைக்கப்பட்டு இருப்பதால் காட்சிகளோடு ஒன்ற முடிகிறது. பின்னணி இசை இன்னும் பிரமாதமாக இருந்திருக்கலாம். லால்குடி இளையராஜாவின் கலை இயக்கத்தில் ஆப்கன் வீடுகள் தோன்றும் காட்சிகள் மட்டும் 'செட்' என தெளிவாக தெரிவது குறை. ஹாலிவுட் தரத்திலான படத்தை எடுக்க கமல் முயற்சித்து இருக்கும்போது அங்கிருக்கும் ஒருவரையே நேர்த்தியாக செட் போட வைத்திருக்கலாம்.  

ஏன் 'உலக நாயகன்' என்பதற்கு இரண்டு இடங்களில் கமல் தந்திருக்கும் வசனமற்ற பதில்களே போதும். ஓமர் வளர்க்கும் சிறுவன் ஒரு போராளி. சொந்த மகன் மருத்துவன் ஆக ஆசைப்படுபவன். ஒரு காட்சியில் தன் ஊஞ்சலில் அமர்த்தி ஆட்ட கமல் முயற்சிக்கையில் ' நான் என்ன குழந்தையா?' என்று கோபப்பட்டு நகர்கிறான் அவன். அதன்பின் ஜிகாதி சிறுவன் ஊஞ்சலில் அமர்ந்து 'ஊஞ்சலை ஆட்டுங்கள்' என கெஞ்சுமிடம்.... இரு எதிரெதிர் லட்சியங்கள் கொண்ட சிறார்களின் மனநிலையை அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் கமல். அது போல இன்னொரு விஷுவல் கவிதை. தாய்க்கு மருத்துவம் பார்ப்பது போல விளையாடிக்கொண்டு இருக்கும் இளைய மகனைக்கண்டு ஓமர் கோபமுருகிறான். அவனை அருகே அழைத்து நெற்றியில் துப்பாக்கி போல விரல்களை அழுத்தி எச்சரிக்க அதற்கு கமல் சிறுவனின் விரல்களை ஒமரின் நெற்றிக்கு நகர்த்தி பதிலடி தர வைக்கிறார். அதைக்கண்டு சிரிக்கும் சக போராளி நெற்றியில் ஓமர் சுடுவதாக அமைக்கப்பட்டிற்கும் காட்சி கண்டிப்பாக திரைமொழியில் ஊறித்திளைத்த கலைஞர்களால் மட்டுமே எடுக்க முடியும். கமல் அங்க நிக்கறார்.

இரண்டாம் பாதியில் லேசாக விறுவிறுப்பு குறைந்தாலும் தலையை சொறியும் வண்ணம் எந்த வித தொய்வும் இன்றி ஹெலிகாப்டர் வேகத்தில் பறக்கிறது இந்த விஸ்வரூபம். அமெரிக்கா, ஆப்கன், ஹெலிகாப்டர் என பிரம்மாண்டம் இருந்தாலும் ஹாலிவுட் கச்சிதத்திற்கு சற்று பின் தங்கியே உள்ளது. ஆனால் இந்திய அளவில் எடுக்கப்பட்ட முதல் 'சர்வதேச' சினிமா இது என்பது உண்மையே. அமெரிக்காவிற்கு ஏகத்திற்கும் கமல் வால் பிடித்து இருப்பது சகிக்கவில்லை. வை திஸ் அமெரிக்க பாசம் கமல்ஜி. ஆஸ்கருக்கு பைபாஸில் செல்ல இனி எத்தனை காலம்தான் காத்திருப்பது? We Understand.

பிரச்னைக்கு உரிய காட்சிகள் இருந்ததா என்பது அவரவர் பார்வையை பொருத்தது. ஆனால் இதுவரை இந்து(குறிப்பாக  அய்ய(ங்கா)ர்) மற்றும் இஸ்லாமியர்களை சீண்டி வந்த கமலுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு 'பரிசு' சமீபத்தில் நடந்த எதிர்ப்பின் வாயிலாக வந்துள்ளது என்பதே உண்மை. இரண்டாம் பாகம் இந்தியாவிலாம். கிழிஞ்சது போங்கோ!! 
..................................................................................

விருதகிரியை விட ஒஸ்தியா இந்த விஸ்வரூபம்?  கேப்டனின் பார்வை: 

                                                         
"இந்தா பாருங்க மக்களே. என்னமோ ஒலக நடிகரு அமேரிக்காலயும், aabkanisthaan லயும் dheeviraவாதிங்கள வளச்சி பிடிக்கிறாப்ல டைரக்சன் செஞ்சதா இம்புட்டு பெரும பேசுறீங்களே. உங்களை எல்லாம் கரண்ட் கம்பில கட்டி தோல உரிச்சா  என்னங்கறேன். நான் விருதகிரில எடுக்காததையா இவரு எடுத்து புட்டாரு? அந்த படத்தை நாந்தான் டைரக்ட் பண்ணேன். ஓப்பனிங் சீன்ல 'டமக்கு டமக்கு  டம் டம் டோரா'ன்னு முரசு பீட் வச்சு கெத்து காட்டுனேன். உங்காளு என்னடான்னா மர்மஸ்தானத்துல குத்து வாங்கிட்டு கத்தி சண்டை போடறாரு?ஹய்யோ... வாட் இஸ் திஸ் பூஜா புள்ள??

"நான் ஒரு காஷ்மீர் dheeவிரவாதி. ஆனா எனக்கு அரபி தெரியாது. தமிலும், இங்கிலிபீசும்தான் தெரியும்னு காதுல பூ சுத்தராறு மக்களே. விருதகிரில அல்பேனியா வில்லனை பிடிக்க ஒரே ராத்திரில டிக்சனரி படிச்சி அவங்க நாட்டு மொழி கத்துக்கறாப்ல ஒரு சீன் வச்சிருப்பேன். நாங்கல்லாம் உங்களுக்கு உலக நாயகனா தெரியல???

இன்னொரு சீன்ல அமேரிக்கா FBI அதிகாரி கமலை பொரட்டி எடுக்கறாரு. கடைசில அவர் இந்தியாவோட அத்தே பெரிய ஏஜன்டுன்னு தெரிஞ்ச பொறவுதான் சலாம் போடறான் அந்த வெள்ளையன். என்றா இது ஈரோயிசம்? அதுபோல அரபி, இங்கிலிபீசு, அய்யராத்து பாஷை பேசுறாப்ல சீனு வச்சிருக்காப்ல இந்த கமலு. ராகுல் காந்தி இந்தி பேசும்போது  மண்ட காயுற மாதிரி இங்கயும் வெறுப்பாகுறாக மக்கள் எல்லாம். ஆனா விருதகிரில ஒரே டைம்ல தமிழ், இங்கிலிபீசு வாய்ஸை ஓடவிட்டு அப்பயே புரட்சி பண்ணவன் நானு. 'ஸ்காட்லான்டு யார்டு' போலீசுக்கே உதவி செஞ்ச நான் அப்படி என்ன உங்களுக்கு எளப்பமா போயிட்டேன்?' (ஆதாரம் காணொளியில்):  
    

இந்தியாவ காப்பாத்த நான் கோட் போட்டுட்டு  baaகிஸ்தான் dheeவிரவாதிங்கள அடிச்சா கைகொட்டி சிரிப்பீங்க. அதையே கமலு aapகானிஸ்தான் போயி அமேரிக்கா கூட கைகோத்து சண்ட போட்டா ஆலிவுட்டு தரம்னு பிகில் அடிப்பீங்க. அட நன்றி கெட்ட பய மக்கா? அது ஏன்னு எனக்கு நல்லாவே தெரியும் மக்களே. உங்க துருப்புடிச்ச மனசுல பதிஞ்சி போன அந்த எண்ணம் என்ன தெரியுமா??? என்ன தெரியுமா??????
.

.


.


.


.


.

.

.

.

.

.


.

.

.

.

.

"செகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்டா". அதான?

...........................................................................


                                           

Saturday, February 2, 2013

நேர்மையான இஸ்லாமியன் என்ன பாவம் செய்தான் ?                                                         
தேசத்தில் பல்வேறு பிரச்னைகள் இருக்க ஒட்டுமொத்த மீடியாவும் கமல் 'இயக்கிய'படம் பற்றியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக விவாதித்துக்கொண்டு இருக்கின்றன. பொதுவாக வடநாட்டு சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகள் தென்னிந்திய(குறிப்பாக தமிழ்) சினிமா குறித்த செய்திகளை பெரிதும் கண்டு கொண்டதே இல்லை. அதெல்லாம் எந்திரனுக்கு முன்பு வரை. 'ஜெயா டிவி ரைட்ஸ் தர மறுத்ததால் கமலை மேடம் பழி வாங்குகிறார்' என்று NDTV தொடர்ந்து செய்திகளை போட்ட வண்ணம் இருக்க, கூடங்குளம், டெங்கு போன்ற பிரச்னைகளுக்கு கூட ஊடகங்களை சந்தித்து பெரிய அளவில் விளக்கம் தராத முதல்வர் வேறு வழியின்றி இப்படம் பற்றிய சர்ச்சைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிவிட்டார்.

இத்திரைப்படம் குறித்து ஒரு சில பேஸ்புக் ஸ்டேட்டஸ் மற்றும் ஷேர்கள் போட்டதோடு வேறெந்த சமூக டீயும் ஆத்தவில்லை நான். காரணம் சிம்பிள். மெத்தப்படித்த சான்றோர் பெருமக்களை விட இணையத்தில் ஆளாளுக்கு இந்த வழக்கை வாதம், பிரதிவாதம் செய்து தீர்ப்பு சொல்லி பட்டையை கிளப்புவதால் ஆலமரத்தடி பஞ்சாயத்தில் ஓரமாக துண்டை அக்குளில் சொருகியபடி வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆகிப்போனேன். ஒரு சில பதிவர்கள் மட்டுமே சினிமா சார்ந்த விமர்சனம் எழுதி இருந்தனர். மற்றவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப கமலுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வித வித மேக் அப் போட்டுக்காட்டி அசதி ஆகிப்போயினர். தற்போது ஹாசன் மற்றும் இஸ்லாம் நண்பர்கள் தமக்கு  பின்னே எப்பேற்பட்ட 'விலையில்லா' அரசியல் தனது ஜித்து வேலையை காட்டி உள்ளது என்பதை அறிந்திருப்பர்.

குழம்பிய கோடம்பாக்க  குட்டையில் மீன் பிடிப்பது ராமதாஸ் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோரின் ஸ்டைல். ஆனால் சற்றே கலங்கிய கடலில் திமிங்கிலம் பிடிப்பது சன் தாத்தாவின் ஸ்டைல். கடந்த சில ஆண்டுகளாக ஓட்டை வலையுடன் கடலுக்குள் இறங்க முயற்சித்து அடிக்கடி  சுண்ணாம்பு தடவிக்கொள்கிறார் பாவம். நாலு நெத்திலி மீனை பிள்ளைகளுக்கு பகிர்ந்து தரவே தாவு தீர்ந்து போகும் காலத்தில் கமலுக்கு பிஷ் ப்ரை போட கிளம்பிவிட்டார் லொள்ளு தாத்தா. 

'தமிழன் மேல கை வச்சா கர்நாடகா, கேரளா, பூட்டான், சோமாலியா எல்லாம் அதிரும்டா. அடிங்கு' என்று நெஞ்சு நிமிர்த்தி நரம்பு முறுக்கி வீராவேச வசனம் பேசிய சீமான், சத்யராஜ் போன்ற மாவீரர்கள் கமல் எனும் கலைஞனுக்கு புரட்சி முழக்கம் இடுவார்கள் என்று பார்த்தால் கண்ணிலேயே  படவில்லை. அண்ணன்களே..உங்கள் பேச்சைக்கேட்டு சோல்டர் திமிறிய இளித்த வாயர்களில் நானும் ஒருவன் ஆகிப்போனேனே அன்று. ஆனால் இன்றோ ...நன்று. நன்று. 

இதற்கு நேர்மறையாக நானும் பேசுகிறேன் பேர்வழி என்று ஜைனுல் அபிதீன் என்பவர் தந்தை மகள் உறவை கொச்சைப்படுத்தி தன்னை அசிங்கப்படுத்திக்கொண்டார். 'தங்கள் சமூகத்திற்கு நல்ல விஷயங்கள் செய்தவர். அன்று மட்டும் ஏனோ அப்படி பேசிவிட்டார்' என்று வருத்தம் தெரிவித்தும், வக்காலத்து வாங்கியும் இஸ்லாம் நண்பர்கள் எழுதி இருந்தனர். கற்பனையாக திரையில் வரும் காட்சிகள் மனதை புண்படுத்துகிறது என்று போராட்டம் செய்யும் சில அமைப்புகள், நிஜத்தில் பலர் முன்னிலையில் பொறுப்புள்ள(!) பிரதிநிதி ஒருவர் இப்படி பேசியதற்கு அதே அளவு போராட்டம் செய்து அவரை கண்டிக்காதது வருத்தமே(தயவு செய்து பதிவுகளை மேற்கோள் கட்ட வேண்டாம். படித்து விட்டேன்). பி.ஜே.வையும் காமடி பீஸ் ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் நான் பார்க்கிறேன்.

இப்படம் குறித்த சர்ச்சையில் குதூகலம் ஆகி வேறுபாட்டை ஊக்குவிப்போர்   என இந்துத்வா இடியட்கள், போலி பகுத்தறிவாளர்கள், அரைவேக்காடு இஸ்லாம் பிரதிநிதிகள், குள்ளநரி அரசியல்வாதிகள் போன்றோரை சொல்லலாம். இத்திரைப்படம் மற்றும் அதன் சர்ச்சை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இணையத்தில் ஹிட்ஸ் அடிக்க ஓடி வரும் மொக்கைகள் இம்சை இன்னும் கொடுமை. 

முல்லைப்பெரியாறு பிரச்னை வந்தபோது 'கேரளாக்காரன் இனி என் ஜென்ம விரோதி' என்று திடீர் ஆவேசம் கொண்டு இணையத்தில் பொத்தாம் பொதுவாக எழுதினர் சிலர். 'அரசியல்வாதிகள் ஏவிவிட்டு கைக்கூலிகள் செய்யும் செயலுக்கும், தமிழனை கேவலமாக பார்க்கும் கேரள மக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதும், அவர்களை புறக்கணிப்பதும் அவரவர் உரிமை. ஆனால் ஒட்டுமொத்த மலையாளிகளும் ஒரே மனப்பான்மை கொண்டவர்கள் எனக்கருதுவதும், அவர்களை கண்டபடி வசைபாடுவதும் பிற்போக்கு தனத்தின்  உச்சம். அதுதான் தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்துகொண்டு இருக்கிறது.

போராட்டம் செய்யும் சில/பல அமைப்புகளின் போக்கை கண்டித்து நேர்மையான முறையில் தனது எண்ணங்களை பகிராமல் விஷ விதைகளை இஸ்லாமியர்களுக்கு எதிராக தூவுவதை கடுமையாக கண்டிக்கிறேன். இங்கு நான் பேசுவது நேர்மையான இந்திய முஸ்லீம்களை பற்றி மட்டுமே. கள்ளநோட்டு, தீவிரவாதம், திருட்டி டி.வி.டி. விற்பனை செய்பவர் எந்த மத த்தை சேர்ந்தவராக இருப்பினும் தவறு தவறுதான். தற்போது கமல் பட சர்ச்சைக்கு முஸ்லிம் பதிவர்கள் போடும் பதிவுகளின் எண்ணிக்கை  மலாலாவை தாலிபான்கள் சுட்டபோது எத்தனை இருந்தது? கமலை கண்டிக்கும் அளவில் பாதியேனும் தாலிபான்களை கண்டிக்காமல் இருந்தது ஏன்? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்???       
       
    
மேற்கண்ட எழுத்துகள் கமலின் படம்(கக்கா போகும்போது கரப்பான் பூச்சி கூட அப்பட டைட்டிலை உச்சரிப்பதால்....முடியல) பற்றிய எனது எண்ணங்களின் ஓட்டம் என்றாலும் இறுதியாக இதயத்தில் இருந்து ஒரு முக்கிய விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். 

பெரும்பான்மை சமூகத்தில் இருக்கிறோம் என்கிற இறுமாப்பில் அவ்வப்போது இஸ்லாம் நண்பர்களை 'பாகிஸ்தானுக்கு போயேன்' என்று சொல்லுவதும், 'இவன் கூட பார்த்து பழகு. வீட்ல குண்டு வச்சிருப்பான்' என்று விளையாட்டாக(??) பகடி செய்வதும்..கேடுகெட்ட செயல். இவ்வார்த்தைகள் மூலம் செய்யாத தவறுக்கு குற்ற உணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் நமது முஸ்லீம் தோழர்கள் மனநிலையை சற்று எண்ணிப்பார்த்தால் என்ன? எந்த தவறும் செய்யாத பால்ய வயதில் 'குடிகாரன் மகன் போறான் பார்' என்று எகத்தாளம் செய்த சமூகத்தில் வாழ்ந்த என் போன்றோருக்கே அந்த வலி தெரியும். ஆனால் அதைவிட நூறுமடங்கு ரணத்தை அப்பாவி இஸ்லாமியர்கள் மனதில் ஏற்படுத்திக்கொண்டு இருப்பது மிகவும் மானங்கெட்ட செயல் என்பதை திட்டவட்டமாக பதிவு செய்கிறேன். 

கமலுக்கு எதிராக பிரச்னை செய்யும் நபர்களின் செயலில் தவறுகள் இருந்தால் அதை மட்டும் வாதத்திற்கு உட்படுத்தி நாகரீகமாக வெளி இடங்கள் மற்றும் இணையத்தில் விவாதிக்கலாமே? எதற்கு இந்த Sensational காட்டமும், இந்துத்வா கொழுப்பும்???

ஆறாம் வகுப்பு சேர்ந்த நாளில் தோழன் ஆன முசாதிக் நசீருடன் இன்றுவரை அதே நட்புடன் கரம்பற்றி வாழும் எனக்கு இது போன்ற பிரிவினை பேச்சுகள் பெரும் கசப்பையே உண்டாக்குகின்றன. தற்காலிக விளம்பரம், பெரும்பான்மை மதவெறி, மட்டரக அரசியலுக்காக இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் நபர்களின் கேவலமான எண்ணங்கள் மீது காறி உமிழ்கிறேன்.
................................................................................  


Friday, February 1, 2013

ஜுராசிக் பேட்டை (01/02/13)                 
பேரன்பு மிக்க பெரியோர்களே, ஸ்பெஷல் மீல்ஸை தொடர்ந்து இவ்வாண்டு முதல் புதிய பகுதியாக ஜுராசிக் பேட்டை துவங்கப்படுகிறது. நம்ம பேட்டை வீனஸ் கிரகத்தின் வடகிழக்கு ஓரத்தில் உள்ள 'ஹிந்தியா' எனும் தேசத்தின் ஒரு பகுதியாகும். அந்த தேசத்தில் நடக்கும் சம்பவங்களை பேட்டையாட்கள் அலசி அயர்ன் செய்யும் வண்ணம் இக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜுராசிக் பேட்டையை கி.மு.55 ஆம் ஆண்டு ஹிந்திய அரசிற்கு தானம் தந்துவிட்டு மறையும் தருவாயில் பேரரசன் நெப்'போலி'யன் 'எனது பேட்டையில் கருத்து சுதந்திரம் என்பது உயிராக மதிக்கப்பட வேண்டும். அவர்களை கண்போல் பாதுகாப்பது உங்கள் கடமை' என்று உரக்க கத்திவிட்டு 'டொய்ங்' ஆனானாம்.  என்னதான் ஹிந்தியாவின் ஒரு பகுதியாக ஜூ.பே இருந்தாலும் அங்கிருக்கும் மக்கள் மீது அன்பு செலுத்தி மானிய விலையில் விலையில்லா மூக்குப்பொடி, பல்பம், தேன்மிட்டாய் போன்றவற்றை வழங்கி சென்ட்ரல் அரசு பம்மலாமே தவிர அடக்குமுறை எதுவும் எங்க ஏரியா மக்களிடம் செல்லவே செல்லாது. இப்படி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக சொல்லப்போனால் இது ஒரு கெத்தான யூனியன் பிரதேசம்! 

ஊர் மக்களை பாதுகாக்க 'பேருக்கு' ஒரு ராஜாவாக இருக்கும் எங்கள் டைனோசரசர் அவர்களின் முதல் தகவல் அறிக்கை:   

'பேட்டையில் உள்ள பல்வேறு கட்சிகளில் யூத் அணி தலைவர்களாக இருக்கும் தாத்தாக்களே, ஊர் காசில் படம் தயாரித்துவிட்டு அரசியலுக்கு வரப்போகிறேன் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் நண்டு நசுக்கான்களே மற்றும் பொதுமக்களே. உங்கள் அனைவருக்கும் இந்த டைனோசர் அரசனின் வணக்கங்கள். பரம்பரை ரத்தத்தில் தெனாவட்டு, லோலாயித்தனம் போன்றவறை நம்முள் ஊறியிருப்பது உலகறிந்த செய்தி. ஆனால் நமக்கென்று ஒரு டி.வி. இல்லாததால் வெளி உலகத்திற்கு நாம் இன்னும் பாப்புலர் ஆகாதது டோடல்லி இர்ரிடேட்டிங் மீ. ஆஸ் எ ரிசல்ட் ஐ ஹாவ் டிசைடெட் டு ஓப்பன் யெ ந்யூ சேனல். அதற்கு 'JERK'  டி.வி (ஜுராசிக் என்டெர்டெயின்மென்ட் பார்க் என்பதன் சுருக்கம்)  என்று பெயர் சூட்டி இருக்கிறேன். மேலும் பல சேனல்கள் வர உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் ஒன்று மக்களே இதற்காக நான் தம்படி பைசா கூட செலவு செய்யவில்லை. இதற்கும் எனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் எந்த ஒரு காலத்திலும் இருக்கப்போவதில்லை.

இன்னொரு முக்கிய செய்தி. பேட்டை பதிவர்கள் பலர் ஆளாளுக்கு புத்தகம் எழுதிவிட்டு பொதுமக்கள் நடமாடும் இடங்களில் எல்லாம் 'என்ன நம்ம புக்கை படிச்சீங்களா?' என்று கேட்டு பீதி அடைய செய்கிறார்கள் என அறிந்தேன். இதே நிலைமை நீடித்தால் அடுத்த ஆண்டு புத்தக கண்காட்சியில் 'ஊட்டி வருக்கி மற்றும் லிச்சி ஜூஸ் செய்வது எப்படி?' போன்ற புத்தகங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். மைன்ட் இட். 

முந்தைய ஆட்சியில் சர்க்கஸ் கூடாரம் போல தண்டத்திற்கு ஒரு அரண்மனை கட்டினார் 'சன்'னாபுரம் லொள்ளு தாத்தா. அதை மாற்றியமைத்து மருத்துவமனை ஆக்கி இருக்கிறேன். ஒருவாரம் ஆகியும் ஒரு நோயாளியும் எட்டிப்பார்க்காதது எனது புகழுக்கு கிடைத்த இழுக்கு. (டாக்டர் பட்டம் வாங்கிய நான் வைத்தியம் பார்க்கிறேன் என்று சொல்லியும் ஒரு பயலையும் காணுமே). 

'மன்னா ஹிந்தியாவின் பிற பகுதிகளில் 'அலெக்ஸ் பாண்டி' க்கு தடை விதித்து இருந்தால் கோடான கோடி ரசிகர்கள் தப்பித்து இருப்பார்கள். அதைவிட்டு விஸ்வ ரோபோவிற்கு போய்.....' என்று கொப்பளிக்கும் குடிமக்களே. அமைதி. அமைதி. நம் சேனலின் முதல் படமாக 'அலெக்சை' போட்டால் விளம்பர யாவாரம் பிய்த்துக்கொள்ளும். சிக்க மாட்டேன். கமலிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறேன். 'விஸ்வரூபம்..நான் பட்ட பாடு' எனும் புதிய படத்தின் சாட்டிலைட் உரிமையை நமக்கே தருவதாக கூறியுள்ளார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர். எலே டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி!!

இறுதியாக உங்களுக்கு ஒரு பெருமகிழ்ச்சி தரும் செய்தி பெரியோர்களே. டெல்லி பாலியல் சம்பவம், டெல்டா விவசாயிகள் தற்கொலை, டெங்கு மரணங்கள் போன்ற பைசா பெறாத சம்பவங்களை சுத்தமாக மறந்துவிட்டு அதிமுக்கியமான பவர் ஸ்டார்,விஸ்வரூப செய்திகளை கக்கூஸில் இருக்கும்போது கூட ப்ளூடூத் மாட்டிக்கொண்டு விவாதிக்கும் உங்கள் இலக்கிய(?) புத்திக்கூர்மையை பாராட்டி நாளை மாலை 4 மணிக்கு ஆளுக்கு 100 சவுக்கடி (பின்பக்கம் பழுக்க பழுக்க) வழங்கப்படும் என்பதை சொல்லிக்கொள்வதில் பேருவகை கொள்கிறேன். திஸ் இவென்ட் இஸ் powered by பர்னால்.
    
...............................................................................

  
Related Posts Plugin for WordPress, Blogger...