CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, January 19, 2013

சென்னை புக் ஃபேர்மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் பகிர்ந்த தகவல்: 'சென்ற ஆண்டு நடந்த புத்தக விற்பனையில் பாதி கூட இவ்வாண்டு இல்லை'. புத்தக  விற்பனையாளர்கள் இப்படி புலம்பியுள்ளனராம். அதற்கு முக்கியமாக சொல்லப்படும் காரணங்கள்:150 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்படும் புத்தகங்கள், கணினியில் மின்னூல் படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்றும் விண்ணை முட்டும் விலைவாசியால் முன்பு போல புத்தகப்பிரியர்கள் செலவழிக்க அஞ்சுவது. அதிலும் குறிப்பாக  'வருஷா வருஷம் தம்பட்டம் அடிக்க வாங்குன  புக்குங்களை படிக்கவே உங்களுக்கு வக்கு  இல்ல. இதுல புதுசா  வேற  வாங்கப்போனீங்க  கணுக்காலை வெட்டிப்புடுவேன்' என்று மனைவியிடம் விழுப்புண்  வாங்கி இருப்போரின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்.
  
இவ்வாண்டு கண்காட்சி நடக்குமிடம் நான் படித்த எனதருமை ஒய்.எம்.சி.ஏ. பள்ளி என்பதால் ஆரம்பம் முதலே மனது படபடத்துக்கொண்டு இருந்தது. இயற்கை அன்னையே ஓய்வெடுக்கும் எழில் கொண்ட எனது அந்நாள் தாய்வீடு என்ன கதிக்கு ஆளாகி இருக்குமோ என்று மனது புலம்பிக்கொண்டு இருந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. 1950-கள் முதல்  2000 ஆம் வருட ஆரம்பம் வரை அங்கு நடக்காத ஷூட்டிங்கே இல்லை என்று சொல்லலாம். 'பொன் ஒன்று கண்டேன்'(படித்தால் மட்டும் போதுமா), 'காற்றில் எந்தன் கீதம்' (ஜானி) பாடல்கள் முதல் பார்த்திபனின் கில்லி-தாண்டு ஆட்டம்(உள்ளே வெளியே), அப்பாஸ் - வினித் கால்பந்து போட்டி(காதல் தேசம்) வரை ஏகப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட லொக்கேஷன் அது. இடையே சில வருடங்கள் சினிமாவிற்கு தடை போடப்பட்டது.

நீண்ட நாட்கள் கழித்து  சென்ற ஆண்டு  ஒய்.எம்.சி.ஏ.விற்கு  விசிட் அடித்தபோது அங்கிருந்த வாசு அண்ணனிடம்(பள்ளிக்காலம் முதல் இன்று வரை ப்யூனாக நீடிக்கிறார்) விசாரிக்கையில் 'ஷூட்டிங் ஆட்கள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்திவிட்டு செல்வதாலும், பள்ளி நடக்குமிடத்தில் ஷூட்டிங் நடப்பது சரிப்படவில்லை என்பதாலும் தடை போட்டுவிட்டார் புதிய நிர்வாகி' என்றார். ஆனால் அந்த நிம்மதிக்காற்றை இயற்கைத்தாய் நெடுகாலம் சுவாசிக்க முடியவில்லை. கடந்த சில மாதங்களாக ஐ.பி.எல் துவக்க விழா,யுவன் ஷங்கர், ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தும் வியாபார தளமாகிப்போனது 'எனது' ஒய்.எம்.சி.ஏ. அந்த நிகழ்வுகள் எதற்கும் செல்லவில்லை நான். இம்முறை புத்தக கண்காட்சிக்காக உள்ளே காலடி எடுத்து வைத்தேன்.

வெளியே வெகுதூரம் நீண்டிருந்த பள்ளிச்சுவர் முழுக்க சினிமா, பத்திரிக்கை, அரசியல் என சகலவித போஸ்டர்கள். தி.மு.க.ஆட்சியில் மேயர் சுப்பிரமணியன் அவர்களின்  முயற்சியால் தமிழ்ப்பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை சித்தரிக்கும் அழகிய ஓவியங்கள் அனைத்தும் இந்த சமூக போராளிகளின் போஸ்டர்களால் நாறடிக்கப்பட்டு இருந்தது மனதை வருத்தியது. 'ஒட்டட்டும். நமக்கென்ன?' என மேடம் ஆட்சி கண்டுகொள்ளாமல் இருப்பது அதிசயமா என்ன? இதில் முக்கிய கொடுமை என்னவெனில் தி.மு.க.கட்சி மற்றும் உதயநிதியின் 'இது கதிர்வேலன் காதல்' போஸ்டர்களும் அதில் அடக்கம்.

'கண்காட்சி வளாகம் ஒருவேளை புற்கள் நிறைந்த கால்பந்து மைதானத்தில் இருக்குமோ' எனும் பயத்துடன் நுழைந்த எனக்கு பெரிய ஆறுதல். நல்லவேளை 'மிடில் கிரவுன்ட்' என்று  மாணவர்களால் அழைக்கப்படும் அந்த பசுமையான ஆடுகளத்தை தாரைவார்க்கவில்லை நிர்வாகம். அருகே இருந்த இரண்டு பெரிய கால்பந்து மைதானங்கள் ஆக்ரமிக்கப்பட்டு இருந்தன. அந்த இடத்தை சுற்றிலும் அடிக்கொரு இடம் பள்ளம் நோண்டப்பட்டு இருந்தது. ஸ்டால்கள் இருக்கும் இடத்தினுள் நடந்து சென்றால் மேடும், பள்ளமும் பஞ்சமின்றி. பெரியவர்கள் பொறுமையாக நடந்து செல்லவும். மடங்கி இருக்கும் தரைவிரிப்புகள் மற்றும் சமமற்ற நிலப்பகுதிகள் உங்கள் காலை வாரி விட வாய்ப்புகள் அதிகம்.

இதுபோக சிறுநீர், காகித மற்றும் தின்பண்ட கழிவுகள் என இன்னும் பல மாசுகளை தாங்கிக்கொண்டு நாட்களை நகர்த்த உள்ளது எனது பள்ளி. அண்ணாசாலையில் கிண்டி, சைதை, தேனாம்பேட்டை முதல் சென்ட்ரல் வரை சுரங்கப்பாதை அமைத்துள்ள கழக அரசுகள் இன்றுவரை நந்தனத்தில் ஒரு சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்காததற்கான காரணம் பிடிபடவே இல்லை. சென்னையின் மிக முக்கிய சிக்னல் அமைந்து இருக்கும் நந்தனம்  தேவர் சிலை அருகே இன்னும் பிதுங்கிக்கொண்டு இருக்கிறது வாகன நெருக்கடி. இந்த அழகில் புத்தக கண்காட்சி வேறு.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வளாகத்தில் இன்னொரு 'அங்கமாக' இருப்பது பார்வையற்றோர் பள்ளியும்தான். குறைந்தபட்சம் அங்கிருப்போரை மனதில் கொண்டாவது அரசு ஆவன செய்தால் புண்ணியம். சுரங்கம் அல்லது மேம்பாலம் இல்லாவிடினும் பெரியார் மாளிகை  மற்றும் பள்ளி எதிரில் ஹ்யூமா  உள்ள மருத்துவமனை அருகில் பாதசாரிகள் க்ராஸ் செய்யும் இடத்தில் போக்குவரத்து காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்ணில் பட்ட போக்குவரத்து  காவலர்கள் தற்போது நீண்டகால விடுப்பில்/கடுப்பில் போய் விட்டனர் போல! அக்குறையால் சாதாரண மக்களே க்ராஸ் செய்ய சிரமத்திற்கு ஆளாகும்போது கண்பார்வையற்றவர்களின் நிலைமை என்னவென்று சொல்லியா 'தெரிய' வேண்டும் அரசுக்கு???

ஏற்கனவே சைதை ஆசிரியர் கல்லூரியில் இருந்த பிரம்மாண்ட மைதானத்தை மெட்ரோ ரெயில் பணிகளுக்கு தானம் தந்துவிட்டனர். தி.நகர் வெங்கட்நாராயணா ரோட்டில் இருக்கும் மாநகராட்சி மைதானத்தை ரங்கநாதன் தெரு மற்றும் பாண்டி பஜாருக்கு ஷாப்பிங் செய்ய வரும் சீமான், சீமாட்டிகளின் கார்களை நிறுத்தும் இடமாக மாற்ற அரசியல்வாதிகள் முயன்று பின்பு பொதுமக்கள் முயற்சியால் சட்டபூர்வமாக தடுக்கப்பட்டது. தற்போது மிச்சம் இருக்கும்  ஒய்.எம்.சி.ஏ.வும் வணிக காரணங்களுக்காக 'சமரசம்' செய்ய துவங்கிவிட்டது. இதுபோன்ற பல்வேறு மனவருத்தங்களால் எப்போது புத்தக கண்காட்சி வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று காத்திருக்கும்  ஒய்.எம்.சி.ஏ. தாசனாகிய என் போன்றோர் நொந்துகொண்டு இருக்கிறோம்.

இருக்கிற மைதானங்களை ஒழித்துவிட்டு குழந்தைகள் வீட்டுக்குள்  முடங்கி ஆடிப்பாடி மகிழ கண்காட்சியில்  சிறப்பு சி.டி.ஸ்டால்கள் விற்கும் பேரன்புடையீரே உமது புகழ் ஓங்குக. மைதானங்களில் தடம் பதிப்பதற்கான காரணம்  சிறார் மற்றும் இளையோரின்  விளையாட்டு ஆர்வத்திற்கு உரம் போட வேண்டுமே அன்றி  பொதுமக்கள் 'சொய்' என்று உச்சா அடித்து விட்டு 'ரஹ்மான் ராக்ஸ்', 'சுஜாதா புக்ஸ் ரெண்டு பண்டல் வாங்கிட்டேன்' என்று மயிர்  சிலிர்க்கும் கூடாரம் ஆகிப்போதல் எவ்வகையில் நியாயம்?

இதே நிலை தேசமெங்கும் தொடர்ந்தால் அடுத்த ஒலிம்பிக்கில் லட்டு என்ன.. தூள்பூந்தி கூட கிடைக்காது.
.................................................................................

5 comments:

கார்த்திக் சரவணன் said...

கண்காட்சிக்கு வருபவர்கள் இடத்தை மாசுபடுத்தாமல் தடுக்க விழிப்புணர்வு போஸ்டர்களை வைக்கலாம். குப்பைத் தொட்டிகளை ஆங்காங்கே (முக்கியமாக உணவகங்கள் இருக்கும் இடத்தில்) வைத்தால் ஓரளவு குறைக்கலாம்.

சேலம் தேவா said...

நீங்கள் படித்த பள்ளியின் மேல் கொண்டிருக்கும் அன்பை உங்கள் பதிவில் கண்டேன்.உங்கள் ஆதங்கம் நியாயமானது.கண்காட்சிகள்,மாநாடுகள் நடந்த இடங்களை முடிந்த பின் பார்த்தால் கலவரம் நடந்த இடம் போல்தான் காட்சி அளிக்கும். :(

வெங்கட் நாகராஜ் said...

உண்மையான ஆதங்கம்.....

தில்லி போல கண்காட்சிகளுக்கென்று தனி இடம் ஒதுக்கி விடலாம் - பிரகதி மைதான்.

ஆனால் இங்கேயும் அந்த இடத்தினை பங்கு போட ஆரம்பித்து விட்டார்கள் - வாகனங்கள் நிறுத்துமிடம் வேண்டுமென!

சீனு said...

யோவ் வீட்டுக்கு பக்கத்துல புக் பேர் வச்சிக்கிட்டு ...கடுபேத்துறார் மை லார்ட்... உங்களுக்கு எல்லாம் சென்னைக்கு மிக அருகில் திண்டிவனம் திரிச்சின்னு வைக்கணும்

Tamilthotil said...

நண்பரே விளையாட்டைப் பற்றிய விழிப்புணர்வை விளையாட்டாய் சொல்லியுள்ளீர்கள். என்ன செய்வது இதை அரசாங்கமும் மக்களும் விளையாட்டாய் எடுத்துக் கொள்வது தான் வருத்தம்.

Related Posts Plugin for WordPress, Blogger...