CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, January 23, 2013

கிரேசி கிஷ்கிந்தா
                                                           க்ரேஸியுடன் ஆரூர் முனா செந்தில்                                             

சென்ற ஞாயிறு மாலை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் கிரேசி கிஷ்கிந்தா நாடகம் பார்க்க ஆரூர் முனாவுடன் கிளம்பினேன். நான்கு மணிக்கு  துவங்கிய ஒய்.ஜி.யின் 'சுதேசி அய்யர்' முடிய நேரமாகும் என்று சொன்னதால் காமராஜர் அரங்கின் இன்னொரு பகுதியில் நடந்த ஷாப்பிங் திருவிழாவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். விசாலமான வெளிப்பரப்பு முழுவதையும் அந்த கண்காட்சிக்கு தாரை வார்த்து இருந்தனர். ராஜஸ்தானி ஊறுகாய்களை மட்டும் கால் கிலோ வாங்கிவிட்டு காத்திருந்தோம். இன்னும் சற்று நேரத்தில் எமக்கான 'கிரேசி' தருணங்கள் காத்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

கிரேசியின் டிராமா டிக்கட் வாங்கிய இடத்திலேயே ஆட்டம் ஆரம்பித்தது. நாடக டிக்கட்டில் சீட் எண் போடாமல் இருந்தபோதே ஏதோ தில்லாலங்கடி வேலை நடந்துள்ளது என்று உணர்ந்தேன். விசாரித்ததில் 'ஒண்ணும் பிரச்னை இல்லை சார். உள்ள ஊழியர் இருப்பாரு. அவர் பாத்துக்குவார்' என்று டிக்கெட் தந்த பெரியவர் கூலாக்கினார். ஏழு மணிவாக்கில் அலையென வாசலில் கூட்டம் திரள ஆரம்பித்தது. 'யாருக்கு எந்த சீட் என்று தெரியாமல் இந்த நெருக்கடியில் எப்படி இடம் பிடிப்பது? இதுபோன்ற நகைச்சுவை நாடகம் என்றால் பெரும்பாலும் சீட் எண் குறிப்பிட்டுதானே டிக்கட் தருவார்கள்?' என்று சிலருடன் சேர்ந்து புலம்பிக்கொண்டு இருந்தோம். அதற்குள் வாயிற்கதவு திறக்கப்பட முட்டி மோதிக்கொண்டு ஓடினர் அனைவரும். ஒருவழியாக தோதான கார்னர் சீட்களை பிடித்தோம் நாங்கள். 

எமக்கு பின் அமர்ந்து இருந்த நண்பர் ஒருவர் 'முதன்முறை நாடகம் பார்க்க வந்தேன். மனைவி கர்ப்பிணியாக இருக்கும் இந்நேரத்தில் இப்படி ஒரு கொடுமையா? இடித்துக்கொண்டு ஓடுகிறார்களே?' என்று பதறினார். சமீபகாலமாக பல நகைச்சுவை நாடகங்களை பார்த்து வந்த எனக்கும் இப்படியொரு அசௌகர்யம் ஏற்பட்டது இதுவே முதன்முறை. பொதுவாக இவ்வளவு பெரிய அரங்குகளில் எஸ்.வி. சேகர் நாடகங்கள் மட்டுமே அவ்வப்போது நிரம்பி வழியும். கிரேசிக்கு சற்று கம்மியாக. இம்முறை கூட்டத்திற்கு காரணம் 'அன்பளிப்பு' டிக்கட்கள் என்று தெரிய வந்தது. அளவுக்கு மீறி டிக்கட் தந்துவிட்டதால் பிளாஸ்டிக் சேர்களில் பலரை அமர வைத்தனர். 7 மணி நாடகம் 7.40 மணிக்கு துவங்கியது. 40 நிமிட தாமதத்தில் நான் பார்த்த முதல் நாடகமிது. 

கதை: வக்கீல் பயிற்சி செய்ய தனது அட்வகேட் அத்திம்பேர் வீட்டிற்கு வருகிறான் மாது. ஒரு கேஸ் கூட இல்லாமல் திண்டாடும் அவரை வால்மீகி ராமாயணம் படிக்க சொல்கிறார் நண்பர் ஒருவர். அதன் மூலம் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பது பெரியோர்களின் நம்பிக்கையாம். அந்த நேரம் பார்த்து வாலி மகன் அங்கதன் மற்றும் வால்மீகி பூலோகம் வந்து அட்வகேட்டை சந்திக்கின்றனர். 'வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது பெருங்குற்றம். அவர் மீது வழக்கு தொடர வேண்டும்' என்கிறான் அங்கதன். 'உனக்குள்ள பிரச்னைகளை தீர்த்து செல்வந்தன் ஆக்குகிறேன்' என்கிறார் வால்மீகி. இதனை முன்னெடுத்து க்ளைமாக்ஸ் வரை செல்ல முயற்சித்து உள்ளனர்.

எஸ்.வி.சேகரின் படைப்பில் நான் பார்த்த வெகு சுமார் நாடகம் 'மகாபாரதத்தில் மங்காத்தா'. அதுபோல கிரேசி மோகன் எடுத்ததில் கொட்டாவி விட வைத்தது இந்த கிரேசி கிஷ்கிந்தா. 'எல்.கே.ஜி. என்றால் லோயர் கிஷ்கிந்தா காண்டம்' போன்ற ஓரிரு வசனங்கள் மட்டும் ஹா ஹா. மாது பாலாஜி சில இடங்களில் பேசுபவை பாகற்காய் சுவை. பேப்பரை வைத்துக்கொண்டு 'ரேகா எனும் பெண் கற்பழிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே கற்பழிக்கப்பட்டது தெரிந்ததே. அவர் பெயர் ரேகாவா, ரேப்பாவா' என்றொரு வசனம். என்னதான் 1981 இல் எழுதப்பட்ட வசனம் என்றாலும் காலம் இருக்கிற இருப்பில் இதெல்லாம் தேவையா??? அதுபோல் 'மங்களம் உண்டாகட்டும்' என ஒரு கேரக்டர் சொல்ல அதற்கு மாதுவின் கேள்வி:  'என்னது மங்களம் மாமி உண்டாகப்போறாளா?' புளித்துப்போன இந்த ஜோக்கை இன்னும் எத்தனை காலத்திற்கு.......

தனது தந்தை ஆராமுதனை 'டமாரம், குருடு, செவிடு' என்று கிண்டல் செய்கிறார் மாது. அங்கக்குறைபாடு உள்ளவர்களை இவர்கள் போன்ற மெத்த படித்தவர்கள் இன்னும் ஏளனம் செய்வது சகிக்கவில்லை. சினிமாவில் ஒற்றை வரி வசனம் பிரச்னைக்கு உரியது என்றால் ஊரே ரவுண்டு கட்டி அடிப்பது போல நாடகங்களுக்கு ஒருவரும் கேள்வி கேட்பது இல்லை போலும்? நாடக சென்சார் என்று ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

பெரிய அளவு நகைச்சுவை இல்லாததால் நேரம் போகப்போக கூட்டம் கலைய துவங்கியது. நாடகம் முடிந்ததும் மாது பாலாஜி, கிரேசி மோகன் இருவரையும் சந்தித்து நானும், ஆரூர் முனாவும் பேசினோம். 'நிறைய பணம் தந்து டிக்கட் எடுத்த பலர் இன்று கூட்ட நெரிசலில் சிக்கி அவஸ்தைப்பட்டனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் பாடு சொல்லி தெரிய வேண்டாம். டிக்கட்டில் சீட் எண் போட்டிருந்தால் இந்த பிரச்னையே இருந்திருக்காது' என்று சொன்னதைக்கேட்டு வருத்தப்பட்டார் மாது. 'ஆர்கனைஸ் செய்தவர்களிடம் இது குறித்து கண்டிப்பாக பேசுகிறேன்' என அவர் சொன்னபிறகு ஒப்பனை அறையில் கிரேசி மோகனை சந்தித்தோம்.

 '4 மணிக்கு ஒரு நாடகம் முடித்துவிட்டு இந்த நாடகத்திற்கு வந்து சேர்ந்தோம். பொதுவாக சபாக்களின்  பின்புறம் இருக்கும் ஒப்பனை அறைக்கு நாங்கள் நேரடியாக வந்துவிடுவதால் முன்பக்கம் நடக்கும் இது போன்ற விஷயங்கள் எங்களுக்கு தெரிவதில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இது குறித்து பேசிப்பாருங்கள்'  என்றார். 'ஆமாம்' போட்டார் உடனிருந்த மூத்த நடிகர் ரமேஷ். இது போன்று இன்னும் ஒரு சில சம்பவங்கள் நடந்தால் நாடகம் பார்க்க வரும் மிச்ச சொச்ச மக்களும் முகம் சுளித்து வராமல் போக வாய்ப்புகள் அதிகம். எனவே கிரேசி போன்றவர்கள் வேறுபக்கம் கைகாட்டாமல் தம்மாலான முயற்சிகளை செய்து இதுபோன்ற தர்மசங்கடங்களை தவிர்க்க முயற்சிக்கலாம். 

நாடகத்தின் இடையே 'அப்பாஸ் கல்சுரல்' எனும் ஏற்பாட்டாளர்களுக்கு போன் போட்டபோது 'மயிலை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள்' என பதில் வந்தது. 'ஏன் உங்கள் பிரதிநிதி ஒருவர் கூட காமராஜர் அரங்கில் இல்லையா? எனக்கேட்டால் 'இல்லை' என்றனர். 200, 350, 500, 1000 என்று கொள்ளை விலைக்கு டிக்கட் விற்பதோடு தமது கடமை முடிந்தது என்று முடிவு செய்துவிட்டனர் போல. பிறகு ஏன் நமது மக்கள் நாடக ங்களை ஒதுக்கு சினிமா தியேட்டர்கள் நோக்கி ஆண்டாண்டு காலமாக படையெடுக்காமல் இருப்பபார்கள்???
....................................................................
         

5 comments:

தமிழ்மகன் said...

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

அஞ்சா சிங்கம் said...

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

சீனு said...

எனது நண்பனும் இதே நாடகத்திற்கு வந்திருந்ததாக கூறினான்... பலரும் பாதியிலேயே போயிட்டாங்கன்னு தான் சொன்னான்....

rajamelaiyur said...

நகைசுவை நாடகம் பார்க்க போய் இவ்வளவு கஷ்டமா ??? அது கிரேசி கிஷ்கிந்தாவா அல்லது கிரஷ் கிஷ்கிந்தாவா ?

முத்தரசு said...

நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...