CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, January 15, 2013

கண்டேன் கே.பாலச்சந்தரை !!                                                                         பார்த்தாலே பரவசம்!!

'ஜனவரி ஆறாம் தேதி ஞாயிறு மதியம் கே.பி. இயக்கும் 'அமுதா ஒரு ஆச்சர்யக்குறி' சீரியல் ஷூட்டிங் உள்ளது. இணைய நண்பர்கள் சந்திப்பு இருப்பது போல ஒரு எபிசோட். அதில் பங்கேற்க வரமுடியுமா?' என்று உண்மைத்தமிழன் அண்ணாச்சி போன் செய்தார். 'தமிழ்த்திரையுலகில் எனது பெரு மதிப்பிற்கு உரிய இயக்குனரை பார்த்தால் போதாதா? கரும்பு தின்ன கூலியா? வருகிறேன்' என்று துள்ளலுடன் பதில் தந்தேன். அஞ்சாசிங்கம், பிலாசபி, சீனு, அரசன்,  பபாஷா, காவேரி கணேஷ், பபாஷா, பட்டர்ப்ளை சூர்யா, பட்டிக்காட்டான் ஜெய் என பதிவர்கள் படை எடுத்தனர் மைலாப்பூர் கோகுலம் ஹவுஸ் எனும் பிரம்மாண்ட வீட்டை நோக்கி.

வாசலில் என்னை வரவேற்றார் உண்மைத்தமிழன். அப்போது ஷூட்டிங்கிற்கு வந்த கதை நாயகனை ('எங்கே பிராமணன்' சீரியலில் சிறப்பாக நடித்த நாயகன் அப்ஸர்) அறிமுகம் செய்து வைத்தார். நான் பார்த்த ஒரே மெகா சீரியல் அது மட்டுமே.  'இஸ்லாமியர் ஒருவர் பிராமணராக நடித்து இந்த அளவிற்கு பெயர் பெற்றது சிறப்பு. பெரிய திரையில் பம்பாய் படத்தில் நாசருக்கு பின்பு நீங்கள் அப்படி ஒரு கேரக்டரில் நடித்துள்ளீர்கள்' என்று கூறினேன். 'அதற்காக பெரிதாக முன்முயற்சி எடுக்கவில்லை. சொன்னதை கேட்டு நடித்தேன்' என்றார்   அப்ஸர். சில நிமிடங்களில் அவர் சென்ற பின்பு இயக்குனர் சிகரம் எப்போது வருவார் என்று வாசலை நோக்கியே கண்கள் மையம் கொண்டு இருந்தன. வீட்டுக்கு வீடு லூட்டி சீரியல் முழுக்க இந்த வீட்டில்தான் ஷூட் செய்யப்பட்டது என்றும், நகரின் மையப்பகுதியில் இருப்பதால் இந்த விசாலமான இடத்திற்கு ஏக கிராக்கி என்றும் தகவல்களை கூறினார் உ.த. 

                                                டயலாக் டெலிவரி: பபாஷா, நான் மற்றும் பட்டர்ப்ளை சூர்யா         

ஒரு சில பதிவர்களை வசனம் பேச வருமாறு சீரியல் டீம் அழைத்தது. மேலுள்ள படத்தில் இருந்த நாங்கள் மூவரும் செலக்ட் செய்யப்பட்டோம். கண்டிப்பாக ஒரு வரி டயலாக்தான் என்று திண்ணமாக தெரிந்தது எனக்கு. தலைவரை பார்க்கப்போகிற சந்தோஷமே மனதை நிறைத்து இருந்ததால் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சமாகவே பட்டதெனக்கு. கதைப்படி பதிவர் மீட்டிங் ஒன்றில் நாயகன் சிறப்பு விருந்தினராக வருகிறார். எழுத்தாளரான அவர் பேச துவங்கிய பின்பு கூட்டத்தில் இருந்து நாயகி எழுந்து அவரை பதற வைக்கும் வண்ணம் பொடி வைத்து வசனம் பேச வேண்டும். அப்போது பெர்சனல் விஷயம் பேச இது இடமல்ல என்று நாங்கள் எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார் அசிஸ்டன்ட் ஒருவர். பலமாக தலையாட்டினோம். 'கொஞ்சம் சும்மா இருங்க. அவங்க பேசணும்னு சொல்றாங்க. பேசட்டும்' இதுதான் எனக்கு கிடைத்த டயலாக்(இறுதியில் அவ்வசனம் வேறொரு பெண்மணிக்கு தானம் செய்யப்பட்டது என்பது இன்னொரு செய்தி).

அனைவரும் தயாராகி கொண்டிருந்த நேரம் கே.பி.யின் வெள்ளை நிற அம்பாஸிடர் புதுப்பொலிவுடன் உள்ளே நுழைந்தது. 'ஜென்டில்மேன்' லுக்கில் எம்மை நோக்கி வந்தார் கே.பி. ஷூட்டிங் துவங்கியது. சிறு அறை என்பதால் லைட் வெளிச்சம் சூட்டை அதிகரித்தது. ஒரே வசனத்தை ஏகப்பட்ட முறை ரீடேக் வாங்கினார் ஒருவர். 10 நிமிட காட்சியை எடுக்க 3 மணிநேரம் ஆனது. 'நான் கொஞ்சம் பேசணும்' என்று பின்வரிசையில் இருந்த நாயகி சொல்ல 'முன்ன போயி மைக்ல பேசுங்கம்மா' என்று அனைவரும் கோரஸாக சொல்ல வேண்டும் என்றார் வசனகர்த்தா. வெற்றி. வெற்றி. மாபெரும் வெற்றி. கே.பி. இயக்கத்தில் நான் பேசிய வசனம்:

''முன்ன போயி மைக்ல பேசுங்கம்மா''

இந்த கலவரத்திலும் அருகில் இருந்த செக்க செவேல் ஜூனியர் ஆர்டிஸ்ட்  யூத் பெண்ணிடம் கடலை வறுத்துக்கொண்டு இருந்தார் அஞ்சாசிங்கம். இன்னொரு பக்கம் கடைசி வரிசையில் அட்மாஸ்பியருக்கு அமர்ந்து இருந்து பட்டிக்காட்டான் ஜெய் அவர்கள் சீனு தம்பியிடம் இருந்து கூலிங் கிளாசை பிடுங்கி போட்டோ எடுக்க சொல்லி டார்ச்சர் தந்துகொண்டு இருந்தார்.          
         
                                                சிகரமும், குன்றுகளும்: சீனு, அரசன், செல்வின், நான்.               

ஒருவழியாக ஷூட் முடிந்து வெளியே வந்தோம். பாலச்சந்தர் அவர்களை சந்தித்து ''தங்களின் அவள் ஒரு தொடர்கதை, தில்லுமுல்லு போன்ற படங்களை கணக்கில் அடங்காத அளவிற்கு பலமுறை பார்த்து உள்ளேன். இன்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி'' என்றதற்கு கையைப்பிடித்து கனிவுடன் பேசி மகிழ்ந்தார் சிகரம். முதுமை அவரை அதிகம் அசைத்து பார்க்க ஆரம்பித்து இருப்பது வருத்தம்தான். இருந்தும் மனம் இன்னும் இளமையாகவே. கமல், ரஜினி, நாகேஷ் போன்ற பெரும் நாயகர்களையும், சரிதா, சுஜாதா போன்ற பல பொக்கிஷங்களையும் திரையில் செதுக்கிய சிற்பியின் கரங்களை பற்றிய அந்த இனிய தருணம் என்றென்றும் மனதில் நிற்கும். 

     
இப்படி ஒரு ஆச்சர்யம் மற்றும் அன்பான சந்திப்பு ஏற்பட ஏற்பாடு செய்த உண்மைத்தமிழன் அவர்களுக்கு நன்றிகள் பல. சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற சூப்பர் ஹீரோக்கள் திரையை ஆக்ரமித்து இருந்த காலகட்டத்தில் ரசிகர்களை தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்த கே.பி.யுடன் லொக்கேசனில் இருந்த அந்த சில மணி நேரங்கள்....

நினைத்தாலே இனிக்கும்!!
.............................................................                                                                          
                                                  

10 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

சென்னை பித்தன் said...

அடுத்த கமல்/ரஜினி தயார்! வாழ்த்துகள்!
கொஞ்சம் நினைவு வைத்துக் கொள்ளுங்கள் !

சீனு said...

கொண்டாடித் தீர்த்த தருணங்கள் .. வாய்ப்பை வழங்கிய மெட்ராசுக்கு ஸ்பெஷல் மீல்ஸ் பார்சல்

T.N.MURALIDHARAN said...

இயக்குநகர் சிகரம் பாலச்சந்தரை சந்தித்ததற்கு வாழ்த்துக்கள்.

சக்கர கட்டி said...

பிரபல பதிவரான நீங்கள் அடுத்து எங்கள் பவர் ஸ்டாரை சந்தித்து பேட்டி எடுக்க வேண்டும்

செங்கோவி said...

சூப்பர் ஸ்டாரும் இப்படி சும்மா ஒரு சீன் வந்தவர் தான்..வருங்கால சூப்பர் ஸ்டார் சிவாவுக்கு வாழ்த்துகள்!

ரியாஸ் அஹமது said...

அட தை உங்களுக்கு தான் ரொம்ப சிறப்பா வழி காட்டி இருக்கு சிகரம் நோக்கி ..வாழ்த்துக்கள் சகோ

மோகன் குமார் said...

Feeling bad, as I missed a great opportunity :(

வெங்கட் நாகராஜ் said...

நிச்சயம் நினைவில் வைத்திருக்க வேண்டிய சந்திப்பு தான்....

பாராட்டுகள் நண்பரே.

சமீரா said...

வாவ்!! எப்படிபட்ட ஒரு சந்தர்ப்பம்... எனக்கு இப்போ பொறாமையா இருக்கு உங்களையெல்லாம் பார்த்தா!!

இந்த சீரியல் சில நேரங்கள்ல நான் பார்பேன். இந்த எபிசொட் எப்போ வரும் தெரியுமா??

Related Posts Plugin for WordPress, Blogger...