CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, January 25, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (25/01/13)மகராசன்: 


சில நாட்களுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம். நரிக்குறவ பெண்ணொருவர் பிரசவ வழியால் ரயில் நிலைய நடைபாதையில் துடித்துக்கொண்டு இருக்க அவரது கணவர் செய்வதறியாது அச்சத்தில் கூப்பாடு போடுகிறார். 'அந்த கட்சி வரணும்', 'ரேப் பண்ணவனை தூக்குல போடணும்யா' என்று உலகின் அனைத்து பிரச்னைகளுக்கும் நித்தம் நூறு தீர்வு சொல்லும் மேதாவிகள்  அனைவரும் வழக்கம்போல கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு கடந்து செல்ல ஒரு இதயம் மட்டும் இக்கொடுமை கண்டு துடிக்கிறது. அலைபேசி மூலம் ரயில்வே போலீசை அழைக்கிறான். பயன் இல்லை. உடனே ஆம்புலன்ஸை வரவழைக்கிறான். பாதி குழந்தை அப்பெண்மணி வயிற்றில் இருந்து எட்டிப்பார்க்க பதற்றம் கூடுகிறது. மருத்துவமனை ஊழியர்களுக்கு உதவியாக கரம் நீட்டி அந்த கர்ப்பிணியை வாகனத்தில் ஏற்றுகிறான். கைகள் மற்றும் மேலாடையில் குருதி சொட்ட அவனும் வாகனத்தில் அமர்கிறான். 

மருத்துவமனை அடைந்த சில மணிநேரங்கள் கழித்து சிகிச்சை செய்த டாக்டர் சொன்ன செய்தி: "தக்க நேரத்தில் நீங்கள் உதவி செய்ததால் தாய், சேய் இருவரும் நலம்". கணவனின் முகத்தில் நன்றி கலந்த மகிழ்ச்சி. அலுவலகத்திற்கு நேரமானதால் அங்கிருந்து அவசரமாக விடைபெறுகிறான் அந்த பரோபகாரி. பெயர் விமல். வயது 23. அலுவலக நண்பன். 

தோழனை கைகுலுக்கி பாராட்டினேன். நண்பேன்டா!!
.......................................................... 

விஸ்வரூபம்:
இப்படத்தின் எடிட்டர் மகேஷ் நாராயணன் என்றுதான் இதுவரை நினைத்து இருந்தேன். ஆனால் அவரைத்தாண்டி ஏகப்பட்ட எடிட்டர்கள் சம்பளம் இன்றி பணியாற்றிக்கொண்டு இருப்பது பாராட்டி, சீராட்டத்தக்கது. எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் சக 'மாஸ்' ஹீரோக்களை நினைத்தால் புல் அரிக்கிறது. வருங்கலத்தில் கமல் தனது படங்களை  DTH இல் வெளியிட்டே ஆக வேண்டிய கட்டாயம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. ஆரோ ஒலி அமைப்பு தங்கள் ஊரில் இல்லை என்று சென்னைக்கு வந்த நண்பர்கள், இங்கு சிலர் 'படம்' காட்டியதால் ஆந்திரா, பெங்களூருக்கு சென்றாவது படம் பார்த்தே தீருவோம் என கிளம்பிவிட்ட பதிவர்கள் என நொடிக்கொரு ட்விஸ்ட் அரங்கேறுகிறது. பேசாமல் டைட்டிலை ட்ரெயிலரில் கமல் சொல்வது போல 'ஐ ஆம் தி ஹீரோ, ஐ ஆம் தி வில்லன்' என மாற்றினால் என்ன? 
............................................................

The Impossible:
தாய்லாந்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட ஸ்பெயின் குடும்பம் ஒன்று சுனாமியில் சிக்கித்தவிக்கும் கதை. மொத்த படமும் அவர்கள் சந்தித்த பிரச்னையை மட்டுமே மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 'சுனாமியால் ஏகப்பட்ட ஆசிய மக்கள் பாதிக்கப்பட்டது குறித்த காட்சிகள் இல்லை' என்று சில விமர்சகர்கள் புலம்பினர். ஆனால் ஒட்டுமொத்த சுனாமி பாதிப்புகளை தொட்டு ஆவணப்படம் எடுக்காமல், ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளுக்கு நேர்ந்த வழியை மட்டுமே திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். லூகாஸ் எனும் கேரக்டரில் வரும் சிறுவன் டாம் ஹாலன்டின் நடிப்பு ஆஹா. பெரிய அளவில் கிராபிக்ஸ் ஜித்துக்கள் எதுவும் இல்லை. உணர்வுகளின் விளையாட்டு மட்டுமே. சுனாமி வரும் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன. சந்தர்ப்பம் வாய்த்தால் பார்க்க தவற  வேண்டாம்.
................................................................  

கலைஞன்: 

                                                                            Image: madrasbhavan.com

புத்தக கண்காட்சி நடைபெற்ற ஒய்.எம்.சி.ஏ. பள்ளியின் சுவற்றில் இருந்த ஓவியத்தை எனது அலைபேசியால் க்ளிக் அடித்தேன். இதுபோல பல்வேறு தமிழர் வழக்கங்கள் மற்றும் விளையாட்டுகளை பள்ளியின் நீண்ட நெடுஞ்சுவர் முழுக்க ஓவியங்களாக தீட்டி இருந்தனர். ஆனால் போஸ்டர் கலாச்சாரம் இவற்றின் அழகை  சிதைத்தொழித்து விட்டிருந்தன. தற்போது போஸ்டர்களை  நீக்கிவிட்டு வெள்ளை பெயின்ட் அடித்து விட்டனர். ஒவ்வொரு ஓவியத்திற்கும் தனது உழைப்பை சிந்திய கலைஞன் அண்ணா சாலை பக்கம் வராமல் இருக்க அருள்புரிவாய் ஆண்டவா.
......................................................................

பொல்லாதவன்: 
இந்திய ராணுவ வீரர்களை கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கி தலைகளை கொய்து தாண்டவம் ஆடும் அளவிற்கு கோரமுகம் காட்டிக்கொண்டு இருக்கிறது பாகிஸ்தான். அதே நேரத்தில் போரின்போதும், தீவிரவாத சண்டைகளின்போது இறக்கும் பாகிஸ்தானியர்களின் பிணங்களை உரிய கவுரவத்துடன் அடக்கம் செய்கிறார்கள் நமது வீரர்கள். பாகிஸ்தான் மக்களின் இதய அறுவை சிகிச்சைக்கு சென்னையில்தான் பெரும்பாலும் சிகிச்சை தரப்படுகிறது. அதே இதயத்தைதான் அங்கிருக்கும் அதிகார வர்க்கமும் கொண்டிருக்கும் என்பதை நம்புவோமாக.
....................................................................... 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்:    

  
ராபர்ட் வதேரா, கட்கரி தில்லுமுல்லுகள், டெல்லி கற்பழிப்பு, சூர்ய வம்ச சகோதர சண்டை அனைத்தையும் பரணில் போட்டுவிட்டு பவர் ஸ்டார், விஸ்வரூபம் பரபரப்பில் தீயாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் இதே சம/செம  காலத்தில்தான் ஆட்டோ ஓட்டும் தமிழனின் மகளொருவர் சி.ஏ. தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்துள்ளார். கூட தேர்வு எழுதிய தம்பியும் பாஸ். வெற்றி வாகை சூடிய தமிழச்சி ப்ரேமா பேட்டியில் சொன்னது:  'நான் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும் முதல் நாளில் எனது தந்தை ஒய்வு எடுக்க வேண்டும் என எண்ணியே படிக்க ஆரம்பித்தேன்'. நினைத்ததை முடித்தவள்.
...................................................................

தகப்பன்சாமி:
டெல்லி பாலியல் வன்முறைய விட கொடூரமான கற்பழிப்பு சம்பவங்கள் தேசத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் நடந்தேறியே வருகின்றன. தூக்கு தண்டனைக்கு எல்லாம் காமவெறியர்கள் அஞ்சுவதாக தெரியவில்லை. குஜராத்தில் தான் பெற்ற இரு பெண்களை பல ஆண்டுகள் கற்பழித்து வந்துள்ளான் ஒரு பன்னாடை. 'வெளியே சொன்னால் அவ்வளவுதான்' என்று அவன் மிரட்டியதால் மௌனமாகவே இருந்து வந்துள்ளனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு பொறுமை இழந்த 14 வயது மகளொருத்தி பள்ளி முதல்வரிடம் புகார் செய்து விட்டாள். 'பெண்கள் தமக்கு இழைக்கப்படும் கொடுமை கண்டு பயப்பட வேண்டாம். தைரியமாக போராடுங்கள். இது போன்ற அயோக்கியர்களை தூக்கில் போடும் வரை ஓயாதீர்' எனவும் குரல் தந்துள்ளாள்.
.....................................................................   

ஹே ராம்(கோபால் வர்மா):
'துப்பாக்கிக்கே இந்த சவுண்டா? அடுத்த விஸ்வரூபம் வந்தா சுத்தம்' என்று ட்ரெயிலர் ஓட்டிய மாமக்களே. இது என்ன பொம்மை விளையாட்டு. வர்றார் பாருங்க ராம் கோபால் வர்மா எல்லாத்தையும் விட பெருசா. 'தி அட்டாக்ஸ் ஆப் 26/11'.  மார்ச் 1 ஆம் தேதி ரிலீஸ். தேசிய பொங்கலுக்கு பொங்க தயாராகவும்.                                                  ..........................................................................
  
முந்தைய பதிவு: 

..................................7 comments:

CS. Mohan Kumar said...

தங்கள் நண்பர் விமலுக்கு வணக்கம் + வாழ்த்துகள்

சீ. ஏ முதல் மார்க் பெண் பற்றிய தகவல் ஏற்கனவே எனது கம்பனி செகரட்டரி வட்டத்தில் மட்டும் சர்குலேட் செய்திருந்தேன். ப்ளாகில் ஏன் போட தோணாமல் போனது என இப்போது யோசிக்கிறேன்

மும்பையில் இருக்கும் தமிழ் குடும்பம் என்பதையும் நீங்கள் சொல்லியிருக்கலாம்

சேலம் தேவா said...

உங்கள் நண்பர்கள் யாரென்று சொல்லுங்கள்.உங்களைப்பற்றி சொல்லுகிறோம் என்று சொல்லுவார்கள்.அதற்கு தகுந்தாற்போல் உங்கள் நட்பு அமைந்திருக்கிறது.

சீனு said...

உங்கள் நண்பன் விமல் முன்பு தலை வணங்குகிறேன். இரண்டு உயிரைக் காப்பாற்றிய மனிதன் அவர். அவசர உலகில் எத்தனை பேருக்கு போன்ற மனிதநேயம் வரும். ரத்தம் பிரசவ வலி என்பதை எல்லாம் விட உதவி தேவைப்படும் நபரின் சமுக அந்தஸ்தை ஆராய்ச்சி செய்யும் அவல சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அதில் இருந்து சற்று வேறுபட்ட விமல் நீர் வாழ்க உம் குலம் வாழ்க

பால் கோபால் வர்மா படத்திற்காக காத்திருக்கிறேன்

Yoga.S. said...

வணக்கம்,சிவா!அருமையான ஸ்பெஷல் மீல்ஸ்.பகிர்வுக்கு நன்றி!வாழ்த்துக்கள் அந்த ஆட்டோ டிரைவர் பொண்ணுக்கு!!!

இரமேஷ் இராமலிங்கம் said...

Well done Vimal! It's really great!!!

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் நண்பர் விமல் - நிச்சயம் பாராட்டுக்குரியவர் - அவருக்கு என் சார்பாய் ஒரு பூங்கொத்து!

”தளிர் சுரேஷ்” said...

விமலுக்கு ஒரு சல்யூட்! இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உதாரண புருஷர்! சுவையான பகிர்வு! நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...