CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, January 1, 2013

திரைவிரு(ந்)து - 2012 ஹிந்தி சினிமா                                               
சென்ற ஆண்டு வெளியான ஒட்டுமொத்த ஹிந்தி திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவை என்று நான்கை(ஐந்தை) சொல்லலாம்: ஷாங்காய், விக்கி டோனர், பான் சிங் தோமர் மற்றும் கேங்ஸ் ஆப் வாஸேபூர் 1 & 2. வித்யாபாலன் நடிப்பில் வந்த கஹானி மற்றும் ஸ்ரீதேவியின் அசத்தல் கம்பேக் படமான இங்லீஷ் விங்லீஷ் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.  மூன்று மெகா கான்களின் ஜப் தக் ஹை ஜான், தலாஷ், தபங் - 2 ஆகியவை சுத்தம். தலாஷ் க்ளைமாக்ஸ் அமீர்கான் படத்தில் எதிர்பாராத சொதப்பல். ரன்பீரின் பர்பி ஒரு இனிமையான அனுபவம். தமிழில் பார்த்த சூர ரம்பம் தாண்டவம் என்றால் ஹிந்தியில் சுனில் ஷெட்டி நடித்த 'மேரே தோஸ்த் பிக்சர் அபி பாக்கி ஹை'. ஆளு நடிப்பு எத்தனை கிலோ என்று கேட்பார் போல.

பிடித்த நடிகர்: 
மனோஜ் பாஜ்பாய் 
கேங்ஸ் ஆப் வாஸேபூர் - 1

                                                           
பாலிவுட்டில் எனது அபிமான நடிகர்கள் என்றால் நஸ்ருதீன் ஷா, நானா படேகர், இர்பான் கான் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோரை சொல்லலாம். முன்னவர் இருவரும் 2012 இல் கண்ணில் படாமல் இருக்க, அடுத்த இருவரும் வழக்கம்போல் வெளுத்து வாங்கினர். பிடித்த நடிகர் ரேஸில் இர்பானை மனோஜ் சில அடிகள் முந்திவிட்டார். கேங்ஸ் ஆப் வாஸேபூர் தலைவரின் திறமைக்கு சரியான தீனி. ரவுடியாக துவங்கி கேங் லீடராக உயர்ந்து அசால்ட் செய்வதாகட்டும் மறுபக்கம் மனைவிகளிடம் காட்டும் கோபம், கெஞ்சலாகட்டும்.. வாஜி வா!!

பிடித்த நடிகை என்று சொல்லுமளவிற்கு எவரும் மனதை தொடவில்லை. வித்யாபாலன், ஸ்ரீதேவி நிறைவான நடிப்பை தந்திருப்பினும் நெடுநாட்கள் நெஞ்சில் நிற்கும் பெர்பாமன்ஸ் இல்லை என்பது எனது கருத்து.

பிடித்த திரைப்படம்: 
விக்கி டோனர் 

இந்திய சினிமாவில் வெளிவந்த வித்யாசமான படைப்புகளில் ஒன்று. விந்தணு தானத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டிருக்கும் கதை. பிரச்சார நெடி பெரிதாக இன்றி நகைச்சுவை பொங்க இயக்கி இருக்கிறார் சூஜித். விக்கியாக வரும் ஹீரோ ஆயுஷ்மான்(முதல் படமிது) மற்றும் டாக்டராக நடித்த அனுபவம் வாய்ந்த நடிகர் அன்னு கபூரின் நடிப்பு பிரமாதம். 

பிடித்த இயக்குனர்:    
அனுராக் காஷ்யப் 
கேங்ஸ் ஆப் வாஸேபூர் 1 & 2

இரண்டு பாகங்களாக வெளிவந்த கேங்ஸ் ஆப் வாஸேபூர் படங்களின் இயக்குனர். நம்மூர் சசிகுமார், அமீர் மற்றும் பாலா ஆகியோரின் தீவிர ரசிகர். சுப்ரமணிபுரத்தின் upgraded version என்று கூட இவ்விரு படங்களை சொல்லலாம். வாஸேபூர் மற்றும் தன்பத் ஆகிய ஊர்களில் பல்லாண்டுகளாக பதான், முஸ்லிம் மற்றும் குரேசி சமூகத்தை சேர்ந்த குழுக்களிடையே நடக்கும் பழிவாங்கல்களை அங்குலம் அங்குலமாக அலசி திரையில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் அனுராக். குறிப்பாக முதல் பாகத்தில் கதை சொல்லும் விதத்தில் தெரிவது இவருடைய கடும் உழைப்பு. இன்சப்சனுக்கு பிறகு ஆவலுடன் எந்த ஒரு சினிமாவையும் திரும்ப திரும்ப பார்த்ததில்லை. விதிவிலக்கு கேங்ஸ் ஆப் வாஸேபூர். க்யா பிக்சர் பாய். நான்கு முறை பார்த்தாகிவிட்டது. மீண்டும் பலமுறை பார்க்கப்போவதில் யாதொரு ஐயமுமில்லை. அபாரமான மேக்கிங். அனுராக் ராக்கிங்!!

பிடித்த இசையமைப்பாளர்(கள்):
ஸ்னேஹா கன்வால்கர் & பியுஷ் மிஸ்ரா 
கேங்ஸ் ஆப் வாஸேபூர் 1

முழுக்க முழுக்க அரசியல், துப்பாக்கி மற்றும் ரத்தம் சார்ந்த களத்தை தேர்ந்தெடுத்த இயக்குனர் அனுராக் இரண்டு பாகத்திலும் சேர்த்து மொத்தம் 27 பாடல்களை வைத்ததை ரசனை கலந்த தில் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக முதல் பாகத்தில் வரும் 14 பாடல்களும் அசத்தல். கதையின் போக்கிற்கு இடையூறு இன்றி உறுதுணையாக அமையும் வண்ணம் பாடல் காட்சிகளை இடம்பெறச்செய்தது அருமை. பெண் இசையமைப்பாளர் ஸ்னேஹா மற்றும் பியுஷ் இருவருக்கும் தங்கத்தால் ஆன ம்யூசிக்கல் சேரை வெகுமானமாக அளித்தாலும் பத்தாது. பின்னணி இசையமைத்த தம்பி ஜி.வி.பிரகாஷுக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட்.

பிடித்த பாடலாசிரியர்:
திபாகர் பேனர்ஜி - 'பாரத் மாதா கி'
ஷாங்காய்  

படத்தின் இயக்குனரே எழுதிய பாடல். திரைக்கு வரும் முன்பு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதன் பின் 'நாட்டு நடப்பைத்தானே எழுதி இருக்கிறார். தடையில்லை' என்று நீதிமன்ற ஆதரவுடன் வெளியாகி பட்டையை கிளப்பிய ஹிட். டெங்கு, மலேரியா நோய்களுடன் ரவுடிகள், அரசியல்வாதிகளாலும் சேர்த்து பீடிக்கப்பட்டிருக்கும் தேசத்தின் நிலையை பட்டவர்த்தனமாக போட்டுடைத்த துள்ளல் கீதம். ஏகப்பட்ட முறை கேட்கவைத்த பாடல் வரிகள். திபாகருக்கு வைக்க வேண்டும் ஒரு பேனர் ஜீ!! ஷாங்காய்:
இதுவரை நான் பார்த்த சிறந்த பொலிடிக்கல் த்ரில்லர் என்று ஷாங்காய் படத்தை சொல்லலாம். பாரத் நகர் எனும் பகுதியில் வாழும் குடிசைவாழ் மக்களை துரத்திவிட்டு பிசினெஸ் பார்க் கட்ட விளைகிறது அதிகார வர்க்கம். அதை தட்டிக்கேட்கும் பேராசியர் கொல்லப்படுகிறார். கொலைக்கான காரணத்தை விசாரிக்க வரும் அரசு அதிகாரி(அப்பே தியோல்) சந்திக்கும் பிரச்னைகளை யதார்த்தமாக  சொல்கிறது இந்த சினிமா. காதல், சண்டைக்காட்சிகள், ஹீரோயிசம் போன்ற மசாலாக்கலவைகள் எதுவுமின்றி  விசாரணையை மட்டுமே முன்னிறுத்தி இயக்கப்பட்டிருக்கிறது இந்த ஷாங்காய்.     

பான் சிங் தோமர்: 
1950 மற்றும் 60 களில் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சேம்பியன் ஆக இருந்த பான் சிங் எப்படி சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன் ஆனார் எனும் உண்மைக்கதையை திரைக்கு கொண்டுவந்துள்ளனர். மகா நடிகன் இர்பான் கானின் மற்றுமொரு மைல்கல் பெர்பாமன்சில் வந்திருக்கும் படைப்பு. சிறந்த சினிமாக்களை தேடிப்பிடித்து பார்க்கும் ரசிகர்களுக்கு என்னுடைய பரிந்துரையாக இப்படத்தை கூறுவதில் பெருமை அடைகிறேன்.

2013 இல் இதே போன்ற இன்னொரு முக்கியமான சினிமா வெளிவர உள்ளது. இந்தியாவின் முன்னணி ஓட்டப்பந்தய வீரராக அந்தக்காலத்தில் ஒளிர்ந்த மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்று படமான 'பாக் மில்கா பாக்'. மில்காவாக நடிக்க இருப்பவர் இயக்குனர்-நடிகர் பரான் அக்தர். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
...........................................................


முந்தைய பதிவு:
திரை விரு(ந்)து - 2012 மலையாள சினிமா 

..................................................
2 comments:

கேரளாக்காரன் said...

My favorite actor this year is

Nawazuddin siddiqui for kahaani and GOV :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சலோ சலோ...

Related Posts Plugin for WordPress, Blogger...