CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, January 29, 2013

கோவை நேரம் 03-02-2013நண்பர்களுக்கு வணக்கம்,

கோவையின் முன்னணி பதிவர்கள் மூவர் எழுதிய புத்தக வெளியீடு மற்றும் கோவை வலைப்பதிவர் சங்க துவக்க விழா வரும் ஞாயிறு மாலை கோவையில் சிறப்பாக நடக்க உள்ளது. கொங்கு பதிவர்களை வாழ்த்துவோம்.

                                     


புத்தக விவரங்கள்:

கோவை நேரம் - ஜீவானந்தம் 

மௌனத்தின் இரைச்சல் - மு.சரளா 

சின்ன சின்ன சிதறல்கள் - அகிலா

                                                             
.............................................................
                            

Friday, January 25, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (25/01/13)மகராசன்: 


சில நாட்களுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம். நரிக்குறவ பெண்ணொருவர் பிரசவ வழியால் ரயில் நிலைய நடைபாதையில் துடித்துக்கொண்டு இருக்க அவரது கணவர் செய்வதறியாது அச்சத்தில் கூப்பாடு போடுகிறார். 'அந்த கட்சி வரணும்', 'ரேப் பண்ணவனை தூக்குல போடணும்யா' என்று உலகின் அனைத்து பிரச்னைகளுக்கும் நித்தம் நூறு தீர்வு சொல்லும் மேதாவிகள்  அனைவரும் வழக்கம்போல கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு கடந்து செல்ல ஒரு இதயம் மட்டும் இக்கொடுமை கண்டு துடிக்கிறது. அலைபேசி மூலம் ரயில்வே போலீசை அழைக்கிறான். பயன் இல்லை. உடனே ஆம்புலன்ஸை வரவழைக்கிறான். பாதி குழந்தை அப்பெண்மணி வயிற்றில் இருந்து எட்டிப்பார்க்க பதற்றம் கூடுகிறது. மருத்துவமனை ஊழியர்களுக்கு உதவியாக கரம் நீட்டி அந்த கர்ப்பிணியை வாகனத்தில் ஏற்றுகிறான். கைகள் மற்றும் மேலாடையில் குருதி சொட்ட அவனும் வாகனத்தில் அமர்கிறான். 

மருத்துவமனை அடைந்த சில மணிநேரங்கள் கழித்து சிகிச்சை செய்த டாக்டர் சொன்ன செய்தி: "தக்க நேரத்தில் நீங்கள் உதவி செய்ததால் தாய், சேய் இருவரும் நலம்". கணவனின் முகத்தில் நன்றி கலந்த மகிழ்ச்சி. அலுவலகத்திற்கு நேரமானதால் அங்கிருந்து அவசரமாக விடைபெறுகிறான் அந்த பரோபகாரி. பெயர் விமல். வயது 23. அலுவலக நண்பன். 

தோழனை கைகுலுக்கி பாராட்டினேன். நண்பேன்டா!!
.......................................................... 

விஸ்வரூபம்:
இப்படத்தின் எடிட்டர் மகேஷ் நாராயணன் என்றுதான் இதுவரை நினைத்து இருந்தேன். ஆனால் அவரைத்தாண்டி ஏகப்பட்ட எடிட்டர்கள் சம்பளம் இன்றி பணியாற்றிக்கொண்டு இருப்பது பாராட்டி, சீராட்டத்தக்கது. எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் சக 'மாஸ்' ஹீரோக்களை நினைத்தால் புல் அரிக்கிறது. வருங்கலத்தில் கமல் தனது படங்களை  DTH இல் வெளியிட்டே ஆக வேண்டிய கட்டாயம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. ஆரோ ஒலி அமைப்பு தங்கள் ஊரில் இல்லை என்று சென்னைக்கு வந்த நண்பர்கள், இங்கு சிலர் 'படம்' காட்டியதால் ஆந்திரா, பெங்களூருக்கு சென்றாவது படம் பார்த்தே தீருவோம் என கிளம்பிவிட்ட பதிவர்கள் என நொடிக்கொரு ட்விஸ்ட் அரங்கேறுகிறது. பேசாமல் டைட்டிலை ட்ரெயிலரில் கமல் சொல்வது போல 'ஐ ஆம் தி ஹீரோ, ஐ ஆம் தி வில்லன்' என மாற்றினால் என்ன? 
............................................................

The Impossible:
தாய்லாந்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட ஸ்பெயின் குடும்பம் ஒன்று சுனாமியில் சிக்கித்தவிக்கும் கதை. மொத்த படமும் அவர்கள் சந்தித்த பிரச்னையை மட்டுமே மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 'சுனாமியால் ஏகப்பட்ட ஆசிய மக்கள் பாதிக்கப்பட்டது குறித்த காட்சிகள் இல்லை' என்று சில விமர்சகர்கள் புலம்பினர். ஆனால் ஒட்டுமொத்த சுனாமி பாதிப்புகளை தொட்டு ஆவணப்படம் எடுக்காமல், ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளுக்கு நேர்ந்த வழியை மட்டுமே திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். லூகாஸ் எனும் கேரக்டரில் வரும் சிறுவன் டாம் ஹாலன்டின் நடிப்பு ஆஹா. பெரிய அளவில் கிராபிக்ஸ் ஜித்துக்கள் எதுவும் இல்லை. உணர்வுகளின் விளையாட்டு மட்டுமே. சுனாமி வரும் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன. சந்தர்ப்பம் வாய்த்தால் பார்க்க தவற  வேண்டாம்.
................................................................  

கலைஞன்: 

                                                                            Image: madrasbhavan.com

புத்தக கண்காட்சி நடைபெற்ற ஒய்.எம்.சி.ஏ. பள்ளியின் சுவற்றில் இருந்த ஓவியத்தை எனது அலைபேசியால் க்ளிக் அடித்தேன். இதுபோல பல்வேறு தமிழர் வழக்கங்கள் மற்றும் விளையாட்டுகளை பள்ளியின் நீண்ட நெடுஞ்சுவர் முழுக்க ஓவியங்களாக தீட்டி இருந்தனர். ஆனால் போஸ்டர் கலாச்சாரம் இவற்றின் அழகை  சிதைத்தொழித்து விட்டிருந்தன. தற்போது போஸ்டர்களை  நீக்கிவிட்டு வெள்ளை பெயின்ட் அடித்து விட்டனர். ஒவ்வொரு ஓவியத்திற்கும் தனது உழைப்பை சிந்திய கலைஞன் அண்ணா சாலை பக்கம் வராமல் இருக்க அருள்புரிவாய் ஆண்டவா.
......................................................................

பொல்லாதவன்: 
இந்திய ராணுவ வீரர்களை கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கி தலைகளை கொய்து தாண்டவம் ஆடும் அளவிற்கு கோரமுகம் காட்டிக்கொண்டு இருக்கிறது பாகிஸ்தான். அதே நேரத்தில் போரின்போதும், தீவிரவாத சண்டைகளின்போது இறக்கும் பாகிஸ்தானியர்களின் பிணங்களை உரிய கவுரவத்துடன் அடக்கம் செய்கிறார்கள் நமது வீரர்கள். பாகிஸ்தான் மக்களின் இதய அறுவை சிகிச்சைக்கு சென்னையில்தான் பெரும்பாலும் சிகிச்சை தரப்படுகிறது. அதே இதயத்தைதான் அங்கிருக்கும் அதிகார வர்க்கமும் கொண்டிருக்கும் என்பதை நம்புவோமாக.
....................................................................... 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்:    

  
ராபர்ட் வதேரா, கட்கரி தில்லுமுல்லுகள், டெல்லி கற்பழிப்பு, சூர்ய வம்ச சகோதர சண்டை அனைத்தையும் பரணில் போட்டுவிட்டு பவர் ஸ்டார், விஸ்வரூபம் பரபரப்பில் தீயாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் இதே சம/செம  காலத்தில்தான் ஆட்டோ ஓட்டும் தமிழனின் மகளொருவர் சி.ஏ. தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்துள்ளார். கூட தேர்வு எழுதிய தம்பியும் பாஸ். வெற்றி வாகை சூடிய தமிழச்சி ப்ரேமா பேட்டியில் சொன்னது:  'நான் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும் முதல் நாளில் எனது தந்தை ஒய்வு எடுக்க வேண்டும் என எண்ணியே படிக்க ஆரம்பித்தேன்'. நினைத்ததை முடித்தவள்.
...................................................................

தகப்பன்சாமி:
டெல்லி பாலியல் வன்முறைய விட கொடூரமான கற்பழிப்பு சம்பவங்கள் தேசத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் நடந்தேறியே வருகின்றன. தூக்கு தண்டனைக்கு எல்லாம் காமவெறியர்கள் அஞ்சுவதாக தெரியவில்லை. குஜராத்தில் தான் பெற்ற இரு பெண்களை பல ஆண்டுகள் கற்பழித்து வந்துள்ளான் ஒரு பன்னாடை. 'வெளியே சொன்னால் அவ்வளவுதான்' என்று அவன் மிரட்டியதால் மௌனமாகவே இருந்து வந்துள்ளனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு பொறுமை இழந்த 14 வயது மகளொருத்தி பள்ளி முதல்வரிடம் புகார் செய்து விட்டாள். 'பெண்கள் தமக்கு இழைக்கப்படும் கொடுமை கண்டு பயப்பட வேண்டாம். தைரியமாக போராடுங்கள். இது போன்ற அயோக்கியர்களை தூக்கில் போடும் வரை ஓயாதீர்' எனவும் குரல் தந்துள்ளாள்.
.....................................................................   

ஹே ராம்(கோபால் வர்மா):
'துப்பாக்கிக்கே இந்த சவுண்டா? அடுத்த விஸ்வரூபம் வந்தா சுத்தம்' என்று ட்ரெயிலர் ஓட்டிய மாமக்களே. இது என்ன பொம்மை விளையாட்டு. வர்றார் பாருங்க ராம் கோபால் வர்மா எல்லாத்தையும் விட பெருசா. 'தி அட்டாக்ஸ் ஆப் 26/11'.  மார்ச் 1 ஆம் தேதி ரிலீஸ். தேசிய பொங்கலுக்கு பொங்க தயாராகவும்.                                                  ..........................................................................
  
முந்தைய பதிவு: 

..................................Wednesday, January 23, 2013

கிரேசி கிஷ்கிந்தா
                                                           க்ரேஸியுடன் ஆரூர் முனா செந்தில்                                             

சென்ற ஞாயிறு மாலை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் கிரேசி கிஷ்கிந்தா நாடகம் பார்க்க ஆரூர் முனாவுடன் கிளம்பினேன். நான்கு மணிக்கு  துவங்கிய ஒய்.ஜி.யின் 'சுதேசி அய்யர்' முடிய நேரமாகும் என்று சொன்னதால் காமராஜர் அரங்கின் இன்னொரு பகுதியில் நடந்த ஷாப்பிங் திருவிழாவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். விசாலமான வெளிப்பரப்பு முழுவதையும் அந்த கண்காட்சிக்கு தாரை வார்த்து இருந்தனர். ராஜஸ்தானி ஊறுகாய்களை மட்டும் கால் கிலோ வாங்கிவிட்டு காத்திருந்தோம். இன்னும் சற்று நேரத்தில் எமக்கான 'கிரேசி' தருணங்கள் காத்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

கிரேசியின் டிராமா டிக்கட் வாங்கிய இடத்திலேயே ஆட்டம் ஆரம்பித்தது. நாடக டிக்கட்டில் சீட் எண் போடாமல் இருந்தபோதே ஏதோ தில்லாலங்கடி வேலை நடந்துள்ளது என்று உணர்ந்தேன். விசாரித்ததில் 'ஒண்ணும் பிரச்னை இல்லை சார். உள்ள ஊழியர் இருப்பாரு. அவர் பாத்துக்குவார்' என்று டிக்கெட் தந்த பெரியவர் கூலாக்கினார். ஏழு மணிவாக்கில் அலையென வாசலில் கூட்டம் திரள ஆரம்பித்தது. 'யாருக்கு எந்த சீட் என்று தெரியாமல் இந்த நெருக்கடியில் எப்படி இடம் பிடிப்பது? இதுபோன்ற நகைச்சுவை நாடகம் என்றால் பெரும்பாலும் சீட் எண் குறிப்பிட்டுதானே டிக்கட் தருவார்கள்?' என்று சிலருடன் சேர்ந்து புலம்பிக்கொண்டு இருந்தோம். அதற்குள் வாயிற்கதவு திறக்கப்பட முட்டி மோதிக்கொண்டு ஓடினர் அனைவரும். ஒருவழியாக தோதான கார்னர் சீட்களை பிடித்தோம் நாங்கள். 

எமக்கு பின் அமர்ந்து இருந்த நண்பர் ஒருவர் 'முதன்முறை நாடகம் பார்க்க வந்தேன். மனைவி கர்ப்பிணியாக இருக்கும் இந்நேரத்தில் இப்படி ஒரு கொடுமையா? இடித்துக்கொண்டு ஓடுகிறார்களே?' என்று பதறினார். சமீபகாலமாக பல நகைச்சுவை நாடகங்களை பார்த்து வந்த எனக்கும் இப்படியொரு அசௌகர்யம் ஏற்பட்டது இதுவே முதன்முறை. பொதுவாக இவ்வளவு பெரிய அரங்குகளில் எஸ்.வி. சேகர் நாடகங்கள் மட்டுமே அவ்வப்போது நிரம்பி வழியும். கிரேசிக்கு சற்று கம்மியாக. இம்முறை கூட்டத்திற்கு காரணம் 'அன்பளிப்பு' டிக்கட்கள் என்று தெரிய வந்தது. அளவுக்கு மீறி டிக்கட் தந்துவிட்டதால் பிளாஸ்டிக் சேர்களில் பலரை அமர வைத்தனர். 7 மணி நாடகம் 7.40 மணிக்கு துவங்கியது. 40 நிமிட தாமதத்தில் நான் பார்த்த முதல் நாடகமிது. 

கதை: வக்கீல் பயிற்சி செய்ய தனது அட்வகேட் அத்திம்பேர் வீட்டிற்கு வருகிறான் மாது. ஒரு கேஸ் கூட இல்லாமல் திண்டாடும் அவரை வால்மீகி ராமாயணம் படிக்க சொல்கிறார் நண்பர் ஒருவர். அதன் மூலம் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பது பெரியோர்களின் நம்பிக்கையாம். அந்த நேரம் பார்த்து வாலி மகன் அங்கதன் மற்றும் வால்மீகி பூலோகம் வந்து அட்வகேட்டை சந்திக்கின்றனர். 'வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது பெருங்குற்றம். அவர் மீது வழக்கு தொடர வேண்டும்' என்கிறான் அங்கதன். 'உனக்குள்ள பிரச்னைகளை தீர்த்து செல்வந்தன் ஆக்குகிறேன்' என்கிறார் வால்மீகி. இதனை முன்னெடுத்து க்ளைமாக்ஸ் வரை செல்ல முயற்சித்து உள்ளனர்.

எஸ்.வி.சேகரின் படைப்பில் நான் பார்த்த வெகு சுமார் நாடகம் 'மகாபாரதத்தில் மங்காத்தா'. அதுபோல கிரேசி மோகன் எடுத்ததில் கொட்டாவி விட வைத்தது இந்த கிரேசி கிஷ்கிந்தா. 'எல்.கே.ஜி. என்றால் லோயர் கிஷ்கிந்தா காண்டம்' போன்ற ஓரிரு வசனங்கள் மட்டும் ஹா ஹா. மாது பாலாஜி சில இடங்களில் பேசுபவை பாகற்காய் சுவை. பேப்பரை வைத்துக்கொண்டு 'ரேகா எனும் பெண் கற்பழிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே கற்பழிக்கப்பட்டது தெரிந்ததே. அவர் பெயர் ரேகாவா, ரேப்பாவா' என்றொரு வசனம். என்னதான் 1981 இல் எழுதப்பட்ட வசனம் என்றாலும் காலம் இருக்கிற இருப்பில் இதெல்லாம் தேவையா??? அதுபோல் 'மங்களம் உண்டாகட்டும்' என ஒரு கேரக்டர் சொல்ல அதற்கு மாதுவின் கேள்வி:  'என்னது மங்களம் மாமி உண்டாகப்போறாளா?' புளித்துப்போன இந்த ஜோக்கை இன்னும் எத்தனை காலத்திற்கு.......

தனது தந்தை ஆராமுதனை 'டமாரம், குருடு, செவிடு' என்று கிண்டல் செய்கிறார் மாது. அங்கக்குறைபாடு உள்ளவர்களை இவர்கள் போன்ற மெத்த படித்தவர்கள் இன்னும் ஏளனம் செய்வது சகிக்கவில்லை. சினிமாவில் ஒற்றை வரி வசனம் பிரச்னைக்கு உரியது என்றால் ஊரே ரவுண்டு கட்டி அடிப்பது போல நாடகங்களுக்கு ஒருவரும் கேள்வி கேட்பது இல்லை போலும்? நாடக சென்சார் என்று ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

பெரிய அளவு நகைச்சுவை இல்லாததால் நேரம் போகப்போக கூட்டம் கலைய துவங்கியது. நாடகம் முடிந்ததும் மாது பாலாஜி, கிரேசி மோகன் இருவரையும் சந்தித்து நானும், ஆரூர் முனாவும் பேசினோம். 'நிறைய பணம் தந்து டிக்கட் எடுத்த பலர் இன்று கூட்ட நெரிசலில் சிக்கி அவஸ்தைப்பட்டனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் பாடு சொல்லி தெரிய வேண்டாம். டிக்கட்டில் சீட் எண் போட்டிருந்தால் இந்த பிரச்னையே இருந்திருக்காது' என்று சொன்னதைக்கேட்டு வருத்தப்பட்டார் மாது. 'ஆர்கனைஸ் செய்தவர்களிடம் இது குறித்து கண்டிப்பாக பேசுகிறேன்' என அவர் சொன்னபிறகு ஒப்பனை அறையில் கிரேசி மோகனை சந்தித்தோம்.

 '4 மணிக்கு ஒரு நாடகம் முடித்துவிட்டு இந்த நாடகத்திற்கு வந்து சேர்ந்தோம். பொதுவாக சபாக்களின்  பின்புறம் இருக்கும் ஒப்பனை அறைக்கு நாங்கள் நேரடியாக வந்துவிடுவதால் முன்பக்கம் நடக்கும் இது போன்ற விஷயங்கள் எங்களுக்கு தெரிவதில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இது குறித்து பேசிப்பாருங்கள்'  என்றார். 'ஆமாம்' போட்டார் உடனிருந்த மூத்த நடிகர் ரமேஷ். இது போன்று இன்னும் ஒரு சில சம்பவங்கள் நடந்தால் நாடகம் பார்க்க வரும் மிச்ச சொச்ச மக்களும் முகம் சுளித்து வராமல் போக வாய்ப்புகள் அதிகம். எனவே கிரேசி போன்றவர்கள் வேறுபக்கம் கைகாட்டாமல் தம்மாலான முயற்சிகளை செய்து இதுபோன்ற தர்மசங்கடங்களை தவிர்க்க முயற்சிக்கலாம். 

நாடகத்தின் இடையே 'அப்பாஸ் கல்சுரல்' எனும் ஏற்பாட்டாளர்களுக்கு போன் போட்டபோது 'மயிலை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள்' என பதில் வந்தது. 'ஏன் உங்கள் பிரதிநிதி ஒருவர் கூட காமராஜர் அரங்கில் இல்லையா? எனக்கேட்டால் 'இல்லை' என்றனர். 200, 350, 500, 1000 என்று கொள்ளை விலைக்கு டிக்கட் விற்பதோடு தமது கடமை முடிந்தது என்று முடிவு செய்துவிட்டனர் போல. பிறகு ஏன் நமது மக்கள் நாடக ங்களை ஒதுக்கு சினிமா தியேட்டர்கள் நோக்கி ஆண்டாண்டு காலமாக படையெடுக்காமல் இருப்பபார்கள்???
....................................................................
         

Monday, January 21, 2013

சென்னை புக் ஃபேர் - 3


                                                                     தோள்+நூல் கொடுப்பான் தகப்பன்

வார இறுதியின் இறுதி நாள் என்பதால் நேற்று 'ஆத்தாடியோவ்' கூட்டம். சாதாரணமாகவே விழி பிதுங்கி வீறிடும் நந்தனம் ஞாயிறு அன்றுதான் ரெஸ்ட்டில் இருக்கும். ஆனால் நேற்று 'புத்தகம் வாங்கியே தீர/தீர்க்க வேண்டும்' என்று கங்கணம் கட்டிக்கொண்டு நந்தனம் நோக்கி நண்டு, நசுக்கான் முதல் இந்தியன் தாத்தாக்கள் வரை ஹை ஸ்பீடில் ஜாக்கிங் செய்து பிரம்மாண்ட பேரணி எபெக்டை உண்டாக்கினர். கண்ணா இது காசு குடுத்து வீணா சேத்த கூட்டம் இல்லை. காசை செலவு செய்ய தானா சேந்த கூட்டம். கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை திங்கு திங்குன்னு ஆடுச்சாம். வலது கால் எடுத்து வைத்து இடது பக்கம் திரும்பி பார்த்தால் வாசலில் அலெக்ஸ். லெக்ஸ் தெறிக்க ஓட்டம் பிடிக்கலாமா என்று  அனைவரையும் நிலை தடுமாற வைத்தது எது? கீழே பார்க்க:

                                       'வாங்க மச்சான் வாங்க. எங்க படத்த பாத்துட்டு(ஒரேடியா) போங்க'                        

காலை கடைகள் திறந்த உடனேயே ஸ்பாட்டை அடைந்தேன். ஆங்காங்கே இருபுறமும் துடைப்பத்தால் பெருக்கி தூசிமாரி பொழிந்து வரவேற்றனர் அக்காக்கள். 'இதுவரைக்கும் வாங்குனதை படிக்கவே வக்கில்லை. வந்துட்டான் இன்னும் வாங்கறதுக்கு எருமைக்கடா' என்று துதிபாடி அவர்கள் அழைத்தது போல ஹெவியாக ஃபீல் செய்தேன். முதலில் சற்று வித்யாசமான ஸ்டால்களை லுக்கடிக்க முடிவு கட்டினேன். முதலில் தென்பட்டது சிக்ஸ்த் சென்ஸ் - ஸ்டால் 229. மொத்த கண்காட்சியிலும் கண்களை கவரும் காட்சியாக புத்தகங்கள் அழகுற அடுக்கி வைக்கப்பட்ட ஸ்டால் இதுதான்:


ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகளுக்கான ஸ்டால்கள் பக்கம் சென்று குறுகுறுவென நோக்குவது வழக்கம். சென்ற வருடம் என்னை கவர்ந்த ஸ்டால் அபிராமி & மேஜிக் புக் அனிமேஷன்ஸ்(233). இம்முறையும் அங்கே ஆஜர். பெரிய எல்.சி.டி. டி.வி.யில் அவர்கள் போடும் சிறார் பாடல்களை கேட்பதன் சுகமே அலாதி. இம்முறை கேட்ட பாடல்களில் ஒன்று 'யான வருது யான வருது பாக்க வாருங்கோ'. நீங்களும் பாருங்கோ:       


                                                              
என் மழலைப்பருவம் முடிந்து மாதங்கள் மூன்றே ஆனாலும் பழசை மறப்பது நன்றல்லவே?

முன்பை விட இம்முறை சிறுவர்களுக்கான கடைகள் அதிகம். பெரும்பாலான பெற்றோர்கள் தத்தம் 'தவமாய் தவமிருந்து' சுட்டிகளை கையில் பிடித்தவாறு குறுக்க மறுக்க நடந்து கொண்டிருந்தனர். கூட்ட நெரிசலைக்கண்டு வெறுத்த சோக ரேகைகள் பல வாண்டுகள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. போன பதிவில் குறிப்பிட்ட குறும்பட இயக்குனர் தமிழ் ராஜாவை மீண்டும் சந்தித்து 'ரணகளமாக' சிறிது நேரம் உரையாடினேன். அதன் பின் நடைப்பயணம் தொடர்ந்தது. குமுதம் ஸ்டாலில் ப்ரியா கல்யாணராமன் எழுதிய 'மாண்புமிகு மகான்கள்' புத்தகம் வாங்கச்சொல்லி உறவினர் ஆர்டர் போட்டார். இந்த குட்டி சைஸ் புத்தகத்தின்  விலை ரூ.180. அராஜகம். இந்துப்பெண்களிடம் இத்தகு ஆன்மீகம் வெகு எளிதில்  விற்பனை ஆவது ஆச்சர்யமா என்ன?

வழக்கம்போல வாசலோர ஸ்டாலை ரிசர்வ் செய்து கடை விரித்து இருந்தார் பிரபல இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன். க்ராஸ் செய்யும் அனைவரையும் 'உள்ள வாங்க. வந்துருங்க' என்று கையசைத்து வலை போட்டார். நானும் சிக்கினேன். அனைத்தும் ஆதி காலத்தில் அவரெழுதிய புத்தகங்கள். 'கமலுக்கும் உங்களுக்கும் சமீபத்துல நடந்த சம்பவம்..'என்று ஆரம்பித்தேன். 'என்ன செய்யறது தம்பி. நடக்கணும்னு இருக்கு' என்று பெருமூச்சு விட்டார். 'தி.நகர்ல இருக்குற என் வீட்டுக்கு ஒருநாள் வாங்க. நிறைய பேசுவோம்' என்று முகவரி தந்து வழியனுப்பினார்.

'அம்புலி 3D' பட இயக்குனரும், அவ்வப்போது 'ஹாய்' போடும் நண்பருமாகிய ஹரீஸ் அனுப்பிய எஸ்.எம்.எஸ். கண்டு குறிப்பிட்ட இடத்தை அடைந்தேன். அமரர் கல்கியின் 'மோகினித்தீவு' ஒலிப்புத்தகம் குறுந்தகடாக வெளிவந்து உள்ளது. மொத்தம் 10 அத்யாயங்கள். குரல் தந்திருப்பது ஹரீஷ். கிரியேட்டிவ் ஹெட்டாக ஹரி ஷங்கர் பணியாற்றி உள்ளார். எப்போதும் வித்யாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் ஹரி-ஹரீஷ் இணையின் மற்றொரு படைப்பிது.

அரை ட்ரவுசருடன் பிலாசபி வேறொரு பக்கம் உலாத்திக்கொண்டு இருக்க ஜிக் ஜாக் ஆக ஸ்டால்களை கடந்து வந்துகொண்டு இருந்தேன். மாலை தொட்டதும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் நானும், ஆரூர் முனாவும் ஆஜர். பதிவர் பாலகணேஷ் எழுதிய சரிதாயணம் புத்தகம் ஒன்றை வாங்கினேன். பயங்கர பிஸியில் இருந்த கடை ஓனர் வேடியப்பன் 'வந்துட்டானுங்களா?' என்று ஓரக்கண்ணால் பார்த்து பார்க்காதது போல பகுமானமாக பில் போட்டுக்கொண்டு இருந்தார். அங்கிருந்து விடைபெற்று திக்கித்திணறிய வாகன  நெருக்'கடியை' தாண்டி தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் 'கிரேசி கிஷ்கிந்தா' நாடகம் பார்க்க சென்றேன் ஆரூர் முனா செந்திலுடன்.

நேற்று வாங்கி(க்கட்டி)யவை:

பாரதியார் கதைக்களஞ்சியம் - நல்லி குப்புசாமி ரூ.350

தாயார் சன்னதி - சுகா ரூ.180

மூங்கில் மூச்சு - சுகா ரூ.95

காற்றில் தவழும் கண்ணதாசன் - இராமலிங்கம் ரூ.125

சரிதாயணம் - பால(!)கணேஷ் - ரூ.60

மோகினித்தீவு சி.டி. -  ஹரீஷ் - ஹரி ரூ.99

தமிழ்த்திரை தயாரிப்பாளர்கள் - முக்தா ஸ்ரீனிவாசன் ரூ.100

கூவம் நதிக்கரையினிலே 3 பாகங்கள்  - சோ ரூ. 295

காட்சிப்பிழை மாத இதழ்கள் 3 - ரூ.30

                                                       சரிதாயணம் ரிலீஸ்: பாலகணேஷ் - கேபிள் சங்கர்          

தெரிந்தவர்களின் திருமணம் உள்ளிட்ட சிறப்பு(?)தினங்களில் ஏழேழு தலைமுறை தொட்டு  சுவர் கடிகாரம், டின்னர் செட் போன்றவற்றை அன்பளிப்பாக தரும் உன்னத செயலை செய்வதை விட புத்தகங்கள் வழங்குவதையே பழக்கமாக கொண்டுள்ளேன். படித்து 'தேங்க்ஸ்' சொன்னவர்கள் கணிசமாக உண்டு. இந்த அல்டிமேட் டச்சுடன் இப்பதிவு சுபம்.
..................................................................


All Images: Madrasbhavan.com

புக் ஃபேர் சுவாரஸ்யங்கள் தொடரும்..

முந்தைய பதிவு

சென்னை புக் ஃபேர் - 2
........................................................................      

Sunday, January 20, 2013

சென்னை புக் ஃபேர் - 2நேற்று மதியம் இரண்டு மணி வாக்கில் நான், பிலாசபி, அஞ்சாசிங்கம், ஆரூர் முனா மற்றும் பட்டிக்காட்டான் அனைவரும் ஒன்றாக அரங்கினுள் நுழைந்து இரவு 8 மணிவரை இணைபிரியாமல் ஸ்டால்களை முற்றுகை இட்டோம். பொதுவாக பதிவர்கள் கண்ணில் பட்டால் டிஸ்கவரி புக்  ஸ்டாலில் மீட்டிங் போட்டு பொழுதை போக்குவது தொன்று தொட்ட மரபாகிப்போவதால் அனைத்து ஸ்டால்களையும் விசிட் செய்ய முடியாமல் திரும்புவது வழக்கம். அதேபோல கூட ஒரு நண்பர் வந்தால் கூட சற்று நேரத்தில் அவரை பிரிந்து எனக்கு பிடித்த ஸ்டாலுக்குல் நுழைந்து விடுவேன்.  இவ்விரு மாதிரியும் இன்றி முதன் முறையாக ('குகனோடு சேர்ந்து ஐவரானோம்' என ராமன் சொன்னது போல பட்டிக்காட்டானையும் சேர்த்து) குழுவாக புத்தக வேட்டையில் ஈடுபட்டது இதுவே முதன் முறை. சென்ற வாரம் பொங்கலுக்கு ஊருக்கு சென்றிருந்த வெளியூர் ஆட்கள் ரிட்டர்ன் ஆகிவிட்டதால் நேற்று ஏகப்பட்ட கூட்டம்.

கடந்த சனி, ஞாயிறு அன்று சந்தித்த பபாஷா, பட்டர்ப்ளை சூர்யா, புதுகை அப்துல்லா, மோகன்குமார், மணிஜி, ஓ.ஆர்.பி. ராஜா ஆகியோர் இம்முறை கண்ணில் படவில்லை. கே.ஆர்.பி.செந்தில் தாமதமாக வந்தார். ஒரு சில 'ஒளிவட்ட' ட்ரங்க் பெட்டிகளை பார்த்து சிதறி ஓட வேண்டியும் இருந்தது.   இம்முறை நாங்கள் சந்தித்த பதிவர்கள்: கேபிள் சங்கர், முரளிதரன், பாலகணேஷ், மதுமதி, புலவர் ராமானுஜம், கவியாழி கண்ணதாசன், சசிகலா, சமீரா, பத்மஜா மற்றும் சிலர்(பெயர் விடுபட்டிருப்பின் மா ஃப் கீஜியே). சத்ரியனின் நூல் வெளியீடு டிஸ்கவரியில் நடைபெற்றது. அப்போது தமிழ் ராஜன் எனும் குறும்பட இயக்குனரை சந்தித்து அளவளாவினேன். 'ரணகளம்' எனும் குறும்படமொன்றை எடுத்திருப்பதாகவும் வரும் 25 ஆம் தேதி யூ ட்யூபில் வெளியிட உள்ளதாகவும் கூறினார். தஞ்சையின் பாரம்பரிய விளையாட்டான போர்க்காயை மையமாகக்கொண்டு வெளிவரவுள்ள படைப்பு. ட்ரெயிலர் பார்க்க க்ளிக் செய்க: ரணகளம். அவருடன் பேசி முடித்த பின்பு பேருலாவை தொடங்கலானோம்.

ஸ்டால் 277 - 'குட் வொர்க் புக் புது தில்லி' யில் குர் ஆனை இலவசமாக தரும் செய்தி கேள்விப்பட்டு ஆளுக்கொரு புத்தகத்தை வாங்கினோம். திராவிடர் கழக ஸ்டால் எண். 277 இல் நாங்கள் நுழைந்ததும் எம்மை அழைத்து பெரியார் கொள்கைகள் பற்றி நீண்ட நேரம் விவாதித்தார் தி.க.வின் துணைப்பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் அவர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்பதால் நிகழ்வை வேடிக்கை மட்டும் பார்த்தேன். கடவுள் மறுப்பாளர்களான பிலாசபி மற்றும் அஞ்சாசிங்கம் அதிக நேரம் உரையாடினர். இன்று மீண்டும் அவரை சந்திக்க உள்ளோம். நேற்று அதிக புத்தகங்கள் வாங்கியது ஆரூர் முனாதான். ஒவ்வொரு முறையும் சில ஆயிரங்களுக்கு புத்தகங்கள் வாங்காமல் இருந்ததே இல்லை மனிதர். 

நேற்றுவரை நான் வாங்கிய புத்தகங்கள்: 

கணிதமேதை ராமானுஜன் - ரகமி  ரூ.120

பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை - ரூ.150

தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - ரூ.250

வட்டியும் முதலும் - ராஜூ முருகன் - ரூ.215

(தோழர்) ஜீவா சில நினைவுகள் - பாலசுப்ரமணியன் - ரூ.200

வாத்யார் (எம்.ஜி.ஆர்) - ரூ.160

அரவாணிகள் - மகாராசன் - ரூ.210

மயக்கம் என்ன - சஞ்சீவிகுமார் - ரூ.110

உணவின் வரலாறு - பா. ராகவன்  ரூ.160

மீனாட்சி புத்தக ஸ்டாலில் சுஜாதாவின் புத்தகங்கள் ஒவ்வோர் ஆண்டும் மிக மலிவான விலையில் கிடைக்குமென்றும், விற்பனைக்கு வந்த ஓரிரு மணி நேரத்தில் பதிவர்கள் அனைத்தையும் அள்ளி விடுவார்கள் என்றும் கேள்விப்படுவதுண்டு. இம்முறை எதேச்சையாக அந்த ஸ்டால் கண்ணில் பட உள்ளே நுழைந்தோம். எங்கள் அதிர்ஷ்டம் போல. அப்போதுதான் ஏகப்பட்ட ஸ்டாக் இறங்கி இருந்தது. 'அள்ளு  அள்ளென' கூட சேர்ந்து அள்ளியவர்கள்  ஆரூர் முனாவும், பிலாசபியும். நான் அள்ளியவை:

ஓலைப்பட்டாசு - ரூ.30

24 ரூபாய் தீவு - ரூ.26

கமிஷனருக்கு கடிதம் - ரூ.19

21 ஆம் விளிம்பு - ரூ.43

படிப்பது எப்படி - ரூ.42

ஒரு நடுப்பகல் மரணம் - ரூ.55

உயிராசை - ரூ.33

ப்ரியா - ரூ.44

சில வித்தியாசங்கள் - ரூ.33

விழுந்த நட்சத்திரம் - ரூ.22

கலைந்த பொய்கள் - ரூ.17

60 அமெரிக்க நாட்கள் - ரூ.24

வடிவங்கள் - ரூ.22

குமரி பதிப்பக வெளியீடான இவ்வனைத்து சுஜாதா படைப்புகளுக்கும் 10% தள்ளுபடியும் உண்டு. சிறுகதை, இலக்கியம், நாவல் பக்கம் எட்டிப்பார்க்காத நான் 'சுஜாதா' எனும் பெயருக்காக மட்டும் வாங்கிய படைப்புகள் இவை. விகடன் சுஜாதா மலர் வெளியான தகவல் அறிந்து விகடன் ஸ்டாலை அடைந்தோம். நூலின் விலை ரூ.165. பிரித்து பார்த்தபோது உள்ளே இருந்த சமாச்சாரங்கள் புத்தகம் வாங்கும் ஆவலை தூண்டவில்லை. பில் போடும் இடத்தில் பெரியவர் ஒருவரை பார்த்து விகடன் ஊழியர் எரிந்து விழ அருகில் இருந்த சக ஊழியர்  'கூல்' என்று ஆஃப் செய்தார். மிக அதிகம் பேர் விசிட் செய்து வரும் ஸ்டால் என்பதால் பணி நெருக்கடியில் சூடாகி விட்டார் போல மனிதர். அதற்காக மூத்த வாசகரிடம் பொறுமை இழப்பது சரியல்ல. அப்பெரியவர் பணம் தந்துதான் புத்தகம் வாங்கினார். 'டைம் பாஸ்' செய்யவில்லையே!!

வெகுநேர நடைப்பயண களைப்பை தீர்க்க மேடை அருகே அமர்ந்தோம். மாலை சுமார் ஏழு மணி வாக்கில் 'நடைப்பயண' புகழ் வைகோ  சிம்மாசனத்தை அலங்கரித்தார். அவரது பேச்சை கேட்க பெருந்திரளாக மக்கள் கூடி இருந்தனர். எனது காது பட  உள்ளூர் இளைஞர் தனது தோழருடன் சொன்ன வார்த்தைகள் இவை: 'வைகோ பேஜாரா பேசுவாப்ல'. ஆயிரம் சான்றோர்கள், விருதுகள் தரும் பாராட்டுக்களை விட இம்மாதிரி சாமான்ய மனிதர்கள் அதுவும் இளைஞர்கள் ஒரு இந்திய அரசியல்வாதிக்கு தரும் ஒற்றை வரி பாராட்டிற்கு இணையில்லை. வைகோ உமக்கு நேரம் கனியாமல் போகாது! 

இறுதியாக இன்று இன்னொரு சுற்று கண்காட்சிக்கு செல்கிறேன். அனுபவங்கள் ஓரிரு நாட்களில் பதிவாக.

முந்தைய பதிவு:


...................................................


Saturday, January 19, 2013

சென்னை புக் ஃபேர்மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் பகிர்ந்த தகவல்: 'சென்ற ஆண்டு நடந்த புத்தக விற்பனையில் பாதி கூட இவ்வாண்டு இல்லை'. புத்தக  விற்பனையாளர்கள் இப்படி புலம்பியுள்ளனராம். அதற்கு முக்கியமாக சொல்லப்படும் காரணங்கள்:150 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்படும் புத்தகங்கள், கணினியில் மின்னூல் படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்றும் விண்ணை முட்டும் விலைவாசியால் முன்பு போல புத்தகப்பிரியர்கள் செலவழிக்க அஞ்சுவது. அதிலும் குறிப்பாக  'வருஷா வருஷம் தம்பட்டம் அடிக்க வாங்குன  புக்குங்களை படிக்கவே உங்களுக்கு வக்கு  இல்ல. இதுல புதுசா  வேற  வாங்கப்போனீங்க  கணுக்காலை வெட்டிப்புடுவேன்' என்று மனைவியிடம் விழுப்புண்  வாங்கி இருப்போரின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்.
  
இவ்வாண்டு கண்காட்சி நடக்குமிடம் நான் படித்த எனதருமை ஒய்.எம்.சி.ஏ. பள்ளி என்பதால் ஆரம்பம் முதலே மனது படபடத்துக்கொண்டு இருந்தது. இயற்கை அன்னையே ஓய்வெடுக்கும் எழில் கொண்ட எனது அந்நாள் தாய்வீடு என்ன கதிக்கு ஆளாகி இருக்குமோ என்று மனது புலம்பிக்கொண்டு இருந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. 1950-கள் முதல்  2000 ஆம் வருட ஆரம்பம் வரை அங்கு நடக்காத ஷூட்டிங்கே இல்லை என்று சொல்லலாம். 'பொன் ஒன்று கண்டேன்'(படித்தால் மட்டும் போதுமா), 'காற்றில் எந்தன் கீதம்' (ஜானி) பாடல்கள் முதல் பார்த்திபனின் கில்லி-தாண்டு ஆட்டம்(உள்ளே வெளியே), அப்பாஸ் - வினித் கால்பந்து போட்டி(காதல் தேசம்) வரை ஏகப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட லொக்கேஷன் அது. இடையே சில வருடங்கள் சினிமாவிற்கு தடை போடப்பட்டது.

நீண்ட நாட்கள் கழித்து  சென்ற ஆண்டு  ஒய்.எம்.சி.ஏ.விற்கு  விசிட் அடித்தபோது அங்கிருந்த வாசு அண்ணனிடம்(பள்ளிக்காலம் முதல் இன்று வரை ப்யூனாக நீடிக்கிறார்) விசாரிக்கையில் 'ஷூட்டிங் ஆட்கள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்திவிட்டு செல்வதாலும், பள்ளி நடக்குமிடத்தில் ஷூட்டிங் நடப்பது சரிப்படவில்லை என்பதாலும் தடை போட்டுவிட்டார் புதிய நிர்வாகி' என்றார். ஆனால் அந்த நிம்மதிக்காற்றை இயற்கைத்தாய் நெடுகாலம் சுவாசிக்க முடியவில்லை. கடந்த சில மாதங்களாக ஐ.பி.எல் துவக்க விழா,யுவன் ஷங்கர், ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தும் வியாபார தளமாகிப்போனது 'எனது' ஒய்.எம்.சி.ஏ. அந்த நிகழ்வுகள் எதற்கும் செல்லவில்லை நான். இம்முறை புத்தக கண்காட்சிக்காக உள்ளே காலடி எடுத்து வைத்தேன்.

வெளியே வெகுதூரம் நீண்டிருந்த பள்ளிச்சுவர் முழுக்க சினிமா, பத்திரிக்கை, அரசியல் என சகலவித போஸ்டர்கள். தி.மு.க.ஆட்சியில் மேயர் சுப்பிரமணியன் அவர்களின்  முயற்சியால் தமிழ்ப்பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை சித்தரிக்கும் அழகிய ஓவியங்கள் அனைத்தும் இந்த சமூக போராளிகளின் போஸ்டர்களால் நாறடிக்கப்பட்டு இருந்தது மனதை வருத்தியது. 'ஒட்டட்டும். நமக்கென்ன?' என மேடம் ஆட்சி கண்டுகொள்ளாமல் இருப்பது அதிசயமா என்ன? இதில் முக்கிய கொடுமை என்னவெனில் தி.மு.க.கட்சி மற்றும் உதயநிதியின் 'இது கதிர்வேலன் காதல்' போஸ்டர்களும் அதில் அடக்கம்.

'கண்காட்சி வளாகம் ஒருவேளை புற்கள் நிறைந்த கால்பந்து மைதானத்தில் இருக்குமோ' எனும் பயத்துடன் நுழைந்த எனக்கு பெரிய ஆறுதல். நல்லவேளை 'மிடில் கிரவுன்ட்' என்று  மாணவர்களால் அழைக்கப்படும் அந்த பசுமையான ஆடுகளத்தை தாரைவார்க்கவில்லை நிர்வாகம். அருகே இருந்த இரண்டு பெரிய கால்பந்து மைதானங்கள் ஆக்ரமிக்கப்பட்டு இருந்தன. அந்த இடத்தை சுற்றிலும் அடிக்கொரு இடம் பள்ளம் நோண்டப்பட்டு இருந்தது. ஸ்டால்கள் இருக்கும் இடத்தினுள் நடந்து சென்றால் மேடும், பள்ளமும் பஞ்சமின்றி. பெரியவர்கள் பொறுமையாக நடந்து செல்லவும். மடங்கி இருக்கும் தரைவிரிப்புகள் மற்றும் சமமற்ற நிலப்பகுதிகள் உங்கள் காலை வாரி விட வாய்ப்புகள் அதிகம்.

இதுபோக சிறுநீர், காகித மற்றும் தின்பண்ட கழிவுகள் என இன்னும் பல மாசுகளை தாங்கிக்கொண்டு நாட்களை நகர்த்த உள்ளது எனது பள்ளி. அண்ணாசாலையில் கிண்டி, சைதை, தேனாம்பேட்டை முதல் சென்ட்ரல் வரை சுரங்கப்பாதை அமைத்துள்ள கழக அரசுகள் இன்றுவரை நந்தனத்தில் ஒரு சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்காததற்கான காரணம் பிடிபடவே இல்லை. சென்னையின் மிக முக்கிய சிக்னல் அமைந்து இருக்கும் நந்தனம்  தேவர் சிலை அருகே இன்னும் பிதுங்கிக்கொண்டு இருக்கிறது வாகன நெருக்கடி. இந்த அழகில் புத்தக கண்காட்சி வேறு.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வளாகத்தில் இன்னொரு 'அங்கமாக' இருப்பது பார்வையற்றோர் பள்ளியும்தான். குறைந்தபட்சம் அங்கிருப்போரை மனதில் கொண்டாவது அரசு ஆவன செய்தால் புண்ணியம். சுரங்கம் அல்லது மேம்பாலம் இல்லாவிடினும் பெரியார் மாளிகை  மற்றும் பள்ளி எதிரில் ஹ்யூமா  உள்ள மருத்துவமனை அருகில் பாதசாரிகள் க்ராஸ் செய்யும் இடத்தில் போக்குவரத்து காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்ணில் பட்ட போக்குவரத்து  காவலர்கள் தற்போது நீண்டகால விடுப்பில்/கடுப்பில் போய் விட்டனர் போல! அக்குறையால் சாதாரண மக்களே க்ராஸ் செய்ய சிரமத்திற்கு ஆளாகும்போது கண்பார்வையற்றவர்களின் நிலைமை என்னவென்று சொல்லியா 'தெரிய' வேண்டும் அரசுக்கு???

ஏற்கனவே சைதை ஆசிரியர் கல்லூரியில் இருந்த பிரம்மாண்ட மைதானத்தை மெட்ரோ ரெயில் பணிகளுக்கு தானம் தந்துவிட்டனர். தி.நகர் வெங்கட்நாராயணா ரோட்டில் இருக்கும் மாநகராட்சி மைதானத்தை ரங்கநாதன் தெரு மற்றும் பாண்டி பஜாருக்கு ஷாப்பிங் செய்ய வரும் சீமான், சீமாட்டிகளின் கார்களை நிறுத்தும் இடமாக மாற்ற அரசியல்வாதிகள் முயன்று பின்பு பொதுமக்கள் முயற்சியால் சட்டபூர்வமாக தடுக்கப்பட்டது. தற்போது மிச்சம் இருக்கும்  ஒய்.எம்.சி.ஏ.வும் வணிக காரணங்களுக்காக 'சமரசம்' செய்ய துவங்கிவிட்டது. இதுபோன்ற பல்வேறு மனவருத்தங்களால் எப்போது புத்தக கண்காட்சி வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று காத்திருக்கும்  ஒய்.எம்.சி.ஏ. தாசனாகிய என் போன்றோர் நொந்துகொண்டு இருக்கிறோம்.

இருக்கிற மைதானங்களை ஒழித்துவிட்டு குழந்தைகள் வீட்டுக்குள்  முடங்கி ஆடிப்பாடி மகிழ கண்காட்சியில்  சிறப்பு சி.டி.ஸ்டால்கள் விற்கும் பேரன்புடையீரே உமது புகழ் ஓங்குக. மைதானங்களில் தடம் பதிப்பதற்கான காரணம்  சிறார் மற்றும் இளையோரின்  விளையாட்டு ஆர்வத்திற்கு உரம் போட வேண்டுமே அன்றி  பொதுமக்கள் 'சொய்' என்று உச்சா அடித்து விட்டு 'ரஹ்மான் ராக்ஸ்', 'சுஜாதா புக்ஸ் ரெண்டு பண்டல் வாங்கிட்டேன்' என்று மயிர்  சிலிர்க்கும் கூடாரம் ஆகிப்போதல் எவ்வகையில் நியாயம்?

இதே நிலை தேசமெங்கும் தொடர்ந்தால் அடுத்த ஒலிம்பிக்கில் லட்டு என்ன.. தூள்பூந்தி கூட கிடைக்காது.
.................................................................................

Tuesday, January 15, 2013

கண்டேன் கே.பாலச்சந்தரை !!                                                                         பார்த்தாலே பரவசம்!!

'ஜனவரி ஆறாம் தேதி ஞாயிறு மதியம் கே.பி. இயக்கும் 'அமுதா ஒரு ஆச்சர்யக்குறி' சீரியல் ஷூட்டிங் உள்ளது. இணைய நண்பர்கள் சந்திப்பு இருப்பது போல ஒரு எபிசோட். அதில் பங்கேற்க வரமுடியுமா?' என்று உண்மைத்தமிழன் அண்ணாச்சி போன் செய்தார். 'தமிழ்த்திரையுலகில் எனது பெரு மதிப்பிற்கு உரிய இயக்குனரை பார்த்தால் போதாதா? கரும்பு தின்ன கூலியா? வருகிறேன்' என்று துள்ளலுடன் பதில் தந்தேன். அஞ்சாசிங்கம், பிலாசபி, சீனு, அரசன்,  பபாஷா, காவேரி கணேஷ், பபாஷா, பட்டர்ப்ளை சூர்யா, பட்டிக்காட்டான் ஜெய் என பதிவர்கள் படை எடுத்தனர் மைலாப்பூர் கோகுலம் ஹவுஸ் எனும் பிரம்மாண்ட வீட்டை நோக்கி.

வாசலில் என்னை வரவேற்றார் உண்மைத்தமிழன். அப்போது ஷூட்டிங்கிற்கு வந்த கதை நாயகனை ('எங்கே பிராமணன்' சீரியலில் சிறப்பாக நடித்த நாயகன் அப்ஸர்) அறிமுகம் செய்து வைத்தார். நான் பார்த்த ஒரே மெகா சீரியல் அது மட்டுமே.  'இஸ்லாமியர் ஒருவர் பிராமணராக நடித்து இந்த அளவிற்கு பெயர் பெற்றது சிறப்பு. பெரிய திரையில் பம்பாய் படத்தில் நாசருக்கு பின்பு நீங்கள் அப்படி ஒரு கேரக்டரில் நடித்துள்ளீர்கள்' என்று கூறினேன். 'அதற்காக பெரிதாக முன்முயற்சி எடுக்கவில்லை. சொன்னதை கேட்டு நடித்தேன்' என்றார்   அப்ஸர். சில நிமிடங்களில் அவர் சென்ற பின்பு இயக்குனர் சிகரம் எப்போது வருவார் என்று வாசலை நோக்கியே கண்கள் மையம் கொண்டு இருந்தன. வீட்டுக்கு வீடு லூட்டி சீரியல் முழுக்க இந்த வீட்டில்தான் ஷூட் செய்யப்பட்டது என்றும், நகரின் மையப்பகுதியில் இருப்பதால் இந்த விசாலமான இடத்திற்கு ஏக கிராக்கி என்றும் தகவல்களை கூறினார் உ.த. 

                                                டயலாக் டெலிவரி: பபாஷா, நான் மற்றும் பட்டர்ப்ளை சூர்யா         

ஒரு சில பதிவர்களை வசனம் பேச வருமாறு சீரியல் டீம் அழைத்தது. மேலுள்ள படத்தில் இருந்த நாங்கள் மூவரும் செலக்ட் செய்யப்பட்டோம். கண்டிப்பாக ஒரு வரி டயலாக்தான் என்று திண்ணமாக தெரிந்தது எனக்கு. தலைவரை பார்க்கப்போகிற சந்தோஷமே மனதை நிறைத்து இருந்ததால் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சமாகவே பட்டதெனக்கு. கதைப்படி பதிவர் மீட்டிங் ஒன்றில் நாயகன் சிறப்பு விருந்தினராக வருகிறார். எழுத்தாளரான அவர் பேச துவங்கிய பின்பு கூட்டத்தில் இருந்து நாயகி எழுந்து அவரை பதற வைக்கும் வண்ணம் பொடி வைத்து வசனம் பேச வேண்டும். அப்போது பெர்சனல் விஷயம் பேச இது இடமல்ல என்று நாங்கள் எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார் அசிஸ்டன்ட் ஒருவர். பலமாக தலையாட்டினோம். 'கொஞ்சம் சும்மா இருங்க. அவங்க பேசணும்னு சொல்றாங்க. பேசட்டும்' இதுதான் எனக்கு கிடைத்த டயலாக்(இறுதியில் அவ்வசனம் வேறொரு பெண்மணிக்கு தானம் செய்யப்பட்டது என்பது இன்னொரு செய்தி).

அனைவரும் தயாராகி கொண்டிருந்த நேரம் கே.பி.யின் வெள்ளை நிற அம்பாஸிடர் புதுப்பொலிவுடன் உள்ளே நுழைந்தது. 'ஜென்டில்மேன்' லுக்கில் எம்மை நோக்கி வந்தார் கே.பி. ஷூட்டிங் துவங்கியது. சிறு அறை என்பதால் லைட் வெளிச்சம் சூட்டை அதிகரித்தது. ஒரே வசனத்தை ஏகப்பட்ட முறை ரீடேக் வாங்கினார் ஒருவர். 10 நிமிட காட்சியை எடுக்க 3 மணிநேரம் ஆனது. 'நான் கொஞ்சம் பேசணும்' என்று பின்வரிசையில் இருந்த நாயகி சொல்ல 'முன்ன போயி மைக்ல பேசுங்கம்மா' என்று அனைவரும் கோரஸாக சொல்ல வேண்டும் என்றார் வசனகர்த்தா. வெற்றி. வெற்றி. மாபெரும் வெற்றி. கே.பி. இயக்கத்தில் நான் பேசிய வசனம்:

''முன்ன போயி மைக்ல பேசுங்கம்மா''

இந்த கலவரத்திலும் அருகில் இருந்த செக்க செவேல் ஜூனியர் ஆர்டிஸ்ட்  யூத் பெண்ணிடம் கடலை வறுத்துக்கொண்டு இருந்தார் அஞ்சாசிங்கம். இன்னொரு பக்கம் கடைசி வரிசையில் அட்மாஸ்பியருக்கு அமர்ந்து இருந்து பட்டிக்காட்டான் ஜெய் அவர்கள் சீனு தம்பியிடம் இருந்து கூலிங் கிளாசை பிடுங்கி போட்டோ எடுக்க சொல்லி டார்ச்சர் தந்துகொண்டு இருந்தார்.          
         
                                                சிகரமும், குன்றுகளும்: சீனு, அரசன், செல்வின், நான்.               

ஒருவழியாக ஷூட் முடிந்து வெளியே வந்தோம். பாலச்சந்தர் அவர்களை சந்தித்து ''தங்களின் அவள் ஒரு தொடர்கதை, தில்லுமுல்லு போன்ற படங்களை கணக்கில் அடங்காத அளவிற்கு பலமுறை பார்த்து உள்ளேன். இன்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி'' என்றதற்கு கையைப்பிடித்து கனிவுடன் பேசி மகிழ்ந்தார் சிகரம். முதுமை அவரை அதிகம் அசைத்து பார்க்க ஆரம்பித்து இருப்பது வருத்தம்தான். இருந்தும் மனம் இன்னும் இளமையாகவே. கமல், ரஜினி, நாகேஷ் போன்ற பெரும் நாயகர்களையும், சரிதா, சுஜாதா போன்ற பல பொக்கிஷங்களையும் திரையில் செதுக்கிய சிற்பியின் கரங்களை பற்றிய அந்த இனிய தருணம் என்றென்றும் மனதில் நிற்கும். 

     
இப்படி ஒரு ஆச்சர்யம் மற்றும் அன்பான சந்திப்பு ஏற்பட ஏற்பாடு செய்த உண்மைத்தமிழன் அவர்களுக்கு நன்றிகள் பல. சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற சூப்பர் ஹீரோக்கள் திரையை ஆக்ரமித்து இருந்த காலகட்டத்தில் ரசிகர்களை தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்த கே.பி.யுடன் லொக்கேசனில் இருந்த அந்த சில மணி நேரங்கள்....

நினைத்தாலே இனிக்கும்!!
.............................................................                                                                          
                                                  

Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா, சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு                                       
சரித்திர நாயகன் பவர் நடிப்பில் நான் பார்க்கும் முதல் படம். லத்திகா பார்க்காத பாவத்திற்கு விமோசனம் கிடைத்தது இன்று. இன்று போய் நாளை வா படத்தை கிட்டத்தட்ட ஜெராக்ஸ் அடித்து எடுத்துள்ளனர். பாக்யராஜிடம் பஞ்சாயத்து முடிந்ததால் டைட்டிலில் அவருக்கு நன்றி போட்டனர். சேது மற்றும் சந்தானம் இன்ட்ரோவிற்கு பிறகு மாஸ் ஹீரோ போல மஞ்சள் பைக்கில் புகை மூட்டத்தை தாண்டி பவர் வரும் சீனுக்கு க்ளாப்ஸ் எகிறுகிறது.     

சேதுவின் வீட்டிற்கு எதிரே குடிவருகிறது நாயகியின் குடும்பம். கல்யாணம் முதல் கருமாதிரி வரை சர்வீஸ் செய்வதால் சந்தானத்தின் பெயர் கே.கே. பவர் பெயர் படத்திலும் பவர்தான். வி.டி.வி. கணேசன், கோவை சரளா, தேவதர்ஷினி என நகைச்சுவை பட்டாளம் நன்றாக நடித்துள்ளனர். சந்தானத்தின் சரவெடி காமடி அருமை. 'என்னடா அப்பளக்கூடை தூள் மைசூர் பாக் வாங்க வந்தியா', 'குரங்கு மாதிரி ஏண்டா கோரசா கத்தறீங்க, 'ஆடிய பாதமும், அலாவுதீன் பூதமும் சேந்துருச்சி' என நக்கல் மழை. சேது மற்றும் நாயகியின் நடிப்பு சுமார். 'காபி குடிச்சிட்டு போ தம்பி' என்று கோவை சரளா கூற அதனை ஆமோதிக்கிறார் சேது. 'அதுக்கு காபி பொடி, சக்கரை வாங்க கடைக்கு போயிட்டு வா' என்று சரளா சொல்லுமிடம் பட்டாசு.

எங்கே பவரை ஓரம் கட்டி சந்தானம் டேக் ஓவர் செய்வாரோ என்று பார்த்தால், சொந்தப்படத்தில் பவருக்கு நிறைய வாய்ப்பு தந்து ப்ரொபசனலிசத்தை காட்டி உள்ள சந்தானத்தை பாராட்டலாம். பவரின் நடனம், ரொமான்ஸ், சோகம் என பல அதிரடி காட்சிகளில் விசில் பறக்கிறது. படத்தின் ஹீரோ சந்தேகம் இன்றி நம்ம தலைவர்தான். பாடல்கள் அனைத்தும் ஒருமுறை கேட்கும்படி உள்ளன. அலெக்ஸ் பாண்டியன் பார்த்து நொந்து நூலானவர்களுக்கு தெய்வீக லட்டாக வந்து சேர்ந்துள்ளது இப்படம். பண்டிகைக்கு வந்துள்ள கிளீன் காமடி பிலிம் என்பதில் சந்தேகமில்லை. சென்ற ஆண்டு மாஸ் ஹீரோக்கள் வாங்கிய உதையும், தற்போது அலெக்ஸ் வாங்கிய தர்ம அடியும் பவர் போன்ற நடிகர்களை எவ்வளவோ மேல் என்று போற்றவே சொல்கின்றன. அவரது நடிப்பு மிக சுமார் என்றாலும். பவருக்கான சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்ட படைப்பாக இதை தாராளமாக சொல்லலாம்.

 கண்ணா லட்டு தின்ன ஆசையா - பவர் ப்ளே!! 

..................................................................... 
  
சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு:

                                                                   
முதல்முறையாக தெலுங்கில் நான் பார்க்கும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட். மகேஷ் பாபு, வெங்கடேஷ், அஞ்சலி, பிரகாஷ்ராஜ், சமந்தா என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்துள்ள பீல் குட் பேமிலி பிலிம். தாய், தந்தை இல்லாத அஞ்சலி(சீதா) உறவினர் பிரகாஷ்ராஜ் அரவணைப்பில் வளர்கிறார். பிரகாஷ்ராஜின் மகன்களாக இரு ஹீரோக்களும். வேலை சரியாக அமையாத இருவரையும் நக்கல் விடும் பணக்கார உறவினருக்கு மத்தியில் இவர்கள் எப்படி நற்பெயர் சம்பாதிக்கின்றனர் என்பதே கதை.

தெலுங்கில் படம் பார்ப்போருக்காக ஏகப்பட்ட மொக்கை மசாலா சேர்த்து அலெக்ஸ் ரிலீசான நேரம் பார்த்து அதற்கு ஆப்பு அடித்து உள்ளது இப்படம். ஹீரோக்கள் இருவருக்கும் சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள் எதுவுமில்லை. இரண்டே ரொமான்ஸ் பாடல்கள். மற்றபடி அண்ணன், தம்பி இருவருக்குமான சின்ன சின்ன மனஸ்தாபங்களை யதார்த்தமாக பிரதிபலித்து காட்சிகளை அமைத்து இருக்கும் இயக்குனருக்கு கை குலுக்கலாம். எந்த கேரக்டரும் ஓவர் ஆக்டிங் செய்யாதது தெலுங்கு சினிமா பார்த்திராத அதிசயம். நெஞ்சை பிழியும் சென்டிமென்ட் வசனங்களை ஓரம்கட்டி இயல்பான படைப்பை தந்துள்ளனர். 

மகேஷ்பாபுவின் ஒன்லைன் காமடிகள் சிறப்பு. ஆனால் கூகிள் நிறுவனத்தில் இவரின் சிரிப்பு சரியில்லை என்று இண்டர்வியூ செய்பவர்கள் கிண்டல் செய்வது அபத்தம். மற்றபடி பெரிய குறைகள் எதுவுமில்லை. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம். சீதம்மா வாசலில் சிரிமல்லி செடி எனும் தலைப்பிற்கும், கதைக்கும் சம்மந்தம் எதுவுமில்லை. பிரகாஷ்ராஜ் வீட்டில் பல ஆண்டுகளாக மல்லிகளை தந்து வரும் புனித செடி என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால் தலைப்பு கவிதை. தெலுங்கு மக்களின் ரசனை இப்படத்தின் வெற்றியிலும், அலெக்சிற்கு வைக்கப்படும் ஆப்பிலும் நிற்கிறது. அநேகமாக இப்படமே வெற்றி வாகை சூடும் என நம்பலாம்.

............................................................................

             

Saturday, January 5, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (05/01/2013)மாயாபஜார்: 

                                                                         Image:madrasbhavan.com             

இந்தியாவின் புகழ்பெற்ற ஜெமினி சர்க்கஸ் கடந்த மாதம் 22 ஆம் தேதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பின்புறம் இருக்கும் SIAA திடலில்  மையம் கொண்டுள்ளது. டிக்கெட் விலை 50 முதல் 250 வரை. நலிந்து வரும் சர்க்கஸ் தொழிலில் மிஞ்சி இருப்பது இவர்கள் போன்ற ஓரிரு க்ரூப் மட்டுமே. விலங்கின ஆர்வலர்களின் போராட்டத்தால் யானை, புலி, சிங்கம் போன்றவற்றின் அணிவகுப்பு இம்முறை இல்லாதது குறைதான். இளைத்துப்போன ஒட்டகங்கள் மட்டுமே சிறப்பு வரவுகள். 

ஆப்ரிக்கன் நடனம், ஆஸ்திரேலிய கிளிகள் மற்றும் வட இந்திய நபர்களின் வித்தைகள் சிறப்பாக இருப்பினும் குறைகள் இல்லாமல் இல்லை. ஜக்லிங் செய்கையில் பந்த தவற விடுதல் போல ஆங்காங்கே 'ஜஸ்ட் மிஸ்'கள். 1951 ஆம் ஆண்டு குஜராத்தில் தனது முதல் ஷோவை தொடங்கி இன்றுவரை தேசம் முழுக்க வலம் வருகிறது இந்த பிரம்மாண்ட குழு. மக்களின் வரவேற்பை பொறுத்து சென்னை நிகழ்ச்சி இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம்.
...............................................................

ஸ்ரீ:
ஸ்பென்சர் பிளாசா  ஃபேஸ்-3 இல் கே.எப்.சி.க்கு எதிரில் உள்ளது ஸ்ரீ மிதாய் எனும் வட நாட்டவர் கடை. நண்பனின் வற்புறுத்தலின் பேரின் பாதாம் பால் சாப்பிட உள்ளே நுழைந்தேன்.  ஃப்ரெஷ் ஆக கிடைக்குமென எதிர்பார்த்தால் ஏற்கனவே பேக் செய்யப்பட பிளாஸ்டிக் டம்ளரில் பாதாம் பாலை கொண்டு வந்து வைத்தார் bhaiயா. விலை 55. ஆனால் ருசியில் குறையில்லை. ஏகப்பட்ட பாதாம் பருப்புகளை பெரிய சைஸில் வெட்டி மிதக்க விட்டிருந்தனர். மற்ற கடைகளில் செய்வது போல பாதாமை அரைத்து பெயருக்கு மிகக்கொஞ்சம் போட்டு ஏமாற்றவில்லை. ஏக் பார் டெஸ்ட் கர்தோனா!!
..................................................................

THE HOBBIT:        
தானைத்தலைவன் பீட்டர் ஜாக்சனின் இப்படத்தை சத்யம் தியேட்டர் பெரிய திரையில் பார்த்தேன். உலகிலேயே HFR(high frame rate)  எனும் 3D டெக்னிக்கை நிறுவிய இரண்டாவது தியேட்டர் என விளம்பரம் செய்திருந்தனர். சாதா 3D எபெக்டில் 24 ப்ரேம்ஸ்/செகன்ட் என காட்சிகள் தெரிந்தால் இதில் 48 ஆம். சொன்னது போல துல்லியத்தின் உச்சமாகவே இருந்தது. ஆனால் முந்தைய LOTR அளவிற்கு ஹாப்பிட் மனதை கவரவில்லை. பெரிய பட்ஜெட் ஆங்கில சீரியல் பார்த்த உணர்வு.
..................................................................

சேட்டை: 

                                                                         Image: madrasbhavan.com   

எக்ஸ்ப்ரஸ் அவின்யூவின் மூன்றாம் தளத்தில் உள்ளது பிக்ஸ் 5D. இந்த மினி தியேட்டர் பற்றி முன்பே கேள்விப்பட்டு இருந்தாலும் ஒருமுறை கூட உள்ளே சென்று பார்த்ததில்லை. இம்முறை நாளைய மாப்பிள்ளை பதிவரும், நானும் சென்றே தீர்வது என தீர்மானித்து டிக்கட் எடுத்தோம். 11 நிமிட ஷோவிற்கு டிக்கட் விலை 150. எனது இருக்கையில் மட்டும் சீட் பெல்ட் வேலை செய்யாததால் திகில் கலந்த பேயறைந்த உணர்வுடன் 'பாஸ் சீட் பெல்ட்' என்றதற்கு 'குழந்தைங்களுக்குதான் சீட் பெல்ட்' என்று இமேஜை இத்தாலிக்கு கப்பல் ஏற்றினார்.

பிஸ்கோத்து கிராபிக்ஸில் மொத்தம் இரண்டு மினி படங்கள். திரையில் பனி பெய்தால் நம் தலைக்கு மேலே பஞ்சை தூவுவது, மழைக்கு முன் சீட்டில் இருந்து நீரை பீய்ச்சி அடிப்பது என ஏகத்துக்கும் குதூகலிக்க வைத்தனர். மெகா சைஸ் நண்டு ஒன்று கொடுக்குடன் வரும்போது சீட்டின் இருபுறமும் இருந்து இடுப்பை குத்துகிறது ஒரு குச்சி(!). 'யாரோ என் இடுப்பை கிள்றாங்க' என்று பதறினார் மாப்பிள்ளை. ஒருவழியாக கன்னிப்பையனை கற்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்த பின்பே பெருமூச்சு விட்டேன். 
......................................................................

எதிர்பாராதது: 
க்ரிக்கெட் ரசிகர்கள் பலருக்கு பிடித்த டி.வி. வர்ணனையாளர் டோனி க்ரெய்க் காலமான செய்தி படித்தேன். ஒருநாள் போட்டிகளை வர்ணனை செய்வதில் இவருக்கு நிகர் என்னைப்பொருத்தவரை எவருமில்லை. குறிப்பாக இந்தியாவில் இந்திய அணி ஆடும் போட்டிகளில் அரங்கில் இருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் டோனியின் கம்பீரக்குரல் டி.வி.யில் ஒலித்தால் அதகளம்தான். ஏகத்துக்கும் க்ரிக்கெட் அறிவை முன்னிருத்தாமலும், மொக்கை போடாமலும் சாமான்ய ரசிகனின் மனதில் பதியும் வண்ணம் வர்ணனை செய்த டோனிக்கு குட் பை.
.....................................................................

வெளுத்துக்கட்டு:

                                                                          Image: madrasbhavan.com

எல்.ஐ.சி.பின்புறம் உள்ள வுட்ஸ் சாலையில்(மணிக்கூண்டு அருகே) உள்ளது இந்த அலுவலர்கள் வெளுப்பகம். உங்கள் அலுவலகத்தில் இருக்கும் எதிரிகளை நேக்காக பேசி சோக்காக அழைத்து வாருங்கள். வெகுவாக வெளுக்கலாம்.
...........................................................................

வாய்க்கொழுப்பு:
டெல்லி கற்பழிப்பு சம்பவத்திற்கு பிறகு பெண்கள் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாள்தோறும் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர் அந்தக்கால அரசியல்வாதிகள். 'குட்டைப்பாவாடை போடக்கூடாது', 'நகரங்களை விட கிராமங்களில் கற்பழிப்புகள் குறைவு', 'பெண்கள் கற்புடன் இருக்க எண்ணினால் லக்ஷ்மண  ரேகையை தாண்டக்கூடாது. இல்லாவிடில் ராவணன் வரத்தான் செய்வான்'. இப்படி இன்னும் பல. ஒருவர் கூட ஆண்கள் எல்லை மீறக்கூடாது என்று சொல்லவில்லை. அட்வைஸ் மழை பொழிவதில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ் ட்ரவுசர் தா(த்)தாக்களும், பா.ஜ.க 'பெரிய'வர்களும்தான். ஆ வூனா காவிக்கொடிய தூக்கிட்டு ஆரவாரமா கெளம்பிடறாங்க தம்பி.  
...........................................................................

கண்ணா (40) லட்டு தின்ன ஆசையா?
மேடமின் முக்கியமான பலம் மற்றும் பலவீனங்களில் ஒன்று எந்த ஒரு விஷயத்திலும் தனது நிலைப்பாட்டை சட்டு புட்டென அறிவித்து விடுவது. பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க விறுவிறுவென நடவடிக்கை எடுத்து இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதே சமயம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி தனித்தே நிற்கும் என்று தடாலடியாக அறிவித்ததில் பீதியாகி நிற்கின்றன இரண்டாம் மட்ட கட்சிகள். மேடம் சோலோவாக போலோ சாப்பிட முடிவு செய்து விட்டார். ஆனால் ஒரு கவளம் சோற்றை பிசைந்து அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் எத்தனை பருக்கைகளை பகிர்வது எனும் டென்ஷன் கருணாநிதிக்கு. ராமதாஸ், வைகோ போன்றவர்கள் டப்பா எப்படி டான்ஸ் ஆடப்போகிறதோ?

அப்பறம் காங்கிரஸ், பா.ஜ.க.கதி??? இதுதான்....

'எலே நீங்க உக்காந்து இருக்கீகளா? எந்திரிச்சி நில்லுங்க பாப்போம்'

 'ஐயோ..... நாங்க நிக்கறோம். நிக்கறோம்'
.........................................................................

புதிய மன்னர்கள்: 
லோ பட்ஜெட்/புதுவரவுகள் சென்ற ஆண்டு கலக்கியதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் அது போன்ற படங்களின் வரவு அதிகம் இருக்குமென தாராள மாக நம்பலாம். அவ்வரிசையில் தற்போதைக்கு பரபரப்பை கிளப்பி இருக்கும் ட்ரெயிலர்தான் 'யாருடா மகேஷ்':  


....................................................................


Tuesday, January 1, 2013

திரைவிரு(ந்)து - 2012 ஹிந்தி சினிமா                                               
சென்ற ஆண்டு வெளியான ஒட்டுமொத்த ஹிந்தி திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவை என்று நான்கை(ஐந்தை) சொல்லலாம்: ஷாங்காய், விக்கி டோனர், பான் சிங் தோமர் மற்றும் கேங்ஸ் ஆப் வாஸேபூர் 1 & 2. வித்யாபாலன் நடிப்பில் வந்த கஹானி மற்றும் ஸ்ரீதேவியின் அசத்தல் கம்பேக் படமான இங்லீஷ் விங்லீஷ் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.  மூன்று மெகா கான்களின் ஜப் தக் ஹை ஜான், தலாஷ், தபங் - 2 ஆகியவை சுத்தம். தலாஷ் க்ளைமாக்ஸ் அமீர்கான் படத்தில் எதிர்பாராத சொதப்பல். ரன்பீரின் பர்பி ஒரு இனிமையான அனுபவம். தமிழில் பார்த்த சூர ரம்பம் தாண்டவம் என்றால் ஹிந்தியில் சுனில் ஷெட்டி நடித்த 'மேரே தோஸ்த் பிக்சர் அபி பாக்கி ஹை'. ஆளு நடிப்பு எத்தனை கிலோ என்று கேட்பார் போல.

பிடித்த நடிகர்: 
மனோஜ் பாஜ்பாய் 
கேங்ஸ் ஆப் வாஸேபூர் - 1

                                                           
பாலிவுட்டில் எனது அபிமான நடிகர்கள் என்றால் நஸ்ருதீன் ஷா, நானா படேகர், இர்பான் கான் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோரை சொல்லலாம். முன்னவர் இருவரும் 2012 இல் கண்ணில் படாமல் இருக்க, அடுத்த இருவரும் வழக்கம்போல் வெளுத்து வாங்கினர். பிடித்த நடிகர் ரேஸில் இர்பானை மனோஜ் சில அடிகள் முந்திவிட்டார். கேங்ஸ் ஆப் வாஸேபூர் தலைவரின் திறமைக்கு சரியான தீனி. ரவுடியாக துவங்கி கேங் லீடராக உயர்ந்து அசால்ட் செய்வதாகட்டும் மறுபக்கம் மனைவிகளிடம் காட்டும் கோபம், கெஞ்சலாகட்டும்.. வாஜி வா!!

பிடித்த நடிகை என்று சொல்லுமளவிற்கு எவரும் மனதை தொடவில்லை. வித்யாபாலன், ஸ்ரீதேவி நிறைவான நடிப்பை தந்திருப்பினும் நெடுநாட்கள் நெஞ்சில் நிற்கும் பெர்பாமன்ஸ் இல்லை என்பது எனது கருத்து.

பிடித்த திரைப்படம்: 
விக்கி டோனர் 

இந்திய சினிமாவில் வெளிவந்த வித்யாசமான படைப்புகளில் ஒன்று. விந்தணு தானத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டிருக்கும் கதை. பிரச்சார நெடி பெரிதாக இன்றி நகைச்சுவை பொங்க இயக்கி இருக்கிறார் சூஜித். விக்கியாக வரும் ஹீரோ ஆயுஷ்மான்(முதல் படமிது) மற்றும் டாக்டராக நடித்த அனுபவம் வாய்ந்த நடிகர் அன்னு கபூரின் நடிப்பு பிரமாதம். 

பிடித்த இயக்குனர்:    
அனுராக் காஷ்யப் 
கேங்ஸ் ஆப் வாஸேபூர் 1 & 2

இரண்டு பாகங்களாக வெளிவந்த கேங்ஸ் ஆப் வாஸேபூர் படங்களின் இயக்குனர். நம்மூர் சசிகுமார், அமீர் மற்றும் பாலா ஆகியோரின் தீவிர ரசிகர். சுப்ரமணிபுரத்தின் upgraded version என்று கூட இவ்விரு படங்களை சொல்லலாம். வாஸேபூர் மற்றும் தன்பத் ஆகிய ஊர்களில் பல்லாண்டுகளாக பதான், முஸ்லிம் மற்றும் குரேசி சமூகத்தை சேர்ந்த குழுக்களிடையே நடக்கும் பழிவாங்கல்களை அங்குலம் அங்குலமாக அலசி திரையில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் அனுராக். குறிப்பாக முதல் பாகத்தில் கதை சொல்லும் விதத்தில் தெரிவது இவருடைய கடும் உழைப்பு. இன்சப்சனுக்கு பிறகு ஆவலுடன் எந்த ஒரு சினிமாவையும் திரும்ப திரும்ப பார்த்ததில்லை. விதிவிலக்கு கேங்ஸ் ஆப் வாஸேபூர். க்யா பிக்சர் பாய். நான்கு முறை பார்த்தாகிவிட்டது. மீண்டும் பலமுறை பார்க்கப்போவதில் யாதொரு ஐயமுமில்லை. அபாரமான மேக்கிங். அனுராக் ராக்கிங்!!

பிடித்த இசையமைப்பாளர்(கள்):
ஸ்னேஹா கன்வால்கர் & பியுஷ் மிஸ்ரா 
கேங்ஸ் ஆப் வாஸேபூர் 1

முழுக்க முழுக்க அரசியல், துப்பாக்கி மற்றும் ரத்தம் சார்ந்த களத்தை தேர்ந்தெடுத்த இயக்குனர் அனுராக் இரண்டு பாகத்திலும் சேர்த்து மொத்தம் 27 பாடல்களை வைத்ததை ரசனை கலந்த தில் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக முதல் பாகத்தில் வரும் 14 பாடல்களும் அசத்தல். கதையின் போக்கிற்கு இடையூறு இன்றி உறுதுணையாக அமையும் வண்ணம் பாடல் காட்சிகளை இடம்பெறச்செய்தது அருமை. பெண் இசையமைப்பாளர் ஸ்னேஹா மற்றும் பியுஷ் இருவருக்கும் தங்கத்தால் ஆன ம்யூசிக்கல் சேரை வெகுமானமாக அளித்தாலும் பத்தாது. பின்னணி இசையமைத்த தம்பி ஜி.வி.பிரகாஷுக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட்.

பிடித்த பாடலாசிரியர்:
திபாகர் பேனர்ஜி - 'பாரத் மாதா கி'
ஷாங்காய்  

படத்தின் இயக்குனரே எழுதிய பாடல். திரைக்கு வரும் முன்பு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதன் பின் 'நாட்டு நடப்பைத்தானே எழுதி இருக்கிறார். தடையில்லை' என்று நீதிமன்ற ஆதரவுடன் வெளியாகி பட்டையை கிளப்பிய ஹிட். டெங்கு, மலேரியா நோய்களுடன் ரவுடிகள், அரசியல்வாதிகளாலும் சேர்த்து பீடிக்கப்பட்டிருக்கும் தேசத்தின் நிலையை பட்டவர்த்தனமாக போட்டுடைத்த துள்ளல் கீதம். ஏகப்பட்ட முறை கேட்கவைத்த பாடல் வரிகள். திபாகருக்கு வைக்க வேண்டும் ஒரு பேனர் ஜீ!! ஷாங்காய்:
இதுவரை நான் பார்த்த சிறந்த பொலிடிக்கல் த்ரில்லர் என்று ஷாங்காய் படத்தை சொல்லலாம். பாரத் நகர் எனும் பகுதியில் வாழும் குடிசைவாழ் மக்களை துரத்திவிட்டு பிசினெஸ் பார்க் கட்ட விளைகிறது அதிகார வர்க்கம். அதை தட்டிக்கேட்கும் பேராசியர் கொல்லப்படுகிறார். கொலைக்கான காரணத்தை விசாரிக்க வரும் அரசு அதிகாரி(அப்பே தியோல்) சந்திக்கும் பிரச்னைகளை யதார்த்தமாக  சொல்கிறது இந்த சினிமா. காதல், சண்டைக்காட்சிகள், ஹீரோயிசம் போன்ற மசாலாக்கலவைகள் எதுவுமின்றி  விசாரணையை மட்டுமே முன்னிறுத்தி இயக்கப்பட்டிருக்கிறது இந்த ஷாங்காய்.     

பான் சிங் தோமர்: 
1950 மற்றும் 60 களில் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சேம்பியன் ஆக இருந்த பான் சிங் எப்படி சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன் ஆனார் எனும் உண்மைக்கதையை திரைக்கு கொண்டுவந்துள்ளனர். மகா நடிகன் இர்பான் கானின் மற்றுமொரு மைல்கல் பெர்பாமன்சில் வந்திருக்கும் படைப்பு. சிறந்த சினிமாக்களை தேடிப்பிடித்து பார்க்கும் ரசிகர்களுக்கு என்னுடைய பரிந்துரையாக இப்படத்தை கூறுவதில் பெருமை அடைகிறேன்.

2013 இல் இதே போன்ற இன்னொரு முக்கியமான சினிமா வெளிவர உள்ளது. இந்தியாவின் முன்னணி ஓட்டப்பந்தய வீரராக அந்தக்காலத்தில் ஒளிர்ந்த மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்று படமான 'பாக் மில்கா பாக்'. மில்காவாக நடிக்க இருப்பவர் இயக்குனர்-நடிகர் பரான் அக்தர். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
...........................................................


முந்தைய பதிவு:
திரை விரு(ந்)து - 2012 மலையாள சினிமா 

..................................................
திரைவிரு(ந்)து 2012 - மலையாள சினிமா                                                                        Ayalum Njanum Thammil

யதார்த்த படைப்புகளால் ஒரு காலத்தில் பல்வேறு தேசிய விருதுகளை வாங்கிக்குவித்த மலையாள சினிமாக்கள் கடந்த சில ஆண்டுகளாக கடும் சரிவை சந்திக்க முக்கிய காரணங்கள் (ஷகிலாவைத்தாண்டி) என்னவென்று பார்த்தால் மசாலாப்படங்களை பார்க்க விரும்பிய கேரளா இளைஞர்களின் மனோபாவம் மற்றும் மம்முட்டி, மோகன்லால், திலீப், பிருத்விராஜ் ஏட்டன்களின் படங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதால் வந்த சலிப்பு எனும் இருபெரும் விஷயங்களை கூறலாம். விஜய் போன்ற தமிழ் மாஸ் நடிகர்களின் சினிமாக்கள் டப்பிங் இன்றியே அங்கு சக்கை போடு போட்டதால் அதிர்ந்து போன ஏட்டன்கள் திடுதிப்பென மசாலா ஹீரோக்களாக அரிதாரம் பூச முயன்றனர். அந்த பாச்சாவும் பலிக்காததால் நொந்து போயினர் அவர்கள்.

2012 ஆம் ஆண்டில் லால் ஏட்டனை விட தொடர்  தோல்வியை சந்தித்து புஸ்வானம் ஆனார் மம்முக்கா. ராஜபாட்டையை காட்டிலும் நான் பார்த்த சொத்தை படமென்றால் அது மம்முட்டி நடித்த 'கோப்ரா' தான். மோகன்லால் நடித்ததில் ரன் பேபி ரன் மற்றும் ஒரு மாத்ருபூமி கதா போன்றவை இவ்வாண்டு என்னை கவர்ந்தவை. கிராண்ட் மாஸ்டர், காசனோவா போன்றவை சுமார் ரகம்தான். மம்முவை காட்டிலும் இளமையாக இருப்பதால் லால் இன்னும் சில ஆண்டுகள் வண்டியை ஓட்டுவார் என எதிர்பார்க்கலாம். ப்ரித்விராஜ் நடிப்பில் 'மாஸ்டர்ஸ்' சுமார். திலீப் நடித்த 'மை பாஸ்' சுவாரஸ்ய துவக்கத்தை தந்தாலும் போகப்போக அனைவரும் வசனம் பேசியே கொன்றதால் அலுப்பை தந்தது.

பாசில் மகன் பஹத் நடித்த டயமண்ட் நெக்லஸ், 22 Female Kottayam, மம்முட்டி மகன் நடித்த உஸ்தாத் ஹோட்டல் மற்றும் ஸ்ரீனிவாசனின் வாரிசு வினீத் இயக்கிய தட்டத்தின் மறயத்து போன்றவை மலையாள சினிமாவின்  எதிர்காலத்தின் மீது நம்பிக்கை தந்த படைப்புகள் என்றே சொல்லலாம். குறிப்பாக 22 Female Kottayam படத்தின் க்ளைமாக்ஸ் அதிர வைத்தது. இந்த இளைஞர்களின் படங்கள் சிறந்த தொழில்நுட்பத்துடன் வெளிவந்தது கவனிக்கத்தக்கது. குறிப்பாக ஒளிப்பதிவு. திலீப்பின் 'மை பாஸ்' மற்றும் மம்மு, லால் படங்களில் ஒளிப்பதிவு என்கிற பெயரில் தேய்ந்த ப்ரிண்ட் காட்சி அமைப்புகளால் ரசிகனை கொலையால் கொன்று வருவது என்று முடியும் எனத்தெரியவில்லை. லோ பட்ஜெட் என்றாலும் அதற்காக இப்படியா? 


இவ்வாண்டு நான் பார்த்த படங்களில் சிறந்த படமெனில் அது ப்ரித்வி நடித்த 'அயாளும் ஞானும் தம்மில்'தான். பெற்றோரின் அனுமதி இன்றி நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தால் ஏற்படும் விபரீதத்தை யதார்த்தமாக பிரதிபலித்த படைப்பு. பிடித்த பாடல் கண்டிப்பாக தட்டத்தின் மறையத்துவில் இடம்பெற்ற 'முத்துச்சிப்பி'யை சொல்லலாம். 2012 இல் வெகுவாக சிலாகிக்கும் வண்ணம் எந்த ஒரு நடிகரும், நடிகையும் மனதில் நிற்கவில்லை.                                                            

                             

சென்னையில் பொதுவாக பி.வி.ஆர். தியேட்டர் மட்டுமே நிறைய மலையாள படங்களை திரையிட்டு வருகிறது. சத்யம் குறிப்பிட்ட சில படங்களை அதுவும் இரவுக்காட்சியை மட்டுமே ஒதுக்கி வருகிறது. உஸ்தாத் ஹோட்டல் போன்ற மிகக்குறுகிய எண்ணிக்கையிலான படைப்புகள் மட்டும் இங்கு இரண்டு வாரங்கள் தாக்கு பிடிக்கின்றன. நம்மூருக்கு பவர் ஸ்டார் என்றால் அவருக்கு இணையாக கேரளத்தில் பட்டையை கிளப்புபவர் சந்தோஷ் பண்டிட். தலைவர் நடித்த 'சூப்பர் ஸ்டார் சந்தோஷ் பண்டிட்' இவ்வாண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் இக்காவியம் சென்னையில் வெளிவராதது எம் போன்ற உலக சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியதை மறுப்பதற்கில்லை. டி.ஆர்.போல நடிப்பு, வசனம், சண்டை, இயக்கம் என பலதுறை வித்தகரான இவர் காதல் ரசம் சொட்ட நடித்த பாடல் உங்கள் கண்களுக்கு விருந்தாக. திரை உலகம் இதுவரை கண்டிராத நடன அசைவுகள். அட அட!! ஜெய் சந்தோஷ்!!.................................................................
     
                                          
Related Posts Plugin for WordPress, Blogger...