முந்தைய பதிவு: திரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள்
தொடர்ச்சி......
பிடித்த ஒளிப்பதிவாளர்- பாலாஜி ரங்கா: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
சென்னை மாநகரின் பின்னிரவை சொந்த ஊர் மக்களுக்கே புது வெளிச்சம் போட்டுக் காட்டிய வித்தகர். இருளும், இருள் சார்ந்த தெருக்களையும் மணிக்கணக்கில் தோட்டா சத்தங்களினூடே சுற்றிக்காட்டியது பாலாஜியின் ப்ளாக் மேஜிக்.
சண்டைப்பயிற்சி - ஜாய்கா டீம்(பேங்காக்): விஸ்வரூபம்
'யாரென்று புரிகிறதா? நாங்கள் தீயென்று தெரிகிறதா' வரிகள் இவர்களுக்கே அதிகம் பொருந்தும். க்ளைமாக்ஸ் தவிர்த்து மற்ற சண்டைக்காட்சிகளில் கமலை விஸ்வரூபம் எடுக்க வைத்த பெருமைக்கு சொந்தக்காரர்கள்.
காட்சி(வசனமின்றி) - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
காட்சி(வசனமின்றி) - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
வார்த்தைகள் தேவையில்லை. மேலுள்ள புகைப்படமே போதுமென்று நினைக்கிறேன். வாட் அ சீன் மிஷ்கின் (ஐயா)!!
காட்சி(வசனத்துடன்) - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
கல்லறையில் சிறுமிக்கு மிஷ்கின் கதை சொல்லும் காட்சி. ஆயிரக்கணக்கான ப்ளாஷ்பேக்குகள் சொன்ன தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு தனி ரகம். ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் 'அபாரம்'. இதுபோக இன்னொரு காட்சியும் மனதில் நின்றது. ஸ்ரீக்கு வக்காலத்து வாங்க மருத்துவர் ஒருவர் போலீஸ் உயரதிகாரியின் அறையில் இருக்கும்போது ஷாஜி பேசும் எக்ஸ்ப்ரஸ் வேக வசனம். அருமை. ஹாட்ஸ் ஆஃப் மிஷ்கின்!!
ஜூனியர் நட்சத்திரம் - ப்ரித்விராஜ்: ஹரிதாஸ்.
'தங்க மீன்கள்' சாதனா, 'தலைமுறைகள்' கார்த்திக், 'விடியும் முன்' மாளவிகா போன்ற சுட்டிகள் போட்டியில் இருந்தாலும் ஆடிஸத்தால் பாதிக்கப்பட்ட கேரக்டரில் மனதை உலுக்கிய உன்னத நடிகன் இந்த ப்ரித்விராஜ்.
நெகடிவ் கேரக்டர் - யோக் ஜபீ: சூது கவ்வும்.
'விஸ்வரூபம்' ராகுல் போஸ், 'உதயம் NH4 ' கே.கே. மேனன், 'மதயானைக்கூட்டம்' வேல ராமமூர்த்தி என சத்தம் போடாமல் வன்மம் காட்டிய சிறந்த வில்லன்களைத்தாண்டி வாய் திறக்காமலே பேச வைத்தவர் 'சூது கவ்வும்' பிரம்மாவாக முறைத்த யோக் ஜபீ!!
துணை நடிகை - விஜி: மதயானைக்கூட்டம்
சென்ற வருடம் 'ஆரோகணம்' மூலம் முத்திரை பதித்த விஜிக்கு இம்முறை மீண்டும் ஒரு நல்ல கேரக்டரில் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு. சக்களத்தியிடம் வெறுப்பு, அண்ணன் மீதான அன்பு என மதயானைக்கூடட்டத்தில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
துணை நடிகர் - ஸ்ரீ: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
ஓநாயும்,ஆட்டுக்குட்டியும் படத்தில் கதை நாயகன் மிஷ்கின் என்றாலும் கிட்டத்தட்ட அதற்கு சமமான ஸ்கோப்பை ஸ்ரீக்கு தந்த லோன் உல்ஃபை பாராட்டியே ஆக வேண்டும். ஓநாயிடம் சிக்கிய ஆட்டுக்குட்டியாக மிரண்டு மிரட்டல் பெர்பாமன்சை தந்த இளைஞன். மதயானைக்கூட்டத்தில் மது போதையில் மிதக்கும் கேரக்டரில் அசத்திய கலையரசன் துணை நடிகருக்கான ரேஸில் க்ளோஸ் ரன்னர் அப்.
நடிகை - பார்வதி: மரியான்
விலைமாதாக பூஜா(விடியும் முன்), மென்மையான காதலியாக த்ரிஷா(என்றென்றும் புன்னகை), வஞ்சகம் செய்த காதலன் குடும்பத்தை எதிர்த்த பெண்ணாக மனிஷா(ஆதலால் காதல் செய்வீர்) ஆகியோர் சிறந்த நடிகைகளாக நங்கூரம் பாய்ச்சி நிற்க, வெற்றிக்கொடி நாட்டியதேன்னவோ பார்வதிதான். 'பூ' ஒன்று கடலோர புயலானது மரியானில். உறுதியாக காதற்கொடியை பற்றி ரசிகர்கள் மனதில் தீயாய் சுடர்விட்ட பனிமலர்.
நடிகர் - கமல் ஹாசன்: விஸ்வரூபம்
தனுஷ்(மரியான்), கிஷோர்(வனயுத்தம், ஹரிதாஸ்), விஜய சேதுபதி(சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா) என சரியான போட்டிதான் இவ்வருடம். கூடவே 'பரதேசி' அதர்வாவும் ஆட்டத்தில் சேர்ந்து கொள்ள பிரயத்தனம் செய்தார். ஆனால் என்ன ரூபம் எடுப்பாரென்று எவருக்கும் தெரியாமல் சொன்ன ரூபம் மாற்றி விஸ்வரூபம் எடுத்த கமல் ஹாசன்...யூ ஹாவ் டன் இட் அகைன்!!
இயக்குனர் - சுசீந்தரன்: ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு.
'பரதேசி' மூலம் பிரிட்டிஷ் காலத்தில் அடிமைப்பட்ட முன்னோர்களின் வலியை சொன்னார் பாலா. ஆனால் இடைவேளைக்கு சற்று முன்பு வரை மைய கதைக்குள் நுழையாமல் வேதிகாவின் சேட்டையை புகுத்தி தலை சொறிய வைத்தார். 'ஹரிதாஸ்' மூலம் உருப்படியான தமிழ் சினிமா ஒன்றை தந்தவர் குமாரவேலன். ஸ்போர்ட்ஸ் படங்களுக்கே உரித்தான 'உன்னால் முடியும்' டெம்ப்ளேட்டை கையில் எடுத்தாலும் முடிவையும் வழக்கமான ஸ்போர்ட்ஸ் சினிமா பாணியில் தந்தது சற்று உறுத்தியது.
இவர்களை விட சுசீந்தரனை பிடிக்க சில காரணங்கள் உண்டு. ராஜபாட்டை எனும் சூர மொக்கையை எடுத்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டது இவர் மீதான மதிப்பை கூட்டியது. நினைத்திருந்தால் அடுத்ததாக பாண்டிய நாடு போன்ற பக்கா வணிகப்படத்தை எடுத்திருக்கலாம். ஆனால் 'ஆதலால் காதல் செய்வீர்' எனும் யதார்த்த காதல் படத்தை இயக்கினார். இப்படத்திற்கு கமர்சியல் வெற்றி என்பது பெரிய அளவில் சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தும் தரமான இயக்குனர்கள் பட்டியலில் தன் பெயரை நிலை நிறுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
அதற்கடுத்து தீபாவளி பந்தயத்தில் அமைதியாக கலந்து கொண்டு அனாசயமாக வென்றது பாண்டிய நாடு. ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான களங்களில் பயணித்து க்ளாஸ் மற்றும் மாஸ் படங்களை எடுக்கும் வெகு சொற்பமான இயக்குனர்கள் வரிசையில் சுசீந்தரன் இப்போதைக்கு முன்னணியில்!!
பிடித்த திரைப்படம் - சூது கவ்வும்
பரதேசி, ஹரிதாஸ், ஆதலால் காதல் செய்வீர் போன்றவை 2013 ஆம் ஆண்டின் சிறந்த படங்களுக்கான தகுதியை கொண்டவை என்பது என் கருத்து. முதல் இரண்டு படங்களில் குறைகளாக கருதுவதை மேலே சுட்டிக்காட்டி உள்ளேன். ஆதலால் காதல் செய்வீர் இக்கால இளைய சமூகத்திற்கு குறிப்பாக யுவதிகளுக்கான எச்சரிக்கை மணி அடித்த சித்திரம். அதே நேரத்தில் போதுமான யதார்த்த நிகழ்வுகளை தாங்கி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் வெளியான சூது கவ்வும்... மனதை கவ்வி விட்டது.
FIND OF THE YEAR - நலன் குமாரசாமி: சூது கவ்வும்
பல்வேறு துறைகளை உள்ளடக்கிய சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு நபர் தமது முதல் முயற்சி வாயிலாக நம்மை ஆச்சர்யப்படுத்த தவறுவதில்லை. சென்ற ஆண்டு 'பீட்சா' கார்த்திக் சுப்பராஜ் என்றால் இம்முறை சந்தேகமின்றி நலன் தான். பின்னணி இசைக்காக எப்படி இரண்டாம் முறை ஓநாயும், ஆட்டுக்குட்டியும் படத்தை பார்க்க தோன்றியதோ அதுபோல சுவாரஸ்யமான திரைக்கதை, செதுக்கப்பட்ட கேரக்டர்களின் நடிப்பு, ஜிகர்தண்டா பாடல்கள் போன்ற காரணங்களுக்காக மறுமுறை பார்த்த படம் சூது கவ்வும். பீட்சாவிற்கு பிறகு எகிறி அடித்தது சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. இவ்வனைத்திற்கும் பின்புலமாக இருந்த நலன்... அடுத்த படத்திற்கு வீ ஆர் வைட்டிங்!!
..........................................................................
வேற்று மொழியையும் சேர்த்து 2013 இல் எனக்கு பிடித்த திரைப்படம் மற்றும் சில குறிப்பிடத்தக்க மாற்றுமொழி படங்கள் பற்றிய பார்வையுடன் அடுத்து சந்திக்கிறேன்.
வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!!
..........................................................................
தொடர்புடைய பதிவுகள்:
திரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள்
திரை விரு(ந்)து 2013 - ஹிந்தி படங்கள்
திரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள் - 1
திரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள்
திரை விரு(ந்)து 2013 - ஹிந்தி படங்கள்
திரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள் - 1