ஹிந்தி சினிமாவில் ஏகப்பட்ட மெகா ஸ்டார்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நடிகரின் படத்தை தொடர்ந்து பார்க்கும் அளவிற்கு எனக்கு ஆவல் எழுந்ததே இல்லை. ஷாருக்கானும் இதில் அடக்கம். யதார்த்தமான புலன் விசாரணை படத்தை ஆமிர் கான் தருவார் என்று எண்ணியே தியேட்டருக்குள் நுழைந்தேன்/தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆமிர் நடித்த அல்லது தயாரித்த படங்களை விடாமல் பார்த்து வந்ததற்கு தலாஷ் மூலம் திருஷ்டி கழிக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை.
பிரபல இளம் நடிகர் ஒருவர் விபத்தில் மரணம் அடைகிறார். இருள் சூழ்ந்த நேரத்தில் அவர் பயணம் செய்யும் கார் ஒன்று திடீரென சீறிப்பாய்ந்து கடலில் விழுகிறது. அதை விசாரிக்க வரும் காவலதிகாரிதான் ஆமிர். முதலில் பெரிய துப்பு எதுவும் கிடைக்காமல் தடுமாறுகிறது அவர் டீம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சந்தேகிக்கும் நபர்கள் ஒவ்வொருவரும் போலீஸ் வலையில் விழுகிறார்கள். அதே நேரத்தில் தனது மகனை இழந்த சோகத்தையும் நெஞ்சில் சுமந்தவாறே மன நிம்மதியின்றி தவிக்கிறார். கால் கேர்ள் ஒருத்தியின் உதவியால் தலாஷ்(தேடுதல்) படலம் சூடுபிடிக்கிறது. இறுதியில் ஏற்படும் 'திகில்' திருப்பத்தால் விசாரணை என்ன ஆனது என்பதே கதை.
போலீஸாக நாயகன் நடிப்பு வழக்கம்போல் க்ளாஸ். புடைப்பாக இருக்கும் காது மட்டும் சற்றே காமிக் உணர்வை தருகிறது. 'நிஜ வாழ்வில் நீச்சல் தெரியாத நான் இந்தப்படத்திற்காக அதை கற்றுக்கொண்டேன்' என்றார் இவர். ஒரு சில முறை நீரில் மிதந்தாலும் நான்கடி கூட ஸ்விம் செய்யவில்லை மனிதர். மகனை இழந்து வாடும் இவரது மனைவி ராணி முகர்ஜி 'என் மகன் இன்னும் இருக்கிறான் எனும் நம்பிக்கையே என் வாழ்வை நகர்த்துகிறது. அந்த எண்ணத்திற்கு ஏன் தடைபோடுகிறீர்கள்' என்று ரோட்டில் கணவனை சாடும் காட்சியில் வெளுத்து கட்டுகிறார். கால் கேர்ள் ஆக கரீனா கபூர். கேரக்டருக்கு தேவையான நடிப்பை(!) விரசமின்றி வெளிப்படுத்தி உள்ளார். விபத்தை பார்த்த பிளாட்பாரம் வாசி ஒருவர் விசாரணையின்போது பேசும் வசனம் தூள். 'பிங்கிக்கு இப்படி ஒரு விபத்து நடக்கும்னு முன்னமே தெரியும் சார்' என்று அவர் சொல்ல 'எப்படி? யார் அந்த பிங்கி' என புருவத்தை உயர்த்துகிறார் ஹீரோ. 'இதுதான் அந்த பிங்கி' என தெருநாயை அந்நபர் கைகாட்டும் சீன் ரகளை.
ஒருபக்கம் ஹீரோவின் குடும்ப பிரச்சினை மறுபக்கம் விசாரணை என்று யதார்த்தம் கலந்த பரபரப்புடன்தான் 90% கிணற்றை தாண்டுகிறது இப்படம். ஆனால் எதிர்பாராத விதமாக க்ளைமாக்சில் செல்ப் கோல் அடித்து ரசிகர்களை ஏமாற்றுகிறது தலாஷ் அணி. அந்த ட்விஸ்டை படம் பார்க்கும் ரசிகர்கள் சொல்ல வேண்டாம் என்று ஹீரோ வேறு சொல்லிவிட்டார். இப்பேற்பட்ட புஸ்வான ட்விஸ்டை வெளில சொல்லிட்டாலும்...!! ஷாருக், ஆமிர் இருவரின் படங்களும் அடுத்தடுத்து சொதப்பிவிட்டன. இறுதியாக இன்னும் சில தினங்களில் வெளிவரப்போகும் சல்மானின் 'தபங் - 2' ஆவது சொல்லி அடிக்குமா? வைட் கரேங்கே ஹம்!!
...........................................................................
புதிய இயக்குனர்கள் விஜய் சேதுபதியுடன் கரம் கோர்த்தால் அந்தப்படம் கண்டிப்பாக பேசப்படும் என்பதற்கு தென்மேற்கு பருவக்காற்று, சுந்தர பாண்டியன், பீட்சா வரிசையில் மீண்டும் ஒரு சாட்சிதான் இந்த ந.கொ.ப.கா. செப்டம்பரில் ரிலீசுக்கு காத்திருந்து தற்போது வெளியாகி உள்ளது. அப்போது தமிழ்நாட்டில் வெறும் 35 தியேட்டர்களில் ரிலீசாக இருந்து அதன் பின் பொறுமை காத்து நேற்று முதல் 150 தியேட்டர்களில் வைட் ரிலீஸ். இந்த படைப்பின் ஒளிப்பதிவாளர் ப்ரேமின் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கிறது ந.கொ.ப.கா. என்பது முக்கிய செய்தி.
பக்ஸ், சரஸ், பஜ்ஜி, ப்ரேம் அனைவரும் நண்பர்கள். 2007 ஆம் ஆண்டு ப்ரேமின் திருமணம் நடக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு க்ரிக்கெட் ஆட செல்கிறார்கள் நால்வரும். அப்போது பந்தை கேட்ச் செய்ய ப்ரேம் பின் பக்கம் தாவும்போது மூளையில் லேசாக ஏற்படும் காயத்தால் தற்காலிக ஞாபக மறதிக்கு ஆளாகிறான். மறுநாள் திருமண வரவேற்பு. இவனோ மருத்துவமனையில். பிரேமின் குடும்பத்தாருக்கு தெரியாமல் இவ்விபத்தின் ரகசியம் காக்க நண்பர்கள் மூவரும் படும் பாட்டை ஏகப்பட்ட நகைச்சுவை பட்டாசுகள் கொளுத்தி நம்மை மகிழ்வித்து இருக்கிறார்கள்.
'என்ன ஆச்சி? நீதான் அடிச்ச? ' எனும் குட்டி வசனத்தை பலமுறை ரிபீட் செய்தும் போரடிக்காமல் இடைவேளை வரை ஜிவ்வென சீன்களை பறக்க விட்டதற்கே இயக்குனர் பாலாஜிக்கு சபாஷ் போடலாம். இரண்டாம் பாதியில் ரிஷப்ஷனில் நடக்கும் களேபரம் நமக்கு டபுள் ட்ரீட். 'நான் சொன்னா கேப்பியா மாட்டியா?'வின் ஆட்சிதான் இறுதிவரை. ப்ரேமை வைத்துக்கொண்டு திண்டாடும் நண்பர்களாக வரும் பக்ஸ் என்கிற பகவதி(நிஜப்பெயரும் அதே), சரஸ்(விக்னேஸ்வரன்), பஜ்ஜி(ராஜ்குமார்) மூவரும் அருமையான புதுவரவுகள். நண்பர்கள் மூவரும் ஒருவருக்கு ஒருவர் கோர்த்து விடுவது, திருமண நாள் வரை அவர்கள் முகத்தில் தெரியும் படபடப்பு(நமக்கும் சேர்த்து) என சுவாரஸ்ய கலாட்டாக்கள் படம் நெடுக. விஜய சேதுபதிக்கு திருப்பதி லட்டாக அமையும் கதை/கேரக்டர்களே பாதி சுமையை இறக்கி வைப்பதால் மீதியை யதார்த்த நடிப்பால் பேலன்ஸ் செய்து விடுகிறார். லோ பட்ஜெட் படமென்பதாலோ என்னவோ சில சமயம் குறும்படம் பார்க்கும் பீல் வந்து விடுகிறது நமக்கு. அந்தக்குறையை வெகுவாக மறைத்து அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய விட்டிருக்கிறார் இயக்குனர் பாலாஜி.
பிரமாண்ட பட்ஜெட், மாஸ் ஹீரோ, உலகமகா டெக்னீசியன்கள் எல்லாம் கூட்டணி வைத்து 'நாம எடுக்கறதுதான் தலைவா படம்' எனும் இறுமாப்பில் வெளியாகி மண்ணைக்கவ்விய படங்கள் இவ்வாண்டு அதிகம். ஆனால் குறைந்த பட்ஜெட்டில் ரசிகனை மதித்து இதுபோன்ற சுவாரஸ்யமாக படைப்புகளை தந்த புதிய தலைமுறை கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
................................................
7 comments:
Nice crispy two in one review. But Hindi Walas saying the movie is good
சமீபத்தில்தான் பீட்சா பார்த்தேன்..விஜய் சேதுபதி நம்பிக்கை தருகிறார்.
உங்க பதிவுகள் ல நான் ஒரு விஷயம் ரொம்ப நல்லா நோட் பண்ணினேன் நீங்க எழுத்துப் பிழையே விடுறது இல்ல....
ந.கொ.ப.கா சீக்கிரம் பார்க்கணும்
நல்லதொரு பகிர்வு!நன்றி!
நல்ல விமர்சனம். தலாஷ் இங்கே பார்க்க முடியும். மற்ற படம் - கஷ்டம் தான்.
சுருக்கமான நல்ல விமர்சனம்... நன்றி...
தலாஷ் :((
But will see it soon for Amir.
Post a Comment