வருடக்கடைசியில் ஒரு நெஞ்சைப்பிழியும் உலக சினிமாவை பார்த்தே தீருவது என்று நானும், பிலாசபியும் கங்கணம் கட்டிக்கொண்டு இன்று காலை எஸ்கேப் அரங்கினுள் நுழைந்தோம். 'என்னவளே'(மாதவன்), 'ஜூனியர் சீனியர்' (மம்முட்டி) படங்களை இயக்கிய சுரேஷ்தான் கதையின் நாயகன், இசை சிற்பி மற்றும் இயக்குனர். டைட்டிலுக்காக சென்ற முதல் படம் இதுதான். பாக்தாத் திருடனுக்கு பிறகு அருமையான கேட்சிங் டைட்டில் என்றால் சும்மாவா?
உள்ளே நுழைந்ததும் முதல் நான்கு வரிசைகள் மட்டுமே நிரம்பி இருந்தன. 'கண்டிப்பாக நம்மைத்தவிர மற்றவர்கள் எல்லாம் படக்குழுவினருக்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள். காம்ப்ளிமென்ட் டிக்கெட் என்று நினைக்கிறேன்' என்றார் பிலாசபி. தம்பி சொன்னது சரிதான். எம்மை க்ராஸ் செய்து சீட்டில் அமர சென்ற நபர் ஒருவர் பிலாசபியின் நண்பர். அவரைப்பிடித்து 'நீ என்ன இந்த படத்துக்கு? படத்துல வொர்க் பண்ணவங்க உனக்கு தெரிஞ்சவங்களா?' எனக்கேட்க ஆம் என்று தலையாட்டினார் அவர். இயக்குனர் நேற்றே தியேட்டருக்கு வந்து சென்றுவிட்டார் என்று அவர் கூற கோல்டன் சான்ஸை மிஸ் செய்ததை எண்ணி தூக்கத்தில் துக்கத்தில் ஆழ்ந்தோம்.
கதை என்ன? அதாகப்பட்டது ஹீரோவின் அக்கா மகன் பள்ளிக்கு செல்லும்போது காணாமல் போகிறான். குழந்தை கடத்தலில் ஈடுபடும் கும்பல் இதை செய்தது என்பதை துப்பறிந்து அவர்களை துரத்துகிறார் நம்ம ஆளு. நடுவே கொஞ்சம் காதல்(??), காமடி(!!) கலந்து கருத்து சொல்ல கடும் முயற்சி செய்துள்ளனர். டைட்டில் போட ஆரம்பித்ததில் இருந்தே ரகளைதான் போங்கள். இரவொளியில் பாங்காக் நகரை டாப் ஆங்கிளில் காட்டிவிட்டு 'Bangkok Midnight' என்று உணர்த்துவது அடே அடடே. கதையின் நாயகன் சுரேஷ் என்று தமிழில் போட்டுவிட்டு அதன் கீழ் Hero of the Story என்பதற்கு பதில் Story of the Hero என்று போட்ட உசிதசிகாமணி யாரென்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் புதுமையை புகுத்தோ புகுத்தென்று புகுத்தும் விதமாக 'இசை ஆலோசகர்' யுவன் ஷங்கர் என்றும் டைட்டில் போட்டு பிரமிக்க வைத்ததை என் சொல்ல?
படத்தில் ஹீரோவின் பெயர் மலர் மன்னனாம். ஆனால் நைனா உட்பட அனைவரும் அழைப்பது 'கிங்'. 'பிறகெதற்கு 'பாரசீக மன்னன்'?' என்று கேள்வி கேட்டால் வாயில் அடிப்போம். நாயகி ஸ்ருதி இப்போதுதான் போட்ட பொடி தோசை போல ஓரளவுக்கு நன்றாகத்தான் இருக்கிறார். ரமேஷ்கண்ணா, ஆர்த்தி, பாலாஜி ஆகியோர் காமடி என்கிற பெயரில் செம காமடி செய்கிறார்கள். அக்கா மகனுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தர முன்னணி ஐஸ்க்ரீம் பார்லரான பேஸ்கின் & ரோப்பின்ஸ் கடையில் அக்கவுண்ட் வைக்கிறார் ஹீரோ. இந்த கொடுமைய என்னன்னு சொல்ல? எப்படி சொல்ல? லோ பட்ஜெட் படமோ என்று யூகித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை பாங்காக் டூயட் பாடல் உணர்த்தியது.
என்ன இருந்தாலும் குழந்தை கடத்தல் நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது என்பதை சொல்ல முயன்றதற்கு சுரேஷை பாராட்டலாம். குழந்தைகளை திருடி தத்து கொடுத்தல், நரபலி, பிச்சை எடுக்க வைத்தல், உறுப்புகளை திருடுதல் என பல்வேறு செயல்களை எப்படி நாடெங்கும் செய்கிறார்கள் என்பதை காட்டும் காட்சிகள் மட்டும் படத்தின் ப்ளஸ். அதைத்தாண்டி இக்காவியத்தின் அசுர பலம் என்னவெனில் அது சுரேஷின் நடிப்பைத்தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
பரிவு
நட்பு
காதல்
சோகம்
துயரம்
கடுப்பு
கோபம்
கர்வம்
வன்மம்
வெட்கம்
பேரன்பு
வெறுப்பு
பதற்றம்
படபடப்பு
சாத்வீகம்
புல்லரிப்பு
சங்கோஜம்
சமாதானம்
மிதவாதம்
அகம்பாவம்
தீவிரவாதம்
பெருங்கோபம்
புளகாங்கிதம்
அகிம்சை நிலை
ஆழ்நிலை மௌனம்
இப்படி பல்வேறு உணர்வுகளை கலந்த பாத்திர படைப்பிற்கு துளியும் மெனக்கெடாமல் ஒரே மாதிரி ரியாக்சனை தந்து அசத்தோ அசத்தென்று அசத்தி வருட இறுதியில் தமிழ் சினிமா புகழை பிரபஞ்ச லெவலுக்கு உசத்தோ உசத்தென்று உசத்திய சுரேஷ்...நீ நடிகன்யா...!!! நடிகன்யா!!
.......................................................................