சூப்பர் இயக்குனர் ராஜமௌலியின் பம்பர் ஹிட் தெலுங்கு படமான மரியாத ராமண்ணா தான் ஹிந்தியில் சன் ஆப் சர்தார். அஜய் தேவ்கன், சொனாக்ஷி சின்ஹா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ஷாருக்கின் காதல் ரசம் சொட்டும் 'ஜப் தக் ஹை ஜான்' படத்துக்கு போட்டியாக ஒரு தமாசு படத்தை தீபாவளிக்கு பற்ற வைக்க பார்த்து உள்ளனர். தெலுங்கில் ரெட்டி. இங்கே சர்தார். அங்கே ராயல் சீமா. இங்கே பஞ்சாப். டிபன் ரெடி.
சொந்த நிலத்தை விற்க லண்டனில் இருந்து பஞ்சாபிற்கு திரும்புகிறான் ஜஸ்ஸி(தேவ்கன்). ட்ரெயினில் வரும்போது நாயகியை கண்டதும் நட்பு/காதல் லேசாக தொற்றிக்கொள்கிறது.அவளுடைய பிரம்மாண்ட வீட்டில் விருந்தாளியாக செல்கிறான். கட். இப்போது ஒரு ப்ளாஸ்பேக். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பங்காளி வெட்டு குத்தில் தனது சகோதரனை இழக்கிறார் நாயகியின் தந்தை பில்லு(சஞ்சய் தத்). கொன்றது ஜஸ்ஸியின் தந்தை. அவரையும் வெட்டிப்போடுகிறது பில்லுவின் க்ரூப். வாரிசான நாயகன் மட்டும் எஸ்கேப். அவனையும் கொன்று வம்சத்தை அழிக்க சகோதரன் மகன்களுடன் வெறியுடன் காத்திருக்கிறார் பில்லு. தாங்கள் தேடிய ஆள் வீட்டுக்கு வந்த விருந்தாளி என்பதை அறிந்ததும் அவனை கொல்ல ஆயத்தம் ஆகிறார்கள். விருந்தாளியை வீட்டில் வைத்து கொள்வது ஆகாது என்பது பில்லு வீட்டார் மரபு. எனவே ஜஸ்ஸி வீட்டு வாசலை விட்டு வெளியேறும் தருணத்தை எதிர்நோக்கி கத்திகளுடன் காத்திருக்கிறது அடியாட்கள் படை. இதை அறிந்து கொண்ட ஜஸ்ஸி வீட்டுக்குள்ளேயே இருக்க என்னென்ன திட்டங்கள் போடுகிறான் என்பதே கதை.
சர்தார் கெட்டப்பில் நன்றாகத்தான் பொருந்துகிறார் தேவ்கன். படம் துவங்கியது முதல் இறுதி வரை 'சர்தார்'ன்னா தங்கம், சிங்கம் என்று புராணம் பாடியே நம்மை கொல்கிறார். முதல் மற்றும் கடைசி சீனில் ஷோ காட்டிவிட்டு மறைகிறார் சல்மான் கான். மரியாத ராமண்ணாவில் ராஜமௌலியின் மேஜிக் டச் இங்கு ஏகத்துக்கும் மிஸ் ஆகிறது. வில்லன்களை சீரியஸ் ஆட்களாக காண்பித்து நகைச்சுவை இழையோட காட்சிகளை நகர்த்தினார் அவர். இங்கோ வில்லன்கள் ஓவர் காமடி செய்தும், ஹீரோ 100% கிராபிக்ஸ் சண்டைகள் செய்தும் நம்மை கவர முயற்சித்து உள்ளனர். தெலுங்கில் சுனிலிடம் இருக்கும் அப்பாவி முகபாவம் தேவ்கனுக்கு பெரிதாய் கை குடுக்கவில்லை.
தந்தையின் மரணத்திற்கு காரணமானவானின் வாரிசான தேவ்கனை கொல்லும் வரை கூல் ட்ரிங்க், ஐஸ்க்ரீம் சாப்பிட மாட்டோம் என்று மினி வில்லன்கள் சபதம் செய்வது, ஆண்ட்டி ஆன பின்பும் சஞ்சய் தத்தை ஜூஹி சாவ்லா மணம் செய்ய சுற்றிவருவது என பஞ்சாபி மசாலாக்களை தூவி உள்ளனர். இவையெல்லாம் தெலுங்கில் மிஸ். அதுவே அதன் பலம். அவ்வப்போது கிராபிக்ஸில் தேவ்கன் பறந்து அடிப்பது என்னதான் காமடி படம் என்றாலும் மிக செயற்கையாக தெரிகிறது. அதற்கு பதில் கதையில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குனர்.
சொனாக்ஷியுடன் ட்ரெயினில் தேவ்கன் செய்யும் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன. பஞ்சாபி மெட்டில் வரும் பாடல்கள் சுமார். க்ளைமாக்ஸில் வரும் 'போம் போம்' பாடல் மட்டும் துள்ளல். மரியாத ராமண்ணாவில் வரும் என்னேட்லகு, ராயே சலோனி, தெலுகம்மாயி, அம்மாயி என ஒவ்வொரு பாடலும் ரசனையான அனுபவம். பஞ்சாப் சொனாக்ஷியை விட ஆந்திர சலோனி அழகிலும், நடிப்பிலும் முன்னே நிற்கிறார். தந்தையின் இறப்பிற்கு ஹீரோவை பழிவாங்க காத்திருக்கும் ரெட்டி பிரதர்ஸ் நடிப்பும், கெத்தான லுக்கும் தெலுங்கில்தான் டாப். இது போன்ற பல ப்ளஸ்கள் சன் ஆப் சர்தாரில் இல்லாததால் சுமாரான காமடி படமாகிப்போகிறது. ஆந்திர மேஜிக் இங்கு மிஸ் ஆக ஒரே காரணம்தானே இருக்க முடியும். ஆம். அங்கே இயக்கியது தி ஒன் அண்ட் ஒன்லி 'ராஜ' மௌலி ஆயிற்றே!!
............................................................................
4 comments:
சமீபத்தில் தான் மரியாத ராமண்ணா பார்த்தேன்..படம் நன்றாக இருந்தது...ரசிக்க வைத்தது
இந்த படம் கண்ணன் டைரக்ஷன்ல தமிழ்ல வர போகுதே!! அப்போ பார்த்துக்கலாம்...
தமிழில் யார் நடிக்கிறார்கள்...?
// சூப்பர் இயக்குனர் ராஜமௌலியின் பம்பர் ஹிட் தெலுங்கு படமான மரியாத ராமண்ணா தான் ஹிந்தியில் சன் ஆப் சர்தார். அஜய் தேவ்கன், சொனாக்ஷி சின்ஹா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ஷாருக்கின் காதல் ரசம் சொட்டும் 'ஜப் தக் ஹை ஜான்' படத்துக்கு போட்டியாக ஒரு தமாசு படத்தை தீபாவளிக்கு பற்ற வைக்க பார்த்து உள்ளனர். தெலுங்கில் ரெட்டி. இங்கே சர்தார். அங்கே ராயல் சீமா. இங்கே பஞ்சாப். டிபன் ரெடி. //
பளீருன்னு காப்பி பேஸ்ட் ஆகுதய்யா...
Post a Comment