CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, November 8, 2012

க்ரிக்கெட் - ஆள் அவுட்!


                                                               
வருடத்தில் ஒரு முறை வரும் தீபாவளி,ரம்ஜான்,கிறிஸ்த்மஸ் மாதா மாதம் வந்தால்? 'நிறைய லீவு கிடைக்கும்' எனும் பழங்கால பத்திரிகை ஜோக்கை தவிர்த்து விட்டு பாருங்கள். அதிகபட்சம் ஓராண்டு கறைபுரளுமா அவ்வுற்சாகம்? 'இனி ஜென்மத்திற்கு பண்டிகையே வேண்டாம். ஆளை விடுங்கள்' என்றுதான் சொல்லத்தோணும். அதைத்தான் ஜரூராக செய்து கொண்டு இருக்கிறது ட்வென்டி/20. வருடம் முழுக்க இடைவிடாமல் ஆடப்படும் 'இந்த புதுரக விளையாட்டு க்ரிக்கட் மீதான ஆர்வத்தை சிறார் மற்றும் மகளிர் மத்தியில் பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இந்திய விளையாட்டு சரித்திரத்தில் இது ஒரு நவீன புரட்சி/மறுமலர்ச்சி' என்றெல்லாம் சிலாகிக்க காரணங்கள் பல இருக்கலாம். நிதர்சனத்தில் T20 பார்மேட்  உலக க்ரிக்கெட்டிற்கு ஆற்றிய தொண்டுதான் என்ன?   

'இந்த எந்திர யுகத்தில் ஐந்து நாட்கள் எவன் டெஸ்ட் போட்டிகளை அமர்ந்து பார்ப்பான்?'எனும் கேள்வி க்ரிக்கெட் ரசிகர்கள் மனதில் எட்டிப்பார்க்க ஆரம்பித்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு நாள் போட்டிகள் உதயமாகிவிட்டன. இருந்தும் ஒரு ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க ஒரு நாளெனில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடத்த  வேண்டி இருக்கும்? தாங்காது என்று ஒலிம்பிக் நிர்வாகம் க்ரிக்கெட்டை ஒதுக்கியே வைத்தது. இவ்விளையாட்டின் சுவடே படாத தேசங்களில் எல்லாம் கண்காட்சி போட்டிகளை நடத்தி மக்களை கவர என்னென்னவோ செய்து பார்த்தது ஐ.சி.சி. 'நேரத்தை கொள்ளும் ராட்சசன். ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கும் ஆட்டம். எமக்கு வேண்டாம்' என்று அந்நிய நாடுகள் கும்பிடு போட்டன. அச்சமயம் வந்து இறங்கியது ஐ.பி.எல்.

உலகப்புகழ் பெற்ற கால்பந்து லீக் போட்டிகளின் தாக்கத்தாலும், ஐ.சி.எல்.லை துரத்தி அடிக்கும் நோக்கிலும் இந்திய க்ரிக்கெட் போர்ட் கச்சை கட்டிக்கொண்டு களமிறங்கியது. சில மணிநேர ஆட்டம், வண்ணங்கள், வான வேடிக்கைகள், திரை நட்சத்திரங்களின் அணிவகுப்பு, சியர் கேர்ல்ஸ்...என அக்மார்க் மசாலா இருந்தால் நம்மாட்களுக்கு சொல்லவா வேண்டும். 'சகலகலா வல்லவன்' T20 அனைத்து அரங்குகளிலும் அபார வெற்றி கண்டது. அதே சமயம் இந்த விளையாட்டின் நிஜ முகம் கொஞ்சம் கொஞ்சமாக பொலிவிழந்து வருவதை கண்டு க்ரிக்கெட்டின் அரிச்சுவடியை நன்கு தெரிந்து வைத்திருந்த ரசிகர்களும், வல்லுனர்களும் குமுற ஆரம்பித்தனர். பொன் முட்டையிடும் வாத்து வேக வேகமாக அறுக்கப்பட மிஞ்சி இருப்பது சொச்ச முட்டைகளே.

ஒரு சில ஐ.பி.எல்.போட்டிகள் மூலம் நிரந்தரமாக செட்டில் ஆகிவிடலாம் என்று சாமான்ய குடும்பத்தை சேர்ந்த வீரர்கள் அதில் பங்கேற்க துடித்தனர். அனைவருக்கும் நியாயமான முறையில் தேர்வுமுறை பின்பற்றப்பட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. தேசிய க்ரிக்கெட்டில் இடம் பிடிக்கவே குரங்கு பல்டி அடிக்க வேண்டி இருக்கையில் அதைவிட பணத்தை கொட்டித்தரும் ஐ.பி.எல்.லில் சொல்லவா வேண்டும்? 

வணிக க்ரிக்கெட்டில் கொட்டும் பணம் எந்த அளவிற்கு தேசப்பற்றை மறக்க அடித்தது என்பதற்கு ஒரு உதாரணம்: 2010 இல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணி(மகளிர் அணியும்) அனுப்பப்படவில்லை. அத்தேதிகளில் சர்வதேச போட்டிகள் இருப்பதே அதற்கு காரணம் என்று சொன்னது நிர்வாகம். இரண்டாம் நிலை வீரர்ககளை உள்ளடக்கிய அணியையாவது அனுப்பி இருக்கலாம் என்று வல்லுனர்கள் வருத்தம் தெரிவித்தனர். இத்தனைக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன் முறையாக க்ரிக்கட் அனுமதிக்கப்பட்ட வருடமது. ஆசியாவின் மிகப்பெரிய அணியே இல்லாமல் சப்பென முடிந்தது அப்போட்டிகள். 'பணமா? தேசப்பாசமா?' போரில் பணமே வழக்கம்போல் வென்றது.

                                                               

ஒவ்வொரு மேடையிலும் 'இந்திய டி ஷர்ட்டை' போட்டுக்கொண்டு ஆடுவதே பெருமை என்று கூறும் சச்சின் போன்ற கடவுள்கள் எத்தனை முறை ஆசிய விளையாட்டு போட்டிகள் போன்ற போட்டிகளில் பங்கேற்று உள்ளனர்? தேசத்திற்காக பணத்தை உதறி விட்டு புகழ் பெற்ற டேவிஸ் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற லியாண்டர் பெயஸை விட எந்த விதத்திலும் சச்சின் சிறந்த வீரர் இல்லை என்பது சத்தியம்.  2003 ஆண்டு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் சாவின் வாசலுக்கு சென்று மீண்டார் பெயஸ். அதன் பின்பு இன்றுவரை தொடர்கின்றன வெற்றிகள். கேன்சரில் இருந்து மீண்ட யுவராஜ் சிங்கை கொண்டாடும் தேசம் அவரை விட மோசமான நோயை அனுபவித்த மாவீரன் லியாண்டரை எந்த இடத்தில் வைத்துள்ளது?

ஐ.பி.எல்., T20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக்..இது போக பிற தேசங்கள் துவங்கவுள்ள லீக்குகள் என கிட்டத்தட்ட வருடத்தின் அனைத்து நாட்களிலும் இந்தக்குறுவிளையாட்டை எத்தனை நாட்கள் குறுகுறுவென மக்கள் பார்த்து ரசிப்பார்கள்? வெறும் பேட்ஸ்மேனின் சிக்சர்களை மட்டுமே மையமாக கொண்டு ஆடப்படும் இப்போட்டிகளின் மூலம் கபில், அகரம், வார்னே போன்ற சிறந்த பௌலர்கள் உருவாவது சாத்தியமே இல்லை. என்னதான் பார்வர்ட் வீரர்கள் கோல் போட்டு பெயரை தட்டிச்சென்றாலும் டிபன்ஸ் வீரர்கள் வலுவாக இல்லாமல் சிறந்த கால்பந்து அணி உருவாகவே முடியாது. அதுபோல பௌலர்களுக்கு பெரிதாக வாய்ப்பு தரப்படாத T20 அசல் க்ரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு வித்திட்டு கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காமல் எந்த ஒரு வீரனும் க்ரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்க இயலாது. T20 பணத்தை கொட்டலாம். அதில் வானவேடிக்கை காட்டிய வீரர்கள்(கெயில் போன்றோர் விதிவிலக்கு) நீண்ட நாட்கள் மக்கள் மனதில் நிற்கப்போவது  புஸ்வான நிமிடங்களுக்கு மட்டுமே!!
...........................................................................          


                                                      

8 comments:

Unknown said...

மிகவும் சரியான கருத்து!,

IPL – 2012 நாடகத்தை ரிவைண்ட் செய்து பார்த்தாலே பல உண்மைகள் புலப்படும்.

சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு!.

பால கணேஷ் said...

எல்லோரும் வருங்காலத்தில் 15 நிமிடம் புகழ் பெற்றிருப்பார்கள் என்று முன்பொரு முறை சுஜாதா சொன்னார். அப்படி குறுகிய புகழ் போதும். பணமே பெரிது என்ற மனநிலை இன்று தோன்றி தேசப்பற்றைப் பின்தள்ளி விட்டது உண்மை. பளிச்சென்று புரியும்படி உண்மைகளை எழுதியிருக்கிறீர்கள். நன்று.

சீனு said...

//ஐ.பி.எல்., T20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக்..// நான் இவற்றை முதலில் இருந்தே பார்ப்பது இல்லை... ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்த ஆர்வம் இதில் துளியும் இல்லை, இதுவரை ஒரு போட்டி கூட நான் பார்த்தது இல்லை, அதில் நான் பூஜ்யம் ( நான் பூஜ்ய குற்றத்திற்கு ஆளாகி இருக்கிறேன் :-) )

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் சிறப்பான கருத்துக்கள்! டி20 கிரிக்கெட்டை மட்டுமல்ல! பலவற்றை கெடுத்து வருகிறது! நல்லதொரு பகிர்வு!

arasan said...

நல்ல அலசல் .அண்ணே ..
நிச்சயம் இது வீழ்ச்சிக்கு வித்திட்ட ஒரு ஆட்டம் தானே தவிர
வளர்ச்சிக்கு உதவாது ...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முன்னர் இருந்த விறுவிறுப்பு IPL இல் இப்போது இல்லை என்பது உண்மை.வெகு சீக்கிரம் கிரிக்கெட்டை நீர்த்துப் போகச் செய்யும் செயல்கள்தான் இவை.
கபில்தேவின் ICL ஐ திட்டமிட்டு ஒழித்துக் கட்டிய BCCI இடம் கபில்தேவ் மன்னிப்பு கேட்கக் கூடாது என்று ஒரு பதிவு கூட எழுதி இருந்தேன்.ஆனால் அவரோ மன்னிப்பு கேட்டுவிட்டார்
கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா?.
நேரம் இருப்பின் படிக்கவும்

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

அளவுக்கு மீறினால்...?

Related Posts Plugin for WordPress, Blogger...