ஆயிரம் ஸ்டார்கள் தமிழ்த்திரையில் மின்னி மறைந்தாலும் என்றும் நம்பர் 1 சூப்பர் ஸ்டார் என்றால் அது எங்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் மட்டுமே. தல நடித்த ஹரிதாஸ் 1944,1945,1946 என மூன்று தீபாவளிகளை கண்டு மெட்ராஸ் பிராட்வே தியேட்டரில் பின்னி பெடலெடுத்தது உலகறிந்த செய்தி. சம்பவம் நடந்த அந்த கால கட்டத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்களை இசையால் கட்டிப்போட்ட ஹரிதாஸ் பாடல்களை பற்றிய ஒரு பார்வைதான் இந்த பதிவின் நோக்கம்,லட்சியம் மற்றும் கடமை.
மொத்தம் 13 பாடல்கள் மட்டுமே இப்படத்தில் இருப்பது பெருங்குறை. தலைவர் படத்தில் மினிமம் 25 பாட்டுகள் கூடவா இல்லாமல் போக வேண்டும். அந்த மன ரணத்தை இவ்விடத்தில் 8.5 ரிக்டர் ஸ்கேல் அதிர்வுடன் பதிவு செய்கிறேன். வெஸ்டர்ன், ராப், ராக் என்று என்னதான் குரங்கு பல்டி அடித்து யூத்களை சினிமாக்கார்கள் காலம் காலமாக கவர் செய்ய நினைத்தாலும் 'மன்மத லீலையை' பாடலின் பீட்டை பீட் செய்ய இந்த நொடி வரை எதுவும் பிறக்கவில்லை. பாடலின் துவக்கத்தில் மலரம்பால் தலைவரின் தலைக்கு மேல் இருக்கும் ஆர்ட்டினை எவர்க்ரீன் கனவுக்கன்னி டி.ஆர்.ஆர்(ராஜகுமாரி) தகர்க்க அதிலிருந்து புஷ்பங்கள் தலைவர் மேல் கொட்ட 'மன்மத லீலையை' என்று பாட ஆரம்பிக்கிறார். அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் சாய்ந்து கொண்டே அவர் பாட, இவர் ஆட..ஆஹா. என்னய்யா தில்லானா மோகனாம்பாள் சிவாஜி, பத்மினி? ரெண்டு ஸ்டெப் பின்னால நிக்க சொல்லுங்க. பூவை முகர்ந்து நம்ம ஹீரோ நாயகி மேல் வீச, அதை அவர் கச்சிதமாக கேட்ச் பிடிக்க மன்மத ரசம் 48 மணிநேரத்திற்கு நம் நெஞ்சில் சொட்டோ சொட்டென சொட்டுகிறது.
அடுத்த மெகா ஹிட் பாடல் 'கிருஷ்ணா முகுந்தா முராரே'. ஆடியோ வால்யூமை ம்யூட்டில் வைத்தால் கூட காதில் கொய்யென கேட்கும் குரல் வளத்துடன் எம்.கே.டி. பாடியிருப்பார். தனது தாய்க்கு கால் அமுக்கிக்கொண்டு இருக்கும் தலைவரை கலாய்க்க முனிவர் வேடத்தில் வருவார் கிருஷ்ணர். அதை மனக்கண்ணில் கண்டுபிடித்து அவரை போற்றி பாடும் பாடல். தாய் தந்தையருக்கு கால் கழுவிவிட்டு சேவை செய்யும்போது இவர் பாடும் பாடல்தான் ' அன்னையும் தந்தையும்'. 'எவன்டி உன்ன பெத்தான்' என்று விவஸ்தை இன்றி அலறும் போக்கெத்த பயல்களுக்கு சாட்டையடி இந்த பாடல்.
அடுத்ததாக பகட்டுடை உடுத்தி தலப்பாகட்டுடன் குதிரையில் நகர்வலம் வரும் பாகவதர் தெருவில் செல்லும் பெண்களை சைட் அடித்து ரவுசு கட்டும் அல்டிமேட் ஹிட் பாடல் வாழ்விலோர் திருநாள். 'வாழ்விலோர்ர்ர்ரர் திருநாள்ள்ள்ள்ள்' என்று அண்ணன் அசத்தும்போது துபாய் புர்ஜ் டவரின் 100 வது மாடியில் நள்ளிரவு 2 மணிக்கு குறட்டை விட்டு தூங்குபவனை கூட அலறி எழ வைக்கும் எட்டுக்கட்டை குரல்வளம் ஓய் அது.
'என்னுடல் தனில் ஈ மொய்த்தபோது' எனும் பாடல் ஒரு சோகத்தாலாட்டு. அன்னை, தந்தையை நினைத்துருகி பாகவதர் 'என் பிழை பொறுத்தருள்வீரோ' என நெகிழ்ந்தவண்ணம் தொடர்கிறார் இப்படி: 'அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன். அறிவில்லாமலே நான் நன்றி மறந்தேன்' என தனது தவறை எண்ணி கண் கலங்கும் காட்சி அது. 'டாடி மம்மி வீட்டில் இல்ல'...பாட்டாய்யா எழுதறீங்க. படுவாக்களா!!
'உள்ளம் கவரும் என் பாவாய். நான் உயர்ந்த அழகன்தானோ?' எனும் ரொமாண்டிக் பாடல் ஹீரோயிசத்தின் உச்சம். உச்சம். உச்சம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்கிறேன் சபையோரே. தன்னை அம்சமாக அழகுபடுத்திக்கொண்டு தன்னழகை பற்றி தானே புகழாமல் நாயகியிடம் தன்மையாக கேட்கிறார் தலைவர் இப்பாடலில். இப்படி தொடர்கிறது அந்த கீதம்...
தல: 'உலகெல்லாம் (என்னை) புகழ்வதேன். உண்மை சொல் பெண்மானே'
தலைவி: 'யாரும் நிகரில்லையே. மாறா மன மோகனா'
தல: 'வெறும் வேஷமே அணிவதால் அழகே வந்திடாதே'
(நான் அலங்கார உடை அணிந்து டச் அப் செய்வதால் மட்டுமே அழகாகி விடுவேனோ என்று அடக்கமாக கேட்கிறார் தல).
என்னை மிகவும் கவர்ந்த தேனமுத ரொமாண்டிக் கிக் கீதமிது நண்பர்களே.
போனஸாக ரசிகர்களுக்கு 'நடனம் இன்னும் ஆடனும்' எனும் பாட்டுமுண்டு. கலைவாணர், டி.ஏ. மதுரம் நகைச்சுவை நடனமாடி பாடியிருக்கும் கானம் இது.
இது போக இன்னும் சில வசந்த கீதங்களை உள்ளடக்கி இசை ரசிகர்களை குஷியோ குஷிப்படுத்துகிறது ஹரிதாஸ் ஆடியோ. இத்துடன் பாகவதர் புராணம் ஓயப்போவதில்லை. பொங்கி வரும் கண்ணீரை துடையுங்கள். விரைவில் ஹரிதாஸ் பட விமர்சனத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
ஹேய்...வாழ்விலோர் திருநாள்!!
.......................................................................
7 comments:
வோய்..!டைம் மிசின் எதாவது வாங்கிட்டேளா....?
Yaarukkuyaa
intha
review.....??????
சிவா சான்சே இல்லை. விழுந்து விழுந்து சிரிச்சேன். // குறிப்பாக புர்ஜ் கலீபா மேட்டரில்
வணக்கம் அண்ணாத்தே, இன்னா விமர்சனம் இன்னா விமர்சனம் . நான் மெர்சலாயிட்டேன்
ரசிப்பதற்கு ரசனை வேண்டும்... (எந்தப்பாடல் என்றாலும்)
கிண்டல் இல்லையே...
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பதேது......?
நீங்க பாகவதர ஓட்டறீங்களா இல்லையா ஒன்னுமே புரியல இந்தப் பச்சை புள்ளைக்கு...
கமலைய நயயனயனா கோபாலா
Post a Comment