CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, November 21, 2012

பதிவர் சுரேகாவின் - தலைவா வா!


                                                                                                  
           
பதிவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், பாடலாசிரியர் இப்படி இன்னும் பல தளங்களில் சிறப்பாக செயல்படும் சுரேகா அவர்கள் எழுதிய நூல்தான் 'தலைவா வா'. தலைப்பை பார்த்தால் அரசியல் சார்ந்த நூலோ என்று எண்ணி விட வேண்டாம். வேலை நிர்வாகத்தில் சரியான தலைவனை எப்படி உருவாக்குவது என்பதை எடுத்துரைக்கும் படைப்பிது. கவுண்டர் சொன்னது போல 'தல இருக்கறவன் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது'. அதெற்கென சில பல தகுதிகள் குறிப்பாக தொழில் நேக்கு தேவை என்பதை உணர்த்துகிறது இந்நூல். 

எத்தனையோ நூல்கள் இந்த ரகத்தில் வந்து கொண்டிருக்கும்போது இதை மட்டும்  தேர்வு செய்ய என்ன காரணம்?.....சுரேகா. வேறொன்றுமில்லை. என்ன சொல்கிறது தலைவா வா? பார்க்கலாம் வாருங்கள்.  கணினி வன்பொருள் நிறுவனம் ஒன்றின் தமிழக விற்பனைப்பிரிவின் தலைவராக இருக்கிறார் விக்னேஷ். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த அவரது அணியில் திடீர் சரிவு. மேலிடம் தந்த மோசமான ரிப்போர்ட்டால் நிலை குலைந்து போகிறார் விக்னேஷ். நேர்மையாக செயல்பட்டும் ஏனிந்த அவமானம் என்று குழம்புகிறான். விரைவாக தனது அணியின் செயல்பாட்டை மேம்பட செய்ய வேண்டிய கட்டாயம்? தீவிர சிந்தனைக்கு பிறகு ஒரு கார்ப்பரேட் குருவிடம் சிஷ்யனாக சேர்கிறான். அவரது ஆலோசனையின் பேரில் எடுக்கும் முடிவுகள் நிறுவனத்திற்கு எப்படி சாதகம் ஆகிறது என்பதே கதை.

சிறந்த கார்ப்பரேட் குருவின் அலுவலகம் எப்படி இயங்கும், அவருடைய பயிற்சி  முறைகள் எவ்வாறு இருக்கும் போன்ற பல விஷயங்களை சுரேகா அவர்கள் இப்புத்தகம் வாயிலாக பகிர்ந்து இருப்பது புதிய தலைமுறை அணி நிர்வாகிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 'பார்க்கலாம் என்று எடுப்பீர்கள். படித்து முடித்துதான் எழுவீர்கள்' என்று பின் அட்டையில் சொன்னது உண்மைதான். சாமான்யர்களுக்கும் புரியும் எழுத்து நடை, ஆரம்பம் முதல் இறுதி பக்கத்திற்கு சற்று முன்பு  வரை விக்னேஷ் குழம்பினாலும் வாசிப்பவர்கள் தெளிவாக பயணத்தை தொடரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் (திரைக்)கதை போன்றவை சிறப்பு.

                                                                
அதே நேரத்தில் ஆசிரியரிடம் ஒரு சில கேள்விகள் கேட்டாக வேண்டியும் இருக்கிறது: தமிழக பிரிவிற்கே தலைமைப்பதவி வகிக்கும் நபராக இருக்கிறார் விக்னேஷ்.அந்த நிலைக்கு வரும்போதே தனது வேளையில் பல அனுபவங்களை தாண்டித்தான் வந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் மிகவும் வெள்ளந்தியாக மனைவி, குரு போன்றோர் எந்த யோசனை தந்தாலும் அதை அலுவலகத்தில் செயல்படுத்த பார்ப்பது உறுத்தலாக இருக்கிறது. அவர்களின் யோசனைகளை உள்வாங்கி தன்னிடம் உதிக்கும் எண்ணங்களையும் இணைத்து அவர் பணியாற்றி இருப்பதாக சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். குருவின் ஆலோசனைகளை சிரமேற்கொண்டு விக்னேஷ் செய்யும் மாற்றங்களால் கிடைக்கும் தொடர் வெற்றிகள் ஆங்காங்கே விக்ரமன் படம் பார்க்கும் பீலிங்கை தருவதை மறுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக கையாளப்பட்டு இருக்கலாம்.  

தனக்கு கீழே வேலை செய்யும் நபர்களிடம் அன்பாக பேசி அவர்களது குடும்ப பிரச்னைகள் சிலவற்றை தீர்க்க வேண்டியதும் தலைமைப்பண்பின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்துதல் சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அணித்தலைவர் காட்டும் அன்பையே தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு அடிக்கடி லீவு போடுதல், விருப்பப்படும் அணிக்கு/வேலை நேரத்திற்கு மாற்றம் கேட்டு தொந்தரவு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை தலைவருக்கு வைத்து தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும் நபர்களுக்கு பஞ்சமில்லை அல்லவா. 

அதே போல பயிற்சி நடக்கும் கால கட்டத்திலேயே அலுவலகத்தில் தான் கற்ற பாடத்தை உடனுக்குடன் நடைமுறைப்படுத்துகிறார் விக்னேஷ். அனைத்தும் ஆக்கபூர்வமான மற்றும் ஊழியர்கள் நலன் சார்ந்தவை என்றாலும் 'என்னடா இது நேற்று வரை கண்டிப்புடன் இருந்தவர் திடுதிப்பென நம் மீது பாச மழை பொழிகிறார். எலி அம்மணமாக போகிறது என்றால் சும்மாவா? அவரது வேலை ஆட்டம் காண்கிறது. அதை சரிக்கட்ட நம்மிடம் குலாவுகிறார்' என்று சில ஊழியர்கள் கண்டிப்பாக சந்தேகிப்பார்கள். அவர்களிடம் இருந்து 100% உழைப்பை வாங்குவது லேசுப்பட்டதல்ல. முன்பு வாங்கிய அடிக்கு பதில் தர காத்திருப்பார்கள் அவர்கள். இதனால் அவர்களது வேலைக்கும்தானே ஆபத்து என்று கேட்கலாம்? 'போனால் போகட்டும். கீழ்நிலை ஊழியன் நான். அடுத்த வேலைக்கு அடித்தளம் போட்டவாறே இந்த 'செயலையும்' செய்து முடிப்பேன்' என்று கங்கணம் கட்டிக்கொண்டு கலகக்குழு அமைப்பவர்கள் பரவலாக உண்டு. இதையும் விக்னேஷ் எப்படி சமாளிக்கிறார் என்பதை சுரேகா எடுத்து சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவையனைத்தும் எனது கருத்துக்கள் மட்டுமே. ஆலோசனை அல்ல சுரேகா சார். :)

பணிச்சிக்கலில் தவிக்கும் உயரதிகாரிகள் சிலருக்கும், புதிதாக தலைமைப்பொறுப்பை ஏற்கவிருக்கும் இளைஞர்கள் பலருக்கும் சந்தேகமின்றி உபயோகமான நூலாய் இந்த 'தலைவா வா' இருக்கும் என்பது உண்மை. நேர்த்தியான அச்சு, தரமான தாள், சரியான இடைவெளி விட்டு பதிக்கப்பட்டு இருக்கும் சொற்கள் போன்றவை இப்புத்தகத்தின் கூடுதல் சிறப்புகள். ஓரிரு இடங்களில் இருக்கும் சொற்பிழைகள் தவிர்த்து வேறெந்த குறையுமில்லை. விலை 80 ரூபாய்(மட்டுமே). 

அலுவலகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களை இன்னும் யதார்த்தமாக, இக்கால இளைஞர்கள் டபுள் சபாஷ் போடும் விதமாக ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது சுரேகா அவர்களிடம் நான் விடுக்கும் கோரிக்கை. அது அவர் எழுதவிருக்கும் அடுத்த படைப்பில் இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி. 

இறுதியாக...

அலுவலக வேலை பார்க்கும் நண்பர்கள் 'தலைவா வா' படித்து விட்டு பிறருக்கும் தாராளமாக பரிந்துரை செய்யலாம்/பரிசளிக்'கலாம்'. 
..........................................................................                           

15 comments:

yuvatirupur said...
This comment has been removed by the author.
வெளங்காதவன்™ said...

மிஸ்டர். இதை வாங்கி அனுப்புமாறு அன்போடு கேட்டுக் கொல்கிறேன்

Unknown said...

சென்னையில் இருந்து புத்தம் இங்கு வந்து சேர.... 75 ரூபாய் புக் 130 ரூபாய் ஆகுது கொஞ்சம் புத்தகம் போடும் பதிவர்கள் விற்பனை வட்டத்தை அகலப்படுத்துங்கள்.

@கேபிள்,@சுரேகா

Unknown said...

@வௌங்காதவன்

சிவா அனுப்பிய புத்தகம் கப்பல்லதான் வரும்......ஒரு வருசம் ஆச்சு இன்னும் வந்து சேரலை...?

வோய்! மே.வ. வர்றதுக்குள்ள உனக்கு வயசாயிரும்..!
:)

saidaiazeez.blogspot.in said...

ஒரு பதிவ போடவே நாம எம்மா ரோசிக்கிறோம். புஸ்தகமென்ன அவ்லோ ஸுலுவாபா?
அத்த பட்சு யூஸ் ஆவியா அத்தொட்டு இங்க லொட்டு அங்க லொசுக்குன்னு சும்மாங்காட்டி ஃபிலிம் காட்ரியே நைனா.
இதெல்லாம் ரொம்ப ஜாஸ்திபா. ஸொல்லிட்டேன் ஆமா.

! சிவகுமார் ! said...


@ வெளங்காதவன்

முகவரி ப்ளீஸ். மெயில் அனுப்புக.

! சிவகுமார் ! said...

@ வீடு சுரேஸ்

யாருய்யா இது கண்ணி வெடி வக்கிறது...

! சிவகுமார் ! said...


@ சைதை அஜீஸ்

ஒரு கமன்ட் போட நாம எம்மா நேரம் யோசிக்கறோம்? ஒரு பதிவு போடுறது அவ்ளோ சுளுவா தலிவா. அத்த பட்சு யூஸ் ஆவியா அத்தொட்டு இங்க லொட்டு அங்க லொசுக்குன்னு சும்மாங்காட்டி சொல்லிட்டீங்களே வாத்யாரே.

இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி தலிவா. சொல்லிட்டேன் ஆமா.

Admin said...

புத்தகம் குறித்த பார்வை சிறப்பு.. விரைவில் வாசித்துவிடுகிறேன்..

arasan said...

எனக்கும் அப்படியே அனுப்பி விடுங்க அண்ணே .. அரியலூர் காரன் .. அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன்

pichaikaaran said...

அட. புக் எல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டீங்களா,, சூப்பர்

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம் நன்று... (நிறைகுறைகளையும் சொன்னதற்கு)

சுரேகா said...

நன்றி சிவக்குமார்...!!

உங்கள் நியாயமான, நடுநிலையான விமர்சனத்துக்கு!!

சமீரா said...

பொதுவா இந்த மாதிரி முன்னேற்ற புத்தகம் படிச்சி பழக்கமில்ல.. ஆனால் இந்த புக் படிக்க தோணுது.. புத்தகம் பற்றிய அலசல், படிக்க தூண்டுகிறது..
நன்றி சிவா சார்

சீனு said...

இந்த புத்தகத்தை பதிவர் சந்திப்பில் பார்த்திருந்தேன்.. சுரேகாவின் எழுத்துக்களைப் பற்றி அறியாததால் வாங்கவில்லை.. நிச்சயம் வாங்க வேண்டும்.... சுய முன்னேற்ற நூல் மட்டும் என்று தலைப்பு கூறியது... கதையுடன் நகரும் நூல் என்று நீங்கள் கூறியதில் புரிகிறது... நிச்சயம் படிக்கிறேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...