CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, November 5, 2012

லைட்டா ஒரு டீ குஸ்ட்டு போ மாமே!!     
என்னதான் மாவட்டத்திற்கு ஒரு தமிழ் வழக்கு இருந்தாலும் சென்னையின் சிறப்பு தமிழின் சிறப்பே தாய்த்தமிழுக்கு 'syrup'பு. காலத்திற்கேற்ப தன்னை மெருகேற்றிக்கொள்வதில் இதற்கு ஈடு இணையில்லை. நீளமான வார்த்தைகளை ஒரு சில வார்த்தைகளாக சுருக்கி அடிப்பதில் வித்தகர்கள் எங்க ஊரு எடிசன்கள். சந்திரபாபு, லூஸ் மோகன், தேங்காய் ஸ்ரீனிவாசன், கமல் போன்றோர் நடித்த  பார்த்தோ அல்லது ஏரியாவை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு அவர்கள் பேசுவதை கிரகித்த மாத்திரத்தில் இத்தேன் தமிழை பேசிவிடலாம் என்ற இறுமாப்பு ஆகவே ஆகாது. பேச்சுக்கு இணையாக பாடி லாங்குவேஜ் இருந்தால் மட்டுமே முக்கால் கிணறு தாண்ட முடியும். இல்லாவிட்டால் 'தோடா நம்மான்டையே சீனு போடுறாரு' என்று பம்ப் அடித்து விடுவார்கள். ஆக்ஸ்போர்ட் டிக்சனரிக்கு இணையாக ஒரு புத்தகம் போடும் அளவிற்கு யுனிக் தமிழை தன்னகத்தே கொண்டுள்ள சென்னைத்தமிழை ஒரு தபா கண்டுக்கலாம் வா வாத்யாரே!!

ஏரியா பெயர்களை எங்க மன்சாலுங்க ஸ்டைலாக உச்சரிக்கும் அழகே அழகு. 'டேய்... த்ரான்மயூர் வன்ட்டண்டா. நீ சீக்ரம் மீசாப்பேட்டைல இந்து எகுரு'. விளக்கம்: 'திருவான்மியூர் வந்துவிட்டேன். மீரான்சாகிப் பேட்டையில் இருந்து கிளம்பு'. எப்படி?  'நந்து நந்து வா' - நந்தகோபாலன் என்பவரை பார்த்து பேசுகிறார் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. விளக்கம்:  'நந்து..நடந்து வா'. நந்துவை விரைவாக அழைக்க 'ட'வை கட் அடிக்க வேண்டும். கடுப்பா இருக்கு, காண்டா இருக்கு..இதையெல்லாம் விட சோக்கான வார்த்தை ஒன்று உண்டு. அது 'செம கான்ச்சலா இருக்கு மச்சி'. கடும் மன உளைச்சலில் இருக்கும்போது 'கான்ச்சல்' எனும் வார்த்தை விஸ்வரூபம் எடுக்கும்.

'தட்னா தாராந்துருவ' என்று தனது எதிரில் இருக்கும் புல்தடுக்கி பயில்வானை மிரட்டுவது ஒரு வகை. 'இம்மாம் பெரிய வார்த்த எதுக்கு' என்று அதையும் சுருக்கினர் வம்சா வழிகள். அது 'மவனே சொய்ட்டிப்ப'. விளக்கம்: 'மகனே..சுருண்டு விழுந்து விடுவாய்'.  'நல்லா இழு' என்பதை இழுக்காமல் இதழ் பிரிப்பது இப்படி: 'நல்லா இசு'. 'அடச்சீ வழி விடு' என்று எட்டு(சொற்கள்) போட்டு கஷ்டப்படுவதை விட இப்படி ஷார்ட் கட்டில் போவது உத்தமம்: 'அச்சீ ஒத்து'. 'என்னடா துள்ற' என்பது ஓல்ட் பேஷன். அதற்கு சரியான ரீப்ளேஸ்மென்ட் இதுதான்: 'இன்னாடா தொகுர்ற?'. அதுபோல  'துரத்திக்கொண்டு வருகிறான்' என்பதன் மாடர்ன் சொல்லாடல் 'தொர்த்தினு வர்றா(ன்)'.     

'ஸ்சூலுக்கு போகாம பொறுக்கி பசங்க கூடயே சுத்திட்டு இருக்காத. இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லவா?'. இதில் எதிர்பார்க்கும் சுருதி இல்லை அல்லவா? அதற்குத்தான் இது: 

'உஸ்கோலான்ட போவாம பொர்க்கி பசங்கலோடயே ஒலாத்தாத. இன்ஸி கிட்ட சொல்ருவேன்'.

ஆட்டோக்காரரிடம் பேரம் பேசும்போது 'என்னது இங்க இருக்குற போயஸ் கார்டனுக்கு 200 ரூவாயா?' என்று புலம்பி நேரத்தை வீணடிப்பதை விட 'ண்ணா..என்னாண்ணா இப்டி கேக்ற? நேத்தி கூட ஒர்த்தரு 150 தான் வாங்கனாரு. பாத்து சொல்ணா' என்று கச்சிதமான பாடி லாங்க்வேஜை பிரயோகப்படுத்துதல் அவசியம். கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்தாலும் சொதப்பி விடும்.

'குடித்து வந்து இவளை அடித்து விட்டு ஓடிவிட்டான். விடாமல் அழுது கொண்டிருக்கிறாள்' என்று பக்கத்து வீட்டாரிடம் இப்படி சொன்னால் வேலைக்கு ஆவாது? எப்படி சொல்லலாம்?

'குஸ்ட்டு அஸ்ட்டு ஓட்டான். அய்துனே கீது'. இப்படி நச்சென சொன்னால்தான் சட்டென மனதில் ஏறும்.  

'காசேதான் கடவுளடா'வில் தேங்காய் ஸ்ரீனிவாசன் 'ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா' பாடலில் உச்சரிக்கும் அக்மார்க் சென்னைத்தமிழ் மற்றும் 'ஏரியா' ஆட்டமும் எனது பேவரிட்:

'துட்டிருந்தா டீயடிப்பேன். இல்லாங்காட்டி ஈயடிப்பேன்.
சோக்கா பேசி நேக்கா பாத்து பாக்கெட் அடிப்பேன்.
டாவ் அடிப்பேன். டைவ் அடிப்பேன். ஜகா வாங்கி சைட் அடிப்பேன்.
கைத உன்னை நோட்டால் அடிப்பேன்.

இன்னா மனுஷன். இன்னா ஒலகம். அண்ணங்கீறான்.தம்பிங்கீறான்.
கல்லாப்பொட்டிய கண்டாங்காட்டி சலாம் அடிக்கிறான்.
பேஞ்ச மழ ஒஞ்சி போனா, சாஞ்ச எடம் காஞ்சி போனா..
பேட்டையத்தான் மாத்திக்கினு டேரா அடிக்கிறான்'.      

பிற வட்டாரங்களில் பேசப்படும் தமிழை விட சென்னைத்தமிழை என்னதான் நக்கல் விட்டாலும் 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பது போல  எங்களுக்கு எங்க தமிழ் ஒஸ்திதாம்பா!!

புதுப்புது அர்த்தங்களுடன் பேட்டையில் மீண்டும் சந்திப்போம்.
...................................................................
          


   

17 comments:

Philosophy Prabhakaran said...

மெர்சலாயிட்டேன்...

Prabu Krishna said...

லூஸ் மோகன் தான் சென்னை தமிழை அதிகம் படங்கள்ல பேசினவர்னு நினைக்கிறேன்.

ராஜ் said...

செம பேஜாரா கீது பா....
பாஸ்....எனக்கு கோவை தமிழ், மதுரை தமிழ் மட்டும் தான் தெரியும்....மெட்ராஸ் தமிழ் நேரடியாக கேட்டது கூட இல்ல...படத்துல கேட்டதோட சரி....

Speed Master said...

takkara keethu pa

CS. Mohan Kumar said...

Sema !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஃப்ரீயாவுடு மாமே.....!

திண்டுக்கல் தனபாலன் said...

சோக்காகீதே...

சர்தாம்ப்பா...

Unknown said...

கோவைக்கும் சென்னைக்கும் எப்பவுமே மொழியில் பிரச்சனைதான்....! சென்னையைச் சேர்ந்த ஒருவர் வயதானவர் வேலைக்குச் சேர்ந்தார்.

கோவை பாசையில அதிகமா இருக்கு என்பதை எச்சா இருக்கு அப்படிம்பாங்க

இவரு இன்னாப்பா நீ வய்ஸ்க்கு மர்யாத்த இல்லாம "எச்சே"ங்கிர அப்படிம்பாரு..!

இங்க பேரைக்கூட 'சிவா'ங்க ,இங்க வாங்க அதை எடுங்க...அப்படிம்பாங்க

இவரு இன்னாப்பா ச்வா இங்கன வாப்பா அத்தை எடுப்பா அப்படிம்பாரு...!

சார் உங்களுக்கு வாய் அதிகம் சார் அப்படிம்பாங்க...!

எந்த பேமானி சொன்னா கீசிடுவேன்...கீசி..!எங்க ஏர்யாவுல நான்தான் அமைதீ! அப்படிம்பாரு....

அவர் இருக்கும் வரை எனக்கும் நல்லா பொழுது போச்சு...!

முத்தரசு said...

டக்கரா கீது

ராஜி said...

சூப்பராத்தான் கீதுப்பா

Thozhirkalam Channel said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சென்னைத் தமிழ் கிண்டல் பாஷையாகவே நினைக்கப் படுகிறது.அது தவிர்க்கப் படவேண்டும்.

ஹாலிவுட்ரசிகன் said...

தமிழ்ப்படங்களில் பார்க்கிறது மட்டும் தான்.. ஆனால் கேட்க கேட்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.. உங்க பதிவு மூலமா கொஞ்சம் கத்துக்க ட்ரை பண்றேன். :)

Unknown said...

போஸ்ட்ட இன்னும் கொஞ்சம் வலிச்சிருக்கலாம் மாமே. தக்னூன்டா கீது.

வெங்கட் நாகராஜ் said...

என்னமா எளுதுற மாமு!

நல்லா கீது!

DaddyAppa said...

சுஸ்தாயிட்டேன்

”தளிர் சுரேஷ்” said...

ரொம்பவே இண்ட்ரஸ்டிங்கா இருந்தது! சூப்பரு!

Related Posts Plugin for WordPress, Blogger...