CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, November 28, 2012

ஒய்.ஜி.மகேந்திரனின் - இது நியாயமா சார்?                                                                                  இது நியாயமா சார்?

கடந்த ஞாயிறன்று வாணி மகாலில் மொத்தம் மூன்று நாடகங்கள். கிரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா, மீசை ஆனாலும் மனைவி மற்றும் ஒய்.ஜி.யின் இது நியாயமா சார். வாணி மகாலின் இரண்டு ஹால்களில் சிறியதான ஓபுல் ரெட்டி ஹாலில் கிரேஸி க்ரூப்பும், மகாஸ்வாமிகள் ஹாலில் மகேந்திரன் க்ரூப்பும் மேடையேறினர். சென்ற ஆண்டு குறைந்தபட்ச டிக்கட்களின் விலை ரூ. 150, 200 என்று இருந்தது. குறிப்பாக கிரேஸி மற்றும் எஸ்.வி.சேகர் நாடகங்களுக்கு. இவ்வாண்டு ரூ. 200, 300 என ஏறிவிட்டது. இந்த நாடகத்திற்கு வைத்த டிக்கட் விலை ரூ 200, 350 முதல் 1,000 வரை!!!!

க்ரைம் த்ரில்லர் என்று விளம்பரம் செய்யப்பட்ட 'இது நியாயமா சார்'? 1989 ஆம் ஆண்டு அரங்கேற்றம் ஆனது. இதுவரை  200-க்கும்  அதிகமான முறை  மேடையேறி உள்ளது. கதை, வசனம் வெங்கட். காதலி மீராவை கொலை செய்த குற்றத்திற்காக ராகுலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறார் நீதிபதி சிதம்பரம். ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வாழும் அவரது வீட்டிற்கு துப்பாக்கியுடன் வருகிறான் சிறையில் இருந்து தப்பிய ராகுல். தான் ஒரு நிரபராதி என்றும், வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும் கோபத்துடன் கூறுகிறான். சாட்சிகளான ஆசிரியர் ஜோசப்(ஜீவா), வீடியோ நாத்(கிரி), டாக்டர் ஹேமா(சுபா), வழக்கறிஞர்(சுப்புணி) மற்றும் சமையல்காரர் பிச்சுமணி(ஒய்.ஜி.மகேந்திரன்) ஆகியோரை அதே வீட்டிற்கு கடத்தி வந்து வழக்கை மறுவிசாரணை செய்ய வற்புறுத்துகிறான். பிறகென்ன நடந்தது என்பதே கதை.     

'இது என்ன துச்சாதனன் வீட்டு நாயா? வேட்டியை உருவ பாக்குது' போன்ற சில கல கல வசனங்கள் பேசுகிறார் ஒய்.ஜி.அத்துடன் சில இரட்டை அர்த்தங்களையும் சேர்த்து. கோபமான வசனத்தின்போது சமையில் கரண்டியை சற்று வேகமாக தூக்கி அவர் எறிந்தபோது  மேடையின் முன் வரிசையில் இருந்தவர்கள் காலருகே வந்து விழ 'யார் வேணுமோ அந்த கரண்டிய எடுத்துக்கங்க' என்று டைமிங் அடித்தது நன்று. என்ன வசனம் பேச வேண்டும், எங்கே நிற்க வேண்டும் என்பதை நாடகம் நடக்கும்போதே பிறருக்கு மெல்லிய குரலில் யோசனை சொல்கிறார். வாணி மஹால்  மைக்கின் துல்லியம் அந்த பேச்சையும் நம் காதில் போட்டு வைக்கிறது. இவருக்கு இணையாக நம்மை ரசிக்க வைப்பது குள்ளமாக இருக்கும் சுப்புணி(அருணாச்சலத்தில் ரஜினியை கல்யாண மண்டபத்தில் சீண்டுபவர்). ஜம்பு எனும் பெயரில் அடியாளாக வரும் நபர் மட்டும் இறுதிவரை துப்பாக்கி ஏந்தியவாறு வசனம் பேசாமலே வணக்கம் போடுகிறார் பாவம்.

                                                                                       சுதேசி ஐயர்  

இந்நாடகத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. கிறித்தவ பாதிரியாரை கிண்டல் அடிப்பது, சுப்புணியின் உயரத்தையும், டாக்டர் ஹேமாவாக வரும் நடிகை சுபாவின் பெருத்த உடலை ஏளனம் செய்யும் வசனங்கள், 'குருட்டு கபோதி' போன்றவை இக்காலத்திலும் தொடர்வது ரசிக்கும்படி இல்லை. இனியேனும் இவற்றில் மாறுதலை கொண்டு வர வேண்டும் நாடகம் நடத்துவோர். சமையல்காரர் என்பதற்காக பெரும்பாலும் சமையல் கரண்டியுடன் ஒய்.ஜி. வருவது அக்மார்க் க்ளிஷே. ப்ளாஸ்க்கில் இருக்கும் காபியை அனைவரும் அருந்த சுப்புணிக்கு மட்டும்  டீ தந்தேன் என்று இவர் சொல்வதும், ஒரு காட்சியில் இடம் வலம் மறந்து எதிர்திசையில் நீதிபதி கைகாட்டி வசனம் பேசுவதும் கவனமாக கையாளப்பட்டு இருக்கலாம். நான் பார்த்த சில ஒய்.ஜி. நாடகங்களில்   சுப்ரமணி, கிரி மற்றும் சுபா ஆகியோர் காட்சிகளை நகர்த்தவே  பயன்படுகிறார்கள்.மூத்த கலைஞர்கள் பிருந்தா(இரண்டாம் படத்தில் ஒய்.ஜி.யின் வலப்பக்கம் இருப்பவர்) ,சுப்புணி(முதல் படத்தில் வலது ஓரம்) , பாலாஜி(இரண்டாம் படத்தின் வலது ஓரம்) போன்று சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் இவர்களுக்கு  அமையவில்லையா அல்லது நடிப்பே இவ்வளவுதானா எனும் கேள்வி எழுகிறது. சுப்புணி இல்லாவிட்டால் மேடை ஆட்டம் கண்டிருக்கும் என்பதற்கு அங்கொலித்த சிரிப்பொலிகளே சாட்சி.   

இப்போது இந்த நாடகத்தை பார்க்கும் பலருக்கு 'ஏற்கனவே பல சினிமாக்களில் பார்த்த காட்சிகளும், வசனங்களும் தானே இவை' என்ற சலிப்பு ஏற்படலாம். ஆனால் பெரும்பாலான நாடகங்கள் நாம் பார்த்த படங்கள் வெளியான சில பல  ஆண்டுகளுக்கு முன்பே மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. நாடக வசனங்கள் பல தமிழ் சினிமாவில் காப்பி அடிக்கப்பட்டவை என்பது உண்மையே. உதாரணமாக இந்த நாடகத்தில் 'எனக்கொரு மகன் பிறப்பான்' என்று ஒரு நபர் சொல்லும்போது 'அவன் என்னைப்போலவே இருப்பான்' எனப்பாடி வம்பில் சிக்கினேன் என்று வசனம் பேசுவார் ஒய்.ஜி. இது அப்படியே கவுண்டமணி - செந்தில் நடித்த படமொன்றில் சுடப்பட்டிருக்கும். 

கிரேஸி மோகன் மற்றும் எஸ்.வி.சேகருக்கு வரும் கூட்டம் ஒய்.ஜி.க்கு வருமா? எதற்கு இவ்வளவு பெரிய ஹால்? ஓபுல் ரெட்டி மினி ஹாலையே செலக்ட் செய்து இருக்கலாமே? என்று எண்ணியவாறே உள்ளே சென்றேன். அதிகபட்சம் 40% சீட்டுகள் மட்டுமே நிரம்பி இருந்தது அதை மெய்ப்பித்தது. அதிர்ச்சி தராத க்ளைமாக்ஸ் மற்றும் மேற்சொன்ன குறைகளைத்தாண்டி போதுமான விறுவிறுப்புடன் நாடகத்தை கொண்டு சென்ற U.A.A குழுவினருக்கு பாராட்டுகள். 

'இது நியாயமா சார்?' சொல்லும் நீதி: சரிவர விசாரிக்கப்படாமல் தீர்ப்புகள் வழங்குதல் தவறு. அதை வெங்கட் அவர்களின் வசனம் மூலம் அழகாக சொல்லி இருக்கிறார்கள். 'குற்றவாளி என்று உறுதியாகும் வரை குற்றம் சாட்டப்பட்ட நபர் நிரபராதி என்பது அயல்நாட்டில். நிரபராதி என்று உறுதியாகும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாக கருதப்படுவது நம் நாட்டில்'. சபாஷ் வெங்கட்.   

Images Copyright: madrasbhavan.com   
....................................................................

தொடர்புடைய பதிவு:


சமீபத்தில் எழுதியது:

...................................................................


           

3 comments:

Unknown said...

நாடகம் பார்த்து விமர்சனம் எழுதுவதால்....நீவிர் நாடகம் காத்த செம்மல் என்று அழைக்கப்படுவீராக...

நேற்றைய பதிவில் இதை விட்டுட்டன் அம்பி!

திண்டுக்கல் தனபாலன் said...

அந்தக் காலத்தில் (!) விடாது நாடகங்களைப் பார்த்த ஞாபகம் வந்தது...

சமீரா said...

எனக்கு மேடை நாடகம் பார்க்கும் ஆவல் ரொம்ப அதிகம். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை..

பகிர்விற்கு நன்றி!!

Related Posts Plugin for WordPress, Blogger...