CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, November 20, 2012

ஒய்.ஜி.மகேந்திரனின் - சுதேசி ஐயர்       
கடந்த ஞாயிறன்று வாணி மகாலில் பார்த்த நாடகம் ரோஷினி பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சுதேசி ஐயர். ஒய்.ஜி.மகேந்திராவின் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸின் 60 ஆம் ஆண்டில் 59 வது படைப்பாகும் இது. தேசப்பற்றுள்ள சங்கரன் ஐயர் வீட்டில் துவங்குகிறது நாடகம். காலம் 2008 ஆம் ஆண்டு .சங்கரனைத்தவிர அவருடைய மனைவி, மகள் மற்றும் இரு மகன்கள் அனைவரும் நவீன வாழ்விற்கு அடிமைப்பட்டு போக அதை எதிர்க்கும் சங்கரனை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர் அனைவரும். அந்நேரத்தில் விஞ்ஞானி நண்பன் ஒருவனின் உதவியால் மொத்த குடும்பத்தையும் 1945 ஆம் ஆண்டிற்கு டைம் மிஷின் மூலம் அழைத்து செல்கிறார் சங்கரன். முதலில் எவ்வித வசதியும் அற்ற பழங்காலத்தை வெறுக்கும் குடும்பம் அதன் பின் எப்படி மனம் மாறுகின்றனர் என்பதே கதை.

சுதேசியாக ஒய்.ஜி. கதாபாத்திரம் டெய்லர் மேட். நடிப்பதோடு அவ்வப்போது இசை எங்கே பயன்படுத்த படவேண்டும் என்பதை கையால் சைகை செய்து ஒலி அமைப்பாளரை வேலை வாங்குவதையும் பார்ட் டைமாக மேடையில் செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு. அது எந்த விதத்திலும் நாடகம் பார்ப்பவர்களை உறுத்தாமல் இருந்தது பாராட்டத்தக்கது.  அவருடைய மனைவியாக பழம்பெரும் நடிகை பிருந்தா. வழக்கம் போல் சிறந்த நடிப்பு. மேடை நாடகங்களில் என்னை கவர்ந்த ஜாம்பவான்களில் இவரும் ஒருவர். இதற்கு முன்பாக 'நாடகம்' எனும் தலைப்பில் நான் பார்த்த ஒய்.ஜி.யின் மேடை நாடகத்தில் நெகிழ வைக்கும் கேரக்டரில் நடித்து கைதட்டி வாங்கிய பிருந்தா  இம்முறை கலகலக்க வைத்துள்ளார். 1945 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை வெறும் வசனங்கள் மூலம் ஒரே ஒரு செட் போட்டு கண் முன் கொண்டு வந்ததை பாராட்டத்தான் வேண்டும்.     

ஒய்.ஜி.யின் மச்சினன் நித்யாவாக வருபவர் ஆரம்ப காட்சியில் ஒவ்வொரு மாநிலம் சார்ந்த நடிகர்கள் இறக்கும் தருவாயில் எப்படி வசனம் பேசுவர் என்று நடித்து காட்டியது அருமை. சுதேசியின் மகன்களாக வரும் இருவரும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தம்மாலானதை செய்துள்ளனர். என்னை கவர்ந்த வசனங்களில் ஒன்று: 1945 ஆம் ஆண்டு தனது மூத்த மகனை பார்த்து... 

சுதேசி: ஏண்டா 2008 - க்கு போகணும்னு கதறு கதறுன்னு கதறுவியே. போலாமா?

மகன்: வேண்டாம்பா. இப்பவும் 'கதர், கதர்'னுதான் கதறறேன்.     

விடுதலைப்போராட்டத்தை கண்டு மகன் பேசும் வசனம் இது. அதே சமயம் ஒரு உறுத்தலான காட்சியும் இருந்தது. தனது சாட் தோழி சாத்விகாவை வீட்டிற்கு அழைக்கிறான் மூத்த மகன். அவர் ஒரு திருநங்கை என்பதை அறியாமல். நேரில் கண்டதும் அனைவரும் அதிர்கின்றனர். அவரை பகடி செய்வது போல் வரும் காட்சியை தவிர்த்து இருக்கலாம். இன்னொரு முக்கியமான வசனம் ஒன்றும் வந்து போகிறது. 1945 இல் வண்டி இழுக்கும் தொழிலாளி ஒருவர் சுதேசி வீட்டு வாசலில் நின்றவாறு 'அய்யா நான் உள்ள வரலாம்களா?' என்று கூச்சத்துடன் கேட்க அதற்கு சுதேசி(ஒய்.ஜி) சொல்லும் பதில்:

'நாங்க எப்ப உங்களை உள்ள வர வேணாம்னு சொன்னோம். நீங்களே வெளியே இருந்துட்டு வராம தயங்குனா நாங்க என்ன செய்ய முடியும்?'

இவ்வாண்டு(2012) இறுதியில் பெரியார் தொண்டர்கள் மயிலை கபாலீஸ்வரர் கோயில் கருவறை நுழைவு போராட்டம் நடத்த போகிற சமயத்தில் இந்த வசனம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது (இதே வசனம் முன்பே சுதேசி ஐயரில் வந்திருக்கும். ஆனால் தற்போது டைமிங் கச்சிதமாக பொருந்தி உள்ளது). இம்மேடை நாடகத்தில் எந்த ஒரு இடத்திலும் தொய்வின்று அனைவரும் நடித்து இருந்தனர். புதிதாக இந்த 'சுதேசி ஐயரை' பார்ப்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக இளையோருக்கு 'என்னடா இது ஏகத்துக்கும் கருத்து சொல்கிறார்கள். நகைச்சுவை கூட ஆஹா ஓஹோ என்றில்லையே' எனும் எண்ணம் வரலாம். அதற்கு காரணங்கள் இரண்டு: ஒன்று பெரும்பாலான நாடக வசனங்கள் சில பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி அரங்கேற்றம் செய்யப்பட்டவையாக இருப்பது. மற்றொன்று எஸ்.வி.சேகர் அவர்கள் நாடகத்தில் நடப்பு சம்பவங்களுக்கு ஏற்ப (குறிப்பாக அரசியல்) ஒரே நாடகத்தின் முந்தைய வசனங்களில் மாற்றம் ஆங்காங்கே இருக்கும். ஆனால் ஒரு சில இடங்களை தவிர வசனத்தில் யாதொரு மாற்றமும் செய்யாமல் இருப்பது ஒய்.ஜி. அவர்களின் ஸ்டைல் என்பது தெளிவாக தெரிகிறது. 

எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் ஆகியோரின் படைப்புகளில் டைம்பாஸ் நகைச்சுவை மேலோங்கி இருக்கும். ஆனால் ஒய்.ஜி.பி/ஒய்.ஜி.எம்.மின்  யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் படைப்புகளில் பெரும்பாலும் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவைகள் தவறாமல் இடம் பிடிக்கின்றன. இந்த காலத்தில் யார் கருத்து கேட்பார்கள் என்றெண்ணாமல் U.A.A நாடகங்கள் தொடர்ந்து மேடையேற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வசூலில் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும் என்பது அறிந்தும் விடாப்பிடியாக கருத்துள்ள நாடகங்களை அரங்கேற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் & கோவிற்கு வாழ்த்துகள்.            

சென்னையில் நடக்கும் மேடை நாடகங்கள் குறித்து கூடுமானவரை நான் எழுதி வருவதை அறிந்த ஒய்.ஜி. மகேந்திரன் அவர்கள் சென்ற முறை நாடகம் பார்க்க சென்றபோது என்னை ஊக்குவித்தது மறக்க இயலாது. இம்முறையும் குறைந்த கட்டண டிக்கட்டில் பின் வரிசையில் அமர்ந்து இருந்த என்னை அழைத்து முன்வரிசையில் உட்கார வைத்து நாடகத்தை ரசிக்க வைத்தார். அவருக்கு எனது நன்றிகள். 

தொடர்புடைய பதிவு:
U.A.A வின் 60 ஆம் ஆண்டு விழா காணொளிகள் காண:.....................................................................

                                  

3 comments:

Unknown said...

முன் வரிசையில் உக்கார வைத்ததுமில்லாமல் விரைவில் அம்பி சிவக்குமார் நாடகத்திலும் நடிக்க வைக்க ஒய்.ஜி அவர்களைக் கேட்டுக்குறேன்.40 பக்க வசனத்தை தம் கட்டி மூச்சு விடாம அம்பி சிவா பேசுவார்...!ஹிஹி!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆக விரைவில் உங்களையும் நாடகத்தில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்... வாழ்த்துக்கள்...

உலக சினிமா ரசிகன் said...

நாடக உலகிற்கு ஒரு பவர் ஸ்டார் உருவாகட்டும்.
வரவேற்போம் நம் சிவாவை.

Related Posts Plugin for WordPress, Blogger...