CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, November 6, 2012

உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 7நவம்பர் - 2011 இல் வெளிவந்த உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் தொடர்கிறது...


குடல் வெந்து போகும் வரை குடித்து ஆட்டம் போட்டுவிட்டு மேலே போய் சேரும் 90% சராசரி குடிமகன்கள், குடும்பத்திற்கு விட்டு செல்லும் சொத்து ஒரு அழுகிய தக்காளி விலை கூட பெறாது. பூ, இட்லிக்கடை  வியாபாரம் செய்யும் முறையை அவசர அவசரமாக அக்கம்பக்கத்து பெண்களிடம் கற்றுக்கொண்டு வருமானம் தேடும் பெண்கள் ஒருவகை. 'இது தேறாத கேஸ். இதை நம்புனா புள்ளைங்களை கரை சேக்க முடியாது' என்று வரவிருக்கும் ஆபத்தை முன்பே உணர்ந்து கணவன் உற்சாக ஆட்டம் போடும் காலத்திலேயே கைத்தொழில் ஒன்றை பழக ஆரம்பிப்பவர்கள் ஒரு வகை. இவர்களைத்தாண்டி சிறுவயதிலேயே பொழுதுபோக்கிற்கு கைத்தொழில் கற்றுக்கொண்டு அதன் மூலம் தனது குடும்பத்தை பல்லாண்டுகள் தாங்கிப்பிடிக்கும் மகளிர் மறுவகை. அம்மா இந்த இறுதி வகையைச்சேர்ந்தவர்.

அப்போது அவருக்கு 15 வயதிருக்கும். தாத்தாவுடன் வயல் வேலைக்கு சென்று வந்த காலம். 'குறிப்பிட்ட வயதை தொட்டாகி விட்டது. போதும் வீட்டோடு இரு'என்று பாட்டி பஞ்சாங்கம் வாசிக்க, அந்த சுதந்திர காற்றும் கரை கடந்தது.  அப்போது வந்த ஆபத்பாந்தவந்தான் தர்மன். அம்மாவின் உறவினர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இல்லம் முழுக்க ஸ்டாலின், கார்ல் மார்க்ஸ், பாரதி போன்ற பெருந்தலைவர்களின் படங்களால் அலங்கரித்து வைத்திருந்த முற்போக்குவாதி. தலைவர்களின் உருவங்களை எம்ப்ராய்டரி  தையல் கலை மூலம் தத்ரூபமாக வரையும் ஆற்றல் கொண்டவர்.  பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்படுவதை விரும்பாத தர்மன் தாத்தாவிடம் சென்று 'தையலையாவது அவள் கற்றுக்கொள்ளட்டும். எத்தனை நாட்கள்தான் வீட்டில் கிடப்பாள்' என்று பேசி சம்மதம் வாங்கினார். அன்று அவர் எடுத்த அந்த சிறுமுயற்சிதான் எங்கள் வாழ்வாதாரத்திற்கான விதையாகிப்போனது.

கனகா எனும் டீச்சரிடம் சில மாதங்கள் தையல் பயின்று முடித்தார் அம்மா. ஒரு தையல் மிஷின் வாங்கித்தந்தால் வீட்டில் இருந்தவாறு துணிகளை தைத்து பழகலாம் என்று தாத்தாவிடம் கோரிக்கை வைத்தார் அம்மா.   தாத்தாவும், அம்மாவும் விளைவித்த சோளத்தை விற்று 500 ரூபாயை சொந்தக்காரனிடம் தந்தனர். முந்தைய பதிவுகளில் கூறிய அதே குடி கெடுத்த உறவினன்தான் அவன். 150 ரூபாய் மட்டும் தையல் மிஷின் வியாபாரியிடம்  தந்துவிட்டு 350 ரூபாயை தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். ஒரே தொகை தந்து வாங்க வேண்டிய தையல் மிஷின் இவனால் தவணை முறையில் வாங்கப்பட்டது. திருடிய பணத்தில் அட்லஸ் சைக்கிளை வாங்கி தன் வீட்டில் நிறுத்திக்கொண்டான் அந்த நல்லவன். 

'சரி..மிஷின் வந்தாகிவிட்டது. புதிதாக தொழில் கற்கும்போது நம்மை நம்பி யார் துணியை தருவார்கள்?' இது ஒவ்வொரு தையல் கலைஞர்களுக்கும் வரும் சோதனைதான். சாவடியில் (சத்திரம்) தங்கி இருக்கும் முதியவர்களிடம் சென்று அங்கு கிடைக்கும் துணிகளை வாங்கி அவர்களுக்கான மேலாடைகளை தைத்து தந்தார் அம்மா. முதியவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. வாய் மொழியாக செய்தி பரவ வயதில் மூத்த பணக்கார உறவினர் ஒருவர் 'இந்தாம்மா..இது விலை உயர்ந்த வெண்பட்டு. எனக்கொரு மேலாடை தைத்து தா' என்று ஊக்கப்படுத்த ஓரளவிற்கு பரிச்சயமான தையல் நிபுணர் ஆனார் அம்மா. 

'வயசுக்கு வந்த பொண்ணுக்கு எதுக்கு படிப்பும், தொழிலும். கெடக்கட்டும் வீட்டோட' என்று புரட்சி பேசும் பன்னாடைகள் நிறைந்த ஊரில் தர்மன் மாமா, இந்த வெண்பட்டு முதியவர் இருவரும் பெரியாரின் மாற்றுருவாகவே தென்பட்டனர். இவர்களைப்போன்ற சிலர் அந்த இருண்ட காலத்தில் இல்லாமல் போயிருந்தால் நான்கு சுவற்றுக்குள் நாசமாய் போயிருக்கும் பல நங்கையரின் வாழ்க்கை. 'என்ன உன் பொண்ணு தையல் கத்துக்க ஆரம்பிச்சி இருக்கா' என ஊரார் கேட்டதற்கு பாட்டியின் பதில் 'நாளைக்கி கல்யாணம் ஆன பின்ன ஒருவேள புருஷன் சரியில்லாம போயிட்டா குடும்பத்த காப்பாத்த வேண்டாமா? அதான்'.

பாட்டியின் கருநாக்கு கண்டிப்பாக பலிக்கும் என்று அம்மாவிற்கு ஆருடமா தெரியும்? அக்காலத்தில் புகழ்பெற்ற 'ரீட்டா' தையல் மிஷினை அவர் மிதித்த வண்ணம் நாட்கள் நகர்ந்தன.

தொடரும்......... 

.................................................................           


9 comments:

சீனு said...

தொடரை மீண்டும் ஆரம்பித்ததில் மகிழ்ச்சி... அற்புதமான எழுத்து வேகம், எங்கும் சலிப்பு தட்டவில்லை... உங்க வார்த்தைகளில் இருக்கும் கோபமும் சோகமும் எங்கள் உள்ளும் பரவுவது உங்கள் எழுத்தின் திறமையே அன்றி வேறு எதுவும் இல்லை... தொடருங்கள்

ராஜ் said...

இந்த தொடரின் பழைய பதிவுகளின் லிங்க் தர முடியுமா....பழைய பதிவுகளை படித்தால் தான் இந்த பதிவு எனக்கு புரியும் போல் தெரிகிறது... :):)

முடிந்தால் இதே பதிவில் பழைய பதிவுகளின் லிங்க் அப்டேட் செய்யவும்..

! சிவகுமார் ! said...

ராஜ்... 2011 நவம்பர் பதிவுகளில் உள்ளது முந்தைய பதிவுகள். வலது புறம் உள்ள மெனு கார்டில் பார்க்கவும்.

! சிவகுமார் ! said...


சீனு..தொடரின் துவக்கத்தில் சொன்னது போல அனுதாபத்தேடல் அல்லது பிரச்சார முழக்கம்..இரண்டிற்கும் அப்பாற்பட்ட மனநிலையில் எழுதப்படுகிறது இத்தொடர். கடந்து வந்த மனிதர்கள், அனுபவங்களை பகிரும் யதார்த்த முயற்சி மட்டுமே. எனவே நோ பீலிங்க்ஸ்!!

! சிவகுமார் ! said...


@ சீனு

//அற்புதமான எழுத்து வேகம், உங்கள் எழுத்தின் திறமையே அன்றி வேறு எதுவும் இல்லை//

கிழிஞ்சது. யோவ்...உன்ன பாத்தா அமைதிப்படை அமாவாசை மாதிரியே தெரியுது. 'ஏண்டா மணியா' ரேஞ்சுக்கு ஆக்கிடாதப்பா!!!

சீனு said...

புகழ்ச்சி புடிகாதாமாம்பா.... அண்ணாச்சி மனசுல டக்குன்னு பட்டுச்சி பட்டுன்னு சொல்லிட்டேன் :-) பழமொழி சொன்ன மட்டும்தேன் ஆராய்ச்சி பண்ணனும்.... :-)

// அனுதாபத்தேடல் அல்லது பிரச்சார முழக்கம்..இரண்டிற்கும் அப்பாற்பட்ட மனநிலையில் எழுதப்படுகிறது இத்தொடர். // உங்கள் தன்னிநிலை விளக்கம் குறித்து இதயம் இனித்தது கண்கள் பனித்தன :-) ( எவனாவது என் மேல கேஸ் போட்ட ரெண்டு பெரும் சேர்ந்து தான் களி திங்கணும் தயாரா இரும் வோய் )

Unknown said...


உண்மைக் கதையா ? உருவகக் கதையா? உண்மை என்றால் உள்ளம் வலிக்கிறது தொடருங்கள் தொடர்வேன்!

! சிவகுமார் ! said...

உண்மைக்கதைதான் ஐயா.

Unknown said...

சிவா. நீண்ட நாளைக்கு பிறகு தொடரை திரும்பவும் எழுத ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சி. முழுவதையும் எழுதி முடித்து விடுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...