CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, October 17, 2012

சந்தானக்காற்றே....!!
உலகெங்கும் பல்வேறு மொழிகளில் நகைச்சுவை நடிகர்கள் ரசிகர்களை கிச்சு கிச்சு மூட்ட முயன்று சிலர் வென்று பலர் தோற்ற கதை அறிவோம். அதிலும் குறிப்பாக நகைச்சுவைக்கு பெயர் போனது தமிழ்த்திரை. என்.எஸ்.கே, நாகேஷ், சந்திரபாபு, பாலையா போன்ற ஜாம்பவான்களை வெறும் காமடியன்களாக மட்டுமே கருதிவிட இயலாது.  அவர்கள் எல்லாம் தனிப்பிறவிகள். அதன் பின் கோடம்பாக்கம் அள்ளித்தந்த நகைச்சுவை நடிகர்கள் ஏராளம். பலர் தமக்கான களமும், காலமும் கிடைத்தும் கூட அறுவையான ஜோக்குகள் மூலம் மக்களை இம்சித்து வந்தனர். குறிப்பாக எஸ்.எஸ்.சந்திரன், வையாபுரி ஆகியோரை சொல்லலாம். பல்வேறு படங்களில் தோன்றி மறைந்தாலும் இவர்களை ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளாததற்கு காரணம் ஒன்றுதான். 'முன்னோர்கள் செய்த அட்டகாசமான காமடிகளைத்தாண்டி உன்னால் புதிதாக ஏதேனும் செய்ய முயன்றால் மட்டுமே எமது உதடுகள் புன்முறுவலையேனும் பூக்கும்' என்பதே அது. அப்படி தனக்கென ஒரு பாணியில் கோடம்பாக்கத்தில் கோலோச்சி கொண்டிருக்கும் சரவெடிதான் சென்னை மைந்தன் சந்தானம்!!

முன்னணி நடிகர்களுக்கு ஆரத்தி எடுத்தே மீடியாக்கள் நிகழ்ச்சிகளை வழங்கிய காலத்தில் 'ரஜினியாவது, கமலாவது..கண்ணுல வெரல விட்டு ஆட்டு' என்று 'லொள்ளு சபா' இயக்குனர் 'தல' ராம்பாலா தனது  'தளபதி' சந்தானத்தை கோதாவில் இறக்கியது சின்னத்திரையில் ஒரு குட்டிப்புரட்சி. சந்தானத்தால் தனது ட்ரவுசர் கிழிக்கப்படுவது கண்டு மிரண்ட நாயகர்கள் ஏராளம். சின்னத்திரையில் என்னதான் மெகா ஸ்டாராக இருந்தாலும் பெரிய திரையில் சோபிக்காமல் போனவர்கள் அதிகம். 'சர்க்கஸ்' எனும் டி.வி. சீரியலில் நடித்து அதன் பின் உச்சத்தை தொட்ட ஷாருக் போன்ற ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு. இப்போது சந்தானமும் அந்த லிஸ்டில். 

சந்தானம் சினிமாவில் கால் பதித்த நேரத்தில் விவேக், வடிவேலு போன்றவர்கள் உச்சத்தில் இருந்த நேரம். அப்போது சந்தானத்தின் காமடி சற்று தடுமாற்றத்துடனே துவங்கியது. 'கவுண்டரை காப்பி அடிக்கிறார்' என்பது இவர் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அது உண்மையும் கூட. அப்படியெனில் இவர் வெள்ளித்திரையில் பிரகாசிக்கும் அளவிற்கு தனித்தன்மை இல்லாதவரா எனும் சந்தேகம் நமக்கும், நெருடல் அவருக்கும் இருக்கத்தான் செய்தது. 'சில்லுனு ஒரு காதல்' மூலம் அக்கூற்றை கொஞ்சம் முறியடித்தார். 'சும்மா தொங்கிட்டு இருந்த பல்பை ஏண்டா ஒடச்ச' என்று சூர்யாவை நையாண்டி செய்யும்போது வெற்றிக்கான கதவு மெல்லத்திறந்தது.

                                                                           
'அறை எண் 305 இல் கடவுள்' சந்தானத்திற்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய சோதனை. காமடியன் - கம் - கதாநாயகன் கேரக்டரில் ஒருவித குழப்பத்துடன் அவர் நடித்ததை படம் பார்த்தவர்கள் அறிவர். ஆனால் இரண்டு ஹீரோக்களில் ஒருவனாக அதில் நடித்ததும், அதன்பின் அப்படி ஒரு அக்னிப்பரிட்சைக்கு அடித்தளம் இடாமல் நகைச்சுவை நடிகராக மட்டுமே தொடர்வதும் சந்தானம் எடுத்த மிகச்சிறந்த முடிவு. முன்பு சொன்னதைப்போல கவுண்டரின் சாயல் அவ்வப்போது இவரது படங்களில் எட்டிப்பார்த்தாலும் சென்னை இளவட்டங்களின் ரவுசை திரைக்கு கொண்டு வந்து தனது தனித்தன்மையை நிரூபிக்கத்தான் செய்கிறார் என்பதற்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பே சாட்சி.ஹீரோக்களை விட சந்தானம் திரையில் வந்தால் அரங்கம் ஆர்ப்பரிக்கிறது. சாப்ளின் சாயல் நாகேஷிடமும், எம்.ஆர்.ராதாவின் தாக்கம் விவேக்கிடமும் இருந்தாலும் தமக்கே உரித்தான டைமிங் மற்றும் சிரிப்பு ஜாலங்களை வெளிப்படுத்தியதன் மூலமே அவர்கள் நீண்ட காலம் களத்தில் நிற்க முடிந்தது. அப்படி ஒரு நட்சத்திரம்தான் சந்தானம்!!

'வடிவேலு இல்லாததால் தான் சந்தானம் காட்டில் மழை' என்பது வெகுஜன கணிப்பு. ஆனால் வடிவேலு முதலிடத்தில் இருந்த பொழுதே சந்தானத்தின் காமடிக்காக சிறப்பாக ஓடிய சில படங்கள் அதை பொய்ப்பித்ததுண்டு. வடிவேலு, விவேக்கிற்கு பிறகு கஞ்சா கருப்பு, சந்தானம் போல என்றெண்ணிய காலத்தில் களவாணி, நாடோடிகள் போன்ற ஒரு சில படங்களைத்தவிரை கருப்புவின் காமடி எடுபடாததால் சந்தானம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு வந்த அடுத்த கட்ட அதிரடி சோதனை ஓ.கே. ஓ.கே.எனும் படத்தின் மூலம். இயக்குனர் ராஜேஷுக்கும்தான். அபார வெற்றிக்கூட்டணியாக வலம் வந்த இவர்களுக்கு நடிப்பின் அரிச்சுவடி தெரியாத உதயநிதி, ஹன்சிகாவை வைத்துக்கொண்டு ஹிட் அடிக்க வேண்டிய கட்டாயம். கதை, லாஜிக், இசை என்ற எதுவுமே பேசும்படி இல்லாவிடினும் அசல் ஹீரோ சந்தானத்தால் மட்டுமே அசத்தல் வெற்றி பெற்றது.

சந்தானத்திற்கு சமமான நகைச்சுவை உணர்வு கொண்ட சிவகார்த்திகேயன் தொடக்கத்திலேயே தள்ளாடியதும் பார்த்தாவிற்கு சாதகம் ஆகிப்போனது. எனக்கு தெரிந்தவரை சிவகார்த்திகேயன் மட்டுமே தற்போதைய சூழலில் சந்தானத்திற்கு டப் பைட் தரும் திறன் கொண்டவர். தற்போது 'பரோட்டா' சூரி பேசப்பட்டு வந்தாலும் நிரூபிக்க வேண்டியது அதிகம் இருக்கிறது.              

நிறைய படங்களை ஆக்ரமித்து சிம்மாசனத்தில் அமர்ந்த நகைச்சுவை நடிகர்கள் தவிர்த்து கல்லாப்பட்டி சிங்காரம், லூஸ் மோகன் போன்ற திறமைசாலிகள் விளையாடிய இந்த கடினமான களத்தில் தமிழ் சினிமா ரசிகனிடம் இருந்து கரவொலிகளை பெறுவது அவ்வளவு எளிதல்ல. அந்த வரத்தை பெற்று வெற்றி நடை போடுவதால் இன்னும் சில ஆண்டுகளுக்கு சந்தானக்காற்றுதான் பலமாக வீசும் எனத்தெரிகிறது!!
..............................................................................                


சந்தான சரவெடிகளில் என்னை மிகவும் கவர்ந்தவற்றில் இருந்து சில:

வந்தான் வென்றான் - 'பாக்கறதுக்கு கார்ட்டூன் பொம்ம மாதிரி இருக்கானே. கலாய்ச்சி அனுப்பிச்சிடலாம்னு பாத்தேன்' 

ஓ.கே. ஓ.கே.வில் கோட்டா ஸ்ரீனிவாசராவ் போன்று சிரித்தது.

விஜய் அவார்ட்ஸ் 2012 - 'காலங்காத்தால எல்லார் வீட்லயும் காப்பி இருக்கோ இல்லியோ. விஜய் டி.வி.ல கோபி இல்லாத ப்ரோக்ராமே இல்லப்பா'.

...........................................................................
                                                                    

15 comments:

பால கணேஷ் said...

ஆரம்பத்தில் ரெண்டு, உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் இரட்டை அர்த்த வசன்ம் பேசி எரிச்சலூட்டிய சந்தானம் பின் அவற்றை தவிர்த்தது சிறப்பு. அதனால்தான் அவர் காமெடி சிறக்கிறதென்பது என் கருத்து.

சீனு said...

சந்தானம் லொள்ளு சபை முதற்கொண்டே சந்தனக் காற்று வீச வைத்தவர், டபுள் மீனிங் காமெடிகள் தற்போது பெண்களும் ரசிகத் தொடங்கி விட்டார்கள் என்று படித்தேன் .. சந்தனக் காற்று தான்.. நல்ல பதிவு சிவா

Prabu Krishna said...

எந்த ஒரு நகைச்சுவை நடிகரும் இயக்குனரை பொறுத்து தான் ஹிட் கொடுக்க முடியும் என்பது என் கருத்து. கவுண்டமணி, வடிவேல் போன்றவர்களின் மொக்கை காமடிகள் பார்த்திருக்கிறோம். சில படங்களில் சொதப்பினாலும் சந்தானம் பிக்கப் ஆகிடுவார்.

திண்டுக்கல் தனபாலன் said...

டைமிங்க் ஜோக்காக இருந்தாலும், பக்கத்தில் இருக்கும் நண்பனைப் போல் சர்வ சாதாரணமான வார்த்தைகளை கொண்டு பேசுவதில் சந்தானம் கில்லாடி...

ரஹீம் கஸ்ஸாலி said...

அகில உலக சந்தானம் ரசிகர் மன்ற தலைவர் சிவா வாழ்க வாழ்க.

M (Real Santhanam Fanz) said...

வணக்கம் பாஸ்... நம்ம தலைவர் தொடர்பான உங்கள் பார்வையை மிக சிறப்பான முறையில் பதிவு செய்தமைக்கு முதற்கண் நன்றிகள்.. சந்தானத்திற்க்காகவே ஒரு பிளாக் திறந்து அவர் தொடர்பான பதிவுகளையே மிக அதிகளவில் எழுதி கொண்டிருக்கும் பசங்க நாங்க... நீங்களும் அவ்வவ்போது சந்தானம் தொடர்பான பதிவுகள் எழுதி வருவது மிக்க மகிழ்ச்சியை தருகின்றது..
தமிழ் சினிமாவின் தடைகளும் சந்தானத்தின் பங்களிப்பும்

இது சுமார் ஒரு வருடத்திற்கு முன் நாம் எழுதிய ஒரு பதிவு(எமது ஐம்பதாவது சிறப்பு பதிவு), நீங்களும் ஒரு சந்தானம் ரசிகராக இருப்பதால் நேரம் கிடைப்பின் இப்பதிவினையும் பார்வையிடுங்கள்(சில வேலை நீங்கள் ஏற்கனவே வாசித்திருக்கலாம், எனினும் இங்கு வரும் ஏனைய சந்தானம் ரசிகர்கள் பார்க்கட்டுமே)

Anonymous said...

மேல கமெண்ட் போட்டது போது அக்கவுன்ட்ல இருந்து பாஸ்.. ///தமக்கே உரித்தான டைமிங் மற்றும் சிரிப்பு ஜாலங்களை வெளிப்படுத்தியதன் மூலமே அவர்கள் நீண்ட காலம் களத்தில் நிற்க முடிந்தது. அப்படி ஒரு நட்சத்திரம்தான் சந்தானம்!!///

அதேதான்.. யாரு வேணும்னாலும் காமெடியா நடிக்க ட்ரை பண்ணலாம், பட் நிலைச்சி நிக்கிறதுக்கு ஒரு யுனிக்னஸ் வேணும்.. அது நம்ம தலைவர்கிட்ட இருக்கு, அதுனாலத்தான் அவரு இப்போ டாப்புல இருக்காரு...

Anonymous said...

//'வடிவேலு இல்லாததால் தான் சந்தானம் காட்டில் மழை'/// இதெல்லாம் சும்மா, சந்தானத்தின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் எடுத்து விடுறது.... வடிவேலு நல்ல காமெடி நடிகர்தான், 2000 முதல் 2009 வரை உச்சத்தில் இருந்தவருதான்... ஆனால் அதுக்கப்புறம் கோர்ட்டு, கேஸு, அரசியல் பிரசாரம் அது இதுன்னு அவரோட பாதை திசை மாறி போயி, அதுவே அவருக்கான முடிவையும் உருவாக்கி விட்டுருச்சு.. அதே பீரியட்ல சந்தானத்தின் எழுச்சி உருவானதால், இப்படி ஒரு கட்டு கதை.. இப்போ அம்மா மன்னிச்சி வடிவேலு திரும்பவும் நடிக்க வந்தாலுமே, சந்தானத்தின் வளர்ச்சியை ஒன்னுமே பண்ண முடியாது...

Anonymous said...

//சந்தானத்திற்கு சமமான நகைச்சுவை உணர்வு கொண்ட சிவகார்த்திகேயன்///

ரைட்டு, இன்னொரு விஜய் டிவியின் கண்டுபிடிப்பு அன்ட் வளர்த்தெடுப்பு... ஆனாலும் அவரு காமெடி ஹீரோ கேரக்டருக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்னு சொல்லிட்டாரு... அவரு அவரின் பாதையில் சென்று பெரிய ஆளா வர்றதுக்கு ஒரு சந்தானம் ரசிகரா நாங்க வாழ்த்தனும்..
இவரு தமிழ்படம் சிவா போன்றோருக்கு நல்ல போட்டியா இருப்பாரு, அதையும் தாண்டி ஜெயிப்பாரு....

Anonymous said...

ஆகா மொத்தத்துல கண்ணுக்கெட்டிய தூரம்வரைக்கும் நம்ம தலைவர் சந்தானத்துக்கு போட்டிக்கு யாரும் இல்லை.. 2020 வரைக்கும் நாமதான்..அதுக்கப்புறம் பார்போம் என்ன நடக்குதுன்னு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கவுண்டமணியில் சாயலில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் டைமிங்...... டயலாக் டெலிவரின்னு கலக்கியெடுக்கிறார் சந்தானம்..... புன்னகை அரசியை நான் மட்டும் என்ன புழுங்கல் அரிசின்னா சொன்னேன் என்ற டயலாக்...... ஒரு சோறு பதம்.....!

arasan said...

பாஸ்கரன்ல உன் தலைய பாத்து நான் ஜெய்சங்கர் ரசிகனோ என்று நினைத்தேன் என்பது போன்று அடிக்கடி வரும் டைமிங் செம நக்கல் ... சிவா சார் நல்ல அலசல் , இன்னும் ரெண்டு மூன்று வருசத்துக்கு நல்ல ஒரு ரவுண்டு வருவார் என்பது என்னமோ உண்மைதான் ..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. சந்தானத்தின் பல காமெடிக் காட்சிகள் நானும் ரசித்துப் பார்ப்பேன்....

ஜோதிஜி said...

எடுத்த விசயத்தில் எழுத்தின் தரம் மெருகேறிக் கொண்டே வருகின்றது.

Unknown said...நல்ல விமர்சனம் அலசல் ஆய்வு
அலட்டிக்காம நடிக்கும் சந்தானத்தின் நடிப்பு சிறப்புதான்!

Related Posts Plugin for WordPress, Blogger...