CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, October 16, 2012

ஐ லவ் பாகிஸ்தான்....க்ரிக்கெட்!!                                             
சகோதர தேசங்களாக இருந்த பாரதமும், பாகிஸ்தானும் மோதிக்கொண்ட கார்கில் போரை விட மக்கள் பரபரப்பாக விவாதிப்பது அவ்வணி  வீரர்கள் களம் இறங்கும் க்ரிக்கெட் போட்டிகளைத்தான். விளையாட்டு அரங்கில் அமெரிக்கா - ரஷ்யா, ஆஸி - நியூஸி என பங்காளிகள் எத்தனை பேர் முட்டிக்கொண்டாலும் இந்திய - பாக் க்ரிக்கெட் போட்டியில் இரு தேசமெங்கும் பறக்கும் அனல் காற்றுக்கு நிகரில்லை. அது என்னமோ தெரியவில்லை கிரிக்கட் பார்க்க ஆரம்பித்த பால்ய பருவம் முதலே வெஸ்ட் இண்டீசுக்கு பிறகு மிகவும் பிடித்த அணியாக பாகிஸ்தான்தான் இருந்து வருகிறது..இன்று வரை. என்றும் அதில் மாற்றம் இருக்கப்போவதில்லை. சரி...ஏன் எனக்கு பாகிஸ்தான் க்ரிக்கட் அணி மீது இத்தனை காதல்?

க்ரிக்கெட்டை கூர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்கு நன்றாகத்தெரியும். பாக் அணியில் ஒரு இளம் வீரன் (குறிப்பாக 20 வயதுக்கு குறைவானவர்கள்) தனது நாட்டிற்காக முதல் போட்டியை ஆடும்போது மற்ற தேசத்து வீரர்களைப்போல 'எதிரணியின் சிறந்த வீரர், ஆயிரக்கணக்கான மக்களின் கூச்சல் சத்தம், இதில் சோபிக்காவிடில் நமது எதிர்காலம்...?' போன்ற எந்த தயக்கமும் இன்றி தனது முத்திரையை பதிப்பதுதான். உதாரணம் ஏராளம். வாசிம் அகரம், இன்சமாம், அக்தர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அது போக அந்நாட்டு வீரர்கள் பலரின் ஹேர் ஸ்டைலும் கவனத்தை ஈர்க்காமல் இல்லை. ரசிகர்கள் மத்தியில் தம்மை ஒரு ஸ்டைல் ஐகான் ஆக நிலைநிறுத்த முயலும் இளமைத்துள்ளலும் அவர்களுக்கே உரித்தான சொத்து.  

இவர்களுக்கு ஆதரவு தரப்போய் கலவரத்தில் சிக்கிய அனுபவங்கள் எனக்கு கணிசமாக உண்டு. ஒருமுறை பாகிஸ்தான் அணி சேப்பாக்கம் அரங்கில் இந்தியாவுடன் டெஸ்ட் போட்டி ஆடிய சமயம். டி.வி.யை விட்டு நேரடியாகவே  க்ரிக்கட் பார்த்தது அதுவே முதல் முறை. போட்டி துவங்க சில நொடிகள்தான். சடகோபன் ரமேஷ் முதல் பந்தை எதிர்கொள்கிறார். பௌலர் வக்கார் யூனஸ். அரங்கம் முழுக்க 'ரமேஷ்...ரமேஷ்..' என்று அதிர வைக்க நான் உரக்க கத்தியதோ 'வக்கார்...வக்கார்' என்று. என் அருகில் இருந்த கூட்டத்தின் ஒரு பகுதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை போல. நானிருந்த திசை நோக்கி அம்முகங்கள் சீற்றத்துடன் உற்றுப்பார்த்தன. 'யார் அந்த துரோகி' என்று அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனது நண்பன் அருணின் நண்பர்கள் மட்டும் 'டேய்..என்னடா உன் ப்ரெண்டு...' என்று அங்கலாய்த்தனர். அருண் 'ஏண்டா?' என்று அந்து நொந்தான். 'சாரிடா..விளையாட்டை விளையாட்டா பாருங்கடா. உனக்கு பிடிக்கலன்னா சொல்லு. இப்பவே கெளம்பறேன்' என்று நான் சொன்னதற்கு பதில் சொல்லாமல் இருதலைக்கொள்ளியாக தவித்த வண்ணம் ஆட்டத்தை பார்க்க ஆரம்பித்தான்...பாவம்.                   

                                                       
அதுபோல கல்லூரி படித்த சமயத்தில் இந்திய - பாக் அணிகள் மோதிய இன்னொரு போட்டிக்கான நாளில் இந்திய அணி தோற்கும் என்று சொன்னதற்கு கடைசி பெஞ்சில் இருந்து ஆஜானுபாகு தோழன் லிங்கதுரை என்னை நோக்கி பாய்ந்து அடிக்க வந்தான். நண்பர்கள் இடையே புகுந்து தடுத்ததால் மட்டுமே இன்றும் 32 பற்கள் தெரிய தமன்னாவை ரசிக்க முடிகிறது என்னால். சில மாதங்களுக்கு முன்பு இதுபோல இன்னொரு இந்திய - பாக் ஆட்டம் நடந்த நாளில் 'ஜெய் பாகிஸ்தான்' கொடி பிடித்ததை கண்டு சினம் கொண்ட உயரதிகாரி ஒருவர் 'நீயெல்லாம் ஏண்டா இந்தியாவுல இருக்க?' எனும் புராதன வசனத்தை உரக்க கத்தி பேசினார். சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க...லேசான நில அதிர்வு.  தனியே அழைத்து சென்று அவரிடம் பேசினேன். 'இந்தியன் என்பதை காட்டிக்கொள்ள இந்நாட்டு க்ரிக்கட் ரசிகனாக இருத்தல் மட்டுமே முக்கிய காரணமெனில் அது இந்த ஜென்மத்தில் நடக்க வாய்ப்பில்லை' என்று நான் சொன்னதும் மீண்டும் முறைத்தார். தொடர்ந்தேன்.

அவருக்கு சில கேள்விகளையும் முன் வைத்தேன். 'பிரபல்  க்ரிக்கட் வீரர் ஸ்ரீகாந்தின் மகன் பெயர் என்ன?'..பதில் 'அனிருத்'.  இதுபோல உலக அரங்கில் பெரிதும் பரிச்சயம் இல்லாத வீரர்கள் பெயர்களைக்கூட சரியாக சொல்லிக்கொண்டே வந்தார். 'இறுதியாக ஒரு கேள்வி? 26/11 மும்பை குண்டு வெடிப்பில் உயிர் நீத்த காவல் துறை அதிகாரி இருவர் பெயரை சொல்ல முடியுமா?'....எனது கேள்விக்கு சில நொடிகள் பலத்த மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தார். இறுதியாக அவர் கூறியது 'புரிந்து கொண்டேன்'. அவரிடம் இறுதியாக சொன்ன தகவல் 'கார்கில் போரில் இறந்து கிடந்த பாகிஸ்தான் வீரர்கள் பலரின் பர்ஸை நமது வீரர்கள் சோதனை செய்த போது அவற்றுள் பெரிதும் தென்பட்ட புகைப்படங்கள் யாருடையது தெரியுமா?' சச்சின், ஷாருக், கஜோல்...'   

ஆதிகாலம் முதல் இவ்வுலகம் கண்ட போர்கள் கணக்கிலடங்கா. பங்காளி தேசங்கள் பரம்பரை பரம்பரையாக பாராமுகம் கொண்டிருந்த காலமும் இருந்ததுண்டு. இன்றும் உள்ளது இந்தியா பாகிஸ்தான் வடிவில். ஆனால் எந்த நேர்மையான சக்கரவர்த்தியும் எதிர் தேசத்தை பழிவாங்க கலை மற்றும் விளையாட்டு துறையினரை அவமரியாதை செய்ததே இல்லை. அது மரபும் அல்ல. இன்று இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் இணைந்து ஜொலிக்கும் இந்தியாவின் ரோகன் போபண்ணா  மற்றும் பாகிஸ்தானின் அசம் குரேஷி போன்ற இளைஞர்களின் ஒற்றுமை இருதேச க்ரிக்கட் ரசிகர்கள் மனதில் இருக்கும் போலி போர் மனோபாவத்தை ஒழிக்கும் வலுவான காரணி என்பது மிகையில்லை.     

                                                            Indo-Pak Express: Qureshi & Bopanna           
   
லஞ்சம் வாங்கி தேசத்திற்கு துரோகம் செய்யும் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தருவது முட்டாள்தனம் என்ற முனகல்களும் கேட்காமல் இல்லை. உலக கிரிக்கட் ரசிகர்களே ஒட்டுமொத்தமாக மதித்த முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஹான்ஸி க்ரோன்யே, இந்தியாவின் அசாருதீன், ஜடேஜா யார்தான் தேசத்தை ஏமாற்றவில்லை. சைக்கிள் போட்டியில் உலகை ஆண்ட லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் எனும் வீரர் கூட போதை மருந்து உட்கொண்டதால் சமீபத்தில் அவரிடமிருந்த பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. அதற்கு முன்பு வரை அவரும் ஆதர்ஷ நாயகனே.

அத்தகு தவறான செயல்களால் தனது மண்ணின் ரசிகர்களை ஏமாற்றும் வீரர்களை தவிர்த்து,  பாகிஸ்தானுக்காக ஆடும் அனைத்து வீரர்களுக்கும் எனது ஆதரவும், கைத்தட்டலும் என்றும் தொடரும்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவிற்கு வந்து ஆடவுள்ள பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற வாழ்த்தும் ஷாஹித் அப்ரிதி ரசிகன்...!!
.............................................................................

        

7 comments:

"ராஜா" said...

இந்திய அணி எப்பொழுதும் குறிப்பிட்ட மூன்று நான்கு வீரர்களை நம்பியே இருக்கும் அவர்கள் நன்றாக விளையாடும் சமயங்களில் தொடர் வெற்றியும் , அவர்கள் சொதப்பும் சமயங்களில் தொடர் தோல்வியும் மாற்றி மாற்றி கிடைக்கும் , ஆனால் பாக்கிஸ்தான் அணி அவ்வாறு கிடையாது வெற்றியும் தோல்வியும் ஒட்டு மொத்த அணியின் செயல்பாட்டை பொறுத்தே அமையும் ... இந்த விசயத்தில் எனக்கும் பாகிஸ்தானை பிடிக்கும் (தென் ஆப்ரிக்காவுக்கே இதில் முதல் இடம்) ஆனால் சின்ன வயசில் இருந்து என்னையுமறியாமல் திணிக்கப்பட்ட தாய் நாட்டு பாசம் விளையாட்டை விளையாட்டாக பார்க்க விடாமல் தடுக்கிறது ..

முத்தரசு said...

படிக்கல

நமக்கும் கிரிகட்டுக்கும் ஏலர

அஞ்சா சிங்கம் said...

அரே சைத்தான் கி பச்சா ........

இப்படி நான் கூட திட்டு வாங்கி இருக்கேன் .
எனக்கு என்னவோ இந்திய அணிக்கு எதிராக விளையாடும் எல்லா அணியும் பிடிக்கிறது .
எப்படியோ கிரிக்கட் ஒழிந்தால் சரி ................

CS. Mohan Kumar said...

உங்க அளவுக்கு இவ்விஷயத்தில் எனக்கு பெரிய மனசு இல்லை.

ஒரு விதத்தில் பார்த்தால் பாகிஸ்தானிகள் மீது நமக்கிருக்கும் கோபத்தை ஓரளவு தீர்த்து கொள்ள பாக்குக்கு எதிரே நாம் கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை மக்கள் பயன்படுத்துகிறார்கள் போலும்

Unknown said...


விளையாட்டை விளையாட்டாகவே
பார்க்க வேண்டும் என்ற தங்கள் கருத்து எனக்கும் உடன்பாடே!

சதீஷ் செல்லதுரை said...

உண்மையான விஷயம் தலிவா....தேசப்பற்றை கிரிக்கெட்டில் காண்பிப்பதுதான் பேஷன்...அந்த டெம்போவை எப்படித்தான் நம்ம மண்டைக்குள்ள ஏத்துரான்களோ?

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

உங்களுக்கும் பட்டிங்கை இட பௌலிங் பிடிக்கும் போலிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் எனும்போது புரிகிறது, ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர்களை அசால்டாக உருவாக்கிய நாடுகள் அவை.

Related Posts Plugin for WordPress, Blogger...