CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, September 24, 2012

Fire in Babylon                                                               

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த தேசத்தில் கிரிக்கெட் பாதிப்பு இல்லாத இளைஞர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நானும் விதி விலக்கல்ல. ஆனால் கிரிக்கெட் எனக்கும் பரிச்சயம் ஆன நாள் முதல் இன்றுவரை பிடித்த அணி இந்தியா அல்ல. என்றும் இருக்கப்போவதுமில்லை. எத்தனை ஆட்டங்களில் தோற்றாலும் எனது அபிமான அணியாக இருப்பது வெஸ்ட் இண்டீஸ். (அடுத்ததாக பாகிஸ்தான்). காரணம் இரண்டு: அண்டை வீட்டு சாலிடர் ப்ளாக் அண்ட் டி.வி.க்களில் முதன் முதலில் இவ்விளையாட்டை  பார்க்க ஆரம்பித்த நாட்களில் விவியன் ரிச்சர்ட்ஸ் எனும் வீரரின் ஸ்போர்ட்ஸ்மன்ஷிப்பை கண்டு அவரின் தீவிர ரசிகன் ஆனது. மற்றொன்று வெற்றி, தோல்வி குறித்து பெரிதாக ரியாக்ட் செய்யாமல் ஆட்டத்தை ரசிக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பண்பு.  இந்த அணி பற்றி ஒரு ஆவணப்படம் திரைக்கு வந்தால் பார்க்காமல் இருக்க இயலுமா? பார்த்தாகிவிட்டது.

ஜமைக்கா, பார்படாஸ், கயானா உள்ளிட்ட ஏழு குட்டி நிலப்பரப்புகளில் இருந்த வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் எனும் குடையின் கீழ் கிரிக்கெட் உலகை கலக்கிய நிகழ்வுகளை கொண்டதுதான் பயர் இன் பாபிலோன். விவ்  ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயட், கார்டன் க்ரீனிட்ஜ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் தமது கறுப்பின மக்கள் சந்தித்த பல்வேறு ரணங்களுக்கு கிரிக்கெட் வாயிலாக எப்படி தீர்வு கண்டனர் என்பதை படம் நெடுக விளக்குகின்றனர். இடையிடையே 1975 முதல் 1995 வரை அந்த அணி கோலோச்சிய கால கட்டத்தை வீடியோ மற்றும் போட்டோ தொகுப்புடன் விவரிக்கின்றனர். 

'வெஸ்ட் இண்டீஸ் கலக்குனது எல்லாம் ஒரு காலம் இப்பதான் ஒண்ணுமே இல்லாம ஆயிட்டாங்களே?' என்று அசால்ட்டாக சொல்லும் கிரிக்கெட் ரசிகர்களே. ஒன்று தெரியுமா? உலக அரங்கில் குழு விளையாட்டில் எந்த ஒரு அணியும் 15 ஆண்டுகள் இவர்களைப்போல் டாமினேட் செய்ததில்லை. இன்றுவரை. 1980 முதல் 1995 வரை ஒரு டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை இவர்கள். எத்தனை முறை தோற்றாலும் வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ்தான். மால்கம் மார்ஷல், வால்ஸ், ஆம்ப்ரோஸ், லாரா, க்ரிஸ்  கெயில் என்று இடைவிடாமல் ஒரு சிங்கமேனும்  தனது தேசத்தின் கொடியை பறக்க விட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 1975 ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்த அணி வீரர்களை வெறும்  ஜோக்கர்களாக பிரிட்டிஷ்காரர்கள் பார்த்த காலம் அது. டென்னிஸ் லில்லி, ஜெப் தாம்சன் எனும் இரு ஆஸ்திரேலிய வீரர்கள்தான் அப்போது பிஸ்தா ஸ்பீட் பவுலர்கள். அப்போது (1975) ஆஸிக்கு சென்ற மே.இந்திய தீவு வீரர்கள் பெரும்பாலோனோர் புதியவர்கள். அணித்தலைவன் க்ளைவ் லாயட் சந்தித்த முதல் மற்றும் கடைசி விஷப்பரிட்சை. 'என் தல' சிங்கக்குட்டி ரிச்சர்ட்ஸின் வயது அச்சமயம் வெறும் 18. ஆயிரக்கணக்கான வெள்ளைத்தோல் ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்த அவமானம் ஒருபுறம். வலுவான ஆஸி அணி மறுபுறம். இங்கிலாந்து செல்லும்போதும் இதே அவமானங்கள். விளைவு...செமத்தியான தோல்வி.  'ப்ளாக் பாஸ்டர்ட்' என்று வெள்ளையர்கள் எகத்தாளம் செய்ததை வலியுடன் நினைவு கூறுகிறார் ரிச்சர்ட்ஸ். இதுபோல் அவ்வணி வீரர்கள் கூறிய விஷயங்கள் சில: 

'நான் கருமையானவன்தான். ஆனால் பாஸ்டர்ட் இல்லையே' - என ரிச்சர்ட்ஸ் பேசும்போதும், 'கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்று நினைத்தேன். ஆனால் எங்களை காட்டுமிராண்டிகள் போல ஆங்கில பத்திரிக்கைகள் சித்தரித்தது மனதை வருத்தியது' என்று ஹோல்டிங் கூறும்போதும் ஏற்படும் வலியை படம் பார்க்கும் எவராலும் தவிர்க்க இயலாது. தோலின் நிறம் எதுவாயினும். வெவ்வேறு தீவுகளை சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைப்பது மிகக்கடினமான செயல். "ஒவ்வொரு தீவைச்சேர்ந்த மக்களின் பேச்சு வழக்கு, உணவு, கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் உலக அரங்கில் தங்கள் கறுப்பினம் ஒருமுறையேனும் தலைநிமிர வேண்டுமெனில் அது கிரிக்கெட்டால் மட்டுமே சாத்தியம் என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர். நாங்களும்தான்''  என்கிறார் மைக்கேல் ஹோல்டிங்.    
                   
                                               அன்றும் இன்றும் என்றும் ஒரே தல - விவ் ரிச்சர்ட்ஸ்

அறுபதுகளில் வெஸ்ட் இண்டீஸ் சுதந்திரம் பெற்றாலும், தங்கள் ரத்தங்களான தென் ஆப்ரிக்க கறுப்பின மக்கள்  இனவெறியால் ஒடுக்கப்படுவதை கண்டு கொதித்து போயினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். பல்வேறு அரசியல் தடைகளை தாண்டி தென் ஆப்ரிக்காவில் விளையாட சென்றனர். இவர்களின் துணிச்சலை சிறையில் இருந்தவாறு பாராட்டியவர் நெல்சன் மண்டேலா. மைக்கேல் ஹோல்டிங், கோலின் கிராப்ட், மைக்கேல் ஹோல்டிங் மற்றும் ஆறடி எட்டங்குல உயரமுள்ள ஜோயல் கார்னர் வீசிய புயல்வேக பந்துகள் இங்கிலாந்து,ஆஸி உள்ளிட்ட அனைத்து நாட்டு பேட்ஸ்மேன்களின் உடல்களை பதம் பார்த்த காட்சிகள் அதிரடி. குறிப்பாக இவர்களின் பந்து வீச்சை  கண்டு மிரண்டவாறு கவாஸ்கர் புலம்புவது, 'எனக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். சற்று பார்த்து பந்து வீசவும்' என இங்கிலாந்து வீரர் கெஞ்சுவது போன்ற சுவாரஸ்யங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.   

1974 முதல் 1991 வரை தான் ஆடிய ஒரு போட்டியில் கூட ஹெல்மெட் அணிந்ததில்லை தலைவன் ரிச்சர்ட்ஸ். அந்த கெத்துதான் என் போன்ற ரசிகர்கள் அவரை சச்சின் போன்றோரைத்தாண்டியும் கொண்டாட வைக்கின்றன. எதற்கு உயிரைப்பணயம் வைத்து ரிஸ்க் எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு ரிச்சர்ட்ஸ் படத்தில் சொல்லும் பதில்: "ஹெல்மெட் எல்லாம் எனக்கு எதற்கு? ஒற்றை பபில் கம்மை மென்றவாறு க்ரீஸில் நிற்பேன். சில சமயம் அதிரடியாய் முகத்திலும், உடலின் பிற பகுதியிலும் மின்னல் வேக பந்தை வீசி காயப்படுத்துவார்கள் வெள்ளைத்தோல் வீரர்கள். அந்த தெனாவட்டில் என்னருகே வந்து உற்றுப்பார்ப்பார்கள். நானும் நக்கலாக பார்ப்பேன். வெறுப்பில் அடுத்த பந்தை வீச எதிர்ப்பக்கம் செல்வார்கள். 'பலத்த அடிபட்டும் ஒன்றும் நடக்காதது போல் நிற்கிறானே? நடிப்பா?' என்றெண்ணி சட்டென என்னை மீண்டும் திரும்பி பார்ப்பார்கள். அப்போதும் நான் தருவது அதே ரியாக்சனைத்தான். நொந்து போவார்கள் பாவம். அடுத்த பந்துகளில் வைப்பேன் ஆப்பு. சிக்சர் மற்றும் பவுண்டரிகளால்'. தலயின் இந்த தில்லான ஆன் கிரவுண்ட் ரியாக்சனை பதிவு செய்துள்ளது அருமை. 

வெறும் விளையாட்டு சம்மந்தப்பட்ட டாக்குமெண்டரி படமாக இதை கணக்கில்  எடுத்துக்கொள்ள முடியாது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமே உரித்தான படமாகவும் இல்லை. நிறவெறியர்களால் கீழ்த்தரமாக நடத்தப்பட்ட மக்களின் உணர்ச்சிப்பெருக்கை உணர்ந்து க்ளைவ் லாயட் மற்றும் எனது தானைத்தலைவன் விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரின் தலைமையில் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட புரட்சி என்றே சொல்லலாம். அதற்கான ஏராளமான சாட்சி மற்றும் ஆதாரங்களை கொண்டதுதான் இந்த பயர் இன் பாபிலோன்.

Fire in Babylon - Breathtaking Bouncer.
.......................................................................
..........................................
சமீபத்தில் எழுதியது:


.........................................
                       
.............................                        
My other site:
agsivakumar.com
...........................


5 comments:

pichaikaaran said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... க்ரிக்கெட்டை கண் மூடி தனமான எதிர்க்காமல், ஆதரிப்பிலும் எதிர்ப்பிலும் அறிவு பூர்வமாக செயல்படுகிறீர்கள்..பாராட்டுகிறேன்

Doha Talkies said...

மறக்கமுடியாத வீரர் ரிச்சர்ட்ஸ்,
இன்றும் அவர் ஆட்டத்தின் ரசிகன் நான்.
http://dohatalkies.blogspot.com/2012/09/the-usual-suspects.html

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிக்சர்களின் தலைவன் அல்லவா ரிச்சர்ட்ஸ்.57 பந்துகளில் டெஸ்ட் மேட்சில் சதம் அடித்து இங்கிலாந்தைக் கதற வைத்ததை கேள்விப் பட்டிருக்கிறேன்.மேற்கிந்திய வீர்கள் பெருமைப் படுத்தப் பட வேண்டியவர்களே. நல்ல விளக்கமான கட்டுரை.அவர்கள் இன்னொரு முறை உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு

சீனு said...

இப்போ கிரிகெட் பாக்ரதே கிடையாது... அதுலயும் இந்திய விளையாண்டா வேணா எப்போவாது பார்ப்பேன்... உங்க அளவுக்கு டீடைல் தெரியாது தலைவா... நீங்க ஆடுங்க...

கறுப்பின மக்கள் பற்றி நீங்கள் எழுதி இருந்த வரிகள், அவர்கள் விளையாட்டின் தன்மை.... தே ராக்ஸ்

ராஜ் said...

ரொம்ப சுவாரிசியம்மா எழுதி இருக்கீங்க. இந்த டாக்குமெண்டரி பத்தி கேள்விப்பட்டது இல்ல. கிரிக்கெட் வரலாறு, மற்றும் WI கிரிக்கெட் மேல எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. கண்டிப்பா பார்கிறேன். ட்ரைலர் செம..

Related Posts Plugin for WordPress, Blogger...