CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, September 22, 2012

சாட்டை   
பசங்க, தோனி வரிசையில் பள்ளி மாணவர்களின் பிரச்னைகளை அடிமட்டம் வரை சென்று அலச முற்பட்டிருக்கும் படம்தான் சாட்டை. மைனா எனும் ஒற்றை பட வெற்றியின் மூலம் பிரதான இயக்குனர்கள் லிஸ்டில் இடம் பெற்றுள்ள பிரபு சாலமனின் தயாரிப்பு. ஜிகிரி தோஸ்து சமுத்திரக்கனி இன்றி சசி சுந்தர பாண்டியானார் என்றால், சசியின்றி கனி தயாளன் சாராகி இருக்கிறார். கனாக்காணும் காலங்கள் போன்ற 'மாணவர் போற்றுதும்' சீரியல்களை பார்க்காத எனக்கு இக்களம் கொஞ்சம் புதிது. ஆனால் விடாமல் விஜய் டி .வி.யில் க.கா.கா பார்த்தவர்களுக்கு சாட்டை - மேட் இன் பிளாஸ்டிக் மட்டுமே. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அரசுப்பள்ளி ஒன்றிற்கு புதிதாக வந்து சேர்கிறார் ப்ரோட்டோகனிஸ்ட் ஆசிரியர் தயாளன்(ச.கனி). அடங்காத மாணவர்கள், அலட்சியமாய் காலம் தள்ளும் ஆசிரியர்கள், கையாலாகாத தலைமை ஆசிரியர்(ஜூனியர் பாலையா), சட்டாம்பிள்ளை துணைத்தலைமை ஆசிரியர்(தம்பி ராமையா) என பதினேழு வருடம் உருப்படாமல் கிடக்கும் பள்ளியின் தலை எழுத்தை டஸ்டரில் துடைத்தெறிந்து ஒரு புதிய வரலாற்றை உருவாக்க முனைகிறார் தயாளன் சார் என்று நான் சொல்லியா தெரிய வேண்டும்?     

ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் தம் கருத்தினை சொல்ல புகார் பெட்டி வைத்தல், மாறுபட்ட கல்விப்பயிற்சி எனப்பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தும் ஆசிரியராக கனியின் நடிப்பு இயல்பு. கோமாளி போல தம்பி ராமையா செய்யும் அதிகப்படியான உடல்மொழி முற்றிலும் செயற்கை. 'ப்ளாக்' பாண்டி நகைச்சுவை சுமார்தான். அமுல்பேபி போல இருக்கும் பள்ளி ஜோடிகள் செய்யும் மேற்பூச்சான காதல் மண்டை சொறிய வைக்கிறது. இதையெல்லாம் தாண்டி முதல் பாதி விறுவிறுவென நகரத்தான் செய்கிறது. அத்துடன் தியேட்டரை விட்டு சிதறி ஓடி இருக்க வேண்டும். 'டிக்கட்டுக்கு தந்த மீதி காசு வேஸ்ட் ஆக அப்பன் என்ன ஏ.டி.எம் மிஷினா வாங்கி வச்சிருக்கான். முழுசாப்பாருடா கொய்யாங்கோ' என்று மிடில் கிளாஸ் மனசாட்சி மிரட்டி எடுத்தது.

இடைவேளைக்கு பின்பு அந்தக்கால தூர்தர்ஷன் டப்பா டிராமாக்களுக்கு சவால் விடும் வகையில் காட்சி அமைப்பு. இயக்குனர்கள் எல்லாம் தயாரிப்பார்கள் ஆனால் லோ பட்ஜெட்டில் படமெடுப்பது கோடம்பாக்க குலவழக்கம். அதற்காக பிரபு சாலமன் இப்படி லோயஸ்ட் பட்ஜெட்டிலா எடுத்தாக வேண்டும்? படம் பார்க்கிறோம் எனும் உணர்வையே ரசிகர்களுக்கு தராமல் எடுக்கப்பட்ட திரைக்கதை, ஒரே ஸ்கூலில் ஓராண்டு நாமும்  அடைபட்ட பீலிங்கை தரும் கேமரா கோணங்கள்...யப்பா சாமி. 

                                                                  
'இந்த ஸ்கூல சொடுக்கு போடற நேரத்துல மாத்திக்காட்டுறேன்' என்று ஒரு ஆசிரியர் சினிமாவில் மட்டுமே அறைகூவல் விடுக்க முடியும். அதுவும் தனது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் சிற்பிகள் ஆக்குகிறார் என்றால் கூட ஓரளவு நம்பலாம்.ஆனால் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்களையும் செதுக்குவது...ஆனாலும் நீங்க ரொம்ப குறும்பு இயக்குனரே. டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி வந்து கடைசி பெஞ்சில் கல்ப் அடிப்பது, லேசாக ஆசிரியர் கண்டித்தால் கூட சாதிப்பேரை சொல்லி திட்டியதாக அவர்கள் மேல் வீண் பழி சுமத்துவது என சில அரசுப்பள்ளி மாணவர்கள் குறித்து நாளிதழ்களில் வரும் செய்திகளை படமாக்கி இருக்கலாம். அதை விட இளம்ஜோடிகளை சேர்த்து, பிரித்து, டூயட் பாட விட்டு, டூ போட விடாமல் இருந்தால் அது தமிழ் சினிமா ஆகிவிடாதே? எனவே அந்த புண்ணிய காரியத்தை சிரமேற்கொண்டு பணியாற்றி உள்ளார் அன்பழகன் - தி இயக்குனர்.

இடைவேளை துவங்கி இறுதிக்காட்சி வரை புல்லரிக்க வைக்கும் காட்சிகள் மென்மேலும் மானாவாரியாக வெளுத்து வாங்கிக்கொண்டே இருந்தது என்றால் அது மிகையில்லை. விளையாட்டு, கல்சுரல் போட்டி என்று பள்ளிகள் மோதும்போது 'உன்னால் முடியும் தம்பி' என்று கதாநாயக ஆசிரியர் தனது அணிக்கு தம்ஸ் அப் சொல்லுவார். திடீர் சோதனை வரும். அதையும் தாண்டி அந்தக்குழு வெற்றி பெறும். என்னத்த புதுசா? அதுவும் சாட்டையில் குட்டி ஹீரோ எலுமிச்சம்பழ சாறை கண்ணில் ஊற்றியவாறு ஓட்டப்போட்டியில் வெற்றி பெறுதல்..பலே குஸ்கா. 

அருமையாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் இப்படி சொதப்பி தள்ளி விட்டதில் வருத்தம்தான். ஸ்டான்லி கா டப்பா(ஹிந்தி) போன்ற சிறந்த படைப்புகளை தயவு செய்து நம்மூர் இயக்குனர்கள் ஒரு முறை பார்த்துவிட்டு பள்ளிப்பிள்ளைகள் குறித்த படங்களை எடுத்தால் கோடி புண்ணியம்.

சாட்டை - சமுத்திரக்கனி மட்டும் பாஸ்(boss/pass) !! 
.............................................................................   

........................
My other site:
agsivakumar.com                            
........................

.........................................
சமீபத்தில் எழுதியது:

கரீனா கபூரின் 'ஹீரோயின்' - விமர்சனம்
........................................
                                

7 comments:

Yoga.S. said...

அலட்டலில்லா,நடுநிலை விமர்சனம்.பார்க்கலாம்,நன்றி!

Unknown said...

/// எலுமிச்சம்பழ சாரை /// இந்த இடத்தில் சாறை என்று வரவேண்டும். நீங்கள் ஆகச்சிறந்த பதிவர் ஆகவேண்டும் என்றால் இன்னும் வளர வேண்டும்.

/// முழுசாப்பாருடா கொய்யாங்கோ' என்று மிடில் கிளாஸ் மனசாட்சி மிரட்டி எடுத்தது. ///
நான் இத்தனை நாளாக உங்களை ஏழை பதிவர் என்று தானே நினைத்திருந்தேன். நீங்கள் ஏழையை விட சற்று மேலா. அப்படினா இனி காந்தி சிலையின் கீழ் நடக்கும் பதிவர் சந்திப்புக்கு வர நீங்கள் ஏழை பதிவர்களின் அனுமதியை பெற வேண்டும்.

! சிவகுமார் ! said...


@ யோகா

நன்றி யோகா.

! சிவகுமார் ! said...


@ ஆரூர்.மூனா.செந்தில்

சின்ன எலுமிச்சை என்பதால் சின்ன ரா போட்டேன் (எஸ்கேப்). போன வாரம் நடந்த ஜீரோ பட்ஜெட் பதிவர் சந்திப்புலயே நம்ம ஏழ்மை நிலையைக்கண்டு நாலு பேரு செவந்த கண்ணோட கெடக்காங்க!!

CS. Mohan Kumar said...

ஒழுங்கா வர வேண்டிய படம் சொதப்பிட்டாங்க என தெரியுது. இன்னும் பள்ளி காதலை ஏன் தான் சினிமாவில் காட்டுகிறார்களோ :((

RVS said...

நல்ல விமர்சனம். ஒரு கேமரா ரெண்டு ஆக்டர்கள் ஒரே லொகேஷன் வைத்து எடுத்தால் யதார்த்த படம் என்று சொல்லுவார்கள் சிவா! :-)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

/இந்த ஸ்கூல சொடுக்கு போடற நேரத்துல மாத்திக்காட்டுறேன்' என்று ஒரு ஆசிரியர் சினிமாவில் மட்டுமே அறைகூவல் விடுக்க முடியும்.//
நடுநிலையான விமர்சனம்.

Related Posts Plugin for WordPress, Blogger...