'ஆள் பார்க்க ஸ்டைல் ஐக்கான் மாதிரி இருக்காரே. வாங்கிப்போடு கருப்பு கலர் சேகுவாரா டி ஷர்ட்டை' என அந்த மாமனிதனின் வரலாறு குறித்த சிறு புரிதல் கூட இன்றி அவரது முகம் பதிந்த ஆடையை அணியும் இளைஞர்களுக்கு பஞ்சமேது. அதுபோல 'இறைவன் இல்லை' என்ற நிலைப்பாட்டில் இருக்கும் 'நாஸ்தி'கர்களும் குறிப்பிட்ட அளவில் அண்டமெங்கும் வியாபித்து உள்ளனர் என்பதறிவோம். நான் அறிந்தவரை கணிசமானவர்கள் பெரியாரை ரோல்மாடலாக கொண்டு வலம் வருவதுண்டு. ஆன்மிகம், பகுத்தறிவு இவ்விரண்டின் மீதான சராசரி அறிவினை பெற்றிருக்கும் இறைமறுப்பாளர்கள் பற்றி இறை நம்பிக்கை உள்ள எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் திடீர் அல்லது அரைவேக்காடு நாத்திகர்கள், அதீத ஆன்மீக ஆர்வக்கோளாறால் மூடப்பழக்கத்தில் மூழ்கி இருக்கும் பக்தர்களை விட பரிதாபமாகவே எம் கண்களுக்கு தென்படுகின்றனர்...ஜீசஸ்!!
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நாத்திகர்களின் செய்யும் அர்ச்சனைகள் இவை மட்டுமே: 'கடவுள் இருக்காரா? எங்க காட்டு பாக்கலாம்?' அல்லது 'பூகம்பம், விபத்துன்னு எத்தனை அப்பாவிங்க சாகறாங்க. அப்ப உங்க கடவுள் எதுக்கு வேடிக்கை பாத்துட்டு இருந்தாரு?'. நூற்றாண்டுகளைத்தாண்டி இதே பல்லவி. இதைமீறி சமூகத்தில் ஒரு சாமான்ய நாத்திகனால் பெரிதாக எதைக்கிழிக்க முடிந்தது என்பது பெருங்கேள்வி. பகுத்தறிவாளன் எனப்படுபவன் கடவுள் பெயரால் ஊரை அடித்து உலையில் போடுபவனையும், பக்திப்பெருக்கால் பெரும் செல்வத்தை வீண்விரயம் செய்பவனையும் கண்டு மனம் நொந்து போகிறான். சீரிய அணுகுமுறையால் இவ்விரு ஈனர்களின் அக இருள் நீக்கி தெளிவான பாதையை காட்டும் பகுத்தறிவாளியை இறைவனும் கொண்டாடத்தான் செய்வான். அதேநேரத்தில் நாஸ்திகர்கள் தாம் போகிற போக்கில் வழிபாட்டு முறைகளை கிண்டல் செய்யும் அளவிற்கு இழிவானதல்லவே ஆன்மீகம்.
இயற்கையை காக்கும் பொறுப்புணர்வு, நவீன கால விஞ்ஞானிகளே வியக்கும் வண்ணம் அற்புத கலைவடிவமாய் நிலைத்து நிற்கும் ஆலயங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் சில பண்டிகைக்கொண்டாட்டங்களுக்கு பின்னே ஒளிந்திருக்கும் அறிவியல் பின்னணிகள் என எண்ணிலடங்கா அதிசயங்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் பொக்கிஷம்தான் ஆன்மீகம். இதற்கான ஒப்புதல் உலகம் போற்றும் விஞ்ஞானிகள் வாயிலாகவே தொடர்ந்து வந்து கொண்டிருப்பது உலகறிந்தது. இறைவனை துதிப்போரை ஆண்டாண்டு காலம் ஏளனம் செய்யும் நாஸ்திகர்களில் எத்தனை பேர் சற்று நேரமொதுக்கி ஆத்திகன் ஒருவனின் ஒரேயொரு மூடப்பழக்கத்தையேனும் ஒழித்துள்ளனர்?
பெரியார் எனும் மாமனிதன் தன் வாழ்நாள் முழுக்க இறைதுவேஷம் செய்வதை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தாரா? அப்படி இருந்திருப்பின் பெரியாரை இவ்வுலகம் கொண்டாடித்தான் இருக்குமா? பெண்ணுரிமை உள்ளிட்ட பல்வேறு தேசநலன் சார்ந்த செயல்களை முன்னெடுத்து சென்ற அப்பெரியவரின் வழிநடப்பவன் என்கிற பெயரில் அரைவேக்காடுகளாக திரியும் கருப்பு சட்டைகளின் வர்ணம் மாற இன்னும் எத்தனை யுகங்களாகும்?
குறிப்பிட்ட மதத்தில் நடக்கும் மூடப்பழக்கங்களை மட்டுமே விமர்சிக்கும் திரையுலக மற்றும் அரசியல்வாதிகளின் தீரம் வெகுவாக போற்றத்தக்கது. எந்தமதத்தை சீண்டினால் சீறாமல் இருப்பார்களோ அவர்கள் மீதே ஆண்டாண்டு காலம் வசை மாறிப்பொழிதல் ஆண்மையற்ற நாஸ்திகம். அம்மன் கோவில் ஆடிமாத விழாக்களில் ப்ளெக்ஸ் பேனர், குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட உட்பிரகாரங்கள் என ஆன்மிகம் பல்வேறு தளங்களில் நவீனத்தை நோக்கி அடுத்த கட்டத்தை(!) எட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருக்கும் போலி நாஸ்திகர்களே....ரிக்கார்டை மாற்றிப்போடுங்கள்.
பெற்றோர்கள் அல்லது அறிவிற்சிறந்த ஆசான் மூலமாகவோ, இல்லாவிடில் தெளிவான சுய தேடுதல் மூலமாகவோ பகுத்தறிவை உள்வாங்கிக்கொள்ளும் நபர்கள் மூலம் வெளிவரும் சிந்தனைகளுக்கும், பெரியாரின் முகமூடியை சரிவர பொருத்திக்கொள்ளக்கூட முடியாமல் திணறும் தீரர்களுக்குமான வித்யாசத்தை சரிவர உணரும் வரை....பக்தா...கட உள்!!
.................................................................................
12 comments:
//பகுத்தறிவாளன் எனப்படுபவன் கடவுள் பெயரால் ஊரை அடித்து உலையில் போடுபவனையும், பக்திப்பெருக்கால் பெரும் செல்வத்தை வீண்விரயம் செய்பவனையும் கண்டு மனம் நொந்து போகிறான்//
சரியாகச் சொன்னீர்கள்..
தீண்டாமையையும் பிரிவினைவாதத்தையும் போக்கவே கடவுள் மறுப்பை பெரியார் கையிலெடுத்தாரே தவிர அதை மட்டுமே அவர் செய்யவில்லை.பல சமுதாய மாற்றங்களையும் செய்தார்.ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களில் சிலர் கடவுள் மறுப்பை மட்டுமே பெரியாரின் கொள்கை என எடுத்துக் கொண்டு செயல்படுவதை அதிகமாகக் காணமுடிகிறது.உண்மைதான்..
Nice one!
பெரியார் பக்தர்கள்(!) மேல் திடிர்னு என்ன கோவம் சிவா... :-)
காலை வணக்கம்,சிவா சார்!அருமையான பகிர்வு.திருந்துவார்களா?பார்க்கலாம்!
கட உள் - தலைப்பே என்னவென்று சொல்லி விடுகிறதே... நல்ல அலசல்...
நண்பர்களின் இரண்டு மூன்று தளங்களின் (என்னையும் சேர்த்து) இதைப் பற்றி தான்...
இந்த வா..ர..ம் கடவுள் வாரமா...?
(கரண்ட் கட் அதிகம் அதிகம் என்பதால், உங்களின் நான்கு பதிவுகளை Reader-ல் படித்து விட்டேன்... நன்றி நண்பரே...)
என்ன சிலிர்த்து எழுந்துட்டீங்க சிவா? அகர்த்திருவாதம் என்பது புராணகாலம் தொட்டு இருந்து வரும் கருத்துதான். டைட்டில் நன்று.
யோவ் உனக்கு என்னையா ஆச்சி ...............? நேத்துகூட நல்லாதானே இருந்தீர் ... பக்தியை தனக்குள்ளே வைத்திருப்பவனை யாரும் தவறாக நினைப்பதில்லை .. ஆன்மிகம் என்பதே நம்பிக்கை சம்மந்த பட்ட விஷயம் .நான் ஒரு விஷயத்தை நம்புகிறேன் என்றால் அதை எனக்குள்ளே வைத்திருப்பது அந்த நம்பிக்கையை மதிப்பது தவறாகாது .அதே நேரம் என் நம்பிக்கை மட்டுமே உயர்ந்தது . மற்றவர்கள் நம்பிக்கை போலியானது என்று தர்க்கம் பண்ணும்போது தான் பிரச்னை ஆகிறது . எனக்கு தெரிந்து ஆன்மீகவாதிகளால் பல நாடுகளில் இறை மறுப்பாளர்கள் கொல்லபட்டிருக்கிறார்கள் எந்த பகுத்தறிவாதிகளும் ஆன்மீக வாதிகளை கொன்றதாக சரித்திரம் இல்லை . ஆன்மீகவாதிகள் தான் இன்னொரு ஆன்மீகத்திற்கு எதிரி .............இந்த மாதிரி இந்த விஷயத்துக்கு அடிசிக்காதீங்கப்பா என்று சொல்லும் பகுத்தறிவாதி ரெண்டு பேருக்கும் விரோதி ஆக்கீடுறாங்க ....
சரி இதில் என்னை எந்த லிஸ்ட்டில் வைத்திருக்கீங்க ..நாஸ்திகனா ...? பகுத்தறிவாளனா....?
ஐயோ...ஐயோ...
:)))))))
சிவா...
யாரோ ஏதோ எழுதினதுக்கு எதிர் பதிவு மாதிரி இருக்கு.. ம்ம்... எது எப்படியோ?? பதிவு சூப்பர்... இது எப்படி அவுக போஸ்ட் போட போட இங்கயும் தொடருமா?? இல்ல அப்ப அப்பதானா???
டவுட்டு....
// பெண்ணுரிமை உள்ளிட்ட பல்வேறு தேசநலன் சார்ந்த செயல்களை முன்னெடுத்து சென்ற அப்பெரியவரின் வழிநடப்பவன் என்கிற பெயரில் அரைவேக்காடுகளாக திரியும் கருப்பு சட்டைகளின் வர்ணம் மாற இன்னும் எத்தனை யுகங்களாகும்? //
யுகாத்திரங்கள் ஆனாலும் நடக்காது..இப்பைலாம் பகுத்தறிவு கடவுள மறுக்கிறதோட சரி... அதுவும் வெளில மட்டும்... வீட்டுக்குள்ள சடங்குகள், சம்பிரதாயங்கள் நல்லாவே நடக்கும்... இப்படி தான் பகுத்தறிவு பேசின பிரபல பதிவர் தன் கல்யாணத்தை மந்திரம் ஓதி செஞ்சார்..பதிவர் பேர் நியாபகம் இல்லை...
தலைப்பே சும்மா அதிருதே.....
ஒரு சாமான்ய நாத்திகனால் பெரிதாக எதைக்கிழிக்க முடிந்தது என்பது பெருங்கேள்வி.
என்னால் முடிந்தது
என்தளத்திலும் உள்ளது
அறிவியல் கடவுள் தலைப்பில்
இருப்பினும் தங்களுக்கும் தங்களை சார்ந்தோருக்கும் இங்கே மீண்டும்
தேடு
உன்னிலும்
உலகின் பொருளிலும்
உள்ளது கடவுள்
தேடலில்
கிடைப்பது
பற்பல - அதில்
தேர்ந்தெடுப்பது அறிவியல்
நியூட்டனின் ஆப்பிள்
இயக்கவியலை
எளிதாய் விளக்கியது
ஆதாம் கடித்த
ஆப்பிள்
அற்புத கடவுளை
அளித்தது
கலிலீயோவின் தொலைநோக்கி
சந்திரனையும்
செவ்வாயையும்
ஆய்ந்தது
ஆன்மீகத்தை நோக்கின்
இராகு கேதுவை
தீண்டியது
இயற்கையை
இசைவாக்குது
அறிவியல்
இல்லாததை
எல்லையற்றதென
ஏமாற்றுவது
ஆன்மீகம்
அறிவின் துணை கொண்டு
அணுவை கண்டுபிடித்தால்
அதர்வண வேதத்தில்
அன்றே கண்டு பிடித்ததாக
அளப்பது ஆன்மீகம்
அடடா
அணுவின் மூலக்கூறை
அதர்வணத்தில் காட்டென்றால்
ஆழ்ந்து படியென அறிவுரை
கடவுள்
உலகை படைத்தார்
கடவுளை
யார் படைத்தார்
படைத்த உலகில்
பலபல கடவுள்
பதவியேற்றது
பாகப்பிரிவினையா
அப்படியெனில்
எத்தனை கடவுள்
எத்தனை உலகம்
யாராவது சொல்லுங்கள்
அறிவியில்
ஆய்வுக்குட்பட்டது
ஆன்மீகம் - அதில்
விலக்குப் பெற்றது
ஆய்வின் முடிவை
அரும் சூத்திரங்களாலும்
அதன் வேறுபாடுகளையும்
அறிவால் விளக்குவர்
ஏனென்ற கேள்வியில்
ஏற்றம் பெறும் அறிவியல்
ஏனென்றும் ஏதுவென்றால்
எல்லாம் அதுவென்று
பதிலற்றது ஆன்மீகம்
தவறிலிருந்தோ
தந்த பதில்களிலிருந்தோ
தேர்தெடுப்பது
அறிவியல்
அறிவியலை சோதிக்க
அறிவுடை மனிதருக்கு
அகிலத்தில் தடையேது
மதங்களை சோதிக்க
போப்பும், மவுல்வியும்
சங்கராச்சாரியும்
சரியென்பார்களா?
அறிவியல்
அனைவருக்குமானது
ஆன்மிகம்
அடிபணிவருக்கு மட்டும்
கணணியோ, கைப்பேசியோ
கண்டவரும் கையாளலாம்
கண்ணனை ராமனை
பாரதிய ஜனதா மட்டும்
பாதுகாக்கலாம்
இந்துவத்தின் அடிப்படை
அத்வைதம்
த்வைதம்
விசிஷ்டாத்வைதம்
ஆப்ரகாமின் வாரிசுகள்
இஸ்ரவேலர்
இயேசு கிறிஸ்து
முகமது நபி
மதங்களின்
முரண்பாடு
மனித இன வேறுபாடு
அறிவியல்
இதயத்தை அறுத்து
இன்னும் வாழ வைக்கும்
ஆன்மீகம்
மசூதியை இடிக்கும்
குஜராத்தை கொளுத்தும்
கடவுளின்
கடைக்கண் பார்வையின்றி
கண்டுபிடிப்புகள்
கனவிலுமில்லை
படைத்தவனே
படைத்தான்
பகடை நீ
பகர்ந்தது ஆன்மீகம்
அவனின்றி
அணுவுமில்லை
அவனால்தான்
அனைத்தும் படைக்கப்பட்டன
பாரவாயில்லை
பாவியனாலும்
அணுவைக் கொண்டே
அவனில்லாமல் செய்யலாமா?
Post a Comment