CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, September 26, 2012

வி(வகார) நாயகா !!


                                                         
தமிழகத்தில் கடவுளை எதிர்ப்பு பிரச்சாரம் மூலம் விழிப்பு உணர்வினை உண்டாக்க அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இயங்கும் சம,ரச,சன்,மார்க்கர்களை காணும்போது 'நம்ம அறிவுக்கண்ணை தொறக்க ஒரு நாஸ்திக தூதன் எப்படா அவதரிப்பான்' என்று இறைவனை வேண்டாத நாளில்லை. அந்த அதிசய தூதர் புவியெனும் மேடைக்கு வரும் வரை ஆடியன்ஸ் ஆகிய நம்மை மகிழ்விக்க குபீர் கலைஞர்களாக களம் புகுந்தவர்கள் பலர். குறிப்பாக லைவ் வள்ளுவர் கலைஞர், கி.வீரமணி,கமலஹாசன், சத்யராஜ்..இப்படி நீண்டு கொண்டே போகும் அப்பட்டியல். அவர்களின் நகலாக ஒரு சில நண்பர்களும்!! அவர்களில் ஒருவர்தான் தம்பி பிலாசபி பிரபாகரன் என்பது என் அவதானிப்பு. நேற்று கூகிள் ப்ளஸ்ஸில் பிலாசபி கொழுக்கட்டை கிடைக்காத கடுப்பில் விநாயகர் சதுர்த்தி மகா பக்தகோடிகள் குறித்து சொன்ன கருத்தை மையமாக கொண்டு எழுதப்படும் பதிவிது. அவ்வூர்வலத்தில் நடந்த செயலுக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன். 

ஓட்டு அரசியலுக்கு தொடர்ந்து இந்து மதத்தை மட்டுமே தாக்கும் பராக்கிரமசாலி கலைஞர் என்பது நமக்கு தெரியும். ஆயுத பூஜை போன்ற ஹிந்து பண்டிகைகள் வந்தால் மட்டும் 'விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்' என்று கலைஞர் டி.வி. கதறும். அதுபோல சகட்டுமேனிக்கு விடாமல் ஹிந்து மதத்தை நக்கல் அடிப்பதில் விற்பன்னர்கள் கமல், சத்யராஜ் போன்றோர். பிற மதங்களில் உள்ள மூடப்பழக்கங்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து தமது திரைப்படங்களிலோ அல்லது மேடைகளிலோ பேசாமல் கழன்று கொள்வதில் திறமைசாலிகள். ஏனெனில் அங்கே தொட்டால் எப்படி ஷாக் அடிக்கும் என்பதை ஞான திருஷ்டியில் நன்கு உணர்ந்தவர்கள் ஆயிற்றே.

இறை நம்பிக்கை உள்ளவன்தான் 'தனது மதக்கடவுள் மட்டுமே உயர்ந்தவர் 'என்று பரவலாக சொல்லிக்கொள்கிறான். முட்டிக்கொல்கிறான். ஆனால் 'போங்கடா பொசக்கெட்டவங்களா. கடவுளே கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தெரியலையே' என்று நட்ட நடு சென்டர்  நாஸ்திகம் பேசும் நல்லவர்கள் சிலர் என்ன வெளக்கெண்ணைக்கு அனைத்து மத அவலங்கள் குறித்து கருத்து தெரிவிக்க பம்முகிறார்கள்? தனது மதத்தில் நடக்கும் முட்டாள்தனங்களை அம்மதத்தை சேர்ந்த இறைநம்பிக்கை உள்ள பதிவர்களே சபையில் வைத்து வாதிடுகையில் 'ஓ மை காட். ஷோ மீ தி காட்' என்று ரவுசு கட்டும் ஜூனியர் பெரியார்கள் ஜகா வாங்குவதேன் என்பதுதான் கேள்வி.  

ஆரம்பம் முதலே இந்து மதத்தில் நடக்கும் அவலங்களை மட்டுமே அவைக்கு கொண்டு வரும் பிலாசபி தப்பித்தவறி பிறமதத்தினரால் அப்பாவி மக்கள் இன்னலுக்கு ஆளாவது குறித்து எதையும் எழுதாது ஏன் என்று பல மாதங்களுக்கு முன்பே நான் கேட்டிருக்கிறேன். அதற்கு தம்பியின் பதில் "என் எதிரில் நடக்கும் சம்பவங்கள்(உதாரணம்: அவரது லேட்டஸ்ட் கூகிள் + :விநாயகர் சதுர்த்தி விழால கைய புடிச்சி இழுத்தியா) பற்றி மட்டுமே கருத்து தெரிவிக்க முடியும்".

தம்பி தெரியாமத்தான் கேக்கறேன்...ஜெயேந்திரர், நித்யானந்தா போன்றோர் பற்றி நீங்கள் பகடி செய்து எழுதிய பதிவுகள் அவர்களுடன் பழகியதாலோ அல்லது சில அடிகள் தள்ளி நின்று லைவ்வாக பார்த்ததாலோ வந்த எழுச்சியின் வெளிப்பாடா? ஊடகம் தரும் செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவுகள்தானே? இதுவரை தங்கள் கண்ணில் பாதிரியார்கள் செய்யும் அட்டூழியங்கள், லிபியாவில் அமெரிக்க தூதரை கொன்ற சம்பவம் போன்ற ஒன்று கூடவா தென்படவில்லை? என்றா இது தமாசு!!

பாபர் மசூதியை இடித்த இடிச்சபுளிகள், லிபியாவில் அமெரிக்க தூதரை கொன்ற கொற்கை வேந்தர்கள், பாலியல் குற்றத்தை செய்யும் பாதிரியார்கள், புத்த மதத்தவன் என்று சொல்லிக்கொண்டு எம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த வெங்கம்பயல்கள் அனைவரும் எமது கண்களுக்கு ஈன ஜென்மங்களாகவே தெரிகின்றனர். கேட்டால் பெரும்பான்மை மக்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் மீதான விமர்சனம் மட்டுமே வைக்கப்படுவதே நியாயம் என்று சொல்கிறீர்கள். தவறென்று தெரிந்தால் அது குறித்து பேச பெரும்பான்மை, சிறுபான்மை என்று ரகம் பிரித்து யூ டர்ன் அடிப்பது தொலைநோக்கு பார்வையுள்ள நாஸ்திகர்களுக்கு அழகல்ல!!
........................................................................
     


Tuesday, September 25, 2012

கட உள்


 
                                                             
'ஆள் பார்க்க ஸ்டைல் ஐக்கான் மாதிரி இருக்காரே. வாங்கிப்போடு கருப்பு கலர் சேகுவாரா டி ஷர்ட்டை' என அந்த மாமனிதனின் வரலாறு குறித்த சிறு புரிதல் கூட இன்றி அவரது முகம் பதிந்த ஆடையை அணியும் இளைஞர்களுக்கு  பஞ்சமேது. அதுபோல 'இறைவன் இல்லை' என்ற நிலைப்பாட்டில் இருக்கும் 'நாஸ்தி'கர்களும் குறிப்பிட்ட அளவில் அண்டமெங்கும் வியாபித்து உள்ளனர் என்பதறிவோம். நான் அறிந்தவரை கணிசமானவர்கள் பெரியாரை ரோல்மாடலாக கொண்டு வலம்  வருவதுண்டு. ஆன்மிகம், பகுத்தறிவு இவ்விரண்டின் மீதான சராசரி அறிவினை பெற்றிருக்கும் இறைமறுப்பாளர்கள் பற்றி இறை நம்பிக்கை உள்ள எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் திடீர் அல்லது அரைவேக்காடு நாத்திகர்கள், அதீத ஆன்மீக ஆர்வக்கோளாறால் மூடப்பழக்கத்தில் மூழ்கி இருக்கும் பக்தர்களை  விட பரிதாபமாகவே எம் கண்களுக்கு தென்படுகின்றனர்...ஜீசஸ்!!  

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நாத்திகர்களின் செய்யும் அர்ச்சனைகள் இவை மட்டுமே: 'கடவுள் இருக்காரா? எங்க காட்டு பாக்கலாம்?' அல்லது 'பூகம்பம், விபத்துன்னு எத்தனை அப்பாவிங்க சாகறாங்க. அப்ப உங்க கடவுள் எதுக்கு வேடிக்கை பாத்துட்டு இருந்தாரு?'. நூற்றாண்டுகளைத்தாண்டி இதே பல்லவி. இதைமீறி சமூகத்தில் ஒரு சாமான்ய நாத்திகனால்  பெரிதாக எதைக்கிழிக்க முடிந்தது என்பது பெருங்கேள்வி. பகுத்தறிவாளன் எனப்படுபவன் கடவுள் பெயரால் ஊரை அடித்து உலையில் போடுபவனையும், பக்திப்பெருக்கால் பெரும் செல்வத்தை வீண்விரயம் செய்பவனையும் கண்டு மனம் நொந்து போகிறான். சீரிய அணுகுமுறையால் இவ்விரு ஈனர்களின் அக இருள் நீக்கி தெளிவான பாதையை காட்டும் பகுத்தறிவாளியை இறைவனும் கொண்டாடத்தான் செய்வான். அதேநேரத்தில் நாஸ்திகர்கள் தாம் போகிற போக்கில் வழிபாட்டு முறைகளை கிண்டல் செய்யும்  அளவிற்கு இழிவானதல்லவே ஆன்மீகம். 

இயற்கையை காக்கும் பொறுப்புணர்வு, நவீன கால விஞ்ஞானிகளே வியக்கும் வண்ணம் அற்புத கலைவடிவமாய் நிலைத்து நிற்கும் ஆலயங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் சில பண்டிகைக்கொண்டாட்டங்களுக்கு பின்னே ஒளிந்திருக்கும் அறிவியல் பின்னணிகள் என எண்ணிலடங்கா அதிசயங்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் பொக்கிஷம்தான் ஆன்மீகம். இதற்கான ஒப்புதல் உலகம் போற்றும் விஞ்ஞானிகள் வாயிலாகவே தொடர்ந்து வந்து கொண்டிருப்பது உலகறிந்தது. இறைவனை துதிப்போரை ஆண்டாண்டு காலம் ஏளனம் செய்யும் நாஸ்திகர்களில் எத்தனை பேர் சற்று நேரமொதுக்கி ஆத்திகன் ஒருவனின் ஒரேயொரு மூடப்பழக்கத்தையேனும் ஒழித்துள்ளனர்?  

பெரியார் எனும் மாமனிதன் தன் வாழ்நாள் முழுக்க இறைதுவேஷம் செய்வதை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தாரா? அப்படி இருந்திருப்பின் பெரியாரை இவ்வுலகம் கொண்டாடித்தான் இருக்குமா? பெண்ணுரிமை உள்ளிட்ட பல்வேறு தேசநலன் சார்ந்த செயல்களை முன்னெடுத்து சென்ற அப்பெரியவரின் வழிநடப்பவன் என்கிற பெயரில் அரைவேக்காடுகளாக திரியும் கருப்பு சட்டைகளின் வர்ணம் மாற இன்னும் எத்தனை யுகங்களாகும்? 

குறிப்பிட்ட மதத்தில் நடக்கும் மூடப்பழக்கங்களை மட்டுமே விமர்சிக்கும் திரையுலக மற்றும் அரசியல்வாதிகளின் தீரம் வெகுவாக போற்றத்தக்கது. எந்தமதத்தை சீண்டினால் சீறாமல் இருப்பார்களோ அவர்கள் மீதே ஆண்டாண்டு காலம் வசை மாறிப்பொழிதல் ஆண்மையற்ற நாஸ்திகம். அம்மன் கோவில் ஆடிமாத விழாக்களில் ப்ளெக்ஸ் பேனர், குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட உட்பிரகாரங்கள் என ஆன்மிகம் பல்வேறு தளங்களில் நவீனத்தை நோக்கி அடுத்த கட்டத்தை(!) எட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருக்கும் போலி நாஸ்திகர்களே....ரிக்கார்டை மாற்றிப்போடுங்கள்.

பெற்றோர்கள் அல்லது அறிவிற்சிறந்த ஆசான் மூலமாகவோ, இல்லாவிடில் தெளிவான சுய தேடுதல் மூலமாகவோ பகுத்தறிவை உள்வாங்கிக்கொள்ளும் நபர்கள் மூலம் வெளிவரும் சிந்தனைகளுக்கும், பெரியாரின் முகமூடியை சரிவர பொருத்திக்கொள்ளக்கூட முடியாமல் திணறும் தீரர்களுக்குமான வித்யாசத்தை சரிவர உணரும் வரை....பக்தா...கட உள்!!
.................................................................................       
  


Monday, September 24, 2012

Fire in Babylon                                                               

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த தேசத்தில் கிரிக்கெட் பாதிப்பு இல்லாத இளைஞர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நானும் விதி விலக்கல்ல. ஆனால் கிரிக்கெட் எனக்கும் பரிச்சயம் ஆன நாள் முதல் இன்றுவரை பிடித்த அணி இந்தியா அல்ல. என்றும் இருக்கப்போவதுமில்லை. எத்தனை ஆட்டங்களில் தோற்றாலும் எனது அபிமான அணியாக இருப்பது வெஸ்ட் இண்டீஸ். (அடுத்ததாக பாகிஸ்தான்). காரணம் இரண்டு: அண்டை வீட்டு சாலிடர் ப்ளாக் அண்ட் டி.வி.க்களில் முதன் முதலில் இவ்விளையாட்டை  பார்க்க ஆரம்பித்த நாட்களில் விவியன் ரிச்சர்ட்ஸ் எனும் வீரரின் ஸ்போர்ட்ஸ்மன்ஷிப்பை கண்டு அவரின் தீவிர ரசிகன் ஆனது. மற்றொன்று வெற்றி, தோல்வி குறித்து பெரிதாக ரியாக்ட் செய்யாமல் ஆட்டத்தை ரசிக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பண்பு.  இந்த அணி பற்றி ஒரு ஆவணப்படம் திரைக்கு வந்தால் பார்க்காமல் இருக்க இயலுமா? பார்த்தாகிவிட்டது.

ஜமைக்கா, பார்படாஸ், கயானா உள்ளிட்ட ஏழு குட்டி நிலப்பரப்புகளில் இருந்த வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் எனும் குடையின் கீழ் கிரிக்கெட் உலகை கலக்கிய நிகழ்வுகளை கொண்டதுதான் பயர் இன் பாபிலோன். விவ்  ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயட், கார்டன் க்ரீனிட்ஜ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் தமது கறுப்பின மக்கள் சந்தித்த பல்வேறு ரணங்களுக்கு கிரிக்கெட் வாயிலாக எப்படி தீர்வு கண்டனர் என்பதை படம் நெடுக விளக்குகின்றனர். இடையிடையே 1975 முதல் 1995 வரை அந்த அணி கோலோச்சிய கால கட்டத்தை வீடியோ மற்றும் போட்டோ தொகுப்புடன் விவரிக்கின்றனர். 

'வெஸ்ட் இண்டீஸ் கலக்குனது எல்லாம் ஒரு காலம் இப்பதான் ஒண்ணுமே இல்லாம ஆயிட்டாங்களே?' என்று அசால்ட்டாக சொல்லும் கிரிக்கெட் ரசிகர்களே. ஒன்று தெரியுமா? உலக அரங்கில் குழு விளையாட்டில் எந்த ஒரு அணியும் 15 ஆண்டுகள் இவர்களைப்போல் டாமினேட் செய்ததில்லை. இன்றுவரை. 1980 முதல் 1995 வரை ஒரு டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை இவர்கள். எத்தனை முறை தோற்றாலும் வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ்தான். மால்கம் மார்ஷல், வால்ஸ், ஆம்ப்ரோஸ், லாரா, க்ரிஸ்  கெயில் என்று இடைவிடாமல் ஒரு சிங்கமேனும்  தனது தேசத்தின் கொடியை பறக்க விட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 1975 ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்த அணி வீரர்களை வெறும்  ஜோக்கர்களாக பிரிட்டிஷ்காரர்கள் பார்த்த காலம் அது. டென்னிஸ் லில்லி, ஜெப் தாம்சன் எனும் இரு ஆஸ்திரேலிய வீரர்கள்தான் அப்போது பிஸ்தா ஸ்பீட் பவுலர்கள். அப்போது (1975) ஆஸிக்கு சென்ற மே.இந்திய தீவு வீரர்கள் பெரும்பாலோனோர் புதியவர்கள். அணித்தலைவன் க்ளைவ் லாயட் சந்தித்த முதல் மற்றும் கடைசி விஷப்பரிட்சை. 'என் தல' சிங்கக்குட்டி ரிச்சர்ட்ஸின் வயது அச்சமயம் வெறும் 18. ஆயிரக்கணக்கான வெள்ளைத்தோல் ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்த அவமானம் ஒருபுறம். வலுவான ஆஸி அணி மறுபுறம். இங்கிலாந்து செல்லும்போதும் இதே அவமானங்கள். விளைவு...செமத்தியான தோல்வி.  'ப்ளாக் பாஸ்டர்ட்' என்று வெள்ளையர்கள் எகத்தாளம் செய்ததை வலியுடன் நினைவு கூறுகிறார் ரிச்சர்ட்ஸ். இதுபோல் அவ்வணி வீரர்கள் கூறிய விஷயங்கள் சில: 

'நான் கருமையானவன்தான். ஆனால் பாஸ்டர்ட் இல்லையே' - என ரிச்சர்ட்ஸ் பேசும்போதும், 'கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்று நினைத்தேன். ஆனால் எங்களை காட்டுமிராண்டிகள் போல ஆங்கில பத்திரிக்கைகள் சித்தரித்தது மனதை வருத்தியது' என்று ஹோல்டிங் கூறும்போதும் ஏற்படும் வலியை படம் பார்க்கும் எவராலும் தவிர்க்க இயலாது. தோலின் நிறம் எதுவாயினும். வெவ்வேறு தீவுகளை சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைப்பது மிகக்கடினமான செயல். "ஒவ்வொரு தீவைச்சேர்ந்த மக்களின் பேச்சு வழக்கு, உணவு, கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் உலக அரங்கில் தங்கள் கறுப்பினம் ஒருமுறையேனும் தலைநிமிர வேண்டுமெனில் அது கிரிக்கெட்டால் மட்டுமே சாத்தியம் என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர். நாங்களும்தான்''  என்கிறார் மைக்கேல் ஹோல்டிங்.    
                   
                                               அன்றும் இன்றும் என்றும் ஒரே தல - விவ் ரிச்சர்ட்ஸ்

அறுபதுகளில் வெஸ்ட் இண்டீஸ் சுதந்திரம் பெற்றாலும், தங்கள் ரத்தங்களான தென் ஆப்ரிக்க கறுப்பின மக்கள்  இனவெறியால் ஒடுக்கப்படுவதை கண்டு கொதித்து போயினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். பல்வேறு அரசியல் தடைகளை தாண்டி தென் ஆப்ரிக்காவில் விளையாட சென்றனர். இவர்களின் துணிச்சலை சிறையில் இருந்தவாறு பாராட்டியவர் நெல்சன் மண்டேலா. மைக்கேல் ஹோல்டிங், கோலின் கிராப்ட், மைக்கேல் ஹோல்டிங் மற்றும் ஆறடி எட்டங்குல உயரமுள்ள ஜோயல் கார்னர் வீசிய புயல்வேக பந்துகள் இங்கிலாந்து,ஆஸி உள்ளிட்ட அனைத்து நாட்டு பேட்ஸ்மேன்களின் உடல்களை பதம் பார்த்த காட்சிகள் அதிரடி. குறிப்பாக இவர்களின் பந்து வீச்சை  கண்டு மிரண்டவாறு கவாஸ்கர் புலம்புவது, 'எனக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். சற்று பார்த்து பந்து வீசவும்' என இங்கிலாந்து வீரர் கெஞ்சுவது போன்ற சுவாரஸ்யங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.   

1974 முதல் 1991 வரை தான் ஆடிய ஒரு போட்டியில் கூட ஹெல்மெட் அணிந்ததில்லை தலைவன் ரிச்சர்ட்ஸ். அந்த கெத்துதான் என் போன்ற ரசிகர்கள் அவரை சச்சின் போன்றோரைத்தாண்டியும் கொண்டாட வைக்கின்றன. எதற்கு உயிரைப்பணயம் வைத்து ரிஸ்க் எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு ரிச்சர்ட்ஸ் படத்தில் சொல்லும் பதில்: "ஹெல்மெட் எல்லாம் எனக்கு எதற்கு? ஒற்றை பபில் கம்மை மென்றவாறு க்ரீஸில் நிற்பேன். சில சமயம் அதிரடியாய் முகத்திலும், உடலின் பிற பகுதியிலும் மின்னல் வேக பந்தை வீசி காயப்படுத்துவார்கள் வெள்ளைத்தோல் வீரர்கள். அந்த தெனாவட்டில் என்னருகே வந்து உற்றுப்பார்ப்பார்கள். நானும் நக்கலாக பார்ப்பேன். வெறுப்பில் அடுத்த பந்தை வீச எதிர்ப்பக்கம் செல்வார்கள். 'பலத்த அடிபட்டும் ஒன்றும் நடக்காதது போல் நிற்கிறானே? நடிப்பா?' என்றெண்ணி சட்டென என்னை மீண்டும் திரும்பி பார்ப்பார்கள். அப்போதும் நான் தருவது அதே ரியாக்சனைத்தான். நொந்து போவார்கள் பாவம். அடுத்த பந்துகளில் வைப்பேன் ஆப்பு. சிக்சர் மற்றும் பவுண்டரிகளால்'. தலயின் இந்த தில்லான ஆன் கிரவுண்ட் ரியாக்சனை பதிவு செய்துள்ளது அருமை. 

வெறும் விளையாட்டு சம்மந்தப்பட்ட டாக்குமெண்டரி படமாக இதை கணக்கில்  எடுத்துக்கொள்ள முடியாது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமே உரித்தான படமாகவும் இல்லை. நிறவெறியர்களால் கீழ்த்தரமாக நடத்தப்பட்ட மக்களின் உணர்ச்சிப்பெருக்கை உணர்ந்து க்ளைவ் லாயட் மற்றும் எனது தானைத்தலைவன் விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரின் தலைமையில் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட புரட்சி என்றே சொல்லலாம். அதற்கான ஏராளமான சாட்சி மற்றும் ஆதாரங்களை கொண்டதுதான் இந்த பயர் இன் பாபிலோன்.

Fire in Babylon - Breathtaking Bouncer.
.......................................................................
..........................................
சமீபத்தில் எழுதியது:


.........................................
                       
.............................                        
My other site:
agsivakumar.com
...........................


Saturday, September 22, 2012

சாட்டை   
பசங்க, தோனி வரிசையில் பள்ளி மாணவர்களின் பிரச்னைகளை அடிமட்டம் வரை சென்று அலச முற்பட்டிருக்கும் படம்தான் சாட்டை. மைனா எனும் ஒற்றை பட வெற்றியின் மூலம் பிரதான இயக்குனர்கள் லிஸ்டில் இடம் பெற்றுள்ள பிரபு சாலமனின் தயாரிப்பு. ஜிகிரி தோஸ்து சமுத்திரக்கனி இன்றி சசி சுந்தர பாண்டியானார் என்றால், சசியின்றி கனி தயாளன் சாராகி இருக்கிறார். கனாக்காணும் காலங்கள் போன்ற 'மாணவர் போற்றுதும்' சீரியல்களை பார்க்காத எனக்கு இக்களம் கொஞ்சம் புதிது. ஆனால் விடாமல் விஜய் டி .வி.யில் க.கா.கா பார்த்தவர்களுக்கு சாட்டை - மேட் இன் பிளாஸ்டிக் மட்டுமே. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அரசுப்பள்ளி ஒன்றிற்கு புதிதாக வந்து சேர்கிறார் ப்ரோட்டோகனிஸ்ட் ஆசிரியர் தயாளன்(ச.கனி). அடங்காத மாணவர்கள், அலட்சியமாய் காலம் தள்ளும் ஆசிரியர்கள், கையாலாகாத தலைமை ஆசிரியர்(ஜூனியர் பாலையா), சட்டாம்பிள்ளை துணைத்தலைமை ஆசிரியர்(தம்பி ராமையா) என பதினேழு வருடம் உருப்படாமல் கிடக்கும் பள்ளியின் தலை எழுத்தை டஸ்டரில் துடைத்தெறிந்து ஒரு புதிய வரலாற்றை உருவாக்க முனைகிறார் தயாளன் சார் என்று நான் சொல்லியா தெரிய வேண்டும்?     

ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் தம் கருத்தினை சொல்ல புகார் பெட்டி வைத்தல், மாறுபட்ட கல்விப்பயிற்சி எனப்பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தும் ஆசிரியராக கனியின் நடிப்பு இயல்பு. கோமாளி போல தம்பி ராமையா செய்யும் அதிகப்படியான உடல்மொழி முற்றிலும் செயற்கை. 'ப்ளாக்' பாண்டி நகைச்சுவை சுமார்தான். அமுல்பேபி போல இருக்கும் பள்ளி ஜோடிகள் செய்யும் மேற்பூச்சான காதல் மண்டை சொறிய வைக்கிறது. இதையெல்லாம் தாண்டி முதல் பாதி விறுவிறுவென நகரத்தான் செய்கிறது. அத்துடன் தியேட்டரை விட்டு சிதறி ஓடி இருக்க வேண்டும். 'டிக்கட்டுக்கு தந்த மீதி காசு வேஸ்ட் ஆக அப்பன் என்ன ஏ.டி.எம் மிஷினா வாங்கி வச்சிருக்கான். முழுசாப்பாருடா கொய்யாங்கோ' என்று மிடில் கிளாஸ் மனசாட்சி மிரட்டி எடுத்தது.

இடைவேளைக்கு பின்பு அந்தக்கால தூர்தர்ஷன் டப்பா டிராமாக்களுக்கு சவால் விடும் வகையில் காட்சி அமைப்பு. இயக்குனர்கள் எல்லாம் தயாரிப்பார்கள் ஆனால் லோ பட்ஜெட்டில் படமெடுப்பது கோடம்பாக்க குலவழக்கம். அதற்காக பிரபு சாலமன் இப்படி லோயஸ்ட் பட்ஜெட்டிலா எடுத்தாக வேண்டும்? படம் பார்க்கிறோம் எனும் உணர்வையே ரசிகர்களுக்கு தராமல் எடுக்கப்பட்ட திரைக்கதை, ஒரே ஸ்கூலில் ஓராண்டு நாமும்  அடைபட்ட பீலிங்கை தரும் கேமரா கோணங்கள்...யப்பா சாமி. 

                                                                  
'இந்த ஸ்கூல சொடுக்கு போடற நேரத்துல மாத்திக்காட்டுறேன்' என்று ஒரு ஆசிரியர் சினிமாவில் மட்டுமே அறைகூவல் விடுக்க முடியும். அதுவும் தனது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் சிற்பிகள் ஆக்குகிறார் என்றால் கூட ஓரளவு நம்பலாம்.ஆனால் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்களையும் செதுக்குவது...ஆனாலும் நீங்க ரொம்ப குறும்பு இயக்குனரே. டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி வந்து கடைசி பெஞ்சில் கல்ப் அடிப்பது, லேசாக ஆசிரியர் கண்டித்தால் கூட சாதிப்பேரை சொல்லி திட்டியதாக அவர்கள் மேல் வீண் பழி சுமத்துவது என சில அரசுப்பள்ளி மாணவர்கள் குறித்து நாளிதழ்களில் வரும் செய்திகளை படமாக்கி இருக்கலாம். அதை விட இளம்ஜோடிகளை சேர்த்து, பிரித்து, டூயட் பாட விட்டு, டூ போட விடாமல் இருந்தால் அது தமிழ் சினிமா ஆகிவிடாதே? எனவே அந்த புண்ணிய காரியத்தை சிரமேற்கொண்டு பணியாற்றி உள்ளார் அன்பழகன் - தி இயக்குனர்.

இடைவேளை துவங்கி இறுதிக்காட்சி வரை புல்லரிக்க வைக்கும் காட்சிகள் மென்மேலும் மானாவாரியாக வெளுத்து வாங்கிக்கொண்டே இருந்தது என்றால் அது மிகையில்லை. விளையாட்டு, கல்சுரல் போட்டி என்று பள்ளிகள் மோதும்போது 'உன்னால் முடியும் தம்பி' என்று கதாநாயக ஆசிரியர் தனது அணிக்கு தம்ஸ் அப் சொல்லுவார். திடீர் சோதனை வரும். அதையும் தாண்டி அந்தக்குழு வெற்றி பெறும். என்னத்த புதுசா? அதுவும் சாட்டையில் குட்டி ஹீரோ எலுமிச்சம்பழ சாறை கண்ணில் ஊற்றியவாறு ஓட்டப்போட்டியில் வெற்றி பெறுதல்..பலே குஸ்கா. 

அருமையாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் இப்படி சொதப்பி தள்ளி விட்டதில் வருத்தம்தான். ஸ்டான்லி கா டப்பா(ஹிந்தி) போன்ற சிறந்த படைப்புகளை தயவு செய்து நம்மூர் இயக்குனர்கள் ஒரு முறை பார்த்துவிட்டு பள்ளிப்பிள்ளைகள் குறித்த படங்களை எடுத்தால் கோடி புண்ணியம்.

சாட்டை - சமுத்திரக்கனி மட்டும் பாஸ்(boss/pass) !! 
.............................................................................   

........................
My other site:
agsivakumar.com                            
........................

.........................................
சமீபத்தில் எழுதியது:

கரீனா கபூரின் 'ஹீரோயின்' - விமர்சனம்
........................................
                                

ஆனந்த விகடனில் ஆர்.வி.எஸ்.!!                                                                 

என் விகடன் வலையோசை பகுதியில் நண்பர்கள் பலரது பெயரும், 'என்னடா விகடனுக்கு வந்த சோதனை' என விகடன் தாத்தா விதி நொந்து அழும் வண்ணம் எனது வலைப்பூவும் வெளியான தருணங்கள் இனிது. விராத் கோலி ஆடும் களத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் என்ட்ரி தந்தால் எப்படி இருக்குமோ அது போன்ற ஒரு பரவசம் இன்று. ஆம். இந்த வாரம் என் விகடன் (சென்னை) வலையோசையில் இடம் பெற்றிருப்பது எழுத்து ராட்சசர் ஆர்.வி.எஸ். அவர்கள். எனது ஆல்டைம் பேவரிட் ப்ளாக்கர்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில வலைப்பூக்கள் மட்டுமே கவனத்தை ஈர்க்கும். அரசியல், உணவு, அனுபவங்கள், சினிமா என்று தனது பாணியில் குறிப்பிட்ட விஷயங்களை ருசிபட எழுதும் சாமான்ய எழுத்தாளர்களின் ரசிகன் நான். கடந்த பல மாதங்களில் ஒரு பதிவரின் எழுத்தை மட்டும் மிகவும் விரும்பி வாசிக்கிறேன் என்றால் அது ஆர்.வி.எஸ். அவர்களின் தளத்தைத்தான். மன்னார்குடிக்கு மைனர்வாள்(சார்தான்) போய்வந்த பின்பு எழுதும் பயணக்கட்டுரை ஸ்பெஷலோ ஸ்பெஷல். கணினி முன் அமர்ந்தவாறு இருக்கும் நம்மை பைசா செலவின்றி மன்னார்குடிக்கு அழைத்து செல்லும் வார்த்தை நடை. நுட்பமான பயண அனுபவங்களை கூட தவறாமல் நெஞ்சில் பதிய வைப்பார். கீ போர்டின் இடையே ஹாஸ்ய ஸ்ப்ரேவை தெளித்த பிற்பாடே எழுத ஆரம்பிப்பார் மனிதர்.

இவர் எழுதிய மன்னார்குடி பதிவுகளில் சில:அவதாரத்திருநாள் எனும் தலைப்பில் ஆர்.வி.எஸ். எழுதிய பதிவு என்றும் மனதில்.''ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அம்பது மற்றும் அறுபது பீரியட் அனுபவங்களை என் போன்ற இளைய தலைமுறையினருக்கு நீங்கள் எடுத்து சொல்லும் விதம் அலாதி" என்று நான் சொன்னதற்கு "அடப்பாவி. நான் அவ்ளோ பழைய ஆளு இல்லைய்யா" என்று அலறினார் ஒரு முறை. இணையம் வாயிலாகவே மாதக்கணக்கில் தொடர்ந்த துரோணா - ஏகலைவன்(?!) காலம் மாறி நேரில் சந்திக்க திட்டம் போட்டு ஆனதொன்றும் இல்லை. ஒருவழியாக இவ்வாண்டு துவக்கத்தில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில்தான் அந்த அபூர்வ சந்திப்பு நடந்தேறியது:

                                                                     ஆர்.வி.எஸ்ஸுடன் அடியேன் 
     
ப்ரோபைல் போட்டோவில் இருந்த கரு கரு கூந்தல் கலைந்தோடி சால்ட் அண்ட் பெப்பர் ஹேருடன் புத்தகங்களை துழாவிக்கொண்டிருந்த நபர் ஒருவரை நெருங்கினேன். அவரா இவர்? சந்தேகமில்லை. கண்டேன் ஆர்.வி.எஸ்ஸை. டி-ஷர்ட், ஜீன்ஸ் சகிதம் நவீன யுக கருவியொன்றை காதினில் புகுத்தியவாறு யூத் ரூப தரிசனம் தந்தார். அதன் பின் நடந்த சென்னை பதிவர் சந்திப்புகளில் 'அவசியம் ஐ வில் ஆஜர்' என்று கால்ஷீட் தந்துவிட்டு  கடைசியில் 'சாரிப்பா. சன்டே பேமிலி டே. வர முடியாம போச்சி. பாச மழைல நனைஞ்சே தீர வேண்டிய கட்டாயம்' என்று சொல்லிய வண்ணம் இன்றுவரை தும்மிக்கொண்டு இருக்கிறார் மைனர். கடந்த முறை நடந்த ஆதி - பரிசல் சிறுகதைப்போட்டியில் தலைவர் எழுதிய 'சிலை ஆட்டம்' முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது. அப்பதிவை படிக்க க்ளிக் செய்க: சிலை ஆட்டம்

அப்பேற்பட்ட பீஷ்ம பதிவரை நமது விஷப்பரீட்சைக்கு ஒரு விண்ணப்பம் போடச்செய்தால் என்ன? என்று திடு திப்பென ஒரு எண்ணம் உதித்த நாளில் தொடர் சிறுகதை எழுத அழைத்தேன். ஒருவர் தொடங்க மற்றவர் தேரிழுக்க இறுதியாக ஒரு பதிவர் முடித்து வைக்க வேண்டும் என்பது விதி. 'சுட்டு விளையாடு' எனும் தலைப்பில் சூரத்தேங்காயை(கதாபாத்திர அறிமுகங்கள்)   நான் உடைத்து போட அக்கதையை சென்னை பாஷையில் செவ்வனே தொடர்ந்தார் ஆர்.வி.எஸ். ஆனால் க்ளைமாக்ஸை முடித்து தருகிறேன் என்று சொன்ன 'நாளைய இயக்குனர்' மட்டும் சிறுகதையை  முடித்த பாடில்லை. விரைவில் அவரை ஊமைக்குத்து குத்தியாவது அப்படைப்பை நிறைவு செய்து உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். அரசியல் பதிவுகள் எழுதச்சொல்லி பலமுறை வற்புறுத்தியும்...மிஷன் இம்பாஸிபில். 'அரசியலா? ஆளை விடு' என்று ட்ரிப்ள் ஜம்ப் அடித்து பறந்தோடுகிறார். அவ்வகை பதிவுகளை எழுத எண்ணங்கள் மனதில் 'உதயமாகும்' நாள் விரைவில் வரட்டும். (இரட்டை) 'இலை'மறையாகவேனும் எழுதுங்க சாரே.   

இன்னும் பல உச்சங்களை தொட ஆர்.வி.எஸ்ஸை வாழ்த்துகிறேன்.    

என் விகடன் தளத்தை படிக்க:

ஆனந்த விகடனில் ஆர்.வி.எஸ்.!!     

...........................................................................


                                    

Wednesday, September 19, 2012

திருப்பதி அனுபவம்லு                                                                      திருப்பதி அருங்காட்சியகம்

தக்குனூண்டு இருந்த போது இருமுறை ஏழுமலைக்கு சென்றதாக ஞாபகம். அதன்பின் தற்போதுதான் திருப்பதிக்கு விசிட் அடிக்க வாய்ப்பொன்று அமைந்தது. அதிகாலை சுப்ரபாத தரிசனத்திற்கு நண்பர்கள் ஆன்லைனில் டிக்கட் எடுக்க முயன்று தோற்க, சனி இரவே கோவில் க்யூவில் இடம் பிடித்து ஞாயிறு காலை டிக்கட் எடுக்க முடிவு செய்தோம். இறைவனை வழிபட செல்லும் இடங்களில் எல்லாம் வகை வகையான விசித்திர கேரக்டர்களை காணும் வாய்ப்பு அமைவதால் நமக்கு ஏக குஷி. இங்கும் அதற்கு பஞ்சம் லேதண்டி.

சனி இரவு எட்டு மணிக்கு சுப்ரபாத ஸ்பெஷல் கம்பிக்கூண்டில் அடைத்து விட்டனர். ஒன்பது மணி வாக்கில் பாய், போர்வை சகிதம் பாவ மூட்டைகளை சாய்த்து குடும்பம் குடும்பமாக குறட்டை விட ஆரம்பித்தனர். வெளியே சென்று டீ, சுச்சா அடிக்க விரும்பினால் செக்யூரிட்டி நமது கையில் கையெழுத்து போடுவார். மறுபடி உள்ளே வரும்போது அவரின் ஆட்டோகிராப்பை காட்டினால்தான் அனுமதி. இல்லாவிடில் கடைசியில்தான் இடம் கிடைக்கும். நள்ளிரவை நெருங்கியபோது நண்பர்களுடன் காவல் அண்ணன் கையெழுத்தை வாங்கிக்கொண்டு டீ அடிக்க சென்றேன். திரும்பி வரும்போது என்னை மட்டும் தடுத்தார் ஒரு மொட்டை பாஸ். 'ஆட்டோக்ராப் எக்கட?' என்று மிரட்டினார். நமக்கு தெரிந்த அரைகுறை தெலுங்கில் 'இதோ உந்தி. மீரு எவரு? செக்யூரிட்டியா?' என்றதற்கு லேதென்று தலையாட்டினார். 'அப்பன்னா ஊரிக கூச்சண்டி. மீகு ஆ அத்தாரிட்டி லேது' என வசனம் பேசினேன். அதற்கு நண்பன் 'அவரு பொது ஆள்தான். சில சமயம் போலி ஆளுங்க உள்ள நுழையரதால உஷாரா இருக்காங்க' என ஆசுவாசப்படுத்தினான். பொழுது விடிந்தால் கூண்டிற்குள் இருக்கும் நமக்கு முதலில் சுப்ரபாதம் பாடுவது பேப்பர்காரர்தான். ரெண்டு ரூபாய் பேப்பரை ஆறு ரூபாய்க்கு விற்று அம்சமாக லாபம் பார்த்தார்.          

வருடம்தோறும் மக்கள் கூட்டம் அதிகரிப்பினும் ஆங்காங்கே சுகாதாரமான கழிப்பறை, குப்பைகள் இல்லா சாலைகள், 24/7 சுடச்சுட உணவு என திருப்பதி  இயங்குவது ஆச்சர்யம்தான். சின்ன கோவில்களில் கூட எந்த சாமியை முதலில் கும்பிட வேண்டும், எந்த போஸில் வழிபட வேண்டும் என்கிற டெக்னிக் தெரியாதவன் நான். திருப்பதியில் சுத்தம். சுப்ரபாத தரிசனத்திற்கு திங்கள் அதிகாலை  'சிறப்பு' க்யூவில் சுமார் 150 பேர் பாலாஜியை நோக்கி சில நூறு மீட்டர் ஓட ஆரம்பித்தனர். வேட்டி கட்டினால்தான் அதிகாலை ஸ்பெஷல் தரிசனம் என்று கண்டிஷன். ஜென்மத்தில் முதன் முறை வேட்டி கட்டல். எங்கே வஸ்திரம் கழன்று விடுமோ எனும் திகிலில் என்னை விட வயதானவர்களை எல்லாம் ஓட விட்டு ஸ்லோ மோஷனில் ஜாக்கிங் செய்ய ஆரம்பித்தேன். பாலாஜி இருக்கும் இடத்தின் மெயின் கதவு திறக்கும் முன் சிலர்  'கௌசல்யா சுப்ரஜா' பாட ஆரம்பித்தனர். கதவின் இடுக்கில் இறைவனைக்கண்டு ஆயிரம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை டீலிங் பேச  சில ஆர்வக்கோளாறுகள் செய்த சேட்டைகள் ஒன்றா இரண்டா?     

                                                                           காலம் மாறி போயிந்தி.... 

அங்கே வேதாளம் போல் என முதுகில் தொத்திக்கொண்டு ஒருவர் வெங்கியை எட்டிப்பார்க்க பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். 'ஹல்லோ..ப்ளீஸ் ரிமூவ் தி ஹான்ட் ப்ரம் மை சோல்டர்' என்று நான் சொல்ல 'தரிசனம் பாபு..அந்துகே' என்றார் பக்திமான். 'தானிகி நான் ஏமி பாவம் சேசானு. செய் எத்தண்டி' என்று சவுண்ட் விட்டதும் தோளை விட்டார் தோழர். கதவு திறக்க மத்திய மற்றும் மூத்த வயது ஆட்கள் பாலாஜியை நோக்கி பறந்தனர். இலவச தரிசனம் என்றால் ஓரிரு நொடியில் 'ஜரகண்டி'. சிறப்பு தரிசனம் என்பதால் கூட சில நொடிகளுக்கு பிறகு ஜரகண்டி. 

வழிபாடு முடிந்து நாங்கள் வெளியே வந்த சில நிமிடங்கள் கழித்தே நண்பன் வினோத் வந்தான். ஏண்டா லேட் என்றதற்கு 'சாமிகிட்ட நிக்கிற ஜரகண்டீஸ்வரர் கைல நூறு ரூவாய் திணிச்சேன். ஒரு நிமிஷம் எக்ஸ்ட்ரா வழிபாடு கெடச்சது' என்றான். அடங்கோ..மூலவர் இருக்குற மூணடி தள்ளியும் லஞ்சமா? என்று புருவத்தை உயர்த்தியவாறு சற்று தள்ளி மண்டபத்தில் அமர்ந்தோம். சில நிமிடங்கள் காணாமல் போய் வந்து சேர்ந்தான் வினோத். கையில் வெற்றிலை. வெற்றிலையில் வெண்ணை. 'யார் தந்தாங்க?' என கோரஸ் பாடியதற்கு அவனின் பதில் 'சுப்ரபாதம் பாடுன நாலு பேரு அங்க உக்காந்து இருந்தாங்க. அதுல ஒருத்தருக்கு நூறு ரூவாயை உன் கைல மறச்சி வச்சி ஷேக் ஹான்ட் குடு. வெற்றிலை உன் வசமாகும். இறைவனுக்கு பூசை செய்த ஸ்பெஷல் இலையாக்கும்'. பலே!

அடுத்ததாக பத்து ரூபாய் தந்தால் ஒரு மினி லட்டு கிடைக்கும் இடத்திற்கு விரைந்தோம். அங்கும் வழக்கம்போல் ஒத்தை லட்டுக்கு துட்டை தந்து விட்டு சில அடிகள் நகர்ந்தேன். பயபுள்ள வினோத் மூன்று லட்டுகளுடன் அடக்கொண்ணா சிரிப்புடன் வீறுநடை போட்டு வந்தான். வழக்கம்போல 'ஹவ் இட் இஸ் பாஸ்ஸிபில்' எனக்கேட்டால் 'கவுண்டரில் பத்து ரூபாய் அதிகம் தந்தேன். 'கண்ணா, ரெண்டு லட்டு தின்ன ஆசையா?' என அன்புடன் எக்ஸ்ட்ரா லட்டு தந்தார் அண்ணையா' என்றான். சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களில் பக்காவாக இருக்கும் திருப்பதி நிர்வாகம் லஞ்சத்தை மட்டும் முக்காபுலா ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது ஏன் என்பதே கேள்வி? கேரளா கோவில்களில் இத்தகு சமாச்சாரங்கள் குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன். 

ஈ லோகம்லோ எவருக்கும் பொறுப்பு லேது. அக்கறை லேது தேவுடா!!

.................................................................................  

Images:
madrasbhavan.com
            

                                                               

Tuesday, September 18, 2012

சுந்தர பாண்டியன்                                                           
பாசத்தையும், ரத்தக்கறையையும் கலந்து கட்டி காவியம் படைக்கும் சசிகுமார் படங்களை பார்க்காமல் தவிர்த்து விட பெரும்பாலும் காரணம் கிடைப்பதில்லை. போஸ்டர்களை பார்க்கையில் ஜாலியான சப்ஜக்ட் என்று நம்பி தியேட்டரின் உள்ளே சென்றேன். அட்டகத்தி படம் நெடுக பஸ்ஸில் பயணித்த களைப்பு தீர்ந்த சில நாட்களில் உசிலம்பட்டி பஸ்ஸில் ஊர் சுற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு. 

இரண்டு மனைவிகளுடன் இனிதே குடும்பம் நடத்தும் ஊர் தலைக்கட்டு ஒருவரின் வீர மகன்தான் சுந்தர பாண்டியன். கல்லூரி படிக்கும் தனது நண்பனின் காதலுக்கு உதவ செல்லும் பாண்டிக்கு ஒரு ட்விஸ்ட்டு வைக்கிறார் இயக்குனர். அதைத்தாண்டி வெற்றிபெற்றாலும் இறுதியில் ட்விஸ்ட்டோ ட்விஸ்ட் வைக்கிறார்கள் நண்பர்கள். பாண்டி எப்படி பாண்டி ஆடி அதிலிருந்து தப்புகிறான் என்பதுதான் கதை.

கண்ணில் படுவோரை எல்லாம் கலாய்க்க சசி சீரியசாக முயன்றாலும் சில நேரங்களில் அந்தோ பரிதாபம். 'நண்பன் என்பவன் யாரென்றால்' எனும் சுப்ரமணியபுர பீரியட் மந்திரத்தை இதிலும் ஜெபிக்கிறார். வசனங்கள் நன்றாக இருந்தாலும் 'நட்புக்காக' கொடியேந்தும் காட்சிகள் அண்ணன் படத்தில் விடாமல் பின்தொடர்வது போரடிக்க ஆரம்பித்து விட்டது. முழுப்படத்தை பார்க்க வைத்த பெருமை நாயகி லக்ஷ்மியையே சேரும். கோபப்பார்வை, காதல் ஏக்கம் என அம்மணி வீடு கட்டி அடித்துள்ளார். சூப்ப்ப்பர். 'பரோட்டா' சூரி முட்டு தந்து பாண்டியனின் தேரை இழுக்கிறார். அதனால் ஆங்காங்கே வரும் சுமார் ஜோக்குக்கு கூட அழுத்தமாக கேட்கிறது மக்களின் சிரிப்பொலி. அப்புக்குட்டியின் ஒருதலைக்காதல் ரசிக்க வைக்கிறது. 

சசி ஜெயிலில் இருந்து ரிலீசாகி வீட்டுக்கு வரும் சீனில் ஊர் பாட்டிகள் எல்லாம் ஒப்பாரி வைக்குமிடம், சசியின் நண்பன் பல நாட்களுக்கு பிறகு காதலை சொல்ல நாயகியை நெருங்கும்போது தோழி கத்தி கலாட்டா செய்வது போன்றவை கலக்கல் கலாட்டா. பாடல்கள் எதுவும் மனதில் தங்கவில்லை. தொடர்ந்து வரும் பேருந்து காட்சிகள் சலிப்பு. மூன்றாண்டு லக்ஷ்மியை நினைத்து உருகும் நண்பனின் திருமண பத்திரிக்கையை பார்க்கும் சசி 'எனக்கு கல்யாணம் நடக்கறது அப்பறம். பாவம் அவன். லக்ஷ்மியை ரொம்ப நேசிக்கிறான்' என்று உதவ செல்கிறார். உதவி எல்லாம் வேண்டாம். 'சசியை கொன்றே தீருவேன்' என  அந்த நண்பன் அடம் பிடிப்பது மகா மொக்கையான லாஜிக்காக படுகிறது. 

க்ளைமாக்ஸில் மரண அடி வாங்குவது சசி மட்டுமல்ல.'சுந்தர பாண்டியனும்'தான். ஆயிரம் வெட்டு குத்து பட்டாலும் பீனிக்ஸ் பறவை போல சிலிர்த்து கொண்டு வரும் சூப்பர் ஹீரோ இங்கும் இருப்பது...அடப்போங்கய்யா. ரத்தக்காவு இல்லாமல் சசியின் படங்கள் இருக்குமா என்ன? இதிலும் அதே அதே. சபாபதே. மொத்தத்தில் டைம் பாஸ் படம்.
............................................................

மத்திய எழுபதுகள் முதல் சுமார் 15 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை ஆண்ட அணியான வெஸ்ட் இண்டீஸ் பற்றிய சிறப்பு சினிமா 'பயர் இன் பாபிலோன்' இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எனது பேவரிட் அணிகளில் வெஸ்ட் இண்டீஸுக்கே முதலிடம்(அடுத்து பாகிஸ்தான்).அவர்களைப்பற்றிய சினிமா என்பதால் தவற விட வாய்ப்பில்லை..................................................................

சமீபத்தில் எழுதியது:

முட்டாள் எடுத்த மொக்கைப்படம்

ரன்பீர், பிரியங்கா பர்பி - விமர்சனம்
..................................................................

My other site:
agsivakumar.com 
Tuesday, September 11, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (11/09/12)


புகைப்படம்: 

                                                             
சென்ற வாரம் நண்பர்களுடன் திருப்பதி சென்றபோது க்ளிக் அடித்தது. இடம் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அருகில் இருக்கும் பூங்கா.
................................................................

ஷீர்டி சாய்:

அன்னமய்யா, ஸ்ரீராமதாசு வரிசையில் நாகார்ஜுனா நடித்துள்ள படம். ஷிர்டி சாய் செய்யும் அதிசயங்கள் பெரும்பாலான காட்சிகளை ஆக்ரமிக்கின்றன. இடைவேளை வரை வரும் பாடல்கள் ஆன்மீக அமுதம். அதன்பின் சோகமயமான பாடல்களின் ஆக்கிரமிப்பு. நாகார்ஜுனா நடிப்பு நன்று. ஷாயாஜி ஷிண்டே வட்டி வாங்கும் சேட்டாக வந்து லேசாக சிரிக்க வைக்கிறார். சரத்பாபு, கமலினி முகர்ஜி, பிரம்மானந்தம் என நீள்கிறது நட்சத்திர பட்டியல். முன்பெல்லாம் ஆன்மீக படங்களில் கிச்சு கிச்சு கிராபிக்ஸை தந்து வெறுப்பேற்றி வந்தனர். அம்மன் படத்தில் ஓரளவு முன்னேறி தற்போது சீரடி சாயில் சிறப்பான கிராபிக்ஸ் உத்திகளை பயன்படுத்தி உள்ளனர். மதங்களை கடந்து ஏழைகள் மற்றும்  வாயில்லா ஜீவன்களிடம் அன்பு பாராட்டியவரின் வாழ்வினை பார்க்க ஷீரடி சாய் சரியான தேர்வுதான். 
....................................................................

வேட்டையாடு விளையாடு: 
சென்ற ஆண்டு டெர்ரர் கும்மி நண்பர்களால் வெற்றிகரமாக துவக்கப்பட்ட ஹன்ட் பார் ஹின்ட் போட்டிகள் தற்போது  இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பரிசு ரூ.10,000. களம் காண விரும்பும் மக்கள் படிக்க:


மூளைக்கு வேலை தரும் போட்டி என்பதால் யோசித்து உள்ளே குதிக்க. வின்னருக்கு 'ஆகச்சிறந்த எழுத்தாளர்' பன்னிக்குட்டி ராமசாமி நேரில் வந்து பரிசு வழங்க வாய்ப்புண்டு என ஐ.நா.சிறப்பு தூதர் கூறி உள்ளார்.
..............................................................................

ரன் பேபி ரன்:
புகழ்பெற்ற ஸ்டிங் ஆபரேஷன் ஆளாக மோகன்லால் நடித்திருக்கும் சினிமா. ஹிந்தியில் ராணி முகர்ஜி, வித்யா பாலன் நடித்த டி .வி.சேனல் தீம் படமான  'நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா' அளவிற்கு அசத்தாவிடினும் போர் அடிக்காமல் பார்க்க முடிகிறது. டி.வி. சேனல்கள் பிரேக்கிங் நியூசிற்கு செய்யும் தில்லாலங்கடி வேலைகளை எடுத்து சொல்கிறது இப்படம். கேரக்டருக்கு பக்காவாக பொருந்துகிறார் லால் ஏட்டன். அமலா பாலை ரொமான்ஸ் செய்யும்போது அங்கிளோ அங்கிள் போல தலைவர் இருப்பது டமாசு. மசாலத்தன கிளைமாக்ஸ் மைனஸ்.       
..........................................................................

சந்தித்த வேளையில்: 
மதுரையின் 'மினி அஞ்சாநெஞ்சன்' பதிவர் மணிவண்ணன் சென்னைக்கு வந்ததன் பொருட்டு சென்னை-மதுரை பதிவர் பேரணி நடத்த ஆயத்தமானோம். 'யாரைக்கேட்டு சென்னை-மதுரை பேர வச்ச?' என்று எவரும் கொந்தளிக்காதது பேராறுதல்.   

                                     ஸ்பென்சரில் 'வடா பாவ்' வை அமுக்கும் மணி, பிலாசபி, அஞ்சாசிங்கம்.


தி.நகர் நடேசன் பூங்காவில் ஆரூர் முனா செந்தில் ,மதுரை மணி, அதிபிரபல எழுத்தாளர் சிவகுமார், 'சென்னை டான்' மதுமதி.                                                           
...................................................................................

'ஆட்டோ'க்ராப்: 
1998 ஆம் ஆண்டுக்கு பிறகு மீட்டர் என்கிற வஸ்துவை உபயோகிக்காமல் ஊரை ஏமாற்றும் சென்னை ஆட்டோக்காரர்களுக்கு அரசாங்கம் எந்த ஆப்பும் வைக்கவில்லை. அடிக்கடி இப்பிரச்சனை எழுப்பப்பட்டாலும் எவ்வித பயனும் இல்லாமலே போனது. இப்போது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்  அக்கொடுமைக்கு முடிவு கட்ட கோதாவில் இறங்கி உள்ளது. 'மீட்டர் எங்கே'  எனக்கேட்டு கையெழுத்து வேட்டையை துவங்கி உள்ளனர். மீட்டர் அராஜகத்தை தட்டிக்கேட்டு ஆட்டோ ஓட்டிகளுக்கு குட்டு வைக்க க்ளிக் செய்க:

.................................................................................

சபாஷ் பாபு:
கூடங்குளம் போராட்ட விஷயத்தில் தனது களப்பணியை செவ்வனே செய்து வருகிறது தினமலர். சிறை செல்லும் உதயகுமார் குறித்து அந்நாளிதழ் சொல்லும் தலைப்பு 'புத்தி வந்தது உதயகுமாருக்கு'. உங்களுக்கு எப்போது புத்தி உதயமாகும் உசிதசிகாமணிகளே?
...............................................................................

நாளைய செய்தி: 
லண்டனுக்கு பிறகு அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை 2016 ஆண்டு நடத்த உள்ள நகரம் ரியோ டி ஜெனிரோ(பிரேசில்). அதற்கான முன்னோட்ட காணொளியை தயாரித்து உள்ளனர் பிரேசில் ஒலிம்பிக் அமைப்பாளர்கள். இவ்வாண்டும் ஒலிம்பிக் தங்கத்தை இழந்த பிரேசில் கால்பந்து அணி சொந்த தேசத்திலாவது தங்கம் அடிக்குமா என்பதுதான் கால்பந்து ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பு. காத்திருப்போம்.  
                                                  
     
..........................................................................


Related Posts Plugin for WordPress, Blogger...