CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, August 10, 2012

இம்சைகளினூடே இறை வழிபாடு


                           
அடிக்கடி கோவிலுக்கு சென்று ஆண்டவனோடு டீலிங் போடும் கலையறியாத அப்ரண்டிஸ்களில் நானும் ஒருவன். மனதில் பட்டால் மட்டுமே ஆலயம் நோக்கி நடக்கும் கால்கள். ஒவ்வொரு கோவில் வழிபாட்டிற்குமான இடைவெளி சில நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் என வரைமுறையின்றி இருப்பதுண்டு. இறை நம்பிக்கை இருப்பினும் அவ்வப்போது ஆலயம் செல்லாமல் இருக்க அதிரடி பக்தர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அர்ச்சகர்கள் செய்யும் சேட்டைகள் தவிர வேறென்ன காரணமாக இருக்க முடியும்? இன்றைய காலையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு மணி நேர மின்வெட்டு, கொஞ்சம் கொசுக்கடி, அருகில் நாற்காலி தயாரிக்கும் தொழிலாளியின் ரம்ப சத்தம், எதிரில் இருக்கும் டிபன் சென்டரில் வள வளா எம்.எம். தொகுப்பாளினியின் இம்சைக்குரல், அலுவலகம் பறக்கும் வாகன ஒலிகள்..அனைத்தையும் விஞ்சும் வண்ணம் சில மீட்டர்கள் தள்ளி இருக்கும் கோவிலில் ஓங்கி ஒலித்த பக்திப்பாடல்... போதுமடா சாமி!!  

என் நிலை கொஞ்சம் தேவலை. ஒரு தெரு தள்ளி இருக்கிறது நாங்கள் வழக்கமாக மளிகை வாங்கும் பாய்க்கடை. சகோதரர்கள் மூவர் அதன் ஓனர்கள். குடித்துவிட்டு கடன் சொல்லி ரகளை செய்யும் ஜலகண்டீஸ்வரர்கள், ‘நான்  100 ரூவா குடுத்தேன் பாய். நல்லா பாரு’, ‘ஒலை கொதிக்குது. மொதல்ல என்ன அனுப்பி வைய்யி நாட்டார்(பாய்க்கு இப்படியும் சிலர் பெயர் வைப்பதுண்டு)’. இந்த இம்சைகள் போதாதென்று கடை வாசலில் பெரிய சைஸ் ஆடியோ செட்டை கட்டி அம்மன் பாடல்களை அவ்வப்போது போட்டு பாய்களின் பி.பி.யை எகிற வைப்பார்கள் முப்பாத்தம்மன் கோயில் நிர்வாகிகள். ‘என்ன பாய் இந்த வாரம் உங்க காது கொய்யுன்னு கேக்குமே’ என்று கேட்டால் ஒரு புன்சிரிப்புடன் சைகையில் என்ன பொருள் வேண்டும் எனக்கேட்டுவிட்டு பிசியாகி விடுவார்கள் ஓனர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணி பார்த்தாவை தரிசிக்க சென்றேன் நண்பருடன். வாசலில் பல்க் சைஸ் யக்கா ஒருவர் செருப்புகளை கலெக்ட் செய்துகொண்டிருந்தார். ‘எவ்ளோக்கா’ என்றதற்கு ‘நீங்க தர்றத தாங்க’ என பவ்யமாக கூறினார். வழிபாடு முடிந்து வெளியே வந்தபோது யக்காவுடன் அயல்நாட்டு பெண் ஒருவர் லடாயிட்டு கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்தோம். செருப்பிற்கு ஐம்பது ரூபாய் கேட்பதாக கூறி புலம்பினால் அப்பெண். ஒரு ரூபாய் மட்டும் தரச்சொன்னோம் நாங்கள். '‘ஆட்டோக்காரர்கள், இப்பெண் உட்பட பலர் இப்படி இந்தியாவில் இருப்பதால்தான் உங்கள் தேசத்தின் மீதான மரியாதை குறைந்து வருகிறது’ என்று கத்தியவாறு ஆட்டோ ஏறினாள் அயலக அம்மணி. பிரச்னை பெரிதாவதை உணர்ந்த பிறகே உள்ளே வைத்திருந்த ரசீது நோட்டை வெளியே எடுத்து வைத்தார் யக்கா. அக்கோவிலுக்கு செல்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவும்.

இன்னைக்கி பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி என்று விசேஷ நாட்கள் குறித்து விளக்கம் கூறி கோவிலுக்கு அழைக்கும் சுற்றங்கள் உண்டு. அதை பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளேன். சாதாரண நாட்களில் எந்த வித இம்சையும் இன்றி இறைவனை வழிபடல் மட்டுமே திருப்தி தருகிறது. விசேஷ நாட்கள் என்றால் இளைஞர்களை விட சில பெருசுகள் செய்யும் லந்துகளால் சங்கடமே மிச்சம். ‘இந்தக்கால பசங்களுக்கு பக்தியே இல்லை’ என்று சொல்லும் பெருசுகள் சிலதை மண்டையில் குட்டி ரத்தம் வர வைக்க தோன்றும். விசேஷ நாட்களில் நெரிசல் அதிகம் உள்ளபோது வரிசையில் நிற்க பொறுமையின்றி முந்தி ஓடுதல், தீபாராதனை காட்டுகையில் ஒட்டக சிவிங்கி போல கழுத்தை நீட்டி மூலவர் மூக்கு வரை சென்று கை கூப்பி பக்தி ரசத்தை பிழிந்து பின் நிற்போருக்கு பிரச்னை தரல்..இப்படி பல தொல்லைகளை தருவது இளைஞர்களை விட பெருசுகளே.

ஒரு சில முறை மட்டும் சர்ச் சென்றதுண்டு. பெசன்ட் நகர் கடற்கரை சர்ச்சிற்கு புத்தாண்டு துவங்கும் நள்ளிரவில் சென்ற அனுபவம் குறிப்பிடத்தக்கது. ஆயிரம் விளக்கு மசூதிக்கு செல்ல வேண்டுமென்பது பல நாள் ஆசை. ஆனால் இஸ்லாமியர்களை மட்டுமே அங்கு அனுமதிப்பர் என்று நண்பர் சொல்லி கேள்விப்பட்டேன். பார்க்கலாம். நேரம் கனியுமா என்று.

அன்றொரு மாலை. பரபரப்பாக காணப்பட்ட தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். ஏதோ ஒரு விவகாரம் மனதை குழப்பிக்கொண்டு இருந்தது. பல்வேறு பேருந்துகளின் ஹாரன் சத்தம். ரங்கநாதன் தெருவில் வாங்கிய பொருட்களுடன் பேருந்தை நோக்கி சாரை சாரையாக விரையும் மக்கள். சற்று தூரம் தள்ளி தம்பதியர் இருவர் காரசாரமாக பேசிக்கொண்டு இருக்க, தோளில் சாய்ந்திருந்த மழலை ஒன்று விண்ணை நோக்கி வலது கை ஆள்காட்டி விரலை காட்டியவாறு தனக்கும், இறைவனுக்கும் மட்டுமே புரியும் மொழியில் எதையோ உளறிக்கொண்டு இருந்தது. கோபம், சஞ்சலம், காம எண்ணங்கள் துளிர்விட்டு எல்லை மீறும்போதெல்லாம் இம்மாதிரியான மழலைகள் முகம் பார்க்கையில் தடம் தெரியாமல் அழிந்தொழிகின்றன.   

பேருந்து பயணம், திரை அரங்குகள், அண்மைத்தெருக்கள், சுற்றத்தார் வரவுகள் என வெவ்வேறு தளங்களில் மழலை வடிவில் எதிர்படும் இறைவன் இருக்கையில் விசேஷ நாட்களில் விடாமல் கோவில் செல்வானேன்?

...................................................................................


16 comments:

சென்னை பித்தன் said...

நிம்மதிக்காகக் கோவில் செல்தென்றால் விசேட நாட்களைத் தவிர்ப்பதே நல்ல்து.நான் அப்படித்தான்

சென்னை பித்தன் said...

நிம்மதிக்காகக் கோவில் செல்தென்றால் விசேட நாட்களைத் தவிர்ப்பதே நல்ல்து.நான் அப்படித்தான்

சென்னை பித்தன் said...

நிம்மதிக்காகக் கோவில் செல்தென்றால் விசேட நாட்களைத் தவிர்ப்பதே நல்ல்து.நான் அப்படித்தான்

! சிவகுமார் ! said...

இன்னும் ஆறு தரம் இதே கமன்ட் போட்டா ஆடி வெள்ளி நவக்கிரக வழிபாடு பூர்த்தி ஆயிடும் சார். :)))

Shankar said...

Very true boss. I belong to your group. In fact there is no need to visit a temple if you are clear in your priorities and faith.

sathishsangkavi.blogspot.com said...

விசேஷ நாட்களில் கோவிலை தவிர்ப்பது நல்லது தான்... சிவா...

25ம் தேதி சந்திப்போம்...

”தளிர் சுரேஷ்” said...

நம்மவர்களின் அதீத பக்தியும், வசூலுமே கோவில்களை பாழாக்கி விடுகிறது!

MARI The Great said...

//
Shankar said...
Very true boss. I belong to your group. In fact there is no need to visit a temple if you are clear in your priorities and faith.
//

சத்தியமான நிஜம்!

நாய் நக்ஸ் said...

தேடி போய் ஆப்பு வைத்துக்கொள்வது இதுதான் சிவா...

Philosophy Prabhakaran said...

// ஆயிரம் விளக்கு மசூதிக்கு செல்ல வேண்டுமென்பது பல நாள் ஆசை. ஆனால் இஸ்லாமியர்களை மட்டுமே அங்கு அனுமதிப்பர் என்று நண்பர் சொல்லி கேள்விப்பட்டேன். பார்க்கலாம். நேரம் கனியுமா என்று. //

ஏது விட்டாக்கா குல்லா மாட்டிக்கிட்டு இப்தார் கஞ்சி அடிக்கிற மாதிரி ஃப்ளெக்ஸ் பேனர் அடிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க போல இருக்கே...

Philosophy Prabhakaran said...

உங்களுக்கு மழலைகள் வடிவில் காட்சிதரும் இறைவன் எனக்கு ஃபிகர்கள் ரூபத்தில் அருள் பாலிக்கிறார்... என்னே எம்பெருமான் திருவிளையாடல்...!

உணவு உலகம் said...

அவரவர் கோணத்தில், அவன் அருள் புரிகிறான். நான் ஃபிலாசபிக்குச் சொல்லலை!

Unknown said...

@Philosophy Prabhakaran said...
உங்களுக்கு மழலைகள் வடிவில் காட்சிதரும் இறைவன் எனக்கு ஃபிகர்கள் ரூபத்தில் அருள் பாலிக்கிறார்... என்னே எம்பெருமான் திருவிளையாடல்...!
////////////////////
எனக்கும்தான் அஞ்சலி படத்தை பார்த்தா...அருள் வருது!

சீனு said...

//மழலை வடிவில் எதிர்படும் இறைவன்// மழலைகளையும் குட்டிச் சாமியார் ஆக்கும் கலியுகம்.... ஹி ஹி ஹி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆடி மாதமே ஒரு ஆடியோ மாதம்.
காதுகள் கிழிந்து தொங்கும்.

ஜோதிஜி said...

நீங்க எழுதிய இந்த பதிவின் அடிநாதமான எதார்த்த அழகியலை எவரும் குறிப்பிட்டு விமர்சனமாக எழுதவில்லையே?

Related Posts Plugin for WordPress, Blogger...