CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, July 20, 2012

லண்டன் ஒலிம்பிக் - 4


                                                                           
'ஒலிம்பிக்'... சொல்லைக்கேட்டாலே பொதுவாக நம்முள் எழும் அபிப்ராயம்  'நாலு வருடத்திற்கு ஒரு முறை உலகம் முழுதுமுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகள் சங்கமித்து திறனை வெளிப்படுத்தும் இடம்' என்பதுதான். அது என்னவோ சரிதான். ஆனால் நாம் பரவலாக பார்த்து ரசிக்கும் போட்டிகள் சம்மர் ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது போக வின்டர்  ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் என வேறிரு வகை போட்டிகளுமுண்டு. குளிர் பிரதேசங்களில் ஆடப்படுவது வின்டர் ஒலிம்பிக்ஸ். சரி. அது என்ன பாராலிம்பிக்ஸ்? ஆரம்பத்தில் போரில் அங்கங்களை இழந்த ராணுவ வீரர்களுக்காக நடத்தப்பட்ட இப்போட்டிகள் 1960 முதல் பொதுவானவர்களுக்காக முறைப்படி நடந்து வருகிறது. வாருங்கள். இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம்.      

மூளை/நரம்புக்கோளாறு,பார்வைக்குறைபாடு,கை,கால் குறைகள் இருப்பினும் விளையாட்டில் ஆர்வத்துடன் உள்ள மக்களுக்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதுதான் பாராலிம்பிக்ஸ். 90-களுக்கு முன்பு வரை சம்மர் ஒலிம்பிக்கை ஒரு தேசமும், பாராலிம்பிக்கை வேறொரு தேசமும் நடத்தி வந்தன. சில சமயம் ஒரே தேசமே இரண்டையும் நடத்தும். ஆனால் அதற்கு பின்பு இரு போட்டிகளையும் ஒரே தேசமே நடத்தி வருகிறது. பிரதான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த மறுகணம் இந்த பாராலிம்பிக் போட்டிகள் துவங்கும். லண்டனிலும் அப்படித்தான். பெரும்பாலும் மீடியா ஆதரவு இல்லாததால் பாராலிம்பிக் வெகுஜனங்கள் மத்தியில் பரிச்சயம் ஆனதில்லை. ஒலிம்பிக் போட்டி நடத்தும் தேசமே பாராலிம்பிக்கையும் நடத்த வேண்டும் என ஒலிம்பிக் கமிட்டி நிபந்தனை விதித்தது போல, ஒலிம்பிக்கை நேரடி ஒளிபரப்பு செய்யும் சேனல்கள் கண்டிப்பாக பாராலிம்பிக்கையும் ஒளிபரப்ப வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.  

சென்னை ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு பள்ளியில் நான் படித்த காலத்தில் இதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகள் நடந்தது. இந்தியா தவிர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சிறுவர்கள் வந்திருந்தனர். பெரும்பாலும் மனநலம் குன்றிய சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்ட போட்டிகளது. ஓய்வெடுக்கும் குடிலில் அவர்களுடன் அவ்வப்போது பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. அந்நேரத்தில் பல்வேறு மூட்களில் இருப்பவர்கள் போட்டி துவங்கியதும் சிறப்பாக தத்தம் திறனை வெளிக்கொணர்ந்தது ஆச்சர்யம்தான்.     
                                                                       
இந்தியா சார்பாக ஐந்து ஆண்கள் லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் விளையாட உள்ளனர். அவர்களை இந்திய ஒலிம்பிக் கமிட்டி விரைவில் தேர்வு செய்ய உள்ளது  என்பது முக்கிய தகவல். சாதா ஒலிம்பிக்கை போல இதிலும் இந்தியா பெரிதாக சாதிக்கவில்லை என்றே சொல்லலாம். கிரிக்கெட் எனும் அசுர விளையாட்டை தவிர வேறெதையும் பெரிதாக கண்டுகொள்ளாத இத்துப்போன ஆட்சியாளர்கள் கோலோச்சும் தேசத்தில் நாம் வேறென்ன எதிர்பார்க்க இயலும்? சம்மர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவே நிதியின்றி குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்கு செல்லும் திறமைசாலிகள் வாழும் இந்த நாட்டில், பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் முன்வருவதே இல்லை. குறிப்பாக போரில் உடல் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்கள். அதையும் மீறி ஒரு சிங்கம்  கர்ஜித்தது. அதன் பெயர் பத்மஸ்ரீ.தேவேந்திரா ஜஜாரியா. இந்தியாவிற்கு தங்கம் வென்று தந்த ஒரே மாற்றுத்திறனாளி.      

                                                                                        தேவேந்திரா     

2004 ஏதென்ஸில் நடந்த பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற ராஜஸ்தான் இளைஞர் இவர். சுரு  எனும்  சின்ன கிராமத்தில் கொதிக்கும் வெயில் கொண்ட தார் பாலைவனத்தின் அருகே வீடு. சிறுவயதில் மரம் ஏறி விளையாடிக்கொண்டிருந்த சமயமது. கிளைகளுக்கு நடுவே மின்சார வயர் இருந்ததை கவனிக்கவில்லை. ஷாக் அடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இடது கை வெட்டப்பட்டது. அசரவில்லை அந்த சிறுவன். விளையாட்டின் மேலிருந்த ஆர்வத்தால் தனியாக போராடி சர்வதேச அரங்கில் சிகரத்தை தொட்டான். அதன் உச்சமாக 62.15 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தான். இந்த சாதனையை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை. வழக்கம்போல இவரையும் கண்டுகொள்ளவில்லை மத்திய, மாநில அரசுகள். ஐ.பி.எல். போட்டிகளின் கேளிக்கைகளுக்கு மட்டுமே பல கோடிகளை இறைக்கும் கம்பேனி ஓனர்களும் பாராமுகமே காட்டினர். ஷாருக், மல்லையா, அம்பானிகள் எல்லாம் கிரிக்கெட்டுக்கு இறைக்கும் பணத்தின் ஒரு பருக்கையை இது போன்ற திறமைசாலிகளுக்கு தந்தால் இந்தியா உலக அளவில் உச்சம் தொடும். ஆனால் ஓனர்கள் அதை மனதார செய்ய மாட்டார்கள். ஏனெனில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் கல்லா கட்ட முடியாதே!!
                        
இந்திய அரசாங்கம் தன்னையும், இதர  மாற்றுத்திறன் கொண்ட வீரர்களையும்  எப்படியெல்லாம் உதாசீனம் செய்கிறது என்பதை தேவேந்திரா உள்ளக்குமுறலுடன் விளக்கும் பேட்டி: 
          ஒலிம்பிக் பயணம் தொடரும்...
...................................................................
6 comments:

கோகுல் said...

எல்லோரும் 'பாரா'மல் விட்டுச்செல்லும் விசயத்தை பார்க்கும் படியாக சொல்லியிருக்கீங்க.,கவனத்தில் கொள்ளுவோம்.

sathishsangkavi.blogspot.com said...

நமது நாட்டில் விளையாட்டை ஊக்குவிப்பது மிக குறைந்து விட்டது...

நம் மக்களுக்கு எல்லாம் தெரிந்தது கிரிக்கெட் தான்...

100 கோடி பேரில் எத்தனை திறமையானவர்கள் நிச்சயம் இருப்பாங்க அவர்களை வெளிக்கொண்டு வரும் சிக்கலால் தான் நாம் ஒரு பதக்கம் வாங்குவோமா என்று ஏக்கத்துடன் இருக்கிறோம்....

ராம்குமார் - அமுதன் said...

நல்ல பதிவு பாஸ்.. நியூஸ்களில் வாசிப்பதோடு சரி... அபூர்வமாக முகப்புத்தகத்தில் சில புகைப்படங்கள் பார்ப்பதுண்டு... இம்முறை Follow செய்ய முயற்சிக்கிறேன்...

”தளிர் சுரேஷ்” said...

கிரிக்கெட் மற்ற விளையாட்டுக்களை அழித்துவிட்டது உண்மைதான்! சிறப்பான தகவல்களுடம் அருமையான பதிவு! வாழ்த்துக்களும் நன்றியும்!

MARI The Great said...

அருமையான பதிவு., கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தகவல்கள்...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...