CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, July 5, 2012

லண்டன் ஒலிம்பிக் - 2

                     
                                                               வில் பவர் வித்தகி - தீபிகா குமாரி 
                  
இம்மாதம் 27 ஆம் தேதி லண்டனில் தொடங்கவுள்ளது ஒலிம்பிக் திருவிழா. களம் இறங்கும் இந்திய அணி குறித்து பிப்ரவரி மாதம் இட்ட பதிவிற்கான லிங்க்: ஒலிம்பிக்கும், இந்தியாவும். ஒலிம்பிக் போட்டிகளின் தீவிர ரசிகன் என்ற முறையில் ஆட்டங்கள் முடியும் வரை எனது பார்வையில் லண்டன் ஒலிம்பிக் குறித்த விஷயங்களை பகிர விரும்புகிறேன். இன்று இந்திய அணி பற்றிய ஒரு கண்ணோட்டமாக இப்பதிவு.    

சென்ற முறை தங்கம் வென்று தந்த அபினவ் பிந்த்ரா மீண்டும் வேட்டைக்கு தயாராகி உள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி. குபேரன் வீட்டு மகனான அபினவ்வுடன்  சாதாரண குடும்பத்தில் பிறந்து பெற்றோரின் ஊக்குவிப்பால் இன்று லண்டனில் தடம் பதிக்க புறப்பட்டிருக்கும் இந்தியர்களுக்கும் பஞ்சமில்லை. வில்வித்தை பிரிவில் அம்பெய்ய போகும் தீபிகா குமாரியும் அது போலத்தான். பொருளாதார நெருக்கடிகளை தாண்டி ஆட்டோ ஓட்டும் தந்தையின் ஆதரவால் காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கம் வென்றார். சவால்கள் நிறைந்த வில்வித்தை போட்டியில் கொரியர்களை வெல்ல இதர நாட்டு வீராங்கனைகளை போல தீபிகாவும் அரும்பாடு பட வேண்டி இருக்கும்.   

மகளிர் பிரிவில் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பது பாக்சிங் புயல் மேரி கோம் அவர்களுக்கு. ஒலிம்பிக்கில் முதன் முறை பெண்கள் பாக்சிங்கை சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேரி வழக்கமாக ஆடும் எடைப்பிரிவு இந்த ஒலிம்பிக்கில் இடம் பெறாததால் வேறு பிரிவில் போட்டியிட வேண்டி உள்ளது இவருக்கு சற்று சிரமம்தான். லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இவர் தகுதி பெற்றது கடைசி நேர அதிர்ஷ்டத்தால் தான். சென்ற மாதம் நடந்த உலக பாக்ஸிங் போட்டியில் கால் இறுதியில் தோற்றுவிட்டார் மேரி. ஆனால் மற்றொரு காலிறுதி  போட்டியில் இன்னொரு நாட்டு வீராங்கனை தோற்ற  முடிவைப்பொறுத்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு கிட்டிவிட்டது இவருக்கு.

                                                                     தடையற தாக்க - மேரிகோம்                  

அடுத்து வருவது பேட்மிண்டன் சூப்பர் ஸ்டார் சாய்னா நெவால். சிஸ்டர் பார்ப்பதற்கு வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் குத்துவிளக்கு போல சாதுவான தோற்றத்தில் இருந்தாலும், கடந்த இரண்டாண்டுகளாக பல்வேறு சாம்பியன் பட்டங்களை வென்று பேட்மின்டனில் சீனர்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி பட்டையை கிளப்பி வருகிறார். இம்முறை குறைந்த பட்சம் வெள்ளியை வெல்வார் என்பது விளையாட்டு ஆர்வலர்களின் நம்பிக்கை.


'சானியா சானியா சொக்க வைக்கும் சானியா' எனக்குத்தான் என்று லியாண்டரும், மகேஷ் பூபதியும் முட்டிக்கொள்ள இறுதியில் லியாண்டர் வெற்றி பெற்று விட்டார்.கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் அம்மணியுடன் ஆடுகிறார் பெயஸ். 'நாந்தான் யார் கூட ஆடணும்னு முடிவு செய்யணும். ஆனாலும் டென்னிஸ்ல ஆணாதிக்கம் ஜாஸ்திதான்' என்று லியாண்டரை நார் நாராக சானியா கிழித்தது பலருக்கு தெரியும். சானியா என்னுடன்தான் ஆடுவார் என்பதை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று லியாண்டர் போட்ட கண்டிஷன் கொஞ்சம் ஓவர்தான். நெல்லிக்கனியை மகேஷ் பூபதி கொத்திக்கொண்டு போய்விடக்கூடாது என்கிற பயம் பெயஸ் மனதில் இருந்திருக்கலாம். இவர்கள் சண்டையில் ஒலிம்பிக் மெடல் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற அச்சம் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் குடிகொள்ள ஆரம்பித்து விட்டது. 


                                                                           அட்வான்டேஜ்   சானியா 

ஸ்டார் - ஈ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதால் கவரேஜ் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதேநேரம் இந்தியர்கள் ஆடும் பல போட்டிகளை டி.டி.ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பும் என்பதால் அந்த சேனலை இந்திய ரசிகர்கள் தவற விட வேண்டாம். ஒலிம்பிக் குறித்த பிரத்யேக  செய்திகள் எனது எண்ணங்களை தாங்கி தொடரும். அதிகபட்சம் ஒரு பதக்கம் என்கிற நிலை மாறி இம்முறை மேலும் சில வெற்றிகளை நம் நாட்டவர்கள் ஈட்டுவர் என்பது எனது கணிப்பு. இன்னும் சில நாட்களே...காத்திருப்போம்.
.............................................................................

.............................
My other site:
agsivakumar.com   
.............................
  


3 comments:

”தளிர் சுரேஷ்” said...

நல்ல அலசல்!

MARI The Great said...

ஆர்வமுடன் காத்திருக்கிறேன்!

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!நல்ல அலசல்!

Related Posts Plugin for WordPress, Blogger...