CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, July 31, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (31/07/12)


தெய்வத்திருமகள்:
         
   
நேற்று மாலை எதேச்சையாக ஒலிம்பிக் போட்டிகளை காண நேர்ந்தபோது ஒற்றைக்கையுடன்  ஒரு பெண் டேபிள் டென்னிஸ் ஆடியதை கண்டு லேசாக அதிர்ந்தேன். அங்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு தனியே ஒலிம்பிக் போட்டிகள் இருப்பினும் அதை தவிர்த்து   பொதுப்பிரிவில் வெல்வதே தனக்கு பெருமை என போலந்தின் பார்டிகா வீராங்கனை ஆடியது சிறப்பு. நன்றாக ஆடினாலும் போராடி தோற்றுவிட்டார்.பிறவியிலே வலது கை இல்லாவிடினும் சிட்னியில் 2000 ஆம் ஆண்டு நடந்த  பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். 
..................................................................................

சுப்ரமணியபுரம்:
சென்னை முன்னாள் மேயர் சுப்ரமணியம் மாநகரின் முக்கிய சாலைகளில் போஸ்டர் ஒட்ட தடைவிதித்ததோடு, அழகிய பண்பாட்டு ஓவியங்களை தீட்டி பெருமை சேர்த்தார். சகட்டுமேனிக்கு போஸ்டர்களால் நாறிய சாலைகள் அதன்பின் அழகுடன் காட்சி அளித்தன. எப்போது மெட்ரோ ட்ரெயின் வேலைகள் துவங்கியதோ அப்போது பிடித்தது கெரகம். மெட்ரோ தடுப்புகள் முழுதும் கட்சி பேதமின்றி போஸ்டர் ஒட்டி குலத்தொழிலை செம்மையாக நடத்தி வருகின்றனர் அடிப்பொடிகள். லைவ் மேயர் சைதை துரைசாமி இதை இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பது சரியல்ல. இந்த கொடுமைக்கு முடிவு கட்டினால் அவருக்கு  'சுவர் காத்த கவர்மெண்டே' என்று 5,000 போஸ்டர் ஒட்டுவேன் என்று திண்ணமாக கூறுகிறேன்.
...................................................................................


வெங்காயம்:
சமீபத்தில் ராயப்பேட்டை சத்யம் தியேட்டர் காம்பளக்ஸில் இருக்கும் இட்லி-தோசா உணவகத்திற்கு நண்பர் மகேஷுடன் முதன் முறை விசிட் அடித்தேன். கிட்டத்தட்ட பிற ஹோட்டல்களில் உள்ள விலைதான். தோசை மட்டும் அதிக விலை (சாதா தோசை 60 ஓவாய்). ஒரு கிளாஸ் மோர் ரூ. 30. ஆனால் ருசி திவ்யம். ஆளுக்கொரு ஆப்பம் ஆர்டர். தொட்டுக்க உள்ளித்தீயல் எனும் வஸ்துவை தேர்ந்தெடுத்தார் நண்பர். கேரளா ஸ்பெஷலாம். ருசிபார்த்த மறுகணம் 'எங்கள் ஊர் உள்ளித்தீயல் ருசியில் 20% கூட இல்லை' என்று கொதித்தார். சர்வரை அழைத்து 'இது காரக்கொழம்பு. யார ஏமாத்தறீங்க?'  என்றவரிடம் 'சார் எனக்கு இது பத்தி எதுவும் தெரியாது. இந்தாங்க பீட்பேக் பார்ம். இதுல எழுதுங்க' என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார் சர்வர். வாயில் நுழையாத பேரை ஆகாரத்திற்கு வைத்து என்னமா ஏமாத்தறாங்க. மற்றபடி சமையல் செய்யுமிடம் தனியே இன்றி கண்ணெதிரிலேயே இருப்பது நன்று. வெரைட்டி குறைவுதான். தரம் பேஷ்!!
............................................................................     

ICE AGE - 4:
முந்தைய பாகங்களில் இருந்த ஈர்ப்பு இதில் இல்லையென்றே சொல்லலாம். அனிமேஷன் படங்களின் தீவிர ரசிகனான நான் முதன் முதலில் கொட்டாவி விட்டு பார்த்த படம் இதுவாகத்தான் இருக்கும். அற்புதமான கிராபிக்ஸ். தரமான த்ரீ டி எல்லாம் சரிதான். ஆனால் பெரிய பனிக்கட்டியில் பயணிக்கும் யானை, சிங்கம் போன்றவற்றை வில்லன் குரங்கு தனது படையுடன் பழிவாங்க முனைவதை காட்டியே சலிப்பேற்றினர். ஆவரேஜ் படம்தான்.
.....................................................................................

நாடோடிகள்:
சென்னையின் அடையாளமாக திகழும் குடிசைவாழ் மக்களில் பலரை பெருநகர வளர்ச்சிப்பணி எனும் காரணம் காட்டி புறநகருக்கு துரத்தியாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக அண்ணாசாலை ஒட்டியுள்ள கிரீம்ஸ் ரோடு மக்கிஸ் கார்டன் பகுதி ஏழை மக்களையும் நகரம் கடத்த திட்டம் நடக்கிறதென செய்திகள் வருகின்றன. அங்குள்ள அதிபிரபல மருத்துவமனை அரசாசியுடன் செவ்வாய் தோறும் குடிசைகளுக்கு தீ வைத்து பாட்டாளிகளை விரட்ட பார்க்கிறதாம். மேயர் சைதை துரைசாமியிடம் கேட்டதற்கு 'அவர்களை சுகாதாரமாக வாழ வைக்கவே  புறநகருக்கு போகச்சொல்கிறோம்' என்று சொன்னாராம். ஏன் அம்மாம்பெரிய ஆஸ்பத்திரி அவர்கள் மேல் கரிசனம் கொண்டு மாநகராட்சியுடன் இணைந்து சேவை செய்தால் நோயற்ற வாழ்வை தர முடியுமே. டாக்டர் பட்டம் வாங்குன டொட்டடோய் தலைவர்கள் எல்லாம் எங்கய்யா போனீங்க?
.........................................................................................


தங்கப்பதுமை:ஒலிம்பிக்கில் ஒரே ஒரு வெண்கலம் வெல்லவே பலர் முட்டி மோதிக்கொண்டு இருக்க, தொடர்ந்து ஐந்து  ஒலிம்பிக்களில் பங்கேற்று அனைத்திலும் பதக்கங்கள் வென்றுள்ளார் அமெரிக்காவின் துப்பாக்கி சுடும் வீராங்கனை கிம்பெர்லி ரோட். 96 - தங்கம், 2000 - வெண்கலம், 2004 - தங்கம், 2008 - வெள்ளி. 2012 - தங்கம். அசாத்திய சாதனை!!
........................................................................................      

காத்திருந்த கண்கள்:
 'பதிவுங்கற பேருல கொசகொசன்னு எழுதி கொல்லுறானே மனுஷன். நேர்ல சிக்கட்டும். மண்டைய ஒடச்சி மாவிளக்கு ஏத்திட்டுதான் மறுவேளை' என்று மனக்குமுறலுடன் காத்திருக்கும் கெடா மீசைக்காரர்களே...நீங்கள் கொலைவெறியுடன் தேடிவரும் நபர்களில் சிலரை காண  இதோ ஒரு அரிய வாய்ப்பு. ஆகஸ்ட்  26 ஆம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடைபெறவுள்ளது. அருவாளை தீட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஜெய் ஜக்கம்மா!! மேலும் விவரங்களுக்கு madhumathi.com.
.........................................................................................

பிடிச்சிருக்கு:
ஆடி மாத விழா குறித்த செய்திகளையும், புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்ட நண்பர் கவிதை வீதி சௌந்தரின் பதிவுதான் சமீபத்தில் நான் படித்ததில் பிடித்தது. ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர் தோழர் சௌந்தர் என்பது சிறப்பு செய்தி. படிக்க கிளிக் செய்க: கவிதை வீதி சௌந்தர்.
.........................................................................................

சுயேட்சை எம்.எல்.ஏ:
நண்பர்களே காவிரி நீர், காஷ்மீர் பார்டர், கப்பக்கிழங்கு விலை உயர்வு போன்ற பல பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து நாடாளுமன்றத்தையே நடு நடுங்க வைக்கும் இந்த வலைப்பூ உகாண்டா, ரியல் மாட்ரிட், தெலுங்கானா ஆகிய அயல் நாட்டு மக்களிடமும் சென்று சேர இன்ட்லி மற்றும் யுடான்ஸ் திரட்டியில் ஓட்டு  போடுங்கள். இதன் மூலம் சொர்க்கத்தில் தனி ஏசி ரூம், ரம்பா/மேனகை நடனம், ஒருவருட புஷ்பக விமான டிக்கட் ஆகிய காம்போ பேக் பரிசுகளை வெல்லுங்கள்.

நண்பர்களே இப்பதிவை யுடான்சில் இணைத்துவிட்டேன். ஆதாரம் கீழே:


   
நண்பர்களே இப்பதிவை யுடான்சில் இணைத்துவிட்டேன். ஆதாரம் மேலே. இது எனது 500 வது திரட்டி இணைப்பாகும். இதற்கான பாராட்டு விழா விரைவில் கத்திப்பாரா மேம்பாலத்தின் நடுவே கனஜோராக நடக்க உள்ளதென்பதை நினைக்கையில் உள்ளம் உய்யலாலா ஆடுகிறது.                                                           
..........................................................................................

பசி:
இதுவரை பார்க்காமல் தவறவிட்ட தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களின் லிஸ்டில் 'பசி'யை முதலில் கண்டேன் அண்மையில். சரிதா, சுஜாதா, சாரதா வரிசையில் மறக்க முடியாத பெயர் ஷோபா. சென்னையின் சேரிவாழ் மக்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். மெட்ராஸ் பாஷை பேசும் கேரக்டர்கள் எத்தனை படங்களில் வந்திருப்பினும் பசிதான் மாஸ்டர் பீஸ். விஜயன், டெல்லி கணேஷ், பசி சத்யா, தாம்பரம் லலிதா முதல் ஒவ்வொரு கேரக்டரும் சோக்கா பேசிக்கீறாங்க. இயக்குனர் துரைக்கு சபாஷ்கள் பல.

தேசிய விருதுக்கான போட்டியில் டெல்லி கணேஷ் மற்றும் ஷோபா இருவரும் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் ஷோபா வென்றாராம். 'பசி' பார்த்ததில் அவ்விருதுக்கு 100% தகுதியானவர் என்றே தெரிந்தது. அனாசய நடிப்பு அம்மணியிடமிருந்து என்னமாய் வருகிறது. உதாரணம்: குப்பை பொறுக்கும் ஷோபாவிற்கு பெட்டிக்கடையில்  குளிர்பானம் வாங்கித்தருகிறார் விஜயன். அப்போது சிணுங்கியவாறு: "தே...எனக்கு என்னமோ வெக்கமா இருக்கு. நா போறேன்" என்று சொல்லும் காட்சி. அதுபோல பிரியாணி சாப்பிடும்போது விஜயனை பார்த்து '' நீ குந்தினு இருந்தா என்னால துன்ன முடியாது" எனச்சொல்லுமிடம் . இனி இப்படி ஒரு நடிப்பை காண்பதென்பது அபூர்வம்தான். 'நானும் மெட்ராஸ் ஸ்பெஷல் பாஷையில் படமெடுக்கிறேன்" என்று கிளம்பும் கோடம்பாக்க கோமகன்கள் 'பசி'யை பலமுறை பார்த்து பாடம் படித்துவிட்டு படமெடுக்க வேண்டும்.அடுத்து பார்க்க உள்ள படம் - பாலுமகேந்திராவின் 'வீடு'. சிறுவயதில் ஒரு முறை பார்த்த ஞாபகம். அப்போது பெரிதாக மனதில் பதியவில்லை. இம்முறை பார்க்கலாம்.
.............................................................................

...........................
My other site:
agsivakumar.com
............................
                                                                            

Sunday, July 29, 2012

கேபிள் - அப்துல்லா பிறந்த நாள் சிறப்பு மலர்இன்று (ஜூலை 30) பிறந்த நாள் காணும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்: 


கேபிள் சங்கர்
புதுகை அப்துல்லா 


இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!! 

நாளைய இயக்குனராகும் வாய்ப்பை பெற்ற கேபிள் சங்கர் மற்றும் 25 ஆம் ஆண்டு ரமலான் நோன்பிருக்கும் புதுகை அப்துல்லா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். அவர்களுக்கு இது எத்தனையாவது பிறந்த தினம் என்று எசகுபிசகாக கேட்போருக்கு இறைவன் தக்க தண்டனை அளிப்பான் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. 

 அப்துல்லா - கேபிள் z ++  அதிரடிப்படை,
 சென்னை கிளை. 
                                   
                                                                                              
                                                    ஏக் சிட்டி மே ஏக் பர்த்டே பாய் ரஹ தா ஹை!!                                    
                                                             
                                         தனது பாதையில் தடம் பதிக்கும் அனைவரும் முதல்வர்களே 
      
                                                        பாட்டு ரசிகரும், சிம்மக்குரலோனும்      
                                           ஆயிரம் 'கை'கள் மறைத்தாலும் 'ஆதவன்' மறைவதில்லை                    

                                                               உதயா - 2 நீடுழி வாழ்க!!
........................................................................
             

Saturday, July 28, 2012

லண்டன் ஒலிம்பிக் - 5                        மல்யுத்த வீரர் சுஷில் குமார் கொடியேந்த...தொடரும் இந்திய அணி                                                                                                                          

ஒட்டுமொத்த உலகமும் ஒரே நாளில் தீபாவளி கொண்டாடினால் அதன் பெயர் ஒலிம்பிக் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதிகாரபூர்வமாக ஒலிம்பிக் துவக்கவிழா நேற்று நடைபெற்றாலும், புதன்கிழமை அன்றே மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் லண்டனில் துவங்கிவிட்டன. நேற்று நள்ளிரவு ஒன்றரை மணி முதல் காலை ஐந்தரை வரை நேரடி ஒளிபரப்பை காணும் பேறு பெற்றேன். மொத்தம் 204 தேசங்கள். வென்றால் பரிசுப்பணம் இல்லை. ஆனால் உலகளாவிய புகழ் கிட்டும். பகமை பாராட்டும் பக்கத்து தேசங்களை  எல்லாம் ஒரே கூரையின் கீழ் வரவைக்கும் சக்தி ஒலிம்பிக் எனும் நிகழ்விற்கு மட்டுமே. அதுவும் லண்டன் என்றால் சொல்லவா வேண்டும். 

துவக்கவிழாவில் சீனாவை விஞ்சிவிட்டது இங்கிலாந்து. இயக்கியவர் 'ஸ்லம் டாக் மில்லியனர்' புகழ் டான்னி பாய்ல். செயற்கை புல்தரையை அரங்கெங்கும் பரப்பி சற்று மேடான இடத்தில் மரமொன்றை வைத்து போடப்பட்ட பிரதான செட் அருமை. பக்கிங்ஹாம் அரண்மனை ராணியை ஒலிம்பிக் அரங்கிற்கு அழைத்து வர ஜேம்ஸ் பான்ட் டேனியல் க்ரெய்க் செல்லும் காணொளி காட்சி உள்ளிட்ட சிலவற்றை துவக்க விழாவில் காண்பித்தது புதுமை. ஹெலிகாப்டரில் இருந்து ராணி போல ஒரு பெண் டூப் போட்டு குதித்தார்.மிகச்சிறந்த பின்னணி இசையுடன் ஹாலிவுட் படத்திற்கு ஈடான பிரம்மாண்டத்துடன் எடுக்கப்பட்ட அக்காணொளி காண க்ளிக் செய்க:


பக்கிங்ஹாமில் ஜேம்ஸ் பான்ட் 

'மிஸ்டர் பீன்' ரோவன் அட்கின்ஸன், வேர்ல்ட் வைட் வெப் (www) நிறுவனர் டிம் பெர்னர்ஸ் உள்ளிட்ட பலரது இசைமழையில் நனைந்தது அரங்கம். சென்னை இசைக்குழுவான ஸ்டாக்காடோ ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய நாட்களில் இசைவிருந்து படைக்க உள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் கண்ணில் தென்படவில்லை. ஒருவேளை நிறைவு விழாவில் வாசிப்பாரோ என்னவோ. துவக்க விழாவை தவற விட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். அதன் முழுமையான தொகுப்பினை காண க்ளிக் செய்க: லண்டன் - 2012 துவக்க விழா     
    
Aruba, Belize, Cook Islands, Former Yugoslov Republic of Macedonia....இப்படி எல்லாம் தேசங்கள் உள்ளன என்பதை நேற்றைய அணிவகுப்பில்தான் அறிந்து கொண்டேன். இ.எஸ்.பி.என்.னின் நேரடி ஒளிபரப்பு  படு மோசம். அவ்வப்போது விளம்பரம் போட்டு வசூலை தேற்றிக்கொண்டு இருந்தது. நல்லவேளை மாற்றுத்திறனாளியான டி.டி. ஸ்போர்ட்ஸ் இருந்ததால் நிம்மதியாக பார்த்தேன். ரசித்தேன். ஹிந்தி இம்சையை சகித்துக்கொள்ள வேண்டி இருந்தது கொஞ்சம் கொடுமைதான். முதன் முறையாக ஒரு தமிழ் சேனல்(புதிய தலைமுறை) ஒலிம்பிக் நிகழ்வை லைவ் செய்தது (இரவல் தந்தது டி.டி. ஸ்போர்ட்ஸ்). செட்டுக்குள் இருந்து கொண்டு ஒலிம்பிக் பற்றிய புரிதல் இல்லாத நங்கையும், யுவனும் மொக்கை போட்டுக்கொண்டு இருந்தனர். 


இந்திய அணி வந்த காட்சியை ஓரிரு நொடிகள் மட்டும் காட்டி கோபத்தை கிளப்பினர். வழக்கம்போல் ஒலிம்பிக்கை துவக்கிய தேசமான கிரீஸ் முதலில் வர, இறுதியாக இங்கிலாந்து பெருத்த ஆரவாரத்துடன் வந்தது. இம்முறை கோலோச்ச போவது அமெரிக்காவா அல்லது சீனாவா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணி அதிக பதக்கங்கள் வெல்லும் என வல்லுனர்கள் கணித்து உள்ளனர். அதற்கான வேட்டை இன்று முதலே துவங்குகிறது. பார்க்கலாம்.  


தொடரும்....
.........................................................................................  


- ஒலிம்பிக்கில் இந்தியா தொடர்பான உடனடி செய்திகளை பேஸ்புக் 'வெட்டி ப்ளாக்கர்ஸ்' தளத்தில் பகிர்கிறேன் நண்பர்களே - 
       
  

Thursday, July 26, 2012

நட்ட நடு சென்டர்களும், க'றை' வேட்டிகளும்
   
பாவம் நம் இணைய உடன்பிறப்புகள். தி.மு.க.வை யார் எதிர்த்து பேசினாலும்  அவர்களை 'நட்ட நடு சென்டர்கள்என்று கூறி கேஸை க்ளோஸ் செய்ய படாத பாடு படுகின்றனர். எவ்வளவு முயன்றாலும் அந்த சீனில் அவர்களால் கச்சிதமாக பெர்பார்ம் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் பல ரீ டேக்குகள் வாங்குகின்றனர். இவங்க இம்ச தாங்கல...பட் இவங்கல்லாம் நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டா வருவாங்க. மேடமின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி 'இதையே கலைஞர் செஞ்சா மட்டும் கொந்தளிச்சீங்க. இப்ப மட்டும் வால்யூமை கம்மி பண்ணிட்டீங்களே. ப்ளடி நட்டு நடு சென்டர்ஸ்என எகிறுகின்றனர்.ஏன் வேப்பிலை அம்மனை விட பெருஞ்சூரியனின் செயல்களுக்கு அதிக விமர்சனம் செய்கிறார்கள் இந்த நட்டு நடு சென்டர்ஸ்வாங்க அடி மட்டம் வரைக்கும் போயி அலசுவோம்.

கூகிள் ப்ளஸ்ஸில் உ.பி.க்கள் தங்கள் தலைமை குறித்து சமீபத்தில் பெருமையாக பேசிக்கொண்ட விஷயம்: "திமுக ஆட்சி அமைந்து யாராவது அமைச்சர் ஆகிவிட்டால்கலைஞரே தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் எந்த அமைச்சரையும் நீக்கமுடியாது. கலைஞர் அவ்வாறாக கடைசியாக 2001ல் முல்லைவேந்தனுக்காக தண்ணீர் குடித்து வென்றதுதான் அவரது அதிகபட்ச சாதனை!" - சொன்னது யுவகிருஷ்ணா. ஆனால் 2001 ஆம் ஆண்டுக்கு பின் சிலரை(என்.கே.கே.பி. ராஜா, பூங்கோதை, ஆற்காட்டார்(89 இல்), துரைமுருகன்)  உதய சூர்யா கம்பேனி கழற்றி விட்டதை கழக ரத்தங்களே சுட்டிக்காட்டினர். படிக்க க்ளிக் செய்க: இணைய முரசு. இந்த மாதிரி அரைவேக்காடான தகவலை அவசர அவசரமாக தந்து பின்பு வாங்கி கட்டிக்கொள்ளும் ஆட்களின் எண்ணிக்கை மேடம் கட்சியினரை விட சூர்ய வம்சத்தில் அதிகம் இருப்பதால்தான்  நட்ட நடு சென்டர்கள் குஷ்பு கட்சியினரை பகடி செய்வதில் குஷி அடைகின்றனர்.  

அதாவது தி.மு.க.வில் அமைச்சர் பதவி என்பது ஐந்தாண்டுகளுக்கு நிரந்தரம். மேடம் காலத்தில் அடிமைகள் ஆக மட்டுமே இருக்க முடியும் என்பது அவர்களின் வாதம். கடந்த சில ஆண்டுகளில் கலைஞர் அதிகார எல்லையை மீறி சேட்டை செய்யும் அமைச்சர்களை கடிந்து கொள்ளாமல் இருந்ததற்கு/தீவிரமாக கண்காணிக்க முடியாமல் போனதற்கு காரணங்கள் ஒன்றா இரண்டா? குடும்ப பிரச்னை, எதிர்க்கட்சி ரகளை, குறுநில மன்னர்கள் (அமைச்சர்கள்) முகத்துக்கு நேராக தலைவரை எதிர்த்து பேசிய தீரம், வசனம் எழுதிய படங்கள் (வழக்கம்போல்) ஊத்தி மூடிக்கொண்டது....என்னதான் செய்வார் சொல்லுங்க? 

'சன்' டி.வி.யில் வருவது போல் வாரா வாரம் ஆரவார பிரச்னைகளை  சமாளிக்கவே தலைக்கு நேரம் போதவில்லை. இந்த வாரம் அண்ணன்- தம்பிகள் வாரம், அடுத்த வாரம் மனைவிகள் வாரம்..பாவம் மனுஷன். இந்த இடைப்பட்ட காலத்தில் செழித்தோங்கிய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வது லேசுப்பட்ட காரியமா? ஒரு அமைச்சரை தூக்கும் முன்பு அவர் ப்ரேவ் ஹார்ட் அழகிரி ஆளா, 'வயதை தொலைத்தவன் யாரு?' ஸ்டாலின் ஆளா அல்லது  'நீயில்லாத (கோபாலபுர) மாளிகையை பார் மகளே பார்' கனிமொழி ஆளா?என்று தீபாவளி லட்சுமி வெடியை வெடிக்க பம்மி பதறும் சிறுவனைப்போல தலைவன் பட்டு பாடு புரியாம பேசுராய்ங்க பேச்சு.

'டாடி...டெல்லில ஹிந்தி பேசுற அதிகாரிங்க என்ன மதிக்காம ரவுசு விடறானுங்க. நான் லோக்கல் அரசியலுக்கே வந்துடறேன்' என்று விரல் சூப்பி அழும் அஞ்சா நெஞ்சன்(!), ஓ. பன்னீர் செல்வம் போல மாதக்கணக்கில் முதல் மந்திரி ஆகாவிடினும் அர்ஜுன் போல ஒரு நாளேனும் பதவியில் உட்கார காத்திருக்கும் தளபதி, 'தலைவா..அனேகமா நான் கரண்ட் கட் செய்றதாலயே நம்ம கட்சி 2011 தேர்தல்ல குப்புற விழுந்து மூக்கை ஒடச்சிக்கும்னு பயமா இருக்கு' என்று கச்சிதமாக கணித்த 'பவர் ஸ்டார்' ஆற்காட்டார், 'உன்னாட்டம் பொம்பள யாரடி. அட ஊரெல்லாம் உன் பேச்சு தானடி' குஷ்பு,  'அபி அப்பா, அப்துல்லா அண்ணன் நீ நல்லா இருந்தா, நான் ரொம்ப நல்லா இருக்குது' நமிதா...இத்தனை  வானவேடிக்கைகள் மேடம் கட்சியில் இல்லையே உடன்பிறப்புக்களே. நாங்க பொழுதுபோக்குக்கு வேற எங்க போவோம்? 
  
                           'பெருமாள்' பட விழாவில் நமிதாவிற்கு வழிகாட்டும் பவர் ஸ்டார் ஆற்காட்டார்.

'எங்கள் ஆட்சியில் இருந்த  மின்சார பற்றாக்குறை இப்போது மட்டும் இல்லையா? மீனவர் பிரச்னை பற்றி தலைவர் பிரதமருக்கு கடுதாசி போடும்போது நக்கல் விட்ட நட்ட நடு சென்டர்கள் இப்போது மம்மி கடுதாசி போடும்போது எங்கய்யா காணாம போனீங்க?' என்பது குட்டி சூரியன்களின் கேள்வி. 'ரெண்டு கட்சியுமே குட்டைல ஊருன  மட்டைங்கதான்' என்று காமராஜர் சொன்னதைத்தான் சொல்லறோம். 'கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடும திங்கு திங்குன்னு ஆடிச்சாம்'. அது போல உங்க ரெண்டு கட்சிக்கும் ஓட்டை போட்டு உருப்படாம போனதுதான் மிச்சம். இப்ப ஆளுற கட்சி என்ன அராஜகம் செஞ்சாலும், உங்க ஆளுக செஞ்ச திருவிளையாடலை ஜென்மத்துக்கும் நட்ட நடு சென்டர்கள் ஆகிய பொதுமக்கள் மறந்துருவாங்கன்னு கெனா மட்டும் கண்டுராதீங்கப்பு!!

சரி..இவ்வளவு பேசறீங்களே? இணைய உடன்பிறப்புகள்ல ஒருத்தராவது உளியின் ஓசை படத்த முழுசா பாத்து இருக்கீங்களா? அப்படியே பாத்து இருந்தாலும் அதோட 'பாதிப்பே' இல்லாம ஒரு மாசமாவது நிம்மதியா தூங்கி இருக்கீங்களா? படம் ரிலீஸ் ஆன அன்னிக்கி 'நான் கோமாவுல கெடக்கேன், எங்க தாத்தாவோட மூணு சம்சாரம், ரெண்டு பொண்டாட்டி எல்லாரும் அடிபட்டு ஆஸ்பத்திரில கெடக்காங்க' அப்படின்னு சொல்லி தியேட்டர் பக்கம் போகாம சிதறி ஊரை விட்டு ஓடுனவங்க லிஸ்ட் எடுத்தா கிட்டத்தட்ட மொத்த கட்சி உறுப்பினர்களும் அதுல இருப்பீங்க. அது உங்க மனசாட்சிக்கே தெரியும். 

நெசமாவே நெஞ்சுல மஞ்சா சோறு இருந்தா மஞ்சா துண்டு தலைவர் பேரன் உதயநிதி வூட்டாண்ட போயி ''தம்பி..பெரிய பெரிய ஸ்டார்களை எல்லாம் வச்சி கோடிக்கணக்குல பட்ஜெட் போட்டு படம் எடுக்கறீங்களே. நம்ம புதுகை அப்துல்லா அண்ணனை ஹீரோவா, அபி அப்பாவை அப்து அண்ணன் அப்பாவா, யுவகிருஷ்ணாவை காமடியனா போட்டு கலைஞர் தாத்தா வசனத்துல ஒரு படம் ப்ரொட்யூஸ் பண்ணுங்க" அப்படின்னு இணைய உடன் பிறப்புங்க சொல்லிட்டு அப்பறம் வாங்க நெட்ல ஜிங் சாக் அடிக்க.


இவண்,
நட்ட நடு சென்டர் மானஸ்தர்களில் ஒருவன்.
......................................................................................... 
       
           

Wednesday, July 25, 2012

யாமறிந்த கவிகளிலே


யாமறிந்த கவிகளிலே..பட்டுக்கோட்டையார் போலொருவர் எங்கும் காணோம்.


                                                                   
மகாதேவி: 


குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா..
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா..
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா. இதயம் திருந்த மருந்து சொல்லடா.


இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா..
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா.  


விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்...
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்..மிரட்டல் வார்த்தைகள் ஆடும்.
பல வறட்டு கீதமும் பாடும். வித விதமான பொய்களை வைத்து புரட்டும் உலகமடா. 
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா.....


அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும். 
அதன் அழகை குலைக்க மேவும். 
கொம்பு ஒடிந்து, கொடியும் தொலைந்து குரங்கும் விழுந்து சாகும்.
சிலர் குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா.
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா. இதயம் திருந்த மருந்து சொல்லடா.


குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா..

இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா..
....................................................................................


ரயில் பயணமொன்றில் தான் கண்ட காட்சிகளை பாடலாக பதிவு செய்தார் பட்டுக்கோட்டையார்:


ஆரவல்லி:  

சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா.. 
குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா..


குளிரடிக்கற குழந்த மேல துணிய போட்டு போத்துனா..
குவா குவான்னு கத்துனதால முதுகுல ரெண்டு சாத்துனா..
கிலுகிலுப்பைய கையில குடுத்து அழுத புள்ளைய தேத்துனா..


சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா..


பன்னப்பட்டி கிராமத்துல பழைய சோறு தின்னுக்கிட்டா..
பங்காளி வூட்டு சிங்காரத்தோட பழைய கதையும் பேசிக்கிட்டா..
கன்னுக்குட்டிய மல்லுக்கட்டியே கயத்த போட்டு பிடிச்சிக்கிட்டா..
மண்ணுக்கட்டியால் மாங்காய் அடிச்சி வாயில போட்டு கடிச்சிக்கிட்டா.


சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா..
.......................................................................


நாடோடி மன்னன்:


சும்மா கெடந்த நெலத்த கொத்தி சோம்பல் இல்லாம ஏர் நடத்தி.. 
கம்மா கரைய ஒசத்தி கட்டி.. கரும்பு கொல்லையில் வாய்க்கா வெட்டி..
சம்பா பயிர பறிச்சி நட்டு...தகுந்த முறையில் தண்ணீர் விட்டு..
நெல்லு வெளஞ்சிருக்கு..வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு.


அட காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம். 


இப்போ காடு விளையுட்டும் பெண்ணே. நமக்கு காலம் இருக்குது பின்னே.


மண்ணைப்பொளந்து சொறங்கம் வச்சி, பொன்னை எடுக்க கரிகள் வெட்டி..
மதிலை வச்சி மாளிகை கட்டி கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்..
வழிகாட்டி மரமான தொழிலாளர் பட்ட துயர் மாறும்.
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்.    


காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம். 

காடு விளையட்டும் பெண்ணே. நமக்கு காலம் இருக்குது பின்னே.


மாடா உழைத்திடும் வாழ்க்கையிலே பசி வந்திட காரணம் என்ன மச்சான்?


அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி.


பஞ்ச பரம்பரை வாழ்வதற்கு இனி பண்ணவேண்டியது என்ன மச்சான்?


தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது. 
சிந்திச்சு முன்னேற வேணுமடி. 


வாடிக்கையாய் வரும் துன்பங்களை இனி நீடிக்க செய்வது மோசமன்றோ?


இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது. 
இனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி.

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம். 

அட நானே போடப்போறேன் சட்டம். 
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்.
நாடு நலம் பெரும் திட்டம்...
...............................................................................


உலக சினிமா ரசிகனின் பின்னூட்டம் காரணமாக காணொளிகள் இணைக்கப்பட்டு உள்ளன. 
..................................................................................

Tuesday, July 24, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (24/07/12)


வண்ணக்கனவுகள்:
                                                                  Image: madrasbhavan.com
                                                             இடம்: டி.எம்.எஸ், தேனாம்பேட்டை.

அடர் மஞ்சள், கிளிப்பச்சை, ராமராஜன் லிப்ஸ்டிக் ரோஸ் நிற பெயிண்டுகள் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு விற்காமல் குடோனில் கிடந்ததை கண்டு குமுறி அழுத மொதலாளிகள் அவற்றை 'வாஸ்து கலர்' என்று பிரச்சாரம் செய்து அதில் வெற்றியும் பெற்றனர். இப்போது மம்மி அரசும் அதை சிரமேற்கொண்டு வேலையில் இறங்கி விட்டது. சென்னை நகரின் பல்வேறு சுரங்கப்பாதைகளின் நிறம் மேலிருப்பது போலத்தான் மாறியுள்ளது. இனி தமிழகம் வறுமையில்லா மாநிலம் ஆயிடும் போல்ருக்கே!!
..............................................................................     

Mere Dost Picture Abhi Bakhi Hai:
சுனில் ஷெட்டி ஹீரோவாக நடித்து சென்ற வாரம் வெளிவந்த ஹிந்தி பிக்சர் இது ஹை. சிறுவயது முதலே சினிமாவை சுவாசிக்கும் ஒருவன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சினிமா சார்ந்த மேற்படிப்பை லண்டனில் படிக்கிறான். மும்பை திரும்பி வந்து இயக்குனர் ஆக முயற்சிக்கிறான். பல்வேறு தயாரிப்பாளர்களிடம் தனது 'Cheekh' எனும் சீரியஸ் கதையை சொல்லும்போதெல்லாம் அப்படத்தில் கவர்ச்சி, ஹீரோயிசம் உள்ளிட்ட மசாலாக்களை கலக்க சொல்கின்றனர். அவனுக்கு அவற்றில் எல்லாம் சுத்தமாக உடன்பாடில்லை. இறுதியில் ஒருவர் மட்டும் அக்கதையை படமாக்க சம்மதிக்க ஷூட்டிங் ஆரம்பிக்கிறது. 

ஆனால் மும்பை பெரும்புள்ளி ஒருவன் தலையிட்டு தனக்கு தெரிந்தவர்கள் அதில் நடித்தே ஆக வேண்டும் என்று கூற நாளடைவில் ஒரு பக்கா கமர்சியல் படமாக உருமாறுகிறது. இப்படி ஒரு நல்ல சப்ஜெக்ட்டை தமிழில் ராஜேஷ் அல்லது சி.எஸ். அமுதன் போன்றோரிடம் தந்திருப்பின் அம்சமாக இருந்திருக்கும். சுனில் ஷெட்டியின் மொக்கையான நடிப்பால் நன்றாக வர வேண்டிய காட்சிகள் எல்லாம் நீர்த்துப்போகின்றன. ஒரே ஒரு வசனம் மட்டும் மனதில் நிற்கிறது. சுனிலின் நண்பன்: "எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக சினிமாவில் வர வேண்டிய என்னை..."  சுனில்: "ஆர்டினரியாக பார்க்கிறதா திரையுலகம்?" நண்பன்: "இல்லை. வெறும் எக்ஸ்ட்ராவாக". 
.................................................................................      


வெற்றி விழா: 
தனக்கு தானே விழா எடுக்கும் கலைஞரை விஞ்சும் வகையில் எனது 100-வது பதிவு,  ஒரு கோடி ஹிட்ஸ், பதிவுலகில் 25 ஆண்டுகள், பதிவுலகில் இருந்து நான்கு நாட்கள் ஓய்வு பெறுகிறேன் நண்பர்களே, பிரபல திரட்டியில் எனக்கு விழுந்த இரண்டாவது ஓட்டு....இதையெல்லாம் ஏற்கனவே நெஞ்சம் நெகிழும் வண்ணம் பலர் செய்து விட்டதால்... 'இன்ட்லி/யுடான்ஸில் எனது பதிவை இன்று இணைத்த வரலாற்று நிகழ்வை ஒட்டி' பள்ளி தோறும் பல்லி மிட்டாய் தர திட்டம் தீட்டி உள்ளேன். இந்த ஒப்பற்ற சமூக சேவையில் பங்கேற்க விரும்புவோர் 'உள்ளேன் ஐயா' என கை தூக்கவும்.
.................................................................................      

சூர்ய வம்சம்: 
சென்ற சனியன்று கலைஞர் அரங்கில் லியோனியின் சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம் பார்க்க சென்றேன்.தலைப்பு 'திரைப்படங்களில் பெரிதும் வலியுறுத்தப்படுவது காதலா? வீரமா?'. காதல் அணியில் முத்துநிலவன் மற்றும் சேலம் பாண்டியராஜன். வீரம் அணியில் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் இனியவன். மாலை 5.30 க்கு நிகழ்ச்சி எனினும் வழக்கம்போல் ஒரு மணி நேரம் முன்பாகவே அரங்கம் ஹவுஸ்புல். நால்வரில் அதிக ரம்பம் போட்டது பாண்டியராஜன்தான். நடுவர் உட்பட அனைவரும் தலைப்பை விற்று தடம் மாறி அடிக்கடி கலைஞர் துதி பாடுதல் மற்றும் ரெட் ஜெயன்ட் படங்களை குறிப்பிட்டு பேசி புல்லரிக்க வைத்தல்...தாங்கவில்லை.   

மேடமையும் நக்கல் செய்ய தவறவில்லை மேடையில் இருந்தோர். உதாரணம் 'ஆத்தா ஆடு தந்துச்சி, மாடு தந்துச்சி. கரண்ட் மாட்டும் தரல'. கிளுகிளு வார்த்தைகளுக்கும் நிகழ்ச்சியில் பஞ்சமில்லை. லியோனியின் பாட்டுத்திறன் மட்டுமே ப்ளஸ் ஆக பட்டது. மொத்தம் இரண்டு மணி நேரம் நடந்த பட்டிமன்றம் வரும் சுதந்திர தினத்தில் 45-50 நிமிட தொகுப்பாக கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
..............................................................................      

கொள்ளைக்காரன்:      
'திண்டுக்கல் தலப்பாக்கட்டி'...இந்த பிராண்ட் நேமை வைத்துக்கொண்டு சென்னையில் கிளைகளை பரப்பி வருகின்றனர். சமீபத்தில் ராமாவரத்தில் திறந்த புதிய கிளைக்கு நண்பர்களுடன் விஜயம் செய்தேன். ஒரு மட்டன் பிரியாணி விலை 155. பேருக்கு ஒரே ஒரு மீடியம் சைஸ் மட்டன் பீசும், சில உதிரி பீஸ்களும் மட்டுமே இருந்தன. ''இவ்வளவு பணம் வாங்கறீங்க? ரெண்டு பெரிய சைஸ் பீஸ் கூட போட மாட்டீங்களா? சென்னை தி.நகர், DLF தலப்பாக்கட்டி கடைங்கல்ல கூட இதே அராஜகம்தான் செய்றீங்க. அண்ணா சாலை புகாரி, ஈகா தியேட்டர் பின்புறம் உள்ள முகல் பிரியாணி போன்ற கடைகள் பல ஆண்டுகள் கழிச்சும் நிலைச்சி நிக்கறதுக்கு அவங்க மனசாட்சியோட சர்வ் செய்யறதுதான் காரணம். சென்னைல உணவுக்கலாச்சாரம் அசுர வேகத்துல வளந்துட்டு வருது. தலப்பாக்கட்டி   இல்லைன்னா அவங்களுக்கு ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கு" என்று கூறிவிட்டு வந்தேன். இனி அவர்கள் பாடு.   
................................................................................
மங்கையர் திலகம்: 
பிரணாப் சனாதிபதியாக பதவியேற்றதை பற்றித்தான் நாடெங்கும் பேச்சு. ஆனால் பொட்டியை கட்டும் புண்ணியவதி பிரதீபா பாட்டீல் ஆத்துன சேவைய  பத்தி ஒரு பயலும் வாய தெறக்கல. நன்றி கெட்ட உலகமடா..நானறிந்த பாடமடா. பெரியம்மா 'பவரில்' இருந்த காலத்தில் ப்ளைட்டில் குடும்பத்துடன் வெளிநாடு பறந்த செலவு மட்டும் 205 கோடியாம். 'அம்மாம் பெரிய அமவுண்டு மொய் வச்சி பெரியம்மா சாதிச்சது என்ன?' அப்படின்னு கேள்வி கேட்டா கடவா பல்லுல சூடு வச்சிருவேன். 
..................................................................................  

உனக்காக எல்லாம் உனக்காக: 
புத்தகம் மற்றும் டி.வி.டி.களுக்கான அதிரடி தள்ளுபடி ஸ்பென்சர் பிளாசா லாண்ட்மார்க் கடையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஞாயிறு அன்று புது வரவுகள் ஏராளம். டி.வி.டி.க்கள் 50% தள்ளுபடி விலையில். 'இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்' ஆபரில் புத்தகங்கள் கிடைக்கின்றன. இதில் சாகித்ய அகாடமி விருது வென்ற காவல் கோட்டமும் அடக்கம். தலைநகர வாசிகள் தவற விட வேண்டாம்.
..................................................................................   

ஆயிரம் பொய்கள்: 
நேற்று காலை பல் விளக்கும்போது 'டெசோ மாநாட்டில் தனி ஈழம் குறித்து வற்புறுத்த மாட்டோம்' என்றார் ஆர்டிஸ்ட். ப.சி. வந்து காதில் மந்திரம் ஓதிய பின்பு பேசிய பேச்சது. ப.சி. வந்தால் பத்தும் பறந்து போகும். பத்தோட பதினொண்ணு. அத்தோட இதுவும் ஒண்ணு!!

இப்போது புதிதாக "தனி ஈழ கோரிக்கையில் மாற்றமில்லை. அது 'கை' விடப்பட்டதென்று யாரேனும் சொன்னால் அவர்கள் மக்களால் கைவிடப்படுவார்கள்" என்கிறார் ஆர்டிஸ்ட். இவரும் மக்களால் கைவிடப்பட்டவர் என்பதை நினைவு கூறும் இந்த வேளையிலே...ஒரு காளிமார்க் சோடா குடிக்க தோன்றுகிறது.   
..................................................................................


பிடிச்சிருக்கு: 
நண்பர் ராஜ் அவர்களின் வலைப்பூவில் 'Deforestation' எனும் தலைப்பில் வெளியான புகைப்படம் இயற்கையை அழித்து வாழும் மனித இனத்திற்கான சவுக்கடி. வெட்டப்பட்ட மரத்தின் சிறுநிழலில் இளைப்பாறும் குரங்கின் படம் இரு தினங்களாக மனதை நெருடி வருகிறது. நீங்களும் காண க்ளிக் செய்க: 

ஹால்லிவுட் ராஜ்
..................................................................................
    
பாயும் புலி: 
சல்மான், காத்ரீனா நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் ஆகவுள்ள ஏக் தா டைகர்' படப்பாடல். இந்திய கிளியோபட்ரா காத்ரீனா..மாஷல்லா. என்னத்த சொல்ல!!                                                                       

Monday, July 23, 2012

Thattathin Marayathu


     
தட்டத்தின் மறையது...ஆங்கில விளக்கம் behind the veil. முதன் முறை தியேட்டரில் மலையாள படத்திற்கு ஆங்கில சப் டைட்டில் போட்டதால் பெருமூச்சு விட்டேன். பழம்பெரும் நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன் வினீத் இயக்கி இருக்கிறார். ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த நிவின் மற்றும் இஷா முன்னணி கேரக்டர்களாக. ஒவ்வொரு பத்திரிக்கையும் சுத்தம், சுமார், சூப்பர் என்று கலந்து கட்டி விமர்சனம் செய்திருப்பினும் நிறைவான வசூலை அள்ளிவிட்டது. 'இந்த பொண்ணு அநியாயத்துக்கு அழகா இருக்கே..நாமளும் ஞாயித்து கெளம சும்மாத்தான இருக்கோம். ஒரு எட்டு போயி பாத்துட்டு வருவோம்' என்று வண்டி கட்டினேன் கேரள நண்பருடன்.  

கதை இதே சேட்டா: மலபாரில் இருக்கும் தலசேரி நகரில் வசிப்பவன் வினோத் எனும் இந்து இளைஞன். அங்கு அப்சரஸ் எல்லோரும் நாலு ஸ்டெப் பின்னே நிற்கும் வண்ணம் பேரழகியாய்  இருக்கும் கல்லூரி மாணவிதான் ஆயிஷா. ஹீரோ சுமாரான குடும்பத்தை சேர்ந்தவன். அவளோ முஸ்லிம் இல்லத்து பணக்காரன் மகள்.  ஒரு பொய் கேஸ் போட்டு அவனை உள்ளே தள்ளுகிறார் நாயகியின் பெரியப்பா. அவன் கதை கேட்டு காதலுக்கு உதவி செய்கிறார் ஒரு சப் இன்ஸ்பெக்டர்(மனோஜ் கே. ஜெயன்). இப்படி ஒரு பழங்கதையை பெருமளவு சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளார் இயக்குனர்.

முதல் காட்சியில் ரு வாண்டுகள் பேசும் காட்சியில் இருந்து இறுதி வரை வசனங்கள் நகைச்சுவைக்கு உத்திரவாதம். "ஆயிஷா என்னிடம்   காதலை சொல்லுகையில் ஸ்ரீசாந்த் சைமண்ட்ஸின் விக்கெட்டை எடுத்த உற்சாகத்தை அடைந்தேன்" என்று வினோத்தும்,  "பிரியாணியை தேசிய உணவாக அறிவிக்க வேண்டிய சமயம் நெருங்கிவிட்டது" என்று போலீஸ்காரர் சொல்வதும் காமடி சரவெடி. இஸ்லாமிய பெண்ணாக இருப்பதால் ஏற்படும் சில இன்னல்களை பளிச் வசனங்கள் மூலம் சொல்லி இருக்கும் வினீத்தை பாராட்ட வேண்டும். 

வினோத்திடம் தன் காதலை வெளிப்படுத்தும் போது ஆயிஷா சொல்லும் வார்த்தைகள்: "என் சமூகத்தில் போடப்படும் கட்டுப்பாடுகளால் தன் உணர்வை சொல்ல இயலாது தவிக்கும் இளம்பெண்கள் ஏராளம். நான்   அவர்களைப்போல் இருக்க விரும்பவில்லை. உன்னை காதலிக்கிறேன்".   காதலிப்பதற்கான சரியான காரணங்களை அவள் சொல்வதும் யதார்த்தம்.  ஆயிஷாவின் சகோதரி "என்னுடைய திருமணம் நிச்சயம் ஆனதே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சொல்லித்தான் தெரியும். நீ அப்படி இருக்க தேவை இல்லை" என்கிறாள். அதுபோல அவளது காதலை எதிர்க்கும் பெரியப்பாவிடம் தந்தையாகிய ஸ்ரீனிவாசன் "நம் பெண்கள் பர்தாவால் அங்கத்தை மறைப்பது பெண்மையின் புனிதம் காக்கவே அன்றி தனது கனவுகளை எல்லாம் மறைத்து வாழ்வதற்கல்ல" என்று கூறுமிடத்தில் ஏக கைதட்டல்கள்.

                                                                             
நிவின் மற்றும் ஆயிஷாவின் இயல்பான நடிப்பு படத்தின் பலம். அப்து எனும் நண்பனாக அஜு வர்கீஸ் செய்யும் குறும்புகள் சிரிக்க வைக்கின்றன.  நாயர், மேனன் என்று நண்பர்கள் ஒருவரை ஒருவர் ஓட்டுவதும் கலகலப்பு. தமிழ் படங்களில் இப்படி ஒரு காட்சி வைத்தால் 'அட்ரா அவன..வெட்ரா அவன..தேவையே இல்ல. அட சுத்துது சுத்துது தமிழகம் சுத்துது...என் சாதிக்காரன் உழைப்பினிலே' என்று சாதிக்கட்சி தலைவர்கள் சுமோவில் கிளம்பி தியேட்டர் வாசலுக்கு வந்திருப்பார்கள். கம்யூனிஸ தோழராக சில நிமிடங்களே வந்தாலும் வலுவான வசனங்கள் பேசி மனதில் நிற்கிறார்.  

பாடல்கள் அனைத்தும் ரொமாண்டிக் மெலடி. அனு, வினீத் மற்றும் சந்திரசேகரின் பாடல் வரிகளும், ஷானின் இசையும் 'ஒரு தரம் காதலித்து பார்ப்போமே' என்று எஞ்சி இருக்கும் காதல் உணர்வற்ற இதயங்களையும் உசுப்பி விடுமென்பது மிகையல்ல. ஆயிஷாவின் அழகை வினோத் வர்ணிக்கும் இடங்களில் எல்லாம் நமது நெஞ்சிலும் பட்டாம்பூச்சிகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஒளிப்பதிவாளருக்கான கிரெடிட்டில் பெரும்பங்கை இஷாவே தட்டி செல்கிறார். எந்த கோணத்தில் பதிவு செய்தாலும் அழகோவியமாக திகழும் பெண்ணிற்கு எதற்கு கேமரா ஜாலமும், ஒப்பனைகளும்? 

சென்சிடிவ் ஆன சப்ஜெக்டை நகைச்சுவை இழையோட அழகாய் சொல்லி இருக்கும் அதே நேரத்தில், ஆங்காங்கே இஸ்லாம் பெண்களின் மன உணர்வுகளையும் வெளிக்கொணர்ந்த வகையில் இயக்குனர் வினீத்திற்கு பாராட்டுகள். நாகரீக காதலை அனைவரும் ரசிக்கும் வண்ணம் எடுத்துள்ளனர். பெரிய தொய்வை சந்தித்து வரும் முந்தைய தலைமுறை நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு மத்தியில் வினீத் போன்ற புதிய தலைமுறை ஆட்கள் களம் கண்டு வெற்றி அடைந்து வருவது மலையாள சினிமாவின் மறுமலர்ச்சிக்கு சாதகம்தான்.

தட்டத்தின் மறையது - ரவிவர்மன் ஓவியம்    
..................................................................................

இஷாவின் பேரழகை இக்காணொளிகளில் கண்டு ரோமியோக்கள் சொக்கி விழுந்தால் நான் பொறுப்பல்ல.... 
  ......................................................................

      
                                                                

Saturday, July 21, 2012

The Dark Knight Rises


                                                                         
ஹார்ரி போட்டர், ஸ்பைடர்-சூப்பர்-பேட்மேன்கள் சீரிஸ் படங்களை பார்க்கும் எக்ஸ்க்ளுசிவ் ரசிகர்கள் க்ளப்பில் இல்லாத எனக்கு,  சமீபகாலமாக முந்தைய பாகங்கள் பற்றிய புரிதல் எதுவும் இன்றி இவ்வகையறா படங்களின் இறுதி பாகங்களை மட்டும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து வருகிறது. இம்முறை தி டார்க் நைட் ரைசெஸ். இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த ஆங்கிலப்படமாக  கருதும்  இன்சப்சனின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் படைப்பாக இந்த வவ்வால் மனிதன் இருந்ததால் எதிர்பார்ப்புடனேயே திரையரங்கினுள் நுழைந்தேன்/தோம். அமெரிக்காவில் பேட்மேன் ரிலீஸ் ஆன முதல் நாளே 'நாந்தான்டா பேட்மேனுக்கு வில்லன்' என்று கூவிக்கொண்டே ஒரு சைக்கோ 12 பேரை சுட்டுக்கொன்ற செய்தி வேறு வவுத்தை கலக்கியதால்..கண்களால் தியேட்டரை ஒருக்கா நன்றாக ஸ்கேன் செய்து விட்டு சீட்டில் அமரச்சொன்னது மனது. 

தி டார்க் நைட் ரைசெஸ் கதையை சுருக்கி சொல்லவேண்டுமெனில்...கோதம் எனும் நகரத்தில் பேன் எனும் முகமூடி வில்லன் தன் படையுடன் அட்டகாசம் செய்கிறான். ஆக்கபூர்வ அணுசக்திக்காக கண்டுபிடிக்கப்பட்ட நியூக்ளியர் வஸ்து ஒன்றை கைப்பற்றுகிறான். அதனை டைம் பாம் ஆக மாற்றி  முறையில் வண்டி ஒன்றில் ஏற்றி கோதமில் உலவ விட்டுக்கொண்டே இருக்கிறான். நகர மக்களை ரட்சிக்க அப்பகுதி ஒன்றின் முட்டுச் சந்தில் பர்கர் விற்கும் மூதாட்டி ஒருவர் புறப்பட்டு வருகிறார் என்றா சொல்ல வேண்டும்? நம்ம பேட்மேன் தான் களம் இறங்குகிறார். பேட்மேன் சீரிஸில் நாயகனை விட வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் தருவது இங்கும் தொடர்கிறது. முகமே காட்டாமல் அச்சுறுத்தும் வில்லனாக டாம்  ஹார்டி..பலே. திருட்டு (பெண்) பூனையாக வரும் ஆன் ஹாதவே இம்போர்டட் ஐஸ்க்ரீம். இளம் போலீஸ் அதிகாரியாக ஜோசப் நடிப்பும் நன்று.

முதல் பாதி பெரும்பாலும் வசனங்களால் நிரம்பி இருக்கிறது. என் போன்ற  சராசரி ரசிகர்கள் பொருத்தருள வேண்டிய கட்டாயம்.  அதற்கு சேர்த்து  வைத்து இடைவேளைக்கு பின்பு ஒவ்வொரு நிமிடத்திற்கும்  பொழுதுபோக்கின் உச்சத்திற்கு அழைத்து செல்கிறார் நோலன். பிரமாதமான பின்னணி இசை மற்றும் விசுவல் எபக்ட் காட்சிகளின் துணையுடன்.  மரண பயத்தில் உறைந்து கிடக்கும் மக்களை காப்பாற்ற தனது பிரத்யேக பைக் கம் பறக்கும் தட்டில் பேட்மேன் செய்யும் சாகசங்கள் விசிலடிக்க வைக்கின்றன. கொஞ்சூண்டு மிஞ்சி இருக்கும் பில்லா - 2 (கலக்சன்) பருக்கைகளை ஏற்கனவே (நான்) ஈ கவ்விக்கொண்டு போக, ஆழ்வார் கையில் இருக்கும் கடைசி சோற்றை வவ்வால் லாவுவதை மல்டிப்ளக்ஸ்களில் காண முடிந்தது.     

"நற்செயல் செய்யும் நாயகனான உன்  முகத்தை ஒரு முறை மக்களுக்கு வெளிப்படையாக காட்டு" என்று ஒருவர் கேட்பதற்கு பேட்மேன் சொல்லும் பதில் அசல் ஹீரோயிசம். அவ்வசனம்:

"நான் மட்டுமா ஹீரோ? குளிரில் நடுங்கும் சிறுவனுக்கு தன் கோட்டை போர்த்திவிட்டு நடந்து சொல்லும் முகம் தெரியா நபர் கூட ஹீரோதான்".  

வழக்கம்போல இதையும் த்ரீ- டி படமென்று சொல்லி காசை பிடுங்காமல் இருந்தது ஆறுதல். இம்மாதிரியான சிறந்த பொழுதுபோக்கு படத்தை பார்க்க சாலச்சிறந்த அரங்கம் சத்யம்தான். தெள்ளத்தெளிவான ரியல் டிஜிடல் திரை அதை ஊர்ஜிதம் செய்கிறது. என்ன...ஒரே ஒரு இம்சையை மட்டும் சகித்து கொள்ள வேண்டும். சின்னத்தம்பியில்  துணை நடிகர் ஒருவர்  திரையில் தோன்றும்போது நம்ம கவுண்டர் 'சூப்பரப்பு' என்று கை தட்ட 'இப்ப இவருக்கு எதுக்கு நீங்க கை தட்டுனீங்க?' என வினவுவார் ஷர்மிலி. அதற்கு தலைவர் 'இவர்தான் படத்துல முக்கியமான டர்னிங் பாய்ன்ட்' என்பார். அதுபோல ஆங்கில படங்கள் பார்க்கையில் ''ஹூ...ஹூ" என்று சாதா சீனுக்கெல்லாம் மேட்டுக்குடி இளசுகள் கூவுவது...என்ன கொடும சரவணன். நல்லவேளை இந்த ஆங்கில படத்திற்கு 'ஆங்கில' சப் டைட்டிலை போட்ட புண்ணியவான்கள் வாழ்க. தமிழ் டப்பிங்கில் ''டேய் கைத...அந்த வவ்வால் என்ன பெரிய அனுமார் வாலா? சொல்லி வை" என்று வில்லன் பேசுவதை காணும் அவஸ்தை இன்றி ஆங்கில சப் டைட்டிலுடன் பார்ப்பது எவ்வளவோ மேல்.       

தி டார்க் நைட் ரைசெஸ் - வாவ்..வால்!!
................................................................................   

................................
My other site:
...............................
  


Friday, July 20, 2012

லண்டன் ஒலிம்பிக் - 4


                                                                           
'ஒலிம்பிக்'... சொல்லைக்கேட்டாலே பொதுவாக நம்முள் எழும் அபிப்ராயம்  'நாலு வருடத்திற்கு ஒரு முறை உலகம் முழுதுமுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகள் சங்கமித்து திறனை வெளிப்படுத்தும் இடம்' என்பதுதான். அது என்னவோ சரிதான். ஆனால் நாம் பரவலாக பார்த்து ரசிக்கும் போட்டிகள் சம்மர் ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது போக வின்டர்  ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் என வேறிரு வகை போட்டிகளுமுண்டு. குளிர் பிரதேசங்களில் ஆடப்படுவது வின்டர் ஒலிம்பிக்ஸ். சரி. அது என்ன பாராலிம்பிக்ஸ்? ஆரம்பத்தில் போரில் அங்கங்களை இழந்த ராணுவ வீரர்களுக்காக நடத்தப்பட்ட இப்போட்டிகள் 1960 முதல் பொதுவானவர்களுக்காக முறைப்படி நடந்து வருகிறது. வாருங்கள். இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம்.      

மூளை/நரம்புக்கோளாறு,பார்வைக்குறைபாடு,கை,கால் குறைகள் இருப்பினும் விளையாட்டில் ஆர்வத்துடன் உள்ள மக்களுக்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதுதான் பாராலிம்பிக்ஸ். 90-களுக்கு முன்பு வரை சம்மர் ஒலிம்பிக்கை ஒரு தேசமும், பாராலிம்பிக்கை வேறொரு தேசமும் நடத்தி வந்தன. சில சமயம் ஒரே தேசமே இரண்டையும் நடத்தும். ஆனால் அதற்கு பின்பு இரு போட்டிகளையும் ஒரே தேசமே நடத்தி வருகிறது. பிரதான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த மறுகணம் இந்த பாராலிம்பிக் போட்டிகள் துவங்கும். லண்டனிலும் அப்படித்தான். பெரும்பாலும் மீடியா ஆதரவு இல்லாததால் பாராலிம்பிக் வெகுஜனங்கள் மத்தியில் பரிச்சயம் ஆனதில்லை. ஒலிம்பிக் போட்டி நடத்தும் தேசமே பாராலிம்பிக்கையும் நடத்த வேண்டும் என ஒலிம்பிக் கமிட்டி நிபந்தனை விதித்தது போல, ஒலிம்பிக்கை நேரடி ஒளிபரப்பு செய்யும் சேனல்கள் கண்டிப்பாக பாராலிம்பிக்கையும் ஒளிபரப்ப வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.  

சென்னை ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு பள்ளியில் நான் படித்த காலத்தில் இதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகள் நடந்தது. இந்தியா தவிர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சிறுவர்கள் வந்திருந்தனர். பெரும்பாலும் மனநலம் குன்றிய சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்ட போட்டிகளது. ஓய்வெடுக்கும் குடிலில் அவர்களுடன் அவ்வப்போது பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. அந்நேரத்தில் பல்வேறு மூட்களில் இருப்பவர்கள் போட்டி துவங்கியதும் சிறப்பாக தத்தம் திறனை வெளிக்கொணர்ந்தது ஆச்சர்யம்தான்.     
                                                                       
இந்தியா சார்பாக ஐந்து ஆண்கள் லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் விளையாட உள்ளனர். அவர்களை இந்திய ஒலிம்பிக் கமிட்டி விரைவில் தேர்வு செய்ய உள்ளது  என்பது முக்கிய தகவல். சாதா ஒலிம்பிக்கை போல இதிலும் இந்தியா பெரிதாக சாதிக்கவில்லை என்றே சொல்லலாம். கிரிக்கெட் எனும் அசுர விளையாட்டை தவிர வேறெதையும் பெரிதாக கண்டுகொள்ளாத இத்துப்போன ஆட்சியாளர்கள் கோலோச்சும் தேசத்தில் நாம் வேறென்ன எதிர்பார்க்க இயலும்? சம்மர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவே நிதியின்றி குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்கு செல்லும் திறமைசாலிகள் வாழும் இந்த நாட்டில், பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் முன்வருவதே இல்லை. குறிப்பாக போரில் உடல் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்கள். அதையும் மீறி ஒரு சிங்கம்  கர்ஜித்தது. அதன் பெயர் பத்மஸ்ரீ.தேவேந்திரா ஜஜாரியா. இந்தியாவிற்கு தங்கம் வென்று தந்த ஒரே மாற்றுத்திறனாளி.      

                                                                                        தேவேந்திரா     

2004 ஏதென்ஸில் நடந்த பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற ராஜஸ்தான் இளைஞர் இவர். சுரு  எனும்  சின்ன கிராமத்தில் கொதிக்கும் வெயில் கொண்ட தார் பாலைவனத்தின் அருகே வீடு. சிறுவயதில் மரம் ஏறி விளையாடிக்கொண்டிருந்த சமயமது. கிளைகளுக்கு நடுவே மின்சார வயர் இருந்ததை கவனிக்கவில்லை. ஷாக் அடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இடது கை வெட்டப்பட்டது. அசரவில்லை அந்த சிறுவன். விளையாட்டின் மேலிருந்த ஆர்வத்தால் தனியாக போராடி சர்வதேச அரங்கில் சிகரத்தை தொட்டான். அதன் உச்சமாக 62.15 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தான். இந்த சாதனையை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை. வழக்கம்போல இவரையும் கண்டுகொள்ளவில்லை மத்திய, மாநில அரசுகள். ஐ.பி.எல். போட்டிகளின் கேளிக்கைகளுக்கு மட்டுமே பல கோடிகளை இறைக்கும் கம்பேனி ஓனர்களும் பாராமுகமே காட்டினர். ஷாருக், மல்லையா, அம்பானிகள் எல்லாம் கிரிக்கெட்டுக்கு இறைக்கும் பணத்தின் ஒரு பருக்கையை இது போன்ற திறமைசாலிகளுக்கு தந்தால் இந்தியா உலக அளவில் உச்சம் தொடும். ஆனால் ஓனர்கள் அதை மனதார செய்ய மாட்டார்கள். ஏனெனில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் கல்லா கட்ட முடியாதே!!
                        
இந்திய அரசாங்கம் தன்னையும், இதர  மாற்றுத்திறன் கொண்ட வீரர்களையும்  எப்படியெல்லாம் உதாசீனம் செய்கிறது என்பதை தேவேந்திரா உள்ளக்குமுறலுடன் விளக்கும் பேட்டி: 
          ஒலிம்பிக் பயணம் தொடரும்...
...................................................................
Thursday, July 19, 2012

லண்டன் ஒலிம்பிக் - 3                                                                                          சிவா தாபா

விஜேந்திர சிங்கை போல இளம் பாக்ஸிங் நட்சத்திரமாக வந்திருப்பவர்தான் அஸ்ஸாமை சேர்ந்த சிவா தாபா. வயது 19. தனது மகன் 2016 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பது தந்தையின் ஆசை. ஆனால் புலியின் பாய்ச்சல் அதிகம் இருந்ததால் 2012 ஒலிம்பிக் போட்டிக்கே தகுதி பெற்று விட்டார் சிவா. உலக அளவில் பாக்ஸிங் என்றால் அங்கு க்யூபா வீரர்களின் ஆதிக்கம்தான். அவர்களை சமாளித்து பதக்கம் வெல்ல நமது படை கடுமையாக போராட வேண்டி இருக்கும்.  

ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளில் வென்று லண்டனுக்கு டிக்கட் எடுத்துள்ளது. ஆனால் வலிமை வாய்ந்த ஆஸி, ஜெர்மனி  மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கம் வெல்வது சவால்தான். அவ்வளவு தூரம் ஏன். இந்திய அணி இருக்கும் B க்ரூப்பே வலிமையான அணிகளை கொண்டதுதான். ஜெர்மனி, கொரியா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளை சமாளித்து அரையிறுதிக்கு செல்வதே மிகவும் கடினமான விஷயம். ஆரம்பத்தில் முன்னணியில் இருந்து விட்டு கடைசி சில நிமிடத்தில் கோல்களை வாங்கி கட்டிக்கொள்வதில் இந்திய அணி பிரபலம். என்னைப்பொறுத்தவரை இந்திய ஹாக்கி அணி அரை இறுதி செல்வதே உலக அதிசயம்தான். மிஞ்சிப்போனால் வெண்கலம் மட்டும் கிட்டும். 

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கமகன் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் போன்ற கில்லிகள் இருப்பது நம்பிக்கையை தருகிறது. ககனுக்காக உலகளாவிய அங்கீகாரம் நீண்ட நாட்களாக தவறி வருகிறது. இம்முறை அதை தவற விட மாட்டார் என எதிர்பார்க்கலாம்.  


                               ஒலிம்பிக் ஜோதியுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பால் கால்லிங் வுட்                
          
                                                                    
ஒலிம்பிக் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்போவது ஈ.எஸ்.பி.என் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள். இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகளை  ஈ.எஸ்.பி.என்னும், இதர போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸும் லைவ் அடிக்கும். தூர்தர்ஷன் காலை 7.30 மற்றும் 9.00 மணிக்கு விளையாட்டு தொகுப்புகளை வழங்க, டி.டி. ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. விளையாட்டு ரசிகர்கள் அடுத்த சனியன்று (28 ஜூலை) நள்ளிரவு ஒரு மணிக்கு துவக்க விழா நிகழ்ச்சிகளை டி .வி.யில் காணத்தவற வேண்டாம்.     
................................................................................


தமிழக ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி... 


                                                                  
சென்னையை சேர்ந்த ஸ்குவாஷ் விளையாட்டின் ஜான்சி ராணியான தீபிகா பல்லிகல் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டுமே ஆட வாய்ப்பு உள்ளது. "இந்த விளையாட்டை இதுவரை ஒலிம்பிக்கில் சேர்க்கவில்லை. 2016 ஒலிம்பிக்கில் கால்ப் ஆட்டம் முதன் முறை இடம்பெறவுள்ளது. எனவே ஸ்குவாஷ் 2020 ஆம் ஆண்டில் மட்டுமே இடம் பெற சாத்தியம்" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் தீபு. அதை நினைக்கையில்தான் மனசு கொக்குகிறது. தமிழ்ப்படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தும் அவற்றை எல்லாம் நிராகரித்து விட்டார் தீபு. வாழ்க உங்கள் தங்கையின் கடமை உணர்ச்சி!!  
...........................................................................................
                                                                     
ஒலிம்பிக் போட்டிக்கான பிரத்யேக காணொளி...Sport at Heart. அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.இன்னும் எட்டே நாட்கள்...உலகம் கொண்டாடும் தீபாவளிக்கு......
.......................................................................................

Related Posts Plugin for WordPress, Blogger...